Our Lady of
La Salette
பாசமுள்ள பார்வையில் - சலேத்து மாதாவின்
கண்ணீர்
18ம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுற்ற பிரெஞ்சு புரட்சி, பிரெஞ்சு சமுதாயத்தை பெருமளவு காயப்படுத்தியிருந்தது.
மக்களிடம் இறை நம்பிக்கை தொலைந்து போயிருந்தது. செபித்துவந்த உதடுகள், நாள் முழுவதும், இறைவனையும், அடுத்தவரையும் சபித்தவண்ணம் இருந்தன. ஞாயிற்றுக்
கிழமைகளில் மக்கள் கோவிலை மறந்துவிட்டு, தங்கள்
பணிகளிலும், கேளிக்கைகளிலும் மூழ்கினர்.
இச்சூழலில், 1846ம்
ஆண்டு, செப்டம்பர் 19ம்
தேதி, சனிக்கிழமை, மாக்ஸிமின் (Maximin) என்ற சிறுவனும், மெலனி (Melanie) என்ற சிறுமியும், ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில், லா சலேத் ஃபல்லவோ (La Salette Fallavaux) என்ற ஊருக்கருகே ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவ்வேளையில், அந்த மலைச் சரிவில், ஒரு பாறையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து, தன் கரங்களில் முகத்தைப் புதைத்தவண்ணம் அழுதுகொண்டிருந்தார்.
அவரைச் சுற்றி நிலவிய ஒளி, எதோ சூரியனே
இறங்கிவந்து அங்கு அமர்ந்திருந்ததைப்போல் இருந்தது.
மக்கள் செல்லும் தவறான பாதைகளால் தானும், தன் மகனும்
மிகவும் துயரடைந்திருப்பதாகக் கூறிய அப்பெண், மக்கள் தங்கள்
வழிகளைத் திருத்திக்கொள்ளவில்லையெனில், வறட்சி, வியாதி, பட்டினி
என்று பல துயரங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். பின்னர் அங்கிருந்து
மறைந்துபோனார்.
மாக்ஸிமின், மெலனி இருவரும் தாங்கள் கண்ட
காட்சியைப்பற்றி சொன்னபோது, அவர்களது குடும்பத்தினர் உட்பட, ஒருவரும் நம்பவில்லை. அவ்விருவரையும்
சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டியபோதிலும், அவ்விரு சிறாரும்
தாங்கள் கண்டது உண்மையான காட்சி என்பதில் உறுதியாக இருந்தனர்.
நாட்கள் செல்ல, செல்ல, அன்னை மரியை அவ்விரு சிறாரும் கண்டனர்
என்று மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அன்னை காட்சி கொடுத்த இடத்திற்கு திருப்பயணிகள்
சென்றனர். 5 ஆண்டுகளில், அப்பகுதியில் வியக்கத்தக்க மாற்றங்கள்
உருவாயின. மக்கள் மீண்டும் கோவிலை நாடிச் சென்றனர். சபிக்கும் பழக்கம் குறைந்தது.
1851ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அந்தக்
காட்சிகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பக்தி முயற்சிகளையும் உண்மையென ஏற்றுக்கொண்டார்.
அந்தக் காட்சி நிகழ்ந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோவிலில் பீடமேற்றப்பட்டிருந்த அன்னை
மரியாவின் திரு உருவத்திற்கு மகுடம் சூட்டுவதற்கு, 1879ம் ஆண்டு, திருத்தந்தை
13ம் லியோ அவர்கள் உத்தரவளித்தார்.
லா சலேத் என்ற இடத்தில் அன்னை மரியா தோன்றியதால், அவர் லா
சலேத் அன்னை, அல்லது, சலேத்து மாதா என்று வணங்கப்படுகிறார். சலேத்து மாதாவின்
திருநாள்,
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 19ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.
World Day
of Prayer for the Care of Creation
வேதனை வேள்வியில் யோபு – பகுதி 38
ஒவ்வோர்
ஆண்டும், செப்டம்பர் முதல் தேதியன்று, படைப்பைப் பேணுவதற்கென செபிக்கும் உலகநாள் (World Day of Prayer for the Care of Creation) கடைபிடிக்கப்படுகிறது. படைப்பின்
மீது அக்கறை கொள்ளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ்
முதுபெரும் தந்தை முதலாம் திமித்ரியோஸ் (Dimitrios I) அவர்கள், 1989ம் ஆண்டு, படைப்பைப் பேணுவதற்கென செபிக்கும் உலகநாளை
உருவாக்கினார். கிறிஸ்தவ ஒன்றிப்பு அர்த்தடாக்ஸ் சபையில், செப்டம்பர் முதல் தேதி, வழிபாட்டு ஆண்டின் முதல் நாளெனச்
சிறப்பிக்கப்படுகிறது. நாம் அனைவரும் படைப்பின் பாதுகாவலர்கள் என்பதை வலியுறுத்த, வழிபாட்டு ஆண்டின் முதல் நாளை, படைப்பிற்கென செபிக்கும் நாளாக
அவர்கள் சிறப்பித்து வருகின்றனர். 2014ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபை, இந்த நாளை நிறுவிய 25ம் ஆண்டை சிறப்பித்தது.
அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது, 2015ம் ஆண்டு, இந்த உன்னத முயற்சியில் கத்தோலிக்கத்
திருஅவையும் இணையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.
இந்த
ஒன்றிப்பு முயற்சி, இவ்வாண்டு மூன்றாம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்ட
வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களும் இணைந்து, செய்தியொன்றை வெளியிட்டனர். "இவ்வுலகை நாம் காணும்
கண்ணோட்டமும், அதன் பயனாக, இவ்வுலகுடன் நாம் கொள்ளும் தொடர்பும் மாறவேண்டும்" என்று, இவ்விரு தலைவர்களும் தங்கள் செய்தியில் கூறியுள்ளனர்.
இவ்வுலகும், படைப்பு அனைத்தும், மனிதரின் நலனுக்காக மட்டுமே பயன்படும்
பொருள்களாக காணும் சுயநலக் கண்ணோட்டம் கட்டுப்பாடு ஏதுமின்றி வளர்ந்துவிட்டதன் விளைவாக, இவ்வுலகம் பெருமளவு சீரழிந்துள்ளது என்பதை, இரு தலைவர்களும் தங்கள் செய்தியில் கவலையுடன் கூறியுள்ளனர்.
படைப்பு
அனைத்தின் சிகரமாக, மையமாக மனிதர்களை இறைவன் படைத்தார் என்ற
கருத்து, விவிலியத்தின் தொடக்க நூலில் வெளிப்படுகிறது. கடவுள் அனைத்தையும் படைத்தபின், மனிதர்களைப் படைப்பதற்குமுன், அவர்களுக்கென
தான் வகுத்துள்ள திட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவர்களைப் படைத்ததும், ஏனைய படைப்புக்களை ஆளும் அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்கினார்.
இவற்றை தொடக்க நூல் இவ்வாறு கூறியுள்ளது:
தொ.நூல்
1: 26-28
அப்பொழுது
கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு
ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்"
என்றார்.
"ஆளுங்கள்" என்று ஆண்டவர் தந்தக் கட்டளையை,
அடக்குதல், கட்டுப்படுத்துதல், அடிமைப்படுத்துதல் என்று மனிதர்கள் புரிந்து கொண்டதால், படைப்பைப் பயன்படுத்தும் வழிகளில் பெரும் தவறுகளை இழைத்துள்ளனர்.
'ஆளுங்கள்' என்ற கட்டளைக்கு, அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து, இவ்வுலகை மட்டுமல்ல, வான் வெளியையும் ஆட்சி செய்யவேண்டும்
என்ற முயற்சிகளை மனிதர்கள் மேற்கொண்டனர். வெளி உலகத்தை ஆள்வதற்கு விருப்பம் கொண்ட மனிதர்கள், தங்கள் உள் உலகை, அதாவது, மனங்களை ஆள்வதற்கு விருப்பமின்றி, அளவுகடந்த ஆசைகளை வளர்த்துக்கொண்டனர். இவ்வுலகையும், வான்வெளியையும் தங்கள் ஆசைகளுக்கு அவர்கள் பலியாக்கிய வேளையில், அது, இறைவனிடமிருந்து வந்த கட்டளை என்று
சமாதானமும் சொல்லிக்கொண்டனர்.
'ஆளுங்கள்' என்று ஆண்டவன் சொன்னதை அடிக்கோடிட்டுக் காட்டி, மனிதர்கள், அதிலும் குறிப்பாக, ஒரு சில மனிதர்கள், இவ்வுலக வளங்கள் அனைத்தையும்
தங்களுக்கென மட்டும் அபகரித்துக்கொள்ளும் சுயநல வெறி, மனித இனத்தையும், படைப்பு அனைத்தையும் அழிவின் விளிம்புக்கு
இழுத்து வந்துவிட்டது.
இத்தகைய
ஒரு பின்னணியில், கடவுள் யோபிடம் எழுப்பிய கேள்விகளை ஆய்வு
செய்யும்போது, தன் கேள்விகளில் மனிதர்களைப் பற்றி அவர்
ஒன்றும் பேசாமல் இருப்பது, நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது.
படைப்பு அனைத்திற்கும் மையமாக தங்களை கற்பனை செய்து வாழ்ந்த மனிதர்களின் எண்ணங்கள்
தவறு என்பதை, யோபிடம் இறைவன் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகின்றன.
லூத்தரன் இறையியல் பேராசிரியராகப் பணியாற்றும் காத்ரின் ஷிஃபெர்டெக்கர் (Kathryn Schifferdecker) அவர்கள், 2008ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூல், படைப்பின் மையம் மனிதர்கள் அல்ல என்ற சிந்தனையை அழகாக
வலியுறுத்துகிறது.
“Out of the Whirlwind: Creation
Theology in the Book of Job”, அதாவது, "சூறாவளியிலிருந்து: யோபு நூலில் படைப்பு இறையியல்" என்ற தலைப்பில்
காத்ரின் அவர்கள் வெளியிட்ட அந்நூல், மனிதருக்கும், படைப்பிற்கும் இடையே இருக்கவேண்டிய சமநிலையான உறவைப் பற்றியும், அதன் பயனாக, யோபு இறைவனிடமிருந்து கற்றுக்கொள்ளும்
முக்கியமான பாடங்களைப் பற்றியும், அழகாக விளக்குகின்றது.
யோபு
நூல் என்றதும், பொதுவாக நம்மில் பலர், அந்நூலின் மையப்பொருள் துன்பம், குறிப்பாக, மாசற்றவரின் துன்பம் என்று எண்ணுகிறோம். ஆனால், இந்நூலின் ஆசிரியர் காத்ரின் அவர்கள் கூறுவது மாறுபட்ட கண்ணோட்டத்தை
வழங்குகிறது. இந்நூல், குறிப்பாக, 38ம் பிரிவு முதல், நூலின் இறுதி வரை நாம் காணும் உச்சக்கட்ட
நிகழ்வுகள், படைப்பைப்பற்றிய ஒரு தியானத்தை வழங்குகிறது
என்று அவர் கூறியுள்ளார். அந்த தியானத்தின் வழியே, படைப்பில், மனித சமுதாயத்திற்கு குறிக்கப்பட்டுள்ள இடம், படைப்பை இறைவன் ஒழுங்குபடுத்தும் அழகு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம்
என்று கூறுகிறார், காத்ரின்.
காரணம்
ஏதுமின்றி தன்னை வதைக்கும் துன்பங்களுக்கு விளக்கம் கேட்டு, யோபு மீண்டும், மீண்டும் கேள்விகளைத் தொடுத்தும், சூறாவளி வழியே அவரிடம் பேசவந்த இறைவன், யோபின் துன்பத்தைப்பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதற்கு மாறாக, இறைவன், யோபை, இவ்வுலகையும், வான்வெளியையும் சுற்றி, ஒரு பயணமாக அழைத்துச் செல்கிறார்.
மிக அழகிய
கவிதை வடிவில் இறைவன் அடுக்கிவைக்கும் கேள்விகள், இந்த பிரம்மாண்டமான
படைப்பின் மையம் மனிதர் அல்ல என்பதை மிகத் தெளிவாக இடித்துரைக்கின்றன. படைக்கப்பட்ட
மனிதரின் கற்பனைக்கும் எட்டாத அளவு வான்வெளியில் எண்ணிலடங்கா படைப்புக்கள் உள்ளன என்பதை, இறைவனின் கேள்விகள் சுட்டிக்காட்டுகின்றன. அறிவுக்கும், கற்பனைக்கும் எட்டாத வகையில் பரந்துவிரிந்த படைப்பில், தான் மையமல்ல, ஒரு சிறு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் இல்லாததால்தான், யோபு தன் துன்பத்தை பெரிதுபடுத்தி,
அங்கேயே சிறையுண்டு தவித்தார் என்று, காத்ரின் அவர்கள் கூறியுள்ளார்.
பரந்துவிரிந்த
உலகம், வான்வெளி என்ற இந்த பிரம்மாண்டமான படைப்பில்,
யோபின் நிலை என்ன என்பதை இறைவன் தெளிவாக்கியபோது, யோபின் பதில்
எவ்வாறு அமைந்தது என்பதை, இந்நூலின் 40ம் பிரிவின் துவக்கத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
யோபு
40: 3-5
யோபு
ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:
இதோ!
எளியேன் யான் இயம்புதற்குண்டோ?
என்
வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவேமாட்டேன்.
கையால்
வாயைப் பொத்தி நிற்பது, தனக்கு முன் இருப்பவருக்கு மிக
உயர்ந்த மதிப்பைக் காட்டும் அடையாளச் செயல். இத்தகைய மதிப்பை ஊரில் தான் பெற்றதாக, யோபு முன்னொரு பகுதியில் கூறியுள்ளார். - யோபு 29: 8-9
தன் முன்
பணிந்து நிற்கும் யோபிடம், இறைவன் தொடர்ந்து பேசும் இரண்டாவது
உரை, 40,
41 ஆகிய பிரிவுகளில்
காணப்படுகின்றன. தன் இரண்டாம் உரையில் இறைவன்,
பெகிமோத்து, லிவியத்தான் என்ற இரு படைப்புக்களைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.
நிலத்தில்
நடமாடும் படைப்பு அனைத்திலும் மிக அதிக சக்திவாய்ந்தது, பெகிமோத்து என்று, விவிலிய
விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், நீரில் வாழும் படைப்பு அனைத்திலும், லிவியத்தான்
என்ற மிருகம், மிகவும் வலிமை மிக்கது.
மனிதர்களுக்கு
எவ்வகையிலும் பயன்தராத மிருகங்கள் இவை இரண்டும். இன்னும் சொல்லப்போனால், இவை, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்
மிருகங்கள். இந்த மிருகங்களைப் படைத்ததும் தானே என்று இறைவன் யோபிடம் விளக்கிக் கூறுகிறார்.
மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத படைப்புக்கள் பல உள்ளன என்பதை யோபுக்கும், நமக்கும் உணர்த்த, இறைவன், பெகிமோத்து, லிவியத்தான் என்ற இரு மிருகங்களைப்பற்றி
இவ்வளவு விரிவாகப் பேசியுள்ளார்.
புரியாத
புதிர்கள் பல நிறைந்த இவ்வுலகில், மனிதர்கள், தாங்களும் ஒரு சிறு பங்குதான் என்பதை
உணர்ந்துகொண்டால், நமக்கும், நம்மைச் சூழ்ந்திருக்கும் படைப்பு அனைத்திற்கும் நன்மைகள் உண்டாகும்.
அத்தகைய மனநிலையை மனிதர்கள் விரைவில் பெறுவதற்கு இறைவனை இறைஞ்சுவோம்.
கடவுள்
தந்த இரு நீண்ட உரைகளுக்குப்பின், தன்னிலை உணரந்த யோபு, இறைவனுக்குமுன் சரண்
அடைகிறார். இதைத் தொடர்ந்து, இந்நூலின் நிறைவாக அங்கு நிகழ்வனவற்றை நாம் அடுத்தத்
தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment