21 June, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 4

Fighting starvation

5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தப் புதுமையை, பகிர்வின் புதுமை என்ற கோணத்தில் சிந்தித்து வருகிறோம். பகிர்வதற்கு மனம் இன்றி, பதுக்கிவைப்போரின் பிரதிநிதியாக, 'அறிவற்ற செல்வன்' உவமையில் கூறப்பட்டுள்ள அறிவிலியை சென்ற வார விவிலியத் தேடலின் பிற்பகுதியில் சிந்தித்தோம். தனி மனிதர்கள் மட்டுமல்லாமல், அரசுகளும் பதுக்கிவைக்கின்றன என்ற வேதனையான உண்மையை, பின்வரும் தலைப்புச் செய்திகள் நமக்குக் கூறுகின்றன. இவையனைத்தும், 2010ம் ஆண்டு, ஜூலை மாதத்தின் ஒரு வாரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த செய்திகள்:
ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.
ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.
இச்செய்திகளை வாசித்தபோது, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அறிவற்ற செல்வன் செய்த அதே தவறை, இந்திய அரசும், நாம் அனைவரும் செய்கிறோமோ என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வாக, 2010ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. "உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள். உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது" என்ற ஆணை வெளியானது.
யாருக்கு இந்த ஆணை? Food Corporation of India என்றழைக்கப்படும் இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏன் இந்த ஆணை? இந்திய உணவு நிறுவனத்திற்குச் சொந்தமான தானியக் கிடங்குகளில் 30 இலட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சேமிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை மண் தரைகளில், மழையில் அடுக்கி வைத்ததால், அவை அழுகிக் கொண்டிருந்தன. அதனால், இந்த ஆணை.

இச்செய்திகளைத் தனித்துப் பார்க்கும்போது, இவற்றின் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இவற்றை இந்தியாவில் நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும்போது, விபரீதம் புலப்படும். 2009ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும்... மீண்டும் சொல்கிறேன்... ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிக்கப்பட்டு, அழுகிகொண்டிருக்கும் 30 லட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000 என்ற அதிர்ச்சித் தகவல் மறுபுறம்.

2001ம் ஆண்டு, இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் 9 கோடி டன் தானியம் முடங்கிக் கிடந்தது. 9 கோடி டன் என்றால், எவ்வளவு தானியம் என்பதை இப்படி புரிந்துகொள்ள முயல்வோம். இந்த உணவைக் கொண்டு, 20 இலட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. இந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும் இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒடிஸ்ஸா மாநிலத்தின் காசிப்பூர் பகுதியில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர். இக்கொடூரத்தைப்பற்றி அப்போதையப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள், பாராளுமன்றத்தில் பேசியபோது, "நம் நாட்டில் தேவைக்கு அதிகமாகவே உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள பொதுப் பகிர்வு முறையில் தவறு உள்ளது! என்று கூறினார். உற்பத்தியில் குறைவில்லை ஆனால், பகிர்வதில்தான் பல குறைகள் என்று நாட்டின் பிரதமரே சொன்னார்.

2001ம் ஆண்டு, நாட்டின் பிரதமர் பாராளுமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டியபின், நாம் ஏதும் கற்றுக்கொண்டோமா? "உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது. ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று 2010ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த ஆணைக்குப் பின்னராகிலும் நாம் விழிப்படைந்துள்ளோமா என்று கேட்டால், இன்னும் இல்லை என்றுதான் வேதனையுடன் சொல்லவேண்டும்.

2010ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உணவு நிறுவனத்திற்கு அளித்த அந்த ஆணையை மீண்டும் ஒருமுறை ஆழமாகச் சிந்திப்போம். "உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பை, உத்தரவைக் கேட்டு மனதில் ஆத்திரமும், வேதனையும் அதிகமாகின்றன. ஒரு நாட்டின் உச்சநீதி மன்றமே நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு முயற்சி இது. வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் வார்த்தைகள் இவை.

சேமித்துவைக்க முடியவில்லை எனில், ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று ஒரு நாட்டின் நீதிமன்றம் கூறும்போது, அது, 'சேமிப்புக்கு' முதலிடம் தருவதைக் காண முடிகிறது. சேர்த்துவைக்க, குவித்துவைக்க, பதுக்கிவைக்க உங்களுக்குத் திறன் இல்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் ஏழைகள். அவர்களுக்காவது அதைத் தூக்கிப் போடுங்கள் என்ற பாணியில், ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் பேசுவதை எவ்விதம் நீதி என்று அழைப்பது? இந்தப் பாணியில்தானே, அறிவற்ற செல்வனும் குவித்துவைப்பதற்கு முதலிடம் தந்தார்?

இதற்கு மாறாக, உச்சநீதி மன்றம் பின்வருமாறு கூறியிருந்தால், அதை நாம் ஒரு நீதிமன்றம் என்று அழைக்க முடியும். "நாட்டில் இத்தனை கோடி மக்கள் உணவின்றி வாடும்போது, உங்கள் தானியக் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக நீங்கள் தானியங்களைக் குவித்துவைப்பது தவறு. அதை முதலில் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள்" என்று கூறியிருந்தால், அப்போது, நம் உச்ச நீதி மன்றம் உண்மையிலேயே உச்சநிலை நீதியை நிலைநாட்டியிருக்கும். நமது நீதி மன்றங்கள், எப்போது, உண்மையிலேயே, நீதி வழங்கும் மன்றங்களாக மாறப் போகின்றன?

உச்சநீதி மன்றங்களை, உணவு நிறுவனங்களை, குற்றம் கூற நீண்டிருக்கும் நமது சுட்டுவிரல்களை நம் பக்கம் திருப்புவோம். நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி, புரையோடிப் போயிருக்கும் பேராசைகளை, தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைக்கும் போக்கைப் பற்றி சிந்திப்போம். அறிவற்ற செல்வனை ஒரு முட்டாள் என்று நாம் தீர்மானம் செய்வதற்கு முன், நம்மைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) என்பவர், நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம்  தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவர், தன்னிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை, பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் முதலாளி. இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை" என்று பதில் சொன்னாராம்.

அப்பத்தைப் பகிர்ந்த புதுமைக்குத் திரும்புவோம். வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்கமுடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான் வறியோரின் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, எர்னஸ்ட் ஹெமிங்வே போல, இந்தப் புதுமையின் கதாநாயகர்களில் ஒருவரான அச்சிறுவனைப் போல, நம்மில் யாரும் பகிர்வு என்ற புதுமையை ஆரம்பித்து வைக்கலாம்.

ஆப்ரிக்காவில், கடினமானச் சூழலில், வறுமைப்பட்ட மக்களுக்குப் பணியாற்றிவந்த மருத்துவர் Albert Scheweitzer அவர்களைப் பற்றி, 13 வயது நிறைந்த ஒரு சிறுவன் கேள்விப்பட்டான். அவருக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்ய எண்ணியச் சிறுவன், தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு, 'ஆஸ்பிரின்' மாத்திரைகள் வாங்கினான். தான் வாங்கிவைத்திருக்கும் மாத்திரைகளை, மருத்துவர் Scheweitzer அவர்களிடம் எடுத்துச் செல்ல முடியுமா? என்று கேட்டு, அமெரிக்க விமானப் படைத் தளபதிக்கு மடல் ஒன்றை அனுப்பினான், அச்சிறுவன்.

அச்சிறுவன் அனுப்பிய மடலைப் பற்றி அத்தளபதி ஒரு நாள் வானொலியில் பேசினார். இதைக் கேட்ட பலர், மருத்துவர் Scheweitzer அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். உதவிகள் வந்து குவிந்தன. சில நாட்கள் சென்று, அச்சிறுவன், ஏறத்தாழ 5 டன் எடையுள்ள மருந்துகளையும், 40,000 டாலர்களையும் எடுத்துக்கொண்டு, மருத்துவர் Scheweitzer அவர்களைக் காண, விமானத்தில் பறந்தான். இதைப்பற்றி கேள்விப்பட்ட மருத்துவர் Scheweitzer அவர்கள், "ஒரு சிறுவனால் இவ்வளவு சாதிக்கமுடியும் என்பதை என்னால் சிறிதும் எண்ணிப் பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.

பகிர்வுப் புதுமையை இயேசு துவங்கிவைக்கும் சொற்கள் நான்கு நற்செய்திகளிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இயேசு, அப்பத்தை எடுத்து, வானத்தைப் பார்த்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, மக்களுக்குக் கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ள இச்சொற்கள், நம்மை, இயேசுவின் இறுதி இரவுணவுக்கு அழைத்துச் செல்கின்றன. அந்த இறுதி இரவுணவில், தன்னையே மனித குலத்திற்கு முழுமையாகப் பகிர்ந்தளிக்க விரும்பிய இயேசு, இதேவண்ணம் செய்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளும் கூறியுள்ளன. இத்துடன், லூக்கா நற்செய்தியில், இயேசுவின் உயிர்ப்புக்குப்பின் நிகழ்ந்த எம்மாவு நிகழ்விலும், இயேசு, அச்சீடர்களுடன் உணவருந்துகையில், அப்பத்தை எடுத்து பகிர்ந்த வேளையில், அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டனர் என்று கூறப்பட்டுள்ளது (லூக்கா 24:30-31).

உலகில் எங்கெல்லாம், பகிர்வு நடைபெறுகிறதோ, குறிப்பாக, உணவுப் பகிர்வு நடைபெறுகிறதோ, அங்கெல்லாம், இறைமகன் இயேசுவின் பிரசன்னம் இருக்கும் என்ற உண்மையை வலியுறுத்த, இப்புதுமை ஓர் அறிமுக நிகழ்வாக அமைந்தது.


No comments:

Post a Comment