26 June, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 5


Food stolen from the table of the poor

புதுமைகள் அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 5

புனித அன்னை தெரேசா, ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக பட்டினியால் துன்புற்றனர் என்பதை அன்னை அறிந்ததால், அவரைத் தேடிச் சென்றார். அன்னை கொண்டுவந்த அரிசியை நன்றியோடு பெற்றுக்கொண்ட அப்பெண், அடுத்து செய்தது, அன்னையை வியப்பில் ஆழ்த்தியது. தான் பெற்ற அரிசியை அப்பெண் சமமான இரு பங்காகப் பிரித்தார். ஒரு பங்கை, தன் வீட்டுக்கு அருகில் வாழ்ந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்னை அவரிடம் காரணம் கேட்டபோது, அப்பெண், "அன்னையே, நீங்கள் தந்த அரிசியில் பாதிப் பங்கைக் கொண்டு எங்களால் சமாளிக்கமுடியும். ஆனால், அடுத்த வீட்டிலோ அதிகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களும் பல நாட்கள் பட்டினியால் துடிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார்.
அன்னை தெரேசாவின் பரிவால் தொடப்பட்ட பல்லாயிரம் வறியோர், தங்கள் வறுமையையும் மீறி, பகிர்வை தங்கள் வாழ்வாக்கியுள்ளனர். இந்த நல்ல உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறி, இன்றைய விவிலியத்தேடலைத் துவக்குகிறோம்.

இவ்வுலகில் பெருமளவு பெருகிவரும் சுயநலம், பேராசை ஆகிய நோய்களுக்கு மாற்று மருந்தான பகிர்வைக் குறித்து கடந்த இரு வாரங்களாக சிந்தித்து வந்துள்ளோம். இன்று தொடர்கின்றோம். இந்தப் புதுமையின் ஒரு சில படிகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள முயற்சி.

தன்னை நாடி மக்கள் வருவதைக் கண்டதும், இயேசு அவர்களுக்கு உணவு வழங்குவதைப் பற்றி முதலில் சிந்தித்தார் என்பதை, இப்புதுமையின் அறிமுக வரிகள் கூறியுள்ளன (யோவான் 6:5). இந்தப் பரிவுதான் புதுமையைத் துவக்கிவைத்தது.
அடுத்து, தங்களிடம் உள்ள உணவு இவ்வளவுதான் அதாவது, ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் – என்ற உண்மையை, சீடர்கள் கூறியது, புதுமையின் அடுத்தக் கட்டம். உணவை, பணமாக மாற்றும் பேராசையினால், அதைப் பதுக்கிவைத்து, பற்றாக்குறை என்று விளம்பரம் செய்து, உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தும் வர்த்தக உலகின் பேராசையால், பசியும், பட்டினியும் உலகில் தாண்டவமாடுகின்றன. உண்மையைக் கூறமுடியாமல் நம்மைத் தடுக்கும் பேராசையும், சுயநலமும் நீங்கினால், அனைவருக்கும் உணவு கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்பதை சீடர்கள் கூறிய உண்மையும், அதைத் தொடர்ந்த புதுமையும் சொல்லித் தருகின்றன.

உணவைப் பொருத்தவரை, இன்றைய உலகின் உண்மை நிலை இதுதான்: ஐ.நா. அவை வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவையற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 720 கோடி. 740 கோடி மக்கள் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உலகில் தினமும் உற்பத்தியாகிறது. இருந்தாலும், 130 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். கணக்கிட்டுப் பார்த்தால், 170 கோடி மக்களுக்குப் போய் சேரவேண்டிய உணவு, ஒவ்வொரு நாளும் வீணாகக் குப்பையில் எறியப்படுகிறது. இது வேதனை தரும் உண்மை. இந்த நிலையால், ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சம் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.

இயேசு மக்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்த இந்தப் புதுமை, நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது என்பதை அறிவோம். இப்புதுமைக்கு முன்னதாக, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள மற்றொரு விருந்து, இன்றைய உலகின் நிலையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது. மன்னன் ஏரோதின் அரண்மனையில் நடந்த அந்த விருந்தில், மதுவும், உணவும், அளவு கடந்து சென்றன. அதன் விளைவாக, மன்னனும் மற்றவர்களும் மதியிழந்து, திருமுழுக்கு யோவானைக் கொலை செய்தனர். இந்த விருந்தைப்பற்றி கூறிய அதே மூச்சில், இயேசு அப்பத்தைப் பகிர்ந்தளித்த அந்த விருந்தையும், மத்தேயு, மாற்கு இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது. இல்லாதோர், போராட்டங்களை மேற்கொண்டு, இருப்போரின் உலகை அழிக்கமுடியும். அந்த அழிவைத் தடுக்க, இருப்பவர்கள் ஆயுதங்களை நம்பி வாழ வேண்டியிருக்கும். இருப்பவர்கள் பக்கமே பெரும்பாலும் சாயும் உலக அரசுகள், ஆயுதங்கள் வாங்க செலவிடும் தொகையில், ஆயிரத்தில் ஒருபங்கை, மக்களின் தேவைகளுக்காகச் செலவிட்டால், ஆயுதங்களே தேவையில்லாமல் போகும் என்பது, கசப்பான ஓர் உண்மை.
இருப்பவர்கள் இல்லாதவர்களிடமிருந்து தங்கள் உலகைக் காப்பதற்குப் பதில், இல்லாதவர்களோடு இந்த உலக வளங்களை பகிர்ந்து கொண்டால், அனைவருமே நலமாக, மகிழ்வாக வாழமுடியுமே! பகிர்வதால், பாசம் வளரும், பாதுகாப்பும் உலகில் பெருகும். பகிர்வுக்குப் பதில், சுயநலக் கோட்டைகள் பிரம்மாண்டமாக எழுந்தால், அந்தக் கோட்டைகளைக் காக்க இன்னும் தீவிரமான பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும்.

தன்னிடம் இருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எவ்விதத் தயக்கமும் இன்றி, முழுவதுமாக இயேசுவிடம் கொடுத்த அச்சிறுவன், பகிர்வுப் புதுமையைத் துவக்கி வைத்தான். வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; என்று எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை அந்தச் சிறுவனைப் போல் நம்மில் யாரும் ஆரம்பித்து வைக்கலாம். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு மாநிலமான மிசோராம், நமக்கு, பகிர்வுப் பாடத்தைச் சொல்லித்தருகிறது.

"Buhfai tham" அதாவது, "ஒரு கைப்பிடி அரிசி" என்ற ஒரு திட்டம், இங்கு செயல்வடிவம் பெற்றுள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வசதிகள் குறைந்தவர்கள். இவர்கள், ஒவ்வொரு முறையும், சோறு சமைக்கும்போது, ஒரு கைப்பிடி அரிசியை தனியே எடுத்து வைப்பர். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் சேர்க்கப்படும் அரிசி, ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கு கோவிலுக்குக் கொண்டு வரப்படும். கோவிலில் சேர்க்கப்படும் அரிசி, அப்பகுதியில் வாழும் மிகவும் வறியோர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும். ஒரு சிலர், அரிசியோடு, தங்கள் தோட்டங்களில் வளர்ந்த காய், கனிகளையும் காணிக்கையாகத் தருவர். இவை அனைத்துமே, ஞாயிறுத் திருப்பலியின் இறுதியில் வறியோர் மத்தியில் பகிர்ந்து தரப்படும். மிசோராம் மக்கள் சொல்லித்தரும் வழியை நாம் அனைவருமே பின்பற்ற முடியுமே! இதைத்தானே இப்புதுமையில் நாம் சந்திக்கும் சிறுவன் நமக்குச் சொல்லித் தருகிறான்?

இப்புதுமையின் இறுதியில், இயேசு தன் சீடர்களுக்குக் கூறும் ஓர் அறிவுரை, ‘தூக்கியெறியும் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்கும் இன்றைய உலகிற்கு, ஒரு சாட்டையடியாக விழுகிறது. பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், உணவை வீணாக்காமல் பாதுகாப்பதும் நம் கடமை என்பதை இயேசு சொல்லித்தருகிறார். நற்செய்தியாளர் யோவான், இப்புதுமையை, இவ்வாறு நிறைவு செய்துள்ளார்: மக்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளை சேர்த்து வையுங்கள்" என்று (இயேசு) தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சியத் துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். (யோவான் 6:12-13)

தூக்கியெறியும் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கும் இன்றைய உலகிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வப்போது கூறிவரும் அறிவுரையும் இதுதான். திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற நான்காம் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில், ஜூன் 5ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் நாளை மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். "வீணாக்கும் கலாச்சாரம் உலகில் பெருகியுள்ளது. உணவை வீணாக்குவது, பெரும் வேதனையைத் தருகிறது. குறிப்பாக, உலகில் பல கோடி மக்கள் உண்ண உணவின்றி துன்புறும்போது, உணவை வீணாக்குவது, பெரும் குற்றம்" என்று கூறிய திருத்தந்தை, தன் உரையின் முடிவில் சொன்ன வார்த்தைகள், உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன: "உணவைத் தூக்கி எறிவது, வறியோரிடமிருந்து உணவைத் திருடுவதாகும்" என்று திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார்.

இயேசு 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு அப்பத்தைப் பகிர்ந்தளித்த புதுமை, நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே புதுமை என்ற தனித்துவத்தைப் பெற்றது. தனித்துவம் மிக்க இப்புதுமை நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை மீண்டும் ஒருமுறை அசைபோடுவோம்:
1. இந்தப் புதுமை, இயேசு, தன் இறைத்தன்மையின் அருளைக் கொண்டு அப்பத்தைப் பலுகச் செய்த புதுமை என்று சிந்திப்பதைக் காட்டிலும், அங்கிருந்த மக்களைப் பகிரச் செய்த புதுமையாக சிந்திப்பது சிறந்தது.
2. இந்தப் பகிர்வுப் புதுமையை நாம் ஒவ்வொருவரும் ஆற்ற முடியும் என்பதையே, இப்புதுமையில் கூறப்படும் சிறுவன் நமக்குச் சொல்லித் தருகிறார்.
3. இயேசு, இப்புதுமையில், இறைவனுக்கு நன்றி கூறி, அப்பத்தைப் பிட்டு, பகிர்ந்த அழகு, அவர் இறுதி இரவுணவில் நமக்கு விட்டுச்சென்ற மிக உன்னதமான அவரது பிரசன்னத்தை நினைவுறுத்துகிறது. எங்கெல்லாம் பகிர்வு இடம்பெறுகின்றதோ, அங்கெல்லாம், இயேசுவின் பிரசன்னம் நிச்சயம் இருக்கும்.
4. இவ்வுலக நலன்களை, பகிர்வதுடன் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. அவற்றை, பாதுகாப்பதும் நம் கடமை.


இப்புதுமை சொல்லித்தரும் பாடங்கள் நம் வாழ்வில் ஆழப் பதியவேண்டும் என்றும், இவை ஒவ்வொருநாளும் நம் வாழ்வில் செயல்வடிவம் பெறவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

No comments:

Post a Comment