22 June, 2018

திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழா

 "His name is John" - Circumcision of St John the Baptist

திருஅவையின் பாரம்பரியத்தில் ஆயிரக்கணக்கான புனிதர்களின் திருநாட்களை நாம் கொண்டாடுகிறோம். இப்புனிதர்களின் திருநாள்களெல்லாம் அவர்கள் விண்ணுலகில் பிறந்தநாளை மையப்படுத்தியே கொண்டாடப்படுகின்றன. திருஅவையில் மூவருக்கு மட்டும் மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இயேசுவின் பிறந்தநாள், அன்னை மரியாவின் பிறந்தநாள், திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள். இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். இப்பிறந்தநாளன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் பெயர் சூட்டுதல், பெயர் சொல்லி அழைத்தல் ஆகிய எண்ணங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வெண்ணங்களை மையப்படுத்தி, நமது ஞாயிறு சிந்தனைகளைத் தொடர்வோம்.

What’s in a name? that which we call a rose, By any other name would smell as sweet”
"பெயரில் என்ன பெரிதாக உள்ளது? ரோசா என்று நாம் அழைக்கும் அந்த மலருக்கு, வேறு எந்தப் பெயர் இருந்தாலும், அந்த மலரின் மணம் மாறப்போவதில்லை."
'ரோமியோ அண்ட் ஜூலியட்' என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளை மேலோட்டமாக, ஒரு மேற்கோளாகப் பார்க்கும்போது, ஒருவருக்கு வழங்கப்படும் பெயர் ஒன்றும் முக்கியமல்ல என்ற எண்ணம் உருவாகும். ஆனால், நாடகத்தில் இந்த வரிகள் சொல்லப்படும் சூழலைச் சிந்தித்தால், வேறுபட்ட எண்ணங்கள் தோன்றும். இந்த எண்ணங்கள் இன்றும் நம் உலகை ஆட்டிப் படைக்கின்றன என்ற துயரமும் விளங்கும்.

நாடகத்தில் இந்த வரிகளை ஜூலியட் பேசுகிறார். ரோமியோவும் ஜூலியட்டும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்கள் இணைந்து வாழ்வதற்குத் தடையாக உள்ளவை இவ்விருவரும் பிறந்த குடும்பங்கள். பகைமையில், வெறுப்பில் நீண்டகாலமாய் வாழ்ந்துவரும் குடும்பங்கள் இவை. தாங்கள் இணைந்து வாழ்வதற்கு Capulet, Montague என்ற குடும்பப் பெயர்களே தடையாக உள்ளன என்று எண்ணும் ஜூலியட், "ரோமியோ, உன் குடும்பப் பெயர்தான் என்னுடைய எதிரி. நம் குடும்பப் பெயர்களை நீக்கிவிட்டால், பகையும், வெறுப்பும் இல்லாமல் நாம் இணைந்து வாழ முடியும்... பெயரில் என்ன பெரிதாக உள்ளது?" என்ற பாணியில் பேசுகிறார். பகையுள்ள இரு குடும்பப் பெயர்களைத் தாங்கியதால், ரோமியோவும் ஜூலியட்டும் இவ்வுலகில் இணையமுடியாமல், மரணத்தில் இணைந்தனர் என்று ஷேக்ஸ்பியரின் இந்த நாடகம், துயரத்தில் முடிகிறது. பெயர்கள், வாழவும் வைக்கும், வன்முறைகளையும் தூண்டும் என்பதை, நாம் வாழும் காலத்திலும் கண்டுவருகிறோம்.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பெயர்களுக்குத் தனி மதிப்பு இருந்தது. ஒருவருக்கு மற்றொருவர் பெயர் சூட்டினால், அந்தப் பெயரைத் தாங்கியவர்மீது பெயர் சூட்டியவருக்கு அதிகாரம் உண்டு என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்தது. எனவேதான், இறைவனைப் பெயர் சொல்லி அழைக்க அவர்கள் தயங்கினார்கள். இறைவனுக்கு மக்கள் பெயர் சூட்டினால், அவர் தங்கள் சக்திக்கு உட்பட்டவராகிவிடுவார் என்ற தயக்கம் அது.

அதேவேளையில், இறைவன் அவர்களுக்குப் பெயர் சூட்டியதைப் பெருமையாக அவர்கள் எண்ணிவந்தனர். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து முக்கியமான பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள்தாம். ஆபிரகாமில் துவங்கி, ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே என்று தொடர்ந்து, யோவான், இயேசு என்று அனைத்து பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஓர் அர்த்தமும் உண்டு. வயதுமுதிர்ந்த காலத்தில், செக்கரியா, எலிசபெத்து இருவருக்கும் இறைவனின் கருணையால் குழந்தை பிறந்ததால், இக்குழந்தைக்கு 'யோவான்' என்று பெயரிடும்படி தலைமைத் தூதர் கபிரியேல் பணித்திருந்தார். இறைவன் இக்குழந்தைக்கு தந்த 'யோவான்' என்ற பெயருக்கு 'யாவே அருள் வழங்கினார்' "Graced by Yahweh" என்று பொருள்.

குழந்தைக்குப் பெயர்சூட்டுவது இஸ்ரயேல் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு நிகழ்வு. திருமுழுக்கு யோவான் வாழ்வில் நடந்த அந்த முக்கியமான நிகழ்வு இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வும் நமக்குள் சிந்தனைகளை எழுப்புகின்றது. பெயர்சூட்டும் விழாவுக்கு வந்திருந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைக்குத் செக்கரியா என்ற தந்தையின் பெயரையேச் சூட்டவேண்டும் என்று கூறினர். அதுவே அங்கு நிலவிய பாரம்பரியம். பாரம்பரியத்திற்கு மாறாக, கடவுள் தந்த 'யோவான்' என்ற பெயர், குழந்தைக்குச் சூட்டப்பட்டது. யோவான் பிறந்ததே இயற்கையின் நியதிகளைத் தாண்டிய ஒரு செயல்... அவருக்குத் தரப்பட்ட பெயர் பாரம்பரியத்திற்குப் புறம்பான ஒரு பெயர். 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ' என்று ஊர் மக்கள் அனைவரும் வியந்ததற்கு ஏற்ப, யோவான் வாழ்ந்த வாழ்க்கையும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. இப்படி பாரம்பரியங்களையும், பழக்க வழக்கங்களையும் தாண்டி, யோவானின் வாழ்க்கை இறைவனின் அருளால் முற்றிலும் வழிநடத்தப்பட்ட வாழ்க்கையாக அமைந்தது.

உலகில் பிறக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பிறப்பில் தரப்படும் ஒரு முக்கிய அடையாளம்... நமது பெயர். நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தாங்கிச்செல்லும் அடையாளம் இது. பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயர் சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப்போகும் வண்ணம், பெயர் சொல்லி அழைக்கும் இருள்சூழ்ந்த பக்கம்.

பிறக்கும்போது, வளரும்போது, படிக்கும்போது, பலவிதமானப் பெயர்கள் நமது அடையாளங்களாகச் சூட்டப்படும். நம்மில் பலருக்கு நாம் செய்யும் தொழிலே நமது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வானதாகக் கருதப்பட்டால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். உதாரணமாகமருத்துவர், ஆசிரியர், பேராசிரியர், அருள்பணியாளர் ஆகியோரைப் பெயர் சொல்லி அழைப்பதைவிட, doctor, teacher, professor, Father,  சாமி என்றெல்லாம் அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். இன்று நாம் கொண்டாடும் யோவான் என்ற குழந்தை, இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கியதால், திருமுழுக்கு யோவான் என்று திருஅவையால் தனிப்பட்ட மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.

இதுவரை நாம் சிந்தித்தது, பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிமயமான பக்கம். இனி சிந்திக்க இருப்பது... இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருக்களைச் சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டுவேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? இவர்களை நாம் அழைக்கும் தொனியில் மரியாதை ஒலிக்காது. பல ஆண்டுகள் இவர்களை நமக்குத் தெரிந்திருந்தாலும்இவர்களின் பெயர்களை நாம் கற்றுக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களே அவர்கள் பெயர்களாக மாறும் அவலம் நம்மிடையே உள்ளது. மனித சமுதாயத்தில் மட்டுமே காணக்கிடக்கும் மற்றொரு சாபம்... நமது இன வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள். இவற்றின் அடிப்படையில் ஒரு சிலர் அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்... நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.

நான் பணி செய்து வந்த ஒரு அலுவலகத்தில் எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஓர் இளைஞர் என் நினைவுக்கு வருகிறார். மற்ற எல்லாரும் அவரைக் கூப்பிட்ட ஒரே பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு, "சங்கர்" என்று அழைத்தேன். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில் புன்னகை ஒளிரும். என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவனித்துக்கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப் பெறுவதற்காக நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. "சங்கர்" என்று அவரை அழைக்கும்போது, அவர் தோள்களை உயர்த்தி சிரித்தது எனக்கு முக்கியமாகப் பட்டது. அதேபோல், நான் தங்கியிருந்த அருள்பணியாளர்கள் இல்லங்களில் எளிய பணிசெய்யும் எல்லாருடைய பெயரையும் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வேன். அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை இரசித்துப் பார்த்திருக்கிறேன்.

திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளன்று, அவருக்குப் பெயர் சூட்டும் நிகழ்வைச் சிந்திப்பதன் பயனாக, தனி மனிதர்களுக்கு தரப்படும் தனித்துவமான அடையாளமான பெயர்களின் உண்மைப் பொருளைக் கற்றுக்கொள்ள முயல்வோம். நாம் மற்றவர்களை ஏகவசனத்தில், அல்லது தரம் குறைந்த அடைமொழிகளால் அழைப்பதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு உரிய மரியாதைத் தரும் பெயர்களால் அழைப்பதற்கு முயற்சிகள் எடுப்போம். ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர்மீது நாம் வழக்கமாகச் சுமத்தும் ஏகவசனங்களையும், அடைமொழிகளையும் கிழித்துவிட்டு அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்.

'யாவே அருள் வழங்கினார்' என்ற பொருள்படும் 'யோவான்', தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவர் மட்டும் அருளால் நிறையவில்லை. அவர் பணிகளால், நாம் அனைவரும் அருளுக்கு மேல் அருள் பெற்றுள்ளோம் (யோவான் 1:16). இறையருளை மக்களுக்கு அள்ளித்தந்த திருமுழுக்கு யோவான், நமக்கும் இறைவனிடமிருந்து அருள்வளங்களைப் பெற்றுத்தர மன்றாடுவோம்.


No comments:

Post a Comment