Whatever
Became of Sin? by Karl A. Menninger
பொதுக்காலம் 10ம் ஞாயிறு
கங்கை
நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார் ஒரு குரு. அவருடைய சீடர்களாக,
மூன்று இளையோர், அந்த ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தனர். அம்மூன்று சீடர்களும் ஒருநாள்
அவரிடம் சென்று, "குருவே, கடந்த ஓராண்டளவாய், நாங்கள் ஒவ்வொரு நாளும் இந்த நதியின் புனித
நீரில் மூழ்கி எழுந்துள்ளோம். தற்போது, இந்தியாவில் உள்ள அனைத்து புனித
நதிகளிலும் மூழ்கி எழுவதற்கு விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். அவர்கள் ஏன்
அவ்வாறு முடிவெடுத்தனர் என்று கேட்ட குருவிடம்,
"கங்கை எங்கள்
பாவங்களைக் கழுவினாலும், இன்னும் மற்ற நதிகளில் மூழ்கி எழுந்தால், எங்கள் பாவங்கள் முற்றிலும் கழுவப்படும் என்று நினைக்கிறோம்"
என்று பதில் சொன்னார்கள்.
அவர்களது
புனித யாத்திரைக்கு அனுமதி வழங்கிய குரு, அவர்கள் புறப்படும் நேரத்தில், அவர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்தார். ஏன் என்று புரியாமல், குருவைப்
பார்த்த சீடர்களிடம், "நீங்கள் ஒவ்வொரு நதியிலும் மூழ்கி
எழும்போது, இந்தப் பாகற்காயையும் நீரில் அமிழ்த்தி, கொண்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
புனித
யாத்திரை முடிந்து திரும்பிவந்த சீடர்கள், பாகற்காயை குருவிடம் கொடுத்தனர்.
அவர் அதை வாங்கி, சிறு, சிறு துண்டுகளாக
வெட்டி, சீடர்களிடம் கொடுத்து, "இது எல்லா
புனித நதிகளிலும் மூழ்கி எழுந்த காய். எனவே,
சாப்பிடுங்கள்"
என்று சொன்னார். அதைச் சாப்பிட்ட சீடர்கள்
அனைவரும், "என்ன குருவே! இந்தப் பாகற்காய் இவ்வளவு
கசக்கிறதே!" என்று முகம் சுழித்தனர்.
குரு
அவர்களிடம், "எத்தனை புனித நதிகளில் அமிழ்த்தி எடுக்கப்பட்டாலும், பாகற்காய் தொடர்ந்து கசப்பாகத்தான் இருக்கும். நீங்களும், எத்தனை புனித நதிகளில் மூழ்கி எழுந்தாலும், உங்கள் உள்ளங்களில் மாற்றங்கள் இல்லையெனில், பாவங்கள் கரையாது" என்று கூறினார்.
பாவப்பரிகாரம்
என்ற பெயரில், யாத்திரைகள் செல்வது, புனித நீராடுவது, உடலை வருத்திக்கொள்வது, கோவிலுக்குக் காணிக்கை செலுத்துவது, தான தர்மங்கள் செய்வது, என்று நாம் மேற்கொள்ளும் முயற்சிகள்
எண்ணிலடங்கா. இவை அனைத்தையும் செய்தபின், நம் உள்ளம், தனக்குப் பழக்கமான,
விருப்பமான, சுயநலச் சுகங்களை மீண்டும், தேடிச்சென்றால், பாவம் தொடர்ந்து நமக்குள்
தங்கிவிடும். மனிதர்களாய் பிறந்த அனைவரும் வாழ்வில் எதிர்கொள்ளும் 'பாவம்' என்ற எதார்த்தத்தைச் சிந்திக்க,
இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
கார்ல்
மென்னிஞ்ஜர் (Karl Menninger), அமெரிக்க ஐக்கியநாட்டில் வாழ்ந்த
புகழ்பெற்ற மனநல மருத்துவர்.
மனநலத்திற்கும் பாவத்திற்கும்
உள்ள நெருங்கியத் தொடர்பை நன்கு உணர்ந்த மென்னிஞ்சர் அவர்கள், 1973ம் ஆண்டு, "என்னதான் ஆயிற்று பாவத்திற்கு?" (“Whatever
Became of Sin?”)
என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். இந்நூலில்
அவர் கூறும் ஒரு சில கருத்துக்கள், நம் ஞாயிறு சிந்தனைக்குப் பெரிதும்
உதவியாக இருக்கும்.
மென்னிஞ்ஜர்
கூறுவது இதுதான்... கடந்தகாலத்தில்,
'பாவம்' என்ற சொல், மனித வாழ்வின் பல அம்சங்களில் பெருமளவு
பயன்படுத்தப்பட்டு வந்தது. காலம் செல்ல,
செல்ல 'பாவம்' என்ற சொல், வேறு பல சொற்களாக உருமாறியது. 'பாவம்' என்ற அடிப்படை உண்மை மாறாமல் இருந்தாலும், அதற்கு நாம் கொடுத்துவரும் பல்வேறு மாற்றுப்பெயர்கள், 'பாவத்தை'ப் பற்றிய நம் எண்ணங்களையும்,
உணர்வுகளையும் மாற்றிவருகின்றன.
எடுத்துக்காட்டாக, முதல், மற்றும் 2ம் உலகப் போர்களின்போது
நிகழ்த்தப்பட்டக் கொடுமைகள், குறிப்பாக, வதை முகாம்கள், 'தேசப்பற்று' என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டன.
அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் இராணுவ வீரர்களில் பலர், அந்நாட்டுப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியபின், தாங்கள், தங்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளுக்குக்
கீழ்ப்படிந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது என்று கூறினர். 'தேசப்பற்று' ‘மேலதிகாரிகளுக்குக்
கீழ்ப்படிதல்’ என்ற காரணங்கள், பாவங்களுக்கு
தரப்பட்ட மாறுவேடங்கள்.
இவ்வாறு,
எடுத்துக்காட்டுகளுடன், தன் கருத்துக்களை வலியுறுத்திக் கூறும் மென்னிஞ்சர் அவர்கள், பாவம் என்ற உண்மையின் ஆழத்தைக் குறைப்பதில், அரசுகள் பெரும் பங்கு
வகித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
'பாவம்' என்ற சொல்லுக்குப்
பதில், 'குற்றம்' என்ற சொல்லை
அரசுகள் அறிமுகப்படுத்தின. குற்றங்களுக்கு, அரசுகளும்,
நீதிமன்றங்களும் தண்டனைகள் வழங்கத் துவங்கியபோது, ஒருவர் செய்த
தவறு, பாவமா என்று சிந்திப்பதற்குப் பதில், அது, சட்டப்படி குற்றமா, இல்லையா என்ற கேள்வியே மேலோங்கியது. பாவத்திற்குப் பதில்
சொல்லவேண்டிய ஒருவரது மனசாட்சி, புறந்தள்ளப்பட்டு, குற்றத்திற்குப்
பதில் சொல்லவேண்டிய நீதிமன்ற சாட்சிகள் முக்கியத்துவம் பெற்றனர். பாவத்தை பல்வேறு ஒப்பனை
சொற்களால் உருமாற்றி, அதைப்பற்றி சிந்திக்கவிடாமல் நம்மை திசைமாற்றும்
வழிகளை, அரசுகளும், ஏனைய சமுதாய நிறுவனங்களும் செய்துள்ளன. இவற்றின் தவறான தாக்கங்களிலிருந்து
விலகி நின்று, பாவத்தை, நேருக்கு நேர் சந்திக்கவும், சிந்திக்கவும், இன்றைய ஞாயிறு வழிபாட்டில், நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனி மனித
வாழ்விலும், சமுதாய வாழ்விலும் பாவம் என்ற இருளுடன்
வாழப்பழகிக் கொண்டோம். நமது செய்தித்தாள்களைத் திறந்தால் போதும், அல்லது, நம் தொலைக்காட்சியைப் பார்த்தால்
போதும், பாவ இருளின் அவலமான முகங்கள் ஒவ்வொரு நாளும்
நம்மை வேதனையில் நிறைக்கின்றன.
இந்தியாவில்,
ஏப்ரல் மாதத்தில், இரு கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. காஷ்மீர் மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் இரு சிறுமிகளுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகள், நமது சமுதாயத்தில் பாவம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை
வெளிச்சத்திற்குக் கொணர்ந்தன. காஷ்மீரில், அசிஃபா பானோ என்ற 8 வயது சிறுமியின்
மீது நடத்தப்பட்ட கொடுமைகளும், கொலையும், தற்போது உலகறிந்த பாவங்களாகிவிட்டன. இந்தப் பாவங்கள், ஒரு கோவிலில் வைத்து நடத்தப்பட்டன என்பதையும், கோவில் பொறுப்பாளரும், காவல் துறையைச் சார்ந்தவர்களும்
இக்கொடுமைகளைச் செய்தனர் என்பதையும் அறியும்போது, பாவத்தின்
மிக, மிக அருவருப்பான முகங்களை நம்மால்
காணமுடிகிறது.
சிதைந்து
சின்னாபின்னமான சிறுமி அசிஃபாவின் உடல், சனவரி மாதமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாதம் வரை அக்கொடுமை வெளிவராமல் ஏன் மறைக்கப்பட்டது என்பதைச்
சிந்திக்கும்போது, நமது ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும்
பல்வேறு பாவங்களின் ஆதிக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சிறுமி
அசிஃபா, கால்நடைகளைப் பராமரிக்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவரைப்போல, பல பெண்கள் அம்மாநிலத்தில் அடிக்கடி
பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி, கொல்லப்படுகின்றனர் என்பதால், இது முக்கியமான செய்தி அல்ல என்பதும், இந்தக் கொடுமை வெளிவராமல் போனதன் காரணங்களாக ஊடகங்களால் அலசப்படுகின்றன.
வன்முறைகளைப் பற்றிய அறிக்கை, குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைப் பற்றிய அறிக்கை, ஒவ்வொரு நாளும் இடம்பெறும் வானிலை அறிக்கையைப் போல நமக்குப் பழக்கமாகிவிட்டது
என்று சொல்லி, நம்மையே சமாதானப்படுத்திக்கொள்வது, ஒட்டுமொத்த
சமுதாயத்தின் பாவத்தை வெளிக்கொணர்கிறது.
இன்னும்
சற்று ஆழமாக ஆய்வு செய்தால், 'பாவம்' என்ற உணர்வே, நம் சமுதாயத்தில் தொலைந்து போய்விட்டதைப்போல் தெரிகிறது.
உண்மையிலேயே, 'பாவம்' தொலைந்துபோகவில்லை.
அதை, பல்வேறு வடிவங்களில் கண்டு
சலிப்படைந்துவிட்ட நாம், பாவத்தைப் பற்றிய உணர்வுக்கு மரத்துப்போய்விட்டோம்.
இந்த
நிலையை, ஓர் எடுத்துக்காட்டின் வழியே புரிந்துகொள்ள
முயல்வோம். கொதிக்கும் நீரில், ஒரு தவளையைப் போட்டால், அது, துள்ளி குதித்து வெளியே தாவும்.
அதே தவளையை, குளிர்ந்த நீருள்ள ஒரு பாத்திரத்தில் போட்டால், அது, ஆனந்தமாக நீந்தி வரும். அவ்வேளையில், அந்தப் பாத்திரத்தை நாம் மெதுவாகச் சூடாக்கினால், அந்த நீரின் வெப்பம் சிறிது சிறிதாகக் கூடும். உள்ளே நீந்திவரும்
தவளை, வெப்பமாகிவரும் நீருக்கு, கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிப் போவதால், தொடர்ந்து நீந்திக்கொண்டிருக்கும். வெப்பம் கூட, கூட தவளை
மெதுவாக செயலிழக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தில், தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அவ்வேளையில், அந்தத் தவளை, அந்த சூட்டில் முற்றிலும் செயலிழந்து
இறந்துபோகும்.
இதேபோல், சமுதாயத்தில் திரும்பும் இடமெல்லாம் பாவம் கண்ணில் படுவதால், ஒருவேளை இதுதான் மனித இயல்போ என்ற பாணியில் எண்ணத் துவங்குகிறோம்.
பாவங்களின் சக்திக்கு முன் செயலிழந்து, சிந்திக்கவும் மறந்து, மௌனமாகிறோம்.
பல வேளைகளில், நாம் செய்த தவறுகள் வெளிப்படும்போது, அவற்றிற்கு முழுப் பொறுப்பேற்பதற்குப் பதில், நாம் வளர்ந்த சூழலை, நம்மைப் பெற்றவர்களை, வளர்த்தவர்களை, மற்றவர்களை, நம் தவறுகளுக்குப் பொறுப்பு என்று சுட்டிக் காட்டுகிறோம். இந்தப்
போக்கு, இன்று நேற்றல்ல, மனிதர்கள் தோன்றிய காலத்திலிருந்தே நம்மிடையே ஊறிப்போன பழக்கமாகத்
தெரிகிறது. இன்றைய முதல் வாசகம், இந்தப் பழக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
(தொடக்க நூல் 3:9-15)
கடவுள்
தடை செய்திருந்த பழத்தை ஆதாம் ஏன் சாப்பிட்டார் என்று கேட்கும் இறைவனிடம், "நீர் தந்த பெண் கனியை எனக்குக் கொடுத்தாள்" என்று, ஆதாம்,
ஏவாளைக் குறை சொல்கிறார். ஏவாளை இறைவன் கேட்கும்போது, "பாம்பு என்னை ஏமாற்றியது" என்று பாம்பின் மீது பழி சுமத்துகிறார்.
கடவுள் ஒருவேளை பாம்பிடம், ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டிருந்தால், பாம்பு, "நீர் என்னை அவ்விதம் படைத்துவிட்டீர்"
என்று கடவுள் மீதே பழியைத் திருப்பியிருக்கும். ஆதாம், ஏவாள் காலம் துவங்கி, வரலாற்றில், கோடான கோடி குற்றங்களை, பாவங்களை, தவறுகள் என்றுணர்ந்து, பொறுப்பேற்று, அவற்றைத் திருத்தும்
வழிகளைத் தேடுவதற்குப் பதில், பொறுப்பைத் தட்டிக்கழித்து, தப்பிக்கும் வழிகள் அதிகம் பேசப்பட்டன. இன்றும்
பேசப்படுகின்றன.
பாவத்தில்
ஊறி, சுகம் கண்டிருக்கும் இவ்வுலகில், மிக அரிதாக, சில உன்னத மனிதர்களை நாம் சந்திக்கும் வேளையில், இப்படியும் ஒருவரால் வாழமுடியுமா என்ற வியப்பு எழுகிறது. பல வேளைகளில், இந்த வியப்பு, விரைவில் மறைந்து, அவர், ஏதோ
ஒரு மறைமுக காரணத்திற்காக நல்லவர்போல் நடிக்கிறார் என்று சிந்திக்கத் துவங்குகிறோம்.
உன்னத மனிதர்கள், ஆர்வத்துடன், நற்செயல்களில் ஈடுபடும்போது, அவர்கள் மதிமயங்கி உள்ளனர் என்று சொல்லவும் இவ்வுலகம் தயங்குவதில்லை.
இத்தகையைச்
சூழலை இயேசு எதிர்கொண்டார். அதையே இன்றைய நற்செய்தி கூறுகிறது. நாசரேத்தில் அமைதியாக
தச்சுவேலை செய்துவந்த இளைஞர் இயேசு, தன் பணிவாழ்வில் அடியெடுத்து வைத்ததும், 'அவர் மதி மயங்கி இருக்கிறார்' (மாற்கு
3:21) என்ற வதந்திகள் பரவின. இயேசு, உண்ணாமல்,
உறங்காமல் தன் பணிகளில்
ஈடுபட்டதை தவறாக பொருள்கொண்டு, அவரை மீண்டும் நாசரேத்துக்கு அழைத்துச்
சென்று, ‘நல்ல புத்தி’ புகட்டவேண்டும் என்ற ஆதங்கத்துடன், உறவினர்கள், அவரைத் தேடிச்
சென்றதையும், இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.
இத்தனை
எதிர்ப்புக்கள், மறைமுகத் தாக்குதல்கள், வதந்திகள் சூழ்ந்தாலும்,
தன் தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றுவதே தன் பணி என்பதையும், அவ்வாறு நிறைவேற்றுபவரே தன் 'சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்' (மாற்கு 3:35) என்பதையும் இயேசு
அழுத்தந்திருத்தமாய் இன்றைய நற்செய்தியில் கூறியுள்ளார்.
பாவம்
என்ற உணர்வையே மழுங்கடிக்கும்வண்ணம், உலகில் பரவிவரும் தீய சக்திகளுடன் சமரசம் செய்யாமல், அவற்றை எதிர்த்து நிற்கும் துணிவையும், இறைவனின் திருவுளத்தைப் புரிந்து நிறைவேற்றும் தெளிவையும் நாம்
பெறவேண்டும் என்று மன்றாடுவோம். அவ்விதம் வாழ்ந்தால், இயேசுவின் குடும்பத்தில் நாமும் ஒருவராக இணைக்கப்படுவோம்.
No comments:
Post a Comment