17 December, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கடல்மீது நடக்க விழைந்த பேதுரு 1


COP25: Protesters call for action at Madrid climate rally

பூமியில் புதுமை – ஏமாற்றம் அளித்த COP 25 மாநாடு

ஐ.நா. அவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு, COP 25, இஸ்பெயின் நாட்டின் தலைநகர் மத்ரித்தில், டிசம்பர் 15, இஞ்ஞாயிறன்று நிறைவடைந்தது. டிசம்பர் 2ம் தேதி முதல் 13ம் தேதி முடிய திட்டமிடப்பட்டிருந்த இக்கருத்தரங்கு, இரண்டு நாள்கள் கூடுதலாக நடைபெறவேண்டியதாயிற்று. இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட நாடுகள், பருவநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் குறித்து, ஒருங்கிணைந்த முடிவுகளை எட்டுவதில் சிக்கல்கள் எழுந்ததால், இரண்டு நாள்கள் கூடுதலாகத் தேவைப்பட்டன.
1995ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில், முதன்முறையாக, COP 1 கூடியதிலிருந்து, கடந்த 25 ஆண்டுகளாக, நடைபெற்றுவரும் இக்கருத்தரங்குகளில், COP 25 கூட்டமே, அதிக நாள்கள் நடைபெற்றது. கூடுதல் இரு நாள்கள் நடைபெற்றாலும், COP 25 உறுதியான முடிவுகள் எடுக்கவில்லை என்பது, வேதனையான உண்மை.
கருத்தரங்கின் முடிவில், ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், தன் ஏமாற்றத்தை வெளிப்படையாகவே கூறினார். "COP 25ன் முடிவுகள் குறித்து ஏமாற்றமடைகிறேன். பருவநிலை மாற்றத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடியைத் தீர்க்க, கூடுதலான ஆர்வத்துடன், அர்ப்பணத்துடன், நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுவதற்கு, பன்னாட்டு சமுதாயம், முக்கியமானதொரு வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது" என்று, கூட்டேரஸ் அவர்கள், வருத்தம் தெரிவித்துள்ளார்.
அறிவியலாளர்கள் கூறிவரும் எச்சரிக்கைகளுக்கும், அவற்றை விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளவும் மனமின்றி, உலகத்தலைவர்கள் முன்வைத்திருக்கும் செயல் திட்டங்களுக்கும், மிகப்பெரிய இடைவெளி இருப்பதை, இக்கருத்தரங்கு தெளிவாக்கியது என்று, 'நியூ யார்க் டைம்ஸ்' நாளிதழ் கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், மற்றும், உலகின் பல்வேறு சிறிய தீவு நாடுகள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க பரிந்துரைத்துள்ள திட்டங்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இவை நான்கும் அதிக அளவு கார்பன் வெளியேற்றத்தை உருவாக்கும் நாடுகள் என்பது, கவலை தரும் ஓர் உண்மை.
2020ம் ஆண்டு, டிசம்பரில், பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் COP 26 மாநாட்டின்போது, அனைத்து நாடுகளும், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க, புதிய   பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. (நன்றி: நியூ யார்க் டைம்ஸ், பிபிசி தமிழ்)

Peter got out of the boat and walked on the water

ஒத்தமை நற்செய்தி  கடல்மீது நடக்க விழைந்த பேதுரு 1

இயேசு 5,000 பேருக்கு உணவளித்த புதுமை, நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே புதுமைஎன்பதை நாம் அறிவோம். அப்புதுமையைத் தொடர்ந்து, இயேசு கடல் மீது நடந்த புதுமை, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும், பதிவு செய்யப்பட்டுள்ளது. 5,000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கிய அன்று மாலை, அல்லது, இரவில், இப்புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தியில் பதிவுசெய்யப்பட்ட புதுமைகளை, சென்ற ஆண்டு சிந்தித்த வேளையில், இப்புதுமையில் நம் தேடலை மேற்கொண்டோம். 18 மாதங்களுக்கு முன் நாம் மேற்கொண்ட அத்தேடலிலிருந்து, ஒரு சில எண்ணங்களை, மீண்டும் அசைபோடுவோம்.

அற்புதமான வழியில் தங்கள் பசியைப் போக்கிய இயேசுவை, அரசராக்க விழைந்த மக்களிடமிருந்து தப்பித்து, இயேசு தனியே செபிக்கச் சென்றார். இதை, நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு கூறியுள்ளார்:
யோவான் நற்செய்தி 6:14-15
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். அதுவரை இயேசுவின் சொல்திறமையைக் கண்டு வியந்தவர்கள், அன்று அவரது செயல் திறமையையும் கண்டனர். 5,000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்த அந்தப் புதுமை, இயேசுவின் மீது இருந்த மதிப்பை, இன்னும் பலமடங்காக உயர்த்தியது. இயேசு அவர்களது எண்ணங்களையும், அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தையும் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார்.
கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள், ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது, அதே கற்களை எறிந்து, அவரைக் கொன்று, சமாதியும் கட்டும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, அங்கிருந்து அகன்று சென்றார்.

இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார் என்று யோவான் பதிவுசெய்திருக்கும் அந்தக் கூற்றில், நம் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான ஒரு சொல் - மீண்டும். அதாவது, தனியே மலைக்குச் செல்வதை இயேசு மீண்டும், மீண்டும் செய்தார் என்று யோவான் உணர்த்துகிறார். தன் பணியின் நடுவில், குறிப்பாக, ஒவ்வொரு நாளும், தன் பணி முடிந்து மாலையில், இயேசு, தனியே மலைக்குச் சென்றிருக்கவேண்டும். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...

இயேசு, தன் பணிவாழ்வில், மீண்டும், மீண்டும், தன் தந்தையைச் சந்திக்கச் சென்றார் என்பதை எண்ணும்போது, மின்னல் கீற்றுபோல, சிந்தனை ஒன்று, மனதில் பளிச்சிடுகிறது. வாழ்க, வாழ்க என்று கூட்டங்கள் எழுப்பும் ஆரவாரத் துதிகளிலேயே மயங்கி, தன்னிலை மறந்து வாழும் நமது தலைவர்கள், அவ்வப்போது, கூட்டத்திலிருந்து விலகிச்சென்று, தனியே, தங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்!

தந்தையோடு தனியே உறவாடச்சென்ற இயேசு, அங்கேயேத் தங்கிவிடவில்லை. தன் சீடர்களைத் தேடிச்சென்றார். அவர், தன் சீடர்களைத் தேடிச்சென்றபோது, அவர்கள், நடுக்கடலில், காற்றோடும், அலைகளோடும் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டார். கடல் மீது நடந்தார்.

கடல் மீது, புயல் நடுவே தங்களைத் தேடிவரும் இறைவனை, இயேசுவை, சீடர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இன்னும் பரிதாபமான நிலை அங்கு நிலவியது. தேடிவரும் கடவுளை, பேய் என்று எண்ணினர், சீடர்கள். அவ்வளவு மாறிப்போயிருந்தது, அவர்கள் பார்வை. இயேசு அருகில் வந்து, "அஞ்சாதீர்" என்றார். நற்செய்தியில் இயேசு அடிக்கடி பயன்படுத்தியுள்ள ஒரு சொல்: அஞ்சாதீர்கள், அல்லது, கலங்காதீர்கள்.
அஞ்சாதீர்கள் என்று சொல்லி இயேசு படகில் ஏறியதும், காற்று அடங்கியது. படகு கரை சேர்ந்தது. நற்செய்தியாளர்கள் யோவானும், மாற்கும், இப்புதுமையை, இவ்வாறு நிறைவு செய்கின்றனர். ஆனால், மத்தேயுவோ, இன்னுமொரு நிகழ்வை இங்கு இணைக்கின்றார். அதையும், ஒரு புதுமையாக நாம் சிந்திக்கலாம். அந்நிகழ்வை மத்தேயு நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:
மத்தேயு நற்செய்தி 14/26-29
அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.

சிறு குழந்தைகளை, பெரியவர்கள் தூக்கிப்போட்டு பிடிக்கும் விளையாட்டைப் பார்த்திருப்போம். அக்குழந்தை எவ்வித பயமும் இல்லாமல், சிரித்தபடியே, கைகளை விரித்து, வானத்தில் பறப்பதுபோல் தெரியும் அக்காட்சி, அழகாய் இருக்கும். அப்பாவோ, அம்மாவோ அருகிலிருக்கிறார்கள் என்று தெரிந்தால், குழந்தைகளுக்கு அசாத்திய துணிவு வந்துவிடும். அதேபோல், ஆபத்து சூழ்ந்த நேரங்களில், அதைக் கடப்பதற்கு, குழந்தைகளுக்குத் தேவை, பெற்றோரின் அருகாமை. ஒருசில வேளைகளில், பெற்றோரின் அருகாமையை, குழந்தைகள் பார்க்கமுடியவில்லையெனினும், அவர்களது குரல் ஒன்று போதும், அவர்களைக் கரைசேர்க்க...

கடும்குளிர் காலத்தில் ஒரு நாள். நள்ளிரவில், ஊருக்கு ஓரத்தில் இருந்த அந்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த குழந்தைகளையெல்லாம் எழுப்பி, தந்தையும் தாயும் வீட்டுக்கு வெளியே விரைந்தனர். அந்த அவசரத்தில், ஒரு குழந்தையை மாடியில் விட்டுவிட்டு வெளியேறி விட்டனர். சன்னலருகே வந்து அழுது கொண்டிருந்த அச்சிறுமியை, தந்தை, சன்னல்வழியே குதிக்கச் சொன்னார்.
சிறுமி அங்கிருந்து, "அப்பா, ஒன்னும் தெரியலியே. ஒரே இருட்டா, புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" என்று கத்தினாள். அப்பா கீழிருந்தபடியே, "உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லம்மா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க முடியுது. குதிம்மா" என்று தைரியம் சொன்னார். தந்தை சொன்னதை நம்பி குதித்தாள் சிறுமி... தந்தையின் பாதுகாப்பான அரவணைப்பிற்குள் தஞ்சம் புகுந்தாள்.

'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்று இயேசு கூறியதும், பேதுரு ஒரு குழந்தை போல 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்று கூறுகிறார். இயேசுவும், ஒரு குழந்தையாக மாறி, ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை என, அச்சமூட்டும் பல விடயங்கள் சூழ்ந்திருந்த வேளையில், இயேசு, பேதுருவை, தண்ணீரில் நடக்கச்சொன்னது, பெரியதொரு சவால். பேதுருவும் துணிகிறார். சற்று நேரத்துக்குமுன், பேயாய் இருக்குமோ என்ற கலக்கத்தை உருவாக்கிய அந்த உருவத்தின் குரல் கேட்டதும், பேதுருவுக்குள் அத்தனை மாற்றங்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், தன் தலைவன் இயேசுதான் என்று தெரிந்ததும், தான் இதுவரை பாதுகாப்பு என்று நினைத்த படகையும், நண்பர்களையும் விட்டுவிட்டு, பழக்கமில்லாத ஒரு சூழலுக்குள் துணிந்து இறங்குகிறார் பேதுரு.

இதில் கவனிக்கவேண்டிய மற்றோர் அம்சமும் உள்ளது. அமைதியாக, சலனமற்றிருக்கும் நீர்பரப்பில் நடப்பதே பெரும் சவால். புயலும் அலையும் நிறைந்த கடல் பரப்பில் நடப்பதற்கு பேதுருவுக்கு அழைப்பு வருகிறது. இயேசு, பேதுருவுக்கு அந்தச் சவாலான அழைப்பை அளிப்பதற்கு முன், காற்றையும், கடலையும், அமைதி படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக, அந்தப் புயலின் நடுவில், இறைவன் காத்துக்கொண்டிருப்பார்; துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை, இயேசு, இந்நிகழ்வின் வழியே நமக்குச் சொல்லித்தருகிறார். பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்... அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும்... அஞ்சாதீர்கள், துணிந்து வாருங்கள்.... புயலின் நடுவில், கடலின் நடுவில், கடவுள் நம்மோடு இருக்கிறார்.

'கடவுள் நம்மோடு' என்ற உண்மையைச் சொல்ல வழங்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் காலத்தில், கிறிஸ்துவின் பிறப்பை இடையர்களுக்கு, வானதூதர்கள் கூறிய அந்த முதல் நற்செய்தியுடன் நம் தேடலை நிறைவுசெய்வோம். "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்." (லூக்கா 2: 10-11)


No comments:

Post a Comment