10 December, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை: 3


Propagating plants using leaves - S Rajarathnam

பூமியில் புதுமை – இலையை விதையாக்கும் புரட்சி

இலையைப் பறித்து நட்டால் செடியாக வளரும் என்பதை, தனது கண்டுபிடிப்பின் வழியே நிரூபித்துள்ளார், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, எஸ். இராஜரத்தினம். திசு வளர்ப்பு முறை (Tissue Culture) அடிப்படையில், 'இலை வழி நாற்று முறை' எனப்படும் இந்த நுட்பம் சாத்தியமாகியுள்ளது.
பொதுவாக, விதைகளில் இருந்துதான் வேர் உருவாகி, செடி, மரம் ஆகியவை வளரும். இதனால், மரங்களை வளர்ப்பதற்கு அதிக விதைகள் தேவைப்படுகின்றன. இப்போது சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான விதை இரகங்களும், மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதை சரிசெய்ய களம் இறங்கிய இராஜரத்தினம் அவர்கள், இலையிலிருந்து செடியை உருவாக்கும் 'இலை வழி நாற்று முறை'யை அறிமுகம் செய்து, வேளாண் அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
'இலை வழி நாற்று முறை'யில் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே தனது இலட்சியம் என்றும், இந்த முறை, எதிர்காலத்தில், மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார், இராஜரத்தினம். (நன்றி - பிபிசி தமிழ்)

Centurion’s servant - icon

ஒத்தமை நற்செய்தி நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை: 3

ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்... ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். (லூக்கா 7: 6-7,  காண்க - மத்தேயு 8:8) என்று நூற்றுவர் தலைவர் தன் நண்பர்கள் வழியே இயேசுவுக்கு அனுப்பிய இந்த விண்ணப்பத்தில் பொதிந்திருக்கும் அழகையும், அதற்கு இயேசு கூறிய பதிலையும் மையப்படுத்தி, இன்றையத் தேடலை நாம் மேற்கொள்வோம். மேலோட்டமாகப் பார்க்கும்போது, தன்னை தகுதியற்றவன் என்று, நூற்றுவர் தலைவர் கூறும் இச்சொற்களை, அளவுக்கு மீறிய, அல்லது, போலியான தாழ்ச்சியாகக் கருத வாய்ப்புண்டு.

நூற்றுவர் தலைவரின் சார்பாக, இயேசுவிடம் சென்ற யூதர்கள், "நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே" (லூக். 7:4) என்று அவருக்காகப் பரிந்துரைக்கின்றனர். நூற்றுவர் தலைவரோ, இயேசுவிடம், ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன் (லூக். 7:6) என்று செய்தி அனுப்புகிறார். 'தகுதியற்றவன்' என்று நூற்றுவர் தலைவர் தன்னைப்பற்றி கூறும் வேளையில், 'தகுதியுள்ளவர்' என்று மற்றவர்கள் அவரைப்பற்றி கூறுவது, திருமுழுக்கு யோவானைக் குறித்த ஒரு சிந்தனையை நம் நினைவுக்குக் கொணர்கிறது. பாலை நிலத்தில் ஒலிக்கும் ஒரு குரலாக, திருமுழுக்கு யோவான் அறிமுகமாகும் பகுதி, நான்கு நற்செய்திகளிலும் இடம் பெற்றுள்ளது (மத். 3:1-12; மாற். 1:1-8; லூக். 3:1-9; யோவா. 1:19-28). சென்ற ஞாயிறன்று, (திருவருகைக் காலம் 2ம் ஞாயிறு) மத்தேயு நற்செய்தியில் இடம்பெற்றுள்ள இப்பகுதிக்கு நாம் செவிமடுத்தோம்.

திருமுழுக்கு யோவான் தன்னைக்குறித்தும், தனக்குப் பின்வரும் மெசியாவைக் குறித்தும், அவரது இறையரசில் நுழைவதற்குத் தேவையான மனமாற்றம் குறித்தும் கூறிய சொற்கள், நான்கு நற்செய்திகளிலும் ஒரு சில வேறுபாடுகளுடன் கூறப்பட்டுள்ளன. அவரது கடுமையான எச்சரிக்கைகளுக்குச் செவிமடுக்கும் குருக்களும், லேவியரும் "நீர் யார்?.. உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?" (யோவான் 1:22) என்ற கேள்வியை, எழுப்பியபோது, திருமுழுக்கு யோவான் அவர்களிடம், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்றார். (யோவான் 1:26-27) 'இயேசுவின் மிதியடிவாரை அவிழ்க்கக்கூட தனக்குத் தகுதியில்லை' என்று திருமுழுக்கு யோவான் கூறியதாக யோவான் நற்செய்தியில் நாம் வாசிக்கும் இச்சொற்கள், மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளில் மாற்றம் ஏதுமின்றி பதிவாகியுள்ளன (மாற்கு 1:7; லூக்கா 3:16) மத்தேயு நற்செய்தியிலோ, "அவருடைய மிதியடிகளைத் தூக்கிச்செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை" (மத்தேயு 3:11) என்ற கூற்று பதிவாகியுள்ளது. தன் தகுதியின்மையைப்பற்றி திருமுழுக்கு யோவான் இவ்வளவு தெளிவாகக் கூறியிருக்க, இயேசு, அவருக்கு வழங்கும் நற்சான்றிதழ், மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளில் இவ்வாறு பதிவாகியுள்ளது: "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை." (மத். 11:11; லூக். 7:28) நூற்றுவர் தலைவரும், திருமுழுக்கு யோவானும் தங்களைப்பற்றி கூறும் உண்மைகள், தாழ்ச்சியைப் பற்றிய பாடங்களாக நம்மை வந்தடைகின்றன.

கத்தோலிக்க மரபில் அறிவுறுத்தப்படும் தலை சிறந்த புண்ணியங்களில், தாழ்ச்சியும் ஒன்று. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம் என்று, புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தனையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.
இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. "தனக்கு தாழ்ச்சி உள்ளது என்று ஒருவர் நினைக்கும் அந்த நொடியில், இந்தப் புண்ணியம் தொலைந்து போகிறது. 'நான் தாழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக அடைந்தேன்' என்ற தலைப்பில் இதுவரை ஒரு நூலும் வெளிவந்ததில்லை. அப்படி ஒரு நூல் வெளிவந்தால், அதைவிட முரண்பாடு ஒன்று இருக்கமுடியாது." என்று, ஓர் அறிஞர், தன் பெயரைக் குறிப்பிடாமல் (Anonymous) கூறியுள்ளார்.

நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய தாழ்ச்சியைக் குறித்து மக்களுக்கு மறையுரையாற்றிய ஒருவர், இறுதியில் ஒரு சிறு செபத்தைச் சொன்னார்: "இறைவா, இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள் எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம் தாரும்" என்று அவர் வேண்டினார்.
இது மிகவும் ஆபத்தான, அபத்தமான, தவறான செபம். போலித்தாழ்ச்சிக்கு அழகானதோர் எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர், நம்மைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமே, நம்மை, தற்பெருமையில் சிக்கவைத்துவிடும். அந்தப் பெருமிதமான எண்ணங்களுடன் அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல் எம்மை மாற்றும் என்று சொன்ன அதே மூச்சில், போலியானத் தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது. இதற்கு முற்றிலும் மாறாக, நூற்றுவர் தலைவர், இயேசுவுக்கு முன், தன் உண்மை நிலையை உணர்ந்து பேசினார்.
தன் தகுதியின்மையை வெளிப்படுத்திய அதே மூச்சில், அவர் இயேசுவின் வல்லமையையும் பறைசாற்றினார்: ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார் (லூக்கா 7:7).

தன் தகுதியின்மையையும், இயேசுவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையையும் இணைத்து, நூற்றுவர் தலைவர் கூறிய சொற்கள், இயேசுவை வியப்பில் ஆழ்த்தின என்பதை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், லூக்காவும் பதிவு செய்துள்ளனர்:
இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, "இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். (லூக்கா 7:9 காண்க - மத்தேயு 8:10)

இயேசு வழங்கிய உரைகளும், ஆற்றிய புதுமைகளும் மக்களை வியப்பில் ஆழ்த்தின என்பதை, நற்செய்திகளில் பல இடங்களில் காண்கிறோம். 'புதுமை' என்ற சொல்லுக்கு, 'அதிசயம்' என்ற மற்றொரு சொல்லும் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். வியப்பைத் தரும் வண்ணம் நிகழும் அதிசயச் செயலை நாம் புதுமை என்கிறோம்.
ஆனால், இயேசு ஆற்றிய செயல்கள் அவருக்கு வியப்பை உருவாக்கவில்லை. உண்மையில், இச்செயல்களைக் குறித்து எவ்வித விளம்பரமும் கூடாது என்பதில் இயேசு மிகத் தெளிவாக இருந்தார். அதேவேளை, புதுமைகள் நிகழ்வதற்கு காரணமான நம்பிக்கை, இயேசுவுக்கு, வியப்பையும், மகிழ்வையும் உருவாக்கின என்பதை நற்செய்திகளில் நாம் காண்கிறோம். வெளிப்புறத்தில் உருவாகும் மாற்றங்களைவிட, உள்புறத்தில், அதாவது, மனதளவில் தோன்றும் மாற்றங்களே, இயேசுவின் கவனத்தை, ஒவ்வொரு புதுமையிலும் ஈர்த்துள்ளன என்பதை புரிந்துகொள்கிறோம்.

நூற்றுவர் தலைவர் அனுப்பிய வேண்டுதல் கூற்றைக் கேட்டு வியக்கும் இயேசு, தன் மகளின் நலம் வேண்டி இயேசுவை அணுகும் கானானியப் பெண்ணின் நம்பிக்கையையும் பாராட்டுவதைக் காண்கிறோம். இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். (மத்தேயு 15:28) யூதரல்லாத புறவினத்தவர்களான நூற்றுவர் தலைவர், மற்றும் கானானியப் பெண்ணின் நம்பிக்கையைக் கண்டு வியந்த இயேசு, தன் சொந்த மக்களின் நம்பிக்கையின்மையைக் கண்டும் வியந்தார் என்பதை மாற்கு நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்: அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். (மாற்கு 6:6)

நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணம்பெறும் புதுமை, மத்தேயு நற்செய்தியில், ஒன்பது இறைவாக்கியங்களிலும், (மத். 8:5-13) லூக்கா நற்செய்தியில் பத்து இறைவாக்கியங்களிலும் (லூக். 7:1-10) கூறப்பட்டுள்ளது. இவற்றில், ஒரே ஒரு இறைவாக்கியம் மட்டுமே, புதுமை நிகழ்ந்த செயல்பாட்டைக் குறிக்கின்றது. ஏனைய இறைவாக்கியங்கள் அனைத்தும், நூற்றுவர் தலைவரின் பணிவையும், நம்பிக்கையையும் சித்திரிக்கும் இறைவாக்கியங்களாக, இயேசுவின் வியப்பை பறைசாற்றும் இறைவாக்கியங்களாகப் பதிவாகியுள்ளன. எனவே, இந்தப் புதுமையை, வெறும் செயலாக எண்ணிப்பார்க்காமல், நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையையும், பணிவையும் பறைசாற்றும் ஒரு பாடமாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

நற்செய்தியாளர் லூக்கா இப்புதுமையின் இறுதியில் பதிவுசெய்துள்ள இறைவாக்கியம் நமக்குள் கூடுதல் எண்ணங்களை விதைக்கின்றது. "அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்" (லூக்கா 7:10) ஒரு வார்த்தை சொல்லும், என் ஊழியர் நலமடைவார் என்பது நூற்றுவர் தலைவர் எழுப்பிய விண்ணப்பம். ஆனால், இயேசு அந்த ஒரு வார்த்தையையும் கூறவில்லை.
நற்செய்தியாளர் லூக்காவைப் பொருத்தவரை, இயேசுவும், நூற்றுவர் தலைவரும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை, இயேசு அவரது இல்லத்திற்குச் செல்லவில்லை, நூற்றுவர் தலைவர் வேண்டி கேட்டுக்கொண்ட ஒரு வார்த்தை கூட இயேசுவின் வாயிலிருந்து வெளியேறவில்லை. ஆனால், புதுமை நிகழ்ந்தது. இப்புதுமை நிகழ்ந்ததன் முக்கிய காரணம், நூற்றுவர் தலைவரிடம் விளங்கிய நம்பிக்கை மட்டுமே என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்க, நற்செய்தியாளர் லூக்கா தூண்டுவதைப்போல் தெரிகிறது.

இறுதியாக, ஓர் எண்ணம்... ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார் என்று நூற்றுவர் தலைவர் வெளியிட்ட அந்த புகழ்பெற்ற நம்பிக்கை மன்றாட்டு, இன்றளவும், பல கோடி பக்தர்களின் உள்ளங்களிலிருந்து, ஒரு நம்பிக்கை செபமாக, ஒவ்வொரு நாளும், விண்ணை நோக்கி எழுந்தவண்ணம் உள்ளது.
இந்த மன்றாட்டு, வார்த்தைகளின் சக்தியைப்பற்றி சிந்திக்க வாய்ப்பளிக்கிறது. நாம் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும், பொருள் உள்ளதாக, அதுவும், பிறருக்கு உதவும் சொல்லாக இருந்தால், மிகவும் நல்லது. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், நாம் வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப்பற்றி சிந்திக்கலாம். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பின்னர் வருந்துவதில் பயனில்லை.

இயேசுவின் ஒவ்வொரு சொல்லுக்கும் வலிமை இருந்தது. நாம் பேசும் சொற்களுக்கு ஓரளவாகிலும் வலிமை உள்ளதா? அல்லது, நாம் பேசுவதில் பெரும்பாலானவை போலியான, வெறுமையான வார்த்தை விளையாட்டுக்கள் தாமா?
சொல் ஒன்று பேசும், என் ஊழியர் குணமடைவார்.
சொல் ஒன்று பேசும், நான் குணமடைவேன்.

இயேசுவின் குணமளிக்கும் வார்த்தைகளைப் போல, நமது சொற்களும் நலமளிக்கும் சொற்களாக, மற்றவரைக் கட்டியெழுப்பும் சொற்களாக விளங்க இறைவனை வேண்டுவோம்.

No comments:

Post a Comment