03 December, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை: 2


Flooding at St Mark's Square, Venice. - Image © Shutterstock

பூமியில் புதுமை – மூழ்கிவரும் வெனிஸ் நகரம்

'மிதக்கும் நகரம்' என்று உலகெங்கும் அறியப்படும் வெனிஸ் நகரம், தற்போது, 'மூழ்கிவரும் நகரம்' என்று பெயர் பெற்றுள்ளது. இத்தாலிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை, பெரிதும் கவர்ந்திழுக்கும் வெனிஸ் நகரம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகள் காணாத அளவு மோசமான வெள்ளம் அந்நகரைச் சூழ்ந்ததால், இத்தாலிய அரசு, அவசர நிலையை அப்பகுதியில் அறிவித்தது. அந்நகரில் உள்ள புனித மாற்கு பெருங்கோவிலில் நீர் புகுந்தது. ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வரலாறு கொண்ட இக்கோவிலில், ஐந்தாவது முறையாக வெள்ளம் புகுந்துள்ளது.
அதிகரித்துக்கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதல், கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது; இத்துடன், அளவற்ற வகையில், நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுவதாலும், புகழ்பெற்ற வெனிஸ் நகர் மூழ்கிவருகிறது என, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடல் அலைகளின் போக்கைப் பதிவுசெய்யத் தொடங்கியுள்ள, கடந்த 147 ஆண்டுகளில், இதுபோன்று நிகழ்வுகள், 22 முறை பதிவாகியுள்ளன. அவற்றில், 1872லிருந்து 1950 வரையிலான 78 ஆண்டுகளில், ஒருமுறை மட்டுமே ஏற்பட்டுள்ள அதீதப் புயல் அலை, 1951 முதல் 2000 வரை, ஒன்பது முறையும்; 2001லிருந்து 2017 வரை ஏழு முறையும்; கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து முறையும் பதிவாகியுள்ளது. இறுதி மூன்று நிகழ்வுகள், இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் நிகழ்ந்திருக்கின்றன.
உலக வானிலை ஆய்வு அமைப்பு தரும் தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில் இதுபோன்ற புயல்கள் இத்தாலியின் கடற்பகுதியை ஒட்டி உருவாவது இயல்புதான் என்பது தெளிவாகிறது. புயலின்போது, அட்ரியாடிக் கடலில் இருந்து வெனிஸ் நகருக்குள் கடல்நீரை காற்று தள்ளியதுதான், வெள்ளம் ஏற்பட்டதுக்கு முதன்மைக் காரணம். இதுபோன்ற நிகழ்வுக்கு, உயர்நிலை நீர் என்று பொருள்படும் ஆக்வா ஆல்த்தா (acqua alta) என்று பெயர்.
மனிதச் செயல்பாடுகளாலும், அதோடு இணைந்த மற்ற வளர்ச்சித் திட்டங்களாலும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமே, வெனிஸ் நகரை மூழ்கடித்துவரும் வெள்ளத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஒரு பக்கம், பருவநிலை மாற்றம், தீவிர புயல்களை அடிக்கடி உருவாக்கி, கடல்மட்டத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம், கட்டடப் பணிகள் போன்ற காரணங்களுக்காக, நிலத்தடி நீர் அளவுக்கு மீறி உறிஞ்சப்படுவது, கடல் அரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை உருவாக்குகின்றன என்றும், எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நன்றி: இந்து தமிழ் திசை, ஊடகச் செய்திகள்

“Lord, I am not worthy to have you come under my roof” – Matt. 8:8

ஒத்தமை நற்செய்தி நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை: 2

திருவருகைக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இத்திருவருகைக் காலத்தின் திங்களன்று, திருப்பலியில், மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நூற்றுவர் தலைவரின் பையன் நலமடையும் புதுமைக்கு நாம் செவிமடுத்தோம். மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ள இப்புதுமையில் (மத்தேயு 8:5-13; லூக்கா 7:1-10) சென்ற விவிலியத் தேடலில் ஆரம்பமான நம் பயணம், இன்று தொடர்கிறது.
இந்த நூற்றுவர் தலைவரைப் பற்றி லூக்கா நற்செய்தி சொல்லும் 6 விவரங்களை சென்ற விவிலியத்தேடலில் குறிப்பிட்டோம். அவற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்: 1. அவர் உரோமையப் படையில், நூற்றுவர் தலைவர். 2. நோயுற்று கிடக்கும் பணியாளர் மீது மதிப்பு வைத்திருந்தவர். 3. உரோமையராய் இருந்தாலும், யூத மக்கள் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தவர். 4. அவர்களுக்குத் தொழுகைக்கூடம் கட்டித்தந்தவர். 5. தன் நிலையை நன்கு உணர்ந்திருந்ததால், இயேசுவை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கியவர். 6. இயேசுவின் மீது அவர் கொண்டிருந்த உன்னத நம்பிக்கையை இயேசு புகழ்ந்தார்... என்பவை, அந்த ஆறு விவரங்கள்.

இந்த ஆறு விவரங்களில், அவர் தன் பணியாளர் மீது மதிப்பு கொண்டிருந்தார் என்ற இரண்டாவது விவரத்தில் நம் சிந்தனைகளைத் தொடர்கிறோம். உயர் பதவியில் இருப்பவர்கள், தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர் மீது, இரக்கமோ, அன்போ கொண்டிருப்பதைக் காண்பது எளிது. ஆனால், பணியாளர் மீது மதிப்பு கொண்டிருக்கும் அதிகாரிகளையோ, தலைவர்களையோ காண்பது அரிது... தன்னைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்; தங்களது நிறைகளையும், குறைகளையும் அறிந்து ஏற்றுக்கொண்டவர்கள்; தங்கள்மீது, உண்மையான, நிறைவான, மதிப்பு கொண்டவர்களே; மற்றவரை, குறிப்பாக, தன்னைவிடத் தாழ்நிலையில் இருப்பவரை,  உண்மையில் மதிப்பார்கள் என்று சென்ற தேடலில் சிந்தித்தோம்.
காணுதற்கு அரிதான இந்தப் பண்பைக் கொண்டிருந்த அந்த நூற்றுவர் தலைவருக்கு கோவில் கட்டி கும்பிடலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அவர் கோவில் கட்டினார். தன்னை மக்கள் கும்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. அவர், யூதர்களுக்குத் தொழுகைக்கூடம் கட்டித்தந்தார். லூக்கா நற்செய்தியில், நூற்றுவர் தலைவரைப்பற்றி காணக்கிடக்கும் நான்காவது குறிப்பு இது.

ஏனைய உரோமையர்களைப் போல், யூதர்களை, தனக்குத் தாழ்வாக, பகையாக, போட்டியாக நினைக்காமல், அவர்களை மதித்தவர், இந்த நூற்றுவர் தலைவர். அதேவண்ணம், யூதர்களின் கடவுளையும், உரோமையத் தெய்வங்களுக்குப் போட்டியாக நினைக்காமல், அக்கடவுளை மதித்தார். எனவே, யூதர்களின் வழிபாடுகளுக்கு உதவியாக, அவர்களுக்குக் கோவில் கட்டித்தந்தார்.

ஒரு சிலர் கோவில் கட்டுவர், அல்லது, ஏற்கனவே கட்டப்பட்ட கோவிலைப் புதுப்பிப்பர். இதை அவர்கள் செய்வதற்கு ஒரே காரணம்... அதன் வழியாக, தங்கள் பெருமைக்கு ஒரு கோவிலைக் கட்டிக்கொள்வதுதான். மக்கள் மனதிலும், நினைவிலும் இடம்பிடிக்க, மன்னர்களும், அரசியல் தலைவர்களும், வரலாற்றில் மேற்கொண்ட, இன்றும் மேற்கொண்டுவரும் பல பரிதாபமான முயற்சிகள் நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. இதயங்களில் இடம்பிடிக்கத் தவறும் பல தலைவர்கள், தங்கள் நினைவாக, சிலைகள் எழுப்புவதையும், தங்கள் பெயர் தாங்கிய கட்டடங்கள் எழுப்புவதையும், காணும்போது, அவர்கள் முயற்சிகளைக் கண்டு பரிதாபம் எழுகிறது.
நூற்றுவர் தலைவர், யூதர்களுக்குக் கட்டிக்கொடுத்த தொழுகைக்கூடத்தில் அவரது பெயரைப் பொறித்திருப்பாரா? சந்தேகம்தான். அவரது மற்ற குணநலன்களைப் பார்க்கும்போது, அவ்வாறு செய்திருக்கமாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

தற்புகழ்ச்சியை விரும்பாத நூற்றுவர் தலைவர், இயேசுவை, தன் வீட்டுக்கு வரவழைக்கப் பயன்படுத்திய முறையும் சிந்திக்கத் தகுந்தது. தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனக்குக் கீழ் பணியாற்றும் படைவீர்ர்கள் சிலரை, ஒரு தேருடன் அனுப்பி, இயேசுவை தன் வீட்டுக்கு கொண்டுவர முயற்சித்திருக்கலாம். அவர் அப்படி செய்திருந்தால், இயேசு, அத்தேரில் ஏறிச் சென்றிருப்பாரா? சக்தி, அதிகாரம் இவற்றிற்கு கொஞ்சமும் அடிபணியாத இயேசு, அதிகாரத் தோரணையில் அழைக்கப்பட்டிருந்தால் போயிருக்கமாட்டார்.

இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கவிதை வடிவில் எழுதிய "This is my prayer to Thee" என்ற ஒரு வேண்டுதலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. "உமக்காக என் வேண்டுதல் இதுவே" என்று ஆரம்பமாகும் இக்கவிதையில், கவிஞர் எழுப்பும் வேண்டுதல்களில் ஒன்று, இவ்வாறு ஒலிக்கிறது: "Give me the strength never to disown the poor or bend my knees before insolent might" அதாவது, "வறியோரை ஒருபோதும் மறுதலிக்காமலும், தலைகனம் மிகுந்தோரின் அதிகாரத்திற்கு முன் முழந்தாள் படியிட்டு வணங்காமலும் இருக்கும் சக்தியைத் தாரும்."
இயேசுவைப்பற்றி ஓரளவு கேள்விபட்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர், ஆடம்பரமாக விளம்பரப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு அடிபணிய மாட்டார் என்பதை உள்ளூர உணர்ந்திருப்பார். எனவேதான், தனது யூத நண்பர்கள் வழியே, தன் அழைப்பை அனுப்பினார்.

நூற்றுவர் தலைவரின் சார்பில் இயேசுவைத் தேடிச்சென்ற மூப்பர்கள், இயேசுவிடம் வந்து, "நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்" என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள் (லூக்கா 7:4-5) என்ற விவரத்தை நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பம் யார் வழியாகச் சென்றாலும் பரவாயில்லை. தன் பணியாளர் நலம் பெறவேண்டும், அதுதான் முக்கியம் என்பதை நன்கு உணர்ந்தவர், நூற்றுவர் தலைவர்.

இயேசு அவரது வீட்டுக்குப் போகும் வழியில், நூற்றுவர் தலைவர், சில நண்பர்கள் வழியே அனுப்பிய செய்தி, இன்னும் சில அர்த்தமுள்ள பாடங்களைச் சொல்லித் தருகின்றது. அவர் சொல்லி அனுப்பிய வார்த்தைகளை மீண்டும் அசை போடலாம்: ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். (லூக்கா 7: 6-7,  மத்தேயு 8:8)

நற்செய்தியின் பல பகுதிகள், நம் திருப்பலியில் வாசகங்களாக இடம்பெறுகின்றன. ஆனால், நூற்றுவர் தலைவரின் கூற்று மட்டும், ஒவ்வொரு நாளும், திருப்பலியில் சொல்லப்படும் ஒரு செபமாக மாறியுள்ளது. நூற்றுவர் தலைவரின் சொற்கள், பணிவைப்பற்றி சொல்லித்தரும் பாடங்களைப் பயில்வது பயனளிக்கும்.
ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், தங்கள் இல்லங்களுக்கு வரும்படி பலர் என்னை அழைத்துள்ளனர். அவர்களில் ஒருசிலர், "எங்க வீட்டுக்கெல்லாம் நீங்க வருவீங்களா?" என்று என்னிடம் கூறியுள்ளனர். அக்கூற்று, அவர்களது உண்மையான ஏக்கத்தை வெளிப்படுத்தியதா, அல்லது, மறைமுகமாக என்னைக் குத்திக்காட்ட சொல்லப்பட்டதா, என்பதை அறியாமல் நான் தடுமாறியுள்ளேன்.

நூற்றுவர் தலைவர் அனுப்பிய செய்தியில், மறைமுகமான, போலியான தாழ்ச்சி கிடையாது. அவர் தலைவராக இருந்ததால், அதிகாரம் செய்தல், அடிபணிதல் என்ற இரு நிலைகளையும் நன்கு அறிந்திருந்தார். பிறரது நேரத்தின் அருமையும் அவருக்குத் தெரிந்திருக்கும். தான் கூப்பிட்டதும், மற்றவர்கள் ஓடிவந்து பணிவிடை செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதையும் அவர் தெளிவாகவே சொல்லிக்காட்டுகிறார்: "நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" (மத்தேயு 8:9, லூக்கா 7: 8) என்று இரு நற்செய்திகளிலும் நாம் வாசிக்கிறோம்.
நூற்றுவர் தலைவர் அனுப்பிய செய்தியை, பின்வரும் சொற்களில் நாம் பொருள்கொள்ளலாம்: "ஐயா, நீர் என் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க எனக்குத் தகுதியில்லை என்பதை அறிவேன். மேலும், நீர் என் வீட்டுக்கு வந்துதான் என் ஊழியரைக் குணமாக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. வார்த்தைகளின் சக்தியை உணர்ந்தவன் நான். எனவே, நீர் இருந்த இடத்திலேயே ஒரு வார்த்தை சொன்னால் போதும். அந்த வார்த்தையின் சக்தி, பல மைல்கள் தாண்டி வந்து, என் ஊழியரை குணமாக்கும் என்பதை நான் நம்புகிறேன்."

நூற்றுவர் தலைவர் கூறிய இச்சொற்கள், அளவுக்கு மீறிய தாழ்ச்சியாகவோ, அல்லது, போலியான தாழ்ச்சியாகவோ தெரியக்கூடும், ஆனால், இச்சொற்களை ஆய்வு செய்யும் வேளையில், தன் நிலையை நன்கு உணர்ந்த ஒருவர் கூறிய சொற்களாக அவற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். நூற்றுவர் தலைவர் எழுப்பிய இந்த விண்ணப்பத்தின் அழகையும், அதற்கு இயேசு, வியப்பும் மகிழ்வும் கலந்து தந்த பதிலையும், நாம் அடுத்த தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment