Whistler’s
Mother, by James McNeill Whistler (1871)
விதையாகும் கதைகள் : 'கடவுளுக்கு' கடிதம்
கிறிஸ்மஸ் விழாவுக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. அந்த சிற்றூரின்
அஞ்சல் நிலையத்தில் கடிதங்கள் குவிந்திருந்தன. அவற்றைப் பிரித்துக்கொண்டிருந்த
பணியாளர், ஒரு கடித உறையின் மேல், 'கடவுளுக்கு' என்று, ஒரு வார்த்தையில் முகவரி எழுதப்பட்டிருந்ததைக் கண்டார். அம்மடலைப்
பிரித்தார்.
"அன்புக் கடவுளே, நான் 83 வயதான ஒரு கைம்பெண். எனக்குக் கிடைக்கும் மிகச் சிறிய
ஓய்வூதியத்தில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நேற்று, என் கைப்பையை யாரோ ஒருவன் திருடிவிட்டான்.
அதில், என் ஓய்வூதியம்
100 டாலர்கள் இருந்தன.
அந்தப் பணத்தை நம்பி,
இரு நண்பர்களுக்கு கிறிஸ்மஸ் விருந்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டேன். இப்போது, அவர்களுக்கு விருந்து கொடுப்பதற்கு என்னிடம்
ஒன்றும் இல்லை. உறவினரும், நண்பர்களும்
இல்லாததால் யாரிடமும் உதவி கேட்க இயலாது. எனவேதான் இம்மடலை அனுப்புகிறேன். எனக்கு தயவுசெய்து
உதவி செய்வாயா?" என்று அம்மடலில்
எழுதப்பட்டிருந்தது.
அம்மடல் அஞ்சல் பணியாளரின் உள்ளத்தைத் தொட்டது. அதை, அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் காட்டினார். அவர்கள் அனைவரும்,
தங்களிடமிருந்த பணத்தைத் திரட்டி, 96 டாலர்களை
அந்தக் கைம்பெண்ணின் முகவரிக்கு அனுப்பிவைத்தனர்.
கிறிஸ்மஸ் முடிந்தபின், அந்த கைம்பெண்ணிடமிருந்து மற்றொரு மடல் 'கடவுளுக்கு' என்ற முகவரியுடன் வந்து சேர்ந்தது. அஞ்சல்
நிலையப் பணியாளர்கள், அதை ஆவலுடன் பிரித்துப் படித்தனர்.
"அன்புக் கடவுளே, நீ செய்த உதவிக்குக் கோடான கோடி நன்றி. என் நண்பர்களும் நானும்,
கிறிஸ்மஸ் விருந்துண்டு மகிழ்ந்தோம். உனக்கு நான் எழுதிய மடலையும், நீ அனுப்பிவைத்த பணத்தையும் பற்றி அவர்களிடம்
சொன்னேன்.
கடவுளே, ஒரு விடயத்தை
உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு வந்த அஞ்சல் உறையில் 4 டாலர்களைக் காணோம். இந்த
ஊர் அஞ்சல் பணியாளர்தான் அதை எடுத்திருக்கவேண்டும்" என்று அம்மடலில் எழுதியிருந்தார்,
வயதான அக்கைம்பெண்.
உதவி செய்யும்போதும், முழுமையான பாராட்டு
வந்து சேரும் என்ற உத்தரவாதம் கிடையாது.
Eating with unwashed hands
ஒத்தமை நற்செய்தி – சிந்தும் சிறு துண்டுகள்
போதும் 1
சனவரி
15, இப்புதனன்று, உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய
நாம், பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் கருணையால், இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து வழங்கும் கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத்
திருநாள் இது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற பிரிவுகள்
ஏதுமின்றி,
அனைவரும் தமிழர்கள்
என்ற உணர்வில் கொண்டாடப்படும் திருநாள் இது. ஆயினும், இந்தியாவில், நடுவண் அரசு, மக்களிடையே, மதவாதம் என்ற நஞ்சை, மீண்டும், மீண்டும் திணிக்கும் முயற்சிகளைத்
தொடர்வது,
வேதனை தருகிறது. பிரித்தாள்வதையே
தங்கள் இலக்காகக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் தந்திரங்களைப் புறந்தள்ளி, இத்திருநாளை, உலகத் தமிழர்கள்,
இணைந்து சிறப்பிக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் விவிலியத் தேடலை இன்று மேற்கொள்வோம்.
பிரிவுச்சுவர்களைத்
தகர்த்து, இணைப்பு பாலங்களை உருவாக்குபவர்கள் தமிழர்கள்
என்பதை, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற கூற்றும், "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்ற கூற்றும் நமக்கு
நினைவுறுத்துகின்றன.
தமிழகத்தில் பயணம் செய்யும் வேளையில்,
ஒவ்வோர் ஊரின் எல்லையிலும்
நம் மனதை மகிழ்விக்கும் ஒரு வாசகம் வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, மதுரையை நெருங்கும்போது,
"மதுரை மாநகரம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர்
ஊரின் முகப்பிலும், அந்தந்த ஊரின் பெயரால் நமக்கு வரவேற்பு தரப்படும். அதேபோல், அந்த ஊரைவிட்டு வெளியேறும்போது, மீண்டும் வரவேண்டும் என்று,
அன்பு கட்டளையிடுவதுபோல், "நன்றி... மீண்டும் வருக" என்று,
அந்த ஊரின் எல்லையில் அறிக்கையொன்று எழுதப்பட்டிருக்கும். அயல் நாடுகளுக்குப் பயணங்கள்
மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு விமான நிலையத்திலும் வரவேற்பு வார்த்தைகள்
எழுதப்பட்டிருக்கும். விமானம் தரையிறங்கியதும்,
வரவேற்கும் வார்த்தைகள்
ஒலிபெருக்கியில் ஒலிக்கும்.
உலகில்
எந்த ஒரு நாடோ, நகரமோ "நீங்கள் இங்கே வரக்கூடாது, உங்களுக்கு இங்கே அனுமதியில்லை" என்று வெளிப்படையாகக் கூறுவதில்லை.
ஆனால், நடைமுறையில் நடப்பதென்ன? நாடுவிட்டு நாடு செல்பவர்களை, 'வாருங்கள்' என்று வார்த்தையால் சொல்லிவிட்டு, 'வராதீர்கள்' என்று, செயல்களால் காட்டும் போக்கு
பெருகிவருவதைக் கண்டு, கலங்கி நிற்கிறோம்.
அண்மையச்
சில ஆண்டுகளாக, உலகெங்கும், புலம்பெயர்தல், மற்றும் குடிபெயர்தல் என்ற பிரச்சனை, பெருமளவு அதிகரித்துள்ளதை
நாம் அறிவோம். இப்பிரச்சனைக்கு, ஒரு சில அரசுகள் தந்துள்ள தீர்வு, மக்களைத் தடுத்து வைப்பதற்கென்று எழுப்பப்படும் சுவர்கள்! சுவர்களாலும், சட்டங்களாலும், அரசுகள், மக்களை, பிரித்துவரும் இன்றையச் சூழலில், வேற்று இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகளை இயேசு குணமாக்கும் புதுமையில், இன்று, நம் தேடல் பயணம் ஆரம்பமாகிறது.
மத்தேயு, (மத்தேயு 15:21-28) மாற்கு (மாற்கு 7:24-30) ஆகிய இரு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள
இப்புதுமையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்,
இப்புதுமை நிகழ்ந்த
சூழல் மீது, நம் கவனத்தைத் திருப்புவோம்.
இயேசு, கடல் மீது நடந்து சென்றது,
பேதுருவையும் கடல்
மீது நடக்க அழைத்தது ஆகிய நிகழ்வுகளுக்குப்பின், நற்செய்தியாளர்கள்
மத்தேயுவும், மாற்கும், இப்புதுமையைப் பதிவுசெய்துள்ளனர். இப்புதுமைக்கு முன்னதாக,
இரு நற்செய்தியாளர்களும், ஒரு விவாதத்தைப் பதிவு செய்துள்ளனர்.
யூத மரபுகளைப்பற்றி, குறிப்பாக, சுத்தமானது, தீட்டானது என்ற கருத்துக்களைப்
பற்றி, இயேசு, பரிசேயர்கள்
மற்றும் மறைநூல் அறிஞர்களுடன் மேற்கொண்ட ஒரு விவாதம் பதிவாகியுள்ளது. இப்பகுதியின்
ஆரம்ப வரிகளிலேயே நற்செய்தியாளர் மாற்கு, வெப்பமான ஒரு சூழலை உணர்த்துகிறார்.
மாற்கு
7:1-2
ஒருநாள்
பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர்.
அவருடைய சீடருள் சிலர் தீட்டான,
அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.
இயேசுவுடன்
விவாதம் மேற்கொள்ள வந்திருந்தோர், எருசலேமிலிருந்து வந்திருந்தனர்
என்பதை, இரு நற்செய்தியாளர்களும் கவனமாகக் குறிப்பிட்டுள்ளனர்
(மத். 15:1; மாற். 7:1). தன் படிப்பினைகளாலும், செயல்பாடுகளாலும், யூத மரபுகளுக்கு ஆபத்து விளைவிக்கும்
வண்ணம் நடந்துகொண்ட இயேசுவைக் கண்காணிக்கவும்,
மக்கள்
முன்னிலையில் அவரைக் கண்டனம் செய்யவும், யூத மரபுகளின் தலைமைப்பீடமான எருசலேமிலிருந்து
பிரதிநிதிகள் வந்திருந்தனர் என்பதை, இரு நற்செய்தியாளர்களும் உணர்த்துகின்றனர். அவர்கள்
வந்த நேரத்தில், சீடர்களில் சிலர், கழுவாதக் கரங்களால் உணவு உண்டது, வந்திருந்தவர்களுக்கு, தங்கள் விவாதத்தைத் துவக்கச் சாதமாக அமைந்தது.
சீடர்கள், கைககளைக் கழுவாமல் உண்பதைக் குறித்து, பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் குறை
கூறுகின்றனர். கரங்களைக் கழுவாமல் உண்பது, ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்று
குறைகூறும் மதத்தலைவர்களுக்கும், கூடியிருந்த மக்களுக்கும், இயேசு கூறும் ஓர் அழகிய கூற்று, இரு நற்செய்திகளிலும்
இடம்பெற்றுள்ளது.
மாற்கு
7:14-16
இயேசு
மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை.
மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர்
கேட்கட்டும்" என்று கூறினார். (காண்க. மத்தேயு 15:10-11)
இந்தக்
கூற்றை சீடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே, அவர்கள் தனியே இருந்தபோது,
இதைக் குறித்து பேதுரு
இயேசுவிடம் கேள்வி எழுப்பியபோது, இயேசு அவரிடம், "உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில்
வெளியேற்றப்படும் எனத் தெரியாதா? வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து
வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று, பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய
எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.
கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது" என்றார். (மத்தேயு 15:16-20) (காண்க. மாற்கு 7:17-23)
நம்
தினசரி வாழ்வில், வெளியிலிருந்து வந்ததும், குறிப்பாக, உண்பதற்கு முன், கைகளைக் கழுவுதல், உடல் நலத்திற்கு
நல்லது என்பதை, அனைவரும் அறிவோம். ஆனால், யூதர்களோ, இன்னும் ஒரு படி மேலே
சென்று, தங்கள் இனத்தின் மேல் நிலையையும், புறவினத்தாரின் கீழ் நிலையையும், தாங்கள் மேற்கொள்ளும் கழுவும்
சடங்குகள் வழியே பறைசாற்றினர்.
யூதர்கள், குறிப்பாக, யூத மதத்தலைவர்கள், தாங்கள் சுத்தமானவர்கள் என்று கருதினர். எனவே, பொது இடங்களுக்குச் சென்று,
இல்லம் திரும்பியதும், வெளியில், வேற்று இனத்தவருடன் ஏதோ ஒருவகையில்
தொடர்பு வந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தில்,
அவர்கள் தங்களையே
சுத்தப்படுத்தும் சடங்குகளை மேற்கொண்டனர்.
அதேவண்ணம், சந்தையிலிருந்து வாங்கிவந்த உணவுப் பொருள்களையும் அவர்கள் கவனமாகக்
கழுவினர். அந்தப் பொருள்களை, தீட்டுப்பட்ட புறவினத்தாரும் தொட்டிருக்கக்கூடும்
என்ற காரணமே, அந்தக் கழுவுதலை கட்டாயமாக்கியது. எனவே, யூதரின் கழுவும் சடங்குகள்,
அவர்களது குலப்பெருமையை
நிலைநாட்டும் ஒரு சடங்காக இருந்தது. இத்தகையச் சடங்குகள், இன்றளவும், இந்தியாவில்,
மேல்சாதியென்று தங்களையே அழைத்துக்கொள்ளும் ஒரு சிலரது இல்லங்களில் நடைபெறுவதை அறிவோம்.
யூதர்கள்
கொண்டிருந்த இந்த அகந்தையை, இயேசு தகர்க்க முயன்றார். வெளி
இடங்களுக்குச் செல்வதாலோ, அடுத்தவருடன் தொடர்பு கொள்வதாலோ, கரங்களைக் கழுவாமல் உண்பதாலோ, ஒருவர் அழுக்கடைவதில்லை; மாறாக, வேற்றினத்தார், சுத்தமற்றவர்கள், தீட்டுப்பட்டவர்கள் என்று தவறாகத்
தீர்ப்பிடுவதே, யூதர்களைத் தீட்டுப்படுத்துகிறது என்று
இயேசு வலியுறுத்தினார்.
பரிசேயர்களும், மறைநூல் அறிஞரும் வெளிப்புற சுத்தத்தை வெகுவாக வலியுறுத்தி, அதே வேளையில், உள்ளத்தில் அழுக்கடைந்திருப்பதை,
இயேசு, மற்றொரு தருணத்தில், கடுமையான சொற்களில் கூறியுள்ளார்.
மத்தேயு
23:25
"வெளிவேடக்கார
மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும்
வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும்
தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.
சுத்தம்
- தீட்டு என்ற மையக்கருத்துடன் நிகழ்ந்த இந்த விவாதத்தைத் தொடர்ந்து, இயேசு, புறவினத்தார் வாழ்ந்த பகுதிகளுக்குச்
சென்றார் என்று நற்செய்தியாளர்கள் மாற்கும் மத்தேயுவும் சுட்டிக்காட்டியுள்ளனர். நோயுற்றோரும், புறவினத்தாரும் தீட்டுடையவர்கள் என்று கருதிய மதத்தலைவர்களுடன்
மேற்கொண்ட விவாதத்தைத் தொடர்ந்து, மதத்தலைவர்கள் தீட்டு என்று கருதியிருந்த புறவினத்தார்
வாழும் பகுதிக்கு இயேசு சென்றார்.
இயேசு
அங்கிருந்து புறப்பட்டுத் தீர்,
சீதோன்
ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். (மத். 15:21) என்று நற்செய்தியாளர் மத்தேயு சுருக்கமாகக்
கூறியிருக்க, நற்செய்தியாளர் மாற்கு, இதை இன்னும் சிறிது விளக்கத்துடன் கூறியுள்ளார்.
இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள்
சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க
வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. (மாற்கு 7:24)
இத்தகையைச்
சூழலில், புறவினத்தைச் சேர்ந்த ஒரு பெண், இயேசுவிடம் ஒரு வேண்டுகோளுடன் வந்து சேர்ந்தார். அப்பெண்ணுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் நாம் அடுத்த தேடலை மேற்கொள்வோம்.
No comments:
Post a Comment