07 January, 2020

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கடல்மீது நடக்க விழைந்த பேதுரு 2


New Year Goal, Plan, Action...

விதையாகும் கதைகள் : புத்தாண்டுத் தீர்மானங்கள்

மகன் தன் தந்தையிடம் புதிர் ஒன்றைத் தொடுத்தான். "ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது, எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டான். "இது என்ன பெரிய புதிர்... இரண்டு தவளைகள் இருக்கும்." என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.
"அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில், ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது, எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.
அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், ", புரிகிறது. கரையில் ஒன்றும் இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்ற இரு தவளைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்" என்று சொன்னார். தனது அறிவுத் திறனை தானே மெச்சிக் கொண்டதைப்போல், அவர் புன்னகை பூத்தார்.
மகன் தலையில் அடித்துக்கொண்டு, சலிப்புடன் விளக்கம் சொன்னான்: "அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவற்றில் ஒன்று, குளத்திற்குள் குதிக்க, தீர்மானம் செய்ததேயொழிய, இன்னும் குதிக்கவில்லை" என்று மகன் விளக்கம் கொடுத்தான்.
ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் கடைபிடிக்க விரும்பும் பல தீர்மானங்களை மனதில் நினைக்கிறோம். புத்தாண்டுத் தீர்மானங்கள், சிந்தனையில் உருவானால் மட்டும் போதாது, அவை, செயலிலும் உருபெறவேண்டும்.

Jesus reached out his hand and caught Peter – Mt. 14:31

ஒத்தமை நற்செய்தி கடல்மீது நடக்க விழைந்த பேதுரு 2

கடலில் அடியெடுத்து வைத்த பேதுருவின் முயற்சியை, சென்ற ஆண்டு இறுதியில் நாம் மேற்கொண்ட விவிலியத் தேடலில் சிந்தித்தோம்; இன்று தொடர்கிறோம். புத்தாண்டின் துவக்கத்தில், இந்நிகழ்வில், நம் தேடலை மேற்கொள்வது, பொருத்தமாகத் தெரிகிறது. புதிய ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் வேளையில், கடலில் காலடி பதித்த பேதுருவின் மனநிலை நமக்கும் உண்டாக வாய்ப்புண்டு.
உறுதியான நிலப்பரப்பில், நல்ல வெளிச்சத்தில் நடக்கும்போது, கவலை அதிகமின்றி, அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைக்க நம்மால் இயலும். அதே நிலப்பரப்பில், வெளிச்சமில்லாத இரவில் நடக்கும்போது, சிறிது நிதானமாக, கவனமாக நடக்க வேண்டியிருக்கும். பகலோ, இரவோ, நீர்ப்பரப்பில் நடப்பது என்பது, பொதுவாக, மனிதர்களால் இயலாத ஒரு செயல். அத்தகைய ஒரு செயலைச் செய்யத் துணிகிறார், பேதுரு. அதுவும், வெளிச்சமில்லாத இரவில், எதிர்காற்று வீசும் வேளையில், கடல் மீது நடக்க பேதுரு முயல்கிறார்.
இயேசு, கடல் மீது நடந்த நிகழ்வை, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் பதிவு செய்திருக்க, பேதுரு, கடல் மீது நடக்க முயன்ற நிகழ்வை, நற்செய்தியாளர் மத்தேயு மட்டுமே விவரித்துள்ளார். இந்நிகழ்வை, அவரது நற்செய்தியிலிருந்து கேட்போம்.
மத்தேயு நற்செய்தி 14: 26-32
இயேசு கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.

பேதுரு நீரின்மேல் நடந்ததையும், பின்னர் தடுமாறி, தண்ணீரில் மூழ்கியதையும் மையப்படுத்தி, நம் விசுவாச வாழ்வில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி, இறையியல் பேராசிரியரான அருள்பணி Ron Rolheiser அவர்கள், அழகாக விளக்கமளித்துள்ளார். நம் விசுவாச வாழ்வில், சிகரங்களைத் தோட்ட நேரங்கள் உண்டு; பாதாளத்தில் புதைக்கப்பட்ட நேரங்களும் உண்டு. இந்த மாற்றங்களைக் குறித்து, அருள்பணி Rolheiser அவர்கள் கூறும்போது, நம் விசுவாசம், சில நாள்கள், நம்மை, தண்ணீரின் மேல் நடக்க வைக்கிறது; வேறு சில நாள்கள், தண்ணீரில் போட்ட கல்லைப்போல, நம்மை மூழ்கடித்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இந்த மாற்றத்திற்கு அவர் கூறும் ஒரு முக்கிய காரணம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

எப்போதெல்லாம் நம் விசுவாசம் இறைவனை மையப்படுத்தியிருந்ததோ, அப்போதெல்லாம் நம்மால் தண்ணீரின் மேல் நடக்க முடிந்தது. ஒரு சில வேளைகளில், நாம் ஆற்றும் செயல்கள், நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவதால், நமது கவனம் இறைவனைவிட்டு விலகி, நமது சக்தி, நமது திறமை ஆகியவற்றில் பெருமைகொள்ள வைக்கின்றன. இன்னும் சில வேளைகளில், நம்மால் இது முடியுமா என்று கணக்கிட வைக்கின்றன. அவ்வேளைகளில், நாம் தண்ணீரில் மூழ்கத் துவங்குகிறோம். இதுதான் பேதுருவுக்கு நிகழ்ந்தது.

நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் என்று, பேதுரு, ஒரு குழந்தைபோல பேசுகிறார். இயேசுவும், ஓர் அன்புத் தந்தையைப்போல், அக்குழந்தையை, "வா" என்று அழைக்கிறார். இயேசுவின் அழைப்பைக் கேட்டதும், தான் அமர்ந்திருந்த படகு தந்த பாதுகாப்பை உதறிவிட்டு, நம்பிக்கையுடன் தண்ணீரில் தடம் பதித்தார் பேதுரு. ஆனால், ஒரு சில நொடிகளில், அவர் மூழ்கத் துவங்கினார்.

'பேதுரு தண்ணீரில் மூழ்கினார்' என்ற விவரம் நமக்கு வியப்பளிக்கிறது. பிறந்ததுமுதல், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுருவுக்கு, நீச்சலடிப்பது என்ற செயல், சுவாசிப்பது போன்று, அவரது இயல்பாக மாறியிருக்க வேண்டும். பேதுருவின் நீச்சல் திறமையை, நற்செய்தியாளர் யோவான் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதி, நம் நினைவுக்கு வருகிறது. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின், திபேரியக் கடல் அருகே நிகழ்ந்த அச்சந்திப்பில், வியத்தகு மீன்பிடிப்பு என்ற புதுமை நிகழ்கிறது. அப்புதுமையைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள வரிகள் இவை:
யோவான் 21:7-8
இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு, ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
நூறு மீட்டர் தூரத்தை வெகு எளிதில் நீந்திக் கடந்த பேதுரு, நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள இந்நிகழ்விலோ, நீரில் மூழ்கினார் என்று, நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிட்டிருப்பது வியப்பைத் தருகிறது.

திபேரியக் கடலில், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்' என்று அன்புச்சீடர் சொன்ன சொற்கள், பேதுருவை, கடலில் குதித்து, நீந்திச்செல்ல உந்தித்தள்ளின. நாம் சிந்திக்கும் இந்நிகழ்விலோ, கடல் மீது நடந்துவந்த இயேசு, 'வா' என்று விடுத்த அழைப்பு, கடலில் கால்பதித்து நடக்க, பேதுருவை உந்தித்தள்ளியது. ஆனால், ஒரு சில நொடிகளில், தான் துவங்கியச் செயலின் அற்புதம், பேதுருவைத் திக்குமுக்காட வைத்திருக்க வேண்டும். போதாததற்கு, சூழ்ந்திருந்த அலையும், புயலும் அவரது கவனத்தைத் திசை திருப்பியிருக்க வேண்டும்.
எப்போது பேதுருவின் பார்வையும், எண்ணங்களும், இயேசுவிடமிருந்து அகன்று, தான் ஆற்றும் செயல் மீதும், தன்னைச் சுற்றியிருந்த ஆபத்தின் மீதும் திரும்பினவோ, அப்போது, தனக்கு மிகவும் இயல்பாக இருந்த நீச்சல் திறமையையும் அவர் இழக்க நேர்ந்தது. எனவே, அவர் மூழ்கத் துவங்கினார்.

தண்ணீர் மீது நடப்பது, தண்ணீரில் மூழ்குவது என்ற இருவேறு நிலைகளை, மறைப்பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வழியே, அருள்பணி Rolheiser அவர்கள் விளக்குகிறார்:
ஆப்ரிக்காவில், பழங்குடியினரிடையே பணியாற்றிய மறைபணியாளர் ஒருவரைப்பற்றி, டொனால்ட் நிக்கோல் (Donald Nicholl) என்ற இறையியலாளர், 'Holiness' அதாவது, 'புனிதத்துவம்' என்ற தன் நூலில் கூறியுள்ளார். இரு இனத்தவரிடையே உருவான ஒரு கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர் அழைக்கப்பட்டார். அந்த சமரசக் கூட்டத்தில் என்ன சொல்வது, என்ன செய்வது என்பவை எதுவும் தெரியாமல், அந்த மறைபணியாளர் திகைத்தார். இருந்தாலும், இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, அவ்விரு இனத்தவரையும் ஒருங்கிணைத்தார்.
இந்த அனுபவத்தால் துணிவு பெற்றவராய், அடுத்துவந்த பிற மோதல்களையும் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர், தானாகவே முன்வந்தார். தன் அனுபவம், திறமை இவற்றைப் பயன்படுத்தி, சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அக்கூட்டங்களில், அவரது முயற்சிகள் தோல்வியைத் தழுவின. மறைபணியாளரின் வெற்றி, தோல்வியைப் பற்றி நிக்கோல் அவர்கள் தரும் விளக்கம் இதுதான்: "இனமோதல்கள் பற்றி சரியாக எதுவும் தெரியாதபோது, இறைவனை முற்றிலும் நம்பி, கூட்டங்களில் கலந்துகொண்ட மறைபணியாளர், சமரசங்களை உருவாக்கினார். அப்போதெல்லாம், இறைவனை நம்பி, அவர் நீரின்மேல் நடந்து சென்றார். பழங்குடியினரைப் பற்றி, அவர்களது மோதல்கள் பற்றி தனக்குத் தெரியும் என்ற எண்ணத்தில், தன் திறமைகளை, அறிவுத்திறனை நம்பி மறைபணியாளர் சமரசக் கூட்டங்களில் கலந்துகொண்டபோது, கல்லைப்போல் தண்ணீரில் மூழ்கினார்" என்று நிக்கோல் அவர்கள் எழுதியுள்ளார்.

புயலோடும், கடல் அலைகளோடும் போராடிக்கொண்டிருந்த சீடர்கள், தன்னை அழைக்கவில்லை என்றபோதும், அவர்களைத் தேடிச் சென்றார் இயேசு. 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று பேதுரு கத்தியபோது, உடனே கரம் நீட்டி அவரைக் காப்பாற்றினார். இதுதான் இயேசுவின் இலக்கணம், இதுதான் இறைவனின் இலக்கணம். தன்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், உதவிக்கு வருபவரே இறைவன்.
உலகப்புகழ் பெற்ற மனநல மருத்துவர், கார்ல் யுங் (Carl Jung) அவர்களின் அறைக்கு வெளியே, ஒரு கல்லில் பொறிக்கப்பட்டிருந்த சொற்கள் இவை: "Called or Not, God is Present" "தன்னை அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும், கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார்". கடவுள் நம்மோடு என்ற மறுக்கமுடியாத உண்மையை, ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் நாம் கொண்டாடுகிறோம். அதே எண்ணத்தை, நம்பிக்கையை ஆண்டின் ஒவ்வொரு நாளும் கொண்டாடுவது, நமக்கு சக்தியளிக்கும்.

இறுதியாக ஓர் எண்ணம். பேதுரு கடல் மீது நடந்ததும், அவரை இயேசு கரம்பற்றி காத்ததும், பேதுருவின் வழித்தோன்றல்களான திருத்தந்தையரை எண்ணிப்பார்க்க நம்மைத் தூண்டுகின்றன. திருஅவையை வழிநடத்திய திருத்தந்தையர் ஒவ்வொருவரும், அவரவர் வாழ்ந்த காலத்தில், வீசிய பல்வேறு புயல்கள் நடுவே, திருஅவை என்ற படகை வழிநடத்திச் சென்றுள்ளனர். நீர்ப்பரப்பில் நடப்பதுபோன்ற நிலையற்ற சூழல்களை இவ்வுலகம் உருவாக்கிய வேளையில், திருத்தந்தையரில் ஒரு சிலர், அந்த நீர்ப்பரப்பில், தாங்கள் நடந்து, மற்றவர்களையும் வழிநடத்திச் சென்றுள்ளனர்.
முதல் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் இருந்த திருத்தந்தை 15ம் பெனடிக்ட், இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில், தலைமைப் பொறுப்பில் இருந்த திருத்தந்தை 12ம் பயஸ், ஆகியோர், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, அலைகள் சூழ்ந்த கடலில், தாங்கள் நடந்து சென்றதோடு, திருஅவையை, அமைதியின் கரைநோக்கி அழைத்துச் சென்றனர்.

தற்போது தலைமைப்பொறுப்பில் பணியாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிக்கடி கூறுவதுபோல், துண்டு, துண்டாக மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்து வருகிறது. அண்மையில், அமெரிக்க ஐக்கிய நாடு, எவ்வித தெளிவானக் காரணமுமின்றி, ஈரான் நாட்டுப் படைத்தளபதியை, ஈராக்கில், கொலை செய்ததால், அமெரிக்க ஐக்கிய நாடு, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள இறுக்கமானச் சூழல், இவ்வுலகை, மேலும், நிலையற்ற, புயல் வீசும் கடலாக மாற்றியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு ஆரம்பித்து வைத்த இத்தகையப் புயலுடன் துவங்கியுள்ள 2020ம் ஆண்டில், அமைதி என்ற கரையை நோக்கி இவ்வுலகை, இறைவன் வழிநடத்திச் செல்ல வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நாமும் இணைந்து செபிப்போம்.


No comments:

Post a Comment