Differently
abled boy running with Prosthetic
விதையாகும் கதைகள் : வெற்றி அடைவதற்கு,
வெவ்வேறு வழிகள்
விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சிறுவன் கென்னத்தின்,
இரு கால்களும், போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்கு
நடத்தப்படும் பல போட்டிகளில், கென்னத் வெற்றிபெற்று வந்தான்.
ஒருமுறை, அவன் வாழ்ந்த
பகுதியில் ஒரு விளையாட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியே போட்டிகள்
நடத்தப்பட்டன. முதலில் நடந்த பந்தயத்தில், கென்னத் முதலிடம் பெற்றான்.
இரண்டாவது பந்தயம் துவங்கியது. அப்பந்தயத்திலும் கென்னத்
முதலிடத்தில் ஓடிக் கொண்டிருந்தான். பந்தயத்தின் இறுதி இலக்கை நெருங்கியதும், கென்னத் செய்தது, அங்கிருந்தோரை ஆச்சரியம் அடையச்செய்தது.
இறுதி இலக்கை நெருங்க, நெருங்க
கென்னத் மெதுவாக ஓடி, இலக்கைக் கடப்பதற்கு
சற்று முன்னதாக நின்றுவிட்டான். அவனைத் தொடர்ந்து ஓடிவந்த ஜானி என்ற சிறுவன், இலக்கைக் கடந்து, அப்பந்தயத்தில் வெற்றி பெற்றான்.
கென்னத் செய்ததைக் கண்ட அவனது தாய், "ஏன் அவ்வாறு
செய்தாய்?" என்று அவனிடம் கேட்டார். அதற்கு, கென்னத், "அம்மா, நான் ஏற்கனவே ஒரு கோப்பை வாங்கிவிட்டேன். பாவம் ஜானி. அவன்
இதுவரை கோப்பை எதுவும் வாங்கவில்லை. அதனால்தான்" என்று தன் அம்மாவிடம், சொல்லிவிட்டு, ஜானியின் வெற்றியில் பங்கேற்கச் சென்றான்.
வெற்றி அடைவதற்கு, வெவ்வேறு வழிகள் உண்டு.
“Today you
will be with me in Paradise .”
சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 4
மரணம் நெருங்கி வருவதை உணரும் மனிதர்கள், என்ன பேசுவார்கள்? நிச்சயம், அந்நேரத்தில், தேவையற்ற விடயங்களைப் பேசமாட்டார்கள். மரணப்படுக்கையில்
இருப்பவர்கள், பொதுவாக, தாங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட உண்மைகளை, தங்கள் வாழ்வில் நிறைவேறாத ஏக்கங்களை, அதுவரைச் சொல்லத் தயங்கிய உண்மைகளைச் சொல்ல
முயற்சி செய்வார்கள்.
மரணப்படுக்கையில் இருந்த மூவர் பெசிக்கொண்டவை, இன்றைய விவிலியத்தேடலின்
மையச்சிந்தனை. இது, சாதாரண மரணப்படுக்கை அல்ல. உடலிலும், உள்ளத்திலும்,
சுக்குநூறாய் உடைக்கப்பட்ட மூவரின் மரணப்படுக்கை. கல்வாரியில், சிலுவையில் அறையப்பட்டிருந்த
மூவருக்கிடையே நிகழ்ந்த உரையாடலை, இந்த விவிலியத்தேடலில் சிந்திக்க முயல்வோம்..
கல்வாரியைப்பற்றி, சிலுவைச் சாவைப்பற்றி
நாம், அடிக்கடி, கோவில்களில், புனிதமானச் சூழல்களில் கேட்டுவந்துள்ளதால், இக்காட்சியைப்
பற்றிய நம் எண்ணங்கள், சுத்தம் செய்யப்பட்ட, புனிதமான எண்ணங்களாக இருக்கக்கூடும். இயேசுவும்,
மற்றவர்களும், சொன்ன வார்த்தைகள், அமைதியாக, பக்தியாக, சொல்லப்பட்ட செபங்களைப்போல்
எண்ணிப்பார்க்கத் தோன்றும். ஆனால், அன்று கல்வாரியில் நடந்த சிலுவை மரணம்,
எவ்வகையிலும், அழகாய், அமைதியாய், புனிதமாய் நடக்கவில்லை.
உடலை வதைத்தால் மட்டும் போதாதென, சிலுவையில் அறையப்பட்டவர்களின்
உள்ளத்தையும் உடைக்கும் வண்ணம், அக்குற்றவாளிகள், மக்கள் முன்னிலையில், நிர்வாணமாக,
சிலுவையில் அறையப்பட்டனர். உடல் வேதனைகளையாகிலும், எப்பாடு பட்டாவது பொறுத்துக்கொள்ளலாம்.
ஆனால், உள்ளத்தை
நொறுக்கும்படி நிகழ்த்தப்பட்ட அவமானங்கள், அவர்கள்மீது சுமத்தப்பட்ட கொடூரத் தண்டனையாக
இருந்தன. அக்கொடூரங்களின் மத்தியில், சிலுவையில் அறையப்பட்ட மூவரும் பேசிக்கொண்டவற்றை,
நற்செய்தியாளர் லூக்கா, இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
லூக்கா 23 : 39-43
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும்
காப்பாற்று” என்று இயேசுவைப்
பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி
இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம்.
இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது
என்னை நினைவிற்கொள்ளும்”
என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில்
இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.
அந்த மூவரும் பேசியச் சொற்கள் பல சிந்தனைகளை எழுப்பலாம்.
ஆனால், நாம் இத்தவக்காலத்தின்
விவிலியத்தேடல்களில், இயேசுவின் சொற்களை மட்டும் தியானித்து வருவதால், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில்
இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்ற சொற்களை மட்டும்
நம் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்வோம். இயேசு, தன்னோடு அறையுண்டிருந்த குற்றவாளியிடம்
கூறிய இச்சொற்களில், மூன்று உறுதிமொழிகள் உள்ளன.
"நீர் பேரின்ப வீட்டில் இருப்பீர்.
நீர் என்னோடு இருப்பீர்.
நீர் இன்றே இருப்பீர்."
பேரின்ப வீட்டில் இருப்பீர்: இறைமகன் இயேசு
சிலுவையில் கொடுத்த இந்த உறுதி மொழியில் "பேரின்ப வீடு" என்ற சொற்களைப்
பயன்படுத்தியிருக்கிறார். எபிரேய மொழியில் அவர் சொன்ன இந்த அபூர்வச் சொல், புதிய
ஏற்பாட்டில், இன்னும் இரு இடங்களில் மட்டுமே (2 கொரி. 12: 3, திருவெளிப்பாடு 2: 7) பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு விண்ணகத்தை ஒரு வீடு என்று, அதுவும், பேரின்ப
வீடு என்று குறிப்பிடுகிறார். ‘விண்ணகம்’ என்ற வார்த்தையை
விட ‘வீடு’ என்ற சொல் மனதுக்கு
நெருக்கமான, நிறைவான ஒரு சொல்லாய் ஒலிக்கிறது.
நாம் குடும்பமாய் சேர்ந்து வாழுமிடத்தைக் குறிக்க, ஆங்கிலத்தில்,
இரு சொற்களைப் பயன்படுத்துகிறோம். House மற்றும் Home. தமிழில் இதை ‘வீடு’ மற்றும்
‘இல்லம்’ என்று
சொல்லலாம்.
கல், மண், சிமென்ட், கம்பிகள்
என்று பல பொருள்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடத்தை House, வீடு அல்லது மாளிகை
என்று சொல்கிறோம். ஓர் இல்லம் உருவாக, பொருள்கள் தேவையில்லை, மனங்கள் தேவை. மனங்கள்
ஒன்றி உருவாகும் ஓர் அமைப்பையே நாம் Home அல்லது இல்லம் என்று சொல்கிறோம்.
இல்லம் என்பதை ஓர் இடம் என்று சொல்வதைவிட ஒரு நிலை என்று
சொல்வதே அதிகம் பொருந்தும். இல்லம் என்பது, நாம் நாமாக, சுதந்திரமாக உணரக்கூடிய
ஒரு நிலை. இந்நிலை, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இடங்களில் உருவாகலாம். பரந்த புல்வெளி, பனிபடர்ந்த
மலை, அடர்ந்த
காடு, ஆழ்கடல், அல்லது,
கூச்சலும், குழப்பமும் நிறைந்த ஒரு சந்தை, அமைதியான ஆலயம்... இப்படி, பல்வேறு சூழல்களில்
ஒருவர், "வீட்டுணர்வைப்" பெறலாம். இந்த "வீட்டுணர்வை" இயேசு அம்மனிதருக்கு
உறுதியளித்தார். "நீர் அலைந்து திரிந்தது போதும். வீட்டுக்கு வாரும்" என்ற
அழைப்பை, பேரின்ப வீட்டில் இருப்பீர் என்ற உறுதிமொழி வழியே வழங்கினார்.
இரண்டாவது உறுதிமொழி - நீர் என்னோடு இருப்பீர்: மலையுச்சியில், அடர்ந்த
காட்டில்,
ஆழ்கடலில், ஆலயத்தில், "வீட்டுணர்வை" பெறலாம் என்று சிந்தித்தோம்.
வட துருவத்தில் பனிப்பாறையின் உச்சியில் ஒருவர் தனியே நின்றால், எப்படி
இருக்கும்?
அதிகக் குளிராக இருக்கும். தனிமையாக இருக்குமா? அது, அவர் மனதைப்
பொருத்தது. தனியாக இருப்பதற்கும், தனிமையாக இருப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள்.
ஒருவர் உடலளவில் தனியாய் இருக்கும்போதும், ஆயிரம்
பேருடன் உள்ளத்தளவில் ஒன்றித்து வாழமுடியும். அதற்கு மாறாக, ஆயிரம் பேர் கூடி, இசை,
நடனம் என்று, கொண்டாடும் நேரங்களிலும், ஒருவர் தனிமைச்சிறையில் துன்புற முடியும்.
தனிமையில் இருப்பது வெறும் சிறை அல்ல. அதுதான் நரகம். தனிமை
நரகத்திலிருந்து விடுதலை பெற, அன்பு, அரவணைப்பு இவற்றை உணரவேண்டும். இயேசு அந்த
அரவணைப்பைத்தான் "நீர் என்னோடு இருப்பீர்" என்ற வார்த்தைகள் வழியே
அந்த குற்றவாளிக்கு அளிக்கிறார்.
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இருவரும், பிறந்தது முதல்,
வாழ்க்கையின் ஓரங்களுக்கு தள்ளப்பட்டு, அன்பு, அரவணைப்பு, ஆகியவற்றை
இழந்திருக்கக்கூடும். அதன் விளைவாக, அவர்கள், குற்றவாளிகளாய் மாறியிருக்க வேண்டும்.
அவர்களில் ஒருவர், "நாம் தண்டிக்கப்படுவது முறையே" என்று சிலுவையில் சொன்னபோது, தன் குற்றங்களை, தன் தனிமை
உணர்வுகளை, இயேசுவிடம் வெளிப்படுத்துகிறார். அன்புக்கு, அரவணைப்புக்குக்
காத்திருக்கும் அக்குழந்தையின் மனதை புரிந்துகொண்ட இயேசு, அவரை,
அவ்வேளையில், தன் கரங்களால் அரவணைக்க முடியவில்லையெனினும், உள்ளத்தால் அரவணைத்து, தன்
வீட்டுக்கு அழைத்துச் செல்லும் உறுதிமொழியே, “நீர் என்னுடன்
பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற சொற்கள்.
இயேசு மனுவுரு எடுத்ததன் மையமே, "கடவுள் நம்மோடு"
என்பதை உணர்த்தத்தானே. அவரது பிறப்புக்கு முன், ‘இம்மானுவேல்’ என்ற இலக்கணத்துடன்
அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இயேசு, (மத்தேயு 1:23) அந்த உண்மையை, சிலுவையிலும் உணர்த்தியது,
அழகான ஓர் இறை வெளிப்பாடு.
மூன்றாவது உறுதி - இன்றே இருப்பீர்: இயேசு, சிலுவையில்,
அந்த குற்றவாளியைப் பார்த்து சொன்ன இந்த உறுதிமொழியில் எவ்வித நிபந்தனையும் இல்லை.
“இயேசுவே, நீர் ஆட்சியுரிமை
பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்று சொன்ன அம்மனிதருக்கு,
இயேசு, நிபந்தனைகள் விதித்திருந்தால், இப்படி பேசியிருக்க வேண்டும்: “நீயா? இத்தனைக்
குற்றங்கள் செய்தவனா? விண்ணகத்திலா? ம்... பார்ப்போம். ஒரு சில ஆண்டுகள், உன்
பாவங்களுக்குப் பரிகாரம் செய்துவிட்டு பிறகு வா. அப்போது, உன்னை விண்ணகத்தில்
சேர்க்கமுடியுமா என்று பார்ப்போம்.” இத்தகைய நிபந்தனைகளோடு பேசுவதற்குப்
பதில், இயேசு, “இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற உறுதியை மட்டும்
வழங்கினார்.
இயேசு பயன்படுத்திய "இன்றே" என்ற சொல்லைப் புரிந்துகொள்ள,
புனித பேதுருவின் இரண்டாம் திருமுகத்தில் நாம் காணும் வரிகள் நமக்கு உதவியாக
இருக்கும்.
பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3: 8
அன்பார்ந்தவர்களே, நீங்கள்
ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம்
ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.
காலத்தை அளக்க, நொடிகள், நிமிடங்கள் என்று
ஆரம்பித்து, ஆண்டுகள், யுகங்கள் என்று, நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். நேற்று, இன்று, நாளை, என்று
பல பாகுபாடுகள் செய்துகொள்ளலாம். இறைவனுக்கோ இவ்வறையரைகள் எதுவுமே கிடையாது. அவருக்கு,
எப்போதும், இன்றே... இப்போதே... நிகழ்காலம் மட்டுமே. இறைவன் இருக்கும்போது,
அங்கு, எப்போதும், நிரந்தரமாய் இருப்பது, நிகழ்காலம் மட்டுமே. மனித அறிவைக்கொண்டு,
இதைப் புரிந்துகொள்வது கடினம். ஏனெனில், நாம் அனைவரும், நாம் உருவாக்கிக் கொண்ட காலத்தின்
கைதிகள்.
காலம், நேரம், ஆகியவற்றைப்பற்றி, எவ்விதக் கவலையுமே இல்லாமல்
வாழமுடியுமா? முடியும். சில நேரங்களில் இப்படி வாழ்ந்திருக்கிறோம். நம்
மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலில் ஈடுபடும்போது, எடுத்துக்காட்டாக, அழகான
இசையில் முற்றிலும் நம்மை மறந்திருக்கும்போது, அல்லது, மனதிற்குப்
பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ஆழ்நிலை தியானகளில் மூழ்கும்போது... நேரம்
போனதே தெரியாமல் இருந்திருக்கிறோம் இல்லையா?
நேரம் பற்றிய உணர்வு ஏதுமின்றி நாம் வாழ்ந்த இந்த குறுகியத்
தருணங்களை, எந்நேரமும் உணர்வதுதான், இறைவனுடன் நாம் இருக்கப்போகும் நேரம். அந்த அற்புத
காலத்தை, இயேசு, அந்த குற்றவாளிக்குத் தரும் வகையில், அவரிடம், "நீர் இன்று
என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்."
என்று சொன்னார்.
இயேசு, கல்வாரியில், தன்னோடு அறையப்பட்டவருக்கு, கடவுளின்
நிபந்தனையற்ற அன்பை உணர்த்தி, அவரை, பேரின்ப வீட்டிற்கு அழைத்துச் சென்றதைப் போல், நமக்கும்,
கடவுளின் பேரன்பை உணர்த்தி, அவரது பேரின்பத்தில் நம்மையும் இணைக்கவேண்டும்
என்று மன்றாடுவோம்.
No comments:
Post a Comment