I
complained I had no shoes…
விதையாகும் கதைகள் : குறைசொல்வதில்
குறியாக இருந்தால்...
மலைமீது அமைந்திருந்த ஒரு துறவு மடத்தில், மௌனம் காப்பது மிக மிக முக்கியமான ஒரு
விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்தவர்கள், ஒவ்வொரு பத்து ஆண்டுகள் சென்றபின், இரு வார்த்தைகள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அந்த மடத்தில் புதிதாகச் சேர்ந்த ஓர் இளம் துறவி, பத்து ஆண்டுகள் சென்றபின், மடத்தின் தலைமைக் குருவைச் சந்திக்கச்
சென்றார். தலைவர் அவரிடம், "நீ இங்கு
பத்தாண்டுகள் இருந்துவிட்டாய். நீ சொல்ல விழையும் இரு வார்த்தைகள் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த இளம் துறவி, "கடினமான படுக்கை" என்று கூறினார்.
"ஓ,
அப்படியா" என்று தலைவர் சொல்லி, அவரை அனுப்பி வைத்தார்.
அடுத்த பத்தாண்டுகள் உருண்டோடின. தலைவரைக் காணச்சென்ற இளம்
துறவியிடம், "இப்போது நீ சொல்ல விழையும் இரு வார்த்தைகள் என்ன?" என்று
கேட்டார். இளையவர் மறுமொழியாக, "மோசமான உணவு" என்று கூறினார்.
அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின், தலைவரைச் சந்திக்கச்
சென்ற இளம் துறவி, அவர் கேட்பதற்கு முன்னரே, "நான் போகிறேன்"
என்ற இரு வார்த்தைகளைச் சொன்னார். தலைவர் அவரிடம், "நீ ஏன் போகிறாய்
என்பது புரிகிறது. இங்கு வந்த நாள் முதல், குறை சொல்வதில்
மட்டுமே நீ குறியாக இருந்தாய்" என்று கூறி, அவரை வழியனுப்பி வைத்தார்.
அயர்லாந்து நாட்டின் பழமொழி சொல்வது இதுதான்: "என்னிடம்
காலணிகள் இல்லை என்று குறை சொல்லி வந்தேன், இரு கால்களும்
இல்லாத ஒருவரைச் சந்திக்கும்வரை."
Jesus
feeding the people
ஒத்தமை நற்செய்தி – அப்பம் பகிர்ந்தளித்த மற்றொரு
புதுமை 2
இன்றைய
நம் விவிலியத் தேடலின் துவக்கத்தில், ஏப்ரல் 21ம் தேதியை முதலில் மனதில் பதிப்போம். கடந்த ஆண்டு, ஏப்ரல் 21ம் தேதி, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா
உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட வேளையில், இலங்கையின் புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் மற்றும் சீயோன்
ஆலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் 259 உயிர்கள் பலியாயின, இன்னும் 500ககும்
மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அந்தக் கொடூரத் தாக்குதல்களில் பலியானோரின் நினைவாக, ஏப்ரல்
21, இச்செவ்வாயன்று, இலங்கையில்
உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு, 2 நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மக்களோடு
நாமும் மனதால் ஒன்றித்து, இறந்தோரின் ஆன்மா சாந்தியடையவும், அந்நாட்டிற்கு
இறைவன் நிறைவான அமைதியையும், வளத்தையும் வழங்கவும் இத்தேடலின் துவக்கத்தில்
மன்றாடுவோம்.
இயேசு, 4000த்திற்கும் அதிகமான மக்களுக்கு
அப்பத்தைப் பகிர்ந்தளித்த புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. மக்களின் பிணிகளை
இயேசு அகற்றிய புதுமையையும், மக்களின் பசியை அவர் போக்கிய புதுமையையும், நற்செய்தியாளர் மத்தேயு ஒன்றன்பின்
ஒன்றாகத் தொடர்ந்து பதிவு செய்துள்ளதை மையப்படுத்தி, Marcus Dods என்ற விவிலிய விரிவுரையாளர் கூறியுள்ள
சில எண்ணங்களை நாம் சென்றவாரத் தேடலில் சிந்தித்தோம். பிணிகளை நீக்க இயேசு ஆற்றிய புதுமைகள், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்த்தப்பட்டன
என்று கூறும் டாட்ஸ் அவர்கள், குணமளிக்கும் புதுமைகளைத் தொடர்ந்து, உணவளிக்கும் புதுமையை யாருடைய வேண்டுகோளும் இன்றி இயேசு நிறைவேற்றினார்
என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
நலம்வேண்டி தன்னை அணுகிவந்த மக்களைக் குணமாக்கும் சக்தி
பெற்றிருந்த இயேசு, மக்களுக்கு நேரக்கூடிய பசி என்ற துயரத்தை தடுக்கும் சக்தியையும்
பெற்றிருந்தார் என்று டாட்ஸ் அவர்கள் கூறியுள்ளார். நோய் என்ற துயரத்தை நீக்குவது எவ்வளவு
முக்கியமோ,
அதே அளவு, நோய்களை உருவாக்கும் பசி போன்ற துயரத்தை தடுப்பதும் முக்கியம்
என்பதை இயேசு உணர்ந்திருந்தார். துயரத்தை நீக்குதல், துயர் வராமல் தடுத்தல்
என்ற இரு செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த இயேசுவைக் காணும்போது, நம் சிந்தனைகள், மீண்டும்
ஒருமுறை,
இன்றைய உலகில் நிலவும் கொரோனா தொற்றுக்கிருமியின் விளைவுகள் நோக்கி திரும்புகின்றன.
சாதி,
மதம், இனம், செல்வம், வறுமை என்று, சமுதாயத்தில் நிலவும் பாகுபாடுகள் எதையும்
பொருட்படுத்தாமல், கோவிட்-19
தொற்றுநோய், அனைவரையும்
பாதித்துள்ளது என்ற கருத்து, நம் ஊடகங்கள் வழியே அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இந்த நோயாலும், அதைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள
முழுஅடைப்பு நடவடிக்கைகளாலும், செல்வந்தர்களைக் காட்டிலும், வறியோர், பல்லாயிரக்கணக்கில், பரிதாபமான வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்பதை உணரலாம்.
இந்த
நோய் வறியோரையும், செல்வந்தர்களையும்
பாகுபாடின்றி பாதித்துள்ளது என்று சொல்லும்போது, அவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ உதவிகளும்
பாகுபாடின்றி கிடைக்கின்றன என்று சொல்லமுடியுமா? அதேவண்ணம், இந்நோயிலிருந்து காத்துக்கொள்ள பின்பற்றப்படும்
முழுஅடைப்பு நடவடிக்கைகளால், செல்வந்தர்களைவிட, வறியோர் எண்ணற்றத் துயரங்களை அடைந்து வருவதையும்
நாம் அறிவோம்.
நோயுற்றோரைக்
குணமாக்கவும், நோயை உருவாக்கும்
பசியைத் தடுக்கவும் சக்தி பெற்றிருந்த இயேசு, இந்தத் தொற்றுநோய் பரவல், மற்றும், முழு அடைப்பினால்
உருவாகியுள்ள இழப்புக்கள் ஆகிய கொடுமைகளிலிருந்து வறியோர் மீண்டெழ வழிகாட்ட வேண்டும்
என்ற செபத்துடன் நம் தேடலைத் தொடர்வோம்.
4000த்திற்கும்
அதிகமான மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய புதுமைக்குத் திரும்புவோம். இப்புதுமை, பல விதங்களில், 5000த்திற்கும் அதிகமானோருக்கு
இயேசு உணவு வழங்கிய அந்தப் புதுமையை ஒத்ததாய் உள்ளது. பின், எதற்காக, மத்தேயு, மாற்கு ஆகிய இருவரும் இருவேறு புதுமைகளைப்
பதிவு செய்துள்ளனர் என்ற கேள்வி விவிலிய விரிவுரையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
4000, அல்லது 5000 மக்களுக்கு இயேசு உணவு
வழங்கிய புதுமைகள், ஒரே விதமாகக் கூறப்பட்டிருந்தாலும், ஒரு சில நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடியும்
என்று, எழுத்தாளரும், மறையுரையாளருமான James Burton Coffman
என்ற விவிலிய விரிவுரையாளர்
கூறியுள்ளார்.
5000
பேருக்கு இயேசு உணவு வழங்கிய வேளையில், அம்மக்கள் இயேசுவுடன் எவ்வளவு நேரம் தங்கியிருந்தனர் என்ற குறிப்பு
நான்கு நற்செய்திகளிலும் கூறப்படவில்லை. அவர்கள் ஒருவேளை, ஒரு நாள் முழுவதும் இயேசுவின் உரைகளுக்கு
செவி மடுத்திருக்கவேண்டும். ஆனால், 4000 பேருக்கு உணவு வழங்கிய இந்தப் புதுமையில், "நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது
பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும்
இவர்களிடம் எதுவுமில்லை." (மாற்கு 8:2) என்ற பரிவு நிறைந்த சொற்களை இயேசு கூறுவதாக நற்செய்தியாளர்
மாற்கு குறிப்பிட்டுள்ளார்.
5000
பேருக்கு இயேசு உணவு வழங்கிய புதுமையில், மாலையானதும் அவர்களை அனுப்பிவிடுமாறு சீடர்கள் இயேசுவிடம் கூறினர்.
அந்தக் கூற்று, இயேசுவின் புதுமைக்கு அடித்தளமிட்டது என்று கூறலாம். 4000 பேருக்கு
உணவு வழங்கிய இப்புதுமையிலோ, சீடர்கள் எதுவும் சொல்லாதபோது, இயேசு, மக்களின் தேவையை முன்வைத்து, அவராகவே இப்புதுமைக்கு அடித்தளமிடுகிறார்.
அத்துடன் இவ்விரு புதுமைகளும் நடைபெற்ற நிலப்பரப்பு குறித்தும் ஒரு சில
வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன.
இந்த
நுணுக்கமான வேறுபாடுகளையெல்லாம் விட, இப்புதுமையைக் குறித்து புனித அகுஸ்தீன்
பேசும்போது, மற்றொரு முக்கியமான வேறுபாட்டை வெளிச்சமிட்டுக்
காட்டுகிறார். 5000 பேருக்கு உணவு வழங்கியப் புதுமையை இயேசு, இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த பகுதியில் ஆற்றினார். அந்தப் புதுமைக்கு
முன்னதாக, "சீடர்களை மட்டும் கூட்டிக்கொண்டு
இயேசு தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்" (லூக்கா 9:10) என்று, லூக்கா நற்செய்தியிலும்,
இயேசு கலிலேயக்
கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு (யோவான் 6: 1) என்று யோவான் நற்செய்தியிலும்
கூறப்பட்டிருக்கும் குறிப்புகள், அந்தப் புதுமை, யூதர்கள் வாழ்ந்த பகுதியில் நிகழ்ந்தது என்பதை தெளிவாக்குகிறது.
4000
பேருக்கு உணவு வழங்கிய இந்தப் புதுமையோ, தீர், சீதோன் பகுதிகளில் இயேசு மேற்கொண்ட பயணத்தையொட்டி இடம்பெற்றதாகக்
கூறப்பட்டுள்ளது. எனவே, இப்புதுமையை இயேசு, புறவினத்தார் வாழ்ந்த பகுதியில் நிகழ்த்தினார் என்று புனித அகுஸ்தீன்
விளக்கமளித்துள்ளார்.
5000
பேருக்கு இயேசு உணவளித்த புதுமையின் இறுதியில்,
அவர்கள் வந்து
தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும்
தனியாய் மலைக்குச் சென்றார் (யோவான் 6:14-15) என்று நற்செய்தியாளர் யோவான் அப்புதுமையை
நிறைவு செய்துள்ளார். நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் 4000 பேருக்கு இயேசு உணவு வழங்கியப் புதுமையை, எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக நிறைவு செய்துள்ளனர்.
5000த்திற்கும்
அதிகமான மக்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்த புதுமைக்கு முன்னதாக, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள மற்றொரு
விருந்து, இன்றைய உலகின் நிலையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது. மன்னன்
ஏரோதின் அரண்மனையில் நடந்த அந்த விருந்தில், மதுவும், உணவும், அளவு கடந்து சென்றதன் விளைவாக, திருமுழுக்கு யோவான் கொலையுண்டார். அந்த விருந்தைப்பற்றி கூறிய
அதே மூச்சில், இயேசு அப்பத்தைப் பகிர்ந்தளித்த அந்த விருந்தையும், மத்தேயு, மாற்கு இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏரோது
மன்னன் வழங்கிய விருந்து, இயேசு பகிர்ந்தளித்த விருந்து என்ற
இரண்டு விருந்துகளையும் இணைத்து சிந்திக்கும்போது, இன்றைய
உலகில், ஏற்றத்தாழ்வுகளுடன் தொடரும் விருந்துகள் உள்ளத்தை உறுத்துகின்றன. இந்த தொற்றுநோய்
காலத்திலும், வழக்கமான தங்கள் விருந்துகளை தொடர்ந்து
நடத்திவரும் செல்வந்தரையும், ஒன்றுமில்லாமல் பசியால் வாடும்
வறியோரையும் எண்ணிப்பார்க்க இப்புதுமை நம்மைத் தூண்டுகிறது.
5000
பேருக்கு உணவு வழங்கப்பட்ட புதுமையில், நாம் காணும் இரு விடயங்கள், இப்புதுமையில் இடம்பெறாதிருப்பது, சீடர்களைப் பற்றிய சில தெளிவுகளை நமக்குத் தருகிறது. முதல் புதுமையில், மக்களை அனுப்பிவிடும்படி சீடர்கள் கேட்டுக்கொண்டனர். இப்புதுமையிலோ, அம்மக்கள் மூன்று நாள்கள் தங்களுடனேயே இருந்ததை அறிந்தும் அவர்களை
அனுப்பிவிடும்படி சீடர்கள் இயேசுவிடம் கூறவில்லை. மாறாக, அவர்களிடம் இருக்கும் உணவைப்பற்றி இயேசு கேட்டதும், அவர்கள் அவற்றை இயேசுவிடம் கொணர்ந்தனர். பகிர்வுப் புதுமை
நடைபெறும் என்பதை சீடர்கள் உணர்ந்திருந்தனரோ என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
அதேவண்ணம், 5000 பேருக்கு உணவு வழங்கிய புதுமையின் இறுதியில், இயேசு, தன் சீடர்களுக்குக் கூறிய ஓர் அறிவுரை, ‘தூக்கியெறியும் கலாச்சார’த்தைத் தூக்கிப்பிடிக்கும் இன்றைய
உலகிற்கு, ஒரு சாட்டையடியாக விழுகிறது. பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், உணவை
வீணாக்காமல் பாதுகாப்பதும் நம் கடமை என்பதை இயேசு சொல்லித்தருகிறார். மக்கள்
வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளை சேர்த்து வையுங்கள்" என்று (இயேசு)
தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து
எஞ்சியத் துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். (யோவான் 6:12-13) என்று யோவான்
குறிப்பிட்டுள்ளார்.
4000
பேருக்கு உணவு வழங்கிய இந்தப் புதுமையிலோ, இயேசு எதுவும் கூறாதபோதும், சீடர்கள், மீதியான உணவை ஏழு கூடைகளில் நிரப்பினர் என்று நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் குறிப்பிட்டுள்ளனர். உணவைப் பகிர்தல், பாதுகாத்தல் ஆகிய அழகிய பழக்கங்களை சீடர்கள் கற்றுக்கொண்டனர் என்பதை
இப்புதுமை நமக்கு உணர்த்துகிறது.
உணவைப்
பகிர்தல், பாதுகாத்தல் ஆகிய பாடங்களை நாமும் கற்றுக்கொள்ள, இப்புதுமை நமக்கு
உதவட்டும்.
No comments:
Post a Comment