01 June, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 10 – நீதிக்காக வேண்டல் 1

Prayer for Justice

'வேண்டும்', 'வேண்டும்' என்ற மன்றாட்டுக் குரல்கள் இவ்வுலகிலிருந்து விண்ணகத்தை நோக்கி ஒவ்வொரு நொடியும் எழுந்தவண்ணம் உள்ளன. தனிப்பட்டத் தேவைகள், குடும்பத்தினரின் தேவைகள், சமுதாயத் தேவைகள் என்று, பல்வேறு நிலைகளில் மக்கள் பதிவுசெய்யும் தேவைகளின் பட்டியல், இறைவனின் சந்நிதியில், ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கடந்த 18 மாதங்களாக, உலக மக்களின் உள்ளங்களிலிருந்து எழுந்துவரும் முக்கியத் தேவை, 'பாதுகாப்பு வேண்டும்' என்ற மன்றாட்டு. கண்ணுக்கும், கருத்துக்கும் புலப்படாத ஒரு கிருமியிடமிருந்து பாதுகாப்பு தேவை என்ற மன்றாட்டு, கோடான கோடி மக்களின் இடைவிடாத வேண்டுதலாக, இரவும், பகலும் எழுந்துவருகிறது. அத்துடன், இந்தப் பெருந்தொற்றினால் உருவாக்கப்பட்டுள்ள, வறுமை, பட்டினி, வேலையின்மை, வாழ்வாதாரப் பறிப்பு, ஆகிய அனைத்து அநீதிகளிலிருந்தும் விடுதலை வேண்டும் என்ற வேதனை மன்றாட்டு, வறியோரிடமிருந்து தொடர்ந்து எழுந்துவருகிறது.

பெருந்தொற்றையும், அதனால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு, சமுதாய விலகல் ஆகிய விதிமுறைகளையும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும், அரசியல்வாதிகளும், பெரும் செல்வந்தர்களும், தங்களைத் தடுக்க யாருமில்லை என்ற துணிவில், அடுக்கடுக்காய் அநீதிகளை செய்துவருவதால், 'நீதி வேண்டும்' என்ற மன்றாட்டு, இறைவனை நோக்கி கூடுதலாக எழுந்துவருகிறது. இத்தகையச் சூழலில், 'நீதிக்காக வேண்டல்' என்ற தலைப்பில் பதிவாகியுள்ள 10ம் திருப்பாடலில், நம் விவிலியத்தேடலை, இன்று துவக்குகிறோம்.

'நீதிக்காக வேண்டல்' என்ற தலைப்பு, இத்திருப்பாடலுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், வேண்டுதலாக ஒலிக்கும் சொற்கள், இப்பாடலில், மிகக்குறைவாகவே உள்ளன. 18 இறைவாக்கியங்களைக் கொண்ட இத்திருப்பாடலில், ஆண்டவரே, எழுந்தருளும்! இறைவா, உமது ஆற்றலை வெளிப்படுத்தும்! எளியோரை மறந்துவிடாதேயும் (தி.பா. 10:12) என்ற ஒரே ஓர் இறைவாக்கியம் மட்டுமே, அநீதிகளால் துன்புறும் எளியோர் சார்பில் எழுப்பப்படும் வேண்டுதலாக ஒலிக்கிறது. ஏனைய 17 இறைவாக்கியங்களில், பெரும்பாலானவை, பொல்லார் நிகழ்த்திவரும் அநீதிகளையும், கொடுமைகளையும் விவரிக்கின்றன. இவ்வரிகளில், கோபம், வேதனை, விரக்தி என்ற உணர்ச்சிகள், கேள்விகளாக, விண்ணப்பங்களாக பதிவாகியுள்ளன.

உலகில்  தோன்றும் ஒவ்வோர் உயிரினத்திற்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அறிவோம். மனிதர்களாகிய நமக்கோ, உணர்ச்சிகளுடன், அவற்றை நெறிப்படுத்தும் அறிவுத்திறனும் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சனை ஏதுமின்றி வாழ்வு சுமுகமாகச் செல்லும் வேளையில், நாம் அறிவுத்திறனை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பிரச்சனைகள் எழும்போது, குறிப்பாக, அவை, ஒரு போராட்டமாக திரண்டு வரும்போது, உணர்ச்சிகள் மேலோங்கிவிடுகின்றன.

வாழ்வில் போராட்டங்களை, பிரச்சனைகளை, துயரங்களைச் சந்திக்கும்போது, வருத்தம், ஏமாற்றம், இயலாமை, கோபம் என்ற பல உணர்ச்சிகள் நமக்குள் எழுகின்றன. இப்பிரச்சனைகளுடன், ஏராளமான கேள்விகளும் நம்மை வாட்டுகின்றன. இக்கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை, தெளிவாக, நிதானமாகத் தேடுவதற்குப் பொறுமை தேவை. இந்தப் பொறுமை இல்லாதபோது, நம்முள் எழும் உணர்ச்சிகள், சிந்திக்கும் திறனை வெற்றிகொள்கின்றன. மேலும், நாம் வாழும் துரித உலகில், இந்தப் பொறுமை தேய்ந்து, குறைந்து, இன்று காணாமல் போய்விட்டதென்றே சொல்லத் தோன்றுகிறது.

தனிப்பட்டப் பிரச்சனைகளைத் தீர்க்க பொறுமை இல்லாத நாம், சமுதாயப் பிரச்சனைகளிலும், பொறுமையிழந்து, அவசரமுடிவுகளை எடுக்கிறோம். நம் பொறுமையின்மையையும், உணர்ச்சிகளையும் ஆதாயமாக்கிக்கொண்டு, ஊடகங்கள், சமுதாயத்தில் எழும் சிறு உரசல்களையும் பெரிதாக்கி, அவற்றை, தலைப்புச்செய்திகளாக்கி, தங்கள் இலாபத்தைக் தேடிக்கொள்கின்றன.

ஊடகங்களின் பரபரப்புப் பரிமாற்றங்கள் போதாதென்று, நாமும், நம்மிடையே எழும் பிரச்சனைகளின் உண்மை என்ன, அவற்றின் ஆணிவேர் என்ன என்பனவற்றை, சரியாகப் புரிந்துகொள்ளாமல், நம் தொடர்புக் கருவிகளின் வழியே அவற்றை விரைவில் பரப்பிவிடுகிறோம். பிரச்சனைகளைத் தீர்ப்பதைவிட, அவற்றை, உடனுக்குடன் பரப்புவதே நம் தொடர்புக் கருவிகளின் நோக்கமாக அமைந்துவிட்டது. சரியான ஆதாரங்கள், அடிப்படை உண்மைகள் இவற்றை ஆய்வுசெய்யும் அறிவுத்திறனை அடகுவைத்துவிட்டு, உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகிறோம்.

நாம் கடந்துவந்த 18 மாதங்களைத் திருப்பிப் பார்க்கும்போது, இந்த பெருந்தொற்றையும், அதன் பாதிப்புக்களையும் பற்றிய உண்மையான அறிவியல் சார்ந்த தகவல்கள், செய்திகள் ஆகியவற்றைக்காட்டிலும், வதந்திகளும், அரைகுறை செய்திகளும், ஊடகங்களையும், நாம் பயன்படுத்தும் தொடர்புக் கருவிகளையும், ஆக்கிரமித்து வருகின்றன என்பது, வேதனை தரும் உண்மை. இந்த வதந்திகளால் உருவான அச்சம், மனத்தளர்ச்சி ஆகிய உணர்ச்சிகள், பல்லாயிரம் உயிர்களைப் பறித்துச்சென்றுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.

நம் ஒவ்வொருவரையும் வந்தடையும் துயரங்கள், வடிவிலும், அளவிலும் ஒன்றுபோல இருந்தாலும், அவற்றை எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதைப்பொருத்து, பின்விளைவுகள் இருக்கும். ஓர் உருவகத்தின் வழியே, இதை, புரிந்துகொள்ள முயல்வோம்.
கண்ணாடி, பஞ்சு, தோல், உலோகம் என்று, நான்கு வகை பொருள்களை எண்ணிப்பார்ப்போம். இந்த நான்கு பொருள்களையும், ஒரு சுத்தியல் கொண்டு நாம் தட்டும்போது, கண்ணாடி, உடைந்துபோகிறது; பஞ்சு, மிருதுவாகிறது; தோல், உறுதிப்படுகிறது; உலோகம், கடினமாகிறது. விழும் அடி ஒன்றுதான் என்றாலும், அதன் விளைவுகள், வெவ்வேறு வகையில் அமைகின்றன. துன்பம், அல்லது, பிரச்சனை என்ற சுத்தியல், நம் வாழ்வைத் தாக்கும்போது, நம் மனங்கள் கண்ணாடியா, பஞ்சா, தோலா, அல்லது, உலோகமா என்பதைப் பொருத்து, விளைவுகள் இருக்கும்.

கோவிட் பெருந்தொற்று என்ற சுத்தியலால், கண்ணாடிபோல நொறுங்கியிருக்கும் உள்ளங்கள், தங்களைப்பற்றியும், தங்கள் உறவுகளைப்பற்றியும், குறிப்பாக, தங்களை இந்நிலைக்கு உள்ளாக்கிய இறைவனைப்பற்றியும் கேள்விகள் எழுப்பிவருவதை அறிவோம். அத்தகைய கேள்விகளில் ஒன்றை, திருப்பாடலின் ஆசிரியர், 10ம் திருப்பாடலின் ஆரம்பத்தில் எழுப்பியுள்ளார்: ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்? (தி.பா. 10:1) என்று இத்திருப்பாடல் ஆரம்பமாகிறது.

இறைவன் தூரமாக இருப்பதாக, மறைந்திருப்பதாக, தன்னை மறந்துவிட்டதாக திருப்பாடலின் ஆசிரியர், இன்னும் சில திருப்பாடல்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்? (தி.பா. 13:1) என்று 13ம் திருப்பாடலின் துவக்கத்தில் கூறியுள்ளார்.
22ம் திருப்பாடலின் துவக்கத்தில் தாவீது எழுப்பும் கேள்வி, மீண்டும் ஒருமுறை கல்வாரியில் எதிரொலித்தது என்பதை நாம் அறிவோம்.
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? (தி.பா. 22:1)

சிலுவையில் அறையப்பட்ட இயேசு, தன் வேதனையின் உச்சியில் எழுப்பிய இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல, மாறாக, அவர், 22ம் திருப்பாடலை பயன்படுத்தி மேற்கொண்ட ஓர் மன்றாட்டின் துவக்கம் என்று, விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?... என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மாற். 15:34, மத். 27:46) என்று 22ம் திருப்பாடலின் ஆரம்ப வரிகளைச் சொல்லிக் கதறும் இயேசு, சற்றுநேரம் சென்று, "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 23:46) என்ற சொற்களுடன் தன் உயிரை ஈந்தார். இந்தச் சொற்கள், உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர் (தி.பா. 31:5) என்று, 31ம் திருப்பாடலில் பதிவாகியுள்ள, சொற்களை எதிரொலிக்கிறது

வாழ்வு என்ற பயணத்தில் எப்போதும் உடன்வரும் இறைவன், பிரச்சனைகள் சூழும் வேளையில் தூரமாகிப்போவதாக, மறைந்துவிடுவதாக, காணாமல்போய்விடுவதாக நம்மில் பலர் உணர்ந்திருக்கிறோம். அந்த உணர்வை, கேள்விகளாகவும் இறைவனிடம் எழுப்பியுள்ளோம். 10ம் திருப்பாடலின் முதல் வரியில் ஒலிக்கும் தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்? (தி.பா. 10:1) என்ற கேள்வி, Jennifer Jill Schwirzer என்பவர் எழுதிய Footsteps, அதாவது, காலடித்தடங்கள் என்ற கவிதையை நினைவுக்குக் கொணர்கிறது. இதோ, அக்கவிதையின் உரைநடைச் சுருக்கம்...
மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில், கடவுள், தன்னோடு நடந்து வந்தார் என்பதற்கு சான்றாக, பாதை முழுவதும் இரு சோடி காலடித்தடங்கள் பதிந்திருந்ததைக்கண்டு, அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில், அந்தப் பாதையில், ஒரு சோடி காலடித்தடங்களே இருந்ததைப் பார்க்கிறான் மனிதன். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே அம்மனிதன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். கடவுள் அவனை அன்போடு பார்த்து, "மகனே, பெரும் துன்பங்கள் வந்தபோது ஒரு சோடி காலடித்தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு, அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்நேரத்தில், உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார் கடவுள்.

ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்? (தி.பா. 10:1) என்ற வேதனைக் கேள்விகளுடன் துவக்கப்பட்டுள்ள 10ம் திருப்பாடலில், பொல்லார் விளைவிக்கும் அநீதிகளைப்பற்றி ஆசிரியர் கூறும் கருத்துக்களை, நம் அடுத்தத்தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment