God’s pure words - as
silver tried in the furnace
24
மணி நேரமும், செய்திகளை வழங்குவதற்கென, முதன்முதலில் உருவாக்கப்பட்ட Cable
News Network (CNN) என்ற தொலைக்காட்சி நிறுவனம், 1980ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தன் ஒளிபரப்பைத்
துவங்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டில், கறுப்பின மக்களின் சம உரிமைகளுக்காகப் போராடிய, வெர்னன் ஜோர்டன் (Vernon
Jordan) என்பவர் மீது, 1980ம்
ஆண்டு, மே 29ம் தேதி, நடத்தப்பட்ட கொலை முயற்சியைப்பற்றிய விளக்கமான
செய்தி, CNN நிறுவனம் ஒளிபரப்பிய முதல் செய்தியாக அமைந்தது.
கொலை முயற்சியை முதல் செய்தியாக வெளியிட்டதாலோ, என்னவோ, ஊடகங்கள் வழங்கும் செய்திகளில் பெரும்பாலானவை, எதிர்மறையான, மோசமான விடயங்களை
வெளிச்சமிட்டுக் காட்டும் செய்திகளாகவே அமைந்துள்ளன.
செய்திகள்
என்ற பெயரில், தொலைக்காட்சி நிறுவனங்கள் காட்டும் அவலங்களை தினமும் பார்க்கும் நாம், இவ்வுலகம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே
வருவதைப்போல உணர்கிறோம். கடந்த 18 மாதங்களாக, நம்மை நிலைகுலையைச் செய்துவரும் பெருந்தொற்றைப்பற்றிய
செய்திகளும், புள்ளிவிவரங்களும், நமக்குள் அயர்வையும், அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளன. இவை
போதாதென்று, ஒவ்வொரு நாளும், நம் செல்லிடப்பேசிகளில்
வந்து குவியும் தகவல்கள், நம்மை சலிப்படையச் செய்துவருகின்றன.
இத்தகையைச்
சூழலில், நம் உள்ளங்கள், விரக்தியில்
ஆழ்ந்துபோகாமல் காப்பதற்குத் தேவையான ஆலோசனைகள், அவ்வப்போது நம்மை வந்துசேருகின்றன.
அவற்றில், ஊடகங்களையும், தொடர்புக்கருவிகளையும் தவிர்ப்பது, அல்லது, கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய ஆலோசனையாக
முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒருநாளில், அதிகப்படியாக, 30 நிமிடங்கள் மட்டும் ஊடகச் செய்திகளுக்கு
ஒதுக்குங்கள்.
இரவு
நேரத்தில், செல்லிடப்பேசிகளுக்கு
'குட்நைட்' சொல்லி, அவற்றை தூங்கவிடுங்கள்...
போன்றவை, நம் மனநலத்தில் அக்கறை கொண்டவர்கள் வழங்கியுள்ள
ஆலோசனைகள்!
செய்திகள்
வழியே, ஊடகங்களும், தொடர்புக் கருவிகளும், நம்மீது வலுக்கட்டாயமாகத் திணித்துவரும்
உலகத்தைக் காணும்போது, "என்ன உலகம் இது? இங்கு, நல்லது எதையும் காணோமே! நல்லவர்களையே
காணமுடியவில்லையே!" என்று நம் உள்ளங்களில் பதைபதைப்பு உருவாகின்றது. அத்தகைய ஒரு
பதைபதைப்பு, மன்னர் தாவீதுக்கு ஏற்பட்ட
வேளையில், அவர், இறைவனிடம் 'உதவிக்காக மன்றாடி' எழுப்பிய வேண்டுதல், 12, 13 ஆகிய இரு திருப்பாடல்களாகப் பதிவாகியுள்ளது.
இவ்விரு
திருப்பாடல்களும், 'உதவிக்காக மன்றாடல்' என்ற ஒரே தலைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 12ம் திருப்பாடல், 'தேனொழுகப் பேசுபவர்களால்' உருவாகும் துன்பங்களைக் கூறுவதோடு, அதற்கு நேர்மாறாக, இறைவனின்
வாக்குறுதிகள் எவ்வளவு தூய்மையானவை என்பதையும் விவரிக்கிறது. 13ம் திருப்பாடலோ, தன்னைவிட்டு விலகியிருக்கும் இறைவனை நோக்கி
தாவீது எழுப்பியுள்ள வேண்டுதலாக அமைந்துள்ளது.
பொல்லார்
பெருகியுள்ள இவ்வுலகில், இறையன்பர்கள், மற்றும் மெய்யடியார் குறைந்து, மறைந்து வருகின்றனர் என்ற கூற்றுடன் 12ம்
திருப்பாடல் துவங்குகிறது: ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர். (திருப்பாடல் 12:1) என்று தாவீது
இப்பாடலைத் துவக்குகிறார்.
‘மெய்யடியார் மறைந்து போயினர்’ என்று தாவீது கூறும் சொற்கள், இறைவாக்கினர் எலியா இறைவனிடம் கூறிய சொற்களை
நம் நினைவுக்குக் கொணர்கின்றன. எலியா என்ற இறைவாக்கினருக்கும், பாகாலின் பொய்வாக்கினருக்கும் இடையே எழுந்த
மோதல், அரசர்கள் முதல் நூல்
18ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இந்த மோதலில் தோல்வியுற்ற பாகாலின் பொய்வாக்கினர்கள்
அனைவரையும் எலியா கொன்றார் என்பதை அறிந்த ஆகாபின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்வதற்கு முடிவுசெய்தார். இதைக்
கேள்வியுற்ற இறைவாக்கினர் எலியா, அச்சமுற்று, தம் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு
தப்பி ஓடினார்.... நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை
அடைந்தார்.... அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது. அவர் "எலியா! நீ இங்கே
என்ன செய்கிறாய்?"
என்று
வினவினார். அதற்கு அவர்,
"படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து
வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர். உம் பலிபீடங்களைத்
தகர்த்துவிட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத்
தேடுகின்றனர்" என்றார். (1 அரசர்கள் 19:3,8-10)
இறையன்பரும், மெய்யடியாரும் மறைந்துவருவதை 12ம்
திருப்பாடலின் முதல்வரியில் வருத்தத்துடன் குறிப்பிடும் தாவீது, அதைத் தொடர்ந்து, இவ்வுலகில் தவறுகள் செய்வோர், பெருகிவருகின்றனர் என்பதை, ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்; தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர். (திபா. 12:2) என்ற சொற்களில்
உணர்த்துகிறார்.
மெய்யடியாரையும், இருமனத்தோடு பேசுவோரையும், ஒருவர்பின் ஒருவராக,
தாவீது குறிப்பிட்டு வேண்டுவது, வள்ளலார் 'திரு அருட்பா'வில் எழுப்பியுள்ள வேண்டுதலை நினைவுக்குக்
கொணர்கிறது.
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு
வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்...”
உள்ளொன்று
வைத்து, புறமொன்று பேசுவதும், தேனொழுகப் பேசுவதும், இன்றைய அரசியல் உலகில் வெற்றி பெறுவதற்கு
ஒரே வழி என்று கூறுமளவு, அரசியல் உலகம் தாழ்ந்திருப்பது, நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகிறது. தங்கள் நாவன்மையை
மட்டுமே நம்பி வாழும் அரசியல் தலைவர்கள், எவ்வித
தயக்கமும் இன்றி, பொய்களை, உண்மைகளெனப் பரப்பிவருவதைக் காண்கிறோம்.
‘எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை; எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’ (திபா 12:4) என்று பெருமையடித்துக்கொள்ளும்
இவர்களுக்கு நேர்மாறாக, இறைவனின் வாக்கு, கலப்படமற்ற, தூய்மையாக்கப்பட்ட சொற்கள் என்பதை தாவீது
12ம் திருப்பாடலில் வலியுறுத்திக் கூறுகிறார்: ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை. (திபா12:6)
வாக்குமாறா
இறைவன், வாக்குப்பிறழும் தலைமுறையிலிருந்து
நல்லவர்களைக் காத்தருளவேண்டும் என்ற வேண்டுதலை, தாவீது, 12ம் திருப்பாடலின் இறுதியில் எழுப்புகிறார்:
ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்; இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும். (திபா12:7)
'உதவிக்காக மன்றாடல்' என்ற அதே தலைப்பில் பதிவாகியுள்ள 13ம் திருப்பாடல், வேதனை நிறைந்த கேள்விகளுடன்
ஆரம்பமாகின்றது. இப்பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் கேள்விகள், நம் உள்ளங்களில் அடிக்கடி எழும் கேள்விகளை
எதிரொலிக்கின்றன. குறிப்பாக, 'எத்தனை நாள்' என்ற கேள்வியை தாவீது, மீண்டும் மீண்டும் எழுப்புவது, அவர், நீண்டகாலமாக தன் வேதனைகளுடன் போராடிவருவதைக்
காட்டுகிறது.
எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்?... எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?... எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்?... எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்? (திபா13:1-2) என்று, தாவீது, 13ம் திருப்பாடலின் துவக்கத்தில் வேதனை நிறைந்த
கேள்விகளை அடுக்கிவைத்துள்ளார்.
இந்த வேதனைக் கேள்விகளில், கடவுள் தன் திருமுகத்தை
மறைத்துக்கொள்வதைக் குறித்து தாவீது எழுப்பும் கேள்வி, நம் கவனத்தை ஈர்க்கிறது. கடவுள்
தன் திருமுகத்தை மறைத்துக்கொள்வது, ஏனைய வேதனைகளைவிட கூடுதல் வேதனையை தாவீதுக்குத் தந்திருக்கவேண்டும்.
கடவுள் தன் முகத்தை மறைத்துக்கொள்வது, இஸ்ரயேல் குலத்தவருக்கு
பெரும் சாபமாகக் கருதப்பட்டது. ஏனெனில், கடவுளின் முகம்
ஆசீரோடு இணைக்கப்பட்ட ஓர் அடையாளம். இஸ்ரயேல் மக்களுக்கு
வழங்கவேண்டிய ஆசி மொழிகளாக ஆண்டவர் மோசேக்கு சொல்லித்தந்த ஆசிமொழியில், 'இறைவனின் திருமுகம்' ஒரு முக்கிய அம்சமாக ஒலித்தது:
ஆண்டவர்
மோசேயிடம் கூறியது; நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும்
சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு
ஆசிகூற வேண்டிய முறை:
"ஆண்டவர்
உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து
உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை 6:22-26)
13ம் திருப்பாடலின் பெரும்பாலான வரிகள், வேதனையை வெளிப்படுத்தும், கேள்விகளாகவும், முறையீடுகளாகவும்
அமைந்திருந்தாலும், இறுதி இரு வரிகள், தாவீதின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வரிகளாக அமைந்துள்ளன.
நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். (திபா 13:5-6)
இந்த இறுதி வரிகளில், "ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்" என்ற சொற்களுடன் தாவீது இப்பாடலை நிறைவு செய்துள்ளது, நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. 13ம் திருப்பாடலின் முதல் நான்கு இறைவாக்கியங்களில்
தன் உள்ளத்து வேதனைகளையெல்லாம் கொட்டித் தீர்க்கும் தாவீது, இறுதியில், ஆண்டவர் தன் வாழ்வில் செய்துள்ள நன்மைகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து இப்பாடலை
நிறைவு செய்துள்ளார்.
நம் வாழ்வையும், வேதனைகள் சூழ்ந்தாலும், அவற்றின் நடுவே, ஒரு சிறு ஒளிக்கீற்றுபோல, ஆண்டவர் நமக்குச்
செய்துள்ள நன்மைகளை நினைத்துப் பார்ப்பது, பெரும் உந்துசக்தியாக
அமையும். இத்தகைய ஒரு நன்றி உணர்வை வாழ்நாளெல்லாம் வளர்த்துக்கொள்வதற்கு, இறைவனிடம் அருளை வேண்டுவோம்.
No comments:
Post a Comment