If the foundation be destroyed…
அப்பாவும், அவரது 5 வயது மகளும் ஒரு பழைய, குறுகிய, பாலத்தைக் கடந்து, அக்கரைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில்
வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த பாலத்தின் பரிதாப நிலையைக் கண்ட அப்பா, தன் மகளிடம், "பாப்பா, நீ என் கையை கெட்டியாகப் பிடித்துக்கொள்"
என்று சொன்னார். அச்சிறுமியோ, அப்பாவிடம், "இல்லப்பா, நீங்க என் கையை கெட்டியாப் பிடிச்சிக்கோங்க"
என்று கூறினாள்.
"நீ
என் கையைப் பிடித்துக்கொண்டாலும், நான் உன் கையைப் பிடித்துக்கொண்டாலும், எல்லாம் ஒன்றுதானே. இதிலென்ன வித்தியாசம்?" என்று அப்பா கேட்டபோது, அச்சிறுமி, அப்பாவிடம், "பெரிய வித்தியாசம் இருக்கு. நான் உங்க கையைப்
பிடிச்சிக்கிட்டு நடக்கும்போது, எனக்கு ஏதாவது ஆனா, அந்த பயத்தில நான் உங்க கையை விட்டுவிடக்கூடும்.
ஆனா, நீங்க என் கையைப் பிடிச்சிக்கிட்டா, என்ன நடந்தாலும், நீங்க என் கையை விடமாட்டீங்கன்னு எனக்கு
நல்லாத் தெரியும்" என்று சொன்னாள்.
ஒருவர்
மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக்காட்டச் சொல்லப்படும் கதை இது. நாம்
ஒருவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட, அவரை நாம் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருப்பதைக்
காட்டிலும், அவர், எந்தச் சூழலிலும், நம்மை இறுக்கமாகப் பற்றிக்கொண்டே இருப்பார்
என்ற உறுதியில், நம்மையே அவரிடம் வழங்குவது, நம்பிக்கையின்
உயர்ந்ததோர் அடையாளம். அத்தகையதொரு நம்பிக்கையை வெளிப்படுத்தும்வண்ணம், "ஆண்டவரிடம் நம்பிக்கை" என்ற தலைப்பில் பதிவாகியுள்ள
11ம் திருப்பாடலில் இன்று நாம் தேடலை மேற்கொள்கிறோம்.
கோவிட்-19
பெருந்தொற்று என்ற வெள்ளத்தை, சுனாமியை, கடந்த 18 மாதங்களுக்கும் மேலாகக் கடந்துகொண்டிருக்கும்
நாம், அடிக்கடி, ஆண்டவரிடம் நம் நம்பிக்கையை வெளிப்படுத்தும்
இறைவேண்டல்களை எழுப்பிவருகிறோம். இத்தகையச் சூழலில் தாவீது பதிவுசெய்துள்ள இத்திருப்பாடலில்
நாம் தேடலை மேற்கொண்டிருப்பது பொருத்தமாகத் தெரிகிறது.
மன்னர்
தாவீதை பல ஆபத்துக்கள் சூழ்ந்த வேளையில், அவர்
அரண்மையைவிட்டு வேறு எங்காவது சென்றுவிடுவது நல்லது என்று அவரது நண்பர்களும், ஆலோசகர்களும், அவருக்கு ஆலோசனை வழங்கிய வேளையில், தாவீது, இறைவன் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை
பறைசாற்றும்வண்ணம் 11ம் திருப்பாடலைப் பதிவு செய்துள்ளார் என்பது, விவிலிய விரிவுரையாளர்களின்
கருத்து.
ஆண்டவரிடம்
தாவீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பற்றி கூறும் இப்பாடல், 7 இறைவாக்கியங்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக
வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை, தாவீதின் நம்பிக்கை அறிக்கை, நண்பர்களின்
ஆலோசனை,.அந்த ஆலோசனைக்கு தாவீது வழங்கும் பதிலுரை
என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்து சிந்திப்பது பயனுள்ள ஒரு முயற்சி.
"நான் ஆண்டவரிடம் அடைக்கலம்
புகுந்துள்ளேன்" (தி.பா. 11:1அ) என்ற அறிக்கையுடன் இப்பாடலைத்
துவக்கும் தாவீது, அதையடுத்து, தன்னை தப்பித்துச் செல்லும்படி
ஆலோசனை வழங்குவோரிடம், நீங்கள் என்னிடம், ‘பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ; ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை
வளைக்கின்றனர்; நாணில் அம்பு தொடுக்கின்றனர்; நேரிய உள்ளத்தார்மீது
இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்; அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய
முடியும்?’ என்று சொல்வது எப்படி? (தி.பா. 11:1அ)
என்ற
கேள்வியை எழுப்புகிறார்.
பிரெஸ்பிட்டேரியன்
போதகராகப் பணியாற்றும் Timothy
Keller என்பவர், இத்திருப்பாடலை மையப்படுத்தி வழங்கிய ஓர்
உரையில் கூறியுள்ள கருத்துக்களை பின்புலமாகக் கொண்டு நம் தேடலைத் தொடர்வோம்.
நெருக்கடிகள்
சூழும்போது, அச்சம் நிறைந்த குரல்கள்
ஓங்கி ஒலிக்கும். நாம் தற்போது சந்தித்துவரும் பெருந்தொற்றின் நெருக்கடி, பலரை, அச்சத்தில் நிறைத்தபோது, 'இதுவே உலகத்தின் முடிவு.
இது ஆண்டவரின் தண்டனை' என்ற பாணியில் குரல்கள் எழுந்ததை நாம் அறிவோம்.
நேர்மையாளரை நோக்கி, 'இருளிலும் அம்புகள் பாய்கின்றன', அவர்களது வாழ்வின் 'அடித்தளங்கள் தகர்க்கப்படுகின்றன' என்று இத்திருப்பாடலில் சொல்லப்பட்டுள்ள
உருவகங்கள், நாமும் அவ்வப்போது உணரும்
அச்சங்கள்தானே!
அடித்தளங்களையே
தகர்க்கும்வண்ணம் நெருக்கடிகள் சூழும்வேளையில், தப்பித்துச்செல்லவேண்டும்
என்ற ஆவல், நாம் அனைவரும் சந்திக்கும் சோதனை. அத்தகைய சோதனை, தாவீதின் நண்பர்கள்
வழியே அவரை அடைந்தபோது, தாவீது, தன் நம்பிக்கையை கடவுள் மீது வைத்து, தன் பதிலை வழங்குகிறார். அவர் வழங்கிய பதில்
இத்திருப்பாடலின் இறுதி நான்கு இறைவாக்கியங்களில் (தி.பா. 11:4-7)
பதிவாகியுள்ளது.
தாவீது வழங்கிய அந்த பதிலை, Timothy Keller அவர்கள், மூன்று எண்ணங்களாக பிரித்து விளக்கம்
அளித்துள்ளார்:
1.
நாம் இவ்வுலகை ஆள்கிறோம் என்ற எண்ணத்தை விட்டு விலகுதல்
2.
நம்மை வந்தடையும் நெருக்கடிகளை நேருக்குநேர் சந்தித்தல்
3.
நெருக்கடி வேளைகளில் இறைவனின் திருமுகத்தைப் பார்த்தல்
என்ற
மூன்றும், நம்பிக்கையாளர்களின் வழிகள் என்பதை, தாவீது, தன் நண்பர்களுக்குக் கூறியுள்ளார்.
இவ்வுலகில்
துன்பங்களும், நெருக்கடிகளும் நிறையும்போது, நம்மில் பலர் கலக்கமடைகிறோம், நம்பிக்கையிழக்கிறோம், ஏன், ஒரு சில வேளைகளில் எரிச்சலும் அடைகிறோம்.
இதற்குக் காரணம், இவ்வுலகை, திறமையாக ஆள்வதற்கு கடவுளால் முடியவில்லை, நம்மிடம் இவ்வுலகம் கொடுக்கப்பட்டிருந்தால், நாம் வேறுவழிகளில் இன்னும் திறமையாக ஆண்டிருப்போம்
என்ற எண்ணத்தால், பல வேளைகளில் கடவுளுக்கு நாம் ஆலோசனைகள் வழங்க தயாராக இருக்கிறோம்.
இத்தகைய
பாணியில் நாம் சிந்திப்பது, குழந்தைத்தனமானது என்பதைக்
கூற, Timothy Keller அவர்கள்
ஓர் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். 'காரை' ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் 'ஸ்டீயரிங்' கருவியை நாம் பார்த்திருக்கிறோம். இந்த 'ஸ்டீயரிங்' கருவியையொத்த ஒரு விளையாட்டு வளையத்தை வைத்திருக்கும்
ஒரு சில குழந்தைகள், காரை ஓட்டிச்செல்லும்
தந்தை, அல்லது, தாய் ஆகியோரின் அருகில் அமர்ந்துகொண்டு, அந்த விளையாட்டு 'ஸ்டீயரிங்' கருவியை தன் கைகளில் வைத்துக்கொண்டு, அப்பா, அல்லது அம்மா ஓட்டுவதுபோல், அக்குழந்தையும், காரை தான் ஓட்டுவதுபோல்
கற்பனை செய்து, ஒட்டிக்கொண்டிருக்கும்.
இவ்வுலகை, இறைவன் வழிநடத்துகிறார் என்பதை மறந்து, அல்லது, மறுத்து, நாம் இவ்வுலகை வழிநடத்துவதுபோல் எண்ணுவது
குழந்தைத்தனமான கற்பனை என்பதைக் கூற, Timothy
Keller அவர்கள் இவ்வுருவகத்தைப்
பயன்படுத்தியுள்ளார்.
இத்தகைய
குழந்தைத்தனமான எண்ணத்திற்கு மாறாக,
தாவீது, தன் நண்பர்களுக்குக் கூறும் பதில் மொழியில், ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில்
இருக்கின்றது (தி.பா. 11:4அ) அதாவது, இவ்வுலகம் இறைவனால் ஆளப்படுகிறது, என்பதை, மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
எத்தகைய
நெருக்கடியிலும் இறைவன் எப்போதும் ஆள்கிறார், வழிநடத்துகிறார் என்பதைச் சுட்டிக்காட்ட, Timothy
Keller அவர்கள், தொடக்க நூலின் 50ம் பிரிவில், யோசேப்பு கூறும் சொற்களை எடுத்துக்காட்டாகக்
கூறியுள்ளார். தொடக்க நூல் 37ம் பிரிவிலிருந்து, 50ம் பிரிவு முடிய கூறப்பட்டுள்ள யோசேப்பின்
வரலாற்றில், யோசேப்பு, தன்
சகோதரர்கள் வழியே அடைந்த அனைத்து கொடுமைகளும் கூறப்பட்டுள்ளன. அந்தக் கொடுமைகளின் வழியே, இறைவன் யோசேப்பை வழிநடத்தியதோடு, அவரது சகோதரர்களின் குடும்பங்களையும் வழிநடத்தினார்
என்பதை நாம் உணர்கிறோம். தனக்கு நிகழ்ந்த கொடுமைகளையெல்லாம் அறிந்த யோசேப்பு, இறுதியில்
தன் சகோதரர்களிடம், “நீங்கள் எனக்குத் தீமை
செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு
காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும்
உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்” என்றார். (தொடக்க நூல்
50:20-21)
எனவே, துன்பமும், நெருக்கடியும் வதைக்கும் வேளைகளில், கடவுள் வழிநடத்துகிறார் என்ற உணர்வில் வாழ்வது
நல்லது என்பது, தாவீது வழங்கும் முதல்
ஆலோசனை.
தாவீது
தன் நண்பர்களுக்குக் கூறும் பதில்மொழியில், நம்மை
வந்தடையும் துன்பங்களை நேருக்குநேர் சந்திக்கவேண்டும் என்பதை, இரண்டாவது கருத்தாக முன்வைக்கிறார், Timothy
Keller. ஒருவர் தனக்கு ஏற்படும்
துன்பங்களை நேருக்கு நேர் சந்திக்காமல், இறைவன்
ஆள்கிறார், அவர் பார்த்துக்கொள்வார்
என்று ஒப்புக்காக, மேலோட்டமாகச் சொல்வது, பாதிப்புக்களை உருவாக்கும் என்பதை ஓர் எச்சரிக்கையாக
தருகிறார் Timothy Keller. இதற்கு, தன் நண்பர் ஒருவர் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வை
எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.
கணவன், மனைவி என்ற இருவரும், போதகப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள்
வாழ்வு நிறைவான மகிழ்வில் சென்றுகொண்டிருந்த வேளையில், சாலை விபத்து ஒன்றில், மனைவி இறந்தார். அந்த இழப்பின் வேதனையை சந்திக்க
மறுத்த கணவன், அந்த இழைப்பைக் குறித்து
பேசுகையில், 'இதில் கடவுளின் திட்டம்
உள்ளது' என்று மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிவந்தார். இவ்வாறு, ஓராண்டு சொல்லிவந்த அவர், பெரும் மன அழுத்தத்தில் ஆழ்ந்தார் என்ற
நிகழ்வை Timothy Keller அவர்கள்
பகிர்ந்துகொள்கிறார்.
இதற்கு
மாறாக, தாவீது, தனக்கு வந்திருக்கும் துன்பங்கள், தன்னை இன்னும் உறுதிப்படுத்த வந்திருக்கும்
சோதனைகள் என்பதைக் கூற, "அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச்
சோதித்தறிகின்றன. ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்" (தி.பா. 11:4ஆ-5) என்று இப்பாடலில் கூறியுள்ளார்.
இதைத்
தொடர்ந்து, பொல்லார் மற்றும் வன்முறையாளர்கள்
இறைவனால் எவ்வாறெல்லாம் தண்டிக்கப்படுவர் என்பதை, உருவக மொழியில் கூறியுள்ளார் தாவீது:
வன்முறையில்
நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும்
சொரியும்படி செய்கின்றார்; பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும். (தி.பா. 11:5ஆ-6)
நம்மைச்
சூழ்ந்து வதைக்கும் நெருக்கடிகளில்,
இறைவனின்
முகத்தைக் காணவேண்டும் என்பது, நேர்மையாளர்களின் மூன்றாவது
வழி என்பதைக் கூறி, தாவீது 11ம் திருப்பாடலை
நிறைவு செய்கிறார்: நீதியுள்ள ஆண்டவர் நேரிய
செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். (தி.பா. 11:7)
No comments:
Post a Comment