Visually
challenged children enjoying the rain
விதையாகும் கதைகள் : அகக்கண்ணால் பார்க்கும்
அற்புதம்
மருத்துவமனை
ஒன்றில், இரு நோயாளிகள், ஒரே அறையில், அடுத்தடுத்த
கட்டில்களில் படுத்திருந்தனர். அவ்விருவரில்,
ஒருவருடைய படுக்கை, சன்னலுக்கருகில் இருந்தது. அவர், ஒவ்வொரு
நாள் மதியமும், மிகவும் சிரமப்பட்டு எழுந்து, தன் படுக்கையில், ஒரு மணி நேரம், அமர்ந்திருப்பார். அந்த ஒரு மணி நேரமும், சன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும்
பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள் என்று, அவரது வர்ணனை ஒரு மணி நேரம் நீடிக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த
அவர், அந்த ஒரு மணி நேரம், கண்களை மூடி, அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும்
வர்ணனை வழியாக, வெளி உலகைப் பார்த்தார்.
இவ்வாறு,
ஆறு நாள்கள் கழிந்தன. அடுத்த நாள் காலை, சன்னலருகே படுத்திருந்தவர் எழவில்லை.
முந்தைய இரவு, தூக்கத்திலேயே, அமைதியாக, அவர் இறந்துபோனார். அடுத்த படுக்கையில்
இருந்தவருக்கு, ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே, அவர் தந்த வர்ணனை வழியே,
தான் ஒரு மணி நேரமாவது
பார்த்து வந்த வெளி உலகம், இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று, இன்னும் அதிக வருத்தம்.
இரு நாட்கள்
சென்றபின், அந்த சன்னலருகே இருந்த படுக்கைக்குத் தன்னை
மாற்றச் சொல்லி, நர்ஸிடம் வேண்டிக்கேட்டார். மாற்றப்பட்டார்.
மதிய நேரம் நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க
உதவுங்களேன்" என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். சன்னல் வழியே
வெளி உலகைப் பார்க்க முயன்றவருக்கு, பெரும் அதிர்ச்சியொன்று காத்திருந்தது.
சன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை, ஒன்றும் இல்லை.
அவருடைய
அதிர்ச்சியைக் கண்ட நர்ஸ், அவரிடம் விவரம் கேட்டார். அப்போது
அவர், எப்படி, அந்தப் படுக்கையில்
இருந்தவர், சன்னல் வழியே பார்த்ததை விவரிப்பார் என்று
விளக்கினார். இதைக்கேட்டபின், அந்த நர்ஸ் சொன்ன செய்தி, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை அந்தப் படுக்கையில்
இருந்தவர், அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க
வாய்ப்பில்லை, ஏனெனில், அவருக்கு
பார்வைத்திறனே கிடையாது என்று, நர்ஸ் சொன்னது, அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கண்பார்வை உள்ள அவர், ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரமாகிலும், ஓர் அழகான உலகைக் காண்பதற்கு, கண் பார்வை
அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.
அகக்கண்
கொண்டு பார்க்கும் அற்புதத்தை வளர்த்துக்கொண்டால், வெற்றுச் சுவரிலும், வெளி உலகம் தெரியும்.
Wheelchair
Patients at the Lourdes
Grotto
ஒத்தமை நற்செய்தி – சிந்தும் சிறு துண்டுகள் போதும் 5
இவ்வாண்டின்
துவக்கத்தில், மராத்திய மொழியில் 'லதா பக்வான் கரே' (Lata Bhagwan Kare)
என்ற திரைப்படம்
வெளியானது. கூலித் தொழிலாளியான 65 வயது நிறைந்த லதா
என்ற பெண்மணி, மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றதைக் கூறும்
திரைப்படம் இது. 2013ம் ஆண்டு, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்
நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடித்தளமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் யாரும் இன்றி, இந்த உண்மை நிகழ்வில் பங்கேற்றவர்களே,
இத்திரைப்படத்திலும் தோன்றுகின்றனர்.
கூலித்தொழில்
செய்து வாழும் லதா, பக்வான் தம்பதியரில், கணவன் பக்வான், நோயுற்று, படுத்த படுக்கையாகிறார். அவரது மருத்துவச்
செலவுக்காக, லதா அவர்கள், பலரிடம் உதவி கேட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. அவ்வேளையில், லதா அவர்களுடன் கூலித்தொழில் செய்யும், கவுரி என்ற பெண்மணி, அருகில் உள்ள நகரில் நடைபெறவிருக்கும்
மாரத்தான் போட்டியைப் பற்றியும், அதில் வெல்பவருக்கு 50,000 ரூபாய்
வழங்கப்படும் என்பதையும் கூறுகிறார்.
தான்
அந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்கப் போவதாக லதா அவர்கள் சொன்னதும், ஊரில் உள்ள அனைவரும் அவரைக் கேலி செய்கின்றனர். இருப்பினும், 65 வயது நிறைந்த லதா அவர்கள், பல்வேறு
கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு, அந்த மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுகிறார்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில், லதா அவர்கள், தான் வழக்கமாக அணிந்துகொள்ளும்
செருப்புடன் பந்தயத்தைத் துவக்கினார். சிறிது தூரத்தில், அவரது செருப்பு அறுந்துவிடவே, அதைத் தூக்கியயெறிந்துவிட்டு, வெற்றுக்காலுடன்
அவர் தன் ஓட்டத்தை நிறைவு செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. “தன் கணவரைக் காக்க, வெற்றுக்காலுடன் ஒடிய பாட்டி” என்ற தலைப்படன் அவரைப்பற்றிய ஒரு செய்தி, பிப்ரவரி 10,
இத்திங்களன்று, பிபிசி வலைத்தளத்தில் வெளியானது.
தான்
மேற்கொண்ட மாரத்தான் பயிற்சிகளைக்குறித்து லதா கரே அவர்கள், இத்திரைப்படத்தில் சொல்லும் ஒரு கருத்து, புதிய ஏற்பாட்டில் நாம் கேட்கும் ஒரு கூற்றை நினைவுறுத்துகிறது.
லதா அவர்கள் தான் வாழ்வில் இழந்தவற்றையும், அடைந்தவற்றையும் பற்றி பேசும்போது, "ஒருவர் எதையாவது பெறவேண்டுமெனில், வேறு எதையாவது இழக்கவேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளார். இக்கூற்று, இயேசு கூறிய இரு ஆழமான கருத்துக்களை நினைவுக்குக் கொணர்கிறது:
மாற்கு
நற்செய்தி 8: 35-37
பின்பு
இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும்
அதை இழந்துவிடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும்
தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்
கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" என்றார்.
யோவான்
நற்செய்தி 12: 24-25
இயேசு
அவர்களைப் பார்த்து, "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால்,
அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில்
தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" என்றார்.
தனக்கென
வாழாமல், பிறருக்கென, குறிப்பாக, கிறிஸ்துவுக்கென வாழ்ந்த பவுல்
அடியார், இழப்பதையும், பெறுவதையும் குறித்து,
இயேசு கூறியதை, தன் வாழ்வின் அனுபவமாகப் பகிர்ந்துகொள்கிறார்:
பிலிப்பியர்
3: 7-8
எனக்கு
ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொருத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்
பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக்
கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள
எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.
இயேசுவைப்பற்றிய
அறிவை அடைவதற்கு, வாழ்வில் இழந்தவற்றைக் குறித்து, இவ்வாறு,
தன் நினைவுகளில் அசைபோடும் திருத்தூதர் பவுல்,
தன் வாழ்வை, ஒரு தொடர் ஓட்டத்திற்கு ஒப்புமைப்படுத்தி பேசுவதையும், இதே பிரிவில்
காண்கிறோம்:
பிலிப்பியர்
3: 12-14
நான்
இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு
என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும்
செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்.
கிறிஸ்து
இயேசுவை தன் வாழ்வின் இறுதிப் பரிசாகப் பெறுவதற்கு, தனது பெயர், புகழ் அனைத்தையும் இழந்து,
வாழ்வென்ற தொடர் ஓட்டத்தை
மேற்கொண்டார், திருத்தூதர் பவுல். மராத்திய பெண், லதா அவர்களும், தன் சொந்த நலனையும், சுகங்களையும் மறந்து, நோயுற்ற கணவரைக் காப்பதற்காக மாரத்தான்
ஓட்டத்தை ஓடியது, பெண்குலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இவரைப்போல, ஆயிரமாயிரம் பெண்கள் தங்கள் வாழ்வை மாரத்தான் ஓட்டம் போல ஒவ்வொருநாளும்
நடத்தி வருகின்றனர் என்பது நாமறிந்த உண்மை.
தாங்கள்
எதிர்கொள்ளும் தடைகள் பலவற்றைத் தாண்டி, நினைத்ததை முடிப்பவர்கள் பெண்கள் என்பதை, நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக, அப்பெண்கள், மனைவியாக, அன்னையாக மாறியபின், அவர்கள் உள்ளங்களில் தோன்றும் உறுதி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், கணவரோ, பிள்ளைகளோ நோயுற்றிருக்கும் வேளையில், பெண்கள், தங்கள் சொந்தத் தேவைகளான உணவு, உறக்கம் அனைத்தையும், தியாகம் செய்வதை நாம் அனைவரும்
கண்கூடாகக் கண்டிருக்கிறோம். அத்துடன், தங்கள் உறவுகளின் உடல்நலத்தை
உறுதிசெய்வதற்காக, பெண்கள், எத்தனையோ
இன்னல்களைத் தாங்கிக்கொண்டு, மருத்துவர்களையும், திருத்தலங்களையும்
தேடிச் செல்வதும், பல்வேறு விரதங்களை மேற்கொள்வதும், உலகெங்கும்
நிகழும் ஓர் அற்புதம்.
அற்புதங்கள்
பல நிகழ்ந்துவரும் திருத்தலமான லூர்து நகரில், பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று, அன்னை மரியாவின் திருநாள் கொண்டாடப்பட்டது.
அந்த அன்னையின் திருத்தலத்தை, தேடிச்செல்லும் பல்லாயிரம் பக்தர்களில், தங்கள் சொந்த நலனுக்காக அன்னை மரியாவை அணுகிச்செல்லும் பக்தர்களைக்
காட்டிலும், தன் உறவினர்கள், குறிப்பாக, தங்கள் குழந்தைகள் நலம் பெறவேண்டும்
என்ற வேண்டுதலுடன் அத்திருத்தலத்தைத் தேடிச்செல்வோர் அதிகமாக உள்ளனர். லூர்து நகர்
மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பல நூறு திருத்தலங்களைத்
தேடிச்செல்லும் மக்கள், குறிப்பாக, பெண்கள், நோயுற்ற தங்கள் குழந்தைகளை, கரங்களில் ஏந்தி, அல்லது, சக்கர நாற்காலிகளில் வைத்து தள்ளியபடி, இத்திருத்தலங்களில் வலம்வருவதை,
நாம் அனைவரும் கண்டிருக்கிறோம்.
லூர்து
நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, நோயாளர் உலக நாளும் சிறப்பிக்கப்படுகிறது.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு பார்கின்சன்ஸ் (Parkinson’s) நோய் இருந்ததென்று 1991ம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டது. அந்நோயில் அவர் அடியெடுத்து வைத்ததும், உலகில் பல்வேறு நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன், தன்னையே
இணைத்துக்கொண்டார். 1992ம் ஆண்டு, அவர், நோயாளர் உலக நாளை உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும்
பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று
இந்த உலக நாள் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு
சிறப்பிக்கப்படும் 28வது நோயாளர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள
செய்திக்கு, இயேசு வழங்கிய ஆறுதலான சொற்கள், தலைப்பாக வழங்கப்பட்டுள்ளன: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28)
ஆயனின்றி
திரியும் ஆடுகளைப்போல் மக்கள் உள்ளனர் என்று பரிவுகொண்டு, அவர்கள் நடுவே, புதுமைகளை ஆற்றியவர், இயேசு. 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரை' தன்னிடம் வரும்படியும், தன்னிடம் இளைப்பாறுதல் பெறும்படியும்
பரிவுடன் அழைக்கும் இயேசு, தன்னைத் தேடிவந்த கானானியப் பெண்ணிடம்
கடுமையான முறையில் நடந்துகொண்டதாக, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் கூறுகின்றனர். இயேசுவுக்கும், கானானியப் பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், பல பாடங்களைச்
சொல்லித்தரக் காத்திருக்கிறது. அடுத்த விவிலியத் தேடலில், இவ்வுரையாடல் சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.
தங்கள் உறவுகளின்
நலம் வேண்டி, லூர்து நகர் திருத்தலத்தையும், இன்னும் உலகின் பல நூறு திருத்தலங்களையும் நாடிச்செல்லும்
பக்தர்களின் வேண்டுதல்கள், அன்னை மரியாவின்
பரிந்துரையால் நிறைவேற்றப்படவேண்டும் என்ற மன்றாட்டுடன் இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்.
No comments:
Post a Comment