18 February, 2020

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – சிந்தும் சிறு துண்டுகள் போதும் 6


Zen Meditation

விதையாகும் கதைகள் : வளைந்து கொடுக்கும் நாணல்

சென் குரு பாங்கெய் அவர்கள் உரை வழங்கும் நேரத்தில், மாணவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியிலிருப்பவர்களும் அவரது உரையைக் கேட்க கூட்டமாய் வருவது வழக்கம். அவர், தன் உரையில், பெரும் வேதாந்த விளக்கங்கள் தந்து, நேரத்தைச் செலவழிக்காமல், தன் இதயத்திலிருந்து வரும் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். எனவே, அவரது உரை அனைவரையும் கவர்ந்தது.
இதைக் கண்ட நிச்சீரன் என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. எனவே, பாங்கெய் அவர்கள் போதித்துக் கொண்டிருந்தபோது, அவருடன் வாதிடும் நோக்கத்தில் அங்கு சென்ற நிச்சீரன் அவர்கள், உரத்தக் குரலில், "ஏய், போதகரே, மனிதர்கள் எல்லாரும் நீர் சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடும், பார்ப்போம்" என்றார். பாங்கெய் அவர்கள், அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்" என்றார்.
நிச்சீரன், அவர் அருகில் சென்றார். பாங்கெய் அவர்கள், புன்முறுவலுடன், "என் இடது பக்கமாய் வாருங்கள்" என்றார். நிச்சீரன் அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப்பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்" என்றார் பாங்கெய். நிச்சீரன் அப்படியே செய்தார். அப்போது, பாங்கெய் அவர்கள், நிச்சீரனிடம், "பார்த்தீர்களா? நான் உங்களிடம் சொன்னவற்றையெல்லாம் செய்தீர்கள். நீங்கள், ஓர் உன்னதமான மனிதர். இப்போது அமருங்கள், நாம் பேசுவோம்" என்றார்.
வெள்ளம் வரும்போது, வளைந்து கொடுக்கும் நாணல், பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரமோ, வேரோடு சாய்ந்து, வெள்ளத்தோடு போய்விடும்.

Jesus and the Canaanite woman

ஒத்தமை நற்செய்தி சிந்தும் சிறு துண்டுகள் போதும் 6

தன் மகளின் நலம் வேண்டி, இயேசுவைச் சந்திக்கச் சென்ற வேற்றினப் பெண்ணின் வேண்டுதலை, அவர் நிறைவேற்றியப் புதுமையில், நம் தேடல் பயணம் இன்று நிறைவு பெறுகிறது. இயேசுவுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைப் பாடங்கள் உள்ளன. நற்செய்தியாளர் மத்தேயு, இந்த உரையாடலை இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
மத்தேயு 15: 25-28
அப்பெண் இயேசுவின் முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார். அவர் மறுமொழியாக, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார். இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

நற்செய்திகளில் காணப்படும் ஒரு சில கடினமானப் பகுதிகளில் இதுவும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. இந்த உரையாடலில், இயேசு பயன்படுத்தியுள்ள சொற்கள், குறிப்பாக, வேற்றினத்தவரை 'நாய்குட்டிகளாக' ருவகப்படுத்தியிருப்பது, இயேசுவை, கடின இதயம் கொண்டவராகக் காட்டுவதால், இப்பகுதியைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. இருப்பினும், இந்த உரையாடலைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஒவ்வொரு கலாச்சாரத்திலும், 'நாய்' அல்லது, 'நாய்க்குட்டி' என்ற சொற்கள், பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாயை, நன்றியுள்ள விலங்காக, நாய்க்குட்டியை, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக பல கலாச்சாரங்கள் கருதுகின்றன. இருப்பினும், நம் பேச்சுவழக்கில், ஒருவரை, 'நாய்' என்ற சொல்லால் அழைக்கும்போது, அச்சொல், கேட்பவரின் உள்ளத்தைக் காயப்படுத்துகிறது.

யூத சமுதாயத்தில், 'நாய்' என்ற சொல், ஒருவரைப் புண்படுத்தும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இஸ்ரயேல் மக்களை, தவறான முறையில் வழிநடத்தும் போலி இறைவாக்கினர்களை, நாய்களாக உருவகித்து இறைவன் பேசுவதை, இறைவாக்கினர் எசாயா நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
எசாயா 56:8,10-11
சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது: அவர்களின் சாமக்காவலர் அனைவரும் குருடர், அறிவற்றவர்; அவர்கள் அனைவரும் குரைக்க இயலா ஊமை நாய்கள்;... தீராப் பசிகொண்ட நாய்கள்; நிறைவு என்பதையே அறியாதவர்; பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்.

தவறானப் படிப்பினைகளை வழங்குவோரைக் குறித்து, திருத்தூதர் பவுல், பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், "உங்கள் நன்மைக்காகவே எழுதுகிறேன். அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்; அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். 'உறுப்பு சிதைப்போரைக்' குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" (பிலிப். 3:1-2) என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.
இயேசு மலைமீது வழங்கிய படிப்பினைகளில், நல்ல எண்ணங்களை, நாய்களுக்கும், பன்றிகளுக்கும் வீசி எறியக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்த, "தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்" (மத். 7:6) என்று கூறியுள்ளார்.

தவறிழைப்போரையும், தவறாக வழிகாட்டுவோரையும் சுட்டிக்காட்ட, இஸ்ரயேல் சமுதாயத்தில், 'நாய்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, நாய்கள், தெருக்களில் சுற்றித்திரியும் அசுத்தமான விலங்குகள் என்று கருதிய யூதர்கள், அதே சொல்லை புறவினத்தாரைக் குறிக்கவும் பயன்படுத்தினர். ஆனால், யூதர்களைச் சுற்றி வாழ்ந்த சுமேரிய, எகிப்திய, கிரேக்க சமுதாயங்களில், நாய், காவல் விலங்காக, வீட்டில் வளர்க்கப்பட்ட விலங்காகக் கருதப்பட்டது.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள இந்த உரையாடலில், இயேசு, 'நாய்' என்று பொருள்படும், 'Kuon' என்ற கிரேக்கச் சொல்லுக்குப் பதில், 'நாய்க்குட்டி' என்று பொருள்படும், 'Kunarion' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். யூதர்களின் இல்லங்களில், நாய்க்குட்டிகள் வளர்க்கப்படுவதில்லை. ஆனால், வேற்றினத்தவரின் இல்லங்களில், நாய்க்குட்டிகள், ஏறத்தாழ, குடும்பத்தில் ஓர் உறுப்பினரைப்போல வளர்க்கப்பட்டன. எனவே, இயேசு 'நாய்க்குட்டிகள்' என்ற சொல்லைப் பயன்படுத்தியது, கானானியப் பெண்ணுக்கு, ஓர் அவமானச் சொல்லாக ஒலிப்பதற்குப் பதில், கூடுதலான உந்துசக்தியைத் தந்திருக்கவேண்டும். 'நாய்க்குட்டிகள்' என்ற சொல்லை, தனக்கு ஏற்றவகையில் பொருள்கொண்டு, கானானியப் பெண் இயேசுவிடம் தன் உரையாடலைத் தொடர்ந்தார்.

நம் மனதைப் புண்படுத்தும் வகையில் ஒருவர் பேசும்போது, ஒரு சில வழிகளில் நம் பதிலிறுப்பை வெளிப்படுத்தலாம். நம்மை 'நாய்' என்றழைத்தவரின் உள்ளத்தை இன்னும் அதிகமாகப் புண்படுத்தும் வண்ணம் நாமும், பதிலுக்கு, வசைச்சொற்களைக் கூறலாம்; அல்லது, நம்மைப் புண்படுத்தியவரை விட்டு, விரைவில் விலகிச் செல்லலாம்; அல்லது, நம்மைப் புண்படுத்தியவர் மீது வழக்கு தொடரலாம்... இத்தகையப் பதிலிறுப்புகள் எதையும் வழங்காமல், அந்த கானானியப் பெண், இயேசு பயன்படுத்திய 'நாய்க்குட்டிகள்' என்ற சொல்லை, தனக்கு ஏற்றவாறு பொருள்கொண்டு, தொடர்ந்து, தன் விண்ணப்பத்தை எழுப்பியது, நமக்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்களை வழங்குகிறது.

இஸ்ரயேல் மக்களுக்கும், புறவினத்தாருக்கும் உள்ள பிரிவுகளை, ஏற்றத் தாழ்வுகளை, இயேசு, வலியுறுத்திக் கூறியபோது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணை உண்டு என்பதை, ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண், நமக்கு நம்பிக்கைப் பாடங்களைக் கற்றுத் தருகிறார். அப்பெண் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் வேற்றினத்தவர், அதுவும் வேற்றினத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது நம்பிக்கையை, கூட்டத்திற்கு முன் புகழ்ந்தாரே, அங்கும் நாம் வாழ்க்கைப் பாடங்களைப் பயிலவேண்டும்.

வேற்றினத்தைச் சேர்ந்த பெண்ணிடம், "அம்மா, உமது நம்பிக்கை பெரிது" என்று, இயேசு கூறுவதைக் கேட்கும்போது, வேற்றினத்தைச் சேர்ந்த நூற்றுவர் தலைவரைக் குறித்து இயேசு கூறிய மற்றொரு நற்சான்றிதழ் நம் நினைவில் நிழலாடுகிறது.
ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்... ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.(லூக்கா 7: 6-7காண்க - மத்தேயு 8:8) என்ற அழகியச் சொற்களில், தன் தகுதியின்மையையும், இயேசுவின் வல்லமையையும் பறைசாற்றினார் நூற்றுவர் தலைவர். அவர் கூறிய சொற்கள், இயேசுவை வியப்பில் ஆழ்த்தின என்பதை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், லூக்காவும் பதிவு செய்துள்ளனர்:
இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, "இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். (லூக்கா 7:9 காண்க - மத்தேயு 8:10)

இயேசு வழங்கிய உரைகளும், ஆற்றிய புதுமைகளும் மக்களை வியப்பில் ஆழ்த்தின என்பதை, நற்செய்திகளில் பல இடங்களில் காண்கிறோம். ஆனால், இயேசுவைப் பொருத்தவரை, அவர் ஆற்றிய புதுமைகளைக் காட்டிலும், அப்புதுமைகள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்த மக்களின் நம்பிக்கை, இயேசுவுக்கு, வியப்பையும், மகிழ்வையும் உருவாக்கியது என்பதையும், நற்செய்திகளில் நாம் வாசிக்கிறோம். வெளிப்புறத்தில் உருவாகும் மாற்றங்களைவிட, உள்புறத்தில், அதாவது, மனதளவில் தோன்றும் மாற்றங்களே, இயேசுவின் கவனத்தை, ஒவ்வொரு புதுமையிலும் ஈர்த்துள்ளன என்பதை புரிந்துகொள்கிறோம்.

நூற்றுவர் தலைவரின் நம்பிக்கைச் சொற்களைக் கேட்டு வியந்த இயேசு, தன் மகளின் நலம் வேண்டி இயேசுவை அணுகிவந்த கானானியப் பெண்ணின் நம்பிக்கையையும் வியந்து பாராட்டுவதைக் காண்கிறோம். இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். (மத்தேயு 15:28)
யூதரல்லாத புறவினத்தவர்களான நூற்றுவர் தலைவர், மற்றும் கானானியப் பெண் ஆகியோரின் நம்பிக்கையைக் கண்டு வியந்த இயேசு, தன் சொந்த மக்களின் நம்பிக்கையின்மையைக் கண்டும் வியந்தார் என்பதை அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். (மாற்கு 6:6) என்று மாற்கு நற்செய்தியில் வாசிக்கிறோம். அதேவண்ணம், "நம்பிக்கை குன்றியவர்களே" (மத். 8:26; 14:31; 16:8) என்று, இயேசு, தம் சீடர்களைக் கடிந்துகொண்ட சொற்களும் நம் மனதில் எதிரொலிக்கின்றன.

கிறிஸ்தவ மறையில் பிறந்து, வளர்ந்துவரும் பலர், நம்பிக்கையில் குன்றியிருப்பதையும், கிறிஸ்துவைப்பற்றி ஓரளவே தெரிந்த வேற்றுமதத்தவர், பேரளவு நம்பிக்கை கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இப்புதுமையில் நாம் சந்திக்கும் கானானியப் பெண்ணைப்போல, வேற்று மதத்தவர் பலர், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு, சவாலாகவும், பாடமாகவும் அமைந்த நேரங்களை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
'நான்-நீ', 'நாங்கள்-நீங்கள்' 'நாம்-அவர்கள்' என்று பிரிவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் வளர்ந்துவரும் இன்றைய சமுதாயத்தில், பிரிவுகளையும், வேலிகளையும் உடைத்தெறிந்து, இறைவன் மீது நம்பிக்கை கொள்ள இயலும் என்பதைச் சொல்லித்தரும் கானானியப் பெண், சமுதாயத்தில் கட்டப்பட்டு வரும் பிரிவுச் சுவர்கள், இறைவனின் கருணையால் இடிந்துவிழும் என்பதையும் நமக்குச் சொல்லித்தருகிறார்.


ஒத்தமை நற்செய்திகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள புதுமைகளை, இவ்வாண்டின் துவக்கத்தில் இருந்து, நம் விவிலியத் தேடலில் சிந்தித்து வருகிறோம். வருகிற புதன், பிப்ரவரி 26ம் தேதி, நாம் சிறப்பிக்கவிருக்கும் திருநீற்றுப் புதனுடன், தவக்காலத்தைத் துவக்குகிறோம். இந்தத் தவக்காலத்தின்போது, புதுமைகள் தொடரிலிருந்து, நம் கவனத்தை, வேறொரு தொடர் மீது திருப்புவோம். இறைமகன் இயேசு, கல்வாரியில், சிலுவையில் தொங்கிய வேளையில் அவர் கூறிய 7 புனிதமான வாக்கியங்களில் அடுத்த 7 வாரங்கள் நாம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.


No comments:

Post a Comment