விதையாகும் கதைகள் : அலைபாயும்
மனதை அமைதிப்படுத்த...
புத்தரின் சீடர்களில் ஒருவர், அவரை அணுகி, "ஐயா, நான் என்னதான் முயன்றாலும், என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆனால், நீங்களோ மிக எளிதாக மனதைக்
கட்டுப்படுத்துவதைக் காணமுடிகிறது. என்னால், பிறரைப்பற்றி குறைகூறாமல் இருக்கமுடியவில்லை, ஆனால், நீங்கள் யாரையும் குறைகூறி நான் பார்த்ததில்லை.
உங்களுக்கும், எனக்கும், ஏன் இந்த வேறுபாடு?" என்று
கேட்டார்.
புத்தர் அவரை ஆழ்ந்து நோக்கி, "நீ கேட்ட கேள்வி நல்ல கேள்விதான். அதற்கு
நான் பதில் சொல்வதற்கு முன், ஒன்றை உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில்
நீ இறந்துவிடுவாய்" என்று கூறினார்.
சற்றும் எதிர்பாராத வேளையில், புத்தர்
இவ்வாறு சொன்னதைக்கேட்டு, வேதனையும், அதிர்ச்சியும் அடைந்த சீடர், தன் வீட்டிற்குச் செல்ல, புத்தரிடம் உத்தரவு கேட்டார். புத்தர் அவரிடம், "இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளனவே. ஏன் இந்த
அவசரம்? நாம் தொடர்ந்து பேசுவோம்"
என்று கூறினார். "இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது? நான் வீட்டுக்குச் சென்று இறப்பதே மேல்"
என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் புறப்பட்டார்
சீடர்.
வீட்டிலிருந்த அனைவரிடமும் தான் 24 மணி நேரங்களில்
இறக்கப்போவதாகச் சொன்னதும், அனைவரும் அழுது புலம்பினர்.
சீடர், ஓர் அறைக்குள் சென்று, படுக்கையில் படுத்துக்கொண்டு தொடர்ந்து அழுதார்.
அந்த நாள் முடிய ஒருமணி நேரம் இருந்தபோது, புத்தர், சீடரது வீட்டுக்குள் சென்றார்.
அங்கு படுத்திருந்த சீடரிடம்,
"இன்னும்
ஒரு மணி நேரம் உள்ளது. நாம் பேசுவோமே" என்று கூற, சீடர் அவரிடம், "அமைதியாக என்னை சாகவிடுங்கள். இந்த நேரத்தில்
என்ன பேசவேண்டியுள்ளது?" என்று சலிப்புடன் கூறினார்.
புத்தர் அவரிடம், "சரி, நீ ஒன்றும் பேசவேண்டாம். நான் கேட்கும் ஒரு
சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்" என்று கூறியபின், "இந்த 24 மணி நேரமும் உன் மனம் கட்டுப்பாடின்றி
அலைபாய்ந்ததா?" என்று கேட்டார்.
"அது எப்படி முடியும்? சாவைத்தவிர என் மனம் வேறு
எதையும் சிந்திக்கவில்லை" என்று சொன்னார், சீடர்.
"இந்த நாள் முழுவதும் நீ யாரையாவது
குறை கூறினாயா? இன்று முழுவதும், பொய் சொன்னாயா? திருடினாயா?" என்று புத்தர் அடுத்தடுத்து கேள்விகளைக்
கேட்டதும், "இல்லவே இல்லை. சாவு மட்டுமே
என் சிந்தனையில் இருந்தது" என்று சீடர் கூறினார்.
புத்தர் தன் சீடரிடம், "இன்று காலை நீ கேட்ட கேள்விக்குரிய விடையை
இப்போது கண்டுபிடித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்" என்று சொன்னதும், சீடர் அவரை கேள்விக்குறியுடன் நோக்கினார்.
புத்தர் தொடர்ந்து பேசினார்: "இன்று
இறப்போமா, நாளை இறப்போமா என்று எனக்கும்
தெரியாது, உனக்கும் தெரியாது. ஆனால், வாழ்வின் இறுதியில் அனைவரும் இறப்போம் என்பது, உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அந்த உண்மையை நீ கடந்த
24 மணி நேரங்கள் சிந்தித்ததால், வேறு எந்த தவறையும் உன்னால்
செய்யமுடியவில்லை. நீ இந்த 24 மணி நேரங்கள் சிந்தித்த இந்த உண்மையை, நான் கடந்த 24 ஆண்டுகள் சிந்தித்துவருகிறேன்.
அதுதான், உனக்கும், எனக்கும் உள்ள வேறுபாடு" என்றார்.
Jesus in the House of
the Pharisee - James Tissot
https://commons.wikimedia.orgலூக்கா நற்செய்தி – நீர்க்கோவை நோய்
நீங்கியது 1
ஏனைய
மூன்று நற்செய்திகளில் பதிவாகாமல், லூக்கா நற்செய்தியில்
மட்டுமே பதிவாகியுள்ள தனித்துவமிக்க 5 புதுமைகளில், 4வது புதுமை, நீர்க்கோவை நோயுற்ற ஒருவரை இயேசு குணமாக்கியப்
புதுமை. லூக்கா நற்செய்தி 14ம் பிரிவில் பதிவாகியுள்ள இப்புதுமையில், இன்று, நம் தேடலைத்
துவக்குகிறோம். ஏனைய சில புதுமைகளைப்போல, இப்புதுமையும்,
ஓய்வுநாள் ஒன்றில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டுள்ளது.
லூக்கா
நற்செய்தியில் பதிவாகியுள்ள 20 புதுமைகளில், நோய்களைக்
குணமாக்குதல், அல்லது தீய ஆவிகளை விரட்டுதல்
தொடர்பான 15 புதுமைகள் கூறப்பட்டுள்ளன. இந்த 15 புதுமைகளில், 6 புதுமைகளை, இயேசு, ஓய்வுநாளில் செய்தார் என்று நற்செய்தியாளர்
லூக்கா பதிவுசெய்துள்ளார். இந்த 6 ஓய்வுநாள் புதுமைகளில், 3 புதுமைகள், தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்ததாகக் கூறும்
லூக்கா, இன்று நாம் தேடலைத் துவக்கியுள்ள புதுமை, பரிசேயர் தலைவர் ஒருவரின்
இல்லத்தில், இயேசு விருந்துக்கு சென்றிருந்த வேளையில் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார். இயேசு, விருந்துகளில் கலந்துகொண்ட நிகழ்வுகளை, அவரது மனிதத்தன்மையை வெளிப்படுத்தும்
நிகழ்வுகளாக எண்ணிப்பார்க்கலாம்.
நான்கு
நற்செய்திகளும், இயேசுவின் பணிவாழ்வில்
நிகழ்ந்த போதனைகளையும், புதுமைகளையும்
தொகுத்துவழங்குவதை, தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவரது ஒவ்வொருநாள் வாழ்வில் ஏற்பட்ட சாதாரண
நிகழ்வுகளையும் ஆங்காங்கே பதிவுசெய்துள்ளன. அந்த சாதாரண நிகழ்வுகள் வழியே,
உன்னதமான உண்மைகளை இயேசு சொல்லித்தந்தார் என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக, குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்த நிகழ்வை,
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் காண்கிறோம்:
மத்தேயு
19:13-15
சிறு
பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களை சிலர் அவரிடம்
கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம்
வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே
உரியது” என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார். (காண்க மாற்கு
10:13-16, லூக்கா 18:15-17) ஒத்தமை
நற்செய்திகளில், இந்நிகழ்வு, ஒரே ஒருமுறை மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளுடன்
இயேசு இன்னும் பலமுறை தன் நேரத்தை கழித்திருப்பார், அவர்களுக்கு கதைகள் பலவும் சொல்லியிருப்பார்
என்று நாம் நிச்சயம் கற்பனை செய்துபார்க்கலாம்.
விருந்து
நிகழ்வுகளில் இயேசு கலந்துகொண்டதை, நான்கு நற்செய்திகளிலும்
நாம் காண்கிறோம். இவற்றில், கானா திருமண விருந்து
(யோவான் 2:1-10), மற்றும், பெத்தானியாவில், மார்த்தா, மரியா மற்றும் இலாசர் என்ற மூன்று நண்பர்களின்
இல்லத்தில் நிகழ்ந்த விருந்து (லூக்கா 10:38–42) ஆகியவற்றில், உறவினர், நண்பர்களோடு இயேசு மனமகிழ்வும், நிறைவும் அடைந்திருப்பார். இவ்விரு நிகழ்வுகளும், ஒருமுறை மட்டுமே பதிவாகியிருந்தாலும், இயேசு, இன்னும் பல திருமண விருந்துகளிலும், நண்பர்களின் இல்ல விருந்துகளிலும் கலந்துகொண்டிருப்பார்
என்று நாம் உறுதியாக நம்பலாம்.
கானா
திருமண விருந்தில், தண்ணீரை இரசமாக மாற்றிய
முதல் அரும் அடையாளத்தைச் செய்த இயேசு,
வேறு
இரு இல்லங்களில் நிகழ்ந்த விருந்துகளில், மிகப்பெரும் மாற்றங்களைக் கொணர்ந்தார் என்பதை,
நாம் நற்செய்திகளில் காண்கிறோம். வரிதண்டுபவரான மத்தேயுவின் இல்லத்திலும் (மத்தேயு
9:9-10), வரிதண்டுவோரின் தலைவரான
சக்கேயுவின் இல்லத்திலும் (லூக்கா 19:1-10) இயேசு உணவருந்தச் சென்றார். அவ்வாறு அவர்
சென்றவேளையில், "இவர் பாவிகளோடு உணவருந்துகிறாரே" என்று மற்றவர்கள் குறை
கூறினாலும், இயேசு, இந்த விருந்து நிகழ்வுகள் வழியே, மத்தேயு, சக்கேயு ஆகிய இருவரின் வாழ்விலும், மிகப்பெரும்
மாற்றங்களைக் கொணர்ந்தார் என்பதை நாம் அறிவோம்.
நட்பு, உறவு என்ற வட்டங்களைத் தாண்டி, இயேசு, அறிமுகமில்லாதவர்கள் இல்லங்களிலும் விருந்துண்ண
சென்றார் என்பதை நற்செய்திகளில் ஆங்காங்கே காண்கிறோம். அறிமுகம் அதிகமில்லாத பரிசேயர்கள்
விடுத்த அழைப்பை ஏற்று, அவர்கள் இல்லங்களுக்கு
இயேசு விருந்துண்ண சென்றதை, நற்செய்தியாளர் லூக்கா
இருமுறை குறிப்பிட்டுள்ளார். இவ்விரு விருந்துகளிலும், இறுக்கமானச் சூழல்கள் உருவானதையும், அங்கு நிலவிய தவறான எண்ண ஓட்டங்களை இயேசு
திருத்தியதையும், நாம் காண்கிறோம்.
பரிசேயர்
ஒருவரது இல்லத்தில் இயேசு விருந்துக்குச் சென்றிருந்த வேளையில், ஊரறிந்த பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக அந்த இல்லத்தில் நுழைந்து, "இயேசுவுடைய காலடிகளைத்
தம் கண்ணீரால் நனைத்து,
தம்
கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு
அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்." (லூக்கா 7:38) என்று, லூக்கா நற்செய்தி
7ம் பிரிவில், (லூக்கா 7:36-50)
வாசிக்கிறோம்.
இயேசுவை
அழைத்த அந்தப் பரிசேயருக்கு "சீமோன்" என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழையாமல் நுழைந்த பெண்ணுக்கோ, பெயரேதும் இல்லை. அவர் ஒரு "பாவி" என்ற முத்திரைமட்டும்
அவர்மேல் குத்தப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணைக் கண்டதும், விருந்துக்கு வந்திருந்த
பலருக்கு, அதிர்ச்சியும், கோபமும்
எழுந்திருக்கும். காரணம்... அழையாமல் நுழைந்த அந்தப் 'பாவி', பரிசேயர் ஒருவரது பரிசுத்தமான வீட்டையும், அங்கு வந்திருந்த அனைவரையும் தீட்டுப்படுத்திவிட்டார்.
இயேசு
மட்டும் அங்கில்லையெனில், அந்தப் பெண்ணைப் பலவந்தமாய்
அந்த வீட்டை விட்டு வெளியேற்றி, கல்லெறிந்து அவரைக் கொன்றிருப்பர்,
அங்கிருந்தோர்...
“இயேசு மட்டும் அங்கில்லையெனில்...” என்பது சிந்திக்கத் தூண்டும்
சொற்றொடர்.
இயேசு
அங்கில்லையெனில், அந்தப் பெண்ணும் அங்கு
சென்றிருக்கமாட்டாரே. இயேசு இருந்த செய்தி கேட்டதால்தானே அவர் அங்கு சென்றார். அதுவும், அனுமதியின்றி, அழைப்பின்றி அங்கு சென்றார். இயேசுவிடம்
செல்ல, இயேசுவின் பாதங்களைச்
சேர, அனுமதி எதற்கு?
இயேசுவின்
பாதங்களைச் சேர்ந்த பெண், அந்தப் பாதங்களைக் கண்ணீரால்
கழுவி, தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமண தைலத்தைப் பூசினார். அந்த விலையுயர்ந்த
தைலத்தின் நறுமணம், அந்த வீட்டை நிரப்பியபோது, அதுவரை அதிர்ச்சியில், கோபத்தில் உறைந்திருந்த அந்தக் கூட்டம் விழித்தெழுந்தது.
கண்டனக்
கனல் தெறிக்கும் அவர்கள் எண்ணங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், இயேசுவின் பாதங்களைத் தேடிவந்த பெண், அந்தப் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமணத் தைலத்தைப் பூசினார். இதைக்கண்ட பரிசேயர்கள், கண்டனத் தீர்ப்புக்களை எழுத ஆரம்பித்தனர்.
அவர்கள் எழுதிய தீர்ப்புகள், அந்தப் பெண்ணுக்கு அல்ல... அவருக்கு ஏற்கனவே அவர்கள் தீர்ப்பு
வழங்கிவிட்டனர். இப்போது, அவர்கள் தீர்ப்பு, கண்டனம் அனைத்தும், இயேசுவை நோக்கி இருந்தன.
தன்னைத் தொடுவது ஒரு பாவி என்று உணராத இயேசு, எப்படி ஓர் இறைவாக்கினராக இருக்கமுடியும்
என்ற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவர், ஓர் இறைவாக்கினர் அல்ல என்ற தீர்ப்பும் எழுதப்பட்டது.
இயேசுவைப்
பொருத்தவரை, அந்தப் பரிசேயர்களோ, அவர்கள் தன்மீது சுமத்திக் கொண்டிருந்த தவறான
தீர்ப்புக்களோ முக்கியமல்ல. அவரது காலடியில் இருந்த அந்தப் பெண்தான் முக்கியம்.
"இவள்
ஒரு பாவிப் பெண்" என்று ஊரெல்லாம் சொன்னபோது... இயேசு அவரை "பாவம், அந்தப் பெண்" என்று சொன்னார். உலகம்,
அவரை, "பாவி" என்று முத்திரை குத்தி, குத்தி, அப்பெண், தலைநிமிர முடியாமல், தாழ்த்தப்பட்டிருந்தார். அன்று, முதன்முறையாக, இயேசுவின் காலடிகளில், தன்னையே மனதாரத் தாழ்த்திக்கொண்டார்.
அப்பெண்ணை இயேசு தூக்கி நிறுத்தினார். அதுவும், தங்களையே உயர்ந்தோர் என்று எண்ணிக்கொண்டிருந்த
அந்த பரிசேயர் கூட்டத்திற்குமுன், அப்பெண்ணை இயேசு உயர்த்தினார்.
சீமோன்
என்ற பரிசேயர் வீட்டில் நிகழ்ந்த அந்த விருந்து, பல வழிகளில் ஓர் இறுக்கமானச் சூழலை உருவாக்கியது.
இதையொத்த மற்றொரு விருந்தை லூக்கா நற்செய்தி 14ம் பிரிவில் நாம் காண்கிறோம். இந்த விருந்து
நிகழ்வின் அறிமுக வரிகள் இதோ:
ஓய்வுநாள்
ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர்
அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.
(லூக்கா 14: 1-2)
தன்
இல்லத்தில் விருந்துண்ண இயேசுவுக்கு அழைப்புவிடுத்த பரிசேயர் தலைவருக்கு பல்வேறு நோக்கங்கள்
இருந்திருக்கலாம். அதேபோல், அங்கு வந்திருந்தோர் உள்ளத்திலும்
பல்வேறு நோக்கங்கள் இருந்திருக்கலாம். அங்கு நிலவியச் சூழல் இயேசுவுக்கு எதிராக இருந்தது
என்பதை, "அங்கிருந்தோர் அவரைக்
கூர்ந்து கவனித்தனர்" என்ற சொற்களில் நற்செய்தியாளர் லூக்கா சித்திரித்துள்ளார்.
அத்துடன், நீர்க்கோவை நோயுற்ற ஒருவரும்
அங்கிருந்தது, அச்சூழலை, இன்னும் சிறிது
கடினமாக மாற்றியது. பரிசேயர் தலைவர் இல்லத்தில் நிலவிய கடினமான அச்சூழலை, இன்னும் சிறிது
ஆழமாக, அடுத்த வாரத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment