29 September, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – நீர்க்கோவை நோய் நீங்கியது 2

 
Open Bible with reading glasses
 
விதையாகும் கதைகள் : அவரவர் பார்வையில் விவிலிய விளக்கம்
 
கார் ஓட்டுவதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த இளையமகன், முதல்முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று, வீட்டுக்கு வந்தார். அவருடைய அப்பா, இறைபக்தியுள்ள விவிலியப்போதகர். மகன், அப்பாவிடம் சென்று, வீட்டிலுள்ள காரை தான் ஓட்ட விழைவதாகக் கூறியபோது, அப்பா அவரிடம், "சரி மகனே, நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நீ உன் பாடங்களில் இன்னும் அதிக மதிப்பெண்கள் வாங்கு; தினமும் விவிலியத்தை வாசி; உன் தலைமுடியை வெட்டிவிடு. அதன்பின், கார் ஓட்ட உன்னை அனுமதிக்கிறேன்" என்று கூறினார்.

ஒரு மாதம் சென்று, மகன் திரும்பிவந்தபோது, அப்பா அவரிடம், "மகனே, நீ அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாய்; தினமும் விவிலியம் வாசிக்கிறாய்; மிக்க மகிழ்ச்சி. ஆனால், உன் தலைமுடியை நீ இன்னும் வெட்டவில்லையே" என்று கூறினார்.
உடனே, மகன் அப்பாவிடம், "அப்பா, நான் விவிலியத்தை வாசித்தபோது, ஒன்றை கண்டுபிடித்தேன். விவிலியத்தில், சிம்சோன் நீளமான முடி வைத்திருந்தார். நோவா, மோசே, ஏன்... இயேசுவும் நீளமான முடி வைத்திருந்தனரே!" என்று பெருமையாகக் கூறினார். அப்பா மகனிடம், "நீ சொல்வது சரிதான், மகனே. ஆனால், நீ சொன்ன இவர்கள் அனைவரும், போகும் இடத்திற்கெல்லாம் நடந்தே சென்றனர்!" என்று பதிலளித்தார்.

விவிலியத்தின் பக்கங்களில், அவரவர், தங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பது, நமக்கு முன் இருக்கும் பெரும் ஆசீர், அதே நேரம்... மிகப்பெரிய சவாலும் கூட!

Wall poster – Jesus Christ is the guest

லூக்கா நற்செய்தி நீர்க்கோவை நோய் நீங்கியது 2
 
பெரும்பாலான கிறிஸ்தவ இல்லங்களில், விவிலிய வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட படங்கள், சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும். இவற்றில், ஒரு சில படங்கள், விவிலியத்தில் காணப்படாத, ஆனால், அதே நேரம், நம் உள்ளத்தின் விருப்பங்களை வெளிப்படுத்தும் வாக்கியங்களாகவும் இருக்கும். அத்தகைய வாக்கியங்களில், ஒன்று இது: "இயேசு கிறிஸ்து இந்த இல்லத்தின் தலைவர், ஒவ்வொரு உணவு வேளையிலும், கண்களுக்குத் தெரியாமல் பங்கேற்கும் விருந்தினர், இங்கு பேசப்படும் உரையாடல்களுக்கு கவனமாகச் செவிமடுப்பவர்" (“Jesus Christ is the head of this house, the silent listener to every conversation, the unseen guest of every meal”)
இயேசுவை தங்கள் வீட்டின் தலைவனாக, விருந்தினராக அறிக்கையிடும் இச்சொற்களை ஏற்று, உண்மையிலேயே இயேசு அந்த இல்லத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். இயேசு ஒரு விருந்தினராக வருவது, பரபரப்பை உருவாக்கலாம், ஆனால், அதேவேளையில், அவரது வருகை, அந்த இல்லத்தில், மாற்றங்களையும் கொணரும் என்றும், அவர் கொணரவிழையும் பல மாற்றங்கள் சவால்களாக இருக்கும் என்பதையும் உணர்வது நல்லது.

பரிசேயர் தலைவர் ஒருவர், இயேசுவை, தன் இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தபோது, அங்கு நிகழ்ந்த ஒரு புதுமையில், நம் தேடலை, சென்றவாரம் ஆரம்பித்தோம். பரிசேயர்களின் இல்லங்களில் இயேசு உணவருந்தியதை, நற்செய்தியாளர் லூக்கா மும்முறை குறிப்பிட்டுள்ளார். 'சீமோன்' என்றழைக்கப்பட்ட பரிசேயரின் இல்லத்தில் இயேசு விருந்துண்ணச் சென்றார் என்பதை லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் காண்கிறோம். அங்கு, பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக வந்து, இயேசுவின் காலடிகளைக் கழுவியது, பிரச்னையை உருவாக்கியது (லூக்கா 7:36-50). லூக்கா நற்செய்தி, 11ம் பிரிவில், வேறொரு பரிசேயர் இல்லத்திற்கு இயேசு உணவருந்தச் சென்ற நிகழ்வு கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்விலும், இயேசு, உணவருந்துவதற்குமுன், கை கழுவாதது, பிரச்சனையானது (லூக்கா 11:37-41). மூன்றாம் முறையாக, இயேசு பரிசேயர் ஒருவரது வீட்டில் விருந்துண்ணச் சென்றதை நாம் தற்போது சிந்தித்துவருகிறோம். இங்கும், இயேசு பிரச்சனைகளைச் சந்திக்கிறார். ஏனைய இரு நிகழ்வுகள், எந்த நாளில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடப்படவில்லை. 14ம் பிரிவில் இடம்பெறும் விருந்து, ஓய்வுநாளில் நிகழ்ந்ததென தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒய்வுநாள் ஒன்றில், இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார்... (லூக்கா 14:1) என்ற சொற்கள், இப்புதுமை நிகழ்ந்த சூழலை அறிமுகம் செய்கின்றன. இது சாதாரண விருந்து அல்ல; இயேசுவைச் சோதிக்கக் கொடுக்கப்பட்ட ஒரு விருந்து. தொடர்ந்துவரும் அடுத்த வரி, அந்த விருந்தின் உள் நோக்கத்தை நமக்குப் புரிய வைக்கின்றது. "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்." (லூக்கா 14:1)

யூத விருந்து முறைகளில் பல சடங்குகள் உண்டு. வீட்டிற்குள் நுழைவதற்குமுன் தங்களையே சுத்தமாக்கும் சடங்கு. உள்ளே சென்றதும் ஒருவர் ஒருவரை வாழ்த்தும் சடங்கு. விருந்துக்கு முன், விருந்து நேரத்தில், விருந்து முடிந்ததும்... என்று, ஒவ்வொரு நேரத்திற்கும் குறிக்கப்பட்டச் சடங்குகள் பல இருந்தன. இந்த விருந்து நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதால், சடங்குகள் கூடுதலாக இருந்திருக்கவேண்டும்.
இயேசு இச்சடங்குகளையெல்லாம் அறிந்திருந்தாரா என்று சரிவரத் தெரியவில்லை. இயேசு பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில், ஓர் எளிய குடும்பத்தில். முறையான கல்வி பெற்றாரா? அதுவும் தெரியாது. படித்தவர்களுடன் பழகினாரா? அதுவும் சந்தேகம்தான். படிக்காதவர்கள், பாமரர்கள், பாவிகள் என்று மேட்டுக்குடியினரால் ஒதுக்கப்பட்டவர்களே, இயேசுவுடன் நெருங்கிப்பழகியவர்கள். அத்துடன், மேட்டுக்குடியினர், குறிப்பாக, பரிசேயர்கள் பின்பற்றிய அர்த்தமற்ற சாத்திர சம்பிரதாயங்கள், இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்ததே. இப்படி சுதந்திரமாக வளர்ந்தவரை, மற்றவர்களை வளர்க்க நினைத்தவரை,  பரிசேயர் தலைவர், ஒரு பரிசோதனை விருந்துக்கு அழைத்து, அவரும், அவரது நண்பர்களும் இயேசுவை, கூர்ந்து கவனித்தனர்.

சூழ்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது இயேசுவுக்குப் புதிய அனுபவம் இல்லை. அவர் சென்ற இடங்களிலெல்லாம் இது நடந்தது. சாதாரண, எளிய மக்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்தனர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்க, அவரது ஒவ்வொரு செயலையும் கண்டு பிரமிக்க, பின்பற்ற, மக்கள் எப்போதும் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
அந்த எளிய மக்கள் கூர்ந்து கவனித்ததற்கும், இப்போது இந்த பரிசேயர் வீட்டில் இயேசுவைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடு, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு. எளியோர் கவனித்தது, இயேசுவுக்கு இதமாக, மகிழ்வாக இருந்திருக்கும். பரிசேயர் கும்பல் அவரைக் கவனித்தது இயேசுவுக்குச் சங்கடமாக இருந்திருக்கும்.

இத்தகைய ஒரு சூழலில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம் என்று சிந்திக்கலாம். அம்புகளாய் நம்மைத் துளைக்கும் பார்வைகள் சுற்றிலும் இருந்தால், அந்த இடத்தில் ஓடி ஒளிய இடம் தேடுவோம். முடிந்தவரை அச்சூழலில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதிலேயே நம் கவனம் இருக்கும். எதையும் சொல்வதற்கு, செய்வதற்குத் தயங்குவோம். எவ்வளவு விரைவில் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவில் வெளியேறுவோம்.
இயேசு நம்மைப்போன்றவர் இல்லை. அசைக்கமுடியாதத் துணிவு அவரிடம் இருந்தது. இறைதந்தை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, உண்மை மீது அவருக்கிருந்த பற்று ஆகியவற்றின் வெளிப்பாடாக வந்த துணிவு அது.
எனவேதான், அந்தப் பரிசேயர் வீட்டில், சூழ இருந்தவர்கள் அனைவரும் தன்னைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், முகமூடிகள் எதையும் அணியாமல், தன் இயல்பு நிலையுடன் இயேசு செயல்பட்டார். தன் மனதில் எழுந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறினார்.

அந்த இறுக்கமானச் சூழலில், "அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்" (லூக்கா 14:2) என்ற சொற்கள் வழியே, நற்செய்தியாளர் லூக்கா, கூடுதல் பிரச்சனையொன்றை அறிமுகப்படுத்துகிறார். இயேசுவின்முன் நோயுற்றவர் ஒருவர் இருந்தார் என்று கூறியிருப்பது, நமக்கு மற்றொரு புதுமையை நினைவுபடுத்துகிறது.

கை சூம்பிய ஒருவருக்கு இயேசு குணமளிக்கும் அப்புதுமை, ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் கூறப்பட்டுள்ளது (மத். 12:9-14; மாற். 3:1-6; லூக். 6:6-11). ஓய்வுநாளன்று, தொழுகைக்கூடத்தில் அப்புதுமை நிகழ்ந்ததென்பதை நாம் அறிவோம். கை சூம்பியவர் ஏன் தொழுகைக்கூடத்திற்கு வந்திருந்தார் என்ற கேள்விக்கு, பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருசில விரிவுரையாளர்கள், அந்நோயாளியை, மறைநூல் அறிஞரும், பரிசேயரும், தொழுகைக்கூடத்திற்கு அழைத்து வந்திருந்தனர் என்று கூறியுள்ளனர்.
இந்தக் கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது, மாற்கு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள சொற்கள்: சிலர் அதாவது, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் - இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். என்று, நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும், (மாற்கு 3:2; லூக்கா 6:7) கூறியுள்ளனர். மத்தேயு, இன்னும் ஒருபடி மேலேச்சென்று, அவர்கள் இயேசுவிடம் நேரடியாகக் கேள்வியை எழுப்பினர் என்பதை, சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், "ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று கேட்டனர் (மத்தேயு 12:10) என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் தற்போது சந்தித்துவரும் புதுமையும், ஓய்வுநாளில், பரிசேயர் தலைவர் வீட்டில் நிகழ்ந்ததால், நீர்க்கோவை நோயுற்ற மனிதர், தானாக அங்கு வந்தார் என்று எண்ணிப்பார்ப்பதைவிட, அவரை, ஒரு சில பரிசேயர்கள் அங்கு அழைத்து வந்திருக்கலாம் என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
அவர் தானாக வந்திருந்தாலும் சரி, பரிசேயர்களால் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் சரி, இயேசு தன் குணமளிக்கும் பணியிலிருந்து பின்வாங்கவில்லை. அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு விவரித்துள்ளார்:
லூக்கா 14:2-4
அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்தில் கைசூம்பிய ஒருவரை நலமாக்கிய புதுமையில், நோயுற்ற அம்மனிதரை தொழுகைக்கூடத்தின் நடுவே நிறுத்தி, உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார் (லூக்கா 6:9). என்றும், அவர்களிடமிருந்து பதில் ஏதும் வராத நிலையில், அவர் கைசூம்பியவரை குணமாக்கினார் என்றும் லூக்கா நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதுமையிலும், இயேசுவின் கேள்விக்கு மௌனமே பதிலாக இருந்தது. இம்முறை, அவர் நோயுற்ற மனிதருக்கு நலமளித்து, அவரை அனுப்பிவிட்டு, பின்னர் ஏனையோருக்கு தன் அறிவுரைகளை வழங்குவதைக் காண்கிறோம். நோயுற்ற மனிதர் மீது இயேசு கொண்டிருந்த பரிவை அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார் என்ற சொற்கள் உணர்த்துகின்றன.

ஒரு சில மருத்துவமனைகளில், குறிப்பாக, அந்த மருத்துவமனை ஒரு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்திருக்கும் சூழலில், அந்த மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள், மாணவர்களுக்கு காட்சிப்பொருளாக மாறுவதைக் காணலாம். நோயுற்ற மனிதருக்கு மருத்துவச் சிகிச்சைகள் செய்யும் மருத்துவர், தன்னுடன் மாணவர்களை அழைத்துவந்து, அந்த நோயாளியை அவர்களிடம் காட்டி, தனக்குத் தெரிந்த பாடங்களையெல்லாம் அவர்களிடம் கூறுவார். பொதுவாக, காட்சிப்பொருளாகப் பயன்படுத்தப்படும் நோயாளிகள், வறியோராகவே இருப்பர். தான் காட்சிப்பொருளாக மாறுகிறோம் என்ற உணர்வு, அந்த நோயாளியை எவ்வளவுதூரம் பாதிக்கும் என்பதையெல்லாம் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இந்த வகுப்புக்கள் நடைபெறும்.

நீர்க்கோவை நோயுள்ள மனிதரைக் கண்டதும், இயேசு, அவரை, அந்த விருந்து நிகழ்வில் காட்சிப்பொருளாகப் பயன்படுத்தி, தன் ஓய்வுநாள் கேள்வியைத் தொடுக்காமல், பொதுப்படையாக, "ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?" என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, இயேசு அவரைத் தொட்டு குணமாக்கி, அனுப்பிவைத்தார். ஓய்வுநாளை மீறுதல், நோயுற்றோரை தொடுதல் என்ற இரு செயல்பாடுகளின் வழியே, சட்டங்களைவிட, மனிதர்கள் முக்கியம் என்பதை இயேசு மீண்டும் ஒருமுறை இந்தப் புதுமை வழியே நிலைநாட்டினார்.

No comments:

Post a Comment