Inner peace
விதையாகும் கதைகள் : உண்மை அமைதி, உள்ளிருந்து...
'அமைதி' என்ற கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த ஓவியத்திற்கு
பரிசு வழங்கப்படும் என்று அரசர் அறிவித்திருந்தார். நாட்டிலிருந்த பல ஓவியர்கள் தங்கள்
திறமைகளையெல்லாம் வெளிப்படுத்தி, ஓவியங்களைத் தீட்டி, அரண்மனைக்குக் கொணர்ந்தனர்.
ஓவியங்கள் அனைத்தையும் பார்த்த அரசர், இறுதியில் இரண்டு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்.
அவ்விரண்டில், எது மிகவும் சிறந்ததெனத்
தீர்மானிப்பது, அரசருக்குக் கடினமாக இருந்தது.
எனவே, அவர், ஏனைய அமைச்சர்களின் உதவியை நாடினார்.
முதல் ஓவியத்தில், சலனமற்ற நீர்ப்பரப்பைக் கொண்ட ஏரி ஒன்று
தீட்டப்பட்டிருந்தது. அந்த ஏரியைச் சுற்றி, பசுமையான
மலைகளும், வெண்மேகங்கள் மிதந்துவந்த
நீல வானமும் தீட்டப்பட்டிருந்தன. மலைகள் மற்றும் மேகங்களின் பிம்பங்கள், கண்ணாடிபோல் தெரிந்த அந்த நீர்ப்பரப்பில்
தெளிவாகத் தெரிந்தன.
இரண்டாவது ஓவியத்திலும், மலைகள் வரையப்பட்டிருந்தன. ஆனால், அந்த மலைகள், கரடுமுரடான பாறைகளாக வரையப்பட்டிருந்தன.
அந்தப் பாறைகளின் நடுவே, நீர்வீழ்ச்சியொன்று கொட்டிக்கொண்டிருந்தது.
மலைகளுக்கு மேல், வானத்தில், கருமேகங்கள், மின்னல்கள், மழை ஆகியவை தீட்டப்பட்டிருந்தன.
அவ்விரு ஓவியங்களையும் கண்ட அமைச்சர்கள்
அனைவரும், அமைதி என்ற கருத்தை, முதல் ஓவியமே சிறந்த முறையில் வெளிக்கொணர்ந்ததெனக்
கூறினர்.
ஆனால், மீண்டும் ஒருமுறை, அவ்விரு
ஓவியங்களையும் கூர்ந்துநோக்கிய அரசர்,
இரண்டாவது
ஓவியத்திற்குப் பரிசு வழங்கினார். அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், காரணம் கேட்டபோது, அரசர், இரண்டாவது ஓவியத்தில் வரையப்பட்டிருந்த ஒரு
பறவையைச் சுட்டிக்காட்டினார்.
ஆர்ப்பரித்து, கொட்டிக்கொண்டிருந்த அருவிக்குப்
பின்புறம் வரையப்பட்டிருந்த ஒரு புதரில், தாய்ப்பறவை, தன் கூட்டில் அமர்ந்து, குஞ்சுப்பறவைகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்ததை
அரசர் சுட்டிக்காட்டினார்.
"அமைதி என்றால், நம்மைச் சுற்றி, பிரச்சனை ஏதுமற்ற நிசப்தமானச்
சூழல் அல்ல. மாறாக, நம்மைச்சுற்றி அச்சுறுத்தும்
பிரச்சனைகள் இருந்தாலும், உள்ளத்தில் உணரும் அமைதியே, உண்மையான அமைதி. அந்த அமைதியை, தாய்ப்பறவை உணர்த்துகிறது. எனவே, இரண்டாவது ஓவியமே, அமைதியின் முழு பொருளை வெளிக்கொணர்கிறது"
என்று அரசர் விளக்கம் அளித்தார்.
இவ்வுலகை நீ துரத்திச்
செல்லும்போது, கூச்சலும், குழப்பமுமே மிஞ்சும். இவ்வுலகை உன்னிடம்
வருவதற்கு அனுமதித்தால், அமைதி நிச்சயம். – Zen Gatha
She was bent over and could not fully straighten herself – Luke 13:11
https://www.freebibleimages.org
லூக்கா நற்செய்தி – கூன் விழுந்த பெண் குணமடைதல் 2
லூக்கா
நற்செய்தியில் மட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ள 5 புதுமைகளில் ஒன்றான, கூன் விழுந்த பெண்ணை
இயேசு குணமாக்கும் புதுமையில், சென்ற வாரம், நாம் தேடலைத் துவக்கினோம். இந்த
நற்செய்தியின் 13ம் பிரிவின் 10வது இறைவாக்கியத்தில் துவங்கும் அப்புதுமையில் அடியெடுத்து
வைப்பதற்குமுன், அப்பிரிவின் முதல் 9 இறைவாக்கியங்களில்,
இயேசு கூறும் சில கருத்துக்களை, அப்புதுமையின் பின்பலமாக, சிந்திக்க ஆரம்பித்தோம்.
பலிசெலுத்திக்கொண்டிருந்த
கலிலேயரை பிலாத்து கொலை
செய்தது, சீலோவாம் கோபுரம் இடிந்து
விழுந்தது ஆகிய இரு துயர நிகழ்வுகளைப்பற்றி, இயேசு
கூறிய கருத்துக்களை, சென்ற விவிலியத் தேடலில்
சிந்தித்தோம். மனிதர்களால் மனிதர்களுக்கு துன்பங்கள் ஏற்படும்போதும், இயற்கைப் பேரிடர், அல்லது விபத்துக்கள் வழியே மனிதர்கள்
துன்புறும்போதும், கடவுள் அவற்றை ஏன் அனுப்பினார்
என்றோ, அல்லது, அவர் ஏன் அவற்றைத் தடுக்கவில்லையென்றோ கேள்விகள்
எழுப்புவதும், கடவுள் என்ன செய்திருக்கலாம்
என்ற பாணியில் ஆலோசனைகள் வழங்குவதும், மனிதர்களாகிய நமக்கு பழகிப்போன எண்ணங்கள்.
உலகில்,
அநியாயங்கள் பல நடந்தும், கடவுள் ஏன் சும்மா இருக்கிறார்? என்பது, கடவுளைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும்
ஒரு கேள்வி. அக்கேள்விக்கு, நாம் தரமுயலும் பல பதில்களில், "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியை, பதிலாகச்
சொல்லி சமாதானம் அடைவதும், நம்மிடையே நிலவும் ஒரு பழக்கம்.
இப்பழமொழியின்
இரண்டாம் பகுதி, நம்மில் பலருக்கு, சங்கடமான உணர்வுகளைத் தரலாம். 'தெய்வம் நின்று கொல்லும்' என்ற
சொற்கள் வழியே, கடவுள், பொறுத்திருந்து, அல்லது காத்திருந்து கொல்வார் என்ற பொருள்
வெளிப்படுகிறது. தெய்வம், அல்லது, கடவுள் பொறுத்திருப்பார், அல்லது காத்திருப்பார் என்பதில் ஐயமில்லை, ஆனால், அவர் பொறுத்திருந்து கொல்வார் என்று சொல்வது, ஏற்றுக்கொள்வதற்கு கடினமான எண்ணம். இறைவன்
பொறுமையாய் இருப்பது, நம்மைக் கொல்வதற்கல்ல, வாழ வைப்பதற்கு. இந்த உண்மையை, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள 'காய்க்காத அத்திமர உவமை' வெளிப்படுத்துகிறது. - லூக்கா நற்செய்தி
13: 6-9
அத்தி
மரங்கள், விரைவில் பூத்து, காய்த்து, கனிதரும் வகையைச் சேர்ந்தவை. அவற்றிற்கு
அதிக உரமோ, நீரோ தேவையில்லை. அப்படிப்பட்ட
மரம், மூன்றாண்டுகள் ஆகியும், பலன் தரவில்லை. தோட்டத்து உரிமையாளர் அதை வெட்டியெறிய
உத்தரவிடும்போது, தோட்டத் தொழிலாளி, மேலும்
ஓராண்டு பொறுமை காட்டுமாறு வேண்டுகிறார். மற்றோர் ஆண்டு தரப்படுகிறது, கூடுதல்
உரமும் இடப்படுகிறது. அதேபோல், நாம் உண்மையான பலன் தருவதற்கு, இறைவன், நின்று, நிதானமாய் செயல்படுவார் என்பதை இந்த உவமை
நமக்குச் சொல்லித்தருகிறது.
இறைவன்,
நின்று, நிதானமாய் செயல்படட்டும்,
அநியாயங்கள் செய்வோரைத் தண்டிக்க, நேரம் எடுத்துக்கொள்ளட்டும், பொறுமை காட்டட்டும். அவர்கள் திருந்துவார்கள்
என்று காத்திருக்கட்டும். ஆனால், அவ்வாறு காத்திருக்கும்
அந்நேரத்தில், நல்லவர்கள், அப்பாவிகள் வதைபடுகிறார்களே.
அதற்காகவாவது, ‘கடவுள் எதையாவது செய்யலாமே’ என்பது, கடவுளுக்கு நாம் வழங்கும்
ஆலோசனைகளில் ஒன்று. அவ்விதம் நாம் ஆலோசனை வழங்கும்போது, கடவுள், நம்மையும், ‘எதையாவது செய்வதற்கு’ அழைக்கிறார்.
சிரிப்புத்
துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்கின்றனர். இதோ,
அந்த உரையாடல்:
நான்
கடவுளைப் பார்த்தால், ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன்.
என்ன
கேள்வி?
கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே.
ஒன்னும் செய்யமாட்டியா? என்று கேட்பேன்.
நல்ல
கேள்வி. கேட்கவேண்டியது தானே?
அதே
கேள்வியை கடவுள் என்கிட்டே திருப்பி கேட்டா?
சிரிப்புத்
துணுக்குகள் பலநேரங்களில் சிந்தனைகளை உரசிப்பார்க்கும் தீக்குச்சிகள். இல்லையா? கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே.
ஒன்னும் செய்யமாட்டியா? என்ற இந்தக் கேள்வியை,
பலகோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். நானும் இந்தக் கேள்வியைக்
கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. எனக்கும் இதே பயம். இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி
நான் ஏவிவிடும்போது, அது, மீண்டும், ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக, என்னைத் தாக்குமோ என்ற பயம்
அது.
எகிப்தில்
தன் இனத்தைச் சேர்ந்தவர்கள் பட்ட துன்பங்களைக் கண்டு, 'கடவுளே ஒன்றும் செய்யமாட்டாயா?' என்ற கேள்வி, மோசேயின் உள்ளத்திலும் எழுந்திருக்கவேண்டும்.
அந்தக் கேள்விக்கு இறைவன் பதில் சொல்ல,
எரியும்
புதர் வழியே, மோசேயைச் சந்திக்க வருவதை, நாம் விடுதலைப்பயண நூலில் காண்கிறோம். மோசேயிடம் எரியும் முட்புதர் வழியே கடவுள்
தந்தசெய்தி அதுதான்:
விடுதலைப்
பயணம் 3:7-8
“எகிப்தில் என் மக்கள்படும்
துன்பத்தை என் கண்களால் கண்டேன்... அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின்
பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும்
நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.”
என்று
கூறும் கடவுள், மோசேயை, அந்த விடுதலைப் பணியை ஏற்கச் சொல்கிறார். மோசே தயங்குகிறார்.
"நான் போய் என்ன செய்யமுடியும். என்னை உயிரோடு குழிதோண்டி புதைத்துவிடுவார்களே"
என்று ஒதுங்கிவிட மோசே எண்ணினார். இறைவன் அவருக்கு நம்பிக்கை தந்து, அவரது தயக்கங்களை நீக்கி, அவர் வழியாகக் கொணர்ந்த விடுதலை, மீட்பின்
வரலாறானது.
இஸ்ரயேல்
மக்கள், எகிப்திய அடிமைத்தனத்தில்
துன்புற்றவேளையில் வாழ்ந்த மோசேயைப்போல, உரோமைய
ஆதிக்கத்தில் இஸ்ரயேல் மக்கள் துன்புற்றவேளையில் வாழ்ந்த இயேசுவின் உள்ளத்திலும், கேள்விகள் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கு
விடைதேடும்வண்ணம், இயேசு தன் பணிகளைத் துவக்கிய
வேளையில், யோர்தான் நதியில் யோவானிடம்
திருமுழுக்குப் பெற்றார். அவ்வேளையில்,
“என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (லூக்கா 3:22) என்று தந்தையாம் இறைவன்
கூறிய சொற்கள், இயேசுவுக்கு பெரும் உந்துசக்தியாகவும், அழைப்பாகவும் அமைந்திருக்கவேண்டும்.
உரோமைய
அடக்குமுறைகளிலிருந்து மக்களுக்கு அரசியல் விடுதலை வழங்குவதைவிட, தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டோரை விடுதலை செய்வதும், உடலளவில் பிணியுற்றோரை குணமாக்குவதும் முக்கியம்
என்பதை, இயேசு, தன் பணிவாழ்வின் குறிக்கோளாக, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் கூறினார்.
(லூக்கா 4:18-19) அந்த விடுதலைப்பணியின் ஒரு பகுதியாக, கூன் விழுந்த பெண்ணை அவர் குணமாக்கியப் புதுமையை, நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ளார்.
லூக்கா
நற்செய்தி 13ம் பிரிவில், 10 முதல் 17 முடிய உள்ள
8 இறைவாக்கியங்களில், முதல் 4 இறைவாக்கியங்களில்
இப்புதுமையும், அதைத்தொடர்ந்து, 4 இறைவாக்கியங்களில்
இயேசு சந்திக்கும் எதிர்ப்பும், கருத்து வேறுபாடும், கூறப்பட்டுள்ளன. இப்புதுமையை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
லூக்கா
13:10-13
ஓய்வுநாளில்
இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய
ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு
கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர்
விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர்
நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
"தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய
பெண் ஒருவர் அங்கு, அதாவது, அந்தத்
தொழுகைக்கூடத்தில், இருந்தார்"
(காண்க. லூக்கா 13:11) என்ற
சொற்கள் வழியே, நற்செய்தியாளர் லூக்கா, அப்பெண்ணின்
வாழ்விடமே அந்தத் தொழுகைக்கூடமாக இருந்திருக்கலாம் என்பதை, மறைமுகமாகக்
குறிப்பிடுவதைப்போல் தெரிகிறது. லூக்கா நற்செய்தியில், கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில், தீய
அவி பிடித்த ஒருவரை இயேசு குணமாக்குவது, முதல் புதுமையாகக் கூறப்பட்டுள்ளது. அப்புதுமையிலும், "தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த
ஒருவர் இருந்தார்" (லூக்கா 4:33) என்ற சொற்களை, லூக்கா பயன்படுத்தியுள்ளார். உலகின்
பல நாடுகளில், குறிப்பிட்ட சில ஆலயங்களில், தொழுகைக்கூடங்களில், திருத்தலங்களில்,
தீய ஆவி பிடித்தவர்கள் தங்கவைக்கப்படுவதையும், ஒரு சில இடங்களில், அவர்கள் சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருப்பதையும் செய்திகளில் வாசிக்கிறோம். அத்தகைய ஒரு நிலை, இந்தப்
பெண்ணுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.
18 ஆண்டுகளாக தீய ஆவியால் கட்டுண்டவர், "சிறிதும்
நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்" (லூக்கா
13:11) என்ற சொற்கள், அப்பெண்ணின்
துயர நிலையை சித்திரித்துள்ளன. 18
ஆண்டுகளாக, ஏறத்தாழ ஒரு விலங்கைப்போல, பூமியை
மட்டுமே அதிகம் பார்த்தவண்ணம் வாழ்ந்துவந்த அப்பெண், இயேசுவின்
சொற்களால், தொடுதலால், நிமிர்ந்து நின்றார் என்று
நற்செய்தியாளர் லூக்கா விவரித்துள்ளார். அவர் நிமிர்ந்து நின்ற அத்தருணத்தில்,
முதன் முதலாக அவர் கண்டது, இயேசுவின் முகத்தை என்று நாம் கற்பனை செய்வது, மனதுக்கு
இதமான ஒரு காட்சியாக உள்ளது.
இந்த அற்புத நிகழ்வை அலங்கோலமாக்க, தொழுகைக்கூடத் தலைவர் அங்கு
வருகிறார். தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை, நாம்
அடுத்த தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment