06 October, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பத்து தொழுநோயாளர் நலமடைதல் 1

 
Rocky sea at Cape Comorin

விதையாகும் கதைகள் : இயேசு அடியானில் தெரிந்த இறைவன்

புகழ்பெற்ற பேச்சாளர், பாரதி பாஸ்கர் அவர்கள், ஒருமுறை, மேடையில் பகிர்ந்துகொண்ட உண்மை நிகழ்வு இது:

குமரி முனையில் வாழ்ந்துவந்த ஓர் இளையவரின் பெயர், இயேசு அடியான். அவ்விளைஞர் நீச்சலில் அதிகத் திறமை பெற்றவர். எனவே, பாறைகள் நிறைந்த கடல் பகுதிகளில் நீந்தி, பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். சில வேளைகளில், பாறைகளுக்கிடையே சிக்கி இறந்தோரின் உடல்களை மீட்டுக் கொணர்ந்துள்ளார்.

ஒருமுறை, ஆக்ராவிலிருந்து, செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தினர், குமரி முனை வந்தபோது, அவர்களின் இளைய மகன் பாறைகளுக்கிடையே சிக்கினார். இயேசு அடியான் அவர்கள், அந்த இளையவரை உயிரோடு மீட்டுக் கொணர்ந்தார். தன் மகனின் உயிரைக் காத்த இயேசு அடியான் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருவதாக தந்தை கூறியபோது, அவர் மறுமொழியாக, "எனக்கு எதுவும் தேவையில்லை. உயிர்களைக் காப்பது என் கடமை" என்று பணிவாக மறுத்துவிட்டார்.

சில மாதங்கள் சென்று, அந்த தந்தை மீண்டும் குமரிமுனைக்குச் சென்று, இயேசு அடியான் அவர்களை, தன்னுடன் ஆக்ராவுக்கு அழைத்துச்சென்றார். அங்கு, அச்செல்வந்தரின் வீட்டு பூசையறையில், இயேசு அடியானின் படம், ஏனைய தெய்வங்களின் படங்களுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டினார். பின்னர் அந்த தந்தை, இயேசு அடியானிடம், "நீங்கள் என் மகனை உயிருடன் மீட்டதற்காக மட்டும் இங்கு உங்கள் படத்தை நான் வைக்கவில்லை. ஆனால், எதையும் எதிர்பார்க்காமல், உயிர்களைக் காத்துவரும் உங்களிடம், நாங்கள் கடவுளையேப் பார்க்கிறோம். அதனால்தான், உங்கள் படம் எங்கள் பூசையறையில் உள்ளது" என்று கூறினார்.

பலன்கள் ஏதும் எதிர்பாராமல், உயிர்களைக் காக்கும் உன்னத மனிதர்கள் வடிவில், இறைவன் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்கிறார்.

Jesus with ten leprosy patients

லூக்கா நற்செய்தி பத்து தொழுநோயாளர் நலமடைதல் 1

கடந்த ஏழு, அல்லது, எட்டு மாதங்களாக, நம்மை அச்சுறுத்திவரும் கோவிட்-19 கொள்ளைநோயின் காரணம் காட்டி, மனிதர்களை நெருங்கிச்செல்வதற்கு நமக்குள் ஏகப்பட்ட தயக்கங்களை வளர்த்துள்ளோம் என்பதை உணர்கிறோம். அடுத்தவரின் மூச்சுக்காற்றும் நம்மீது விழாதவண்ணம், நம்மைச் சுற்றிலும் தற்காப்புக்கவசங்களை அணிந்துவருகிறோம். இந்த கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, அண்மைய சில நாள்களாக கூடிவருகிறது என்ற செய்திகள், அடுத்தவரிடமிருந்து அகன்று செல்லும் போக்கை, நம்மிடம், இன்னும் கூடுதலாக உறுதி செய்துள்ளது.
இனம் தெரியாத ஒரு 
நோயையும், அந்த நோயுற்றோரையும் கண்டு அஞ்சிவாழும் இத்தகைய ஒரு சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள திருமடல், நம்மைச் சுற்றி நாம் எழுப்பியிருக்கும் சுயநல கவசங்களை களைந்துவிட ஓர் அழைப்பாக வந்துள்ளது. இந்த திருமடலின் துவக்கத்தில், திருத்தந்தை, நாம் வாழும் கொள்ளைநோய் காலம் தனக்கு உணர்த்திய உண்மைகளை இவ்வாறு பகிர்ந்துள்ளார்:
"நான் இந்த மடலை எழுதிக்கொண்டிருந்தபோது, கோவிட்-19 கொள்ளைநோய் திடீரென வெடித்து, நம் பாதுகாப்பின்மையை வெளிக்கொணர்ந்தது. இந்தக் கொள்ளைநோய்க்கு ஒவ்வொரு நாடும் பல்வேறு வழிகளில் பதிலிறுப்பு செய்த அதே வேளை, நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்ற இயலாத உண்மையும் நமக்குத் தெளிவாகியது. தொடர்புகளில் நாம் உச்சநிலையை அடைந்திருந்தாலும், நம் அனைவரையும் பாதிக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நாம் இன்னும் ஒன்றுபடாமல் சிதறுண்டிருக்கிறோம்... இந்தக் காலக்கட்டத்தில், ஒவ்வொரு மனிதரின் மேன்மையை உணர்ந்து, உலகெங்கும் உடன்பிறந்த உணர்வை மீண்டும் உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்பதே என் ஆவல்" (திருமடல் 7,8) என்று திருத்தந்தை இம்மடலின் துவக்கத்தில் எழுதியுள்ளார்.

"அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் வெளிவந்துள்ள இவ்வேளையில், நாம், பத்து தொழுநோயாளரை இயேசு குணமாக்கும் புதுமையில் நம் விவிலியத் தேடலைத் துவக்குகிறோம். நம்மிடையே நிலவும் பாகுபாடுகளைக் களைந்து, "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற உன்னத உண்மையை நாம் கற்றுக்கோள்ள, இப்புதுமை நமக்கு உதவும் என்ற நம்பிக்கையில் நம் தேடலைத் தொடர்வோம்.

மத்தேயு, மாற்கு, யோவான் என்ற மூன்று நற்செய்திகளில் பதிவாகாமல், லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள 5 புதுமைகளில், இறுதிப் புதுமையாக, பத்து தொழுநோயாளர்கள் நலம் பெரும் புதுமை கூறப்பட்டுள்ளது.
நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள குணமளிக்கும் புதுமைகளில், ஒருவர், அல்லது இருவர் மட்டுமே குணமடையும் நிகழ்வுகளே கூறப்பட்டுள்ளன. இயேசு, பத்துபேரை ஒரே நேரத்தில் குணமாக்கும் நிகழ்வு, லூக்கா நற்செய்தி 17ம் பிரிவில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இத்தனைபேர் குணமான ஒரு நிகழ்வு, எப்படி ஏனைய நற்செய்தியாளர்களின் கவனத்தை ஈர்க்காமல் போனது என்பதற்கு, நம்மால் எளிதில் விளக்கங்கள் கூற இயலாது. ஆனால், நற்செய்தியாளர் லூக்கா மட்டும்  இந்நிகழ்வை ஏன் பதிவு செய்துள்ளார் என்பதற்கு, நம்மால் ஓரளவு விளக்கம் சொல்லமுடியும்.

இரக்கத்தின் நற்செய்தி என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில், சமுதாயத்தின் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டவர்கள், சிறப்பான இடம் பெற்றுள்ளனர் என்பதற்கு, பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இஸ்ரயேல் சமுதாயத்தில் மக்கள்தொகை கணக்கு நடைபெற்ற வேளையில், அந்த மக்களில் ஒரு பங்காகக் கருதப்படாமல், வயல்வெளியில் தங்கியிருந்த இடையர்கள், இயேசுவின் பிறப்பைக் காண்பதற்கு முதல் அழைப்பு பெற்றதோடு, 'எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை' மக்களுக்கு அறிவிப்பதற்கும் அழைப்பு பெற்றனர் (லூக்கா 2:8-18) என்பதை, நற்செய்தியாளர் லூக்கா மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதே வண்ணம், யூத சமுதாயத்தில் குறைவாக மதிப்பிடப்பட்ட பெண்களுக்கு, இயேசு உயிர்த்துவிட்டார் என்ற நற்செய்தி முதலில் அறிவிக்கப்பட்டது (லூக்கா 24:1-10). இவ்வாறு ஓரங்களில் இருப்போரை மையத்திற்குக் கொணர்வதை தன் நற்செய்தியின் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்த லூக்கா, இஸ்ரயேல் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட தொழுநோயாளருக்கு தனியிடம் கொடுத்துள்ளார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே!

நம் உடலில் உருவாகும் பல நோய்களில், வெளிப்படையாக, தோல்மீது உருவாகும் நோய்கள், பெரும் சங்கடங்களை உருவாக்குகின்றன. தோல் தொடர்பான நோய் கண்டவர்கள், உடலளவில் படும் வேதனைகளைக் காட்டிலும், உள்ளத்தளவில் உணரும் வேதனைகள் அதிகம். இந்நோய்களால் பாதிக்கப்பட்டோரைக்கண்டு, மக்கள் விலகிச்செல்வது, பெரும் வேதனை. தோல்மீது தோன்றும் நோய்களிலேயே, தொழுநோய், இன்றளவும், பெரும் அச்சங்களை உருவாக்கி வருகின்றது.

பழைய ஏற்பாட்டு காலத்திலும், இயேசுவின் காலத்திலும், 'தொழுநோய்' என்ற சொல், தோலில் உண்டாகும் பல்வேறு குறைபாடுகளைக் குறிக்க பொதுவான ஒரு சொல்லாக மாறியிருந்தது. இந்நோயைக் குணமாக்க முடியாது, இந்நோய் விரைவில் மற்றவருக்கும் பரவும் என்ற பல்வேறு தவறான அச்சங்கள் மக்கள் நடுவே நிலவி வந்ததால், இந்நோய் உள்ளவர்கள், சமுதாயத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர். இதையொத்த அச்சங்கள் கோவிட்-19 கொள்ளைநோயைக் குறித்தும் நம் மத்தியில் நிலவிவருவதை அறிவோம். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பின்பற்றவேண்டிய விதிமுறைகள், லேவியர் நூலில் காணப்படுகின்றன:
லேவியர் நூல் 13:45-46
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

மேலும், பழைய ஏற்பாட்டின் ஒரு சில நிகழ்வுகளில், இறைவனின் கோபத்திற்கு உள்ளானவர்களுக்கு, அவர், தொழுநோயை, தண்டனையாக வழங்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மோசேக்கு எதிராக ஆரோனும், மிரியாமும் பேசியபோது, இறைவனின் கோபம் அவர்கள் மீது திரும்பியது என்பதை, எண்ணிக்கை நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:
எண்ணிக்கை நூல் 12:9-10
மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார். கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே, அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார்.

எருசலேமில் 52 ஆண்டுகள் ஆட்சிசெய்த மன்னன் அசரியாவின் மீது ஆண்டவரின் கோபம் எழுந்ததால், அவரும் தொழுநோயால் தண்டிக்கப்பட்டார் என்பதை, அரசர்கள் 2ம் நூலில் நாம் காண்கிறோம்:
2 அரசர்கள் 15:3-5
அசரியா, தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான். ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப்புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான்.

விவிலியத்தில் பரிசுத்தம், புனிதம் என்ற வார்த்தைகளும், நலம் அல்லது சுகம் என்ற வார்த்தைகளும் ஒரே அடிப்படை வார்த்தையிலிருந்து வந்தவை. ‘கடோஷ்’ (Kadosh) என்ற எபிரேயச்சொல்லுக்கு, இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. முழுமையாக, நலமாக உள்ளவை அனைத்தும் பரிசுத்தமானதாக, புனிதமானதாகக் கருதப்பட்டன. இந்த அடிப்படையில், நலம் இழந்தோரை, இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர், யூதர்கள். அதிலும், தொழுநோய், இறைவன் ஒருவருக்கு நேரடியாக வழங்கும் தண்டனை என்ற கருத்து, மக்களிடையே மிக ஆழமாகப் பரவியிருந்தது. எனவே, தொழுநோயுற்றோர் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொள்வோரும், தீட்டுப்பட்டவர்களாக மாறுவர் என்று கருதப்பட்டது.

இத்தகைய ஒரு பின்னணியுடன், இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள புதுமையின் அறிமுக வரிகளுக்குச் செவிமடுப்போம்.
லூக்கா 17:11-13
இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

இயேசு ‘கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்’ என்ற கூற்றுடன் இப்புதுமை ஆரம்பமாகிறது. யூதர்களும், சமாரியர்களும் வாழ்ந்தப் பகுதிகள் அவை. தேவையற்ற பாகுபாடுகளுடன் வாழ்ந்த யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்த சிந்தனைகளுடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும். அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அந்த பத்து தொழுநோயாளர்களைப் பற்றியும், அவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்தவற்றைப் பற்றியும் நாம் அடுத்த தேடலில் சிந்திப்போம்.

யூதர், சமாரியர் என்ற பாகுபாட்டைச் சிந்திக்கும் இவ்வேளையில், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின், ஹத்ராஸ் (Hathras) என்ற ஊரில், தலித் இனத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண், கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொல்லப்பட்ட நிகழ்வு, நம்மை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த இளம்பெண்ணை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதல் அளிக்கவும், இந்தக் கொடுமைக்கு தகுந்த நீதி கிடைக்கவேண்டும் என்றும் இறைவனிடம் மன்றாடுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம். அக்டோபர் 7, இப்புதனன்று, புனித செபமாலை அன்னை மரியாவின் திருநாளைச் சிறப்பிக்கிறோம். இந்த அக்டோபர் மாதம் முழுவதும், செபமாலை என்ற பக்தி முயற்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்.  அன்னை மரியாவின் பரிந்துரையால், இவ்வுலகை வதைக்கும் கோவிட்-19 கொள்ளைநோயையும், இன்னும் பல வடிவங்களில் நம்மிடையே குடிகொண்டிருக்கும் சாதி, இன, மத அடிப்படையில் உருவாகும் உயர்வு தாழ்வுகள் என்ற சமுதாயக் கொள்ளைநோயையும் இறைவன் விரட்டியடிக்க, இம்மாதம் முழுவதும், செபமாலை வழியே செபிப்போம்.

No comments:

Post a Comment