13 October, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பத்துத் தொழுநோயாளர் நலமடைதல் 2

 
Group of monkeys
 
விதையாகும் கதைகள் : "நான் அரசன்... அதனால் தான்."
 
குரங்குகளின் அரசனாக இருந்த ஒரு பெரும் குரங்கு, உடல் வலிமையில் மட்டுமல்ல, அன்பாலும், அறிவாலும் உயர்ந்து விளங்கியது. அதன் புகழை விரும்பாத ஒரு சில குரங்குகளும், அந்தக் கூட்டத்தில் இருந்தன.

ஒரு நாள், மனிதப் படையொன்று குரங்குகளை வேட்டையாட வருகின்றது எனக் கேள்விப்பட்டதும், அந்தக் காட்டைவிட்டு, அடுத்த காட்டுக்கு, எல்லாக் குரங்குகளையும் பத்திரமாக அழைத்துச்சென்றது, அந்த அரசக்குரங்கு. போகும் வழியில், ஆழமான ஒரு பள்ளம். குரங்குகள் அதைத்தாண்ட முடியாதென உணர்ந்த அரசக்குரங்கு, அந்தப் பள்ளத்தின் இரு ஓரங்களையும் இணைக்கும் பாலமாக தன் உடலை அமைத்தது. எல்லாக் குரங்குகளும், அரசக்குரங்கின் உடல்மீது நடந்துசென்றன.

அரசக்குரங்கின் மேல் பொறாமைகொண்ட குரங்குகளில் ஒன்று, இதுவே தகுந்த தருணம் என்று நினைத்து, கூர்மையான ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அரசக் குரங்கின் உடல்மீது நடந்து சென்று, அதன் இதயத்தை, அந்தக் கூரிய குச்சியால் குத்திப் பிளந்தது. வலியால் துடித்த அந்த அரசக்குரங்கு, தன் பிடியைத் தளர்த்தவில்லை. தன்னைக் குத்திய அந்தக் குரங்கு உட்பட, எல்லாக் குரங்குகளும் பத்திரமாகக் கடந்து சென்றபின், மயக்கமுற்று, அந்தப் பள்ளத்தில் விழுந்தது.

குரங்குகளை வேட்டையாட வந்த மனிதப்படையின் தலைவன், நடந்ததனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். மயங்கி விழுந்த குரங்கைக் காப்பாற்ற முயன்றார். மயக்கம் தெளிந்து எழுந்த அரசக்குரங்கிடம், "நீ அந்தக் குரங்குகளுக்கெல்லாம் அரசன். பின் ஏன் இப்படி அவர்களுக்காக உன் உயிரைக் கொடுக்கிறாய்?" என்று கேட்டார். "நான் அவர்களுக்கு அரசன். அதனால் தான்." என்று சொல்லி, அந்த அரசக்குரங்கு உயிர் துறந்தது.

Jesus and the ten leprosy patients

லூக்கா நற்செய்தி பத்துத் தொழுநோயாளர் நலமடைதல் 2

நான்கு நாள்களுக்கு முன், அதாவது, அக்டோபர் 10, கடந்த சனிக்கிழமையன்று, அன்றைய தேதி, ஒரு சிறப்பான எண்ணைக் கொண்டிருந்தது, நம் கவனத்தை ஈர்த்தது. 10-10-2020 என்ற எண்ணைக் கொண்ட அந்த நாள், இனி வரப்போவதில்லை என்பதையும், அடுத்தவரிடம் பகிர்ந்துகொண்டோம்.

நம் நினைவுகளை சிறிது பின்னோக்கி நகர்த்தினால், 2001ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய, சிறப்பான எண்கள் கொண்ட நாள்களை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பித்துவந்தோம். 1-1-1, அதாவது, 2001ம் ஆண்டு சனவரி முதல் தேதி, 2-2-2, அதாவது, 2002ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி என்று ஆரம்பித்து, 12-12-12, அதாவது, 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி என்ற எண் கொண்ட நாள் முடிய அந்த 12 ஆண்டுகளிலும், ஒவ்வோர் ஆண்டும், சிறப்பான எண்கள் கொண்ட அந்நாள்களில், உலகெங்கும், பல்வேறு முயற்சிகள், திட்டமிட்டு நடத்தப்பட்டன.

எடுத்துக்காட்டாக, 8-8-8 அதாவது, 2008ம் ஆண்டின் 8வது மாதமான ஆகஸ்ட் மாதம், 8ம் தேதி, இரவு 8 மணி, 8 நிமிடம், 8 நொடிகளுக்கு, சீனாவில், பெய்ஜிங் நகரில், ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா ஆரம்பமானது. அதேவண்ணம், 10-10-10 என்ற எண் கொண்ட, 2010ம் ஆண்டு அக்டோபர் 10, ஞாயிறன்று, இயற்கையைப் பாதுகாக்கும் எண்ணங்களை விதைப்பதற்காக, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அன்று, குரொவேசியா, இரஷ்யா ஆகிய நாடுகளில் 10,000 பள்ளிகளில், மாணவ, மாணவியர் மரங்களை நட்டனர். நெதர்லாந்தில், அந்த நாள் முழுவதும், மக்கள், தொலைக்காட்சியைப் பயன்படுத்தவில்லை. இதுவே ஒரு புதுமை, இல்லையா? பிரித்தானியாவில், தாவர வகை உணவையே அந்நாளில் உண்பதென்று முடிவெடுத்தனர். இந்தியாவிலும், மாலத் தீவுகளிலும் பல முக்கியத் தலைவர்களின் இல்லங்களில், சூரிய ஒளியால் சக்திபெறும் தகடுகளை இந்நாளில் பொருத்தினர். இவ்வாறு, உலகின் பல நாடுகளில், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எண்கள் நம் உள்ளங்களில் பலவகையான எண்ணங்களை விதைக்கின்றன. மத நூல்களிலும் எண்களுக்குத் தனியிடம் உண்டு. எடுத்துக்காட்டாக, விவிலியத்தில் 7, 12, 40 போன்ற எண்களுக்குத் தனியிடமும், பொருளும் தரப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம்.

பத்து என்ற எண்ணை மையப்படுத்தி சிந்திக்கும் இத்தருணத்தில், பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கிய புதுமையை நாம் சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது. தொழுநோயாளரை இயேசு குணமாக்கிய நிகழ்வுகளைச் சிந்திக்கும்போது, பல சவால்கள் நமக்கு முன் எழுகின்றன. சுற்றுச்சூழலையும், சுற்றியுள்ள பிற உயிரினங்களையும் பேணிக்காப்பதற்கு நாம் காட்டும் அக்கறையை, மனிதர்களுக்குத் தருகிறோமா என்பது, நமக்கு முன் உள்ள முதல் சவால்.

பிற உயிரினங்களைக் காப்பதற்கு பல அமைப்புக்கள் உள்ளன. மரங்களைக் காக்க ஓர் அமைப்பு, கடல் பாசியைக் காக்க ஓர் அமைப்பு, கடல் வாழ் உயிரினங்களைக் காக்க, விலங்குகளைக் காக்க, என்று, பல நூறு அமைப்புக்கள் உள்ளன. இந்த அமைப்புக்களின் செயல்பாடுகளும் தீவிரமாய் உள்ளன. இந்தக் கொள்ளைநோய் காலத்திலும், அதனால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்திலும், வீதிகளில் திரியும் விலங்குகளைக் காப்பதற்கு யாரும் இல்லை என்ற விண்ணப்பங்கள், விளம்பரங்களாய் வெளிவந்தன. அதே வேளையில், வீதிகளில் கிடந்த மனிதர்களைக் காப்பதை மையப்படுத்தி, அத்தகைய விண்ணப்பங்களோ, விளம்பரங்களோ வெளிவரவில்லை.

விலங்குகளைக் காப்பதற்குக் காட்டப்படும் அக்கறை, மனிதர்கள்மேல் காட்டப்படுவதில்லை என்பதை, இந்தக் கொள்ளைநோய் காலத்திலும், ஒரு சில நிகழ்வுகள் நமக்கு உணர்த்தியுள்ளன. பசுவைக் கொன்றனர் என்ற பொய்க்குற்றசாட்டுடன், ஜார்கண்ட் மாநிலத்தில், செப்டம்பர் மாத இறுதியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், தாக்கப்பட்டுள்ளனர். அறுபதுக்கும் மேற்பட்ட இந்து அடிப்டைபவாதிகள், அம்மாநிலத்தின் பெரிகுதார் என்ற கிராமத்திற்குள், கம்புகள், மற்றும், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்து, கிறிஸ்தவர்களைத் தாக்கியதுடன், அவர்களின் தலையை மொட்டையடித்து, இந்து கடவுளரின் புகழ் பாடும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்தக் கொடுமையைக் குறித்தோ, அதே செப்டம்பர் மாத இறுதியில், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில், தலித் இனத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண், கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொல்லப்பட்ட நிகழ்வைக் குறித்தோ குரல் எழுப்ப, மக்களிடம் அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

விலங்குகள், மற்றும் இயற்கையின் பாதுகாப்பிற்காக இயக்கங்களை உருவாக்கி குரல் எழுப்பிவரும் பலர், மனிதர்கள் மீது அக்கறையற்றிருப்பதை, அவர்கள் இல்லங்களிலேயே நம்மால் காணமுடியும். இயற்கை அல்லது உயிரினப் பாதுகாப்பு அமைப்புக்களில் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள், பெரும்பாலும், வசதி படைத்தவர்களாக இருப்பர். அவர்கள் இல்லங்களில் வேலைசெய்யும் பணியாளர் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள்? அவ்வில்லங்களில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்குக் கிடைக்கும் கவனிப்பு, இந்தப் பணியாளர்களுக்குக் கிடைக்கிறதா? இயற்கையையும், மிருகங்களையும் காப்பற்றவேண்டுமேன்று போராடிவரும் இவர்களது இல்லங்களில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், எடுத்துக்காட்டாக, தொழுநோயாளர்கள், வரவேற்கப்படுவார்களா? சங்கடப்படுத்தும் கேள்விகள் இவை.

நம் சங்கட உணர்வுகளை இன்னும் கூர்மைப்படுத்தும்வண்ணம், அக்டோபர் 10ம் தேதி இன்னும் இரு உலகநாள்கள் கடைபிடிக்கப்பட்டன. அக்டோபர் 10ம் தேதி, மனநலம் பேணும் உலகநாளாகவும், மரணதண்டனை ஒழிப்பு உலகநாளாகவும் கடைபிடிக்கப்பட்டது. மனநலம், மரணதண்டனை இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு மிகத்தெளிவானது. மனநலத்தை வளர்ப்பதில் குடும்பங்களும், பணியிடங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தளங்களில் உருவாகும் பாரங்களால் மனநலம் குறையும்போது, பல்வேறு குற்றங்கள் வளர்கின்றன. குற்றங்களைக் கட்டுப்படுத்த, அரசுகளுக்குத் தெரிந்த எளிதான வழி, தண்டனைகள், குறிப்பாக, மரணதண்டனைகள். உலகில், மரணதண்டனை, 106 நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட, 55 நாடுகளில், அது, இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஈரான், சவுதி அரேபியா, தென் சூடான் ஆகிய நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் இத்தண்டனை வழங்கப்படுகிறது.

உலகில், வன்முறையற்ற வழிகளில் அமைதியை உருவாக்கும்வண்ணம் 1982ம் ஆண்டு, Peace Resource Project, என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் வெளியிட்ட ஒரு கூற்று மரணதண்டனையைக் குறித்து மிகக் கூர்மையான கேள்வியை எழுப்பியுள்ளது: Why do we kill people who kill people to show that killing is wrong? கொலை செய்வது குற்றம் என்று காட்டுவதற்கு, கொலை செய்தவர்களை நாம் ஏன் கொலை செய்கிறோம்?  என்ற அக்கேள்வி, வார்த்தை விளையாட்டைப் போல் தெரிந்தாலும், ஆழமான, அர்த்தமுள்ள கேள்வி அது.

மரணதண்டனையை விட கொடுமையான தண்டனைகளும் உண்டு. சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், வெறுக்கப்படுதல், மனிதர்களை, மனிதப்பிறவிகளாகக் கூட மதிக்காமல் இருத்தல் போன்ற செயல்பாடுகள், மரணதண்டனையைவிட கொடுமையான தண்டனைகள். இந்தத் தண்டனைகளைப் பெற்ற பத்துத் தொழுநோயாளரை இயேசு குணமாக்கும் புதுமையில் நம் தேடல் தொடர்கின்றது.

இயேசு தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வுகள் லூக்கா நற்செய்தியில் இருமுறை பதிவாகியுள்ளன (லூக்கா 5: 12-14; 17: 11-19). இவ்விரு நற்செய்திப் பகுதிகளிலும், தொழுநோயாளர், அவர்’, ‘இவர் என்று மரியாதையுடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவன்’, ‘இவன் என்றல்ல. முன்பு நாம் பயன்படுத்திய விவிலிய மொழிபெயர்ப்பில் அவன்’, ‘இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழுநோயாளரை ஒரு மனிதராக எண்ணி, அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. இது, நாம் அண்மைய ஆண்டுகளில் பின்பற்றும் ஓர் அழகான பழக்கம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்து, பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இயேசு ஆற்றிய இப்புதுமையைப்பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், ‘தொழுநோயாளர் என்ற வார்த்தையைப்பற்றி சிந்திப்போம். தொழுநோய் உள்ளவர்களை, பழையத்தமிழில், ‘குஷ்டரோகி’ என்று சொல்வோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்லவேளையாக, தற்போது, தமிழிலும், ஆங்கிலத்திலும் தொழுநோயாளர், leprosy patient என்ற சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொன்னபோது, மனிதர்கள் என்ற நிலையை இழந்து, அந்த நோயாகவே அவர்கள் மாறிவிட்டனர் என்ற கண்ணோட்டம் மனதில் பதிந்தது. இந்த நோய் உடையவர்களை, மனிதப் பிறவியிலிருந்து பல படிகள் தாழ்ந்தநிலையில் வாழ்ந்த பிறவிகளாக நினைத்தோம், அவர்களை அப்படியே நடத்தினோம்.

ஏற்றத் தாழ்வு என்ற மடமையில் வாழும் சமுதாயங்களில், ஒரு சில இனங்களில், குலங்களில், குடும்பங்களில் பிறந்தவர்களை, ஏதோ பிறவியிலேயே அவர்கள் குறையுடன் பிறந்தவர்கள் போலவும், எனவே, அவர்களைப் பார்க்கும்விதத்திலும், அவர்களோடு பழகும்விதத்திலும் வேறுபாடுகள் காட்டுவது, அச்சமுதாயங்களில் வேரூன்றிப்போன சாபக்கேடு.

குஷ்டரோகி’ என்று சொல்வதற்கும், ‘தொழுநோயாளர் என்று சொல்வதற்கும், எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ‘வேலைக்காரி’ அல்லது ‘வேலைக்காரன்’ என்ற வார்த்தைகளுக்கும், ‘பணியாளர்’ என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. ‘முடவன்’ என்ற வார்த்தைக்கும், ‘மாற்றுத்திறனாளி’ என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. வார்த்தைகளில் மதிப்பு ஒலிக்கும்போது, மனதிலும் அவர்களைப்பற்றி மதிப்பு உருவாகும் என்று நம்புகிறோம்.

வார்த்தைகள் என்ன அவ்வளவு முக்கியமா என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆம், உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயைவிட அதிக சூடானது வார்த்தைகள் என்றும் நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். பணியாளரை, பிணியுற்றோரை, மாற்றுத்திறனாளிகளை மதிப்புடன் நடத்துவதற்கு, முதலில் நாம் அவர்களைக் குறிப்பிட்டுப் பேசும் வார்த்தைகளிலிருந்து பாடங்களைத் துவக்கவேண்டும். பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் புதுமை, நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம் இது. ஏனைய பாடங்களை, அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment