27 October, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பத்து தொழுநோயாளர் நலமடைதல் 4

  
The dust in your brother’s eye

விதையாகும் கதைகள் : அடுத்தவர் கண்ணில் துரும்பு...

தன் மனைவியின் கேட்கும்திறன் குறைந்துவருவதாகக் கவலைப்பட்ட கணவர், தங்கள் குடும்ப மருத்துவரை தனியே சந்திக்கச் சென்றார். மருத்துவர், அவருக்கு, ஓர் ஆலோசனை தந்தார். "நீங்கள் வீட்டில் இருக்கும்போது, 30 அடி தூரத்திலிருந்து சாதாரணக் குரலில், உங்கள் மனைவியிடம் ஏதாவது கேளுங்கள். அவர் அதற்குப் பதில் சொல்லவில்லையெனில், 20 அடி தூரத்திலிருந்து, மீண்டும் கேளுங்கள். பின்னர், 10 அடி, 5 அடி என்று தூரத்தைக் குறைத்துக்கொண்டு, அதே கேள்வியைக் கேளுங்கள்" என்று மருத்துவர் சொல்லி அனுப்பினார்.

அன்று மாலை, மனைவி சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார். கணவர் ஹாலில் இருந்தபடியே, "கமலா, இன்று இரவு உணவுக்கு என்ன செய்கிறாய்?" என்று சாதாரண குரலில் கேட்டார். மனைவியிடமிருந்து எந்த பதிலும் வராததால், டாக்டர் சொன்னபடி, இன்னும் சிறிது அருகில் சென்று, மீண்டும் இருமுறை அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் பதில் ஏதும் மனைவியிடமிருந்து வராததால், கணவர் வெகுவாகக் கவலை கொண்டார்.

இறுதியாக, சமையலறை வாசலில் நின்று, "கமலா, என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று மீண்டும் கேட்டார். மனைவி திரும்பாமல் சமைத்தபடி இருந்தார். பதில் ஏதும் வரவில்லை. மனைவிக்கு மிக அருகில் சென்று, பின்புறம் நின்று, "இன்று இரவு உணவுக்கு என்ன செய்கிறாய்?" என்று குரலை உயர்த்திக் கேட்டபோது, மனைவி அவரிடம் திரும்பி, "இரவு உணவுக்கு சப்பாத்தி செய்திருக்கிறேன். இதை, நான், உங்களிடம், ஐந்தாவது முறையாகச் சொல்லிவிட்டேன், போதுமா?" என்று சப்தமாகச் சொன்னார்.

நம் குறைகளைவிட, அடுத்தவர் குறைகளைப்பற்றி அதிகம் கவலைப்படும் நம்மை நோக்கி, இயேசு கேட்கும் கேள்வி இது: உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர், அல்லது, சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?” (மத்தேயு 7:3)

“Go and show yourselves to the priests”

லூக்கா நற்செய்தி பத்து தொழுநோயாளர் நலமடைதல் 4

பத்துத் தொழுநோயாளரை இயேசு குணமாக்கும் புதுமை பதிவுசெய்யப்பட்டுள்ள லூக்கா நற்செய்திப் பகுதி (லூக்கா 17:11-19), நமக்குச் சொல்லித்தரக்கூடிய மூன்று பாடங்களில், தொழுநோயாளர்களுக்கு நாம் தரவேண்டிய மதிப்பு என்ற முதல் பாடத்தையும், துன்ப நேரத்தில், சமுதாய வேறுபாடுகள் விலகிச்செல்லும் என்ற 2வது பாடத்தையும் சென்ற தேடலில் புரிந்துகொள்ள முயன்றோம்.

யூதர், சமாரியர் என்ற இருவேறு குலங்களில் பிறந்திருந்தாலும், நோயுற்ற காரணத்தால், 'தொழுநோயாளர்' என்ற ஒரே குலத்தில் இணைக்கப்பட்ட பத்து பேர், இயேசுவை நாடிவந்த தருணத்தை, நற்செய்தியாளர் லூக்கா, இவ்வாறு சித்திரித்துளார்:
லூக்கா 17:12-13
இயேசு ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

நற்செய்தியாளர் லூக்கா சித்திரித்துள்ள இக்காட்சியை சிறிது கற்பனை செய்து பார்ப்போம். ஒவ்வொரு ஊருக்கும் இயேசு சென்ற வேளையில், அவரைச்சுற்றி, மக்கள் கூட்டமும் சென்றது. இந்த மக்கள் கூட்டத்தின் அளவை, நற்செய்தியாளர் லூக்கா ஒருமுறை, "ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது" (லூக்கா 12:!) என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சாகும் தறுவாயிலிருந்த தன் மகளைக் குணமாக்கும்படி, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர், இயேசுவிடம் வந்து, வேண்டியபோது, இயேசு அவருடன் புறப்பட்டார். இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது (லூக்கா 8:42ஆ) என்று கூறப்பட்டுள்ளது.

இயேசு எருசலேம் நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்திலும், அவரைச்சுற்றி மக்கள் கூட்டம் நெருக்கிக்கொண்டிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். அவ்வேளையில், அந்தக் கூட்டத்தின் இரைச்சல்கள் நடுவே, இயேசு, அந்த பத்து தொழுநோயாளர் எழுப்பிய விண்ணப்பக் குரலை கேட்டார் என்று நற்செய்தியாளர் லூக்கா சுட்டிக்காட்டுகிறார். கூட்டத்தினர் நடுவிலும், நோயுற்றவர்கள் விடுக்கும் விண்ணப்பக் குரலை இயேசுவால் கேட்க முடிந்தது என்பதற்கு, பார்வையற்ற ஒருவர் இயேசுவிடம் விண்ணப்பித்த நிகழ்வு, மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
லூக்கா 18 35-40
இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார். முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

இதையொத்த ஒரு காட்சி, இங்கு நிகழ்வதைக் காண்கிறோம். மக்கள் கூட்டம் புடைச்சூழ, இயேசு ஊருக்குள் வந்தபொழுது, அவரது வருகையைப்பற்றி கேள்விப்பட்ட பத்து தொழுநோயாளர், தாங்கள் ஊருக்குள் செல்லமுடியாது என்பதை உணர்ந்து, இயேசுவை வழியிலேயே சந்தித்து, குரல் எழுப்பி வேண்டுவதைக் காண்கிறோம். அவர்கள் எழுப்பிய குரல், இயேசுவின் கவனத்தை ஈர்க்கிறது. எந்த ஒரு கூட்டத்திலும், எந்த ஓர் இரைச்சலிலும், தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்கும் ஒரு தாயைப்போல, இயேசு, தொழுநோயாளரின் குரலைக் கேட்டார் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

அவர்களின் குரல் கேட்டு நிற்கும் இயேசு, அவர்களிடம் கூறிய சொற்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.
இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. (லூக்கா 17: 14)

இயேசு அவர்கள் இருந்த பக்கம் கரங்களை நீட்டி, ஆசீர்வதித்து, அவர்கள் நோயை குணமாக்கியபின், நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்று சொல்லவில்லை. மாறாக, அவர்களைக் கண்டதும், அவர், இச்சொற்களை, ஒரு கட்டளைபோல் இடுகிறார். "அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று" என்பதை, நற்செய்தியாளர் லூக்கா தெளிவாகக் கூறியுள்ளார்.

தங்கள் நோய் நீங்காத நிலையிலும், இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவர்கள் புறப்பட்டுச் சென்றது, அத்தொழுநோயாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. அந்த நம்பிக்கை, அவர்களைக் குணமாக்கியது.

இதையொத்த நிகழ்வுகள், இயேசு ஆற்றிய பல்வேறு புதுமைகளில் வெளிப்படுகின்றன. இயேசு செய்த முதல் அரும் அடையாளம் என்று, நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ள கானா திருமண விருந்து புதுமையில் நிகழ்ந்ததை, இவ்வாறு வாசிக்கிறோம்:
யோவான் நற்செய்தி, 2: 6-9
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.

பணியாளர்கள் தொட்டிகளில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது திராட்சை இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்தப் புதுமை நடந்தது என்பதை ஆய்வு செய்யும்போது, அழகிய, ஆழமான எண்ணங்கள் தோன்றுகின்றன.

வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில், அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது, அவர் ஆற்றும் ஒரு செயலோ, புதுமைகள் நிகழ காரணமாக அமையும். ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொன்னதாகவோ, செய்ததாகவோ நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. கானா திருமணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பலவற்றில், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகளை, இயேசு ஆசீர்வதிப்பதைப் போல் இக்காட்சி வரையப்பட்டுள்ளது. ஆனால், நற்செய்தியில் நாம் வாசிப்பது இதுதான். இயேசு, இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். பின்னர், இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள்மீது தன் கரங்களை நீட்டியதாகவோ, தண்ணீரைத் தொட்டதாகவோ, ஆசீர் அளித்ததாகவோ, வேறு எதையும் செய்ததாகவோ, நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

இயேசு கூறிய இவ்விரு வாக்கியங்களுக்குமிடையே, நற்செய்தியாளர் யோவான், பொருள்நிறைந்த, ஓர் அழகிய வாக்கியத்தைப் பதிவுசெய்துள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், பணியாளர்கள், அத்தொட்டிகளை, விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான், அந்த பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொருத்தவரை, எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, அதாவது, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போதே அந்தத் தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்துவிட்டது.

திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதே என்றக் கவலையில் பணியாளர்கள் குழம்பியிருக்க, அந்தப் பிரச்சனைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு செயலாக, 'தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதைக் கேட்டு, பணியாளர்கள், இன்னும் கூடுதலாக, குழப்பமும், எரிச்சலும், அடைந்திருக்கலாம். இந்த எரிச்சலோடு, பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அத்தொட்டிகளை, ஏனோதானோவென்று, அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், நற்செய்தியாளர் யோவான், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்:. அவ்வாறெனில், அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும். இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது.

அதேவண்ணம், நாம் தேடலை மேற்கொண்டுள்ள இப்புதுமையிலும், நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்று இயேசு கூறியதைக் கேட்டு தொழுநோயாளர்கள் புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் குணமான புதுமை தொடங்கியது. அது, போகும் வழியில் நிறைவடைந்தது. இயேசு ஆற்றிய பல புதுமைகளில், அவரது சொல், அல்லது செயலின் வல்லமை உடனுக்குடன் வெளிப்பட்டது.

இயேசு, தன் பணிவாழ்வைத் துவக்கிய வேளையில், நாசரேத்து தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சொற்களான, ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்கு பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை என்ற சொற்களை வாசித்தபின், "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக்கா 4:21) என்று கூறினார். "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இனி நிறைவேறும்”, என்றோ, “அவ்வாக்கை, இனி நான் நிறைவேற்றுவேன்" என்றோ கூறாமல், அந்த வாக்கு 'இன்று நிறைவேறிற்று' என்று இயேசு கூறியிருப்பதை, நிகழ் பொழுதின் அருள் The Grace of the Present Moment என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

பத்து தொழுநோயாளர் குணமான இப்புதுமை உட்பட, இயேசு ஆற்றிய பல புதுமைகளில் வெளிப்பட்ட நிகழ் பொழுதின் அருள் பற்றி நாம் அடுத்தத் தேடலில் சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.

No comments:

Post a Comment