Tuesday, January 30, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 2


St. John Bosco

இமயமாகும் இளமை – தொழிற்சாலைகளில் தொலைந்த இளமை

ஒன்பது வயதான அச்சிறுவனுக்குத் தோன்றிய ஒரு தெய்வீகக் காட்சியில், தெருக்களில் வாழும் சிறுவர்கள் பலர், சொல்லத்தகாத வார்த்தைகளால், கடவுளைச் சபித்தவண்ணம் இருந்தனர். 'உன் பணிவாலும், அன்பாலும் இவர்களை நீ உன்பக்கம் ஈர்ப்பாய்' என்ற குரல் அந்நேரம் ஒலித்தது. அச்சிறுவர்களைக் காப்பாற்றவேண்டுமெனில், தான் குருத்துவப் பயிற்சியில் இணையவேண்டும் என்பதை, அச்சிறுவன் உணர்ந்தார்.
குருத்துவப் பயிற்சியை முடித்து, அருள்பணியாளராக அவர் தன் பணியைத் துவங்கியபோது, இத்தாலிய சமுதாயத்தில் தொழில்புரட்சி, பெரும் மாற்றங்களை உருவாக்கியது. பல குடும்பங்களிலிருந்து ஆண்கள், குறிப்பாக, இளையோர், நகரங்களை நோக்கிப் படையெடுத்தனர்.
இத்தாலியின் தூரின் நகரில் அருள்பணியாளராகப் பணியாற்றிவந்த தொன் போஸ்கொ அவர்கள், வேலை தேடி, நகரம் நோக்கி படையெடுத்த இளையோரைத் தேடி, தொழிற்சாலைகளுக்குச் சென்றார். தங்கள் வளர் இளம் பருவத்தை, தொழிற்சாலைகளில் தொலைத்துக்கொண்டிருந்த அவ்விளையோரை, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்று திரட்டினார். அன்று முழுவதும், உல்லாசப்பயணம் செல்லுதல், மலையேறுதல், கால்பந்து விளையாடுதல் என்று, அவர்களுடன் முழு நாளையும் செலவழித்தார், தொன் போஸ்கோ. அவ்விளையோர், தங்கள் ஊரில் அனுபவித்த இளமைப்பருவ இனிமைகளை அந்த ஒரு நாளாவது மீண்டும் அவர்கள் அனுபவிக்க உதவினார்.
ஞாயிறு மாலை, அவர்கள் திரும்பிச் சென்றபோது, அந்த வாரத்தில் அவர்கள் தங்கள் வாழ்வை, இன்னும் கொஞ்சம் மேன்மைப்படுத்துவதற்கு, ஒரு சில 'வீட்டுப்பாடங்களை' அவர்களுக்குச் சொல்லித்தந்தார். அவ்விளையோர் தங்கள் 'வீட்டுப்பாடங்களை' சரிவர செய்துள்ளனரா என்பதை அறிவதற்கு, வாரத்தின் ஒரு நாள், அவர்கள் பணியாற்றிய தொழிற்சாலைகளுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்தார்.
இளையோர் ஏங்கிக்காத்திருக்கும் அன்பை, அரவணைப்பை, வழிநடத்துதலை அவர்களுக்குத் தந்தால், நகரங்களில் நிலவும் பல ஆபத்துக்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றமுடியும் என்பதை தொன் போஸ்கோ நம்பினார்; செயல்படுத்தினார். இவரது வழிநடத்துதலால், பல்லாயிரம் இளையோர், நல்வழியில் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைத்துள்ளனர் என்பதை வரலாறு சொல்கிறது. தொன் போஸ்கொ அவர்கள் உருவாக்கிய சலேசியத் துறவு சபையைச் சார்ந்தவர்கள், இளையோர் பணிக்கென தங்களையே அர்ப்பணித்தவர்கள்.
இளையோரின் பாதுகாவலரான புனித தொன் போஸ்கோ அவர்களின் திருநாள், சனவரி 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Jesus and his disciples were invited for the wedding

 புதுமைகள் தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 2

கானா திருமணத்தில், இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றிய புதுமை, புனித யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள பொருள் செறிந்தப் புதுமை. இப்புதுமையில் நம் தேடல் பயணத்தை சென்ற வாரம் ஆரம்பித்தோம். இப்புதுமையின் அறிமுக வரிகளை, மீண்டும் ஒருமுறை கேட்போம்:
யோவான் 2: 1-3
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார்.

பொதுவாக, எந்த ஒரு கதையிலோ, வரலாற்றிலோ ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வேளையில், அவரைப் பற்றிய பல விவரங்கள் வழங்கப்படும். இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய மரியாவை, புனித யோவான் தன் நற்செய்தியில் முதன்முதலாக அறிமுகம் செய்யும்போது, "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளியச் சொற்களில் இந்த அறிமுகத்தைச் செய்கிறார். அந்தத் தாயின் பெயரையும் அவர் பதிவு செய்யாமல், 'இயேசுவின் தாய்' என்ற அடைமொழியை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.
கத்தோலிக்கப் பாரம்பரியத்தில், மரியாவின் 'கன்னிமை', 'தாய்மை' என்ற இரு அம்சங்கள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில், மரியாவின் 'கன்னிமை'யைச் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், (மத். 1:18-24), லூக்காவும் (லூக். 1:26-38) கூறியுள்ளனர். மரியாவின் 'தாய்மை'யை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை, யோவான் குறிப்பிட்டுள்ளார். 20 பிரிவுகளையும், பிற்சேர்க்கையான 21ம் பிரிவையும் கொண்ட யோவான் நற்செய்தியில், இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே 'இயேசுவின் தாய்' இடம்பெறுகிறார். ஒன்று, கானா திருமணம் (யோவான் 2:1-11); மற்றொன்று, கல்வாரி மலை நிகழ்வுகள் (யோவான் 19:25-27).

கானா திருமணத்தில், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பிக்கும் வகையில், முதல் 'அரும் அடையாளத்தை' நிறைவேற்றிய வேளையில், "இயேசுவின் தாய் அங்கு இருந்தார்". அதுமட்டுமல்ல, அந்த அரும் அடையாளத்தை இயேசு செய்வதற்கு, அவரே தூண்டுதலாகவும் இருந்தார். அதே வண்ணம், தன் பணிவாழ்வின் இறுதியில், கல்வாரி மலைமீது, சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது, "சிலுவை அருகில் இயேசுவின் தாய்... நின்றுகொண்டிருந்தார்" (யோவான் 19:25).
அன்னை மரியாவின் பிரசன்னம், அற்புதங்கள் நடைபெற தூண்டுதலாகவும், துன்ப வேளைகளில், ஆறுதல் தரும் அருமருந்தாகவும் உள்ளது என்பதை, இவ்விரு நிகழ்வுகள் வழியே நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார். 20 நூற்றாண்டுகளாக, உலகெங்கும் மரியன்னையின் பரிந்துரையால், அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன, ஆறுதல் கிடைத்துள்ளது என்பதற்கு, பல கோடி பக்தர்களே சான்றுகள்.

கானா திருமண விழாவுக்குத் திரும்புவோம். அங்கு, "இயேசுவின் தாயும் இருந்தார்" என்று எளிய சொற்களில் கூறப்பட்டிருப்பது, மரியாவின் சிறப்பானதொரு குணநலனை நம்முள் ஆழப் பதிக்கிறது. எங்கெல்லாம் தன் உதவி தேவை என்று அன்னை மரியா உணர்கிறாரோ, அங்கெல்லாம் எவ்வித அழைப்பும் இல்லாமல் சென்று, அவர்களோடு தங்கி, உதவி செய்வது, அவரது தனிப்பட்ட குணம்.
தான் இறைவனின் தாயாகப் போகிறோம் என்ற உன்னதச் செய்தியை, வானதூதர் வழியே கேள்விப்படுகிறார், இளம்பெண் மரியா. (லூக்கா 1:26-35) அந்தச் செய்தியை வழங்கிய வானதூதர் கபிரியேல், மற்றொரு செய்தியையும் பின்குறிப்பாக இணைக்கிறார். அதுதான், மரியாவின் உறவினரான எலிசபெத்து, தன் முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தி (லூக்கா 1:36). தான் இறைவனின் தாயாகப் போகும் செய்தியைவிட, இந்தச் செய்தி மரியாவுக்கு முக்கியத்துவம் நிறைந்ததாக மாறுகிறது. எனவே, "மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்" (லூக்கா 1:39-40) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார். அதேபோல், கானாவில் திருமணம் ஒன்று நிகழப்போகிறது என்பதை அறிந்ததும், திருமண வீட்டாரின் பல தேவைகளை நிறைவு செய்ய, திருமணத்திற்கு முன்னரே இயேசுவின் தாய் அங்கு சென்றுவிட்டார் என்பதைக் கூறவே, "இயேசுவின் தாயும் அங்கிருந்தார்" என்ற எளிய சொற்களில் புனித யோவான் அன்னை மரியாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.  

நற்செய்தியாளர் யோவான் தரும் அடுத்த குறிப்பு: "இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்" (யோவான் 2:2) என்பது. இந்தக் குறிப்பு, இயேசுவின் குணநலன்களைக் குறித்து ஒரு சில பாடங்களைச் சொல்லித்தருகிறது.
இயேசுவுடன் வாழ்வது, சலிப்பூட்டும் கடும் தவ வாழ்வு அல்ல; மாறாக, சாதாரண, எளிய மனித மகிழ்வுகளை முழுமையாகத் தரக்கூடிய ஒரு வாழ்வு என்பது, நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம். இயேசு, மகிழ்வுக்கு முட்டுக்கட்டை போடும் முனிவர் அல்ல; மாறாக, மனித மகிழ்வை இரட்டிப்பாக்கும் கலையை அறிந்தவர் என்பதாலேயே திருமண விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திருமண விழாவுக்கு ஒருவரை அழைப்பதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கும். நெருங்கிய உறவுகள், நண்பர்கள் ஆகியோர், திருமணத்திற்கு அழைக்கப்படும் முதல் குழுவில் இருப்பர். அடுத்ததாக, ஊரில் முக்கியமானவர்கள் சிலர், அழைப்பு பெறலாம்.
யோவான் நற்செய்தியைப் பொருத்தவரை, இயேசுவும், அவருடன் இருந்தோரும் அதுவரை எவ்வகையிலும் புகழ் பெற்றவர்கள் அல்ல; எனவே, அவர்கள், திருமண வீட்டாருக்கு நெருக்கமானவர்கள் என்பதே அவர்கள் அழைப்பு பெற்றதற்கு காரணம் என்பதை புனித யோவான் சொல்லாமல் சொல்கிறார். நட்பு, உறவு என்பனவற்றை இயேசு பெரிதும் மதித்ததால், அவர் அந்த அழைப்பை ஏற்று, திருமணத்தில் கலந்துகொண்டார்.
யூதத் திருமணங்கள், ஒரு நாளில், ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் சடங்கு அல்ல. அது, பொதுவாக, ஒரு வாரம் நீடிக்கும் உறவுகளின் திருவிழா. எனவே, இயேசுவும், சீடர்களும் ஏழு நாள்கள் கானாவில் தங்கி, அந்த உறவுத் திருவிழாவில் மகிழ்ந்திருந்தனர் என்பதை உணரும்போது, மனித உறவுகளுக்கு, இயேசு தனியொரு இடத்தைத் தந்தார் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
ஒரு திருமண விழாவில் இயேசு தன் முதல் அரும் அடையாளத்தை செய்தார். இயேசு தன் புதுமைகள் வழியே சுய விளம்பரத்தைத் தேடிய மனிதர் என்றால், எருசலேம் கோவிலில், மக்கள் கூடியிருந்த வேளையில், தன் முதல் புதுமையைச் செய்திருக்கலாம். அத்தகைய ஒரு வாய்ப்பை அலகை அவருக்கு உருவாக்கித் தந்தது. எருசலேம் கோவில் கோபுரத்திலிருந்து இயேசு குதித்தால், அவரை, கடவுளின் தூதர்கள் தாங்கி நிற்பர், அதைக் காணும் மக்கள் மலைத்து நிற்பர் என்ற விளம்பரச் சோதனையை, அலகை இயேசுவுக்குத் தந்தது (மத்தேயு 4:5-7; லூக்கா 4:9-12). அத்தகைய விளம்பரச் சோதனையை விரட்டியடித்த இயேசு, ஓர் எளிய திருமண விழாவில், தன் முதல் புதுமையைச் செய்தார். அதுவும், பந்தி மேற்பார்வையாளருக்கும் தெரியாத வண்ணம் (யோவான் 2:9) இயேசு அமைதியாக அப்புதுமையைச் செய்தார்.
மனிதர்களின் ஒவ்வொரு நாள் வாழ்வில் புதுமைகள் நிகழ்வதையே இயேசு விரும்புகிறார்; அத்தகையப் புதுமைகளை அவர் தொடர்ந்து இன்றும் செய்து வருகிறார் என்பதை கானா திருமண நிகழ்வு நமக்குச் சொல்லித் தருகிறது.

கானா திருமணத்தில் இயேசுவின் தாய், இயேசு மற்றும் சீடர்கள் கலந்துகொண்டனர் என்று கூறும் நற்செய்தியாளர் யோவான், அடுத்து, அங்கு ஏற்பட்ட ஒரு குறையைப் பற்றி பேசுகிறார்.
குறையில்லாத திருமணங்கள் உலகத்தில் எங்கும் இல்லை. திருமணங்களில் பெரும்பாலும் சாப்பாட்டு நேரங்களில் தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும், பிரச்சனைகள் வெடிக்கும். கானாவிலும் சாப்பாட்டு விடயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின் வைபவங்களில், சிறப்பாக திருமணங்களில், திராட்சை இரசம் தீர்ந்து போவதென்பது பெரிய மானப் பிரச்சனை.
திருமணங்களில் குறைகள் ஏற்படும்போது, அவற்றைப் பகிரங்கப்படுத்தி, பெரிதாக்கி, வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார்.
யோவான் 2: 3
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார்.

நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள இந்த இறை வாக்கியத்தில் பொதிந்துள்ள எண்ணங்களை நம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.


Saturday, January 27, 2018

Refreshingly unique leadership தனி முத்திரை பதிக்கும் தலைமைத்துவம்


The Authority of Jesus

4th Sunday in Ordinary Time

“What is this? A new teaching! With authority he commands even the unclean spirits, and they obey him.” (Mark 1:27) The surprise expressed by the people in the Synagogue of Caper′na-um begins our Sunday reflection. It was a surprise since they have not experienced anything similar so far. Jesus was ‘authority’ personified, but, in a totally, refreshingly different way from the regular, monotonous authoritative figures! We too suffer from such monotony when it comes to power and authority shown by our world leaders. How we wish that our leaders learn the true meaning of ‘authority’. The world, unfortunately, suffers from the whims and fancies of a few world leaders who seem to wield uncontrolled authority in various matters that affect humanity, including nuclear war!
There are 195 countries in the world today. If we count the Presidents and Prime Ministers of all these countries, the number of persons in authority will be around 300. Among these 300, the media talks of 20 of them over and over again. The spot light turned by the media on these pathetic models of leadership makes us lose hope on true leadership and authority.
I would like to turn our attention away from these arrogant megalomaniacs and focus on a humble chief minister from India, who is a true model of leadership and authority. I am talking of Shri Manik Sarkar, the Chief Minister of Tripura. Here is an extract from Rediff News published two years back:
He is perhaps India's only chief minister who doesn't own a home, a car or a hefty bank balance. (Some other news sources claim that he does not also have a mobile phone!) He lives on the Rs 10,000 that his party -- the Communist Party of India-Marxist -- gives him and donates his salary as chief minister to the party fund.
Meet Manik Sarkar, Tripura's longest-serving chief minister (he has been in the post since 1998), who feels simple living should be every Communist leader's 'religion.' The chief minister's wife Panchali Bhattacharya, a former central government employee, is often seen going to the market in Agartala by cycle-rickshaw to buy fish and vegetables.

We celebrated Indian Republic Day on January 26. On that day quite a few leaders from India spoke eloquently on their vision of India. Most of their words sounded hollow. Shri Manik Sarkar spoke of his vision of India on August 15, 2017 – Indian Independence Day. With the courage of a prophet, Shri Manik Sarkar spoke about the danger to the basic fabric of secularism in India. Here is an extract from his speech:
“Unity in diversity is Indian traditional heritage. Great values of secularism have helped in keeping Indians together as a nation. But today, this spirit of secularism is under attack. Conspiracies and attempts are underway to create an undesirable complexity and divisions in our society; to invade our national consciousness in the name of religion, caste and community, by inciting passions to convert India into a particular religious country and in the name of protecting the cow.”
Naturally, Doordharshan, and All India Radio, the official TV and Radio channels of India, refused to telecast / broadcast his speech, since it was very forthright, calling a spade a spade. Shri Manik Sarkar is truly a modern-day prophet!

I had an opportunity to learn the deeper meaning of the word ‘authority’, about 15 years ago. I was asked to take up a key position in one of the Jesuit institutions in India. I did not feel comfortable about it. I felt I was not cut out for administrative jobs. Hence, I sought the help of another Jesuit who had held much higher positions than what was asked of me. What he told me cleared my doubts and helped me take up the responsibility with some peace of mind.
This is what he told me: “This is not a position you achieved; it is an opportunity given to you to serve. The key requirement to take up a responsibility is your credibility. You may lack the intelligence or the administrative capacity to do this job. You may not know how to deal with finance and the government officials. You can always get the help of others in making up this lack. But if you lack credibility, then no one can help you fill that gap.”

His words are still very fresh in my memory. What he shared that day helped me see ‘Authority’ in a very different way. The key requirement to serve in a responsible position is one’s credibility. The other qualities are added advantages. Credibility comes from within. It is an inner force. Intelligence and administrative capacity can be learnt and nurtured from outside. One can get help from others when one lacks the know-how of running an institution. But, when one lacks credibility, the inner force, then he or she cannot run the institution in the right direction. This is the real meaning of ‘Authority’.

Today’s Gospel has a key sentence which set me thinking about this past experience of mine. This is what we read in today’s Gospel: “Jesus taught them as one who had authority and not as the scribes.” (Mark 1: 22) If we can understand the meaning of authority, we can as well understand how this ‘authority’ set Jesus apart from the scribes. We use the word ‘authority’ in two different senses. The first sense talks of a person having authority over this or that. The second sense talks of a person being an authority on this or that.
The first one is ‘the power or right to give orders, make decisions, and enforce obedience’. The second one is ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’. (Oxford Dictionary) The first one is given from outside; the second, develops from within. Another word that is closely associated with this second type of ‘authority’ is ‘authenticity’… The more authentic a person, the better his or her authority. This is similar to the ‘credibility’ that my senior Jesuit spoke to me about.

This ‘authority’ can best be explained by the hush that falls or the spontaneous cheer that erupts in a public meeting when a person of great dignity – say, a Mother Teresa, a Mahatma, a Martin Luther King or a Dalai Lama – walks into the auditorium. This spontaneity is due to the magical authority this person holds over the people.

I am not here to take a class on the etymology of ‘authority’. I am interested in making a common human experience clearer to us. Authority is everywhere, starting from our families (as mentioned in the Second Reading – I Cor. 7:32-35) to the international arena. We have secular and sacred authority. If the real meaning of authority can be understood, then we can get rid of so many complications in our world today.
The authority enshrined in and exercised by the sacred sphere can create more complications when understood wrongly. The authority to be a prophet, to speak in God’s name comes from God. This is explained in the passage from the Book of Deuteronomy given as our First Reading today. The people of Israel are sad that Moses, their famous leader, the one who was able to interpret God’s plans for them till now, was on the verge of death. Moses consoles them with these words: 
Moses said to the people: “And the LORD said to me, ‘I will raise up for them a prophet like you from among their brethren; and I will put my words in his mouth, and he shall speak to them all that I command him. And whoever will not give heed to my words which he shall speak in my name, I myself will require it of him. But the prophet who presumes to speak a word in my name which I have not commanded him to speak, or who speaks in the name of other gods, that same prophet shall die.’” (Deut. 18: 17-20)

When Pope Francis assumed the leadership of the Church on March 19, 2013, he stated clearly his idea of power and authority. Here is an extract from his homily that day: Today, together with the feast of Saint Joseph, we are celebrating the beginning of the ministry of the new Bishop of Rome, the Successor of Peter, which also involves a certain power. Certainly, Jesus Christ conferred power upon Peter, but what sort of power was it?... Let us never forget that authentic power is service, and that the Pope too, when exercising power, must enter ever more fully into that service which has its radiant culmination on the Cross. He must be inspired by the lowly, concrete and faithful service which marked Saint Joseph and, like him, he must open his arms to protect all of God’s people and embrace with tender affection the whole of humanity, especially the poorest, the weakest, the least important, those whom Matthew lists in the final judgment on love: the hungry, the thirsty, the stranger, the naked, the sick and those in prison (cf. Mt 25:31-46). Only those who serve with love are able to protect!

How do we understand authority? How do we exercise authority within our families? Does our authority come from an inner force, namely, moral power born of inner convictions or from external conventions that are threadbare? When someone is truly great, we admire that person irrespective of whether the person holds any power or position. We know that such persons are becoming a rare breed among the world leaders as well as in religious spheres. We pray God to send us true leaders before whom we can truly exclaim: “What is this? A new teaching! With authority he commands even the unclean spirits, and they obey him.” (Mark 1:27)

Tripura Chief Minister, Shri Manik Sarkar

பொதுக்காலம் 4ம் ஞாயிறு

"இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" (மாற்கு 1:27) என்று மக்கள் இயேசுவை வியந்து பேசுவது, இன்றைய சிந்தனைகளை வழிநடத்துகின்றது. 'அதிகாரம்', 'பணி' என்ற சொற்களின் பல உள்பொருள்களை, இன்றைய வாசகங்கள் பேசுகின்றன. அதிகாரம் என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய உலகை, தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள் நம் நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள், தலைமைப்பணி, அதிகாரம் ஆகிய சொற்களுக்கு, தவறான இலக்கணம் வகுத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால், இவர்களை, நமது ஊடகங்கள், மீண்டும், மீண்டும் பேசி வருவதால், தலைமைப்பணி, அதிகாரம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், கலக்கமும் நமக்குள் உருவாகின்றன.
உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும், பிரதம மந்திரிகளாகவும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும் மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும், வெளிச்சமிட்டுக் காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள் ஆணவத்தால், தொடர்ந்து தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன. "Power corrupts; absolute power corrupts absolutely" அதாவது, "அதிகாரம், கேடு விளைவிக்கிறது; முழுமையான அதிகாரம், கேட்டினை, முழுமையாக விளைவிக்கின்றது" என்ற ஆங்கிலக் கூற்றின் எடுத்துக்காட்டுகளாக வாழும் இத்தலைவர்களை எண்ணி, வெட்கமும், வேதனையும் அடைகிறோம்.

தலைமைப்பணிக்கு தவறான எடுத்துக்காட்டுகளாக விளங்கும் இத்தலைவர்களிலிருந்து நம் கவனத்தைத் திருப்பி, ஒரு நல்ல தலைவரைப்பற்றி சிறிது நேரம் இந்த வழிபாட்டில் சிந்திப்போம். இந்தியாவில், திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள், நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடோ, காரோ, செல்லிடப்பேசியோ இல்லாதவர் இவர். பாதுகாப்புப் படை ஏதுமின்றி மாநிலத்தில் வலம் வருபவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை, ரூபாய் 10,000க்கும் குறைவு.
சனவரி 26, இந்தியா, குடியரசு நாளைக் கொண்டாடியபோது, பல தலைவர்கள், தாங்கள் கனவுகாணும் இந்தியா எப்படிப்பட்டது என்று தங்கள் உரைகளில் முழங்கியிருப்பர். இந்நேரத்தில், 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய சுதந்திர நாளன்று, மானிக் ஷொர்கார் அவர்கள் தான் காணவிழையும் இந்தியாவைக் குறித்து, அழகான உரை வழங்கினார். அவர் வழங்கிய உரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ:
"வேற்றுமையில் ஒற்றுமை என்பது, இந்தியாவின் பாரம்பரியக் கருவூலம். மத சார்பற்ற நிலையே, இந்தியாவை ஒன்றுபட்ட நாடாக இதுவரை இணைத்து வந்துள்ளது. ஆனால், இன்று, மதசார்பற்ற நிலை தாக்கப்பட்டு வருகிறது. மதம், சாதி, சமுதாயம் ஆகியவற்றின் பெயரால், தேசிய உணர்வு தகர்க்கப்படுகிறது. இந்த நாட்டை, ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய நாடாக மாற்றவும், பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயராலும், மக்களின் உணர்ச்சிகள், தவறான முறையில் தூண்டிவிடப்படுகின்றன. நாட்டை அழிக்கும் இந்தச் சதித்திட்டங்களுக்கு எதிராக, உண்மையான நாட்டுப்பற்று கொண்ட அனைவரும் இன்று உறுதியெடுக்க வேண்டும்" என்று திரிபுரா மாநில முதலமைச்சர் உரை வழங்கினார். அவரது உரையை, இந்திய தொலைக்காட்சியும், வானொலியும் ஒளி, ஒலிபரப்ப மறுத்துவிட்டன.
இறைவாக்கினருக்குரிய துணிவுடன், இன்றைய இந்தியாவின் உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டிய மானிக் ஷொர்கார் அவர்களைப் போல், இறைவாக்கினர்களாக வாழும் பல தலைவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல் பணியாற்றும் இத்தகையத் தலைவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்கவேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லித்தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று, இன்றைய மாற்கு நற்செய்தியின் அறிமுக வரிகள் நமக்குச் சொல்கின்றன: மாற்கு நற்செய்தி 1: 21-22
இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல. அவர்கள் அதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் அந்தப் போதனை ஒலித்தது. இயேசுவுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், இயேசுவின் அதிகாரம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

அதிகாரம் என்று நாம் தமிழில் பயன்படுத்தும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் இரு வேறுபட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அர்த்தங்களில் ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று குறிப்பாகச் சிந்திக்க வேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு, ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது அர்த்தத்தை வார்த்தைகளால் விளக்குவதற்குப் பதில், ஒரு கற்பனைக் காட்சியின் வழியே புரிந்துகொள்ள முயல்வோம். உலகத்தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள், ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், அவர்களைச் சுற்றி மெய்காப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்று, பலர் வருவார்கள். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கரவொலி எழுப்ப வேண்டியிருக்கும்.
அந்நேரம், அந்த அரங்கத்தினுள், அன்னை தெரேசா, காந்தியடிகள், நெல்சன் மண்டேலா, அப்துல் கலாம், அல்லது, மக்களின் மனங்களில் உயர்ந்த இடம் பிடித்திருக்கும் ஓர் உன்னத மனிதர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச்சுற்றி பலர் நடந்து வரவும் தேவையில்லை. அவர் அங்கு நுழைந்ததும், அந்த அரங்கத்தில் உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில் இருக்கும். அங்கிருப்போர், யாருடையத் தூண்டுதலும் இல்லாமல், எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர், நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம்.

இந்த இரண்டாவது வகையில், மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான அறிவு, அந்த அறிவின் அடிப்படையில் அதைப்பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அவர் தன்னிலேயேப் பெறும் அதிகாரம்... இது, இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம்.
பல ஆண்டுகள், பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு, மின்விளக்கை உருவாக்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன். மின்விளக்கைப் பற்றிப் பேச, இவரைவிட, யாருக்கு அதிகாரம் இருக்கமுடியும்? எடிசன் அவர்கள், எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு, 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.

அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கமுடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.
போட்டியிட்டுப் பெறும் பதவிகள் வழியே, ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது, உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம், அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில், ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆவல் இருக்காது. ஒருவர், சுயமாக, தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேசவைக்கும். அது, கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழிநடத்தும்.

இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சேர்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்தவற்றை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே, அவர் சொன்னவை, மக்களை வியப்பில் ஆழ்த்தின. அதுவரை, சட்ட நூல்களிலிருந்து மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல் மறைநூல் வல்லுனர்கள் போதித்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் அதிகம் இருந்தன. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை, இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் இந்த அதிகாரத்துடன் போதித்தார்.

கடவுளால் அனுப்பப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப்பற்றி இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கு விளக்கி, தங்களை இதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற இறைவாக்கினர், இறக்கும் நிலையில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்துள்ளன, மோசேயின் சொற்கள்: இணைச்சட்டம் 18: 15-20

மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர், அரியணைகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்தவில்லை. பலர் பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் பெயரால் பேசுகிறோம் என்ற அந்த அதிகாரம் ஒன்றே, அவர்களை, துணிவுடன் செயல்பட வைத்தது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை வாக்காகவே வந்த இயேசு, அதிகாரம் என்ற சொல்லுக்கு இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார்.

இயேசு அதிகாரத்துடன் போதித்தபோது, மூன்று வகை விளைவுகள் ஏற்பட்டன. சாதாரண மக்கள் அவரது போதனையைக் கேட்டு வியப்புற்றனர். தீய ஆவி பிடித்த ஒருவர், இயேசுவைக் கண்டதும் பயந்தார். இயேசு அந்த ஆவி மீது அதிகாரத்துடன் செயல்பட்டார். ஆவியை விரட்டினார். மற்றுமொரு விளைவு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பின்னர், நான்கு நற்செய்திகளில், பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதுதான், மறைநூல் அறிஞர்களுக்கு ஏற்பட்ட விளைவு. அவர்கள் இயேசுவின் இந்த அதிகாரத்தைக் கண்டு பொறாமைப்பட்டனர். தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்று பயந்தனர். அந்தப் பயத்தை மூடி மறைத்துவிட்டு, இயேசுவின் அதிகாரத்தை மக்கள் முன் குலைக்கும் முயற்சிகளில் இறங்கினர். மீண்டும் மீண்டும் தோல்வி கண்டனர்.

நாம் வாழும் இந்நாட்களில், அதிகாரம் என்பதன் உண்மையான இலக்கணத்தை தன் சொல்லாலும், வாழ்வாலும் சொல்லித் தருபவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இவர், 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு திருநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்றார். அத்திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரை, அதிகாரம் என்ற சொல்லுக்கு, ஆழமும் அர்த்தமும் தந்தது. தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதை தெளிவாக்கினார் திருத்தந்தை. இதோ, திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:
பணிபுரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, வறியோர், வலுவிழந்தோர், சமுதாயத்தில் எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்கமுடியும்.

குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும், அதிகாரம் என்பதை, சரியான கண்ணோட்டத்தில் நோக்குவதற்கு, இன்றைய வாசகங்கள் பெரிதும் உதவுகின்றன. அயலவரை அடக்கி ஆள்வதால் அல்ல, மாறாக, நமக்குள் நாமே வளர்த்துக்கொள்ளும் உன்னதப் பண்புகளால், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று, இயேசு வாழ்ந்து காட்டிய அந்த வழியில் வாழ, இறையருளை மன்றாடுவோம்.


Tuesday, January 23, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 1


Sending and receiving SOS in a ship

இமயமாகும் இளமை -  சந்தடிகளால் சந்தர்ப்பங்களை இழக்க நேரிடும்!

பல ஆண்டுகளுக்குமுன், இலண்டன் மாநகரில், ஒரு கப்பல் நிறுவனம், நேர்காணல் ஒன்றை நடத்தியது. கடல் பயணத்தின்போது, அவசரச் செய்திகளைப் பெறுவதிலும், அனுப்புவதிலும் கவனமாகப் பணியாற்றக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்வதற்காக அந்த நேர்காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலில் பங்கேற்க வந்திருந்த பல இளையோர், ஓர் அரங்கத்தில் கூடியிருந்தனர். அக்காலத்தில், தந்திச் செய்திகளை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒலிவடிவங்கள், அந்த அரங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி வழியே, அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தன. ஆனால், அவ்வறையில் கூடியிருந்த இளையோர் பேசி, சிரித்துக்கொண்டிருந்ததால், அந்த ஒலியை யாரும் கேட்க இயலாமல் போனது.
அவ்வேளையில், அந்த அரங்கத்திற்குள் நுழைந்த ஓர் இளையவர், சப்தமிட்டுக்கொண்டிருந்த இளையோரைவிட்டு விலகி, அமைதியாக ஓர் ஓரத்தில் அமர்ந்தார். சில நொடிகளில், அவர் திடீரென எழுந்து, அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தார். சில நிமிடங்களில் வெளியே வந்த அவர், தனக்கு வேலை கிடைத்துவிட்ட மகிழ்வை மற்றவர்களிடம் கூறினார்.
ஏனைய இளையோர், அவரிடம், "நீ எங்களுக்குப் பின் இங்கு வந்தாய். எங்களுக்கு முன் உள்ளே செல்வதற்கு உன்னை யார் அழைத்தார்கள்?" என்று கேட்டனர். அவர் அவர்களிடம், "இந்த அரங்கத்தில் உள்ள ஒலிபெருக்கி வழியே, உள்ளே வரும்படி அழைப்பு ஒன்று, தந்தி ஒலிவடிவத்தில் வந்தவண்ணம் இருந்தது. ஆனால், அந்த அழைப்பைக் கேட்க முடியாதவாறு, நீங்கள் சப்தமாகப் பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் அந்த ஒலிவடிவத்தைக் கேட்டேன், உள்ளேச் சென்றேன், வேலை கிடைத்தது" என்று சொல்லிவிட்டு, புன்னகையோடு அங்கிருந்து சென்றார்.
உலகின் சந்தடிகளில் தங்களையே இழந்துவிடும் இளையோர், சந்தர்ப்பங்களையும் இழக்க நேரிடும்!


Jesus and Mary at the Wedding in Cana

தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 1

தை பிறந்தால், வழி பிறக்கும் என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன், தை பிறந்தது. வழியும் பிறந்திருக்கும் என்று நம்புகிறோம். வழி பிறக்கும் என்ற சொற்றொடரில்தான் எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்! வழி பிறக்கும் என்று சொல்லும்போது, நம் உள்ளங்களில் பல கனவுகள் வலம் வருகின்றன. குழந்தை பிறக்கும்; குழந்தை படித்து, நன்கு தேர்ச்சி பெறும்; தேர்ச்சி பெற்று பட்டதாரியான மகளுக்கு, மகனுக்கு வேலை கிடைக்கும்; வேலை கிடைத்த கையோடு, வாழ்க்கைத் துணையும் கிடைக்கும்; திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் வாய்ப்பு வரும்... இப்படி, எத்தனை, எத்தனை கனவுகள்?
தை பிறந்தால், வழி பிறக்கும் என்ற வார்த்தைகளை வைத்து இணையதளத்தில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர், இந்த பழமொழியை, "தை பிறந்தால், வலி பிறக்கும்." என்று பதிவு செய்திருந்தார். இன்னொருவர், அதைச் சுட்டிக்காட்டி, "நண்பா, அது வலி அல்ல, வழி." என்று திருத்தி எழுதி இருந்தார்.

தமிழில், வலி, வளி, வழி என்று மூன்று வார்த்தைகளும் உள்ளன. வலி என்றால், துன்பம், வளி என்றால், காற்று, வழி என்றால், பாதை. தை பிறந்தால், பாதை பிறக்கும் என்பதைத்தான் நம் பழமொழியில் சொல்லிவருகிறோம். ஆனால், அந்த வழி பிறக்க, வலிகளைத் தாங்கவேண்டும். வீசுகின்ற வளியை, சூறாவளியைச் சமாளிக்கவேண்டும். இவையின்றி, எளிதாக வழி பிறக்காது. அப்படி வலிகளைத் தாங்கி, சூறாவளிகளைச் சமாளித்து, இரு வேறு குடும்பங்கள் ஒன்றிணைந்து, இளையோரின் வாழ்வில் நல்லதொரு வழியை உருவாக்கும் ஒரு முயற்சி, நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்கள். நாம் துவக்கத்தில் பட்டியலிட்ட கனவுகளிலேயே மிகக் கடினமான கனவுகள் என்று நமது பழமொழிகள் உணர்த்தும் இரு கனவுகள்: "கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்." எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், கல்யாணங்கள் நடக்கின்றன, வீடுகளும் கட்டப்படுகின்றன.

தை மாதத்தில், பல இல்லங்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். தை பிறந்திருக்கும் இவ்வேளையில், நம் விவிலியத் தேடலில், ஒரு கல்யாணத்தில் நிகழ்ந்த புதுமையை மையப்படுத்தி, நாம் தேடலை மேற்கொள்வது பொருத்தமாகத் தெரிகிறது. ஆம்... கானா என்ற ஊரில் நிகழ்ந்த திருமணத்தில், இயேசு, தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றிய புதுமையில், (யோவான் 2:1-11) நம் தேடல் பயணத்தை இன்று துவக்குகிறோம். யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் புதுமைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன், யோவான் நற்செய்தியில் காணப்படும் புதுமைகளைக் குறித்து பொதுவாக புரிந்துகொள்ள முயல்வோம்.

யோவான் நற்செய்தி, மற்ற மூன்று நற்செய்திகளைவிட, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட நற்செய்தி. மேலும், இயேசுவின் சீடர்களிலேயே மிக இளையவராகவும், இயேசுவுக்கு நெருங்கியவராகவும் இருந்த யோவான், ஏனையச் சீடர்களைப்போல் மறைசாட்சிய மரணம் அடையாமல், முதுமையடைந்து உயிர்துறந்தவர் என்றும் கருதப்படுகிறார். அவர், இயேசுவின் வாழ்வை, மிக ஆழமாக அசைபோட்ட வண்ணம் வாழ்ந்திருக்கவேண்டும். எனவே, அவர், இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்தனவற்றை  நற்செய்தியாகத் தொகுத்தபோது, அதை, வெறும் வரலாற்றுப்பதிவாக மட்டும் தருவதற்குப் பதில், அந்நிகழ்வுகளை, ஓர் இறையியல் கண்ணோட்டத்தோடு பதிவு செய்துள்ளார்.

இயேசு ஆற்றிய புதுமைகளை, நற்செய்தியாளர் யோவான், 'செமெயியோன்' (Semeion) அதாவது, "அரும் அடையாளங்கள்" என்றே குறிப்பிடுகிறார். கானா திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியபின், "இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது" (யோவான் 2:11) என்று குறிப்பிட்டுள்ளார். அதேவண்ணம், இந்த நற்செய்தியில் நாம் வாசிக்கும் இரண்டாவது புதுமை, அரச அலுவலரின் மகனை இயேசு குணமாக்கியப் புதுமை. அந்தப் புதுமையின் இறுதியிலும், "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே" (யோவான் 4:54) என்று குறிப்பிடுகிறார், யோவான்.
இவ்விரு அரும் அடையாளங்களும் கலிலேயாவில் நிகழ்ந்தன என்பதைக் கூறும் யோவான், இவ்விரு புதுமைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இயேசு மற்ற இடங்களிலும் புதுமைகள் செய்திருக்கிறார் என்பதை, சொல்லாமல் சொல்கிறார். எனவேதான், "வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன" (யோவான் 20:30-31) என்று தன் நற்செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த நற்செய்தியின் பிற்சேர்க்கையான 21ம் பிரிவின் இறுதியிலும், "இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்" (யோவான் 21:25) என்று யோவான் நற்செய்தி நிறைவு பெறுகிறது.

இயேசு செய்த அரும் அடையாளங்கள் அனைத்தையும் தான் எழுதவில்லை என்பதையும், அவற்றை எழுதினால் இவ்வுலகமே கொள்ளாது என்பதையும் தெளிவாகக் கூறும் புனித யோவான், தன் நற்செய்தியில் ஏழு அரும் அடையாளங்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். இந்த ஏழு அரும் அடையாளங்களை பதிவு செய்வதற்கு அவர் கூறும் காரணம், இயேசுவை, இறைமகனாக, மெசியாவாக நாம் நம்பவேண்டும் என்பதே. இந்த ஏழு அரும் அடையாளங்களில், கானா திருமணத்தில் நிகழ்ந்த புதுமையும், தன் நண்பரான இலாசரை இயேசு உயிர்ப்பித்த புதுமையும், யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 5000 பேருக்கு இயேசு உணவளித்த புதுமை, யோவான் நற்செய்தி உட்பட நான்கு நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள ஒரே புதுமை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

கானா திருமண நிகழ்வுக்குத் திரும்புவோம். யோவான் நற்செய்தியில், இந்நிகழ்வு, பின்வரும் வரிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
யோவான் 2: 1-3
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார்.
கானாவில் திருமணம். இயேசுவின் தாய் அங்கு இருந்தார். இயேசுவும், சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தனர். இரசம் தீர்ந்துவிட்டது... இப்போது நாம் வாசித்த நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் இவை.
மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பிறப்பைக் குறித்த விவரங்களை வழங்கும்போது, இளம்பெண் மரியாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். யோவான் நற்செய்தியிலோ, அன்னை மரியா, கானா திருமணத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறார். மேலும், மத்தேயு, லூக்கா இருவரும், மரியா என்று பெயரிட்டு குறிப்பிடும்போது, யோவான் அவரை, 'இயேசுவின் தாய்' என்ற அடைமொழியால் மட்டும் குறிப்பிடுகிறார். "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற அந்த அறிமுக இறைவாக்கியம், அன்னை மரியாவைக் குறித்து, அழகான, ஆழமான உண்மைகளை கற்றுத்தருகின்றது.

இயேசுவும், அவரது சீடரும் அழைப்பு பெற்றிருந்தனர் என்று கூறும் யோவான், மரியாவைக் குறித்துப் பேசும்போது, இயேசுவின் தாயும் அங்கு இருந்தார் என்று மிக எளிமையாகக் கூறியுள்ளார். இயேசுவின் தாய்க்கு அழைப்பு இருந்ததா? சொல்லப்படவில்லை. ஆனால், அவர் அங்கு இருந்தார். இருந்தார் என்று சொல்லும்போது, திருமணத்திற்கு முன்பே அவர் அங்கு சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.

ஒரு குடும்பத்தில் திருமணம் என்றால், மிக மிக நெருங்கியவர்கள், ஒரு சில நாட்களுக்கு முன்னரே அங்கு சென்று, அந்தத் திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்வா், இல்லையா? நமது கிராமங்களில், சின்ன ஊர்களில், தாராள மனம் கொண்ட சில நல்ல உள்ளங்கள், அந்த ஊரில் திருமணம் நடைபெறுகிறது என்றால், அவர்கள் சொந்தம், சொந்தமில்லை என்பதையோ, அழைப்பு வந்தது, வரவில்லை என்பதையோ, கொஞ்சமும் சிந்திக்காமல், அந்த வீடுகளுக்கு உரிமையுடன் சென்று, தாங்களாகவே, வேலைகளை, இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர், திருமணங்கள் முடிந்ததும், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அந்த இடத்தை விட்டு வெளியேறுவதையும் பார்த்திருக்கிறோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த நோக்கமும் இல்லாமல், வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செயல்படும் இத்தகைய அன்பு உள்ளங்கள், உலகத்தில் இன்றும் நடமாடுகிறார்கள். இதுவே நாம் சிந்திக்க வேண்டிய முதல் புதுமை!
வாழும் இந்தப் புதுமைகளின் முன்னோடியாக, நம் அன்னை மரியா கானா திருமணத்தில் கலந்துகொண்டார். மரியாவை இந்த கோணத்தில் நாம் பார்க்க உதவியாகத்தான், நற்செய்தியாளர் யோவான், "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்று, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எளிமையாக, எப்போதும் நடக்கும் ஒரு செயல்போல, அன்னை மரியாவை இவ்வாறு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

"இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற இந்த வாக்கியத்தில் புதைந்திருக்கும் இன்னும் சில பாடங்களைப் பயில்வதற்கும், இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்பு பெற்றிருந்ததைப் புரிந்துகொள்வதற்கும், நாம் அடுத்த தேடலில் முயல்வோம்.