Tuesday, May 31, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 24

Sunday's Drama Skit - Jesus Heals the Paralytic Man

இவ்வுலகத்தில் உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை தலாய்லாமா அவர்களிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில், நமது விவிலியத் தேடலை இன்று ஆரம்பித்து வைக்கிறது.
"இவ்வுலகில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மனிதர்களே. அவர்கள் தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனிதர்கள் நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை... எதிர்காலத்திலும் வாழ்வதில்லை.
இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள்." என்று தலாய்லாமா சொன்னார். வெகு ஆழமான வார்த்தைகள்... நலமளிக்கும் புதுமைகள் பற்றி சிந்தித்துவரும் நமது தேடலை இன்று துவக்கி வைக்க, பொருத்தமான வார்த்தைகள். நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ள புதுமைகள் வரிசையில், இன்று, முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்வில் நம் தேடல் ஆரம்பமாகிறது.
பொதுவாகவே, இயேசு ஆற்றியப் புதுமைகளை அவருடைய இறை வல்லமை வெளிப்படும் அருங்குறிகள் என்ற கோணத்தில் பார்ப்பது நம் வழக்கம். அதே நேரத்தில், இயேசு அந்தப் புதுமைகைளை ஆற்றியபோது இருந்த சூழ்நிலை, அந்தப் புதுமையில் பங்கு பெற்றவர்கள் ஆகியவைப் பற்றியும் சிந்திப்பது பயனளிக்கும். இந்த கண்ணோட்டத்துடன், இன்று நாம் சிந்திக்கவிருக்கும் புதுமையின் ஆரம்ப வரிகளை, லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா, 5, 17-19
ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.

'இயேசு கற்பித்துக் கொண்டிருந்தார்' என்பதைக் கூறும் நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவைச்  சுற்றி, எளிய மக்கள் கூடியிருந்தனர் என்பதை சொல்லாமல் சொல்கிறார். அத்துடன், குணமளிக்கும் புதுமைகளின் வழியே வெளிப்பட்ட இயேசுவின் வல்லமை, பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. ஏராளமான எளிய மக்கள், தங்கள் வாழ்விலும் ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு இயேசுவைத் தேடி வந்தார்கள். இவர்களெல்லாம் வந்தது சரிதான். ஆனால், யூதேயாப் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும், பரிசேயர்கள், திருச்சட்ட ஆசிரியர்கள் வந்திருந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார். இவர்களுக்கு அங்கே என்ன வேலை?
ஓர் எடுத்துக்காட்டுடன் இதைப் புரிந்துகொள்ள முயல்வோம். மதுரை அல்லது திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஒரு சின்ன ஊரில் வாழும் ஒரு தச்சுத் தொழிலாளியிடம் அசாத்திய திறமைகள், சக்திகள் வெளிப்படுவதாகவும், அவர் வழியாக ஒரு சில நல்ல காரியங்கள் நடப்பதாகவும், அந்த ஊரை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் போகின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன என்று வைத்துகொள்வோம். விரைவில், அந்த ஊருக்கு, சென்னையிலிருந்து, அல்லது, டெல்லியிலிருந்து, அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும் போக வேண்டிவரும். இவர்கள் ஏன் அங்கு போக வேண்டும்? சம்பவங்களில் பங்கேற்கவா? பயன் பெறவா? இல்லை. அங்கு நடப்பதைப்பற்றி மேலிடத்திற்கு விவரங்கள் சொல்லவேண்டும், அல்லது, அந்த சம்பவத்தின் மையமாக இருப்பவர் எப்படிப்பட்ட ஆள், அவர் செய்யும் காரியங்கள் சட்டப்பூர்வமானவைதானா என்ற கேள்விகளுக்கு விடை தேடவேண்டும். இவையே, இவர்களின் முக்கிய நோக்கம். மேலிடத்தின் கை பொம்மைகள் இவர்கள்.
இவ்வாறு, எளிய மக்கள், பரிசேயர்கள், திருச்சட்ட ஆசிரியர்கள் என, இயேசுவைச் சுற்றி கூடியிருந்தவர்களிடம் பல்வேறு நோக்கங்கள் இருந்தன. இந்நேரத்தில், இன்னும் நான்கு பேர் அங்கு வந்து சேர்ந்தனர். ஒரு வகையில் சொல்லப் போனால், இவர்கள்தாம் இன்றையப் புதுமையின் நாயகர்கள்.

இந்த நான்கு நண்பர்களும் வெறும் ஆர்வக் கோளாறினால் அங்கு வரவில்லை. ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தனர். பல ஆண்டுகளாய் செயல் இழந்து படுக்கையில் இருக்கும் தங்கள் நண்பனைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்திருந்தனர். தங்கள் நண்பனின் அவலமான நிலையைக் கண்டு, இதுதான் அவனுக்கு வந்த விதி என்று, அவன் வாழ்வையும், தங்கள் நம்பிக்கையையும், மூடிவிடாமல், அவனுக்கு என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு வழியில், நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தவர்கள், இந்த நண்பர்கள். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டனர். தங்கள் நண்பனைக் கொண்டு வந்தனர். வந்த இடத்தில், மீண்டும் ஒரு தடங்கல். அத்தடங்கலையும், அதற்கு அந்த நண்பர்கள் கண்ட தீர்வையும், நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரிக்கிறார்.
லூக்கா, 5, 19-20
மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே, அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டனஎன்றார்.

இயேசு இருந்த வீட்டில் அதிக கும்பல். அந்த கும்பலின் வெளிச்சுற்றில் நின்றவர்கள், பரிசேயர்களும், திருச்சட்ட ஆசிரியர்களும். அவர்களைக் கடந்து தங்கள் நண்பனைக் கட்டிலோடு வீட்டினுள் இருந்த இயேசுவிடம் கொண்டு போவதென்பது மிகவும் ஆபத்தானது. காரணம்? நோயாளி, கடவுளிடமிருந்து சாபம் பெற்றவன். அவனைத் தொட்டாலோ, அல்லது அவன் தங்களைத் தொட்டாலோ, தாங்கள் தீட்டுப்படுவோம் என்பதால், நோயாளி கூட்டத்திற்குள் வந்துவிட்டான் என்று கண்டுபிடித்தால் அவனுக்கு உரிய தண்டனை வழங்குவதிலேயே குறியாய் இருக்கும் கும்பல் இந்த பரிசேயர் கும்பல். இந்தக் கொடூரமான எண்ணங்களை இவர்கள் அடிக்கடி சொல்லியுள்ளதையும், அவற்றைச் செயல் படுத்தியத்தையும் பார்த்தவர்கள் இந்த நண்பர்கள். தங்கள் நண்பனை இவர்களின் சித்திரவதைக்கு உள்ளாக்காமல் இயேசுவிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று கொஞ்ச நேரம் குழம்பினார்கள். திடீரென தோன்றியது, அந்த ஒளி. ஒரு புதுப்பாதை தெரிந்தது. இயேசு நின்ற இடத்திற்கு மேலிருந்த கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன்பு இறக்கினார்கள். இவர்களது நம்பிக்கையை ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.

கட்டிலை வீட்டின் கூரை மீது ஏற்றியது, ஓடுகளைப் பிரித்தது என, அவர்கள் செய்தது மிகவும் ஆபத்தான செயல்கள்.  இயேசு போதித்துக்கொண்டிருந்த வீடு ஒரு மாளிகை அல்ல, எளிய வீடு. அந்த வீட்டுக் கூரையின் மீது நான்கு, ஐந்து பேர் ஏறினால், கூரை முழுவதும் உடைந்துவிடும் ஆபத்து உண்டு. வீட்டின் கூரை முழுவதும் உடைந்திருந்தால்... கீழே இருந்த பலருக்கும், இயேசுவுக்கும் சேர்த்து ஆபத்து. இப்படி பல வகையிலும் ஆபத்து நிறைந்த செயலை அவர்கள் செய்தனர். இதைத்தான் வெறி என்று சொன்னேன்.
தலைக்கு மேலே வெள்ளம் போனபின், சாண் என்ன, முழம் என்ன என்ற வரிகள் நினைவிருக்கலாம். நம்பிக்கை இழக்கச் செய்யும் இந்த வரிகளை இன்னும் தொடர்ந்து சிந்திப்போம்... தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளத்தில் தத்தளிக்கும்போதுகரை தெரிந்தால், எஞ்சியிருக்கும் வலிமை எல்லாம் கூட்டி கரையை அடைய மாட்டோமா? அப்படித்தான் இந்த நண்பர்களும்.... பல ஆண்டுகளாய் பற்பல வெள்ளங்களைச் சந்தித்தவர்கள் இவர்கள். இதோ கரை நெருங்கிவிட்டது. கூரை நெருங்கி விட்டது என்றும் சொல்லலாம். இந்த நேரத்தில் பின் வாங்கக்கூடாது. எப்படியாவது இயேசுவுக்கு முன்னால் தங்கள் நண்பனைக் கொண்டு செல்லவேண்டும். கொண்டு சென்றார்கள்.

லூக்கா நற்செய்தியின் 20ம் சொற்றொடரில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்க தூண்டுபவை. "அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு..." ஆம்... கட்டிலில் கிடந்தவர் நம்பிக்கையை விட அவரைத் தூக்கிவந்தவர்கள் நம்பிக்கை, இயேசுவை அதிகம் கவர்ந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நோயுற்றவரை இயேசு குணமாக்குகிறார்.

இயேசுவின் பல குணமளிக்கும் நிகழ்வுகளில் குணமிழந்த தனி மனிதனுக்கு மட்டும் குணமளிக்காமல், சுற்றி நிற்கும் பலருக்கும் குணமளிக்கிறார், இயேசு. தொழுநோயாளியைத் தொட்டு குணமாக்கினார் என்று சென்ற வாரம் பார்த்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார். இன்று மீண்டும் இயேசு அதையே செய்கிறார். சூழ இருந்தவர்களை இயேசு குணமாக்கிய நிகழ்வை லூக்கா இவ்விதம் விவரித்துள்ளார்.
லூக்கா, 5, 20-26
அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டனஎன்றார். இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர். அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? 'உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன' என்பதா, அல்லது 'எழுந்து நடக்கவும்' என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட யாவரும் மெய்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!என்று பேசிக்கொண்டார்கள்.

அந்த முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, "குணம் பெறுக." என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்று கூறுகிறார். பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக் கைவந்த கலையோ என்றுகூட நான் சில சமயங்களில் எண்ணுவதுண்டு.
ஆழமாக சிந்தித்தால்பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல... மாறாகபிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட முயற்சி இது என்பதை உணர்வோம்.. இயேசு முடக்குவாதமுற்றவரது உடலை மட்டும் குணமாக்க விரும்பவில்லை. அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்த சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி அவருக்கு முழு குணம் அளிக்கவே, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார்.

இயேசு அவருடைய பாவத்தை மட்டுமல்ல, சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும், முக்கியமாக முடக்குவாதமுற்றவருக்கு இதுவரை தவறான தீர்ப்புகள் அளித்து, அவரையும், தங்களையும், கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மக்கள் எல்லாருடைய பாவங்களையும் இயேசு மன்னிக்கிறார். மன்னிப்பினால் உருவாகும் நன்மைகளை நாம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.Thursday, May 26, 2016

The ‘why’ of the Body and Blood of Christ கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம்... ஏன்

Corpus Christi

The Feast of the Body and Blood of Christ.

Most of us would have received our First Holy Communion while in the elementary school. At that time, either our Parish Priest or some kind-hearted Nun would have helped us prepare for this great moment. Part of this preparation was the catechism class, usually filled with stories and anecdotes from real life. If we have not out-grown these stories, we are blessed indeed! I do remember quite a few of these stories and anecdotes. Also, I do have many lovely memories of the way Corpus Christi processions were held in my parish and, later, in other places during my Jesuit life. All these stories and all these memories come flooding to my mind while I reflect on this Feast.
This Feast is probably THE MOST SIGNIFICANT FEAST to tell us what God’s love is all about. While we are engulfed by love, the best response we can give is, to let go… to enjoy the experience. If one were to raise questions about love… the what, why and how of love, then we would lose love. Having said that, we are aware that human mind is a workshop constantly churning out questions and that we cannot avoid this. Let us try and answer some of the questions that creep into our minds about this Love Feast.
Last week, when we reflected on the Feast of the Holy Trinity, we said that if we wished to understand the great mystery of the Holy Trinity, then we needed to raise the proper questions -  not trying to understand the ‘how’ of the mystery, as St Augustine tried, but more in terms of the ‘why’ of the Triune God.
Today again, it is much better to raise the ‘why’ question than the ‘how’ question. How is Christ present in the two species – bread and wine? Volumes have been written on this question. They may not help us appreciate the depth of this mystery. Why is Christ present in bread and wine? Here is my simple answer to this question: First, bread and wine are the simple, staple food of the Israelites. Jesus wanted to leave his presence with us in the most ordinary, essentials of our daily life. Second, once food is taken, it gets integrated as our own body and blood. As food is integrated in one’s body, Jesus would like to become integrated with human beings. This answer may not measure up to the level of a ‘treatise’; but it makes some sense to me.

I guess it is enough to leave questions and get back to some of the inspiring incidents related to Christ’s Real Presence in the lives of great souls.

Fr Pedro Arrupe S.J., who was Superior General of the Society of Jesus for fifteen years, narrates how he had personally met Jesus and decided to follow him.
Pedro was a brilliant student of medicine, winning first prize in his studies at the University of Madrid… In October 1926, nineteen year old Pedro went to Lourdes as a volunteer. One day he accompanied the procession in front of the Grotto, walking beside a mother who was pushing a wheel-chair in which sat her 26 year old son, a polio victim, his body crippled and completely deformed…. Then the Bishop came with the Blessed Sacrament, and made the sign of the Cross with it over the boy. At that instant, the boy leapt from his chair completely cured.
Pedro said: “I returned to Madrid; the books kept falling from my hands. My fellow students asked me: ‘What’s happening to you? You seem dazed!’ Yes, I was dazed by the memory which upset me more each day; only the image of the Sacred Host raised in blessing and the paralyzed boy jumping up from his chair remained fixed in my heart.” Three months later Pedro gave up his medicine studies and entered the Novitiate of the Society of Jesus at Loyola, to a life of ‘distinguished service as a Jesuit’.

The first atom bomb on August 6, 1945, destroyed Hiroshima. The Jesuit novitiate in a suburb of that city was one of the few buildings left standing, though all its doors and windows had been ripped off by the explosion. The novitiate was turned into a makeshift hospital. The chapel, half destroyed, was overflowing with the wounded, who were lying on the floor very near to one another, suffering terribly, twisted with pain.
In the midst of this broken humanity, the novice master Fr Pedro Arrupe, celebrated Mass the very next day of the disaster. “I can never forget the terrible feelings I experienced when I turned toward them and said, ‘The Lord is with you’. I could not move. I stayed there as if paralyzed, my arms outstretched, contemplating this human tragedy… They were looking at me, eyes full of agony and despair as if they were waiting for some consolation to come from the altar. What a terrible scene!”

The former archbishop of San Francisco, John Quinn, loves to tell the story of the arrival of Mother Teresa and her Missionaries of Charity to open their house in the city. Poor Archbishop Quinn had gone to great lengths to make sure that their convent was, while hardly opulent, quite comfortable. He recalls how Mother Teresa arrived and immediately ordered the carpets removed, the telephones, except for one, pulled out of the wall, the beds, except for the mattresses taken away, and on and on. Explained Mother Teresa to the baffled archbishop, “All we really need in our convent is the tabernacle!”

Dominic Tang, the courageous Chinese archbishop was imprisoned for twenty-one years for nothing more than his loyalty to Christ and his one, true Church. After five years of solitary confinement in a windowless, damp cell, his jailers came to tell him he could leave it for a few hours, to do whatever he wanted. Five years of solitary confinement and he had a couple of hours to do what he wanted! What would it be? A hot shower? A change of clothes? Certainly a long walk outside? A chance to call or write to family? What would it be? asked the jailer. “I would like to say Mass,” replied Archbishop Tang.
The Vietnamese Jesuit Joseph Nguyen-Cong Doan, who spent nine years in labour camps in Vietnam, relates how he was finally able to say Mass when a fellow priest-prisoner shared some of his own smuggled supplies. “That night, when the other prisoners were asleep, lying on the floor of my cell, I celebrated Mass with tears of joy. My altar was my blanket, my prison clothes my vestments. But I felt myself at the heart of humanity and of the whole of creation.”

St. Isaac Jogues, S.J. was a Jesuit priest, missionary and martyr who travelled and worked among the Iroquois, Huron, and other Native populations in North America. During his missionary work in North America, he had a chance to escape from the cruel clutches of the native people and return to France. While there, he wanted to celebrate Mass. Under Church law of the time, the Blessed Sacrament could not be touched with any other finger except the thumb and the forefinger. Jogues was unable to follow this law after the loss of both these fingers due to the tortures he endured in Iroquois captivity. In order to celebrate Mass, he required a special dispensation from the Pope. He was granted a dispensation to say Mass by Pope Urban VIII. Pope Urban's judgement that "it would be shameful for a martyr of Christ not to drink the blood of Christ" renewed the zeal of Isaac to work among the Indians. On a peace mission to the Iroquois in 1646, Isaac was again captured by a renegade Mohawk war party, this time with his assistant Jean de la Lande. On October 18, 1646, both missionaries were tomahawked. Their deaths marked the second and third martyrdoms of North American missionaries.

Let us set aside questions and theories about the Blessed Sacrament and try to personalise the deep experience of these great souls. Let us celebrate the Loving, Abiding Presence of Christ in our lives!


Saint Isaac Jogues with his mutilated hands

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா

இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே அவர்கள், சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு அவர் நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்தக் கோவிலில் பேத்ரோ அருப்பே அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:
"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக் குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று அருள்தந்தை பேத்ரோ அருப்பே அவர்கள் தன் நினைவுகளை எழுதியுள்ளார்.

அருள்தந்தை பேத்ரோ அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, Nakamura San என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே அவர்கள், கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக் கொண்டு, அவர் அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம், "பாதர், எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட Nakamura San சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.
ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்க முடியாத நற்கருணைப் பகிர்வு இரண்டையும் அருள்தந்தை அருப்பே அவர்கள் தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக எழுதிச் சென்றுள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழா.

நம்மில் பலர் சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப் பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள் இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், இன்னும் நம் வாழ்வில் தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள்.

குழந்தைகளாய் நாம் இருந்தபோது கற்றுக்கொண்ட பாடங்கள் பல இன்னும் நம் வாழ்வில் பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றன. வயதில் நாம் வளர்ந்த பின், சிந்திப்பதிலும் பல மாற்றங்களை உணர்ந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள் நமது குழந்தைப் பருவச் சிந்தனைகளைவிட சிறந்தவை என்று எப்போதும் சொல்லிவிட முடியாது. பல நேரங்களில் நாம் சிந்திப்பதில் குழம்பிப்போயிருக்கும்போது, குழந்தைகளைப் போல் எளிதாக, தெளிவாக சிந்திக்க முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம். பல நேரங்களில் வயதில் வளர்ந்தவர்களுக்கு, குழந்தைகள் பாடங்கள் சொல்லித் தருகின்றனர். சென்ற வாரம் மூவொரு இறைவனைப் பற்றி புனித அகஸ்தினுக்கு கடற்கரையில் ஒரு சிறுவன் சொல்லித்தந்த பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவுக்குத் தேவையான பாடத்தை மற்றொரு குழந்தையின் மூலம் பயில முயல்வோம். நாம் சந்திக்கப் போகும் குழந்தை, அன்பு மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற Leo Buscaglia என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற ஒரு குழந்தை.
அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க, ஒருமுறை Leo Buscagliaவை நடுவராக நியமித்தனர். பல குழந்தைகள் இந்தப் போட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அண்மையில் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள் Leoவிடம் விவரிக்கப் பட்டன. அக்குழந்தைகளிலிருந்து ஒரு 4 வயது சிறுவன் மிக அன்பு காட்டிய சிறுவன் என்று Leo தேர்ந்தெடுத்தார். அந்தச் சிறுவன் என்ன செய்தான்?

அச்சிறுவனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த அச்சிறுவன் அந்த முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று சிறுவன் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்." என்று சொன்னான்.
அச்சிறுவனின் இந்தச் செயலுக்காக அதிகக் கனிவுடையக் குழந்தை என்ற பரிசை அந்தச் சிறுவனுக்கு Leo வழங்கினார். அந்த முதியவரின் மடியில் எவ்விதத் தயக்கமும் இல்லாமல், உரிமையோடு ஏறி அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன், இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவின் உட்பொருளை நமக்கு சொல்லித் தருகிறான்.
அன்பை பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம். அந்த அன்பின் சிகரத்தை நமக்குக் காட்டுவது, இயேசுவின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா.

எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், இயேசு எப்படி அந்த அப்ப இரச வடிவில் பிரசன்னமாகி இருக்கிறார் என்ற கேள்விக்கு இறையியல் விளக்கங்கள் தேடுவதற்குப் பதில், இயேசு ஏன் அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கவிழைந்தார் என்பதை உணர்ந்துகொள்வது நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்களிடம் இருந்த எளிய உணவுப் பொருட்கள். இந்த உணவு இவர்கள் தினமும் உண்ட உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். எளிய வடிவங்கள் அவருக்குப் பிடித்த வடிவங்கள். எளிய உணவில், நாம் தினமும் உண்ணும் உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இணைபிரியாமல், எப்போதும் மனித குலத்துடன் தங்கியிருப்பதற்கு இயேசு இந்த வழியை நிறுவிச் சென்றார்.
இயேசுவின் இந்த பிரசன்னத்தைப் பற்றிய பல புதுமைகள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன் இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால் எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை அவருக்காக அர்ப்பணித்தனர்.
அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு இதோ:
17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித Isaac Jogues அவர்களும் ஒருவர். அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டு, அவர் தன் கை விரல்களையெல்லாம் இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urban அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கரங்களில் புனித Isaac Jogues அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.
தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் நம்மையே வழங்கும் வழிகளை இறைமகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று மன்றாடுவோம்.Tuesday, May 24, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 23

Jesus heals a leprosy patient

இயேசுவின் மனித உணர்வுகளை, குறிப்பாக, அவர் கொண்டிருந்த இரக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் புதுமைகளில், நம் தேடல் பயணம், கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வந்துள்ளது. இயேசு, தொழு நோயாளியைக் குணமாக்கியப் புதுமையில் இன்று நம் தேடலை மேற்கொள்கிறோம். இப்புதுமையை நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரித்துள்ளார்.
லூக்கா நற்செய்தி, 5/12-14
இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்என்று கட்டளையிட்டார்.

இந்த நற்செய்திப் பகுதியில், தொழுநோயாளியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் நம் கவனத்தை முதலில் ஈர்க்கின்றன.  தொழுநோயாளி, அவர், இவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்; அவன், இவன் என்றல்ல. நாம் பயன்படுத்திய பழைய மொழிபெயர்ப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போதைய மொழிபெயர்ப்பில், தொழுநோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. இது, கடந்த சில ஆண்டுகளாக நாம் பின்பற்றும் அழகான பழக்கம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்தே பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இயேசுவின் இந்தப் புதுமையைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னால், தொழுநோயாளி என்ற வார்த்தையைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். பழையத் தமிழில் தொழுநோய் உள்ளவர்களைக் குறிக்க, குஷ்டரோகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்ல வேளையாக ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளை, அதாவது, தொழுநோயாளி, leprosy patient என்ற சொற்களை இப்போது பயன்படுத்துகிறோம்.

குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது இந்த நோய் உடையவர்கள் மனிதப் பிறவியிலிருந்து ஒரு படி... ஏன், பல படிகள் தாழ்ந்த  நிலையில் உள்ள ஒரு பிறவியாக  நினைத்தோம், அவர்களை அப்படியே நடத்தினோம். சாதிய மடமை வெறியில் வாழும் இந்திய சமுதாயத்தில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்கள், ஏதோ பிறவியிலேயே குறையுடன் பிறந்தவர்கள் போல, அவர்களைப் பார்க்கும் விதம், அவர்களோடு பழகும் விதம் இவற்றில் வேறுபாடுகள் காட்டுவது, இந்திய சமுதாயத்தின் சாபக்கேடு.

குஷ்டரோகி என்பதற்கும், தொழுநோயாளி என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆங்கிலத்தில் பல வார்த்தைகளுக்கு நாம் மாற்று கண்டுபிடித்திருக்கிறோம். Servant என்ற சொல்லுக்கு domestic help, அல்லது domestic employee என்றும் handicapped என்ற சொல்லுக்கு physically challenged அல்லது diffrently abled என்றும் மாற்றங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். வார்த்தைகள் என்ன அவ்வளவு முக்கியமா என்று உங்களில் சிலர் நினைக்கலாம். ஆம், அன்பு நண்பர்களே, உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயைவிட அதிக சூடானது வார்த்தைகள் என்றும் நாம் கேட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், ஆழ்மனதில் உண்டாக்கும் எண்ணங்களுக்கும் அந்த எண்ணங்களிலிருந்து பிறக்கும் செயல்களுக்கும் வழிவகுக்கும்.

விவிலியத்தில் தொழுநோய் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது? முழு ஆராய்ச்சியில் ஈடுபட இப்போது நேரம் இல்லை. மேலோட்டமாக பாப்போம். பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியான லேவியர் நூல், யூதர்கள் வாழ்விலும், சடங்குகளிலும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், சட்டங்கள் பற்றி கூறும் நூல். இந்நூலில் 13, 14 ஆகிய பிரிவுகள், தொழுநோய் பற்றி விவரமாகக் கூறுகின்றன. இந்த நோய் கண்டதும், குருக்களிடம் சென்று காட்டவேண்டும். நோயின் தீவிரத்தை ஆய்வுசெய்து, நோயாளி, தீட்டுபட்டவரா இல்லையா என்பதை குரு தீர்மானிப்பார். நோய் தீவிரமாக இருந்தால், நோயாளி, சமுதாயத்திலிருந்து விலக்கப்படுவார். நோய் குணமானதும், மீண்டும் குருவிடம் காட்டி, அவர் சம்மதம் அளித்தபின்னரே அவர் சமுதாயத்தில் சேர்க்கப்படுவார். இதை மனதில் கொண்டே, இயேசு தொழு நோயுற்றவரை குணமாக்கியதும், அவர் குருவிடம் சென்று சான்றிதழ் பெறவேண்டும் என்று பணித்தார்.
இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்என்று கட்டளையிட்டார்.

அன்பர்களே, விவிலியத்தில் பரிசுத்தம், புனிதம் என்ற வார்த்தைகளும், நலம் அல்லது சுகம் என்ற வார்த்தைகளும் ஒரே அடிப்படை வார்த்தையிலிருந்து வந்தவை. கடோஷ் (Kadosh) என்ற எபிரேய சொல்லுக்கு, இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. எதெல்லாம் முழுமையாக, நலமாக உள்ளனவோ, அவையெல்லாம் பரிசுத்தமாக, புனிதமாக கருதப்பட்டன.
இந்த அடிப்படையில்தான், நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், புனிதம் இழந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர், யூதர்கள். அதிலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியதை லேவியர் நூல் இவ்வாறு கூறுகிறது:
லேவியர் நூல் 13, 45-46
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

தொழு நோயாளிகள் பற்றிய எண்ணங்கள் மிக கொடுமையானவை. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வர வேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை ஒலித்தவாறு வரவேண்டும். இந்த மணி சப்தம் கேட்டதும் எல்லோரும் விலகிவிடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்கள் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி மிகுந்த தண்டனை அனுபவித்திருக்கலாம். கல்லெறி பட்டு, இறந்திருக்கலாம்.

இந்தப் பின்னணியில், இந்தப் புதுமையைக் கற்பனை செய்து பார்ப்போம். இயேசுவைச் சுற்றி எப்போதும் ஒரு சின்ன கூட்டம் இருந்தது. அந்நேரத்தில் அங்கு வந்த தொழுநோயாளியின் நிலையைக் கற்பனை செய்வோம். அவர் மனதில் எவ்வளவு போராட்டம் இருந்திருக்கும்? அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்த கோபம் வெறியாக மாறினால், கல்லெறிபட்டு சாகவும் நேரிடும் என்று தெரிந்தும், அந்தத் தொழுநோயாளி இயேசுவிடம் வருகிறார்.
இயேசு, தூரத்தில் இருந்தபடி வார்த்தைகளை கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி, அவரைத் தொடுகிறார். இயேசுவின் இச்செயல், சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக அவர்களும் நலம் பெற வேண்டும் என்பதே அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு மக்களில் பலரை மிருகங்களிலும் கேவலமாக நடத்தும் தன் இன மக்களைக் குணமாக்கவே இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளி குணமானார் என்று நற்செய்தியாளர் வெளிப்படையாகச் சொல்கிறார். இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும் குணமாயினர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். கும்பகோணத்தில் உள்ள தொழு நோய் மருத்துவமனையில், இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு மாதம் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. தொழுநோய் பற்றி எனக்குள் இருந்த பல பயங்களை இந்த பணி மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு. பல மாற்றங்கள் நடந்தது உண்மை. இருந்தாலும், ஆழ்மனதில் இருந்த, இன்னும் இருக்கும் பயங்கள் இன்னும் சுத்தமாக நீங்கவில்லை என்பதும் உண்மை.
நான் அங்கு பணி செய்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் மாலை தொழுநோய் கண்ட குழந்தைகளுடன் விளையாடும் சூழ்நிலை உருவானது. அந்நேரத்தில் ஒரு குழந்தை என்னிடம் ஒரு மிட்டாயை நீட்டியது. வாங்குவதா வேண்டாமா என்ற போராட்டம். தைரியமாக வாங்கினேன். பைக்குள் வைத்துக்கொண்டேன். அறைக்குள் சென்றபின், அதைச் சாப்பிடலாமா அல்லது, குப்பைத் தொட்டியில் போடலாமா என்ற போராட்டம். அந்த போராட்டத்தையும் வென்று, அந்த மிட்டாயைச் சாப்பிட்டேன். இது ஒரு சின்ன போராட்டம் தான். இருந்தாலும், என்னுடைய ஒரு மாத பணி அனுபவத்தில் ஓர் உச்சக்கட்டம் என்று சொல்லலாம். இந்த நோய் பற்றிய எண்ணங்களில், சின்னதாக எனக்குக் கிடைத்த ஒரு விடுதலை என்று சொல்லவேண்டும்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழுநோய் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டதென உலக நலவாழ்வு நிறுவனமான WHO, இரு ஆண்டுகளுக்கு முன் – 2014 - அறிவித்தது. இந்நோய் முற்றிலும் நீக்கப்படாத ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நோயை முற்றிலும் நீக்கும் முயற்சிகள், உலகெங்கும் இடம்பெற வேண்டும் என்று மன்றாடுவோம். இந்நோய் கண்டவர்களை மனிதப் பிறவிகளாகக் கருதவும், பரிவுடன் அவர்களுடன் பழகவும் நமக்குள் தெளிவுகளை உருவாக்க, இறைவனின் அருளை வேண்டுவோம். தொழுநோயாளியைத் தொட்டுக் குணமாக்கிய இறைமகன் இயேசு, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் நமக்கு இந்தத் தெளிவை அருள்வாராக!

Pope Francis embraces Vincio Riva while aunt Catherina looks on

இது இரக்கத்தின் காலம் :  'நீர் என்னைத் தொட்டீர், நான் நலமடைந்தேன்'

53 வயதான வின்சியோ ரீவா (Vincio Riva) என்ற இத்தாலியருக்கு, 2013ம் ஆண்டு, நவம்பர் 6ம் தேதி, அவர் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது. அன்று, அவர், தன் அத்தை கேத்தரீனா அவர்களுடன், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை வழங்கிய புதன் மறைகல்வி உரையில் கலந்துகொள்ள வந்திருந்தார்.
அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வின்சியோ அவர்களை அணைத்து, முத்தமிட்டு, ஆசீர் வழங்கிய காட்சி, உலக ஊடகங்களில் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கியது. காரணம் என்ன? வின்சியோ அவர்கள், ஓர் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, முகமெங்கும் கொப்பளங்கள் நிறைந்த விகாரத்தோற்றம் கொண்டவர். 15 வயதில் இந்த நோயால் தாக்கப்பட்ட வின்சியோவைக் கண்டதும் ஒதுங்கிச் செல்வோர் மட்டுமே அதிகம். அந்த நோய்க்குப் பின், தன் தந்தையும் தன்னை அணைத்ததில்லை என்று வின்சியோ அவர்கள் ஊடகங்களிடம் கூறினார்.
புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தையின் ஆசீரை தூரத்திலிருந்து பெறுவோம் என்ற நம்பிக்கையில் அவர் அங்கு வந்தார். ஆனால், அவரைக் கண்டதும், திருத்தந்தை, முகத்தோடு முகம் வைத்து, அணைத்து முத்தமிட்டது, அவரை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் நிகழ்ந்த இந்த அணைப்பைக் குறித்து, வின்சியோ அவர்கள் பேட்டியளித்தபோது, "நான் விண்ணகத்தில் இருந்ததைப்போல் உணர்ந்தேன். என் உள்ளத்திலிருந்து பெரியதொரு பாரம் கரைந்ததைப் போல் இருந்தது. இறைவன் என்னைக் காக்கின்றார் என்ற உறுதியுடன், நான் இனி என் வாழ்வைத் தொடர முடியும்" என்று கூறினார்.
சில நிமிடங்களே நீடித்த அந்தச் சந்திப்பைக் குறித்து பேசிய அவரது அத்தை கேத்தரீனா அவர்கள், "திருத்தந்தை அவர்கள், வின்சியோவை அணைத்து நின்றதைக் கண்டபோது, அவர், அவரை விட்டுவிடப் போவதில்லை என்பதை உணர முடிந்தது" என்று கூறினார்.

'நீர் என்னைத் தொட்டீர், நான் நலமடைந்தேன்' என்று இறைவனிடம் நாம் கூறும் வார்த்தைகள், நினைவில் நிழலாடுகின்றன.


Saturday, May 21, 2016

‘Joint family’ of God கடவுளின் கூட்டுக்குடும்பம்The Trinity at the Transfiguration

Trinity Sunday
Kids in a kindergarten class were deeply immersed in drawing. Their teacher was walking around to see each child's artwork. As she got to one little girl who was working diligently, she asked what the drawing was.
The girl replied, "I'm drawing God."
The teacher paused and said, "But no one knows what God looks like."
Without missing a beat, or looking up from her drawing the girl replied, "They will, in a minute."
If I were the teacher listening to that kid, I would have learnt my catechism anew. The adult in us says that God is ‘un-seeable’ while the child (in us) says that God is ‘waiting to be seen’! Our catechism began with the simplest of prayers – ‘In the name of the Father and of the Son and of the Holy Spirit – Amen’. The mystery behind this simple prayer is very profound – the Mystery of the Holy Trinity. Today we celebrate the Feast of the Most Holy Trinity. To celebrate this Feast, we need to become children again otherwise, this mystery will turn us into mental gymnasts, as it did St. Augustine

Most of us remember the story about St. Augustine, who was involved in a mental exercise. One day as he was walking by the seashore, his mind was engaged in a mental gymnastics, attempting to conceive of an intelligible explanation for the mystery of the Trinity. As he walked along, he saw a small boy on the beach, running to and fro between the sea and the shore. Every time the child took a scoop of water with the help of a shell, he ran to a small hole in the sand and poured the water. "What are you doing, my child?" asked Augustine. "I am trying to empty the sea into this hole," the boy answered with an innocent smile. "But that is impossible, my dear child,” said Augustine. The boy stood up, looked straight into the eyes of Augustine and replied, “What you are trying to do - comprehend the immensity of God with your small head - is even more impossible.” Then he vanished. The child was an angel sent by God to teach Augustine a lesson.
Later, Augustine wrote: "You see the Trinity if you see love." St Augustine learnt to ‘think’ of God with his heart. We can understand something of the mystery of the Holy Trinity more readily with the heart than with our feeble mind. Evagrius of Pontus, a Greek monk of the 4th century said: "God cannot be grasped by the mind. If God could be grasped, God would not be God." Vallalar, a Tamil poet and a devotee of Shiva  talks of how God can be ‘grasped’ by love (‘Anbenum pidiyul agappadum malaiye…’ – which, when translated, reads: God, the mountain, can be enveloped by the hands of love). Most of the holy persons make it clear that God is not an object to be grasped by the mind, but a subject that can be grasped by the heart, that can be bound by a relationship.

Many of the deep realities of life and the world are simply gifts to be admired and mysteries to be contemplated by the heart than ideas to be dissected and labelled into packages. Albert Einstein, one of the greatest scientists of our times, had dissected almost anything and everything under the sun and gave plausible explanation. It was he who made the famous statement: The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.”
As children each of us has the capacity to ‘contemplate’. Some of us, somehow, maintain a streak of the ‘child’ in us all our lives. An episode from the life of Franklin D. Roosevelt (FDR), the well-known president of the U.S., is worth remembering here. FDR and one of his close friends, Bernard Baruch, talked late into the night one evening at the White House. At last, President Roosevelt suggested that they go out into the Rose Garden and look at the stars before going to bed. They went out and looked into the sky for several minutes, peering at a nebula with thousands of stars. Then the President said, "All right, I think we feel small enough now to go in and go to sleep."
Perhaps what FDR was doing might have seemed ‘childish’ to his friend Bernard. But I feel that this childlike streak in FDR kept him sane in spite of being the president of the U.S. Being the President of the U.S. can easily turn an individual into a megalomaniac. FDR must have stayed sane by seeing himself in the proper perspective. The ‘child’ in him helped maintain that sanity.
Having spoken of the sanity exercised by FDR, my mind instinctively thinks of the political leaders who have won the elections in various states in India. We need to pray that these leaders develop a factual sense and a proper, honest perspective of their own real worth, so that they don’t play god!

Nourishing a healthy child within us all through life is a challenge! I guess this is why Jesus said that the only criterion to gain entry into the Kingdom lies in becoming children. In his own inimitable style, Jesus introduced the concept of the Holy Trinity to the Jews and to us. When He spoke of God in terms of relationships, many were surprised and many other ‘grown-up, important persons’ were furious. The God of the Israelites was ONLY ONE. Jesus did not change this fundamental idea, but presented this ONE GOD as a THREE-IN-ONE GOD. Basically what Jesus wanted to tell his listeners (and us) was that God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a recluse. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must shun every tendency to isolationism and individualism. The ideal Christian spirituality is not that of flight from the world like that of certain Buddhist monastic traditions where the quest for holiness means withdrawal to the Himalayas away from contact with other people and society. (Fr. Ernest Munachi Ezeogu)

The Feast of the Most Holy Trinity, the Feast of God’s Family, calls us to examine our attitude to relationships in general. Due to pressures coming from different directions in our daily life, family relationships become a casualty. May this Feast give us a fresh impetus to rethink our priorities and give due place for God and our family ties. 

மூவொரு இறைவன் பெருவிழா

மழலையர்பள்ளி (Kindergarten) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், அக்குழந்தை, "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னார்.

'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது வளர்ந்துவிட்ட ஒருவரின் கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதை ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் அற்புத வெளிப்பாடாக இறைவன் என்ற பேரொளியின் ஒரு சிறு பொறியாக இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது. “A baby is an angel whose wings decrease as his legs increase” - வானதூதராக இருக்கும் குழந்தையின் கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்துவிடுகின்றன, என்பது, ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று.

மத நம்பிக்கையுள்ள கிறிஸ்தவக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மா, அப்பா என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக அறிமுகமாவது - மூவொரு இறைவன். குழந்தையாக நாம் பிறந்ததும், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவன் பெயரால் நம்மை ஆசீர்வதித்தனர். நாம் திருமுழுக்கு பெற்றபோது, மூவொரு இறைவன் பெயரால் நமக்குரிய பெயரை வழங்கினார் பங்குத்தந்தை. பெற்றோர் கோவிலுக்குள் நம்மை சுமந்து சென்றபோதும், தட்டுத் தடுமாறி தளிர் நடைபயின்று நாம் சென்றபோதும் கோவில் வாசலில் இருந்த அர்ச்சிக்கப்பட்ட நீரால் பெற்றோர் நம்மீது சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவனை மீண்டும் மீண்டும் நமக்கு அறிமுகப்படுத்தினர். "தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால், ஆமென்" என்ற இந்த எளிய செபமும், அதனுடன் இணைந்து செல்லும் அடையாளச் செயலும் குழந்தைகளின் முதல் செப முயற்சிகள். மழலையருக்கு இவ்விதம் அறிமுகமாவதை இறைவன் நிச்சயம் மகிழ்வுடன் வரவேற்பார்.

இவ்வகையில் நமக்கு அறிமுகமான மூவொரு இறைவனை மீண்டும் நமக்கு நினைவுறுத்தும் ஓர் அழகிய விழாவை இந்த ஞாயிறு நாம் கொண்டாடுகிறோம். இன்று மூவொரு இறைவன் பெருவிழா. குழந்தைப் பருவம் முதல் மூவொரு இறைவனாக நம்முடன் வாழும் இறைவன், நாம் வயதில் வளர, வளர, ஒரு மறையுண்மையாக மாறுகிறார். இந்த மறையுண்மையைப் புரிந்துகொள்வதில் நாம் அதிகம் ஈடுபாடு கொள்ளும்போது, உண்மை இறைவனை மறந்துவிட்டு, அவரைப்பற்றி நாம் உருவாக்கியுள்ள சிந்தனைகளைக் கொண்டாடும் ஆபத்து நமக்கு ஏற்படுகிறது. பொருளுள்ள வகையில் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட வேண்டுமெனில், நாம் மீண்டும் குழந்தைகளாக மாறவேண்டும்.

மூவொரு இறைவனையும, குழந்தையையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம்மில் பலருக்கு புனித அகஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரையில் நடந்தது இந்தக் கதை. இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று புனித அகஸ்தின் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடைதேடிக் கொண்டிருந்தார். அந்தக் கடற்கரையில் ஒரு சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தார். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகஸ்தின் அச்சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றார்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த புனித அகஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனார்.

அன்று அகஸ்தின் அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை என்று சொல்வதே பொருந்தும். அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம் புனித அகஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று புனித அகஸ்தின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்கமுடியாது." என்றார் அவர். United Methodist சபையின் ஆயராகவும், இறையியல் ஆசிரியராகவும் உள்ள William Henry Willimon என்பவர், "நாம் புரிந்து கொள்கிறோம் என்பதில் நம் மீட்பு கிடையாது. நாம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறுவதில்தான் நமக்கு மீட்பு கிடைக்கும்" என்று கூறியுள்ளார். “Our salvation is not that we know, but that we are prepared to be known.” - Bishop William H.Willimon

குழந்தைகளுக்குரிய பணிவான மனதை வளர்த்துக் கொள்வதால், வாழ்வின் ஆழமான உண்மைகளை உய்த்துணரலாம். இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள, அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Franklin Roosevelt அவர்களைப் பற்றி சொல்லப்படும் ஒரு கதை உதவியாக இருக்கும். Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் ஒருவரும், ஒருநாள், வெள்ளை மாளிகையில் சந்தித்து, நாள் முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு, அவர்கள் உறங்கச்செல்வதற்கு முன், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Roosevelt அவர்களின் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவாகத் தெரிந்த வானத்தையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. இப்போது உறங்கச் செல்வோம்" என்று சொன்னார்.

அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பயிற்சியின் வழியே, தனது உண்மை நிலையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், அரசுத்தலைவர் Roosevelt அவர்கள் செய்தது குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரியலாம். ஆனால், பரந்து விரிந்த வானத்தை ஓர் ஆழ்நிலை தியானமாய்ப் பார்த்தது, Roosevelt அவர்களுக்கு அவரது உண்மை நிலையைத் தெளிவாக உணர்த்தியிருக்க வேண்டும். அத்தகைய மனநிலையோடு Roosevelt அவர்கள் உறங்கச்சென்றது, அவர் தனக்குத்தானே சொல்லித்தந்த ஓர் அழகியப் பாடம்.
ஓர் அரசுத் தலைவரைப்பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், மனம் இந்தியாவின் சில மாநிலங்களில் நடந்த தேர்தலை எண்ணிப் பார்க்கிறது, தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் சில மாநிலங்களில், பழைய, புதிய தலைவர்கள் பொறுப்பேற்க உள்ளனர். தாங்கள் கடவுள் அல்ல என்ற தெளிவான உணர்வுடன், இவர்கள் அனைவரும், மக்கள் நலனில் அக்கறை காட்டும் தொண்டர்களாக செயல்பட, இரக்கத்தின் காலம் இவர்களை வழிநடத்த வேண்டும் என்று மன்றாடுவோம்.
கடவுளுக்கு முன், அவரது அளவற்ற படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகளும், அடக்கிவிட முடியும் என்ற மமதைக் கனவுகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். மூவொரு இறைவனின் பெருவிழாவன்று இத்தகையதொரு குழந்தை மனதுடன் இறைவனை நாடிவரும் வரத்தை வேண்டுவோம்.

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவற்றிற்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்துணர்தல் ஆகிய ஆழமானத் திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்துகொண்டதை, அறிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கிவிட முடியும். ஆனால், வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் விளக்கமுடியாது.
The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.” – Albert Einstein
"இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம், பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்." என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டுபிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.

புனித அகஸ்தின் தன் உள்ளத்தின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகஸ்தின் எப்படி என்ற கேள்விக்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் பயின்றிருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு, பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும்.
எப்படி என்ற கேளிவிக்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, அதேவேளை, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித்தர இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. அதிலும் சிறப்பாக, இறைவனை தன் தந்தையாக, நம் அனைவருக்கும் தந்தையாக அவர் அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை, கோபத்தில் ஆழ்த்தியது. அதுவரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம். மூவொரு இறைவனை அறிவு வாதங்கள் வழியே அறிந்துகொள்வதற்குப் பதில், ஆழ்ந்த அனுபவங்களின் வழியே புரிந்துகொள்வதற்கு, மீண்டும் குழந்தைகளாக மாறும் வரத்தை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.