Tuesday, November 27, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 12


Mary Kom wins record sixth gold medal

இமயமாகும் இளமை - உலக சாதனை படைத்த இந்திய இளம் தாய்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி கோம் (Mary Kom Hmangte) அவர்கள், அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், ஆறாவது முறையாக தங்கம் வென்று, உலக சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் அவர்கள், ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதன் வழியே, உலக அளவில், ஆறு முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ள முதல் பெண் என்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மேரி கோம், மற்றும், அயர்லாந்து நாட்டைச் செர்ந்த, கேட்டி டெய்லர் (Katie Taylor) ஆகிய இரு பெண்களும், ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றதே, உலக சாதனையாக இருந்தது.
அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், 2002ம் ஆண்டு, தன் 19வது வயதில், முதல்முறையாக தங்கம் வென்ற கோம் அவர்கள், அதற்குப் பின்னர், 2005, 2006, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளார்.
நவம்பர் 24ம் தேதி, சனிக்கிழமை நடந்த போட்டியில், மேரி கோம் அவர்கள், உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோடா (Hanna Okhota) அவர்களை, வென்று ஆறாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றார். 35 வயதாகும் மேரி கோம் அவர்கள், 22 வயதாகும் ஹன்னா அவர்களைவிட 13 வயது மூத்தவர் என்பதும், அவர், மூன்று குழந்தைகளின் தாய் என்பதும், குறிப்பிடத்தக்கன.
மணிப்பூரைச் சேர்ந்த, டிங்கோ சிங் (Dingko Singh) என்ற இளையவர், 1998ம் ஆண்டு, பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், குத்துச் சண்டையில் தங்கம் வென்றது, குத்துச் சண்டை பயிலவேண்டும் என்ற ஆர்வத்தை, தனக்குள் உருவாக்கியது என்பதை, மேரி கோம் அவர்கள், பலமுறை, வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இலண்டனில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம் அவர்கள், 2014ம் ஆண்டு, தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வென்றார்.
இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக வழங்கப்படும் உயரிய வருதான ராஜிவ் காந்தி கேல் இரத்னா விருதையும், பத்மபூஷன் விருதையும், மேரி கோம் அவர்கள் பெற்றுள்ளார். (பி.பி.சி. தமிழ்)

Death Does Not End It All!

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 12

உலகைச் சுற்றிவந்த இரு வானதூதர்களைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதையுடன் இன்றைய விவிலியத் தேடலைத் துவக்குவோம். இவ்விரு தூதர்களும், ஒருநாள், தனித்தனியே சுமந்து சென்ற கூடைகளில், உலகிலிருந்து எழுப்பப்படும் செபங்களை சேகரித்தனர். அந்த நாள் இறுதியில், ஒரு வானதூதரின் கூடையில் செபங்கள் நிறைந்து வழிந்ததால், அதைச் சுமக்கமுடியாமல் அவர் தடுமாறினார். மற்றொருவரின் கூடையிலோ மிகக் குறைந்த செபங்களே இருந்தன.
முதல் தூதர், இவ்வுலகிலிருந்து விண்ணப்பங்களாக எழுந்த செபங்களைத் திரட்டினார். மற்றொருவரோ, இவ்வுலகிலிருந்து நன்றியாக எழுந்த செபங்களைத் திரட்டினார். 'இது வேண்டும், அது வேண்டும்' என்று கூறும் வேண்டுதல்கள் திரட்டப்பட்டக் கூடை நிரம்பி வழிய, 'நன்றி' என்று கூறும் செபங்கள் திரட்டப்பட்டக் கூடையோ, ஏறத்தாழ காலியாக இருந்தது.
கத்தோலிக்க மறைக்கல்வியில், ஐந்து வகை செபங்கள் குறித்து விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆசீருடன் கூடிய ஆராதனை செபம், விண்ணப்ப செபம், பரிந்துரை செபம், நன்றியறிதல் செபம் மற்றும் புகழுரை செபம் என்ற ஐந்து வகை செபங்கள் உள்ளன. இவற்றில், நாம் பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவன, விண்ணப்பம், மற்றும், பரிந்துரை செபங்கள்.

கிடைத்த நன்மைகளுக்காக இறைவனிடம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, நமக்காகவோ, பிறருக்காகவோ தேவைகள் உள்ளன என்று விண்ணப்பிக்கும் நேரங்களே நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் அறிவோம். மனித உணர்வுகளில், மிக அரிதாகிவரும் நன்றி உணர்வைக் குறித்து சிந்திக்க, இலாசரின் கல்லறைக்குமுன், இயேசு எழுப்பிய செபம் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
யோவான் நற்செய்தி 11: 41-42
இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் என்று கூறினார்.
இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை நிகழ்வதற்கு முன்னதாகவே, இயேசு, தன் தந்தைக்கு நன்றி கூறியதை, அவர் எழுப்பிய செபத்தில் உணர்கிறோம். அத்துடன், அவர், இச்செபத்தை, சூழ்ந்து நிற்கும் கூட்டம் நம்பும் பொருட்டே எழுப்பியதாகக் கூறினார். இலாசரின் கல்லறையைச் சுற்றி நின்ற கூட்டத்திற்கும், அவர்கள் வழியே நமக்கும் இயேசு சொல்லித்தரும் பாடம், நாம் செபத்தின் வழியே கேட்பதை பெற்றுவிட்டதாகக் கருதி, இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற பாடம்.

விவசாயத்தை நம்பிவாழும் ஒரு கிராமத்தில், ஒரு சில மாதங்களாக மழை பெய்யாமல், பயிர்கள் வாடி வதங்கின. செபத்தின் வல்லமையை நம்பிய சில விவசாயிகள் பங்குத்தந்தையை அணுகி, மழைக்காக செபிக்கும்படி கேட்டுக்கொண்டனர். கிராம மக்கள் அனைவரும், அடுத்த நாள், கோவிலில், மழைக்காக செபிக்க வரும்படி, பங்குத்தந்தை அழைப்பு விடுத்தார்.
அடுத்த நாள் காலை, நீல நிற வானில், சூரியன், பளீரென ஒளி வீசிக்கொண்டிருந்தது. மழையின் அறிகுறி ஏதுமில்லை. கோவிலுக்குள் நுழைந்த பங்குத்தந்தை, செபத்தைத் துவக்குவதற்குமுன், முதல் வரிசையில் அமர்ந்திருந்த சிறுமி மிரியத்தைக் கண்டதும், ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி மட்டும், அந்த செப வழிபாட்டிற்கு குடை ஒன்றை எடுத்து வந்திருந்தார். அச்சிறுமியின் நம்பிக்கை, கோவிலுக்கு வந்திருந்த பெரியவர்களையும், பங்குத்தந்தையையும் வெட்கமடையச் செய்தது.

மழை பொழியப் போகிறது என்ற நம்பிக்கையில், குடையுடன் வந்திருந்த அச்சிறுமியின் மனநிலையே, செபிக்கும்போது இருக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்தார் என்று, நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.
மாற்கு 11:24
இயேசு தன் சீடர்களைப் பார்த்து, "ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்" என்று கூறினார்.

தான் இறைவனிடம் கேட்பதை அவர் நிறைவேற்றியுள்ளார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு நன்றி கூறிய இயேசு, இலாசரை கல்லறையிலிருந்து வெளியே வரும்படி கட்டளையிடுகிறார்.
யோவான் 11:43-44
இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள் என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

இலாசரின் கல்லறைக்கு முன், "கல்லை அகற்றிவிடுங்கள்" என்று, சூழ நின்ற மக்களுக்கு இயேசு வழங்கிய முதல் கட்டளையைத் தொடர்ந்து, அவர், இலாசரே, வெளியே வா என்ற இரண்டாவது கட்டளையைக் கொடுத்தார். இந்தக் கட்டளையை, இயேசு உரத்தக் குரலில் கூறினார் என்று, நற்செய்தியாளர் யோவான் சிறப்பான முறையில் பதிவு செய்துள்ளார்.
38 ஆண்டுகளாக நோயுற்றிருந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்வை நாம் ஏற்கனவே சிந்தித்தோம். அப்புதுமை, ஒய்வு நாளில் நடந்ததென்ற காரணத்தைக் கூறி, இயேசுவுக்கு எதிராக கண்டனம் எழுந்தபோது, இயேசு அவர்களிடம் தனக்கு வழங்கப்பட்டுள்ள வல்லமையைக் குறித்துப் பேசுகிறார். அவ்வேளையில், காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்(யோவான் 5:25) என்று தெளிவாகக் கூறினார். அவர் கூறியதை நடைமுறையில் காட்டும்வண்ணம், இயேசுவின் குரலைக் கேட்ட இலாசர், கல்லறையிலிருந்து உயிருடன் வெளியேறினார்.

நற்செய்தியில், இயேசு சப்தமாகக் குரல் எழுப்பிய மற்றொரு நிகழ்வு, நம் நினைவுகளில் நிழலாடுகிறது. அது, கல்வாரியில், சிலுவையில் தொங்கிய வேளையில் நிகழ்ந்தது. இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார் (மத்தேயு 27:50) என்று நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ளார். கல்வாரியில், உரத்தக் குரலில் கத்தி, தன் உயிரைக் கையளித்த இயேசு, இங்கு, இலாசரின் கல்லறைக்கு முன், உரத்தக் குரலில் கத்தி, தன் நண்பனுக்கு உயிரளித்தார்.
இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர், இயேசுவின் குரல்கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும், கடவுளின் குரல் கேட்டால், மீண்டும் உயிர்பெறும்.

கல்லறையிலிருந்து வெளியே வரும் லாசரைக் கண்டதும் இயேசு மக்களுக்குத் தரும் அடுத்தக் கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்."

இலாசரின் கல்லறைக்கு முன் இயேசு வழங்கிய மூன்று கட்டளைகளில் இரண்டு, சூழ இருந்த மக்களுக்கும், ஒன்று இலாசருக்கும் வழங்கப்பட்டன. கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றுதல், கட்டுகளை அவிழ்த்தல் என்ற இரு செயல்களை செய்யும்படி மக்களிடமும், கல்லறையைவிட்டு வெளியே வரும்படி இலாசரிடமும் இயேசு கட்டளைகளை வழங்கினார்.

உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளை தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல காரியத்தை, அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்த நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். அந்நேரங்களில் இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.

நாம் வாழும் சமுதாயத்தில், கட்டுகளை அவிழ்ப்பதற்கு பதில், மேலும் மேலும் மக்களைப் பலவகைகளில் கட்டிப்போடும் மனசாட்சி அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறதோ என்ற கவலை உருவாகிறது. கருவில் வளரும் குழந்தைக்குக் கல்லறை கட்டும் முயற்சிகளில் துவங்கி, உலகில் இன்று பல வழிகளில் கல்லறைகளை உருவாக்கிவரும் நிகழ்வுகள், நம் நம்பிக்கையை நொறுக்கிவிடுகின்றன.
நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளை, ஒவ்வொரு நாளும் கேட்பதாலும், நம் கடந்த காலக் காயங்களை ஆற்றமுடியாத தவிப்பினாலும், நாம், கசப்பிலும், வெறுப்பிலும், நம்மையே புதைத்துக்கொள்ள விரும்புகிறோம். நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளில் சுகம் காண விழையும் நம்மை, இறைவன் வெளிக் கொணரவேண்டும் என்று மன்றாடுவோம். சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில், இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும், இறையருளை இறைஞ்சுவோம்.

இயேசு, இலாசரை உயிர் பெற்றெழச்செய்த இந்தப் புதுமை, கல்லறை, அதை மூடிய கல், கட்டுகள் என்று பல கோணங்களில் நம் சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. கல்லறை, கல், கட்டுகள் இவற்றையெல்லாம் தாண்டி, இறைவனின் கட்டளை, இறைவனின் குரல், நமக்கும், நாம் வாழும் உலகிற்கும், உயிர் கொடுக்க மன்றாடுவோம்.


Saturday, November 24, 2018

Our King, Fettered, but Free சிறைப்பட்டாலும், சுதந்திரமாக வாழும் மன்னன்


Jesus taken to Pontius Pilate

Feast of Christ the King

Two weeks back, on November 11, Sunday, many countries remembered a historic event. At the 11th hour on the 11th day of the 11th month of 1918, the so-called Great War (World War I) ended. To commemorate the first centenary of this event, on November 11, around 70 world leaders gathered in Paris, France. A special event was organized at the Tomb of the Unknown Soldier in the French capital. Leaders, especially two Presidents of the so called ‘super-power nations’, arrived a few minutes late, missing the exact moment to commemorate the armistice that ended World War One.

Coming late for a function, (making hundreds or thousands of others waiting) is a pathetic way of advertising one’s superiority over the others. The Presidents of the ‘super-power nations’ did exactly this on the first Centenary Commemoration of the end of World War I. Probably those leaders had conveniently forgotten the fact that asserting one’s superiority was the key issue that triggered the great war!

Our world which has witnessed two ‘World Wars’, is now witnessing the Third World War in bits and pieces (as mentioned by Pope Francis a few times)! In all these wars, the unbridled sense of superiority of the leaders has played havoc. The bloated ego of political leaders often results in unstable government, resulting in demonstrations and violence. Sri Lanka, which was recovering from years of internal strife, is, once again, facing an unstable government due to the ego-game played by politicians. Against this background, the Church today wants us to reflect on Christ as the Universal King!

The World War was one of the main reasons for establishing the Feast of Christ the King. Within a few days after the start of World War I, (July 28, 1914), Pope St Pius X passed away (August 20, 1914). His successor Pope Benedict XV who assumed the leadership of the Church on 3 September 1914, bore the full brunt of this war. He called this war “senseless massacre” and “the suicide of the civilized Europe”. Pope Pius XI who became his successor in 1922, realized that the main reason for the First World War was the insatiable thirst for power. Hence, in 1925, he proposed an alternate model of kingship in Christ. He created the Feast of Christ the Universal King!

The title of ‘Christ the Universal King’ may leave uncomfortable feelings in us. Christ the Shepherd, Christ the Saviour, Christ the Son of David, Christ the Crucified, Christ the Lamb of God…. all these titles do not create problems for us. Christ the King? Hmm… ‘Christ’ and ‘King’ seem to be two opposite, irreconcilable poles. Why do we feel so uncomfortable with the title ‘Christ the King’?
The reason for our discomfort lies with the term ‘king’, rather than ‘Christ’. The moment we think of a king, pomp and power, glory and glamour, arrogance and avarice… these thoughts crowd our mind. Would Christ be a pompous, powerful, arrogant, avaricious king? No way… He would be a King on his own terms, in his own style.
Christ does talk about a kingdom. A Kingdom not defined by a territory! No territory? Well, once this is true, then, most of the problems of kingship are over. A king who does not have a territory need not be at war with other kings. This king lays claims only over human hearts. Is such a king possible? Not only possible, but made factual in Christ the King!

So, we are talking of two different worlds, worlds that are poles apart. These two poles are represented by two figures - Pilate and Jesus - given to us in today’s gospel – John 18:33-37.
Who is Pilate? Every Sunday and on every great feast day when Christians recite the creed, they use the names of only two human persons in the creed… Virgin Mary and Pontius Pilate – the channel that infused life into Jesus and the channel that drained life out of Him. What a paradox! The person who was responsible for condemning Jesus to death, has somehow sneaked into the profession of Christian faith.
Who is this Pilate? He was the representative of the great, mighty Roman emperor – Caesar. He is referred to as the fifth Procurator of Judea. His main task was to procure taxes from the Jews and send them over to Rome. Some would even say that he was personally angry with Jesus since he had made two of his tax collectors give up their jobs: the Levi (Matthew) and Zacchaeus. Added to that, the news about Jesus cleansing the temple must have reached his ears and he may have interpreted that action as a precursor to challenging the taxes paid to Caesar. Hence, Pilate must have had a personal score to settle with Jesus.

We have heard the famous axiom: Power corrupts and absolute power corrupts absolutely. Pilate had tasted power in some ways and he was not willing to give it up. He would go to any length to safeguard his position. Here was a threat to his power and ambition – in the form of a young man named Jesus, the Nazarene, the son of a carpenter! The son of who? Pilate couldn’t believe his ears when the priests whispered to him that a young carpenter was challenging the power of Caesar and Rome. How far can a person be disillusioned, thought Pilate. Little did he realise that it was he who was the most disillusioned.

On meeting Jesus, Pilate could not but be impressed with the Nazarene. There was something magnetic about Him. He wanted to know what created this aura around this frail carpenter. He tried to engage Him in conversation about His kingdom and kingship. This is what is given in today’s gospel. He could not get any clear answer for his queries. What Jesus told him was way beyond his comprehension, since Pilate could not and, probably, did not want to think of any other way a king or kingdom could exist except the Roman way. Such a poor, narrow view! Jesus tried to tell him that truth would set him free. For Pilate truth was a distant memory. When was the last time he had been truthful? He could not remember! This is the typical image of most of the politicians today, dishing out lies, day after day, without batting an eyelid!

Even now, Pilate knew in his heart of hearts that the one who was standing in front of him was innocent. But, the moment he heard the ominous warning: "If you release this man, you are not Caesar's friend; everyone who makes himself a king sets himself against Caesar" (John 19: 12), he wanted to back off… He was willing to compromise… Yes, all his life Pilate had done only that… Finding compromises or escape routes. Compromise and truth cannot be in the same league. They are actually opposite poles. Just like… Pilate and Jesus. Pilate believed in power… in brute power… while Jesus believed in power that came from above. He warned Pilate about this power (John 19: 11).

Fr Ron Rolheiser, reflecting on this scene, has some good insights:
Jesus stands before Pilate and the crowd, shackled, helpless to walk away, seemingly a victim. Yet, in all of literature, one will never find an image of someone more free than Jesus at that moment. When Pilate says to him: “Don’t you know that I have the power to set you free or put you to death,” Jesus answers, “You have no power over me. Nobody takes my life. I lay it down of my own free will.” Pilate understood exactly what that meant, you can’t make a saint into a victim or a martyr into a scapegoat. You can’t take by force what someone has already freely given over.

Between Pilate and Jesus, who was powerful? Who was really in charge? Pilate, who was sitting on the throne so tight that others could easily see that he was ‘nailed’ to the throne; or Jesus who, even to the point of being nailed to the cross would not give up truth… now standing in front of Pilate, calm and dignified? Who was the king… the real King? All of us can answer this question intellectually. Let our prayer be, that all of us enthrone this real King in our hearts!

The Mirabal Sisters

இமயமாகும் இளமை - சர்வாதிகாரியை எதிர்த்த சகோதரிகள்

1960ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, தொமினிக்கன் குடியரசு நாட்டில் மூன்று இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டனர். அந்நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி செய்த இரஃபயேல் துருஹீயோவின் (Rafael Trujillo) கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய பலரில், பாத்ரியா (36 வயது), மினர்வா (34 வயது), தெரேசா (25 வயது) என்ற மூன்று சகோதரிகள் முக்கியமானவர்கள். மிரபால் (Mirabal) என்றழைக்கப்பட்ட இச்சகோதரிகளில் மூத்தவரான பாத்ரியா அவர்கள், "ஊழலும், அடக்குமுறையும் நிறைந்த இந்த கொடுங்கோலனிடம் நம் குழந்தைகள் வளர்வதை நாம் அனுமதிக்க முடியாது. என் உயிரே போனாலும் பரவாயில்லை. இதை நான் அனுமதிக்கமாட்டேன்" என்று கூறியிருந்தார். அந்தச் சூளுரைக்கு ஏற்ப, சகோதரிகள் மூவரும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் போராடி வந்தனர்.
1960ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, இம்மூன்று சகோதரிகளும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கள் கணவர்களைச் சந்தித்துவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். துருஹீயோவின் கூலிப்படையினர் காரை வழிமறித்து, அம்மூவரையும், கழுத்தை நெரித்து கொன்றபின், காரில் அவர்களை அமரவைத்து, அந்தக் காரை, மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். அம்மூன்று சகோதரிகளும் விபத்தில் இறந்தனர் என்ற செய்தியை கூலிப்படையினர் பரப்பினர். இம்மூன்று சகோதரிகளைப்போல், 30,000த்திற்கும் அதிகமானோர், துருஹீயோவின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டனர். துருஹீயோவின் மரணத்திற்குப் பின், இந்தக் கொலைகளைப்பற்றிய உண்மைகள் வெளிவந்தன.
இம்மூன்று இளம்பெண்களின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 25ம் தேதி, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.

Jesus before Pilate

கிறிஸ்து அரசர் பெருவிழா

இரு வாரங்களுக்கு முன், நவம்பர் 11ம் தேதி, ஞாயிறன்று, உலகின் பல நாடுகளில், ஒரு வரலாற்று நினைவு கடைபிடிக்கப்பட்டது. முதல் உலகப்போர் என்றழைக்கப்படும் ஐரோப்பிய போர், 1918ம் ஆண்டு, நவம்பர் 11ம் தேதி முடிவுக்கு வந்ததன் முதல் நூற்றாண்டு நினைவு அது. அந்த நினைவைச் சிறப்பிக்க, பல்வேறு நாடுகளிலிருந்து ஏறத்தாழ 70 தலைவர்கள், பாரிஸ் மாநகரில் கூடியிருந்தனர்.
இந்த முக்கிய நிகழ்வைச் சிறப்பிக்க வந்திருந்த உலகத்தலைவர்கள் அனைவரும், குறிப்பிட்ட நேரத்தில், ஓரிடத்தில் கூடியிருக்க, வல்லரசுகள் என்று தங்களையே பறைசாற்றிக்கொள்ளும் இரு நாடுகளின் தலைவர்கள், இந்நிகழ்வுக்கு தாமதமாக வந்துசேர்ந்தனர். பொது நிகழ்வுகளில், மற்றவர்களைக் காக்கவைத்து, தாமதமாக வந்துசேர்வது, பல தலைவர்கள் பின்பற்றும் அற்பத்தனமான ஒரு விளம்பரம். முடி சூடா மன்னர்களாக வலம்வந்த அத்தலைவர்கள், பல்வேறு வழிகளில், தாங்களே பெரியவர்கள் என நிரூபிக்க முயன்றது, பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 'யார் பெரியவர்' என்ற கேள்விதான், முதல் உலகப்போரைத் துவக்கி வைத்தது என்பதை, அவ்விரு தலைவர்களும், இன்னும் பல உலகத் தலைவர்களும் உணர்ந்துள்ளனரா என்பது சந்தேகம்தான்.

உலகத் தலைவர்களிடையே நிலவும் 'யார் பெரியவர்' என்ற போட்டியால், உலகெங்கும் அரசியல் நிலையற்ற தன்மையும், போர்களும், வன்முறைகளும் பெருகியுள்ளன. உளநாட்டுப் போரினால் பல ஆண்டுகள் சிதைந்திருந்த இலங்கை, ஓரளவு நிலைபெற்று சில ஆண்டுகளே ஆன நிலையில், மீண்டும், அங்கு நிலையற்ற அரசியல் உருவாகியிருப்பதை நாம் அறிவோம். இரு உலகப்போர்களை சந்தித்த இவ்வுலகம், தற்போது, மூன்றாவது உலகப்போரை, உலகின் பலப் பகுதிகளில், சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வருகிறது என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில வேளைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
இத்தகையச் சூழலில், கிறிஸ்துவை ஓர் அரசராகக் கொண்டாட, இந்த ஞாயிறன்று, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். கத்தோலிக்கத் திருஅவையில் இவ்விழா உருவாக, முதல் உலகப்போர் ஒரு காரணமாக அமைந்தது என்ற உண்மை, இவ்விழாவைக் குறித்தும், உண்மையானத் தலைவர்களிடையே நிலவ வேண்டிய பண்புகளைக் குறித்தும் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.

முதல் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், அந்தப் போரை, "பயனற்றப் படுகொலை" (useless massacre) என்றும், "கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை" (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்.
முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922ம் ஆண்டு, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அரசர்கள், மற்றும், அரசுத்தலைவர்களின் அகந்தையும், பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்திருந்தார். இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அனைத்துலக அரசரென அறிவித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள், குறிப்பாக, அரசுத்தலைவர்கள், பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

கிறிஸ்து அரசர் திருநாளைப் பற்றி நினைக்கும்போது, நமக்குள் ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம். ஆயன், மீட்பர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, மனதில் சங்கடங்கள் உருவாகின்றன. ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது. சங்கடம், கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, ‘அரசர் என்ற வார்த்தையில்தான்.
அரசர் என்றதும், மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம... என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் சடலங்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்!
அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வந்துசேரும் இந்தக் கற்பனை உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், தவறான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர். அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.

இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் மட்டுமே இந்த அரசு நிறுவப்படும். யார் பெரியவர் என்ற எண்ணமே இல்லாத இந்த அரசில், எல்லாருக்கும் அரியணை உண்டு, எல்லாரும் இங்கு அரசர்கள்! இந்த அரசர்கள் மத்தியில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டிருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரின், வேறுபட்ட அரசத்தன்மையைக் கொண்டாடத்தான், இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

ராஜாதி ராஜ என்று நீட்டி முழக்கிக்கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு. எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இந்த இரு வேறு அரசுகளின் பிரதிநிதிகளான பிலாத்துவையும், இயேசுவையும் இணைத்து சிந்திக்க, இன்றைய நற்செய்தி வாய்ப்பளிக்கிறது. யோவான் நற்செய்தியில், இயேசுவின் பாடுகள் குறித்து கூறப்பட்டுள்ள ஒரு காட்சி, இத்திருநாளின் நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.

நற்செய்தியாளர் யோவான், இயேசுவின் பாடுகளைப்பற்றி பதிவு செய்துள்ள 82 இறைவாக்கியங்களில் (பிரிவு 18,19) பெரும் பகுதி, தலைமைகுருவுக்கு முன்னும், பிலாத்துவுக்கு முன்னும் நிகழ்ந்த விசாரணைகளாக அமைந்துள்ளது. இவ்விரு விசாரணைகளிலும், இயேசு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில், தலைமைக்குரு, மதத்தலைவர்கள், பிலாத்து, மற்றும் அங்கிருந்த மக்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.
கரங்கள் கட்டப்பட்டு, கசையடிப்பட்டு, முள்முடி தாங்கி, சக்தி அனைத்தையும் இழந்த நிலையில், மக்கள் முன் நிறுத்தப்பட்டிருந்த இயேசு, சூழ நின்ற அனைவரையும் விட சுதந்திரமாக, சக்தி மிகுந்தவராக விளங்கினார் என்பதை, நற்செய்தியாளர் யோவான், இப்பகுதியில், நமக்கு, மீண்டும், மீண்டும் நினைவுறுத்துகிறார்.
அதற்கு நேர்மாறாக, தன் பதவியைக் காத்துக்கொள்வதற்காக, தவறான தீர்ப்பு சொன்ன பிலாத்து, பொறாமையாலும், வெறுப்பாலும் சிறைப்பட்டிருந்த மதத்தலைவர்கள், சுதந்திரமாகச் சிந்திக்கும் சக்தியை இழந்து நின்ற மக்கள் அனைவரும், பல்வேறு வழிகளில், தங்கள் சுதந்திரத்தை இழந்து, குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இன்றைய நற்செய்தியில் சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சியில், யார் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர், யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளைக் காண மறுத்து, எப்போது தன் பதவி போய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில் தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்து பெரியவரா? அல்லது, பதவி என்ன, உயிரே பறிபோனாலும், உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம் என்று, பதட்டம் ஏதுமின்றி, நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன் இயேசு பெரியவரா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்? இக்கேள்விகளின் விடை, அனைவருக்கும் தெரிந்ததே!

அரியணையில் அமர்வது ஒன்றே நிரந்தர வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டிருந்த பிலாத்து, இன்றைய உலகத் தலைவர்கள் பலரை நம் நினைவுக்குக் கொணர்கிறார். மற்றவர்களை அடிபணியச் செய்து, அல்லது, அடிபணிய மறுத்தவர்களை சடலங்களாக்கி, அவர்கள் மீது ஏறிச்சென்று, தங்கள் அரியணையில் அமர்ந்துள்ள ஆயிரமாயிரம் தலைவர்களை நாம் அறிவோம். இவர்கள் அனைவரும், உண்மைக்கு எதிர் சாட்சிகளாக வாழ்பவர்கள்.

உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள், அலங்கார அரியணைகளில் ஏற முடியாது. அவர்களில் பலர், சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம். உன்னதமான இந்தப் பாடத்தைப் பயில, கிறிஸ்து அரசருக்கு இவ்வுலகம் தந்த சிலுவை என்ற அரியணையை நாமும் நம்பிக்கையுடன் அணுகிச் செல்வோம்.

இறுதியாக, ஓர் எண்ணம்... "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி" என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆனால், மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், "குடிகள் எவ்வழி, அரசன் அவ்வழி" என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதாவது, குடிமக்கள் அடிமைகளாக வாழ தீர்மானித்துவிட்டால், அரசர்கள் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் ஆள்வர் என்பதும் உண்மை. கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இந்த விழாவன்று, அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு, தலைவர்களையும், தலைவிகளையும் துதிபாடி வாழும் மக்கள், தங்கள் தவறுகளிலிருந்து விழித்தேழவேண்டும் என்றும், உண்மையானத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தலைமைப் பொறுப்புகளை வழங்கி, அவர்களுடன் இணைந்து, நீதி நிறைந்த உலகை உருவாக்க முன்வர வேண்டும் என்றும், அனைத்துலக அரசர் கிறிஸ்துவிடம் வேண்டுவோம்.


Tuesday, November 20, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11


CNN Hero – Maggie Doyne with the Napalese children

இமயமாகும் இளமை இருநூறு குழந்தைகளின் தாயான இளம்பெண்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ ஜெர்சி மாநிலத்தில், 1986ம் ஆண்டு பிறந்த மேகி டோய்ன் (Maggie Doyne) அவர்கள், தன் 18வது வயதில், பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கல்லூரி படிப்பைத் தொடர்வதற்குமுன், ஓராண்டு விடுமுறை எடுத்து, உலகைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினார். இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இளம்பெண் மேகி அவர்கள், இமயமலை அடிவாரத்தில் தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார்:
"நான் ஒரு நாள், சாலையில் நடந்து சென்ற வேளையில், ஒரு சிறுமி, அவளது வயதுக்கு மீறிய சுமையை, முதுகில் சுமந்தவண்ணம் எனக்கெதிரே வந்தாள். என்னைக் கண்டு மிக அழகாகப் புன்னகை செய்தாள். அவளது பெயர் இலக்கோரா (Lacora) என்பதையும், அவள் ஓர் அனாதை என்பதையும் அறிந்தேன். அச்சிறுமி, ஒவ்வொரு நாளும் ஊருக்குள் சென்று, பேருந்தில் வந்திறங்கும் பொருள்களை, மலையுச்சியில் இருக்கும் தன் கிராமத்திற்கு எடுத்துச் சென்றாள். ஒருநாளில், இரண்டு, அல்லது, மூன்று முறை அவ்வாறு சுமைகளை எடுத்துச்செல்லும் அச்சிறுமி, தனக்குக் கிடைக்கும் 1 அல்லது 2 டாலர் ஊதியத்தைக் கொண்டு, தன் தம்பி, தங்கைக்கு உணவளித்து வந்தாள். அவளது நிலையைக் கண்டு என் மனம் சுக்கு நூறானது. நேபாளத்தில் நிகழ்ந்துவந்த உள்நாட்டு போரினால், இலக்கோரா போன்ற பல்லாயிரம் குழந்தைகள், அனாதைகளாக வாழ்கின்றனர் என்பதை அறிந்தேன். அதேபோல் உலகெங்கிலும், 8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அனாதைகளாக வாழ்கின்றனர் என்பதையும் அறிந்துகொண்டேன். இவ்வளவு பெரிய கொடுமையை என்னால் எப்படி தீர்க்கமுடியும் என்று மலைத்து நின்றேன்.
மற்றொரு நாள், ஹீமா (Hima) என்ற 7 வயது சிறுமியைச் சந்தித்தேன். அச்சிறுமி, சாலையின் ஓரத்தில் கல்லுடைத்துக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் அழகியப் புன்சிரிப்புடன் என்னை வாழ்த்தினாள். அவளும் அனாதை என்பதை அறிந்தேன். அத்தருணத்தில், எனக்குள் ஒரு தீர்மானம் உருவானது. உலகில் வாழும் 8 கோடி அனாதைக் குழந்தைகளுக்கு என்னால் எதுவும் செய்ய இயலாமல் போகலாம். ஆனால், இந்த ஒரு குழந்தையின் வாழ்வில் என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று முடிவெடுத்தேன்." இத்தீர்மானத்துடன், இளம்பெண் மேகி அவர்கள் தன் பணிகளைத் துவக்கினார்.
தான் வங்கியில் சேமித்து வைத்திருந்த 5000 டாலர்களைக் கொண்டு, நேபாளத்தின் கோப்பிலா (Kopila) பள்ளத்தாக்கில் ஓர் இடத்தை வாங்கினார். 5 ஆண்டுகளில், அவ்விடத்தில் ஒரு குழந்தைகள் காப்பகத்தையும், பள்ளியையும் உருவாக்கினார்.
அவரது பணியைப் பாராட்டி, CNN செய்தி நிறுவனம், 2015ம் ஆண்டு, அவருக்கு CNN Hero அதாவது, CNN நாயகர் என்ற விருதை வழங்கியது. 32 வயதான இளம்பெண் மேகி அவர்கள் தற்போது, 200க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார். அத்துடன், பெண்கள் மையம் ஒன்றைத் துவக்கி, அதன் வழியே, பெண்கள், சுயத் தொழில் புரிவதற்கு, உதவி செய்து வருகிறார்.

Jesus and Martha at Lazarus grave

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 11

இலாசரின் கல்லறைக்கு முன், இயேசு, கட்டளை வடிவில் கூறிய சொற்களில் நம் தேடலை சென்ற வாரம் துவங்கினோம். இன்று தொடர்கிறோம். கல்லை அகற்றிவிடுங்கள் என்பது, இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ" என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். ஆனால், தான் ஆற்றப்போகும் புதுமையில் கல்லறையைச் சுற்றியிருந்தோரையும் ஈடுபடுத்த விரும்பினார் இயேசு. கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப, அம்மக்களுக்குச் சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவற்றை மனிதர்களே செய்யட்டும் என்றுணர்ந்தவராய், கல்லை அகற்றிவிடுங்கள் என்ற கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான் இறைவன் விரும்புகிறார்.

நம் இல்லங்களில் இடம்பெறும் ஓர் அழகான நிகழ்வை, கற்பனையில் அசைபோடுவோம். இரு கைகளையும், கால்களையும் கொண்டு தரையில் தவழும் குழந்தை, முதல் முறையாக, தட்டுத் தடுமாறி, எழுந்து நிற்பதும், நடப்பதும், குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தும் ஓர் அனுபவம். அக்குழந்தை, கீழே விழுந்து அழுவதும், இந்த முயற்சியின் ஒரு பகுதி. கீழே விழும் குழந்தையைத் தூக்கிவிட்டு, அதைத் தேற்றி, மகிழ்வித்து, மீண்டும் நடக்கச்சொல்லி பெற்றோர் தூண்டுவார்கள். அதற்கு மாறாக, குழந்தை விழுந்துவிட்டதென பரிதாபப்பட்டு, தாயோ, தந்தையோ, அக்குழந்தையை நடக்கவிடாமல், தூக்கிச் சுமந்தால், குழந்தை, நடை பழகவே பழகாது. அதுபோலத்தான், கடவுளும். நம்மால் இயன்றதை நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.

பல வழிகளில் செயலாற்றும் இறைவனோடு, நமது முயற்சிகளும் இணையவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு கதை இது. ஊருக்குள் வெள்ளம் வந்தது. மக்களெல்லாம் வெள்ளத்திலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் தன் வீட்டுக் கூரை மேல் ஏறி நின்று, தன்னை அந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தார். வெள்ளத்தில் சிக்கிய ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமரம் என்று பல பொருட்களைப் பயன்படுத்தி, வெளியேறினர். கடவுளுக்காக காத்துக்கொண்டிருந்தவரையும் தங்களுடன் வரும்படி அழைத்தனர். அவரோ, அவர்கள் தந்த அழைப்பை மறுத்துவிட்டு, தன்னை கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
வெள்ள நிலைமை மோசமானதை அறிந்த அரசு, விரைவில் இராணுவத்தை அனுப்பி, மக்களை வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. இவர் மட்டும், எந்த உதவியையும் பெறாமல், கடவுள் வருவார் என காத்துக்கொண்டிருந்தார். வெள்ளம் கூரையைத் தொட்டது. இறுதியில் கூரை மீது நின்று கொண்டிருந்தவரைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் வழியாக முயற்சிகள் நடந்தன. கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று கூறி, அவர் அந்த உதவிகளைப் பெற மறுத்தார். இறுதியில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். மறு உலகில், அவர், கடவுளைச் சந்தித்தபோது, “கடவுளே, ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை?” என்று அவர் முறையிட்டார். அப்போது, கடவுள், நான் அனுப்பிய அத்தனை உதவிகளையும் மறுத்துவிட்டாய். பின்பு, உன்னை என்னால் எப்படி காப்பாற்ற முடியும்?” என்று கேட்டார்.

முன்பு ஒரு முறை பார்த்த ஓர் அழகான பழமொழி நினைவுக்கு வருகிறது. “God could not be present everywhere, so he created mothers.” அதாவது, கடவுள் எல்லா இடங்களிலும் பிரசன்னமாக முடியாது என்பதால், அன்னையரைப் படைத்தார்.
அன்னையரின் அன்பை அழுத்தந்திருத்தமாய் உணர்த்துவதற்கு சொல்லப்பட்டுள்ள ஒரு யூதப் பழமொழி இது. இந்தப் பழமொழி, ஒரு கோணத்தில், அழகானதொரு பொருளை உணர்த்துகிறது. கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தாலும், அன்னையர்கள் செய்யக்கூடியவற்றை, பொதுவாகவே, மனிதர்கள் செய்யக்கூடியவற்றை அவர்களே செய்யவேண்டும் என்று இறைவன் விட்டுவிடுகிறார். அவற்றில், கடவுள் தலையிடுவதில்லை.

இலாசரின் கல்லறைக்கருகே திரும்புவோம். யூதக் கல்லறைகள் மேல் வைக்கப்படும் கல், மிகவும் கனமானது. பலர் சேர்ந்து உருட்டினால்தான், அது நகரும். இயேசு, கல்லை அகற்றச் சொன்னதும், அவரது கட்டளையை நிறைவேற்ற ஒருசிலர் முன்வந்த வேளையில், கல்லை நகர்த்தினால் உருவாகக்கூடிய ஒரு பிரச்சனையை, மார்த்தா, இயேசுவிடம் கூறுகிறார். மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!என்றார். மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் வரும்படி அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி, நாற்றம் எடுக்கும். அங்கேயே தங்கிவிடுவது நல்லதல்ல.

புகழ்பெற்ற உரோமையக் கவிஞர் வெர்ஜில் (Virgil) அவர்கள், ஓர் அரசரைப்பற்றிக் கூறும் கதை இது. அதிர்ச்சியும், அருவருப்பும், தரும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில், இங்கு நல்லதொரு பாடம் நமக்காகக் காத்திருக்கிறது. அந்த உரோமைய அரசர், பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்தவர். அந்தச் சித்ரவதைகளில் மிகக் கொடுமையான ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டிவிடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் கட்டி, ஓர் இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள். குற்றவாளி, அந்தப் பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். இதற்கு மேல் இத்தண்டனையை விவரிப்பது நல்லதல்ல.

அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இத்தகைய சித்ரவதையை, நம்மில் பலர், நமக்கே கொடுத்துக் கொள்கிறோம்.. இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்துவாழும் எத்தனை பேரை நாம் அறிவோம்! அல்லது, எத்தனை முறை, நாம், இறந்தகாலம் என்ற பிணத்துடன், இருளில் வாழ்ந்திருக்கிறோம்! நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்ரவதைகளிலிருந்து நம்மை வெளியேற்ற, கல்லறையை மூடியிருக்கும் கல்லை அகற்றும்படி இயேசு கட்டளையிடுகிறார். இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், ஏன், பெரும் மலையே ஆனாலும் சரி, அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார். இயேசு மார்த்தாவிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.

மார்த்தாவிடம் இயேசு கூறிய நம்பிக்கைச் சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள், கல்லறையை அடைத்திருந்த கல்லை அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து, இயேசு விண்ணகத் தந்தையை நோக்கி ஒரு செபத்தை எழுப்பினார் என்று நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ளார். தன் வாழ்நாளின் ஒவ்வொரு கணமும் தந்தையுடன் தொடர்புகொண்டு வாழ்ந்த இயேசு, ஒரு சில புதுமைகளில், இறைவனோடு சிறப்பான தொடர்பு கொண்டபின், அப்புதுமைகளை ஆற்றியதாக நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம்.  
மாற்கு 7: 32-35
காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை, சிலர், இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்து குணமாக்குமாறு, அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமையில், "இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்" என்று யோவான் நற்செய்தியில் (யோவான் 6: 11) வாசிக்கிறோம்.
அதேபோல், இலாசரை உயிர்பெற்றெழச்செய்த புதுமையிலும், இயேசு, விண்ணகத் தந்தையிடம் செபித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற புதுமைகளில், இயேசு செபித்தார் என்று மட்டும் கூறியுள்ள வேளையில், இந்தப் புதுமையில், அவர் என்ன சொல்லி செபித்தார் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோவான் நற்செய்தி 11: 41-42
இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் என்று கூறினார்.

இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை நிகழ்வதற்கு முன்னரே, இயேசு தன் தந்தைக்கு நன்றி கூறியதை, அவர் எழுப்பிய செபத்தில் உணர்கிறோம். அத்துடன், அவர், இச்செபத்தை, சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே எழுப்பியதாகக் கூறினார். நன்றிகூறும் செபத்தில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களையும், இயேசுவின் அடுத்த இரு கட்டளைகள் சொல்லித்தரும் பாடங்களையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.