28 February, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 6


Nandhini,with a citation from Tamil Nadu government.


இமயமாகும் இளமை - கல்விக்காக போராடி வென்ற இளம் மாணவி

2017, ஜூலை 19. விடிந்தால் திருமணம். திடீரென வந்திறங்கினர் அரசு அதிகாரிகள். திருமணத்தை நிறுத்தவேண்டும் என அவர்கள் கட்டளையிட, ஒரு சிறு போராட்டத்திற்குப் பிறகு, திருமணம் நின்றுபோனது.
திருமணம் தடைபட யார் காரணம் என விசாரித்தபோதுதான் தெரிந்தது, கல்யாணத்தை நிறுத்தச் சொன்னதே, மணமகள்தான் என்று. அவரை மணமகள் எனச் சொல்வது கூட பொருத்தமாக இருக்காது. திருமணம் நடக்கவிருந்தது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு. சட்டப்படி, அவர் 14 வயது சிறுமி.
மாணவியின் பெயர் நந்தினி. இவர், 5ம் வகுப்பு படிக்கும்போது தாய் இறந்துவிட்டார். அரவணைக்க வேண்டிய தந்தையும் கைவிட்டுவிட, நிராதரவாக இருந்த நந்தினியை தங்கள் மகளாக வளர்த்தனர், அவரது பெரியம்மாவும் பெரியப்பாவும். தாய் இல்லாத குறை தெரியாமல் வளர்ந்த நந்தினியை 10ம் வகுப்பு வரை படிக்கவைத்தனர்.
பட்டப்படிப்பு முடிக்கவேண்டும் என்ற கனவோடு இருந்த நந்தினியை, திருமணத்துக்கு தயாராகும்படி, வளர்ப்பு பெற்றோர் திடீரென சொன்னதும், அவர் அதிர்ந்துபோனார். தன்னுடைய நிலையை தோழிகளிடம் கூறி அழுத அவர், இறுதியில், திருமணத்திற்கு முன் தினம், மாலை 6 மணிக்கு, மாவட்ட ஆட்சியரை, செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, தனக்கு நிகழப்போகும் கொடுமையைக் கூறினார். இதையடுத்து, சமூக நல அலுவலர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் ஆகியோர் இரவு 9.45 மணி அளவில், நந்தினியின் வீட்டுக்குச் சென்று, திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.
என்ன படிக்கப் போகிறீர்கள் என நந்தினியிடம் கேட்டபோது, “ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறேன். அப்போதுதான் என்னைப்போல பாதிக்கப்படும் மாணவிகளுக்கு உதவமுடியும். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரேதான் பாதுகாப்பு. மற்றவர்கள் நம்மைப் பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. என்னைப்போன்று பாதிக்கப்படும் சிறுமிகள் போராடி வெற்றிபெற வேண்டும் என பக்குவமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார், நந்தினி.
தான் ஒரு மாவட்ட ஆட்சியராக மாறி, பெண்களுக்கு உதவவேண்டும் என்ற கனவுடன், இப்போது, திருவண்ணாமலை, சீனிவாசா உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்கிறார், நந்தினி.

Ancient Water Jars

புதுமைகள் தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 6

யோவான் நற்செய்தியில், அன்னை மரியாவின் கூற்றுகளாக, இரண்டே வாக்கியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விரு வாக்கியங்களும் கானா திருமணத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்கள். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) என்றும், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்றும் அன்னை கூறிய இவ்விரண்டு வாக்கியங்களின் அழகையும், ஆழத்தையும் கடந்த இரு தேடல்களில் சிந்தித்தோம். இந்த வாக்கியங்களின் விளைவாக, கானா திருமணத்தில் நிகழ்ந்தனவற்றை இன்றையத் தேடலின் மையமாக்குவோம்.

மரியா பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். கானா திருமணத்தைச் சித்திரிக்கும் பல ஓவியங்களில், இயேசு, அப்புதுமையை நிகழ்த்தும் வேளையில், அன்னை மரியா அருகில் நிற்பதுபோன்று, இந்தக் காட்சி வரையப்பட்டுள்ளது. ஆனால், புதுமை நிகழ்ந்த வேளையில், அன்னை மரியா அங்கிருந்ததாக நற்செய்தி கூறவில்லை. இதுதான், அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம். குறைகள் உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல் மறைந்து விடுவார்.

நல்ல காரியம் ஒன்று நடக்கும்போது, அதற்கு எவ்வகையிலும் காரணமாக இல்லாத பலரும், அது தன்னால் நிகழ்ந்தது என்பதை, பல வழிகளிலும் பறைசாற்றிக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். மக்களின் வரிப்பணத்தில், வறியோருக்கு உதவிகள் செய்யப்படும் வேளையில், அந்த உதவிகளை தங்கள் சொந்தப் பணத்தில் செய்வதுபோல் அரசியல் தலைவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், நம்மைத் தலைகுனிய வைக்கிறது. அதே வேளையில், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தாங்கள் செய்யும் நற்செயல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பதையும் நாம் அறிவோம். இவர்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, மனிதகுலத்தின் மீது நம் நம்பிக்கை வளர்கிறது.

பேரும், புகழும் தேடாத அன்னை மரியாவின் பண்பு, இயேசுவிடமும் வெளிப்படுவதைக் காண்கிறோம். அவர் ஆற்றிய பல புதுமைகளில், தன்னைப்பற்றிய விளம்பரங்கள் செய்யக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளைகளை இயேசு விடுத்தார் என்பதை நாம் அறிவோம். தன்னையே மறைத்து நற்செயல்கள் செய்யும் அன்னைமரியாவை மனதில் வைத்து, இயேசு புகழ்பெற்ற ஒரு வாக்கியத்தை மலைப்பொழிவில் கூறியுள்ளார்: "நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்." (மத்தேயு 6:3)

கானா திருமண விருந்துக்குத் திரும்புவோம். "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று மரியன்னை சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்குக் குழப்பம். மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் அதுவரைப் பார்த்ததில்லை. அந்த இளைஞனைப் பார்த்தால், பிரச்சனையைத் தீர்த்துவைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், கடந்து மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து அதிகம் வேலைகள் செய்தவர் மரியன்னை என்பதால், அவர் மட்டில் பணியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அதுவும் அந்த அன்னை அதுவரை, பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததைக் கண்கூடாகப் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், அந்த இளைஞன், அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்கள் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.

பணியாளர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில், கை, கால் கழுவுவதற்கென கல்தொட்டிகள் இருந்தன. யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும் (யோவான் 2:6) என்று நற்செய்தியாளர் யோவான் அச்சூழலை விவரிக்கிறார்.

இயேசு பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" (யோவான் 2:7) என்றார். இயேசு இப்படிச் சொன்னதும், பணியாளர்கள் மனதில் ஓடிய எண்ணங்களைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இந்தக் காட்சியை, நாம் வாழும் காலத்திற்கு ஏற்றது போல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில், அல்லது ஒரு சிற்றூரில் நடக்கும் திருமண வைபவத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கை, கால் கழுவ, குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், அல்லது, பிளாஸ்டிக் வாளிகளில், விருந்து மண்டபத்திற்கு வெளியே, தண்ணீர் வைத்திருப்பார்கள். அந்தப் பாத்திரங்களுக்குப் பதில், ஒரு சில இடங்களில், சிமென்ட் தொட்டிகளிலும் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரை எடுத்து யாரும் குடிப்பதில்லை, இல்லையா? அத்தகையப் பாத்திரங்களில், அல்லது தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் இயேசு.

தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப இயேசு சொன்னதும், பணியாளர்களுக்கு அதிர்ச்சியாக, கொஞ்சம் எரிச்சலாகவும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விருந்தினர்கள் எல்லாரும் கை, கால் கழுவிவிட்டு பந்தியில் அமர்ந்துவிட்டதால், அந்தத் தொட்டிகளில் தண்ணீர் ஏறக்குறைய காலியாகிவிட்டது. அவற்றில் மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது பணியாளர்களின் கடமை. அந்தக் கடமையை அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறாரோ என்று அவர் மீது எரிச்சல். தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கும், திராட்சை இரசம் கிடைப்பதற்கும் என்ன தொடர்பு?

மேலும், திராட்சை இரசம் இருக்கவேண்டிய இடம், தோல் பைகளே தவிர, கல்தொட்டிகளில் அல்ல. இதையும் பணியாளர்கள் நன்கு அறிந்திருந்தனர். திருமணத்திற்கென்று நிரப்பப்பட்டிருந்த தோல் பைகள் அனைத்திலும் திராட்சை இரசம் தீர்ந்திருந்திருந்த வேளையில், அந்தப் பைகளில் தண்ணீரை நிரப்பச் சொல்லியிருந்தாலும், அது பொருத்தமான ஒரு கட்டளையாக அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், இந்த இளைஞனோ, கல்தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னது, பொருத்தமே இல்லாத ஒரு கட்டளையாகத் தெரிந்தது.

பொருத்தமற்றதாக, பொருளற்றதாகத் தெரியும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், அற்புதங்கள் நிகழும் என்பதை, விவிலியத்தில் பல இடங்களில் நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, சிரியா நாட்டின் படைத்தலைவன் நாமான், தன் தொழுநோயைக் குணமாக்க, இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றபோது, அவர் "நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்" (2 அரசர்கள் 5: 10) என்று சொல்லி அனுப்பினார். எலிசா தன் முன் வந்து நின்று, தன் கடவுளின் பெயரைச் சொல்லி தன் மீது கைவைத்து குணப்படுத்துவார் (2 அர. 5:11) என்று எதிர்பார்த்த நாமான், சினமுற்று தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல நினைத்தபோது, அவரது வேலைக்காரர்கள் அவரை அமைதிப்படுத்தி, இறைவாக்கினர் தந்த கட்டளையை நிறைவேற்றுமாறு வேண்டிக்கொண்டனர். எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது. (2 அர. 5:14)

திராட்சை இரசம் இல்லை என்ற குறையைத் தீர்ப்பதற்கு, "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று இயேசு தந்த கட்டளை பொருத்தமற்றதாக, பொருளற்றதாகத் தெரிந்ததால், பணியாளர்கள் தடுமாறி நின்றனர். இயேசுவின் கட்டளையைத் தட்டிக் கழிக்கவும் அவர்களுக்கு மனமில்லை.
பொதுவாகவே, திருமண இல்லங்களில் பணியாளர்களின் பாடு மிகவும் கடினமான ஒன்று. பலரும் கட்டளையிடுவார்கள். பல பக்கங்களிலிருந்தும் ஏச்சும் பேச்சும் அவர்கள் கேட்க வேண்டியிருக்கும். யார் சொல்வதையும் தட்டிக்கழிக்க முடியாது. யாரையும் பகைத்துக்கொள்ள முடியாது. யார் முக்கியம், முக்கியமில்லை என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. எனவே, எல்லாருடைய போக்குப்படியும் நடக்கவேண்டும். அதுதான் பாதுகாப்பான வழி.

கானாவூர் பணியாளருக்கும் இதேநிலை. அந்த இளைஞன் சொன்னதை பேசாமல் செய்து விடுவது நல்லது என்று நினைத்தனர். அந்நேரத்தில், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று மரியன்னை சொல்லிச் சென்ற சொற்கள் அவர்கள் உள்ளத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன. மேலும், தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று அந்த இளைஞன் சொன்னபோது, அந்தக் கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம் அவர்கள் மனதில் எழுந்த பல குழப்பங்களை அமைதிப்படுத்தியதைப் போல் உணர்ந்தனர். தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப் போல், இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். புதுமையும் நிகழ ஆரம்பித்தது. இந்தப் புதுமை, எப்போது, எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் அடுத்தத் தேடலில் ஆழமாகச் சிந்திப்போம்.


25 February, 2018

God - not in need of a tent கடவுளுக்கு கூடாரங்கள் தேவையில்லை


Abraham and Isaac walking up the mountain

II Sunday of Lent

Last Sunday, the First Sunday of Lent, we were given the privilege of seeing a very private experience of Jesus, probably one of the most vulnerable moments of His life, namely, the temptations. Today, the Second Sunday of Lent, we are given the opportunity to see Him in one of His most glorious moments… the transfiguration. Last Sunday the Gospel took us to the desert. This Sunday the Gospel invites us to the mountains. In fact, the First Reading and the Gospel of today’s Liturgy take us to two different mountains to see two very different events, almost diametrically opposite to one another. Let’s go to the mountains…

When I was reflecting on the mountains, being an Indian, my mind, naturally, turned to Mount Everest in the Himalayas. This is considered to be the highest peak on earth. It is called the Third Pole of the earth. The North Pole had been reached in 1909; the South Pole in 1911. But Everest had defied all human efforts. Reaching its summit seemed beyond mere mortals. On May 29, 1953, Edmund Hillary from New Zealand and a Sherpa guide, Tenzing Norgay, (Nepalese Indian) were the first human beings ever to reach Everest's summit. After the success of Edmund and Tenzing, more than 4000 men and women have conquered this peak – the youngest being 13+ years and the oldest 80+ years!

Although mountains pose so many challenges, there are still thousands who keep climbing them year after year. Mountains hold a great magical charm on human beings from time immemorial. Asian tradition talks of great monks who had gone to mountain tops seeking ‘enlightenment’. The thrill of reaching ‘the top of the world’, the great silence of the peaks, the pure air and water on mountain tops have been sources of attraction for human beings. The lovely aspects of silence, purity and identification with nature have prompted many religions to ascribe mountains as the abode of gods.

Today’s Liturgy gives us two events that took place on mountain tops… two different mountain tops and two very different events. We shall spend more time on the event related to Abraham. The opening line from Genesis, that describes this event, is quite perplexing:
Genesis 22: 1-2
After these things, God tested Abraham, and said to him,… "Take your son, your only son Isaac, whom you love, … and offer him  as a burnt offering upon one of the mountains of which I shall tell you."

God tested Abraham. How many times we have attributed our trials to God saying: “Why does God test me so much?” When people pose such a question to me, a Priest, I don’t have easy answers to offer them, except the examples of Abraham, Job or Mary.
“Go from your country and your kindred and your father’s house to the land that I will show you.” (Genesis 12:1) was the first invitation given by God to Abraham. From then on, Abraham was put through many trials. The test presented to us in today’s Liturgy was, probably, the greatest of them all – namely, to kill his own son and offer him as a sacrifice to God. 

God chose a mountain top for this painful sacrifice. Abraham must have grown up with the hope that God lived on mountains and a person meeting God on a mountain, would come down filled with God’s gift. Now, Abraham is asked to go up the mountain, not to be filled but, rather, to be deprived of the precious gift God had given him at the ripe old age of 100 (Gen.21:5). This was a reversal which was way beyond Abraham’s reasoning capacity. Still Abraham begins this torturous journey, relying not on his reasoning power, but the power of his faith.

The test of Abraham was more poignant in that he had to travel three days with his son Isaac to perform this sacrifice. What would they have spoken on the way? Every time Abraham saw his beloved son, his heart must have bled. Why would God do this? Isn’t it already cruel enough to ask Abraham to sacrifice his son? Then, why make him go through this torture of three days?
At the end of those three days, when they reach the mountain, Abraham makes his son Isaac carry the firewood meant for his own sacrifice. When Isaac poses the innocent question about the lamb, Abraham must have turned aside in order to hide his tears, and mumbled the famous line: “God will provide!” (Gen. 22:8)

Some scripture scholars would explain this event as a fore-shadow of the Sacrifice of Jesus on Calvary. The Passion of Jesus was spread over three days of torture. Like Isaac, Jesus also carried the wood on which he would be sacrificed. The torture that Abraham had to undergo was an indication of what God the Father must have undergone during the Passion and Death of His beloved Son.

Abraham went up the mountain to perform a sacrifice. He met God and returned home filled with blessings. In the Gospel of today we meet the three disciples who went up the mountain and met God. This would strengthen them for later sacrifices in their lives. Trials leading up to blessings or blessings that strengthen us to face trials are two sides of the coin called faith!

In today’s Gospel, we meet, once again, the impetuous Peter who wanted to prolong the glorious ‘experience’  of the Transfiguration, by erecting tents. Peter had seen an ‘ordinary’, day to day edition of Jesus up to that point. Now, he was surprised by the ‘glorious’ Jesus whose ‘garments became glistening, intensely white, as no fuller on earth could bleach them’. (Mark 9:3) Peter wished to remain there for the rest of his life.
Peter said to Jesus, “Master, it is well that we are here; let us make three booths, one for you and one for Moses and one for Eli′jah.” (Mark 9:5) Evangelist Mark is quick to add his remarks: For he did not know what to say. (Mk. 9:6) Very often we do have a similar temptation of putting God in cosy tents we have made.

God intervened and said, “This is my beloved Son; listen to him.” (Mk. 9:7) This was an indirect reminder to Peter as well as to us, not to be lost in the moment, but to keep silent and listen to the Son. What would the Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people to ‘transfigure’ them.”

Getting down from the cosy comfort of the Transfiguration to the ‘disfigured’ world requires lot of faith. Evidently, we know very well, that our faith is not that of Abraham, and that the road is still long. Let us get down from the mountain, along with Jesus, in order to transfigure the world!

Lessons from the Mountain!

தவக்காலம் 2ம் ஞாயிறு

உலகில் வடதுருவம், தென்துருவம் என்று இரு துருவங்கள் உள்ளன என்பதை புவியியலில் படித்திருக்கிறோம். உலகின் மூன்றாவது துருவம் என்று கருதப்படுவது, இந்தியாவின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம். கடல் மட்டத்திலிருந்து இச்சிகரம் 8,848 மீட்டர், (29,029 அடி) உயரமானது.
உலகின் வடதுருவத்தை 1909ம் ஆண்டும், தென்துருவத்தை 1911ம் ஆண்டும் மனிதர்கள் சென்றடைந்தனர். ஆனால், மூன்றாவது துருவமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய கூடுதலாக 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1953ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலரி (Edmund Hillary) அவர்களும், நேபாள இந்தியரான டென்சிங் நோர்கே (Tenzing Norgay) அவர்களும், இந்தச் சாதனையை முதல் முறை செய்தனர். இவர்களைத்  தொடர்ந்து, இதுவரை 4000த்தி்ற்கும் அதிகமானோர் இச்சிகரத்தை எட்டிப் பிடித்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
எவரெஸ்ட் மலைச்சிகரம் மட்டுமல்ல, உலகின் பல்வேறு மலைச்சிகரங்கள், எட்டுவதற்கு மிகக் கடினமானவை என்பதை அறிந்தும், அச்சிகரங்களை அடைய ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் முயன்று வருகிறார்கள். மலைச் சிகரங்கள் அப்படி ஓர் ஆர்வத்தை மக்கள் மனங்களில் தூண்டி வருகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைவதில்லை, பல முயற்சிகள், மரணத்தில் முடிந்துள்ளன. இருந்தாலும், மலைச் சிகரங்கள் மீது மனிதர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பு, தணியாத ஓர் ஈர்ப்பு.

மலைச்சிகரங்கள்... உடலிலும் மனதிலும் மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். மலை முகடுகளில் நிலவும் அமைதி, இயற்கையின் அழகிய ஒலி, மலைச் சிகரங்களில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வைத் தூண்டும். அமைதி, தூய்மை, புத்துணர்வு என்ற அழகிய அனுபவங்களைத் தருவதால், மலைகள், இறைவனின் இருப்பிடங்களாக, பல மதங்களிலும், கலாச்சாரங்களிலும் கருதப்படுகின்றன.

மலைச்சிகரங்களை அடைய ஒருவர் மேற்கொள்ள வேண்டிய தியாகங்கள், மலையுச்சியில் நிகழும் மாற்றங்கள், அற்புதங்கள், அந்த அற்புதங்களிலேயே தங்கிவிடாமல், மீண்டும் தரையிறங்கி வந்து, நாம் சந்திக்கவேண்டிய சராசரி வாழ்க்கை, என்ற பல கோணங்களில் நம்மைச் சிந்திக்க அழைக்கின்றன, இன்றைய ஞாயிறு வாசகங்கள்.

சென்ற ஞாயிறன்று, பாலை நிலத்தில், இயேசுவை, வலுவற்ற நிலையில் சந்தித்த நாம், இந்த ஞாயிறு, மலையுச்சியில், அவரை, உன்னதமான ஒரு நிலையில் சந்திக்க வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் வேறுபட்ட இரு நிகழ்வுகள், இன்றைய ஞாயிறு வழிபாட்டில் தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில், ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை, நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.

தொடக்கநூலிலிருந்து வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தின் அறிமுக வரிகள், நாம் வாழ்வில் அடிக்கடி கேட்கும் ஓர் ஆழமான கேள்வியை நினைவுபடுத்துகின்றன:
தொடக்கநூல் 22 : 1-2
அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, “ஆபிரகாம்!என, அவரும் இதோ! அடியேன் என்றார். அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும் என்றார்.

கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார் என்று இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். வாழ்வில் நாம் அவ்வப்போது, அல்லது, அடிக்கடி கேட்பது: "ஏன்தான் கடவுள் என்னை இவ்வளவு சோதிக்கிறாரோ?" என்ற வேதனை நிறைந்த கேள்வி. இப்படி ஒரு கேள்வியை மற்றவர் என்னிடம் எழுப்பும்போது, ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், பல வேளைகளில் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன். நான் சொல்ல முயன்ற பதில்களில் எனக்கே ஓரளவு தெளிவைத் தந்த பதில் இதுதான்: "கடவுள் யாரை அதிகம் நேசிக்கிறாரோ, அவர்களுக்கு அதிகம் சோதனைகள் தருகிறார்... விசுவாசத்தில் யார் அதிகம் வேரூன்றியிருக்கிறார்களோ, அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த சவால்களை அனுப்புகிறார். அந்தச் சோதனைகளை, சவால்களை வெல்வதன் வழியே, மற்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரு பாடமாக அவர்கள் வாழ்வு அமையவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்" என்ற பதிலே, எனக்கும் பிறருக்கும் ஓரளவு தெளிவைத் தந்த பதில்.

வாழ்க்கையோடு போராடும் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். அந்தப் போராட்டங்களில் அவர்கள் வெற்றி கண்டனரா, இல்லையா, என்பதைவிட, அவர்கள் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்ட பக்குவம், நமக்குப் பாடமாக அமைகின்றது. விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல எடுத்துக்காட்டான மனிதர்களின் வாழ்வில் இது நடைபெற்றுள்ளது. ஆபிரகாமில் ஆரம்பித்து, மோசே, யோபு, இறைவாக்கினர்கள், மரியா, இயேசு, சீடர்கள் என்று, பலருக்கும் 'சோதனை மேல் சோதனை' கூடிக்கொண்டே சென்றதை நாம் பார்க்கிறோம்.

ஆபிரகாமை இறைவன் சோதித்த நிகழ்வின் வழியே நாம் பயிலக்கூடிய பாடங்கள் பல உள்ளன. இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது, ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு, ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100 (தொ.நூல் 21:5). ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
"உன் நாட்டிலிருந்து... புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" (தொ.நூல் 12:1) என்பதில் ஆரம்பித்து, இறைவன் வழங்கிய கட்டளைகள் அனைத்திற்கும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பணிந்து பழகிப்போன ஆபிரகாமுக்கு, மகனைப் பலிதரவேண்டுமென இறைவன் கொடுத்த கட்டளை பேரதிர்ச்சியைத் தந்திருக்கும். இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை.
மலைகள் இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர் ஆபிரகாம். நிறைவடைவதற்குப் பதில், தன்னிடம் உள்ளதை பறித்துகொள்வதற்கு இறைவன் தன்னை ஒரு மலைக்கு அழைக்கிறார் என்ற எண்ணம், ஆபிரகாமுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.

ஒரு நொடியில் உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில், அல்லது, மாதக் கணக்கில், சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அத்தகையச் சித்ரவதையை, ஆபிரகாம் அனுபவித்தார். இறைவன் கேட்ட இந்தப் பலியை, வீட்டுக்கருகில், ஆபிரகாம் நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த மலையை அடைய அவர் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டார். அந்த மூன்று நாட்களும் அந்தத் தந்தையின் மனம் எத்தகையச் சித்ரவதையை  அனுபவித்த்ருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். வழியில் தந்தையும், மகனும் என்ன பேசியிருக்க முடியும்? தன் மகனைக் கண்டபோதெல்லாம், ஆபிரகாமின் உள்ளம், இரணமாகி, இரத்தம் சிந்தியிருக்கும்.
அவர்கள் மலையை அடைந்தபின், ஆபிரகாம், சிறுவன் ஈசாக்கின் தோள் மீது விறகுகட்டைகளை சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு மலைமீது ஏறுகிறான். போகும் வழியில்தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" (தொ.நூல் 22:7) என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அக்குழந்தையின் கேள்வி, ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். கண்களில் பொங்கியக் கண்ணீரை மறைப்பதற்கு, தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, ஆபிரகாம், "கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்று, ஏதோ ஒரு பதிலை, ஒப்புக்காகச் சொல்லி, சமாளிக்கிறார்.

மகனைப் பலிதருவது என்பதே, மிக, மிக அரக்கத்தனமான கட்டளை. அந்தக் கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற விடாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது. விவிலிய விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு, பல வழிகளில், கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்து, மலைமீது ஏறியதுபோல், இயேசுவும் சிலுவையைச் சுமந்து, கல்வாரி மலைமீது ஏறினார். ஈசாக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதில்சொல்ல இயலாமல், ஆபிரகாம் துன்புற்றார். பாடுகளின்போது, இயேசு கேட்ட கேள்விகளுக்கு, விண்ணகத் தந்தை பதில் ஏதும் தரவில்லை. இந்த நிகழ்வில் ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும், இயேசுவின் பாடுகளின்போது, வேதனை அடைந்தார். இப்படி பல ஒப்புமைகள் வழியே, இந்த நிகழ்வு, கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. என்று, விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

மகனைப் பலி கேட்ட இறைவன், இறுதியில், ஆபிரகாமுக்கு, மலையுச்சியில், இறையனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில், இயேசுவின் தோற்ற மாற்றம் என்ற இறையனுபவம் பெற்ற சீடர்களிடம், இறைவன், பலியை எதிர்பார்க்கிறார். வேதனைகளின் உச்சக்கட்டமாக இறையனுபவத்தைப் பெறுவதும், இறையனுபவத்தின் உச்சக்கட்டமாக, வேதனைகளை அனுபவிக்க துணிவு கொள்வதும், நம்பிக்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்.

இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வின் இறுதியில், நற்செய்தியாளர் மாற்கு பதிவு செய்துள்ள வரிகள், நமக்கு ஒரு முக்கியப் பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கண்ட பேதுரு, தன்னிலை மறந்து, பரவசத்தில் மூழ்கினார். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். (மாற்கு 9:5).
அதுவரை இயேசுவை சாதாரண மனித நிலையில் கண்டு பழகிப் போயிருந்த பேதுருவுக்கு, 'வெள்ளை வெளேரென ஒளி வீசிய' இயேசுவின் தோற்றம், பேரானந்தத்தை அளித்திருக்க வேண்டும். அந்த இயேசுவை விட்டுவிட மனமின்றி, பேதுரு, கூடாரம் அமைக்க முன்வந்தார். பேதுருவின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் மாற்கு, தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. (மாற்கு 9:6) என்ற கூற்றை இணைத்துள்ளார்.
இது நமக்கு ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது. ஆழமான இறையனுபவங்கள் நம்மை நிறைக்கும் வேளையில், சுயநல எண்ணங்கள் பிறந்தால், கடவுளுக்கு ஒரு கூடாரம் அமைத்து, அவரை அங்கேயே பூட்டிவைத்து, அவர்மீது தனிப்பட்ட உரிமை கொண்டாடும் தவறான முடிவுக்கு வந்துவிடுவோம்.

சொல்வது என்னவென்று அறியாது, பேசிய பேதுருவுக்கு மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற்கு 9:7) என்பதே. அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? “இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று இயேசு கூறுவார்.
கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுள் தங்குவதற்கு, கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கடவுளை, கோவில்களிலேயே தங்கவைப்பதோ, அங்கேயே நாம் தங்கிவிடுவதோ தவறு. இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்பவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
தோற்ற மாற்றம் அடைந்த இயேசு, சீடர்களை அழைத்துக்கொண்டு, மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்!


20 February, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 5

Iqbal Masih : 1983 - 1995

இமயமாகும் இளமை – கடமை, என் உயிரைவிட முக்கியம்

பாகிஸ்தானில் இலாகூருக்கு அருகே பிறந்தவர், இக்பால் மாசி. இவரது தாய், கம்பள வியாபாரம் செய்துவந்த ஒருவரிடமிருந்து, தன் அறுவைச் சிகிச்சைக்காக, 600 ரூபாய் கடன் வாங்கினார். கடனை அடைப்பதற்காக, 4 வயது சிறுவன் இக்பால், கம்பளம் நெய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். அந்தத் தொழிற்சாலையில் இக்பாலைப் போல் இன்னும் பல பச்சிளம் சிறுவர்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. அச்சிறுவர்கள் அனைவரும், தொழிற்சாலையில், வேலைசெய்த இடத்திலேயே சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். ஆறு ஆண்டுகள், இக்பால், இவ்வாறு வேலை செய்தபின்னரும், கடன் இன்னும் தீரவில்லை என்று சொல்லப்பட்டது.
இக்பாலுக்கு 10 வயதானபோது, கொத்தடிமைத்தனம் சட்டத்துக்குப் புறம்பானது என்ற தீர்ப்பை, பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் வெளியிட்டது. இதையறிந்த இக்பால், கம்பளத் தொழிற்சாலையிலிருந்து தப்பித்து, அருகிலிருந்த காவல் நிலையத்தில் தன்னையே ஒப்படைத்தார். காவல் துறையினரோ, இக்பாலை, மீண்டும் அந்த தொழிற்சாலை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இக்பால் கூடுதல் சித்ரவதைகளை அனுபவித்தார்.
இரண்டாவது முறை தப்பித்த இக்பால், கொத்தடிமை விடுதலைக்கென உழைத்துவந்த ஓர் அமைப்பின் உதவியால், பள்ளியில் சேர்ந்தார். 4 ஆண்டுகள் படிக்கவேண்டிய கல்வியை, இரண்டே ஆண்டுகளில் முடித்தார். 3000த்திற்கும் அதிகமான சிறுவர், சிறுமியர், கொத்தடிமைக் கொடுமையிலிருந்து விடுதலை அடைய, இக்பால் உதவி செய்தார்.
சிறுவர், சிறுமியரின் விடுதலை குறித்து பேசுவதற்கு, உலகின் பல நாடுகளிலிருந்து இக்பாலுக்கு அழைப்புக்கள் வந்தன. அவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உரையாற்றச் சென்றபோது, மீண்டும் பாகிஸ்தான் செல்ல விரும்புவதாகக் கூறினார். அவரது உயிருக்கு ஆபத்தான அந்நாட்டிற்கு திரும்பிச் செல்ல ஏன் விழைகிறார் என்ற கேள்வி எழுந்தபோது, "நான் செய்து முடிக்க வேண்டிய கடமை, என் உயிரைவிட முக்கியமானது" என்று பதிலளித்தார்.
1995ம் ஆண்டு, தன் 12வது வயதில், இக்பால் அவர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய சில நாட்களில், கம்பளத் தொழிற்சாலை முதலாளிகளின் ஏற்பாட்டின்படி, ஏப்ரல் 16ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவன்று, சுட்டுக்கொல்லப்பட்டார். இக்பால் அவர்களின் நினைவாக, "Free the Child" என்ற சமூக நீதி அமைப்பு நிறுவப்பட்டு, சிறுவர், சிறுமியருக்காக உழைத்து வருகிறது.

Do whatever he tells you to do

புதுமைகள் தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 5

நான்கு நற்செய்திகளில், நான்கு தருணங்களில் மட்டுமே, அன்னை மரியா பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் மூன்று முறையும், யோவான் நற்செய்தியில் ஒரு முறையும், அன்னை மரியா பேசும் கூற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ள முதல் நிகழ்வு, நாசரேத்தில், இளம்பெண் மரியாவுக்கும் வானதூதர் கபிரியேலுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். இந்த உரையாடலின் சிகரமாக, இளம்பெண் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று கூறிய சொற்கள், காலத்தால் அழியாத அமரத்துவம் பெற்ற சொற்களாக விளங்குகின்றன.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இளம்பெண் மரியா, தன் உறவினராகிய எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற வேளையில், அங்கு, அவர் கூறிய அற்புதச் சொற்கள், மரியாவின் புகழ்ப்பாடலாக (லூக்கா 1:46-55), மனதை உயர்த்தும் செபமாக, கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒலித்து வருகின்றன.
நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள மூன்றாவது நிகழ்வு, எருசலேம் கோவிலில் நிகழ்ந்தது. 12 வயது நிறைந்த சிறுவன் இயேசுவை, அன்னை மரியா கோவிலில் கண்டதும், அவ்விருவருக்கும் இடையே ஓர் உரையாடல் நிகழ்ந்தது. இந்த மூன்று நிகழ்வுகளும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன.

அன்னை மரியா பேசியதாகக் கூறப்பட்டுள்ள நான்காவது நிகழ்வு, யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ள கானா திருமணத்தில் நிகழ்ந்தது. இந்நிகழ்வில், அவர் இரண்டே வாக்கியங்களைப் பேசியுள்ளார். இவ்விரண்டில், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) என்ற கூற்றை நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். அன்னை மரியா கூறிய இரண்டாவது கூற்று: "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5). அன்னை கூறிய இந்தக் கூற்றின் அழகையும், ஆழத்தையும் இன்றையத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.

'இயேசு சொல்வதைக் கேளுங்கள்' என்று அன்னை மரியா கூறவில்லை. மாறாக, ‘அவர் சொல்வதைச் செய்யுங்கள் என்பதே அவர் விடுத்துள்ள அழைப்பு. "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" அதாவது, இறைவனின் தூதர் கூறிய சொற்கள், தனக்குள் செயல்வடிவம் பெறட்டும் என்று தான் முழுமனதுடன் அளித்த ஒப்புதலால், தன் வாழ்வி்ல் நிகழ்ந்த அற்புதங்களை நன்கு உணர்ந்திருந்த அன்னை மரியா, அதையொத்ததோர் எண்ணத்தை, "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்ற கூற்றின் வழியே, நம் அனைவருக்கும் வழங்கியுள்ளார்.
இந்தக் கூற்றில் உள்ள மற்றொரு முக்கியமான சொல், 'சொல்வதெல்லாம்' என்ற சொல். இறைவன் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. இதற்கு மாறாக, இறைவன் சொல்வதில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் தெரிவுசெய்து செயலாற்றுவது, அன்னை மரியா நமக்கு விடுத்துள்ள அழைப்பு அல்ல. சவால்கள் நிறைந்த இந்த அழைப்பு, விவிலியத்தில் வேறு சில நிகழ்வுகளையும், கூற்றுக்களையும் நம் நினைவுக்குக் கொணர்கின்றது:

முதல் நிகழ்வு - தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டபின், பார்வோனின் நம்பிக்கையைப் பெற்று, படிப்படியாக பதவியில் உயர்ந்தார். அவ்வேளையில், எகிப்து நாட்டில் பஞ்சம் தொடங்கியது. அதன்பின், அங்கு நிகழ்ந்ததை, நாம் தொடக்க நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:
தொடக்க நூல் 41:55
எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, "யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறினான்.

இரண்டாவது நிகழ்வு - விடுதலைப்பயண நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து விடுதலை பெற்று, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் சென்ற இஸ்ரயேல் மக்கள், சீனாய் மலையடிவாரத்தை அடைந்தனர். அவ்வேளையில், மோசே, இறைவனைச் சந்திக்க மலையேறிச் சென்றார். இறைவனைச் சந்தித்தபின் மலையிறங்கி வந்த மோசேமக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, "ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்" என்று மறுமொழி கூறினர். (வி.ப. 19:7-8)

இறைவன் சொல்வதைக் கேட்டு செயல்பட்டால் அற்புதங்கள் நிகழும் என்பதை தன் வாழ்வில் உணர்ந்திருந்ததால், 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று அன்னை மரியா கூறிய சொற்களின் எதிரொலிபோல், கெனசரேத்து ஏரிக்கரையில் மற்றுமோர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த எரிக்கரையோரமாக நின்றுகொண்டிருந்த சீமோனின் படகில் இயேசு ஏறி நின்று, மக்களுக்குக் கற்பித்தார். பின்னர் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை, புனித லூக்கா இவ்வாறு விவரிக்கின்றார்:
லூக்கா 5:4-5
இயேசு பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
இயேசுவின் சொற்களைக் கேட்டு செயல்பட்டதால், சீமோன் வீசிய வலையில் ஏராளமான மீன்கள் பிடிபட்டன.

இறைவன் சொற்படி செயலாற்றுவதால், அற்புதங்கள் மட்டும் நிகழ்வதில்லை. அவ்விதம் செயலாற்றுவோரே இயேசுவின் உண்மையான உறவுகளாக மாறுவர் என்பதை, லூக்கா நற்செய்தி பதிவு செய்துள்ளது. இயேசு மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்த வேளையில், அவரைச் சந்திக்க, அவரது தாயும், சகோதரர்களும் வந்தனர். அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை, புனித லூக்கா இவ்விதம் கூறியுள்ளார்:
லூக்கா 8:19-21
இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.

'சொல்வது', 'கேட்பது', 'செயலாற்றுவது' என்ற மூன்று அம்சங்களைச் சுற்றி, இயேசு ஒரு சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார். தான் சொல்வதைச் செய்யாமல், வெறும் வாய் வார்த்தைகளால் தன்னை 'ஆண்டவரே' என்றழைப்பது வீண் என்று இயேசு விடுத்துள்ள எச்சரிக்கையை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
லூக்கா 6: 46-47
"நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, 'ஆண்டவரே, ஆண்டவரே என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்"
என்று கூறும் இயேசு, தொடர்ந்து, இறைவனின் சொல்படி செயல்படுபவர், பாறை மீது கட்டிய வீடு என்றும், அவ்வாறு செயல்படாதவர், மணல் மீது கட்டிய வீடு என்றும் இரு ஒப்புமைகளை வழங்கியுள்ளார்.

இறைவன் சொல்வதை செயல்படுத்தாமல், வெறும் வாய் வார்த்தைகளால் ஆண்டவரே என்றழைப்பதால் பயனில்லை என்ற எச்சரிக்கையை விடுக்கும் இயேசு, மத்தேயு நற்செய்தியில் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாட்டை வலியுறுத்தி, மற்றொரு வகையான எச்சரிக்கையை விடுக்கிறார். மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரையும் குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை இவ்வாறு ஒலிக்கின்றது:
மத்தேயு 23: 3
அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று அன்னை மரியா கூறிய இந்த நான்கு சொற்களே, விவிலியத்தில் அவர் கூறிய இறுதிச் சொற்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த நான்கு சொற்களே, அன்னை மரியா, நமக்கு விட்டுச்சென்றுள்ள விலைமதிப்பற்ற பாரம்பரியம். வாழ்வின் பல தருணங்களில் நம்மிடம், 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதை'ப் போன்ற உணர்வு எழலாம். அவ்வேளைகளில், அன்னை மரியா கூறியுள்ள இந்த நான்கு சொற்கள், நம் வாழ்வின் அடித்தளமாக மாறினால், நம் குறைகள் நீங்கி, நிறைவு தோன்றும் அற்புதத்தை நம்மால் காணமுடியும்.
கானா திருமணத்தில், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று, அன்னை மரியா, பணியாளரிடம் கூறியதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தனவற்றை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


18 February, 2018

Ash – Fertilizer and ‘Detergent’ உரமாகும், கறை நீக்கும் சாம்பல்


The temptation of Jesus

I Sunday of Lent

We have begun the Lenten Season a few days back. Etymologically, the word ‘Lent’ has two references in two different languages. In Latin, Lent comes from the word ‘lente’ which means ‘slowly’. The word ‘Lenten’ comes from the Anglo Saxon word ‘Lencten’ which signifies ‘Spring’. (‘Lencten’ or ‘Lengten’ – simply denotes the ‘lengthening’ of the daytime. This implies that winter is getting over…and Spring is at hand). When we combine ‘slowly’ and ‘spring’, we arrive at a comparative imagery between Lent and Spring. As the spring – slowly and steadily – renews the face of the earth, Lent renews us!

Usually, when we think of the Season of Lent, the symbol of ash dominates our imagination. For a change, it might be better to think of the Lenten Season in terms of Spring. In countries that have the four clear seasons, winter is preceded by the fall season. During these two seasons which extend to five or six months, trees and plants are pretty barren, devoid of leaves. A cursory, quick look at plant life during these months would make one easily assume that these plants and trees are ‘as good as dead’.
‘As good as dead’ sounds like a contradiction. What is good about being dead? This is the whole mystery of the Lenten Season and the Paschal Season… Death is a doorway to life. Under the heavy cover of snow, life begins to germinate. Come Spring… life will be in full bloom. Lenten Season (Spring) is an invitation to believe that death is not the final word. Moreover, Spring does not spring a surprise on us by overnight changes. These changes – the life affirming changes – take place ‘lente’ – ‘slowly’!

Every year we begin the Season of Lent with Ash Wednesday. When the ash is applied on our forehead, the priest says: “Repent and believe in the Gospel”. The older formula for this ritual was: “Thou art dust and to dust thou shalt return!” The change in the formula for the Ash Wednesday rite, clearly indicates that from the position of seeing ash as a sign of death and destruction, we have moved to a better position of seeing ash as a symbol of change and conversion!

Talking of the imagery of the ash, I would like to present the ideas presented by one of my favourite columnists, Fr Ron Rolheiser. In his column written under the title “Entering Lent” (2009), he says:
In every culture, there are ancient stories, myths, which teach that all of us, at times, have to sit in the ashes. We all know, for example, the story of Cinderella. The name itself literally means, the little girl (puella) who sits in the ashes (cinders). The moral of the story is clear: Before you get to be beautiful, before you get to marry the prince or princess, before you get to go to the great feast, you must first spend some lonely time in the ashes, humbled, smudged, tending to duty and the unglamorous, waiting. Lent is that season, a time to sit in the ashes. It is not incidental that we begin lent by marking our foreheads with ashes.

Ash is very much associated with fire. When we think of fire as a source of destruction, then ash is thought of as the net result of destruction. But, when we can think of fire as a source of life as well as purification, then ash can take on other meanings. Ash, as we know well, is used as a fertilizer, helping in the process of new life. Ash also is used as a ‘detergent’ to clean objects and make them glitter! Life-giving and cleansing are two crucial processes of Lent!

The lovely assurance that death and destruction are not the final words, is presented to us in the First Reading. God promises a revival of the earth after the great deluge and also places the lovely symbol of the rainbow. Rainbow has been used as a symbol of hope across the world.
Genesis 9: 8-15
Then God said to Noah and to his sons with him, “Behold, I establish my covenant with you and your descendants after you, and with every living creature that is with you… I establish my covenant with you, that never again shall all flesh be cut off by the waters of a flood, and never again shall there be a flood to destroy the earth.” And God said, “This is the sign of the covenant which I make between me and you and every living creature that is with you, for all future generations: I set my bow in the cloud, and it shall be a sign of the covenant between me and the earth.”

Every year, on the First Sunday of Lent, the Church invites us to reflect on temptation. The word ‘temptation’ usually brings in uncomfortable feelings in most of us. Yet it is an essential part of human life. No one escapes temptation… not even Jesus. Today’s Gospel talks about this. How do we see temptation and the tempter (called variously as… Satan, devil, the evil one)?
A few years back, I was discussing the theme of the I Sunday of Lent, namely, ‘temptation’ with a priest friend of mine. The moment he saw the theme ‘temptation’, he broke into an old Tamil film song that talked of the hero being crushed by trials and temptations. “Lord, enough of this wave after wave of temptations and trials” (Sothanai mel sothanai podhumadaa saami), cries the hero! One can easily feel the sense of desperation that runs through that song.

For people who believe strongly in fate, temptations are seen as a predestined plan to attack us for no reason at all. Temptations are like flash floods that carry us alive. When we begin to imagine temptations in such a way, we seem to give undue power to them. We know that temptations are powerful. But, are we simply puppets in the hands of the tempter? Assigning so much power to temptations and the evil forces, leaves us with a lot of negativity about life. It also ignores so much of positive capabilities in us.

Our generation suffers from what I would like to call ‘the negativity-syndrome’. A major part of this ‘negativity syndrome’ comes from our media which revels in highlighting disasters, destruction, scandals and more tragedies. Why do the media indulge in these? Nothing sells like tragedy and disaster. That is why.
We know that the world is a mixed bag of the good and the bad. For every disaster that happens, there are many more blessings that happen too. Natural calamity, like an earthquake, as well as human-made tragedy, like the senseless shooting in Parkland, Florida, ‘make good business’ for the media. In every tragedy, there are many distressing facts and figures. There are equally, if not more, uplifting events. The media is more interested in reporting the negatives than the positives. Since we hear and see such negative news day after day, we tend to give up on the world very quickly. The temptation of believing that there are far too many evil forces around us and that we can do nothing about them is the most dangerous temptation our present generation needs to face!

Instead of saying that ‘nothing can be done about them’, we can do something about ourselves. The least that we can do is not to entertain such negativity. May Jesus who faced temptations squarely, help us face our trials with determination. May this Lent bring in slow and steady changes in us so that our lives can usher in life-giving spring into the world which seems to be frozen under the winter of death, destruction and despondency! 

Pope Francis – Lent Quote

தவக்காலம் முதல் ஞாயிறு

தவக்காலத்தை ஆரம்பித்திருக்கிறோம். இந்த வழிபாட்டு காலத்திற்கு, நாம் வழங்கியுள்ள பெயர், நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கின்றது. தமிழில் தவக்காலம் என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.
Lent என்ற சொல், 'lente' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில், 'lente' என்றால், ‘மெதுவாக என்று பொருள். Lenten என்ற சொல், Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் 'வசந்தகாலம்'. 'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இரு சொற்களையும் இணைக்கும்போது உருவாகும், மெதுவாக வரும் வசந்தகாலம் என்ற சொற்றொடர், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.
உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம். குளிர்காலத்திற்கு முன்னர், மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும், தங்கள் இலைகளை இழந்து, பொழியும் பனியில் புதைந்துபோகும். இந்த மாதங்களில், மரங்களையும், செடிகளையும் பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற ஐயம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும், சிறு துளிர்கள், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள், தலை நிமிரும். வசந்தகாலத்தில் மீண்டும் தாவர உலகம் தழைத்துவரும்.
வசந்தம் - கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன், சவால்கள் நிறைந்த மாற்றங்கள், பொறுமையாக நிகழவேண்டும். ஆறு மாதங்களாய் உயிரற்று காணப்படும் தாவர உலகில், திடீரென, ஓரிரவில், மாற்றங்கள் உருவாகி, அது பூத்துக் குலுங்குவது கிடையாது. நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்காத வகையில், மிக, மிக மெதுவாக, வசந்த காலம் வந்துசேர்கிறது. மெதுவாக, நிதானமாக, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்ற சோகமான அடையாளங்களே மனதை நிரப்பும். ஆனால், தவக்காலத்தை, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் என்ற கோணத்தில் பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை.
மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் - சாம்பல். அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்தபோது, "மனம் திரும்பி நற்செய்தியை நம்புவாயாக" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன், சாம்பலைப் பூசும் நேரத்தில், அருள் பணியாளர் பயன்படுத்திய வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக அமைந்தன: "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்."

சாம்பலை, அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப்பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, நம் அனைவருக்கும் தெரிந்த 'சின்டரெல்லா' (Cinderella) என்ற பாரம்பரியக் கதை உதவியாக இருக்கும். 'சின்டரெல்லா' என்ற இந்தப் பெயர், இரு சொற்களின் இணைப்பு. 'Cinders', அதாவது, சாம்பல், மற்றும், 'Puella', அதாவது, 'சிறுமி' அல்லது 'சிறிய பெண்' என்ற இரு சொற்களும் இணைந்து உருவானதே, Cinderella.
இந்தப் பாரம்பரியக் கதையின் கருத்து, மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. "ஒருவர் அழகு மிக்கவராக, அனைவராலும் விரும்பித் தேடப்படுபவராக, பெரும் விருந்துகளில் கலந்துகொள்பவராக மாறுவதற்கு முன், சாம்பலுடன், தனிமையில் நேரத்தைச் செலவிடவேண்டும். அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை, யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், பணிவோடு செய்யவேண்டும்" என்பதே, சின்டரெல்லா கதை நமக்குச் சொல்லித்தரும் பாடம். தவக்காலம், நம்மை, சாம்பலில் அமர அழைக்கிறது.

ஒரு பொருள், நெருப்பில் அழிந்ததும், உருவாவது சாம்பல். எனவே, சாம்பலை நாம் அழிவின் அடையாளமாகவே பெரும்பாலும் கருதுகிறோம். ஆனால், அதே சாம்பல், உயிர்களை வளர்க்கும் உரமாகவும், பொருள்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கி, அவற்றை ஒளிமயமாக்கும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அழிவின் அடையாளங்களாக நாம் கருதும், சாம்பல், மற்றும் நெருப்பைப்போலவே, பெருவெள்ளமாக வரும் நீரையும், அழிவின் அடையாளமாகக் கருதுகிறோம். பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து, அற்புதங்களை நிகழ்த்திய இறைவனை, இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவுறுத்துகிறது. நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில், இறைவன், புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். கிறிஸ்தவ மறையில் மட்டுமல்லாமல், பல்வேறு மறைகளிலும், கலாச்சாரங்களிலும், வானவில், நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் தொடக்க நூலில் இவ்வாறு ஒலிக்கின்றன:
தொடக்கநூல் 9: 8-15
கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு, சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க, திருஅவை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தை, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளையும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் என்ற அச்சமே நம்மில் பலருக்கு தோன்றும். ஆறஅமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் நல்ல பாடங்கள்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று பகிரக்கூடிய மறையுரையைப் பற்றி இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற பழைய திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நம்மால் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையின்மையை, உள்ளத்தில் ஆழமாக ஊன்றி விடும் ஆபத்தான சொற்கள் இவை.

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளமாக, சோதனைகளையும், அதில் அடித்துச் செல்லப்படும் பரிதாபமானப் பாவிகளாக நம்மையும் எண்ணிப் பார்க்கிறோம். இத்தகைய எண்ணங்களுக்கு இடம்கொடுக்கும்போது, சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக் காரணமான தீய சக்திக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளத்தில் நம்பிக்கை குலைகிறதே, அதுதான் இன்று நம்மில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றி பெறவும், நம்முள் உறுதியான மனமும் உள்ளது. இதையும் நாம் நம்பவேண்டும்.

நாம் வாழும் உலகில், ஆக்கப்பூர்வமான செயல்கள், ஆயிரக்கணக்கில், ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும், வன்முறைகளையும், குற்றங்களையும், விறுவிறுப்பானச் செய்திகளாகப் படைக்கின்றன. ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும்போது, "ச்சே, என்ன உலகமிது" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று நம்மைச் சொல்லவைத்து விடுகின்றது.
இப்படி ஓர் இயலாத்தன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு ஊட்டப்படும்போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.
தன் பணிவாழ்வைத் துவக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச் சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார். நல்லவேளை. இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன் தன் பணிகளைத் துவக்கினார். இயேசு சோதனைகளைத் துணிவுடன் சந்தித்து வென்றது, நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலமாகவிளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நிகழவிடாமல், நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கு, இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.