27 April, 2019

Meeting our executioners கொலையாளிகளுடன் சந்திப்பு


Sri Lankan security forces - St. Anthony’s Shrine in Colombo

The Divine Mercy Sunday

“Put your finger here, and see my hands; and put out your hand, and place it in my side; do not be faithless, but believing.” (John 20: 27) – This is the gentle invitation given by Jesus to his disciple Thomas. This invitation is extended to all of us during the Holy Mass this Sunday.
Although this invitation is extended on the 2nd Sunday of Easter – the Divine Mercy Sunday – every year, this year it takes on a special significance. The idea that Jesus is inviting us to touch his scars, takes us to Sri Lanka, where, once again, the mystical body  of Christ was wounded badly last Sunday – Easter Sunday. The Christians in Sri Lanka who went to the Churches – St Antony’s, St Sebatian’s and Zion – on Easter Sunday, were nailed to the cross once again.

This is not the first time that Christians have been targeted on major feast days. On April 9, 2017, Palm Sunday, two Coptic Orthodox churches were the targets of suicide bombers. 47 people who had come to take part in the liturgical celebrations of Palm Sunday were killed and more than a hundred were wounded. On April 15, Holy Saturday, innocent people, fleeing from the war zone in Syria, were killed by bomb blasts. 126 died, out of whom more than 70 were children.

In 2016, at the start of the Holy Week, on March 22, Tuesday, Brussels was devastated by terrorist attacks. On Easter Day, there was a gruesome attack aimed at Christians in a public park in Lahore, Pakistan… The very next year, a suicide bomber was tackled by the Lahore police, before he could attempt to blast himself during the Holy Week services. In 2011 and 2012, Christian churches in Nigeria were attacked, and more than 30 persons were killed.

Every tragedy raises more questions than provide answers. When we hear of such tragedies in which innocent people are killed, our minds are filled with the main question – WHY? Most of the times, the Christian response to tragedies, especially tragedies caused by human beings, is forgiveness and prayer. The famous words of Jesus uttered on the Cross for his executioners become the touchstone to examine our willingness to forgive and pray for the perpetrators of violence.

More than ever, at this moment of the tragedy in Sri Lanka, we need to understand the idea of forgiveness that Jesus taught us on the Cross. To help us in this process, let us look at two letters… The first letter is doing its round for the past few days via facebook. This letter, it is said, was written by a nun to those who had planned and executed the tragedy in Sri Lanka. Here are a few excerpts from this letter:
Appreciate that you made the effort to find out the timing of our mass.
Appreciate that you learnt more about our religion to know that Sundays are the days we go to Church for the congregational prayers and Mass
Appreciate that you showed the world how Christians welcome, with open arms, even people like yourself into our Church, which is our second home.
Appreciate you for showing that our Churches have no locks or gates, and are unguarded because everyone and anyone is welcome to be with us.

You have broken many, many hearts and you have made the world weep. You have left a huge void. But what you also have done have brought us closer together. And it has strengthened our faith and resolve.
In the coming weeks, more people will turn up in the Church, a place you hate so much, fortified by the strength in our faith, and inspired by our fallen brothers and sisters.
You may have achieved your aim of intended destruction, but I guess you greatly failed to incite hatred, fear and despair in all of us.
While this letter enumerates the ‘hidden blessings’ received by the Christians due to these attacks, it does not, I believe, go deep into the aspect of compassion and forgiveness.

The second letter is written by the Trappist Abbott, Christian de Cherge, who wrote to his family, just before he, himself, was killed by Islamic terrorists. He writes:
“If it should happen one day—and it could be today—that I become a victim of the terrorism which now seems ready to encompass all the foreigners living in Algeria, I would like my community, my Church, my family, to remember that my life was given to God and to this country. I ask them to accept that the One Master of all life was not a stranger to this brutal departure. … I ask them to be able to associate such a death with the many other deaths that were just as violent, but forgotten through indifference and anonymity. …  I have lived long enough to know that I share in the evil which seems, alas, to prevail in the world, even in that which would strike me blindly.
I should like, when the time comes, to have a clear space which would allow me to beg forgiveness of God and of all my fellow human beings, and at the same time to forgive with all my heart the one who would strike me down. …  I do not see, in fact, how I could rejoice if this people I love were to be accused indiscriminately of my murder. It would be to pay too dearly for what will, perhaps, be called “the grace of martyrdom,” to owe it to an Algerian, whoever he may be, especially if he says he is acting in fidelity to what he believes to be Islam. I know the scorn with which Algerians as a whole can be regarded. I know also the caricature of Islam which a certain kind of Islamism encourages. It is too easy to give oneself a good conscience by identifying this religious way with the fundamentalist ideologies of the extremists. … 
This is what I shall be able to do, if God wills—immerse my gaze in that of the Father, to contemplate with him his children of Islam just as he sees them, all shining with the glory of Christ, the fruit of his Passion, filled with the Gift of the Spirit, whose secret joy will always be to establish communion and to refashion the likeness, delighting in the differences. … And you also, the friend of my final moment, [my executioner], who would not be aware of what you were doing. Yes, for you also I wish this “thank you”—and this adieu—to commend you to the God whose face I see in yours. And may we find each other, happy ‘good thieves,’ in Paradise, if it pleases God, the Father of us both. Amen.”

Fr Christian de Cherge and 18 others were ‘beatified’ on December 8, 2018. The closing lines of the letter of Bl. Christian de Cherge talking about ‘good thieves’, enjoying one another’s company in heaven, helped me to imagine that Jesus not only invited the ‘good’ thief into paradise, but also the ‘other one’… in fact, all the ‘others’ who were responsible for his cruel death, when he said: “Father, forgive them!” This forgiveness that Jesus prays for, is not an alms given to them out of pity, but an honest sharing of His heritage in heaven!

How would we react if we meet Pilate, Herod, the Chief Priests, Pharisees as well as Judas in Heaven? Isn’t it high time we prayed for these ‘friends’ of ours that they may share in the Eternal Banquet? I see this as the better option when faced with the violence of ISIS and other mis-guided (or, should I say, differently-guided) groups! “Forgive them, they know not what they do.”

Jesus, the ‘wounded healer’ comes to show his wounds to Thomas in order to heal him and win him back. Thomas insisting on seeing the wounds (scars), and Jesus obliging him, give us a glimpse as to how to see the Resurrection as well as learn how to interpret the wounds inflicted on the Church – the mystical body of Christ – in our present day.

Showing the wounds is not a gesture of celebrating the victory of Jesus. The Risen Jesus, deciding to carry the scars of the Cross in the glorified body, itself is a lesson on how we need to see the most vulnerable as well as glorious moments of our lives. It is also a reminder to the disciples to overcome all the wounded feelings they have accumulated during the Passion. It was an invitation to forgive the Romans and the Jewish Leaders of all the wounds they had inflicted on the disciples and would continue to inflict on them. Jesus invites Thomas, his other disciples as well as everyone of us to become ‘wounded healers’!

Let us close our reflections with a special prayer for the people of Sri Lanka that they will ‘rise again’ in forgiveness and peace from this tragedy!
“My Lord and my God!” (John 20:28)

இறை இரக்கத்தின் ஞாயிறு

"இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" (யோவான் 20:27). இயேசு, உயிர்த்தெழுந்த பின், தன் காயங்களைத் தொடுவதற்கு, தன் சீடர் தோமாவுக்கு விடுத்த இவ்வழைப்பு, நம் ஆலயங்கள் அனைத்திலும், இன்றைய ஞாயிறு வழிபாட்டில் ஒலிக்கின்றது. இவ்வழைப்பு, தோமாவுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் விடப்படும் அழைப்பு.
உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் இறை இரக்கத்தின் ஞாயிறன்று நாம் வாசிக்கும் நற்செய்தியில் இடம்பெறும் இவ்வழைப்பு, ஒவ்வோர் ஆண்டிலும் நம்மை வந்தடைந்தாலும், இவ்வாண்டு, இது, கூடுதல் சிந்தனைகளை உருவாக்குகின்றது.

உயிர்த்த இயேசு தம் காயங்களை நமக்குக் காட்டுகிறார்; அவற்றைத் தொடுவதற்கு நம்மை அழைக்கிறார் என்ற எண்ணம், நம்மை, இலங்கையை நோக்கி அழைத்துச் செல்கின்றது. கடந்த ஒரு வாரமாக, நமது சிந்தனைகள், இலங்கையின் புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் மற்றும் சீயோன் ஆலயங்களைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளன.
ஏப்ரல் 21, கடந்த ஞாயிறு, உயிர்ப்பு ஞாயிறென உலகெங்கும் கொண்டாடப்பட்டாலும், அது, இலங்கை வாழ் மக்களுக்கு, குறிப்பாக, இலங்கை வாழ் கிறிஸ்தவர்களுக்கு, மீண்டும், பாடுகளின் வெள்ளிக்கிழமையாக மாறியது. உயிர்த்த இயேசுவை சந்திக்க ஆலயங்களுக்குச் சென்றவர்கள், மீண்டும், கல்வாரிச் சிலுவையில் அறையப்பட்டனர்.

கிறிஸ்மஸ், உயிர்ப்பு போன்ற முக்கியமானத் திருநாள்களில், கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்படுவது, இது முதல் முறையல்ல. 2016ம் ஆண்டு, உலகெங்கும் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடப்பட்டபோது, பாகிஸ்தான், இலாகூர் பூங்காவில், கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில், 75 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த ஆண்டு, அத்தகைய முயற்சியை இலாகூர் பேராலயத்தில், ஓருவர் மேற்கொள்ளச் செல்லும் வழியில், காவல்துறையினர் அவரைச் சுட்டுக்கொன்றதால், அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கப்படவில்லை.

2017ம் ஆண்டு, ஏப்ரல் 9, புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறன்று, எகிப்து நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவில்கள் இரண்டில், வழிபாட்டு நேரத்தில், நிகழ்ந்த தற்கொலை குண்டுவெடிப்பில், 47 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேலானோர் காயமுற்றனர். அதே புனித வாரத்தின் இறுதி நாள், சனிக்கிழமை, சிரியா நாட்டில், போரின் கொடுமையிலிருந்து தப்பித்துச் செல்வோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 126 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில், 70க்கும் அதிகமானோர், குழந்தைகள்.

2011ம் ஆண்டு, கிறிஸ்மஸ் நாளன்று, நைஜீரியாவின் இரு கிறிஸ்தவக் கோவில்களில் நடைபெற்ற தாக்குதல்களில், 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த ஆண்டில், மீண்டும் ஒருமுறை, நைஜீரியாவில், கிறிஸ்மஸ் திருநாளன்று, தாக்குதல்கள் நடைபெற்றன.

இத்தகைய மதியற்ற வன்முறைகள் நிகழும்போது, நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தரப்படும் வழிகள், மன்னிப்பு, மற்றும் செபம். இவ்விரண்டையும் இணைத்து, இயேசு கல்வாரியில் சொன்ன வார்த்தைகள், அடிக்கடி நமக்கு நினைவுறுத்தப்படுகின்றன. "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34)
இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடும்போது, கல்வாரியில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு, தன் கொலைகாரர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டிய சொற்களை, இந்த ஞாயிறு வழிபாட்டின்போது, அதிலும் சிறப்பாக, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்களுக்குப்பின், இந்த மன்னிப்பின் சக்தியைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசு வழங்கிய இந்த மன்னிப்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இருவேறு மடல்கள் உதவியாக இருக்கும். முதல் மடல், முகநூல் வழியே கடந்த ஒரு வாரமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் மடல். இலங்கையில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு, ஓர் அருள் சகோதரி எழுதியதாகக் கூறப்படும் இம்மடலிலிருந்து ஒரு சில வரிகள்:

உங்களை நான் பாராட்டுகிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் கோவில்களில் மக்கள் கூடிவருவர் என்பதையும், எங்கள் வழிபாட்டு நேரங்களையும் நீங்கள் நன்கு அறிந்துவைத்திருந்ததற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.
எங்கள் கோவில்களைத் தேடிவரும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்பதை நீங்கள் உலகறியச் செய்ததற்காக, உங்களை நான் பாராட்டுகிறேன்.
எங்கள் சமுதாயத்தை அழித்துவிட நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள், எங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை இன்னும் வளர்த்துள்ளன; எங்களை இன்னும் நெருங்கிவரச் செய்துள்ளன; இனிவரும் நாள்களில் எங்கள் கோவில்களுக்கு வருவோரின் எண்ணிக்கை வளரும். இவற்றிற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.
வெறுப்பை வளர்ப்பதற்காக இவ்வளவு தூரம் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரப்போவதில்லை. கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதத்தினருக்கும் இடையே பிளவை உருவாக்கப்போவதில்லை.
இதற்காக, எங்களை மன்னித்துவிடுங்கள் என்று உங்களிடம் கேட்கப்போவதில்லை!

இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள், கிறிஸ்தவர்களுக்கு மறைமுகமாக வழங்கியுள்ள நன்மைகளை இம்மடல் பட்டியலிட்டுள்ளது. ஆனால், மதியற்ற வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, இம்மடல் வழியே, மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது, தெளிவாகத் தெரியவில்லை.
இதிலிருந்து மாறுபட்ட மற்றொரு மடல், 1996ம் ஆண்டு ஒரு சிஸ்டர்சியன் (Cistercian) துறவியால் எழுதப்பட்டது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட Christian de Chergé என்ற அத்துறவி, தன் மரணத்திற்கு முன் எழுதிய மடல், இயேசு, கல்வாரியில், தன் மரணத்திற்குமுன் வழங்கிய மன்னிப்பை, பிரதிபலிப்பதுபோல் அமைந்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்கம் மேலாக, அல்ஜீரியா நாட்டில் பணியாற்றிய, அருள்பணி கிறிஸ்தியான் அவர்களும், அவரது துறவு இல்லத்தில் வாழ்ந்த 6 துறவிகளும், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர். அல்ஜீரியாவில் பணியாற்றுவதற்கு கிறிஸ்தியான் அவர்கள் முடிவுசெய்தபோது, இஸ்லாமிய மதத்தையும், குர்ஆனையும் ஆழமாகப் படித்துத் தேர்ந்தார். இஸ்லாமிய மதத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அருள்பணி கிறிஸ்தியான் அவர்களும், இன்னும் 18 பேரும், 2018ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி அருளாளர்களாக உயர்த்தப்பட்டனர்.
தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்தபோது, அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள், எழுதிய ஒரு மடல், உலகில் நிலவும் வன்முறைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றிற்கு நம் பதிலிறுப்பு எவ்விதம் அமையவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். இதோ, அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள், எழுதிவைத்த இறுதி சாசனம்:

எந்நேரமும் எனக்கு மரணம் வரலாம் - இன்று, இப்போது அது வரலாம். தீவிரவாதத்தின் பலிகடாவாக நான் மாறும்போது, என் துறவுக் குடும்பம், என் உறவினர் அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். என் வாழ்வு, இறைவனுக்கும், இந்நாட்டுக்கும் முற்றிலும் வழங்கப்பட்டது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். என்னைப் போலவே, கொடூரமான மரணங்களைச் சந்தித்து, மறக்கப்பட்ட பலரை நினைவில் கொள்ளுங்கள்.
என் மரணம் நெருங்கிவரும் வேளையில், என்னை மன்னிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவேண்டும். அதேவண்ணம், என்னைக் கொல்பவர்களுக்கு மன்னிப்பு வேண்டவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும். என் கொலைக்குக் காரணம் இவர்களே என்று, கண்மூடித்தனமாக, இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டால், அது, எனக்கு மகிழ்வளிக்காது. பொதுப்படையாக எழும் இவ்விதக் குற்றச்சாட்டுகளால், அல்ஜீரிய மக்களையும், இஸ்லாமியரையும் சந்தேகத்தோடு, மரியாதையின்றி பார்க்கக்கூடிய சூழல் உருவாகும்.
இறைவன் விரும்பினால், என் இறுதி நேரத்தில் நான் செய்ய விழைவது இதுதான். தந்தையாம் இறைவன், இஸ்லாமியர் அனைவரையும், தன் அன்புக் குழந்தைகளாகப் பார்ப்பதுபோல், நானும் அவர்களைப் பார்க்கும் வரம் வேண்டுகிறேன். என் இறுதி நேரத்தை நிர்ணயிக்கும் அந்த ஒருவருக்கு நான் நன்றி சொல்கிறேன். இறைவனின் சாயலை உம்மில் காண்கிறேன். இறைவனுக்கு விருப்பமானால், நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம். ஆமென்.

"நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம்" என்று அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள் கூறியிருப்பது, நம் நினைவுகளில், கல்வாரிக் காட்சியைக் கொணர்கிறது. அங்கு, இயேசு 'நல்ல கள்வனை' தன்னுடன் விண்ணகத்திற்கு வருமாறு அழைத்தார். அதே அழைப்பை அவர் மற்றொரு கள்வனுக்கும் விடுத்திருப்பார். அவ்விரு கள்வர்களை மட்டுமல்லாமல், சிலுவையைச் சுற்றி நின்று, தாங்கள் இழைத்த கொடுமைகளை இரசித்துக் கொண்டிருந்த அனைவரையும் விண்ணகத்திற்கு தன்னுடன் அழைத்துச்செல்ல இயேசு விழைந்திருப்பார். அந்த ஆசையே, "தந்தையே இவர்களை மன்னியும்" என்ற வேண்டுதலாக இயேசுவிடமிருந்து எழுந்தது என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
ஒரு கற்பனைக் காட்சியைக் காண முயல்வோம். நாம் விண்ணகத்தை அடையும்போது, அங்கு, பிலாத்து, ஏரோது, தலைமைக்குருக்கள், பரிசேயர்கள், உரோமைய வீரர்கள், யூதாஸ்... என்று, அனைவரையும் நாம் சந்தித்தால், நம் மனநிலை எவ்வாறு இருக்கும்? அதிர்ச்சியில் உறைந்து போவோமா? அல்லது, மகிழ்வில் நிறைவோமா?
நமது கற்பனை உண்மையாகவேண்டும் என்பதை உறுதிசெய்வதே, உண்மையான கிறிஸ்தவ மன்னிப்பின் வலிமை. அதுவே, இறைவனின் நிபந்தனையற்ற அன்புக்கும், இரக்கத்திற்கும் சாட்சி. வெறுப்பைத் தூண்டிவிடும் ISIS போன்ற மதத் தீவிரவாதிகளுக்கு நாம் வழங்கக்கூடிய பதில் இதுதான்: "நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம்"

அருளாளர் கிறிஸ்தியான் அவர்கள் எழுதியுள்ள இம்மடல், காயங்களைத் திறப்பதற்குப் பதில், அந்தக் காயங்களிலேயே மீட்பைக் காண்பதற்கு அழைப்பு விடுக்கிறது. அத்தகைய ஓர் அழைப்பை இயேசு அன்று தோமாவுக்கும், ஏனைய சீடர்களுக்கும் விடுத்தார். கல்வாரியில் காயப்பட்டது போதாதென்று, சீடர்களின் சந்தேகத்தாலும், நம்பிக்கையிழந்த நிலையாலும், இயேசு, மீண்டும் காயப்படுகிறார். இருப்பினும், அந்தக் காயங்களைத் தொடுவதற்கு தன் சீடர்களை அன்று அழைத்ததுபோல், இன்று, நம்மையும் அழைக்கிறார். காயங்களைத் தொடுவது, மீண்டும் வலியை உருவாக்கும். ஆனால், அன்புடன், நம்பிக்கையுடன் தொடும்போது, காயங்கள் குணமாவதற்கும் வழிபிறக்கும். இதுதான், அன்று, இயேசுவுக்கும், தோமாவுக்கும் இடையே நிகழ்ந்த உன்னத நிகழ்வு.

தன் காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, தோமா, இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. தன் விரலால், தோமா, இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே, தோமாவின் மனதை, இயேசு, மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை, தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28)
இயேசுவை, ‘கடவுள் என்று அறிக்கையிட்ட முதல் மனிதப்பிறவி, தோமாதான். இவ்விதம் ஆழமாய்த் தொட்டு, தன்னை மீட்புக்கு அழைத்துச்சென்ற இயேசு கிறிஸ்துவை, உலகெங்கும், குறிப்பாக, இந்தியாவில் அறிமுகம் செய்தவர், திருத்தூதர், தோமா.
காயப்பட்ட கடவுளைத் தொடுவதற்கு நம்மை அழைக்கும் இறை இரக்கத்தின் ஞாயிறன்று, காயப்பட்டிருக்கும் இலங்கை மக்களை இறைவனின் பாதங்களில் சமர்ப்பிப்போம். மதியற்ற இந்த வன்முறையில் மரணமடைந்தோர், இறைவனின் நிறையமைதியில் இணைய வேண்டும் என்றும், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும், காயமடைந்தோர் நலமடையவேண்டும் என்றும் செபிப்போம்.
பல ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் இலங்கை மக்களை, அமைதியான, வளமான, நலமான வாழ்வை நோக்கி இரக்கம் நிறைந்த இறைவன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.
உயிர்த்த இறைவனின் தழும்புகளைத் தொட்டுணர அழைக்கும் இந்த இறை இரக்கத்தை, நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, குறிப்பாக, காயப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் உணர,சந்தேகத் தோமா என்றழைக்கப்படும் புனித தோமையாரின் பரிந்துரையோடு வேண்டுவோம்.


24 April, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 2


Earth Day 2019 – Youth protest

பூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்

1970ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல நகரங்களில் நடத்தப்பட்ட போராட்ட ஊர்வலங்களில், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர், இளையோர். உலகம் தொழில்மயமாக்கப்பட்டபின், 150 ஆண்டுகளாக, பூமிக்கோளத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நிகழ்ந்துவரும் சீரழிவுகளை எதிர்த்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களை நினைவுகூரும்வண்ணம், ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் 22ம் தேதி, ‘பூமிக்கோள நாள் (Earth Day) சிறப்பிக்கப்படுகிறது.
2019ம் ஆண்டு ஏப்ரல் 22, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட பூமிக்கோள நாளுக்கு, "நமது உயிரினங்களைக் காப்பாற்றுக" (Protect Our Species) என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு, "ஞெகிழி மாசுக்கேட்டை முடிவுக்குக் கொணர்க" (End Plastic Pollution) என்பது பூமிக்கோள நாளின் மையக்கருத்தாக அமைந்தது. 2020ம் ஆண்டு, 'பூமிக்கோள நாள்' ஆரம்பமானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, இளையோரை ஈடுபடுத்தும் முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மீதும், பூமிக்கோளத்தின் மீதும் இளையோர் காட்டும் அக்கறை ஆண்மையக்காலங்களில் தெளிவாகத் தெரிகின்றது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டைச் சேர்ந்த, 15 வயது நிறைந்த இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், Skolstrejk för klimatet ('School strike for the climate') 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார். "எங்களுடைய எதிர்காலத்தின் மீது அரசியல்வாதிகள் பெருமளவுக் கழிவுகளை வீசுகின்றனர்" என்ற கருத்தை, இளம்பெண் துன்பர்க் அவர்கள் செய்தியாளர்களிடம் ஆணித்தரமாகக் கூறினார்.
இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 17, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள, புனித பேதுரு வளாகத்திற்கு வந்திருந்த இளம்பெண் துன்பர்க் அவர்கள், மறைக்கல்வி உரைக்குப்பின் திருத்தந்தையைச் சந்தித்தபோது, "திருத்தந்தையே, சுற்றுச்சூழல் மீது நீங்கள் காட்டிவரும் அக்கறை, எங்களுக்கு நம்பிக்கை தருகிறது" என்று கூறினார். அவரிடம் திருத்தந்தை, "தொடர்ந்து போராடுங்கள்" என்று கூறினார்.
பூமிக்கோளத்தின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றைக் குறித்து அக்கறையேதும் இல்லாமல் அரசியல் தலைவர்கள் நடந்துகொள்ளும் கேவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இளையோர், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.
(ஆதாரம் - https://www.earthday.org/earthday/ வலைத்தளம்)

Jesus cures the man with withered hand

ஒத்தமை நற்செய்தி உலர்ந்த கரம் உயிர்பெற... 2

தொழுகைக்கூடம் ஒன்றில், ஓய்வுநாளன்று, இயேசு ஆற்றிய ஒரு புதுமையை சென்ற விவிலியத் தேடலில் சிந்திக்க ஆரம்பித்தோம். ஓய்வுநாள், தொழுகைக்கூடம் என்ற சொற்கள், நம்மை, இலங்கையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இலங்கையில், ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று காலையில், புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் மற்றும் சீயோன் ஆலயங்களிலும் ஒருசில நட்சத்திர விடுதிகளிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில், இதுவரை, 310 பேர் இறந்துள்ளனர், இன்னும் பலர் படுகாயமுற்று, உயிருக்குப் போராடி வருகின்றனர். இறந்தோர் அனைவரும் இறைவனின் நிறையமதி பெறவும், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் ஆறுதல் அடையவும், காயமடைந்தோர் நலமடையவும் இறைவனை இறைஞ்சி, நம் தேடலைத் துவங்குவோம்.

கை சூம்பிய ஒருவரை இயேசு குணப்படுத்தியப் புதுமையில் நம் தேடல் பயணத்தை சென்ற வாரம் ஆரம்பித்த வேளையில், இப்புதுமையின் இரு முக்கிய நாயகர்களான இயேசுவையும், கை சூம்பிய மனிதரையும் அறிமுகம் செய்தோம். இந்த அறிமுக வரிகளைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் மாற்கு, அந்தத் தொழுகைக்கூடத்தில் நிலவிய இறுக்கமானதொருச் சூழலை பின்வருமாறு சித்திரிக்கிறார்: "சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்." (மாற்கு 3:2). நற்செய்தியாளர் மாற்கு, 'சிலர்' என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளவர்களை, நற்செய்தியாளர் லூக்கா, "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்" (லூக்கா 6:7) என்று, இன்னும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு வழிபாட்டுத்தலத்திற்கும் மக்கள் செல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில, ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவமாகவும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 21, ஞாயிறன்று காலை, இலங்கையில் ஆலயங்களுக்குச் சென்றவர்கள், உயிர்ப்புப் பெருவிழாவை இறைவனின் சன்னதியில் கொண்டாடச் சென்றனர். சாவுக்கு இறுதி வெற்றி இல்லை என்ற உண்மையை உலகறியப் பறைசாற்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைச் சந்திக்கச் சென்றனர். வாழ்வைக் கொண்டாட மக்கள் சென்ற அதே ஆலயங்களுக்கு, வெடிகுண்டுகளின் வடிவில், சாவைச் சுமந்து சென்ற ஒரு சிலரும் இருந்தனர். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோர் எதிரெதிர் நோக்கங்களுடன் செல்வதை, இலங்கைத் தாக்குதல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள இப்புதுமையில், தொழுகைக்கூடத்தில் கூடியிருந்தோர் கொண்டிருந்த நோக்கங்களை அலசிப்பார்ப்பது பயனுள்ள முயற்சியாக இருக்கும். தொழுகைக்கூடத்திற்கு இயேசு சென்றதன் நோக்கம்? மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல. மக்கள் அங்கு கூடிவந்ததன் நோக்கம்? இயேசுவின் போதனைகளைக் கேட்க. அதிலும் சிறப்பாக, இயேசுவின் போதனைகள், மற்ற மறைநூல் அறிஞர்கள் போதிப்பதுபோல் இல்லாமல், நன்றாக உள்ளன என்ற செய்தி பரவி வந்ததால், அவரது போதனையைக் கேட்க மக்கள் இன்னும் ஆர்வமாக வந்திருந்தனர். (காண்க - மாற்கு 1:22, மத்தேயு 7:28-29)

அதே தொழுகைக்கூடத்தில், வலக்கை சூம்பிய ஒருவரும் இருந்தார். அவர் ஏன் அங்கு வந்திருந்தார் என்ற கேள்வி எழும்போது, அவர், இயேசுவிடம் தன் குறையைச் சொல்லி ஏதாவது ஒரு தீர்வு காணலாம் என்று நம்பிக்கையோடு வந்திருக்கக் கூடும் என்பதே, நாம் எண்ணிப்பார்க்கும் முதல் காரணம்.
ஆனால், சென்றவாரம் நாம் சிந்தித்த ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை மீண்டும் நினைவுகூர்வது நல்லது. மறையுரையாளரும், எழுத்தாளருமான மார்க் ஆர்னால்டு (Mark J.Arnold) அவர்கள், "கை சூம்பியவர் நமக்குச் சொல்லித் தருபவை" என்ற தலைப்பில், எழுதியுள்ள கட்டுரையில் கூறும் மாறுபட்ட கண்ணோட்டம், கை சூம்பியவரைப் பற்றி நல்ல எண்ணங்களை விதைக்கின்றது.

கை சூம்பியவர், இயேசுவின் போதனைகளைக் கேட்க அங்கு வந்திருந்தார் என்று எண்ணிப்பார்க்க, ஆர்னால்டு அவர்கள் அழைப்பு விடுக்கிறார். அங்கக் குறையுள்ளவர்கள் எல்லாருமே, ஆண்டவனைத் தேடிவருவதற்கு ஒரே காரணம், தங்கள் குறைகளைத் தீர்ப்பது மட்டுமே என்ற குறுகியக் கண்ணோட்டத்திலேயே நாம் எப்போதும் சிந்திப்பதால், கை சூம்பியவர், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருக்கலாம் என்று சிந்திப்பது, வியப்பைத் தருகிறது. அங்கக் குறையுள்ளவர்கள், தங்கள் குறைகளை மையப்படுத்தாமல், உண்மையான ஆர்வத்தோடு, இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்தனர் என்று எண்ணிப்பார்க்கும்போது, அவர்களைப் பற்றிய நம் மதிப்பு கூடுகிறது என்று ஆர்னால்டு அவர்கள் கூறியுள்ளார்.

இறுதியாக, அந்தத் தொழுகைக்கூடத்தில் இருந்த மறைநூல் அறிஞர், மற்றும், பரிசேயர் பக்கம் நம் கவனம் திரும்புகிறது. அவர்கள் அங்கு வந்ததன் நோக்கம்? இயேசுவின் போதனைகளைக் கேட்கவா? தொழுகை செய்யவா? அல்லது, மக்களை, தொழுகையில் வழிநடத்தவா? ஒருவேளை இந்த நோக்கங்களுடன் அவர்கள் அங்கு வந்திருக்கலாம். ஆனால், இயேசுவையும், அங்கிருந்த கை சூம்பிய மனிதரையும் அந்த தொழுகைக்கூடத்தில் பார்த்ததும், அவர்கள் வந்த காரணம், குறிக்கோள் எல்லாம் மாறின. இதைத்தான், நற்செய்தியாளர் லூக்கா, "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்" (லூக்கா 6:7) என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

நோயுற்ற ஒரு மனிதரையும், இயேசுவையும் ஒரே இடத்தில் கண்டதும், மறைநூல் அறிஞரும், பரிசேயரும், அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை முடிவு செய்துவிட்டனர். இயேசு அவரைக் குணமாக்குவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஒரு கோணத்தில் சிந்திக்கும்போது, அவர்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கை, நாம் இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கைக்கு சவாலாக அமைகிறது. இயேசு ஆற்றல் மிகுந்தவர், துன்பங்களைக் கண்டதும் அவற்றைத் தீர்ப்பவர் என்ற எண்ணங்கள் அவர்கள் உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிந்திருந்தன. ஆனால், இயேசுவைக் குறித்து அவர்கள் கொண்டிருந்த இந்த நேர்மறையான எண்ணங்கள், அவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லவில்லை என்பது, வருத்தத்திற்குரிய உண்மை.
இயேசு நன்மைகள் செய்யும் ஆற்றல் கொண்டவர் என்பதை, தீய ஆவிகளும் அறிந்திருந்தன என்பதை நாம் நற்செய்தியில் காண்கிறோம். ஆனால், தீய ஆவிகள் பெற்றிருந்த இந்த அறிவு, இயேசுவை விட்டு விலகிச் செல்லும் அச்சத்தையே அவர்களுக்கு ஊட்டியது. மாற்கு நற்செய்தியில் பதிவாகியுள்ள முதல் புதுமையில், இயேசு, தீய ஆவி பிடித்த ஒருவரைக் குணமாக்கும்போது, அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. (மாற்கு 1:24) என்று வாசிக்கிறோம்.

இயேசுவைக் குறித்து அறிவுப்பூர்வமாக, தெளிவாக அறிந்து வைத்திருந்த மறைநூல் அறிஞரும், பரிசேயரும், தொழுகைக்கூடத்தில் நிலவியச் சூழலைக் கண்டு, உதட்டோரம் லேசான ஒரு புன்னகை சிந்தினர். இயேசுவை, மக்கள் முன் மட்டம் தட்ட இதைவிட அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று கணக்கு போட்டனர்.
கை சூம்பிய அந்த மனிதருக்கு இயேசு உதவாவிடில், அவர் இதயமற்றவர் ஆகிவிடுவார். ஆனால், அந்த மனிதர் மேல் இரக்கம் காட்டி, அவரை குணமாக்கினால், மோசே வகுத்த சட்டங்களை, இறைவனே நேரடியாகத் தந்த ஓய்வு நாள் சட்டத்தை மீறுபவர் ஆகிவிடுவார். நல்லது செய்தாலும் தப்பு, செய்யாமல் இருந்தாலும் தப்பு. இயேசு தங்கள் வலையில் சரியாகச் சிக்கிக்கொண்டார் என்று அவர்கள் கணித்தனர். அவர்கள் போட்ட கணக்கில் ஒரே ஒரு தப்பு... இயேசுவின் அறிவுத்திறனைக் கொஞ்சம் குறைவாக மதிப்பிட்டுவிட்டனர்.

இத்தருணத்தில், லூக்கா நற்செய்தியில் நாம் வாசிக்கும் அழகான ஒரு வாக்கியம் நம் கவனத்தை ஈர்க்கிறது. "இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, ‘எழுந்து நடுவே நில்லும்! என்றார். அவர் எழுந்து நின்றார்" (லூக்கா 6:8) என்று வாசிக்கிறோம். "அவர்கள் எண்ணங்களை அறிந்த இயேசு..." என்ற அழகான சொற்றொடரை நமது இன்றைய பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால், இயேசு அவர்களை அளந்து வைத்திருந்தார் என்று எண்ணிப்பார்க்கலாம்.
மறைநூல் அறிஞரும், பரிசேயரும், நோயுற்ற ஒருவரை பகடைக்காயாகப் பயன்படுத்தி, துவங்கவிருந்த 'ஒய்வு நாள்' என்ற சதுரங்க விளையாட்டிற்கு இயேசுவும் தயாரானார். எனவே, அவர், கை சூம்பியவரை, தொழுகைக்கூடத்தின் மையத்திற்குக் கொணரும்வண்ணம், எழுந்து நடுவே நில்லும்! என்று அழைத்தார்.


கை சூம்பியவரை, தொழுகைக்கூடத்தின் நடுவே வரும்படி இயேசு தந்த அவ்வழைப்பைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தனவற்றை நாம் அடுத்தத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.

16 April, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 1


Schoolchildren in a climate protest in Hong Kong - March 15, 2019

பூமியில் புதுமை – உலகைக் காக்கப் போராடிவரும் இளையோர்

மார்ச் 15, வெள்ளியன்று, உலகின் 125 நாடுகளில், பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, சாலைகளுக்கு வந்தனர். 2000த்திற்கும் அதிகமான நகரங்களில் ஊர்வலங்களும்கூட்டங்களும் நடத்தினர். அவர்களது ஒரே அறைகூவல் - பூமிக்கோளத்தைக் காப்பாற்றுங்கள்! மார்ச் 15ம் தேதியைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைகளில் இளையோரின் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஏப்ரல் 12, கடந்த வெள்ளியன்று, இங்கிலாந்தின் 50 நகரங்களில், இளையோரின் போராட்டம் தொடர்ந்தது.
உலகை இன்று அச்சுறுத்திவரும் பெரும் ஆபத்து, பருவநிலை மாற்றம். இதைக் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவரும், ‘புவி வெப்பமாதல் (global warming) என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தியவருமான முன்னோடி அறிவியலாளர், வாலஸ் ஸ்மித் புரோக்கர் (Wallace Smith Broecker) அவர்கள், இவ்வாண்டு, பிப்ரவரி 18ம் தேதி, தன் 87வது வயதில், காலமானார். அவரைக் குறித்து, ஆதி வள்ளியப்பன் அவர்கள், 'தி இந்து' நாளிதழில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் சுருக்கம் இதோ:
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த புரோக்கர் அவர்கள், வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, புவியை வெப்பப்படுத்தும் என்பதை, 1975ம் ஆண்டிலேயே சரியாகக் கணித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். கரியமில வாயு போன்றவை, வளிமண்டலத்தில் கூடிவருவதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பருவநிலை அமைப்பு, ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு எதிர்பாராதவிதமாகத் தாவி, பயங்கர அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று, அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம், புரோக்கர் அவர்கள் விளக்கமளித்தார். பெட்ரோல், டீசல் போன்ற, புதைப்படிவ எரிபொருள்களை பேரளவு எரிப்பதன் விளைவாக, நம் வளிமண்டலத்தில் கரியமில வாயுவை அதிகரிப்பது, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று புரோக்கர் அவர்கள் எச்சரித்தார்.
அண்மையில் இளையோர் மேற்கொண்ட போராட்டங்களில் வெளியான ஒரு முக்கிய எச்சரிக்கை, புதைப்படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறையுங்கள் என்பது! பருவநிலை மாற்றம் குறித்து, இளையோரும், வளர் இளம் பருவத்தினரும் உணர்ந்துள்ள அளவுக்கு, அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பது, வேதனை தரும் உண்மை! (தி இந்து)

A man was there whose right hand was withered. (Lk. 6:6)

ஒத்தமை நற்செய்தி உலர்ந்த கரம் உயிர்பெற... 1

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவான புதுமைகளில், 4வது புதுமையில் இன்று நம் தேடல் பயணம் துவங்குகிறது. கை சூம்பிய ஒருவருக்கு இயேசு குணமளிக்கும் இப்புதுமைக்கு, (மத். 12:9-14; மாற். 3:1-6; லூக். 6:6-11) மூன்று நற்செய்திகளிலும் வழங்கப்பட்டுள்ள தலைப்பு, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. "கை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்" என்று, இப்புதுமைக்கு, தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. கை சூம்பியவர் நலமடைந்ததை மட்டும் குறிப்பிடாமல், அவர், ஓய்வுநாளில் நலமடைந்தார் என்பதை, இத்தலைப்பு, தெளிவாக, திட்டவட்டமாக அறிவிக்கிறது.
அத்துடன், இப்புதுமைக்கு முந்தையப் பகுதியில், மூன்று நற்செய்திகளிலும், ஓய்வுநாளுடன் தொடர்புள்ள மற்றொரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. "ஓய்வுநாளில் கதிர் கொய்தல்" (மத். 12:1-8; மாற். 2:23-28; லூக். 6:1-5) என்ற தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ள அந்நிகழ்வில், ஒய்வு நாளன்று, இயேசுவின் சீடர்கள், வயல் வழியே நடந்து சென்றபோது, கதிர்களைக் கொய்து சாப்பிட்டதும், அதைக் குறித்து இயேசுவுக்கும், பரிசேயருக்குமிடையே எழுந்த விவாதங்களும் கூறப்பட்டுள்ளன.
எனவே, கை சூம்பியவர் நலமடைந்த புதுமையைக் குறித்து நாம் சிந்திக்கும் வேளையில், ஒய்வுநாளை இயேசு ஏன் மீறினார் என்பதைக் குறித்தும் நாம் தேடல்களை மேற்கொள்ளவேண்டும்.

முதலில், இப்புதுமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியப் பாடங்களைப் பயில முயல்வோம். அக்காலத்தில் இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். (மாற்கு 3:1) என்று, இப்புதுமையை, நற்செய்தியாளர் மாற்கு அறிமுகம் செய்துள்ளார். இப்புதுமையின் இரு முக்கிய நாயகர்களான இயேசுவும், கை சூம்பியவரும் இங்கு நமக்கு அறிமுகமாகின்றனர்.
"இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்" என்ற சொற்களின் வழியே, இயேசு, ஓய்வுநாள்களில் தொழுகைக்கூடத்திற்குச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார். மாற்கு நற்செய்தி முதல் பிரிவிலும், அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார் (மாற்கு 1:21) என்ற சொற்களின் வழியே, இயேசு பின்பற்றிய இப்பழக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தை நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் ஆரம்பித்தார் என்பதை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: இயேசு... தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். (லூக்கா 4:16). 'வழக்கத்தின்படி' என்ற சொல்லின் வழியே, தொழுகைக்கூடத்திற்குச் செல்வது இயேசுவின் வழக்கம் என்பதை லூக்காவும் தெளிவாக்கியுள்ளார். அந்நிகழ்வுக்குப் பின்னர், மீண்டும், நற்செய்தியாளர் லூக்கா, இப்புதுமையின் அறிமுக வரிகளில், மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார் (லூக். 6:6) என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, ஓய்வுநாள்களில் தொழுகைக்கூடம் செல்வதும், அங்கு கற்பிப்பதும், இயேசுவின் வழக்கம் என்பதை நற்செய்தியாளர்கள் நமக்கு பலமுறை நினைவுறுத்துகின்றனர்.

அடுத்ததாக, நம் சிந்தனைகளை, இப்புதுமையின் மற்றொரு நாயகன் மீது திருப்புவோம். "அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்" (மத். 12:10; மாற். 3:1) என்ற சொற்களுடன், நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் இவரை அறிமுகம் செய்துள்ளனர். மருத்துவத் துறையில் அறிவு பெற்றிருந்த நற்செய்தியாளர் லூக்கா, இவரைப்பற்றிக் கூறும்போது, "அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்" (லூக். 6:6) என்று அவரது 'வலக்கை'யைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

அவரது 'வலக்கை'யில் இக்குறை இருந்ததென, நற்செய்தியாளர் லூக்கா, சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பதை வைத்து, ஒரு சில விரிவுரையாளர்கள், கூடுதலான சில அர்த்தங்களைக் காண்கின்றனர். யூதர்கள் நடுவே, 'வலக்கை' என்பது, வலிமை, திறமை, தூய்மை என்ற பல பொருள்களை உணர்த்தியது. எடுத்துக்காட்டாக:
ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. (விடுதலைப் பயணம் 15:6)
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். (எசாயா 41:10) என்று நாம் விவிலியத்தின் பல இடங்களில் வாசிக்கிறோம். வழிபாடுகளிலும், மற்றவரை வாழ்த்துவதற்கும் ஆசீர் வழங்குவதற்கும், வலக்கை முக்கிய பங்காற்றியது. எனவே, 'வலக்கை'யை இழப்பதென்பது மிகவும் வேதனையான ஒரு சூழல்.

வலக்கை சூம்பியவர் ஏன் தொழுகைக்கூடத்திற்கு வந்திருந்தார் என்ற கேள்விக்கு, பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருஅவையால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத 'எபிரேயர்கள் எழுதிய நற்செய்தி' (The Gospel according to the Hebrews) என்ற நூலில், இப்புதுமையைக் குறித்து கூறப்பட்டுள்ள கூடுதல் விவரங்களை, விவிலிய அறிஞர், புனித ஜெரோம் தன் விரிவுரையில் குறிப்பிட்டுள்ளார். மத்தேயு 12ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இப்புதுமையைக் குறித்து, தன் விரிவுரையை வழங்கியுள்ள புனித ஜெரோம், 'எபிரேயர்கள் எழுதிய நற்செய்தி'யில், இந்நிகழ்வைக்குறித்து வழங்கப்பட்டுள்ள விவரங்களை திரட்டித் தந்துள்ளார்.

இப்புதுமையின் நாயகன், கற்களைக் கொண்டு கட்டடம் எழுப்பும் கலைஞர் என்றும், அவர் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் ஏற்பட்ட ஒரு விபத்தால், இவரது வலக்கை செயலிழந்து, சூம்பிப்போய்விட்டது என்றும், கூறப்பட்டுள்ளது. அவர், அன்று, தொழுகைக்கூடத்தில் இயேசுவைச் சந்தித்த வேளையில், அவரிடம், "நான் என் கரங்களால் கட்டடம் எழுப்பி வாழ்ந்தவன். இப்போது என் கரம் செயலற்றுப் போனது. இதைக் கொண்டு நான் பிச்சையெடுத்து வாழ்வதைவிட, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள்" என்று, விண்ணப்பித்ததாக, 'எபிரேயர்கள் எழுதிய நற்செய்தி'யில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலக்கை சூம்பியவரின் வாழ்வை நிறைத்திருந்த வேதனை, இந்த நற்செய்தியில் வெளிச்சமிடப்பட்டுள்ளது.

மறையுரையாளரும், எழுத்தாளருமான மார்க் ஆர்னால்டு (Mark J.Arnold) அவர்கள், இப்புதுமையின் நாயகனைக் குறித்து கூறியுள்ள எண்ணங்கள், வேறுபட்டதொரு கண்ணோட்டத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆர்னால்டு அவர்களின் மகன், 'ஆட்டிசம்' (Autism) என்ற மாற்றுத்திறனுடன் பிறந்ததையடுத்து, ஆர்னால்டு அவர்கள், மாற்றுத்திறனும், சிறப்புத் தேவைகளும் (special needs) உள்ளவர்களைக் காணும் தன் கண்ணோட்டம் மாறியது என்று குறிப்பிட்டுள்ளார். தேவையில் இருக்கும் பலர், இயேசுவை அணுகிவந்து, அவரிடம் நன்மைகள் அடைந்த நிகழ்வுகளை, வேறுபட்ட ஒரு கண்ணோட்டத்துடன், ஆர்னால்டு அவர்கள், தன் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். "கை சூம்பியவர் நமக்குச் சொல்லித் தருபவை" என்ற தலைப்பில், ஆர்னால்டு அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில எண்ணங்கள் இதோ:
சூம்பியக் கையுடையவர் தொழுகைக் கூடத்தில் ஏன் இருந்தார் என்ற கேள்வியை எழுப்பும் ஆர்னால்டு அவர்கள், இயேசுவை மடக்குவதற்கு, இந்த நோயாளியை பரிசேயர்கள் அங்கு அழைத்து வந்திருக்கலாம் என்பதும், தன் குறையை எடுத்துச் சொல்லி, குணம் பெற அவர் வந்திருக்கலாம் என்பதும், இக்கேள்விக்கு  வழங்கப்படும் வழக்கமான இரு பதில்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், மற்றொரு கோணத்தில் நாம் சிந்திக்கவேண்டும் என்று கட்டுரை ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். கை சூம்பியவர், இயேசுவின் போதனைகளைக் கேட்க அங்கு வந்திருந்தார் என்று எண்ணிப்பார்க்க, ஆர்னால்டு அவர்கள் அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு சொல்வது, பலருக்கு வியப்பாக இருக்கலாம். அங்கக் குறையுள்ளவர்கள் எல்லாருமே, ஆண்டவனைத் தேடிவருவதற்கு ஒரே காரணம், தங்கள் குறைகளைத் தீர்ப்பது மட்டுமே என்ற குறுகியக் கண்ணோட்டத்திலேயே நாம் எப்போதும் சிந்திப்பதால், அவர்கள், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருக்கலாம் என்று சிந்திப்பது வியப்பைத் தருகிறது. தங்கள் குறைகளை மையப்படுத்தாமல், உண்மையான ஆர்வத்தோடு, அவர்கள், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்தனர் என்று எண்ணிப்பார்க்கும்போது, அவர்களைப் பற்றிய நம் மதிப்பு கூடுகிறது என்று ஆர்னால்டு அவர்கள் கூறியுள்ளார்.

மாறுபட்ட இக்கண்ணோட்டத்தை ஆழப்படுத்த, நாம் கடந்தவாரம் வரை சிந்தித்து வந்த முடக்குவாதமுற்றவரையும் ஓர் எடுத்துக்காட்டாக நம் முன் வைக்கிறார், ஆர்னால்டு. முடக்குவாதமுற்ற தங்கள் நண்பரைத் தூக்கிவந்த நால்வரும், இயேசுவின் போதனைகளை ஏற்கனவே கேட்டவர்களாக இருக்கலாம், அல்லது, அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இயேசு கூறுவதை தாங்கள் மட்டுமல்லாமல், படுக்கையில் இருக்கும் தங்கள் நண்பனும் கேட்கவேண்டும் என்ற ஆவலில், அவரை, படுக்கையோடு சுமந்து வந்திருந்தனர் நண்பர்கள். வந்த இடத்தில், அவர்கள், இயேசுவை அணுக முடியாமல் கூட்டம் சூழ்ந்திருந்ததால், அவர்கள், வீட்டின் கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன் கொண்டு சென்றனர்.
இப்புதுமையில், தங்கள் நண்பனைக் குணமாக்க வேண்டும் என்று, நண்பர்களோ, தான் குணம் பெறவேண்டும் என்று, முடக்குவாதமுற்றவரோ ஒரு வார்த்தையும் சொல்லவில்லை என்பதை ஆர்னால்டு அவர்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். அந்த ஐவரும், இயேசுவின் போதனைகளைக் கேட்கவே அவரை அணுகிவந்தனர் என்று எண்ணிப்பார்க்கும் வேளையில், அதை நம்மால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை எனினும், இக்கோணத்தில் சிந்திக்கும்போது, நோயுற்றோரைக் குறித்து நம் மதிப்பு உயர்வதைக் காணலாம் என்று ஆர்னால்டு அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புதுமையின் அறிமுக வரிகளைத் தொடர்ந்து, அத்தொழுகைக் கூடத்தில் இயேசுவுக்கும், பரிசேயருக்கும் நிகழ்ந்த மோதலை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.