29 April, 2020

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – பார்வையற்ற இருவர் குணமடைதல்


Earth Day 2020 and Coronavirus

விதையாகும் கதைகள் : பூமியில் விழும் கீறல்கள், படைத்தவர் மீதும்...

இந்து மதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் ஓர் அழகிய கதை இது:
சிறுவன் கணேசன், ஒரு நாள், தெருவில் சென்ற ஒரு பூனைக்குட்டியைக் கண்டான். அதனுடன் விளையாடுவதாக எண்ணிக்கொண்டு, அப்பூனைக்குட்டியின் காதுகளையும், வாலையும் இழுத்தான். அப்பூனையின் முகத்தில் கீறி, அதன் தலைமுடியை இழுத்து நேராக்க முயன்றான். அருகில் கிடந்த ஒரு பிரம்பை எடுத்து, பூனைக்குட்டியின் முதுகைக் காயப்படுத்தினான். வலியில் அலறியபடி, பூனைக்குட்டி, ஓடி மறைந்தது.
சிறுவன் கணேசன் வீடு திரும்பியதும், தன் அன்னையைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். அவனது தாயின் முகத்தில் கீறல்கள் இருந்தன. அவரது தலைமுடி அலங்கோலமாய் கிடந்தது. அவரது முதுகில் பிரம்படியால் உண்டான காயங்கள் இருந்தன. அவர் வேதனையில் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த சிறுவன் கணேசன், தாயிடம் சென்று, "அம்மா, உங்களை யார் இந்நிலைக்கு உள்ளாக்கியது?" என்று கேட்க, அம்மா, வலியைப் பொறுத்துக்கொண்டு, "நீதான் மகனே" என்று கூறினார்.
"என்ன சொல்கிறீர்கள்? நான் ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன்" என்று, அதிர்ச்சியிலும், கோபத்திலும், கத்தினான் கணேசன்.
"சிறிது நேரத்திற்கு முன், ஒரு பூனைக்குட்டியிடம் நீ எவ்விதம்  நடந்துகொண்டாய் என்பது நினைவிருக்கிறதா?" என்று தாய் கேட்டார்.
தான் அடித்து விரட்டிய பூனைக்குட்டியின் சொந்தக்காரர்தான் அம்மாவை அடித்துவிட்டார் என்று எண்ணிய கணேசன், "எங்கே அந்த ஆள்? சொல்லுங்கள்" என்று மீண்டும் கத்தினான்.
அம்மா அவனிடம் பொறுமையாக, "கணேசா, நான் உனக்கு மட்டும் தாயல்ல. இந்த பூமியின் அனைத்து உயிர்களுக்கும் நான் தாய். மிகச் சிறிய உயிரினத்திற்கு நீ செய்வதையெல்லாம் எனக்கேச் செய்கிறாய்" என்று கூற, கணேசன் தன் தவறை உணர்ந்து, கண்ணீர் சிந்தினான்.
பூமியின் மீது விழும் கீறல்கள், பூமியைப் படைத்த ஆண்டவன் மீது விழும் காயங்கள். ஏப்ரல் 22ம் தேதி, பூமி நாளின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தோம். அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "நம் பொதுவான இல்லமான பூமிக்கோளம், நாம் தாறுமாறாக சீரழிப்பதற்கென தரப்பட்டுள்ள விற்பனைப்பொருள் கிடங்கு அல்ல. இந்த பூமியையும், அங்கு வாழும் நலிவுற்றோரையும் பேணிக்காப்போமாக" என்ற சொற்கள், இடம்பெற்றன.
கொரோனா தொற்றுக்கிருமிக்கு அஞ்சி. நம்மில் பலர், இல்லங்களில் சிறைப்பட்டிருக்கும் நேரத்தில், நாம் இதுவரை காயப்படுத்தியிருக்கும் பூமியும், சுற்றுச்சூழலும், ஓரளவு குணமாகியிருப்பதை உணர்கிறோம். இந்த முழு அடைப்பு நீங்கியதும், மீண்டும், நாம், பூமியையும், சுற்றுச்சூழலையும், இதே அளவு காயப்படுத்தப்போகிறோமா என்பது, நமக்கு முன்னிருக்கும் முக்கியக் கேள்வி.

Jesus heals two blind persons

ஒத்தமை நற்செய்தி  பார்வையற்ற இருவர் குணமடைதல்

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில், கடந்த ஆண்டு நம் தேடல்களைத் துவக்கினோம். இந்த மூன்று நற்செய்திகளிலும், ஏறத்தாழ ஒரே விதத்தில் பதிவாகியுள்ள 12 பொதுவானப் புதுமைகளில் நம் தேடல்கள் ஆரம்பமாயின. அவற்றைத் தொடர்ந்து, இம்மூன்று நற்செய்திகளில் ஏதாவது இரு நற்செய்திகளில் மட்டும் இடம்பெற்றுள்ள 5 புதுமைகளின் பக்கம் நம் கவனம் திரும்பியது.
இந்த வாரம் முதல், இந்த மூன்று நற்செய்திகள் ஒவ்வொன்றிலும், வேறு எந்த நற்செய்தியிலும் பதிவு செய்யப்படாத தனித்துவமான புதுமைகளில் நம் பயணத்தை துவக்குகிறோம். தனித்துவமான புதுமைகள் என்ற கண்ணோட்டத்துடன் தேடும்போது, மத்தேயு நற்செய்தியில் 2 புதுமைகளும், மாற்கு நற்செய்தியில் 2 புதுமைகளும், லூக்கா நற்செய்தியில் 5 புதுமைகளும் பதிவாகியுள்ளதைக் காண்கிறோம்.
பார்வையற்ற இருவரும், பேச்சுத்திறனை இழந்த ஒருவரும் குணமாவது, மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இரு தனித்துவமானப் புதுமைகள். இவை, வேறு எந்த நற்செய்தியிலும் இடம்பெறவில்லை. 9ம் பிரிவின் இறுதிப்பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பதிவாகியுள்ள இப்புதுமைகளை, இயேசு, தன் பணிவாழ்வின் துவக்கத்தில் செய்ததாக மத்தேயு கூறியுள்ளார்.

நற்செய்தியாளர் மத்தேயு, 5,6,7 ஆகிய மூன்று பிரிவுகளில், இயேசுவின் படிப்பினைகளை, தொகுத்து வழங்கியுள்ளார். அந்த மூன்று பிரிவுகளைத் தொடர்ந்து, 8.9 ஆகிய இரு பிரிவுகளில், இயேசு ஆற்றிய ஒரு சில புதுமைகளை, பதிவு செய்துள்ளார். தொழுநோயாளர், நூற்றுவர் தலைவரின் பையன், பேதுருவின் மாமியார், பேய் பிடித்த இருவர், முடக்குவாதமுற்றவர், இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தொழுகைக்கூடத் தலைவரின் மகள் ஆகியோரை இயேசு குணமாக்கும் ஏழு புதுமைகள், இவ்விரு பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. இதே ஏழு புதுமைகளை, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் ஆகிய நற்செய்திகளிலும், ஒரு சில வேறுபாடுகளுடன் நாம் வாசிக்கிறோம். இந்த ஏழு புதுமைகளைத் தொடர்ந்து, 9ம் பிரிவின் இறுதிப் பகுதியில், பார்வையற்ற இருவரையும், பேச்சிழந்த ஒருவரையும் இயேசு குணமாக்கும் புதுமைகளை, நற்செய்தியாளர் மத்தேயு மட்டும் பதிவு செய்துள்ளார்.

இவ்விரு புதுமைகளையும் மத்தேயு நற்செய்தியிலிருந்து செவிமடுப்போம்:
மத்தேயு 9:27-35
இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம், ஐயா" என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. "யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரை, சிலர், அவரிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, "இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை" என்றனர். ஆனால் பரிசேயர், "இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர். இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

பார்வையற்ற இருவரை இயேசு குணமாக்கிய அந்தப் புதுமையில் கூறப்பட்டுள்ள அறிமுக வரிகள், நமக்குள் ஒரு சில எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த எண்ணங்கள், நாம் வாழ்ந்துவரும் இந்த சிக்கலானச் சூழலில் அர்த்தமுள்ள வரிகளாகத் தெரிகின்றன. இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். (மத. 9:27) என்பன அந்த அறிமுக வரிகள்.
பார்வையற்ற இருவர், இயேசுவிடம் வருதல், அவர்கள் ஒரே விதமாக தங்கள் விண்ணப்பத்தை வெளியிடுதல், இயேசு கேட்ட கேள்விக்கும் ஒரே விதமாகப் பதில் சொல்லுதல் என்பதையெல்லாம் வாசிக்கும்போது, நோயுற்றவர்கள் எவ்விதம் ஒருவருக்கொருவர் துணையாக முடியும் என்பதை உணரலாம். அதிலும், பார்வையற்ற இவ்விருவரும் ஆதரவு ஏதுமின்றி, தெருக்களில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர்கள் என்பதால், ஒருவர் மற்றவருக்குத் தந்த துணை, ஆறுதலும், ஆற்றலும் தந்திருக்கும்.

நாம் வாழும் பகுதிகளில், பார்வையற்றோர் தர்மம் கேட்டு வரும்போது, கூடவே, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது, ஒரு நண்பர் உடன் வருவதைப் பார்த்திருக்கிறோம். பல வேளைகளில், துணையாக வருபவரும் பார்வையற்றவராக இருப்பதையும் பார்த்திருக்கிறோம். பார்வையற்றோர் பலர், அன்றைய நாள் முடிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடிவந்து, பேசி, சிரித்து, ஏன்... பாடல்கள் பாடி மகிழ்ந்திருப்பதையும் நாம் பார்த்திருக்கக்கூடும். இந்தச் சூழல்கள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது இதுதான்: துன்புறும் வேளையில், நோயுறும் வேளையில், குறையுடன் வாழும் வேளையில், மற்றொருவரின் துணை நமக்கு உண்டு என்ற உணர்வு, ஒருவருக்குள் ஏராளமான ஆறுதலையும், ஆற்றலையும் தரும் என்பதே, நமக்கு உணர்த்தப்படும் பாடம்.

இயேசுவைத் தேடி வந்த பார்வையற்றோர் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்ததோடு, ஒருவருக்கொருவர் வழிகாட்டியாகவும் வாழ்ந்திருக்கவேண்டும். இயேசு என்ற போதகரைப்பற்றி, அவ்விருவரும் வெவ்வேறு தருணங்களில் கேட்டறிந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்திருக்கவேண்டும். அவர்கள் பகிர்ந்துகொண்ட எண்ணங்களின் விளைவாக, அவர்களுக்குள் இயேசுவைக்குறித்த நம்பிக்கை வளர்ந்திருக்கவேண்டும். அந்த நம்பிக்கையே, 'தாவீதின் மகனே' என்ற அடைமொழியில் ஒரு விசுவாச அறி்க்கையாக வெளியானது.

பார்வையற்ற இருவரை குணமாக்கிய இப்புதுமையைத் தொடர்ந்து உடனடியாக நாம் காண்பது, 'பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரை' இயேசு குணமாக்கியப் புதுமை. இப்புதுமையிலும், நோயுற்ற அம்மனிதரை சிலர், அதாவது, அவரது உறவினர் அல்லது நண்பர்கள், இயேசுவிடம் கொண்டுவந்தனர் (மத். 9:32) என்று வாசிக்கிறோம்.

இயேசு ஆற்றிய பெரும்பாலான புதுமைகளில், நோயுற்றோரை, அவரது உறவினர்களோ நண்பர்களோ இயேசுவிடம் கொணர்ந்ததைக் காண்கிறோம். முடக்குவாதமுற்ற ஒருவரை, கட்டிலோடு சுமந்துவந்து, கூரை வழியே அவரை இயேசுவுக்குமுன் இறக்கிய அந்நிகழ்வில், (மத். 9:1-8; மாற். 2:1-12; லூக். 5:17-26) இந்த உறவின் உச்சக்கட்டத்தை நாம் சிந்தித்தோம். இன்னும் சில புதுமைகளில், நோயின் காரணமாக, உறவுகளும், நண்பர்களும் விலகிப்போனச் சூழலில், நோயுற்றவர்களே ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர் என்பதற்கு, பார்வையற்ற இருவர் இயேசுவிடம் வந்த இந்தப் புதுமையும், பத்து தொழுநோயாளிகள் (லூக்கா 17:11-19) இயேசுவைத் தேடிச்சென்ற புதுமையும் எடுத்துக்காட்டுகள்.

நம்மைச் சூழ்ந்து அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனைகளில், அல்லது, வயதுமுதிர்ந்தோர் காப்பகங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை இவ்வேளையில் எண்ணிப்பார்ப்போம். இவர்களில் ஒரு சிலர், தனிமைப்படுத்தப்பட்ட அச்சூழலிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர் என்பதையும், வேறு சிலர், தங்கள் வீடுகளுக்குத் திரும்பி, உறவுகள் நடுவில் இறந்தால் போதும் என்று கூறியுள்ளதையும் நாம் செய்திகளில் வாசிக்கிறோம்.

பார்வையற்றவர் இருவர் இயேசுவை அணுகி வந்து குணமடைந்தனர் என்ற நிகழ்வைச் சிந்திக்கும்போது, இவ்வுலகில், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ச்சியால் தளர்வுற்றோர் அனைவரும், மற்றொரு மனிதத் துணையைப் பெறுவதன் வழியே, ஆறுதலும், ஆற்றலும் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். குறிப்பாக, இந்தத் தொற்றுக்கிருமி உருவாக்கியிருக்கும் அளவு கடந்த அச்சம் காரணமாக, தனிமையில் வேதனையுறும் அனைவருக்கும், ஏதோ ஒருவகையில் ஆறுதலாக இருக்க, இறைவன், நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று செபிப்போம்.

இவ்விரு புதுமைகளின் இறுதியில், நற்செய்தியாளர் மத்தேயு பதிவுசெய்துள்ள ஆறுதலான வரிகள், இன்று, உலகின் பல பகுதிகளில் உண்மையாகவேண்டும் என்ற வேண்டுதலுடன், அந்த இறுதி வரிகளுக்கு செவிமடுப்போம்:
இயேசு, நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். (மத். 9:35)


24 April, 2020

“Surprised by Joy” "வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வு"


Jesus and the disciples – on the way to Emmaus

3rd Sunday of Easter

Let me begin this Sunday’s reflection with a story shared by Gordon Curley and John Davies, in their homilies on the Emmaus episode in Luke’s Gospel (Luke 24: 13-35):
A Brazilian businessman Alvaro Weyne had £10,000 in cash and cheques and decided that the safest place to hide it would be in his office waste bin, because no one would think of looking in there. He was right. While he was away from his desk, the cleaner came in and emptied the bin without giving it a second glance.
Life is like that sometimes, isn't it? You think you've got something precious and all of a sudden it's gone. But life is not always like that, as Enrico, a Brazilian pauper, discovered.  One day, Enrico, scavenging a city rubbish tip, picked up a small plastic bin-liner from the top of the new pile of refuse which had just been dumped. He opened it up, and to his great surprise and joy, there inside it was £10,000! He ran home to his wife and family, bought them all new clothes, had a celebration meal and put down a deposit on a house away from the slums.

As we can see, this story has combined the ‘real’ event – that of Alvaro Weyne, and the ‘imaginary’ event of ‘Enrico’. Both these events reflect what happens in our lives. There are moments in our lives, when we lose the gifts that come our way and there are moments when ‘out of the blue’ we are ‘surprised by joy’, receiving unexpected gifts.

‘Surprised by joy’ can be the apt title of the episode of the two disciples of Jesus going to a town called Emmaus. This post-resurrection episode is given to us as this Sunday’s Gospel, where the Risen Jesus, surprises two of his disciples in every possible way. Last week, we saw Jesus meeting Thomas who doubted his Resurrection. This week Jesus meets two other disciples who, once again, were so caught up in their disillusionment that they paid no heed to the good news of Resurrection shared by the women. In short, they too doubted Jesus’ Resurrection and walked away from Jerusalem.
Last week we made a special effort not to sit in judgement over Thomas but, stand along with the ‘doubting Thomas’ and try to understand his doubts. This week, we shall try and walk with these two disciples. To help us with this effort, the Gospel has mentioned Cle′opas as one of the disciples while the other one is not mentioned by name. Hence, it would be easier to imagine ourselves to be this ‘other disciple’ and walk along with Cle′opas.

The Gospel says that the distance between Jerusalem and Emmaus is 11 k.m. With a heavy heart, those two disciples must have been ‘inching’ their way. It is also said that they were ‘talking with each other about all the things that happened’. (Lk. 24:14) It was not simply a sharing of information. It was more of a lamentation of their disappointments.

Pope Francis, during his Apostolic trip to Egypt in 2017, in his homily given in Cairo, spoke about these two disciples as persons who experienced ‘death’. The Pope said: Death.  The two disciples are returning, full of despair and disappointment, to their usual life. The Master is dead and thus it is pointless to hope. They feel disappointment and despair. Theirs is a journey of return, as they leave behind the painful experience of Jesus’ crucifixion...
They could not believe that their Master and Saviour, who had raised others from the dead and healed the sick, would end up hanging on the cross of shame. They could not understand why Almighty God had not saved him from such a disgraceful death. The cross of Christ was the cross of their own ideas about God; the death of Christ was the death of what they thought God to be. But in fact, it was they who were dead, buried in the tomb of their limited understanding.

Then Pope Francis applied the predicament of these disciples to our situation: How often do we paralyze ourselves by refusing to transcend our own ideas of God, a god created in the image and likeness of man!  How often do we despair by refusing to believe that God’s omnipotence is not one of power and authority, but rather of love, forgiveness and life!

Jesus joins these heart-broken ‘kids’ with motherly care and tenderness. He takes the liberty to admonish them and also enlighten them. As a climax, he breaks the bread with them. In the breaking, they recognized Jesus. While talking of this, Pope Francis invited us to break all the moulds we have created for God:
The disciples recognized Jesus in the “breaking of the bread”, in the Eucharist.  Unless we tear apart the veil clouding our vision and shatter the hardness of our hearts and our prejudices, we will never be able to recognize the face of God.

The two disciples who left Jerusalem, completely broken, and totally preoccupied with their own misery, now return to Jerusalem on a mission. When they left Jerusalem, the 11 kilometers to Emmaus must have looked like 11,000 kilometers since they were dragging themselves along the way. They were truly dead men walking. They found the evening too dark and frightening. But, once Jesus entered the scene, things changed. Their hearts began to burn and in the breaking of the bread, they recognized the Risen Christ.

John Davies continues with his reflection on the story of the two disciples on the Emmaus Road.
It's the story of two people who are suddenly surprised by joy… they were two men exploding with warmth and wonder again, realising that the stranger they had been sharing their troubles with, the guest at their table, had been Jesus himself. They recognised him in the breaking of the bread. As the crumbs fell to the table, they were surprised by joy:
“And their eyes were opened and they recognized him; and he vanished out of their sight. They said to each other, ‘Did not our hearts burn within us[b] while he talked to us on the road, while he opened to us the scriptures?’” (Luke 24:31-32)

This resurrection story shows us that Jesus is a God who wants to surprise us with joy.

That expression, ‘Surprised by Joy’, was coined by the 20th-century Christian writer C.S. Lewis. He made it the title of his autobiography, where he talks about his early days as an atheist, someone who disbelieved in God and went out of his way to avoid God. But, looking back, he knew God was after him. Gradually he came to admit that God was God, and knelt and prayed… He began to attend church and to read the gospels. They started to make sense to him…
In a now famous passage of ‘Surprised by Joy’, Lewis related his final step into real joy: "I know very well when, but hardly how, the final step was taken. I was driven to Whipsnade one sunny morning. When we set out I did not believe that Jesus Christ is the Son of God, and when we reached the zoo I did."
The journey to Whipsnade Zoo was Lewis's Emmaus Road. It tells us that Emmaus Road experiences still happen in our day. They might happen to us.

When we read that Lewis met Jesus on his way to the Whipsnade Zoo, we seem to feel a bit uneasy. It seems more appropriate that Jesus would meet someone on the way to a church or a sanctuary. But to meet a person on the way to a Zoo?
Well, that is the beauty of God.

Jesus met the blood-thirsty Saul on his way to Damascus, to bring Christians in chains; but he was changed as Paul, ‘chained for life with Christ.
The Risen Jesus met the two disciples who were walking away from Jerusalem, the holy city.
There is no place, no situation that is alien to the meeting of God with humans.

Coming to our present situation of lockdown… It has been 30 or 40 days since we attended any liturgical celebrations or partook of any sacrament – especially the Sacrament of the Eucharist or the Sacrament of Reconciliation. Many of us may have experienced God in a special, and, perhaps in a deeper way during this lockdown.
At the request of the two disciples to ‘stay with them’, Jesus ‘went in to stay with them. When he was at table with them, he took the bread and blessed, and broke it, and gave it to them. And their eyes were opened and they recognized him (Lk. 24:30-31)

Let us make a similar request to Jesus to come into our homes and stay with us, since around us it seems dark and gloomy every day. We never know what a request like this will bring about!


Supper at Emmaus – Rembrandt

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு

பிரேசில் நாட்டைச் சேர்ந்த Alvaro Weyne என்ற வர்த்தகர் ஒருவருக்கு திடீரென பத்து இலட்சம் ரூபாய் வந்து சேர்ந்தது. தன் அலுவலக அறையில் அதைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல விரும்பினார். மிகவும் பாதுகாப்பான இடம், தன் மேசைக்குக் கீழ் இருக்கும் குப்பைத் தொட்டிதான், அதை யாரும் தொடமாட்டார்கள் என்று அவர் தீர்மானித்து, பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குப்பைத் தொட்டியின் அடிப்புறத்தில் அதை ஒளித்து வைத்தார்.
அவர் தன் அறையை விட்டு வெளியேச் சென்றிருந்த நேரம், அவர் அறையைச் சுத்தம் செய்யவந்த துப்புரவுத் தொழிலாளி, அந்தக் குப்பைத் தொட்டியில் இருந்தவற்றை மற்றொரு பெரிய குப்பைத் தொட்டியில் கொட்டி, வெளியே எடுத்துச் சென்றார்.
இது கற்பனைக் கதை அல்ல, ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பிரேசில் நாட்டில் வெளியான ஒரு செய்தி. இச்செய்தியை வாசித்த John Davies என்ற கிறிஸ்தவப் போதகர், இதன் தொடர்ச்சியாக மற்றொரு கற்பனைக் கதையை இணைத்துள்ளார்.
பிரேசில் நாட்டில் ஒரு சேரியில் மிகுந்த வறுமையில் வாழ்பவர், Enrico. ஒவ்வொரு நாளும், நகரில் இருந்த குப்பைத் தொட்டிகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து, அவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர். அன்று, அவர் அந்த அலுவலகத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் தேடியபோது, ஒரு 'பிளாஸ்டிக்' பையைப் பார்த்தார். திறந்தபோது, அதில் இருந்த பத்து இலட்சம் ரூபாய் அவரைப் பார்த்துச் சிரித்தது.

இந்த உண்மைச் செய்தியும், அதைத் தொடரும் கற்பனைக் கதையும் நம் வாழ்வின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன. நம்மை வந்தடையும் கொடைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், சரியாகப் பாதுகாக்காமல், அவற்றை இழந்துவிடுகிறோம். நாம் முற்றிலும் எதிர்பாராத நேரங்களில், பெரும் மகிழ்வைத் தரும் கொடைகளை நாம் பெறுகிறோம். தவறவிட்டதால் தவிப்பு, வியப்படையவைக்கும் மகிழ்வு என்ற இவ்விரு உணர்வுகள், இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றன. எம்மாவு என்ற ஊரை நோக்கிச் சென்ற இரு சீடர்கள் அடைந்த அனுபவம் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. (லூக்கா 24: 13-35)

இவ்வுலகிற்கு வழங்கப்பட்ட உன்னதக் கொடையான இயேசுவையும், அவரது உண்மையான வல்லமையையும் சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இறைவனின் அரசை இயேசு நிறுவுவார் என்று சீடர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த உச்சகட்ட எதிர்பார்ப்பில், இயேசு பரிதாபமாய் கொலை செய்யப்பட்டு இறந்ததும், அவர்கள் நடுவே, ஏமாற்றம் அதிகம் உருவானது. அந்த ஏமாற்றத்தில் சீடர்கள் பலரும் மனம் உடைந்து, பயந்து, பதுங்கி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி, காலத்தைக் கடத்தினர். அவர்கள் மத்தியில் வாழ்ந்த பெண்களோ, இன்னும் நம்பிக்கையை இழக்காமல், துணிவோடு கல்லறைக்குச் சென்றனர். உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. 'கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்' என்ற செய்தி, பெண்கள் வழியே சொல்லப்பட்டது.
இந்த நற்செய்தியைக் கேட்டும், கேட்காதது போல் தங்கள் துன்பத்தில் மூழ்கிய இருவர், இன்றைய நற்செய்தியின் நாயகர்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டதுபோல், கலிலேயாவுக்குச் செல்லாமல், எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற இரு சீடர்கள், விரக்தியின் உச்சியை அடைந்தவர்கள். நமது நாயகர்களில் ஒருவரது பெயர் கிளயோப்பா என்று குறிக்கப்பட்டுள்ளது. (லூக்கா 24:18) மற்றவரது பெயர் குறிக்கப்படவில்லை. அந்த இரண்டாவது சீடராக நம்மை இணைத்து, இப்பயணத்தைத் தொடர்வோம்.

எருசலேமுக்கும் எம்மாவு என்ற ஊருக்கும் இடைப்பட்டத் தூரம் 11 கி.மீ. என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 24:13). இந்த தூரத்தை, நடைப் பயணமாகக் கடக்க இரண்டு மணி நேரங்கள் எடுத்திருக்கலாம். ஆனால், இந்த நடைப்பயணத்தை, நடைப் பிணங்களைப் போல மேற்கொண்ட அந்த இரு சீடர்களுக்கும் இந்தப் பயணம் முடிவின்றி செல்வதுபோல் தெரிந்திருக்கும்.
இவ்விரு சீடர்களும் போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றனர் என்று நற்செய்தி கூறுகிறது. (லூக்கா 24:14) என்ன பேசியிருப்பார்கள்? அவர்களது உள்ளக் குமுறல்கள், புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக வெடித்திருக்கும். "நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஆனால், இவ்விதம் ஆகிவிட்டதே..." என்ற குமுறல்கள் எழுந்திருக்கும். இவ்விரு சீடர்களின் குமுறல்கள் பல தலைமுறைகளாய் நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு தானே இருக்கின்றன? நாம் எதிர்பார்த்தவை கிடைக்காதபோது, நாம் எதிர்பாராதவை வந்து சேர்ந்தபோது நொறுங்கிப்போன நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

2017ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், எம்மாவு சீடர்களைப் பற்றிய இந்த நற்செய்தியை மையப்படுத்தி வழங்கிய மறையுரையிலிருந்து சில எண்ணங்களை இப்போது நினைவுகூர்வது நமக்குப் பயனளிக்கும். "அச்சீடர்கள் எருசலேமிலிருந்து துவங்கிய பயணத்தை, மரணம், உயிர்ப்பு மற்றும் வாழ்வு என்ற மூன்று சொற்களில் விவரிக்கலாம்" என்று திருத்தந்தை தன் மறையுரையைத் துவக்கினார். பின்னர், 'மரணம்' என்ற சொல்லை அவர் விவரித்துக் கூறியது இதுதான்: "மரணம். அவ்விரு சீடர்களும், ஏமாற்றம் நிறைந்தவர்களாய் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களது போதகர் இறந்துவிட்டார். இனி நம்பிக்கை கொள்வதில் பொருளில்லை.
மற்றவர்களை மரணத்திலிருந்து உயிர்ப்பித்த, மற்றவர்கள் நோய்களைக் குணமாக்கிய தங்கள் போதகர், சிலுவையில் அவமான மரணம் அடைந்தார் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. அனைத்து வல்லமையும் கொண்ட கடவுள், அவரை அந்த மரணத்திலிருந்து ஏன் காப்பாற்றவில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை."
கடவுளை, குறிப்பாக, கடவுளின் வல்லமையைப் புரிந்துகொள்ள முடியாத, புரிந்துகொள்ள விரும்பாத அச்சீடர்களைப்போல் நாமும் நடந்துகொள்கிறோம் என்பதை, திருத்தந்தை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்:
"எத்தனை முறை நாம், அச்சீடர்களைப்போல், மனித சாயலில் நாமே உருவாக்கிக்கொண்ட கடவுளைத் தாண்டி, உண்மைக் கடவுளை நம்ப மறுத்திருக்கிறோம். கடவுளின் வல்லமை, அதிகாரத்தையும், சக்தியையும் சார்ந்ததல்ல, மாறாக, அன்பை, மன்னிப்பை, வாழ்வைச் சார்ந்தது என்பதை நாம் எத்தனை முறை நம்ப மறுத்திருக்கிறோம்" என்ற கேள்விகளை திருத்தந்தை தன் மறையுரையில் எழுப்பினார். 

நொறுங்கிய உள்ளத்துடன் நடந்துசென்ற சீடர்களுடன் இயேசு இணைந்து நடக்க ஆரம்பித்தார். தாயன்போடு அவர்களைத் தேடிச்சென்ற இயேசு, கனிவோடு பேசினார், கடிந்து கொண்டார், பொறுமையாய் விளக்கினார். அந்தத் தாய், இறுதியில் உணவைப் பரிமாறிய அழகில், இவ்விரு சீடர்களின் கண்கள் திறந்தன.

தங்களை வியப்படையச் செய்த மகிழ்வை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவ்விரு சீடர்களும் எருசலேமுக்கு விரைந்தனர். "மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) தங்களை இருள் சூழ்ந்துகொண்டது என்று பலவாறு புலம்பிக் கொண்டிருந்த அவ்விரு சீடர்களின் உள்ளங்கள், எதிர்பாராத இந்த மகிழ்வால், ஒளிவெள்ளத்தில் மூழ்கின. வெளியில் சூழ்ந்திருந்த இருளைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல், இரவோடு இரவாக, அவர்கள் இருவரும் எருசலேம் திரும்பிச் சென்றனர்.
கனமான, உடைந்த உள்ளத்தைச் சுமந்து அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டபோது, அவர்கள் கடந்து சென்ற 11 கி.மீ. தூரம், பல நூறு கி.மீ. போலத் தெரிந்திருக்கும். இப்போதோ, அந்த இரவில், அதே 11 கி.மீ.தூரம், 11 மீட்டர் தூரமாகத் தெரிந்திருக்கவேண்டும். வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வுக்கு இந்த மந்திரச் சக்தி உண்டு.

“Surprised by Joy” அதாவது, "வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வு", அல்லது, "வியப்படைய வைக்கும் மகிழ்வு" என்ற சொற்றொடர், கிறிஸ்தவ சிந்தனையாளர், C.S.Lewis (Clive Staples Lewis) அவர்கள், 1955ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு. இந்நூலில், அவர், தன் மனமாற்றத்தை விவரித்துள்ளார். கடவுள் நம்பிக்கையற்றவராக அவர் வாழ்ந்த நாட்களில், இறைவன் அவரைத் தொடர்ந்துவந்தார் என்பதை அழகாகக் கூறியுள்ளார்:
"ஒவ்வொரு நாளும், என் அறைக்குள் நான் தனிமையில், என் வேலைகளில் என்னையே புதைத்துக் கொண்டேன். அவ்வப்போது, நான் புதைந்திருந்த வேலைகளிலிருந்து என் சிந்தனை சிறிது வெளியே எட்டிப் பார்த்தபோது, அங்கு என்னைச் சந்திக்கக் காத்திருந்தார் கடவுள். யாரை நான் சந்திக்கக்கூடாது என்று தீர்மானித்து, விலகிச் சென்றேனோ, அவர் என்னைத் தேடித் தேடி வந்தார்."

சிறிது, சிறிதாக, Lewis அவர்கள் மனம் மாறத் துவங்கினார். கோவில் வழிபாடுகளில் அரை மனதோடு கலந்துகொண்டார். இங்கிலாந்திலேயே, தயங்கிய, சந்தேகப்பட்ட உள்ளத்துடன் வாழ்ந்த கிறிஸ்தவன் தான் ஒருவனாக மட்டுமே இருந்திருக்கவேண்டும் என்று அவர் தன்னையே விவரித்துள்ளார். இறுதியில், அவரை இறைவன் முழுமையாக ஆட்கொண்ட அனுபவத்தை அவர் இவ்விதம் விவரிக்கின்றார்:
"நான் எப்போது என் இறுதித் தீர்மானத்தை எடுத்தேன் என்பது நன்றாக நினைவிருக்கிறது. அன்று காலை நான் 'Whipsnade' உயிரியல் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தேன். பயணத்தைத் துவக்கியபோது, இயேசு கிறிஸ்து இறைவனின் மகன் என்பதை நம்பாமல் இருந்தேன். அனால், நான் உயிரியல் பூங்காவை அடைந்தபோது, அந்த நம்பிக்கை உறுதி அடைந்தது" என்று Lewis அவர்கள், தன் மனமாற்றப் பயணத்தை, இறை நம்பிக்கைப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் விவரித்துள்ள இந்த மனமாற்றக் காட்சியை வாசிக்கும்போது, ஓர் அடிப்படைக் கேள்வி நமக்குள் எழ வாய்ப்புண்டு.
ஒருவர், கோவிலுக்கோ, திருத்தலத்திற்கோ செல்லும்போது, மனமாற்றமோ, மத நம்பிக்கை வளர்ச்சியோ உருவாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், ஓர் உயிரியல் பூங்காவிற்குச் செல்லும்போதும், ஒருவருக்கு மனமாற்றம் ஏற்படக்கூடுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நாம் தரக்கூடிய ஒரே பதில் - "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்கா 1:37) என்று, வானதூதர் கபிரியேல், மரியாவிடம் கூறிய சொற்கள்.

மனமாற்றங்கள், இறைவனின் சந்திப்புக்கள் எங்கும், எவ்வேளையிலும் நிகழும். இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன? இஸ்ரயேல் மக்களின் உயிர் நாடியான கோவில் இருந்த எருசலேமில் இவ்விரு சீடர்களைச் சந்திக்காத இயேசு, அவர்கள் எம்மாவு சென்ற வழியில் சந்தித்தார், மனமாற்றத்தைக் கொடுத்தார். திருத்தூதர் பவுல், கொலைவெறியுடன் தமஸ்கு நகர் சென்றபோது, வழியில் அவரைச் சந்தித்தார், மனமாற்றம் தந்தார் (திருத்தூதர் பணிகள் 9: 3-9). C.S.Lewis அவர்களுக்கு, உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் வழியில் மனமாற்றம் தந்தார் இறைவன்.

இன்று நாம் வாழும் இந்த புதிரானச் சூழலை எண்ணிப்பார்ப்போம். இந்தியாவில் ஏறத்தாழ கடந்த 30 நாள்களாக, ஐரோப்பாவில் 40 நாள்களுக்கும் மேலாக, நமது கோவில்கள் அனைத்தும் வழிபாடுகளுக்கு மூடப்பட்ட நிலையில், நம்மில் எத்தனை பேர், நம் இல்லங்களில், இறை அனுபவத்தை, வெவ்வேறு வழிகளில் பெற்றுவருகிறோம் என்பதை எண்ணிப்பார்ப்போம். ஒரு சிலருக்கு, இத்தனை ஆண்டுகளாக, கோவிலில் நடைபெற்ற வழிபாடுகளில் அரைமனதோடு கலந்துகொண்ட வேளையில் கிடைக்காத இறை அனுபவம், இல்லங்களில், நம் குடும்பங்கள் நடுவில், இன்னும் கூடுதலாக, ஆழமாகக் கிடைத்திருக்கலாம். அதற்காக, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

எம்மாவு சென்ற சீடர்களைத் தேடிச்சென்ற இயேசு, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று, அங்கு அப்பத்தைப் பகிர்ந்த வேளையில் தன்னையே வெளிப்படுத்தினார். இஞ்ஞாயிறன்று, நம் குடும்பத்தினருடன் இணைந்து, தொலைக்காட்சி, அல்லது, வேறு ஊடகங்கள் வழியே, நாம் மேற்கொள்ளும் வழிபாட்டு முயற்சிகளில், இயேசுவைக் கண்டுகொள்ளும் அனுபவம் நமக்குக் கிடைக்கவேண்டும் என்று மன்றாடுவோம். இயேசுவோடு பெற்ற அனுபவத்தால், "நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" (லூக்கா 24:32) என்று வியப்புற்ற எம்மாவு சீடர்களைப் போல், நம் உள்ளங்களையும், இறைவன், தன் சொற்களால், பற்றியெரியச் செய்து, நம்மையும் வியப்பில் ஆழ்த்துவாராக!

மரணத்தையும், நோயையும், இத்தனை நாள்களாக, செய்திகளில் பார்த்து, மனம் தளர்ந்திருக்கும் நம்மை, தாயன்புடன் தேடிவரும் உயிர்த்த கிறிஸ்துவை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் வரத்தை, இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் பெறுவோமாக!


21 April, 2020

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – அப்பம் பகிர்ந்தளித்த மற்றொரு புதுமை 2


Taktshang Monastery, Bhutan
I complained I had no shoes…


விதையாகும் கதைகள் : குறைசொல்வதில் குறியாக இருந்தால்...

மலைமீது அமைந்திருந்த ஒரு துறவு மடத்தில், மௌனம் காப்பது மிக மிக முக்கியமான ஒரு விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்தவர்கள், ஒவ்வொரு பத்து ஆண்டுகள் சென்றபின், இரு வார்த்தைகள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அந்த மடத்தில் புதிதாகச் சேர்ந்த ஓர் இளம் துறவி, பத்து ஆண்டுகள் சென்றபின், மடத்தின் தலைமைக் குருவைச் சந்திக்கச் சென்றார். தலைவர் அவரிடம், "நீ இங்கு பத்தாண்டுகள் இருந்துவிட்டாய். நீ சொல்ல விழையும் இரு வார்த்தைகள் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த இளம் துறவி, "கடினமான படுக்கை" என்று கூறினார். "ஓ, அப்படியா" என்று தலைவர் சொல்லி, அவரை அனுப்பி வைத்தார்.
அடுத்த பத்தாண்டுகள் உருண்டோடின. தலைவரைக் காணச்சென்ற இளம் துறவியிடம், "இப்போது நீ சொல்ல விழையும் இரு வார்த்தைகள் என்ன?" என்று கேட்டார். இளையவர் மறுமொழியாக, "மோசமான உணவு" என்று கூறினார்.
அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின், தலைவரைச் சந்திக்கச் சென்ற இளம் துறவி, அவர் கேட்பதற்கு முன்னரே, "நான் போகிறேன்" என்ற இரு வார்த்தைகளைச் சொன்னார். தலைவர் அவரிடம், "நீ ஏன் போகிறாய் என்பது புரிகிறது. இங்கு வந்த நாள் முதல், குறை சொல்வதில் மட்டுமே நீ குறியாக இருந்தாய்" என்று கூறி, அவரை வழியனுப்பி வைத்தார்.
அயர்லாந்து நாட்டின் பழமொழி சொல்வது இதுதான்: "என்னிடம் காலணிகள் இல்லை என்று குறை சொல்லி வந்தேன், இரு கால்களும் இல்லாத ஒருவரைச் சந்திக்கும்வரை."

Jesus feeding the people

ஒத்தமை நற்செய்தி அப்பம் பகிர்ந்தளித்த மற்றொரு புதுமை 2

இன்றைய நம் விவிலியத் தேடலின் துவக்கத்தில், ஏப்ரல் 21ம் தேதியை முதலில் மனதில் பதிப்போம். கடந்த ஆண்டு, ஏப்ரல் 21ம் தேதி, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட வேளையில், இலங்கையின் புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் மற்றும் சீயோன் ஆலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் 259 உயிர்கள் பலியாயின, இன்னும் 500ககும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அந்தக் கொடூரத் தாக்குதல்களில் பலியானோரின் நினைவாக, ஏப்ரல் 21, இச்செவ்வாயன்று, இலங்கையில் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு, 2 நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மக்களோடு நாமும் மனதால் ஒன்றித்து, இறந்தோரின் ஆன்மா சாந்தியடையவும், அந்நாட்டிற்கு இறைவன் நிறைவான அமைதியையும், வளத்தையும் வழங்கவும் இத்தேடலின் துவக்கத்தில் மன்றாடுவோம்.

இயேசு, 4000த்திற்கும் அதிகமான மக்களுக்கு அப்பத்தைப் பகிர்ந்தளித்த புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. மக்களின் பிணிகளை இயேசு அகற்றிய புதுமையையும், மக்களின் பசியை அவர் போக்கிய புதுமையையும், நற்செய்தியாளர் மத்தேயு ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பதிவு செய்துள்ளதை மையப்படுத்தி, Marcus Dods என்ற விவிலிய விரிவுரையாளர் கூறியுள்ள சில எண்ணங்களை நாம் சென்றவாரத் தேடலில் சிந்தித்தோம். பிணிகளை நீக்க இயேசு ஆற்றிய புதுமைகள், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்த்தப்பட்டன என்று கூறும் டாட்ஸ் அவர்கள், குணமளிக்கும் புதுமைகளைத் தொடர்ந்து, உணவளிக்கும் புதுமையை யாருடைய வேண்டுகோளும் இன்றி இயேசு நிறைவேற்றினார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

நலம்வேண்டி தன்னை அணுகிவந்த மக்களைக் குணமாக்கும் சக்தி பெற்றிருந்த இயேசு, மக்களுக்கு நேரக்கூடிய பசி என்ற துயரத்தை தடுக்கும் சக்தியையும் பெற்றிருந்தார் என்று டாட்ஸ் அவர்கள் கூறியுள்ளார். நோய் என்ற துயரத்தை நீக்குவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, நோய்களை உருவாக்கும் பசி போன்ற துயரத்தை தடுப்பதும் முக்கியம் என்பதை இயேசு உணர்ந்திருந்தார். துயரத்தை நீக்குதல், துயர் வராமல் தடுத்தல் என்ற இரு செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த இயேசுவைக் காணும்போது, நம் சிந்தனைகள், மீண்டும் ஒருமுறை, இன்றைய உலகில் நிலவும் கொரோனா தொற்றுக்கிருமியின் விளைவுகள் நோக்கி திரும்புகின்றன.

சாதி, மதம், இனம், செல்வம், வறுமை என்று, சமுதாயத்தில் நிலவும் பாகுபாடுகள் எதையும் பொருட்படுத்தாமல், கோவிட்-19 தொற்றுநோய், அனைவரையும் பாதித்துள்ளது என்ற கருத்து, நம் ஊடகங்கள் வழியே அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இந்த நோயாலும், அதைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள முழுஅடைப்பு நடவடிக்கைகளாலும், செல்வந்தர்களைக் காட்டிலும், வறியோர், பல்லாயிரக்கணக்கில், பரிதாபமான வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணரலாம்.
இந்த நோய் வறியோரையும், செல்வந்தர்களையும் பாகுபாடின்றி பாதித்துள்ளது என்று சொல்லும்போது, அவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ உதவிகளும் பாகுபாடின்றி கிடைக்கின்றன என்று சொல்லமுடியுமா? அதேவண்ணம், இந்நோயிலிருந்து காத்துக்கொள்ள பின்பற்றப்படும் முழுஅடைப்பு நடவடிக்கைகளால், செல்வந்தர்களைவிட, வறியோர் எண்ணற்றத் துயரங்களை அடைந்து வருவதையும் நாம் அறிவோம்.
நோயுற்றோரைக் குணமாக்கவும், நோயை உருவாக்கும் பசியைத் தடுக்கவும் சக்தி பெற்றிருந்த இயேசு, இந்தத் தொற்றுநோய் பரவல், மற்றும், முழு அடைப்பினால் உருவாகியுள்ள இழப்புக்கள் ஆகிய கொடுமைகளிலிருந்து வறியோர் மீண்டெழ வழிகாட்ட வேண்டும் என்ற செபத்துடன் நம் தேடலைத் தொடர்வோம்.

4000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய புதுமைக்குத் திரும்புவோம். இப்புதுமை, பல விதங்களில், 5000த்திற்கும் அதிகமானோருக்கு இயேசு உணவு வழங்கிய அந்தப் புதுமையை ஒத்ததாய் உள்ளது. பின், எதற்காக, மத்தேயு, மாற்கு ஆகிய இருவரும் இருவேறு புதுமைகளைப் பதிவு செய்துள்ளனர் என்ற கேள்வி விவிலிய விரிவுரையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 4000, அல்லது 5000 மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய புதுமைகள், ஒரே விதமாகக் கூறப்பட்டிருந்தாலும், ஒரு சில நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடியும் என்று, எழுத்தாளரும், மறையுரையாளருமான James Burton Coffman என்ற விவிலிய விரிவுரையாளர் கூறியுள்ளார்.

5000 பேருக்கு இயேசு உணவு வழங்கிய வேளையில், அம்மக்கள் இயேசுவுடன் எவ்வளவு நேரம் தங்கியிருந்தனர் என்ற குறிப்பு நான்கு நற்செய்திகளிலும் கூறப்படவில்லை. அவர்கள் ஒருவேளை, ஒரு நாள் முழுவதும் இயேசுவின் உரைகளுக்கு செவி மடுத்திருக்கவேண்டும். ஆனால், 4000 பேருக்கு உணவு வழங்கிய இந்தப் புதுமையில், "நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை." (மாற்கு 8:2) என்ற பரிவு நிறைந்த சொற்களை இயேசு கூறுவதாக நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிட்டுள்ளார்.

5000 பேருக்கு இயேசு உணவு வழங்கிய புதுமையில், மாலையானதும் அவர்களை அனுப்பிவிடுமாறு சீடர்கள் இயேசுவிடம் கூறினர். அந்தக் கூற்று, இயேசுவின் புதுமைக்கு அடித்தளமிட்டது என்று கூறலாம். 4000 பேருக்கு உணவு வழங்கிய இப்புதுமையிலோ, சீடர்கள் எதுவும் சொல்லாதபோது, இயேசு, மக்களின் தேவையை முன்வைத்து, அவராகவே இப்புதுமைக்கு அடித்தளமிடுகிறார். அத்துடன் இவ்விரு புதுமைகளும் நடைபெற்ற நிலப்பரப்பு குறித்தும் ஒரு சில வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன.

இந்த நுணுக்கமான வேறுபாடுகளையெல்லாம் விட, இப்புதுமையைக் குறித்து புனித அகுஸ்தீன் பேசும்போது, மற்றொரு முக்கியமான வேறுபாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். 5000 பேருக்கு உணவு வழங்கியப் புதுமையை இயேசு, இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த பகுதியில் ஆற்றினார். அந்தப் புதுமைக்கு முன்னதாக, "சீடர்களை மட்டும் கூட்டிக்கொண்டு இயேசு தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்" (லூக்கா 9:10) என்று, லூக்கா நற்செய்தியிலும், இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு (யோவான் 6: 1) என்று யோவான் நற்செய்தியிலும் கூறப்பட்டிருக்கும் குறிப்புகள், அந்தப் புதுமை, யூதர்கள் வாழ்ந்த பகுதியில் நிகழ்ந்தது என்பதை தெளிவாக்குகிறது.
4000 பேருக்கு உணவு வழங்கிய இந்தப் புதுமையோ, தீர், சீதோன் பகுதிகளில் இயேசு மேற்கொண்ட பயணத்தையொட்டி இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இப்புதுமையை இயேசு, புறவினத்தார் வாழ்ந்த பகுதியில் நிகழ்த்தினார் என்று புனித அகுஸ்தீன் விளக்கமளித்துள்ளார்.

5000 பேருக்கு இயேசு உணவளித்த புதுமையின் இறுதியில், அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார் (யோவான் 6:14-15) என்று நற்செய்தியாளர் யோவான் அப்புதுமையை நிறைவு செய்துள்ளார். நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் 4000 பேருக்கு இயேசு உணவு வழங்கியப் புதுமையை, எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக நிறைவு செய்துள்ளனர்.

5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்த புதுமைக்கு முன்னதாக, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள மற்றொரு விருந்து, இன்றைய உலகின் நிலையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது. மன்னன் ஏரோதின் அரண்மனையில் நடந்த அந்த விருந்தில், மதுவும், உணவும், அளவு கடந்து சென்றதன் விளைவாக, திருமுழுக்கு யோவான் கொலையுண்டார். அந்த விருந்தைப்பற்றி கூறிய அதே மூச்சில், இயேசு அப்பத்தைப் பகிர்ந்தளித்த அந்த விருந்தையும், மத்தேயு, மாற்கு இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏரோது மன்னன் வழங்கிய விருந்து, இயேசு பகிர்ந்தளித்த விருந்து என்ற இரண்டு விருந்துகளையும் இணைத்து சிந்திக்கும்போது, இன்றைய உலகில், ஏற்றத்தாழ்வுகளுடன் தொடரும் விருந்துகள் உள்ளத்தை உறுத்துகின்றன. இந்த தொற்றுநோய் காலத்திலும், வழக்கமான தங்கள் விருந்துகளை தொடர்ந்து நடத்திவரும் செல்வந்தரையும், ஒன்றுமில்லாமல் பசியால் வாடும் வறியோரையும் எண்ணிப்பார்க்க இப்புதுமை நம்மைத் தூண்டுகிறது.

5000 பேருக்கு உணவு வழங்கப்பட்ட புதுமையில், நாம் காணும் இரு விடயங்கள், இப்புதுமையில் இடம்பெறாதிருப்பது, சீடர்களைப் பற்றிய சில தெளிவுகளை நமக்குத் தருகிறது. முதல் புதுமையில், மக்களை அனுப்பிவிடும்படி சீடர்கள் கேட்டுக்கொண்டனர். இப்புதுமையிலோ, அம்மக்கள் மூன்று நாள்கள் தங்களுடனேயே இருந்ததை அறிந்தும் அவர்களை அனுப்பிவிடும்படி சீடர்கள் இயேசுவிடம் கூறவில்லை. மாறாக, அவர்களிடம் இருக்கும் உணவைப்பற்றி இயேசு கேட்டதும், அவர்கள் அவற்றை இயேசுவிடம் கொணர்ந்தனர். பகிர்வுப் புதுமை நடைபெறும் என்பதை சீடர்கள் உணர்ந்திருந்தனரோ என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
அதேவண்ணம், 5000 பேருக்கு உணவு வழங்கிய புதுமையின் இறுதியில், இயேசு, தன் சீடர்களுக்குக் கூறிய ஓர் அறிவுரை, ‘தூக்கியெறியும் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்கும் இன்றைய உலகிற்கு, ஒரு சாட்டையடியாக விழுகிறது. பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், உணவை வீணாக்காமல் பாதுகாப்பதும் நம் கடமை என்பதை இயேசு சொல்லித்தருகிறார். மக்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளை சேர்த்து வையுங்கள்" என்று (இயேசு) தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சியத் துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். (யோவான் 6:12-13) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார்.
4000 பேருக்கு உணவு வழங்கிய இந்தப் புதுமையிலோ, இயேசு எதுவும் கூறாதபோதும், சீடர்கள், மீதியான உணவை ஏழு கூடைகளில் நிரப்பினர் என்று நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் குறிப்பிட்டுள்ளனர். உணவைப் பகிர்தல், பாதுகாத்தல் ஆகிய அழகிய பழக்கங்களை சீடர்கள் கற்றுக்கொண்டனர் என்பதை இப்புதுமை நமக்கு உணர்த்துகிறது.

உணவைப் பகிர்தல், பாதுகாத்தல் ஆகிய பாடங்களை நாமும் கற்றுக்கொள்ள, இப்புதுமை நமக்கு உதவட்டும்.