11 August, 2019

Money, not to be counted in zeroes பணம், பூஜ்யங்களால் ஆனதல்ல


Where is your treasure?

19th Sunday in Ordinary Time

“Cobra Post exposes major banks in Money laundering” – This news headline, released a few years back, is the starting point for this Sunday’s reflection. ‘Cobra Post’ – an internet portal, true to its name, carried out a ‘sting operation’ in some leading banks in India. The employees of these banks were caught on hidden camera, suggesting ways and means to ‘customers’ as to how they could launder their dirty, black money. Among hundreds of news on black money, this particular news caught my attention mainly because of the date it was published. It was March 13, 2013.

It was the same day when the chimney attached to the Sistine Chapel in the Vatican sent out ‘White Smoke’. On March 13, around 7 p.m., the chimney, which was emitting black smoke from the previous day, sent white smoke and sent thousands of people, gathered in St Peter’s Square, screaming in spontaneous joy. The white smoke indicated that the conclave of Cardinals assembled in the Sistine Chapel had elected a new Pope! Following the white smoke, emerged the humble, simple ‘Bishop of Rome’ – Pope Francis!

Black smoke being replaced by White smoke was GOOD NEWS. Black money being laundered as White money is BAD NEWS. The emergence of these two pieces of news on the same day, namely, March 13, 2013, tells us of the two worlds that are constantly at war within each of us as well as outside. What is frightening is that the ‘Bad’ takes on a ‘Good’ appearance, as in the case of the bank employees in India, trying to wash the dirt off black money. Black money is money accumulated in illegal ways and stored in illegal ways, usually, outside one’s country.

The Gospel today talks of black money stored! This is a sequel to what we reflected on last week. Last week’s Gospel was about the foolish rich man (Luke 12: 13-21). This week’s Gospel begins ten verses later… Luke 12: 32-48. In the intervening ten verses 22-31, Jesus talks about the lessons we could learn from the birds of the air and the lilies of the field. It is interesting that we, who have learnt, from the birds, the art and science of flying, have not learnt so many other lessons which birds can teach. One among them is the trust these birds have in getting provided by the Heavenly Father.

Instead of trusting God for our future, we go to great lengths to provide for our future. Sometimes this ‘providing for the future’ goes to sickening measures of amassing wealth.
When I was reflecting on today’s Gospel, I was struck by verse 33: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” I began thinking of the ways in which human beings have saved their wealth… starting from the days when we had to protect the cattle which were our main asset, to the present day when we have to protect papers (currencies) and metals (mostly gold, diamonds and platinum) in so many ways…

While searching for all the means we have invented to protect our treasures from thieves and moth, as well as from law and taxes, I came across the information on a book – ‘Stolen Indian Wealth Abroad – How to Bring it back?’ - a compilation of articles (by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie) published in May 2009. This book talks of how the rich – politicians, government officials, business magnets, film artists and cricketers – have stashed away black, dirty money and what it has done to India and to the world… or, what this money could do to India and to the world, if released.

Although India leads in terms of the amount of black money stashed away in other countries, it is not the only guilty country. In 2005, a book written by Raymond W.Baker - Capitalism’s Achilles Heel: Dirty Money And How To Renew The Free Market System claims that the black money in the year 2001 was $11.5 trillion which was increasing at the rate of $1 trillion every year, out of which $500 billion was stolen from developing countries. The Economic Tsunami that the world witnessed in 2007 was a consequence of black money. We are still recovering from this ‘economic meltdown’.

I was curious to figure out what 1 trillion dollars would mean. I was surprised to find out that, like me, many others were interested in making some sense out of this figure. If you wish to do this search, you can go to google and simply type ‘1 trillion dollars’. You will get 29,700,000 results in 0.46 seconds under various topics like:
What does one TRILLION dollars look like?
Visualizing One Trillion Dollars
What is a trillion dollars?
Videos for one trillion dollars
One Trillion Dollars Visualized etc.

One of those topics is: Numb and number: Is trillion the new billion? – which gives us many, many ways of understanding this number. This topic grabbed my attention due to the words numb and number… In 1 trillion dollars we are talking of a number all right. But, these ‘numbers’ can surely make us ‘numb-er’. http://edition.cnn.com/2009/LIVING/02/04/trillion.dollars/
One of the sites talking about 1 trillion dollars, gives us this idea, namely, if you can spend one million dollars a day, you need one million days, which is around 2740 years to spend 1 trillion dollars. Instead of simply playing with numbers as if they were only a matter of zeroes, we get a better picture if we can think of 1 trillion dollars in terms of other contexts.

I tried to convert 1 trillion dollars in Rupees and tried to make sense of this ‘numb-er’ in the Indian context. If this money was distributed to every one – all the one billion plus people – in India, each one would get around 40,000 Rupees. This means that if the money stashed away in tax havens in one year (JUST ONE YEAR) is distributed to all the people in India, each one will get 40,000. For some, this would be pocket money. But, I know that there are people whose annual income is around 40,000 Rupees. Leaving aside all the well-to-do in our country, if this money were to be distributed to those who live below poverty line, they can live in reasonable comfort for at least three years.

Baker’s book seems to claim that the ‘unaccounted’ money was around 11.5 trillion dollars in 2001 which grows at the rate of 1 trillion dollars per year. If we go with Baker’s estimation, right now in 2019 there must be 30 trillion dollars of black money in tax havens. If this money can be distributed to the really, really poor people ALL OVER THE WORLD, they will be able to live in dignity (without begging) for TEN YEARS. Imagine, dear friends, a world where there would be no beggars at all… Wouldn’t that be heaven on earth?

We began today’s reflections with a reference to the white smoke and Pope Francis. Pope Francis has been very clear in his perception of the Church for the poor, by the poor and with the poor. He has not stopped with his words. He had begun a few processes in Vatican by which the financial institutions of the Church will be reformed. We pray that Christ gives Pope Francis enough courage and light to make our Church more transparent in financial matters so that the Church of Christ becomes more credible.

We turn to what Christ said in today’s Gospel: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” (Luke 12: 33) What Jesus is saying is a bit radical… to sell our possessions! What we need to do is simply give away what is superfluous.. (black money is, certainly, superfluous.) and this world would become heaven.

Why talk about black money when nothing can be done? Well, we need to talk about it, anyway, occasionally. But, today’s Gospel also calls us to wake up and see whether there are superfluous things around us. We are provided with so many blessings for which we are accountable. Those are the closing words of Jesus in today’s Gospel: “From everyone who has been given much, much will be demanded; and from the one who has been entrusted with much, much more will be asked.” (Luke 12: 48b)

Where your treasure is…

பொதுக்காலம் 19ம் ஞாயிறு

இந்தியாவில் இயங்கிவரும் COBRAPOST ("நாகம் பதிவு") என்ற ஓர் இணையத்தளம், மறைந்திருந்து கொத்தும் செயல்பாடுகள் என்று பொருள்படும் undercover sting operations வழியே, அதிகார வட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவ்விணையதளம் கூடுதலாகப் புகழ்பெற்றுள்ளது. கறுப்புப் பணத்தைக் குவித்திருப்போர், அதை எவ்விதம் வெள்ளைப் பணமாக்கமுடியும் என்பதை, ஒரு சில முக்கியமான வங்கிகளில் (Bank of India, Bank of Baroda, Canara Bank, Central Bank of India, Indian Overseas Bank போன்றவை) பணிபுரிபவர்கள் சொல்லித்தந்தபோது, அதை, அவர்களுக்குத் தெரியாமல், காணொளி வடிவில் பதிவு செய்து, இவ்விணையத்தளம் வெளியிட்டது.
கறுப்புப் பணத்தைப் பற்றி, ஒவ்வொரு நாளும்தான் செய்திகள் வருகின்றன. புதிதாக இதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இச்செய்தி வெளியான தேதி, என் கவனத்தை முதலில் ஈர்த்தது. அது, மார்ச் 13, 2013.

வத்திக்கான் பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆவலோடு காத்திருந்த வெள்ளைப் புகை, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறிய நாள் அது. ஆம், 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, மாலை ஏழு மணியளவில், சிஸ்டீன் சிற்றாலயப் புகைப்போக்கியில், அதுவரை, அவ்வப்போது வெளியான கறுப்புப் புகை மாறி, வெள்ளைப் புகை வெளியேறியது; கத்தோலிக்கத் திருஅவைக்கு ஒரு புதிய திருத்தந்தை கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தியது. கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயருடன் தன் தலைமைப்பணியைத் துவக்கினார்.
திருத்தந்தையைத் தேர்தெடுக்க சிஸ்டீன் சிற்றாலயத்தில், கர்தினால்கள் நடத்தும் 'கான்கிளேவ்' கூட்டத்தில், நல்லதொரு தீர்வு கிடைத்தால், அது, வெள்ளைப்புகை வழியே வெளிப்படுத்தப்படும். எனவே, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறும் கறுப்புப் புகை, வெள்ளைப் புகையாக மாறினால், அது, நல்லதொரு செய்தி. கறுப்புப் பணம் வெள்ளைப் பணமானால், அது, மோசமானச் செய்தி. இவ்விரு செய்திகளும் ஒரே நாளில் வெளியானது, இவ்வுலகில் நன்மைக்கும், தீமைக்குமிடையே நிகழும் தொடர் போராட்டத்தை நமக்கு உணர்த்துகிறது. நல்லவற்றை நிலைநாட்ட, இவ்வுலகம், மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம். தீமையை நிலைநாட்ட, அதுவும், தீமையை நன்மை போல உருமாற்றி, உலகில் நடமாடச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம்.

பணம் பத்தும் செய்யும்; பணம் பாதாளம் வரை பாயும்; பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிகளைக் கூறி, பணத்திற்கு, ஏறத்தாழ, ஒரு தெய்வீக நிலையை அளிப்பது, தீமையை நன்மை போல உருமாற்றி, இவ்வுலகில் நடமாடவிடும் ஒரு முயற்சி என்று கூறலாம். தீமையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை, செல்வத்தைக் குவிப்பது. நன்மையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை, செல்வத்தைப் பகிர்வது.
பணமும், செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல. அவற்றைத் திரட்டுவதிலும், சேர்த்து வைப்பதிலும், நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே, செல்வத்தை தீயதாக்கிவிடுகிறது. செல்வத்தைக் குவித்து வைத்த ஓர் அறிவற்ற செல்வனைப்பற்றி சென்ற வாரம் ஞாயிறன்று, ஓர் உவமை வழியாக, இயேசு எச்சரிக்கை விடுத்தார்.
அந்த உவமை, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் 21ம் இறை வாக்கியத்துடன் முடிந்தது. இவ்வாரம் அதே 12ம் பிரிவில் 32ம் இறைச் வாக்கியத்துடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இடைப்பட்ட 10 இறைச் வாக்கியங்களில் இயேசு கூறுவதெல்லாம், வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையே. இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை அழகுடன் பராமரிக்கும் இறைவன், நம்மைக் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.

தந்தையாம் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டோருக்கு, அவரது அரசில் இடம் உண்டு என்ற வாக்குறுதியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
லூக்கா நற்செய்தி 12: 32
சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
இதைச் சொன்ன அதே மூச்சில், செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளையும் இயேசு நமக்குத் தருகிறார். இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் அவர் கூறும் அறிவுரைகள் இதோ:
லூக்கா நற்செய்தி 12: 33-34
உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்ற தேடலில் நான் ஈடுபட்டிருந்தபோது, மேலே குறிப்பிட்ட COBRAPOST இணையத்தள செய்தியும், இன்னும் பல செய்திகளும் என் கவனத்தை ஈர்த்தன. திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற, இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக இருக்கும்.

2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகையர் என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது. இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வங்கள். இவற்றை மீண்டும் கொண்டு வருவது எப்படி? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back?) என்பது, இந்நூலின் தலைப்பு.  

செல்வங்களைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு போடவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சீரழிவு உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச் சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.

இந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker என்பவர் ஒரு நூலை வெளியிட்டார் (Capitalism’s Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System). தனியுடைமை, முதலாளித்துவம் இவைகளால் சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி இந்நூலில் அவர் அலசியிருக்கிறார். Baker அவர்களின் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு  நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்து முடிக்க பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.
விளையாட்டுச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், கோடானக் கோடி மக்களுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும். அந்த அளவுக்குப் பணம் இது.

பணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது, ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம், வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.
பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம், தன் சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள், ஒவ்வோர் ஆண்டும், பற்பல அயல்நாட்டு வங்கிகளில், கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.

Raymond W Baker அவர்கள், மற்றொரு வேதனை தரும் உண்மையையும், தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள், வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும், Baker அவர்கள் கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் கறுப்புப் பணம், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல், உடல், உள்ள நலனோடு வாழமுடியும். எவ்வளவு அழகான கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள் வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே. இதைத்தானே இயேசுவும், ‘விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

சாதாரணமாகவே நாம் சேர்த்துவைக்கும் செல்வங்களைப் பற்றி இயேசு பேசும்போது, நேரிய வழிகளில் நீங்கள் சேர்க்கும் பணத்தையும், அளவுக்கு மீறி சேர்த்தால், அவை செல்லரித்துப் போகலாம், அல்லது, திருடப்படலாம் என்று எச்சரிக்கிறார். அதற்குப் பதில், அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள் என்று  சொல்கிறார்.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, அதுவும் ஏழை நாடுகளிலிருந்து, ஏழைகளிடமிருந்து திருடப்பட்டக் கறுப்புப் பணத்தைப்பற்றி இயேசுவிடம் சொன்னால், அவர் என்ன சொல்லக்கூடும்? ஒருவேளை, ஒன்றும் சொல்லாமல் சாட்டையைக் கையில் எடுப்பார். அன்று, எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்ததுபோல், கறுப்புப் பணத்திற்குத் தஞ்சம் தரும் வங்கிகளில் நுழைந்து, அவற்றைச் சுத்தம் செய்வார். அல்லது, அன்று எருசலேம் நகரைப் பார்த்து, கண்ணீர் விட்டதைப்போல், இவர்களையும் நினைத்து அழுவார்.

இறுதியாக, நம்மைப் பார்த்து இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவாகச் சொல்லியுள்ளவற்றை நாம் எவ்வளவு தூரம் கேட்கப் போகிறோம்? செயலாக்கப் போகிறோம்? என்ற கேள்விகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
லூக்கா 12: 32-34, 48ஆ
“உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்… மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”
கணக்கு காட்டாமல் செல்வம் சேர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள செல்வங்களுக்கு நம்மிடம் தகுந்த கணக்கை, இறைவன் எதிர்பார்ப்பார். கடவுளுக்குக் கணக்கு தர நாம் தயாராக இருக்கிறோமா?


06 August, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 8

Pollution endangers population

பூமியில் புதுமை – 'மாசுக்கேடும், காலநிலை மாற்றமும்'

சுற்றுச்சூழலையும், நம் உலகையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய, 'இறைவா உமக்கே புகழ்' (Laudato Si' - On Care for Our Common Home) என்ற திருமடலின் முதல் பிரிவில், நம் பொதுவான இல்லத்திற்கு நிகழ்வதென்ன (What is Happening to our Common Home) என்ற கேள்வியை எழுப்பி, ஒரு சில விளக்கங்களை வழங்கியுள்ளார். இப்பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மாசுக்கேடும், காலநிலை மாற்றமும்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள கருத்துக்களில் ஒரு சில இதோ:
காற்றோடு கலந்துவிட்ட மாசுக்களால், உடல்நலக் குறைவடைந்து துன்புறுவது, பெருமளவில் வறியோரே. இவர்களில் பலர், குழந்தைகளாக, சிறார்களாக இறக்கின்றனர். போக்குவரத்து, ஆலைகள் ஆகியவற்றால் உருவாகும் மாசுகள், நீரையும், காற்றையும் சீரழிக்கின்றன. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள், நிலத்தைப் பாழாக்குகின்றன. பயன்படுத்தி தூக்கியெறியும் பொருள்களும் மாசுக்கேட்டை உருவாக்குகின்றன. நமது இல்லமாகிய இப்பூமி, குப்பை மலையாக மாறிவருகிறது.
இயற்கைச் சுழற்சியில், தாவரங்கள், விலங்குகளின் உணவாகின்றன. அவற்றை உண்ணும் விலங்குகள், வெளியேற்றும் இயற்கைக் கழிவுகள், மீண்டும் தாவர உலகிற்குப் பயனளிக்கிறது. இவ்வாறு இயற்கை தன் சுழற்சியைத் தொடர்கிறது. ஆனால், தொழிற்சாலைகள் உருவாக்கும் பொருள்கள், மறுசுழற்சி செய்யப்படுவதற்குப் பயனற்று போவதால், அவை வெறும் கழிவாக, குப்பையாக இவ்வுலகை நிறைத்து வருகின்றன. (இறைவா உமக்கே புகழ் - 17-22)

The man who had been demon-possessed begged to go with Jesus – Mk. 5:18

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 8

தீய ஆவிகள் பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கியப் புதுமையில் நம் தேடல் பயணம் இன்று நிறைவடைகிறது. இந்த இறுதிப்பகுதியில் நிகழ்வனவற்றையும், அங்கு கூறப்பட்ட கூற்றுகளையும், இயேசு, மற்றும் குணம் பெற்ற மனிதர் என்ற இருவருடைய கண்ணோட்டங்களிலிருந்து ஆய்வுசெய்ய முயல்வோம்.
"நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்" (காண்க. மாற்கு 5:18) - என்பது, குணமான மனிதர் இறுதியில் எழுப்பிய வேண்டுதல். நாம் எழுப்பக்கூடிய இறைவேண்டுதல்களிலேயே மிக அழகானதொரு வேண்டுதல் இது மட்டுமே. இறைவனோடு என்றென்றும் இருப்பது ஒன்றுதானே, மனிதர்கள் அனைவரும் வேண்டும் உன்னதமான வரம்.

'இறைவனோடு இருக்கவேண்டும்' என்ற இந்த வேண்டுதல், நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள வேறு மூன்று நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்கிறது.
முதல் நிகழ்வு - இயேசு தோற்றமாற்றம் அடைந்த நிகழ்வு. அந்நிகழ்வைக் கண்டு, தன்னிலை மறந்த பேதுரு, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" (மத். 17:4; மாற். 9:5; லூக். 9:33) என்று கூறியதை, ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரும் குறிப்பிட்டுள்ளனர். பேதுரு விடுத்த விண்ணப்பத்தை நிறைவேற்றாமல், தன் பணியைத் தொடர மலையைவிட்டு இறங்கிவந்த இயேசுவை நாம் இங்கு சந்திக்கிறோம்.
2வது நிகழ்வு – கல்வாரியில், சிலுவையில் நிகழ்ந்தது. அங்கு மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த இயேசுவிடம், அவருடன் சிலுவையில் அறையப்பட்டிருந்த  இரு குற்றவாளிகளில் ஒருவர், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். (லூக்கா 23:42-43) 'தன்னை இயேசு நினைவிற்கொண்டால் போதும்' என்பதை தன் வேண்டுதலாக வெளிப்படுத்திய குற்றவாளியிடம், 'என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்' என்ற பெரும் வரத்தை இயேசு வழங்கினார்.
3வது நிகழ்வு - உயிர்த்த இயேசு, எம்மாவு சென்ற சீடர்களைச் சந்தித்த நிகழ்வு. அங்கு, இயேசு தன் பயணத்தைக் தொடர்வதற்கு விழைந்தபோது, அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். (லூக்கா 24:29)

கெரசேனர் மனிதரிடம் திரும்பிவருவோம். "நானும் உம்மோடுகூட இருக்கவேண்டும்" என்ற விண்ணப்பத்தை அம்மனிதர் எழுப்பியபோது, இயேசு அதை ஏற்க மறுத்தார். அத்துடன் நில்லாமல், மற்றொரு பணியையும் அவருக்கு அளித்தார்.
இயேசு அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். (மாற்கு 5:19)
பேய்களின் பிடியிலிருந்த விடுதலைபெற்ற ஒருவருக்கு இயேசு தந்த அந்தக் கட்டளை, நம்மை மாற்கு நற்செய்தியின் இறுதிப் பிரிவுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு உயிர்த்த இயேசு, முதலில் மகதலா மரியாவைச் சந்தித்ததையும், பின்னர் சீடர்களுக்கு தந்த கட்டளையையும் இங்கு நினைவுகூறுகிறோம்.

முதலில் மகதலா மரியாவைக் குறித்து சிந்திப்போம். அவருக்கு இயேசு தோன்றிய காட்சி, மாற்கு நற்செய்தி 16ம் பிரிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
மாற்கு 16: 9-10
வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார்.
மகதலா மரியாவிடமிருந்து ஏழு பேய்களை இயேசு ஓட்டியிருந்தார் என்ற விவரம், மாற்கு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. 'ஏழு' என்ற எண்ணிக்கை, விவிலிய மரபில் ஒரு முழுமையான எண் என்பதை நாம் அறிவோம். எனவே, ஏழு பேய்களால் மரியா ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை, 'மகதலா மரியா பேய்களால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருந்தார்' என்றும் பொருள் கொள்ளலாம். நாம் சிந்தித்துவரும் புதுமையிலும், கெரசேனர் மனிதர், 6000த்திற்கும் அதிகமான பேய்களால், முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை அறிவோம். எனவே, இவ்விருவரும் பேய்களின் முழுமையான ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். பேய்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண், இயேசுவின் உயிர்ப்பை அறிவிக்கும் முதல் சாட்சியாக அனுப்பப்பட்டார்.

2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், அதுவரை, திருஅவை வழிபாட்டில், மகதலா மரியாவுக்கு, வெறும் நினைவு நாளாக குறிக்கப்பட்ட ஜூலை 22ம் தேதியை, ஒரு திருநாளாகக் கொண்டாடும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விதிமுறை ஒன்றை வெளியிட்டார். இறைவழிபாடு மற்றும் அருளடையாளங்களை நெறிப்படுத்தும் பேராயம், திருத்தந்தையின் விதிமுறையை வெளியிட்டபோது இவ்வாறு கூறியது:
"பெண்களின் மாண்பைப்பற்றி திருஅவை இன்னும் ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், மகதலா மரியாவின் எடுத்துக்காட்டை விசுவாசிகள் பின்பற்ற வேண்டுமென திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். 'திருத்தூதர்களின் திருத்தூதர்' (Apostle of the Apostles) என்று புனித தோமா அக்குவினாஸ் அவர்களாலும், 'இறை இரக்கத்தின் சாட்சி' (witness of Divine Mercy) என்று, புனித பெரிய கிரகரி அவர்களாலும் அழைக்கப்பட்ட மகதலா மரியா, திருஅவையில், பெண்கள் வகிக்கும் நிறைவானப் பங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்."

பேய்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மகதலா மரியாவை, தன் உயிர்ப்புக்கு முதல் சாட்சியாக இயேசு அனுப்பியதைப் போல், கெரசேனர் பகுதியில் பேய்களிடமிருந்து விடுதலை பெற்றவரை, புறவினத்தார் வாழும் பகுதியில் தன் முதல் சாட்சியாக வாழ்வதற்கு, அனுப்பிவைத்தார்.

அம்மனிதருக்கு இயேசு வழங்கிய கட்டளை, உயிர்ப்புக்குப் பின், இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய கட்டளையைப்போல் ஒலிக்கிறது. விண்ணேற்றத்திற்கு முன், தன் சீடர்களுக்குத் தோன்றிய இயேசு, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற கட்டளையைத் தந்தார். அந்த இறுதிக் கட்டளைக்கு ஒரு முன்னோட்டம் போல, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" (மாற்கு 5:19) என்று, இப்புதுமையில், இயேசு தரும் கட்டளை ஒலிக்கிறது.

ஒரு சில புதுமைகளில், இயேசு, அப்புதுமையைக் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லவேண்டாம் என்று கூறியிருப்பதையும் நாம் நற்செய்திகளில் காண்கிறோம். (காண்க. மாற்கு 1:40; லூக்கா 5:14) இந்தப் புதுமையிலோ, இயேசு, புதுமையைப் பெற்ற மனிதரிடம், "தன் உறவினருக்கு அறிவிக்கும்படி" தெளிவாகக் கூறியுள்ளார்.

இயேசு தந்த கட்டளையை நிறைவேற்ற, அம்மனிதர் தன் ஊருக்குத் திரும்பியதும், அங்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கற்பனை செய்துள்ளனர். நாமும் அக்கற்பனைக் காட்சியைக் காணமுயல்வோம்:
அவர் ஊருக்குள் வருகிறார் என்ற செய்தி பரவியதும், ஊரிலிருந்த அனைத்து இல்லங்களிலும், கதவுகள் மூடப்பட்டிருக்கும்; கதவுகளின் இடுக்கில், அல்லது சன்னல்கள் வழியே மக்கள் அவரைப் பார்த்திருப்பர். அம்மனிதர் தன் வீடுநோக்கிச் சென்றபோது, அவரது மனைவியும், குழந்தைகளும் அச்சத்தில் உறைந்துபோய், கதவை இறுக மூடி, உள்ளே ஒளிந்துகொண்டிருப்பர். அவருடைய குழந்தைகளில் ஒன்று, தன் தந்தை ஆடை உடுத்தியிருக்கிறார் என்ற மாற்றத்தை முதலில் கூறியிருக்கும். மற்றொரு குழந்தை, அவர் அமைதியாக நடந்துவருகிறார் என்று கூறியிருக்கும். இவ்வாறு, அம்மனிதரிடம் தெரிந்த மாற்றங்கள் ஒவ்வொன்றாக தெளிவாகியிருக்கும். அதன்பின், அவரது மனைவி, வீட்டுக்கதவைத் திறந்திருப்பார்.
விரைவில், ஊரெங்கும், அம்மனிதரிடம் காணப்பட்ட நல்ல மாற்றங்களைப் பற்றிய செய்தி பரவியிருக்கும். அம்மனிதர், தன் வாயைத் திறந்து நற்செய்தியை அறிவிப்பதற்கு முன், அவரே ஒரு நற்செய்தியாக நடமாடியிருப்பார். அதன்பின், அவர், தன் உற்றார், நண்பர் அனைவருக்கும் "இயேசு தனக்குச் செய்ததையெல்லாம்" நற்செய்தியாக அறிவித்திருப்பார். அவரது பணி, அவர் வாழ்ந்த ஊருடன் நின்று விடவில்லை. மாறாக, "அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்" (மாற்கு 5:20) என்று இப்புதுமை நிறைவு பெறுகிறது.

தவறான, தாறுமாறான வாழ்விலிருந்து மீண்டுவருபவர்களிடம் காணப்படும் மாற்றங்களை, மக்கள், அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் என்பதை அறிவோம். எனவே, பேய்களிடமிருந்து விடுதலைபெற்ற மனிதரும், தன் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியில், தடைகளையும், எதிர்ப்புக்களையும் சந்தித்திருப்பார். இருப்பினும், அவர், மனம் தளராமல் தன் பணியைத் தொடர்ந்தது, அப்பகுதியில், ஆழ்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணர்ந்திருக்கும் என்பதை நாம் நம்பலாம்.

அவரது பணியால், தெக்கப்பொலி நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தை ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் வரலாற்று நிகழ்வுகளோடு இணைத்துப் பேசியுள்ளனர்:
பேய்களிடமிருந்து விடுதலைப் பெற்றவர் இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்ததற்கு, பல ஆண்டுகளுக்குப் பின், 'எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது' (திருத்தூதர் பணிகள் 8:1). அந்த இன்னலிலிருந்து தப்பிக்க, கிறிஸ்தவர்கள், தெக்கப்பொலி நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் யாரும் இயேசுவை நேரில் கண்டதில்லை. இருப்பினும், தங்களிடம் தஞ்சம் அடைந்திருப்பவர்கள், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவு வழங்கினர். அதற்கு ஒரே காரணம், இயேசுவினால் விடுதலை அடைந்த ஒருவர், அவர்களிடம் பகிர்ந்துகொண்ட நற்செய்தி!

"இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர்" (மாற்கு 5:21) என்று நற்செய்தியாளர் மாற்கு, தன் நற்செய்தியைத் தொடர்கிறார். நாமும் மறுகரைக்குச் செல்வோம். இயேசு அங்கு ஆற்றிய புதுமைகளை, தொடர்ந்து சிந்திப்போம்.


03 August, 2019

Masters / Slaves of possessions? செல்வங்களின் உரிமையாளரா, அடிமையா?


The Rich Man depicted by Jesus in Luke 12

18th Sunday in Ordinary Time

Our Sunday reflection begins with Ludwig II, who became the King of Bavaria at the age of 19 and died at the age of 41, under mysterious circumstances. He was called the Swan King or "The Fairy Tale King". Another – not so complimentary – title was also given to him, namely, Mad King Ludwig!

He began building a palace on an island in the middle of the Chiemsee Lake. This palace was planned with 70 rooms and only half of them were finished, when he passed away. When the palace was still being built, he lived there for 10 days. During his stay there, he did not meet anyone. His food was sent via a lift and a conveyor belt to reach his dining table. Many of those rooms were decorated with large mirrors.
This palace is now a tourist attraction. When one passes through this palace, one can’t but pity the man who lived there all by himself, just looking at himself in the mirrors all the time. It is no surprise he was nicknamed, Mad King Ludwig!

When some people are loaded with lots of wealth, especially wealth that is inherited, they do very insane things. Like Ludwig of the 19th century, we do have another very rich man in India who had inherited lots of wealth.
He had built his residence in Mumbai at the cost of 2 billion dollars – one of the richest houses in the world. The name of this house is ‘Antilia’. How very apt! Antilia is supposed to be a mythical island. This house in Mumbai is truly an island… When nearly 18 million people in Mumbai struggle to get a square foot of ground, this house for 5 people boasts of 4,00,000 square feet of built-in area. This house is truly a symbol of unmitigated boasting! Nothing else!

Whether it is the palace of King Ludwig, or the Antilia in Mumbai, there is something very strange about these rich persons who had indulged in these ‘scandalous’ ventures. Perhaps, Jesus had people like these in mind, when he gave the warning: “Take heed, and beware of all covetousness; for a man’s life does not consist in the abundance of his possessions.” (Luke 12:15). This warning, as well as the parable of the Rich Fool, are the main features of our Gospel today – Luke 12:13-21.

Only in the Gospel of Luke we find three parables that talk of wealthy people. We have the Parable of the Rich Fool in Chapter 12 and then in Chapter 16, we have the Parable of the Dishonest Manager and the Parable of the Rich Man and Lazarus.
Jesus introduces three rich persons in these three parables. While in the parables given in Chapter 16, Jesus talks of the rich person along with another human being – the steward and Lazarus, in the Parable of the Rich Fool, there is no human being mentioned in the whole parable. Towards the end of the parable, we have the voice of God, calling this rich man a fool.

In the eyes of God, this person was utterly foolish, because he was focused completely on himself and was selfish to the core. While he was planning what to do with his harvested goods, he went into a self-talk: ‘What shall I do, for I have nowhere to store my crops?’ I will do this: I will pull down my barns, and build larger ones; and there I will store all my grain and my goods. And I will say to my soul, Soul, you have ample goods laid up for many years; take your ease, eat, drink, be merry.’ (Luke 12: 17-19). A careful glance at this self-talk reveals, that he liberally used the “aggressively possessive” pronouns “I” (six times) and “my” (five times). He was possessed by his possessions, instead of possessing them. He had built a fortress of selfishness around him through which only his own sweet self could pass. This was a veritable hell, but he imagined it to be heaven – false heaven.

What prompted him to build this false heaven – this castle in the air? The fruits of the harvest. The heap of grains reaching up to the ceiling, had blinded him from all the stark reality beyond. Jesus begins this parable with a simple statement: “The land of a rich man brought forth plentifully…” Obviously this ‘plenty’ did not come out of the blue and did not come overnight. There were plenty of labourers involved in this process of production. Just imagine the scene of the labourers bringing in sacks of harvested grains to the barns. Those labourers must have been half-bent by the load they were carrying. Although they filled the barns of the rich man, they must have gone home on an empty stomach. None of these seem to bother the rich man one bit. All his attention was on the produce, not on the process and the people involved in the process! His thinking was short-circuited and warped. Naturally, God called him a ‘fool’. To the rich man, the grains simply came out of nowhere and he simply possessed them. He owed nothing to anyone! The grains filled not only his barns, but his mind and heart. There was no place for the people who were the cause of this harvest.

When we reflect on how the harvested grains become the centre and the persons get ignored, our mind races back to 2010 – to some headlines in Indian newspapers: 
UP: Food meant for kids eaten by dogs - July 21, 2010
After UP, now food grains rot in Maharashtra - July 23, 2010
Not a single food grain should be wasted: Supreme Court - July 27, 2010

Here are the lead lines of the last headline:
New Delhi:  The Supreme Court has observed that not a single food grain should be wasted. In a strongly-worded ruling, the apex court has told the government that food grains are rotting and if you can't do anything about it, then distribute it among the poor. The court has also sought government's response on this.
Why all this fuss? Close to 3 million tonnes, let me repeat… 3 MILLION TONNES of food grains were rotting across India. This was not simply the Government’s inability to govern, but also an unpardonable injustice!

These news items need to be seen in a context. Only when they are seen in the context of hunger in India, we begin to realise how ‘foolish’ we – all of us in India and all of us around the globe – have been. We begin to understand how much we stand accused like the foolish rich man depicted in today’s Gospel.

These three news items are to be seen in the context of the starvation deaths that occur in India year after year. At least 6,000 children are dying every day… let me repeat, EVERY DAY in India due to hunger and malnutrition. This is how a TV programme begins… (“30 Minutes: Small, Hungry & Dying” prepared by IBNLive.Com. This video is available on YouTube under the title “6000 children starve to death in India EVERY DAY.”)

2010 was not the only year when such an atrocity took place. In 2001 there was a similar injustice. “We produce enough and more food in our country. But, we have a faulty PDS - Public Distribution System”. These were the comments by Vajpayee, the Prime Minister of India in 2001. How did our Prime Minister get this ‘enlightenment’? That year India had a stock of 90 million tonnes of grain in government storage, while people in Kashipur District in Orissa were dying of hunger. What does it mean to have 90 million tonnes of food grains? It simply means that 20 lakh people can be fed for 2 years with that much food… Most of these food grains were rotting in the open and, people were dying in India. Have the tragedies of 2001 and 2010 taught us lessons? I am afraid, not!
This year in the month February, (Feb.23, 2019) there was a news headline in Deccan Chronicle: India wastes as much food as the UK consumes. The article says: With a population of more than 1.20 billion people India is one of the top most countries that wastes huge quantities of food everyday… According to the United Nations Development Programme, nearly 40% of the food produced in India goes waste… Off late we have seen, in India, bigger the wedding, larger the party and greater the waste.
While the wastage of food keeps increasing, the number of underfed people also grows year after year! Why? We have a very warped value system. Topsy-turvy idea of justice!

To prove this, I would like to return to the news on the Supreme Court’s ruling in 2010: the apex court has told the government that food grains are rotting and if you can't do anything about it then distribute it among the poor.
A closer look at this ruling, pains our heart… the way the court has placed the poor in this context. If you can’t do anything about it, (namely, storing the grains), then distribute them among the poor. The apex court of India placed more stress on storing and hoarding rather than attending to the starving millions. Since FCI was incapable of storing, the court had asked the government to feed ‘at least’ the poor… The poor, as usual, take the least place!

When will come a time when we can hear the Supreme Court of India (or the legal court anywhere in the world) to give a verdict as follows: “It is unjust to store food grains when millions are starving in the country. Hence, we order the government to distribute the food grains, first and foremost, to the starving millions.” The poor take the ‘first and foremost’ position and not the ‘at least’ position!

It’s so easy to blame the government, the court, the FCI, the selfish rich, the politicians, … this litany is endless. Blame them, and then what? Remember… when we point a finger at our neighbour, there are three more pointing at us.
What should we do? Where do we begin? Here is a small snippet from the life of Ernest Hemingway, the Nobel laureate. Ernest Hemingway had a very unique habit. On the first day of every New Year, he gave away some of his most precious possessions. And when people asked him why he did that, he would answer, “If I can give them away, then I own them. But if I can’t give them away, they own me.” Very simple? Idealistic?… or, simplistic?

Jesus, who gave this challenging parable for our reflection, leaves us a stinging warning: “Watch out! Be on your guard against all kinds of greed; a man's life does not consist in the abundance of his possessions.” (Luke 12: 15)
Of all the parables of Jesus, this is the only parable where God speaks! And what a statement! God speaks not only to the rich person, but to all of us: God said to him, ‘Fool! This night your soul is required of you; and the things you have prepared, whose will they be?’ (Luke 12:20)
Are we are prepared to meet the Lord, ‘this night’?

The Palace built by Ludwig II

பொதுக்காலம் - 18ம் ஞாயிறு

ஜெர்மன் நாட்டவரான இரண்டாம் லூட்விக் (Ludwig II) என்ற மன்னரைப் பற்றிய விவரங்கள், இன்றைய நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்கின்றன. திருமணம் ஆகாமல், தனித்து வாழ்ந்த இவர், தனது 41வது வயதில், மர்மமான முறையில், மரணம் அடைந்தார். 'கற்பனைக் கதை மன்னன்' (Fairy tale king) என்றழைக்கப்படும் இவருக்கு தரப்பட்டுள்ள மற்றொரு பட்டப்பெயர், 'மதியற்ற மன்னன் லூட்விக்' (Mad King Ludwig).
செல்வம் மிகுந்துவிட்டால், மனிதர்கள், மதியற்ற செயல்களில் ஈடுபடத் துணிகின்றனர் என்பதற்கு, மன்னன் இரண்டாம் லூட்விக், ஓர் எடுத்துக்காட்டு. ஜெர்மன் நாட்டில் உள்ள Chiemsee ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறு தீவில், இரண்டாம் லூட்விக் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். 70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் ஒரு சில அறைகள் கட்டப்பட்டதும், 1885ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் அங்கு தங்கியிருந்தபோது, யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கென தயாரிக்கப்பட்ட உணவு, ஓர் இயந்திரத்தின் வழியாக அவரது அறைக்கு அனுப்பப்பட்டது. அவர் அங்கு தங்கியிருந்த அறைகளில் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த ஏற்பாடுகளையெல்லாம் காணும்போது, மனதில் ஓர் எண்ணம் எழுகின்றது. மன்னன் இரண்டாம் லூட்விக், மனிதர்கள் யாரையும் சந்திக்க விரும்பாமல், தன்னை மட்டுமே நாள் முழுவதும் பார்த்தவண்ணம் அந்த அரண்மனையில் வாழ்ந்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்வதற்கு, அவர் 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்ட விழைந்தார் என்பதை எண்ணும்போது, அவர் தன் சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.
70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் 30 அறைகளே கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் இவர் இறந்தார். அதன்பின்னர், இந்த அரண்மனை கட்டப்படாமலே விடப்பட்டது. தற்போது இந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கண்காட்சிப் பொருளாக அமைந்துள்ளது. முழுமைபெறாத அந்த அரண்மனையைச் சுற்றிவரும்போது, அங்கு ஒரு மன்னன் தனிமையில் தன்னையேச் சுற்றிச்சுற்றி வந்தார் என்று எண்ணி, அவர் மீது பரிதாபம் எழுகிறது.

மன்னன் லூட்விக் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வினோத மனிதர். நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய வினோதமான செயல்களில் ஈடுபடும் செல்வந்தர்களைச் சந்திக்கமுடிகிறது. 2010ம் ஆண்டு மும்பை மாநகரில் கட்டி முடிக்கப்பட்ட ஓர் இல்லம், உலகிலேயே மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலக செல்வந்தர்களில் ஒருவரது குடும்பம் வாழும் அந்த இல்லத்தின் பெயர் 'அன்டில்லியா' (Antilia).
கிரேக்கப் புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவுத் தீவு, 'அன்டில்லியா'. மும்பை நகரில் அமைந்துள்ள 'அன்டில்லியா' இல்லமும் ஒரு தீவுதான். வாழ்வதற்குத் தகுதியான ஒரு சதுர அடி இடம் கிடைப்பதற்கும் போராடிவரும் 2 கோடி மக்கள் நிறைந்த ஒரு மனிதக் கடல், மும்பை மாநகரம். இக்கடலின் நடுவே, ஐந்துபேர் வாழ்வதற்கு, 4 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த இல்லம், உண்மையிலேயே ஒரு தீவுதான். இந்தத் தீவு கட்டப்பட்டுள்ள அந்த நிலப்பரப்பு, அநாதை இல்லம் கட்டுவதற்கென்று, ஓர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் என்று கேள்விப்படும்போது, நமது உள்ளம் இன்னும் அதிக வேதனை அடைகிறது. ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்கள், அதாவது, அன்றைய நிலவரப்படி, 9,000 கோடி ரூபாய் செலவில் இந்த தற்கால அரண்மனையைக் கட்டியவர், சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

தான் மட்டும் தனித்து வாழ்வதற்கு 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்டினால், தன் வாழ்வு நிறைவடையும் என்று எண்ணிய இரண்டாம் லூட்விக் மன்னரையும், உலகிலேயே மிக விலையுயர்ந்த இல்லத்தில் வாழும் மும்பை செல்வந்தரையும் முன்னிறுத்தி, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்:
லூக்கா 12: 15
இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
இந்த எச்சரிக்கையை நம் உள்ளங்களில் தெளிவாகப் பதிக்க, இயேசு கூறும் பொருள்நிறைந்த உவமையே, 'அறிவற்ற செல்வன்' உவமை. லூக்கா 12: 16-21

லூக்கா நற்செய்தியில் மட்டுமே பணத்தைப்பற்றி, செல்வத்தைப்பற்றி மூன்று உவமைகளைக் காண்கிறோம். 'அறிவற்ற செல்வன் உவமை' (லூக்கா 12:13-21), 'நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை' (லூக்கா 16:1-8), 'செல்வரும் இலாசரும் உவமை' (லூக்கா 16:19-31) என்று இம்மூன்று உவமைகளும் செல்வத்தின் பல்வேறு விளைவுகளைச் சிந்திக்க நம்மைத் தூண்டுகின்றன. இவற்றில் அறிவற்ற செல்வனைப் பற்றி இன்று சிந்திக்கும் நாம், இன்னும் 7 வாரங்கள் கழிந்து, பொதுக்காலத்தின் 25, 26 ஆகிய இரு ஞாயிறுகளில் மற்ற இரு உவமைகளைச் சிந்திப்போம்.
இம்மூன்று உவமைகளில், இச்செல்வந்தர்களை இயேசு அறிமுகப்படுத்தும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சில எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன. இதோ, இம்மூன்று உவமைகளின் அறிமுக வரிகள்:
லூக்கா 12: 16
செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
லூக்கா 16: 1
செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.
லூக்கா 16: 19-20
செல்வர் ஒருவர் இருந்தார்... இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.

இம்மூன்று உவமைகளில், இச்செல்வந்தர்களை இயேசு அறிமுகப்படுத்தும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சில எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன. 16ம் பிரிவில் இயேசு அறிமுகப்படுத்தும் இரு செல்வந்தர்களுடன், வீட்டுப் பொறுப்பாளர், மற்றும், ஏழை இலாசர் என்று, மனித வடிவில் மற்றொரு கதாப்பாத்திரமும் அறிமுகமாகின்றார். ஆனால், நாம் இஞ்ஞாயிறன்று சிந்திக்கும் 'அறிவற்றச் செல்வன்' உவமையிலோ, வேறு மனிதர்களைப்பற்றிய குறிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இச்செல்வனுடன் சித்திரிக்கப்பட்டுள்ளதெல்லாம் அவரது நிலம், விளைபொருள்கள் மற்றும் களஞ்சியங்கள்.
எதார்த்தமாக சிந்தித்தால், அந்தச் செல்வனைச் சுற்றி ஒரு குடும்பம் இருந்திருக்க வேண்டும். அவரது நிலத்தில் உழைத்த உழைப்பாளிகள் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், வேறு எவ்வித மனித உறவும் இல்லாமல், பொருள்களால் மட்டுமே சூழப்பட்ட தனியொரு தீவாக இச்செல்வனை இயேசு சித்திரித்துள்ளார். இவ்வுவமையை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும்போது, அத்தகைய ஒரு தீவை அந்தச்செல்வன் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டார் என்பதை உணரலாம்.

இந்த உவமையின் துவக்கத்தில் இயேசு பயன்படுத்தியுள்ள "செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது" என்ற அறிமுகச் சொற்கள் பொருள் நிறைந்தவை. நல்லதொரு விளைச்சலுக்கு, பல காரணங்கள் உள்ளன. இறைவன் கருணை காட்டியது, இயற்கை பொய்க்காமல் இருந்தது, பல உழைப்பாளிகள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்தது என்று பல பின்னணி காரணங்கள் உள்ளன. ஆனால், இவை எதுவும் அச்செல்வனின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை. வீட்டை அடைந்த விளைபொருள்கள் மட்டுமே செல்வனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தன.

அறுவடைப் பொருள்கள் செல்வனின் வீடு  வந்த சேர்ந்த காட்சியைச் சிறிது கற்பனை செய்துபார்ப்போம். தானிய மூட்டைகளைத் தங்கள் முதுகில் சுமந்து வந்து வீடு சேர்த்த தொழிலாளிகள், மீண்டும் நிமிர்ந்து செல்லவும் வலுவின்றி திரும்பியிருக்கக் கூடும். செல்வனின் களஞ்சியங்களை நிரப்பிய அவர்கள், தங்கள் வயிற்றை நிரப்பமுடியாமல், பட்டினியில் மயங்கி விழுந்திருக்கக்கூடும். இந்த ஊழியர்களின் ஊர்வலம் தன் கண்முன் நடந்ததைக் கண்டும், காண மறுத்தச் செல்வன், அவர்கள் கொண்டுவந்து சேர்த்த பொருள்களை - அதாவது, தானியங்களை மட்டுமே பார்க்கிறார். குவிந்துள்ள தானியங்களைப் பகிர்ந்து தருவதற்கு மறுத்து, அவற்றை இன்னும் பதுக்கி வைப்பதற்கு, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாக்கத் திட்டமிடுகிறார்.

மனித உழைப்பால் விளைந்த தானியங்கள், மனிதர்களைவிட அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை இந்த உவமை வழியே நாம் உணரும்போது, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ஊடகங்களில் வெளிவந்த சில தலைப்புச் செய்திகள் நினைவில் தோன்றி, மனதை முள்ளென கீறுகின்றன. இதோ, அச்செய்திகள்...
ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.
ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.
இச்செய்திகளை வாசிக்கும்போது, இன்றைய நமது நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அறிவற்ற செல்வன் செய்த அதே தவறை, இந்திய நாடும், நாம் அனைவரும் செய்தோம், இன்றும் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது. இச்செய்திகளைத் தொடர்ந்து, "உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்துவைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள். உணவு தானியங்களில் ஒன்றுகூட இனி வீணாகக்கூடாது" என்று 2010ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.
யாருக்கு இந்த ஆணை? Food Corporation of India என்றழைக்கப்படும் இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏன் இந்த ஆணை? உணவு நிறுவனத்திற்குச் சொந்தமான தானியக் கிடங்குகளில், 30 இலட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சேமிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை, மண் தரைகளில், மழையில் அடுக்கி வைத்ததால், அவை அழுகிக்கொண்டிருந்தன.

இச்செய்தியைத் தனித்துப் பார்க்கும்போது, இதன் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இதை, இந்தியாவில் நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும்போது, விபரீதம் புலப்படும். 2009ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில், ஒவ்வொரு நாளும்... மீண்டும் சொல்கிறேன்... ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தினமும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரமாய் இருக்கும். ஆனால், உணவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6,000. சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிக்கப்பட்டு, அழுகிகொண்டிருக்கும் 30 லட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். பசியால், உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000 என்ற அதிர்ச்சித் தகவல் மறுபுறம்.

"உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்த உத்தரவை ஆழச் சிந்திக்கும்போது, மனதில் ஆத்திரமும், வேதனையும் அதிகமாகிறது. ஒரு நாட்டின் உச்சநீதி மன்றமே நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு முயற்சி இது.
சேமித்துவைக்க முடியவில்லை எனில், ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று ஒரு நாட்டின் நீதிமன்றம் கூறும்போது, அது 'சேமிப்புக்கு' முதலிடம் தருவதைக் காணமுடிகிறது. சேர்த்துவைக்க, குவித்துவைக்க, பதுக்கிவைக்க உங்களுக்குத் திறன் இல்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் ஏழை மக்கள். அவர்களுக்காவது அதைத் தூக்கிப்போடுங்கள் என்ற பாணியில் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் பேசுவதை, எவ்விதம் நீதி என்று அழைப்பது? இந்தப் பாணியில்தானே அறிவற்ற செல்வனும் குவித்துவைப்பதற்கு முதலிடம் தந்தார்?
இதற்கு மாறாக, உச்சநீதி மன்றம் பின்வருமாறு கூறியிருந்தால், அதை நாம் ஒரு நீதிமன்றம் என்று அழைக்க முடியும். "நாட்டில் இத்தனை கோடி மக்கள் உணவின்றி வாடும்போது, உங்கள் தானியக் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக நீங்கள் தானியங்களைக் குவித்துவைப்பது தவறு. அதை முதலில் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள்" என்று நமது நீதி மன்றங்கள் எப்போது சொல்லப் போகின்றன?

உச்சநீதி மன்றங்களை, உணவு நிறுவனங்களை, குற்றம் கூற நீண்டிருக்கும் நமது சுட்டுவிரல்களை நம் பக்கம் திருப்புவோம். நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி, புரையோடிப் போயிருக்கும் பேராசைகளை, தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைக்கும் போக்கைப்பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் அந்த செல்வன், வாய்ப்பைத் தந்திருக்கிறார். அச்செல்வனை ஒரு முட்டாள் என்று நாம் தீர்மானம் செய்வதற்கு முன், நம்மைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

Ernest Hemingway என்பவர், நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம்,  தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை." என்று பதில் சொன்னாராம்.

தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு தரும் எச்சரிக்கை, அன்றுமட்டுமல்ல, இன்றும் ஒலிக்கிறது.
“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” (லூக்கா 12: 15)

இயேசு கூறிய அத்தனை அழகான உவமைகளிலும், லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் நாம் காணும் 'அறிவற்ற செல்வன்' உவமையில் மட்டுமே கடவுள் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடவுள் பேசும் வார்த்தைகள் ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன: கடவுள் அவனிடம், "அறிவிலியே இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார் (லூக்கா 12: 20) என்று இவ்வுவமையின் இறுதியில் வாசிக்கிறோம்.
இறைவன் இக்கேள்வியை நம் ஒவ்வொருவரையும் நோக்கி கேட்கிறார். நாம் இவ்வுலகில் எதைச் சேர்த்துவைத்துள்ளோம்? எதை விட்டுச்செல்லப்போகிறோம்? இவ்வுலகை நிம்மதியுடன், மகிழ்வுடன் விட்டுச்செல்ல நாம் தயாராக இருக்கிறோமா? நம் பதில்களை எதிர்பார்த்து கடவுள் காத்திருக்கிறார்.