24 August, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 36

The Widow of Nain embraces her son raised from the dead

கருத்தரங்கு ஒன்றில் உரை வழங்கிக்கொண்டிருந்த பேச்சாளர், திடீரென தன் 'பர்ஸை'த் திறந்து, ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்தார். "இந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, அரங்கத்தில் இருந்த பலர் கைதூக்கினர். 'கொஞ்சம் பொறுங்கள்' என்று சொன்ன பேச்சாளர், அந்த 500 ரூபாய் நோட்டைக் கசக்கினார். கசங்கிப்போன நோட்டைக் காட்டி, "இப்போது, இது யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, கரங்கள் மீண்டும் உயர்ந்தன. பேச்சாளர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் மிதித்தார். பின்னர், அதைக் கையில் எடுத்து, "இது யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, அரங்கத்தில் பலரது கரங்கள் உயர்ந்தன.
பேச்சாளர் தொடர்ந்தார்: "நண்பர்களே, இந்த ரூபாய் நோட்டை நான் கசக்கினாலும், மிதித்தாலும் அதன் மதிப்பு குறையவில்லை என்பதை நீங்கள் நம்பியதால், அது வேண்டும் என்று சொன்னீர்கள். ஒரு காகிதத்திற்கு இவ்வளவு மதிப்பு தரும் நீங்கள், உங்களுக்கு நீங்களே மதிப்பு தருகிறீர்களா? அல்லது, மற்ற மனிதர்களுக்கு அந்த மதிப்பு தருகிறீர்களா?" என்று கேட்டபோது, அரங்கம் அமைதியானது.

வாழ்வின் பல சூழல்களில், சுழல்களில் சிக்கித் தவிக்கும்போது, வாழ்வுச் சக்கரம் நம்மைக் கசக்கிப் பிழிவதைப் போல் உணரும்போது, மற்றவர்களால் மிதிபடுகிறோம் என்று உணரும்போது, நம்மைப் பற்றிய மதிப்பும், நம்பிக்கையும் குறைந்து, தாழ்வு மனப்பான்மை அதிகரிப்பதால், மனமுடைந்து போகிறோம். அதேபோல், கசக்கப்பட்டு, மிதிபட்டு வாழும் மற்றவரையும் மதிக்க மறுக்கிறோம்.
இஸ்ரயேல் சமுதாயத்தில் வாழ்ந்த கைம்பெண்கள், சட்டங்கள், சம்பிரதாயங்கள் போன்ற சுமைகளால் கசக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த நயீன் நகர கைம்பெண்ணுக்கு இயேசு ஆற்றிய புதுமையில், நம் தேடல் பயணம் தொடர்கிறது. அந்தப் பெண்ணுக்கு உரிய மதிப்பை வழங்கி, அவரது தேவையைத் தீர்க்க முன்வருகிறார், இயேசு.
சமுதாயத்தால் கசக்கப்பட்டு, மிதிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெண்ணின் உண்மையான மதிப்பை உணர்ந்த இயேசு, அந்த மதிப்பை தான் உணர்ந்தால் மட்டும் போதாது, மற்றவர்கள் மனதிலும் பதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், இப்புதுமையை, வெளிப்படையாக, ஒரு கூட்டத்தின் நடுவே ஆற்றினார் என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக, இயேசு ஆற்றிய பல புதுமைகள், விண்ணப்பத்தின் அடிப்படையில் செய்யப்பட்டப் புதுமைகள். நோயுற்றவரோ, அல்லது, அவர் சார்பில் மற்றொருவரோ விண்ணப்பம் செய்வதுண்டு. இந்தப் புதுமையிலோ, இயேசு, எவ்வித விண்ணப்பமும் இன்றி, நயீன் கைம்பெண்ணுக்கு உதவுகிறார்.

இயேசுவின் இந்தப் புதுமை, முன்னறிவிப்பு ஏதுமின்றி வாழ்வில் நாம் பெற்றுள்ள, அல்லது, செய்துள்ள நற்செயல்களைப்பற்றி சிந்திக்க, நம்மை அழைக்கிறது. உதவிகள் தருவதிலும், பெறுவதிலும், பல வகைகள். உதவி தேவை என்று ஒருவரிடம் கூறும்போது, அல்லது விண்ணப்பிக்கும்போது, அந்த உதவியைத் தருவதிலும், பெறுவதிலும் ஒரு தனி நிறைவு கிடைக்கும். ஆனால், அதைவிட மேலான ஒரு நிலையும், நம் வாழ்வில் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
நமது தேவைகளை யாரிடம் சொல்வது, சொன்னாலும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று கவலையிலும், விரக்தியிலும் நாம் இருந்தபோது, நம் நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ நம் மனதை அறிந்தவர்கள் போல், அவர்களாகவே முன்வந்து நம் தேவைகளைத் தீர்த்து வைக்கும்போது, நாம் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறோம், இல்லையா?

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, தானாகவே வந்து குவிந்த உதவிகளை எண்ணி, மகிழ்வும், பெருமையும் அடைந்தோம். அதே நேரம், வெளியூர்கள், வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேர்ந்த உதவிகள் மீது, ஒரு குறிப்பிட்ட தலைவரின் படம் ஒட்டப்பட்டால் மட்டுமே, அந்த உதவிகள் சென்னைக்குள் நுழைய முடியும் என்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல் அடிமைகளின் அத்துமீறிய ஆர்வத்தைக் கண்டு, வெட்கமும், வேதனையும் அடைந்தோம்.
செய்கின்ற உதவிகளைப் படம் பிடித்து, ‘போஸ்டர் ஒட்டி, ‘கட்அவுட் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, நண்பர்களோ, அல்லது, முன்பின் தெரியாதவர்களோ, உதவிகள் செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்போது, ஏதோ அந்த இறைவனே, இவர்கள் வடிவில் வந்து போனது போல் நாம் உணர்ந்ததில்லையா? அந்த நிலைதான், இந்த நயீன் நகரப் புதுமையிலும் உணரப்பட்டது.

கேட்காமலேயே நம்மை வந்து சேரும் நன்மைகளைப் பற்றி சிந்திக்கும்போது, "இந்த அன்புச் சங்கிலியை உடைக்காதீர்கள்" என்ற தலைப்பில் என்னை வந்து சேர்ந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
Love is a chain of love as nature is a chain of life. – Truman Capote

ஆஞ்செலாவுக்கு 70 வயது. கைம்பெண்ணாகிய அவர், தனியாக வாழ்ந்துவந்தார். கார் ஓட்டத்தெரிந்ததால், தன் தேவைகளை, தானே நிறைவேற்றிக்கொண்டார். ஒருநாள், பக்கத்து ஊரில் வாழ்ந்த தன் தோழியைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் கார் திடீரென நின்றுவிட்டது. அவ்வழியே வந்த கார்களை நிறுத்த கைகளை நீட்டினார், ஆஞ்செலா. அவர் பயணித்த பாதை, கள்வர் பயம் நிறைந்த பாதை என்பதால், ஒருவரும் நிறுத்தவில்லை. பொழுதும் சாயும் நேரம் அது. எனவே, ஆஞ்செலாவுக்கு அச்சம் கூடியது.
அவ்வேளையில், எதிர் புறத்திலிருந்து ஒரு லாரி வந்து நின்றது. அந்த லாரியை ஓட்டிவந்த இராபர்ட், கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னை நெருங்கி வர, வர, ஆஞ்செலாவின் அச்சம் கூடியது. பிரச்சனை என்ன என்பதைக் கேட்டு, தனக்குத் தெரிந்த அளவு காரை சரி செய்தார், இராபர்ட். பின்னர், அவர் ஆஞ்செலாவிடம், "இப்போதைக்கு இந்தக் கார் ஓடும். ஆனால், அருகில் உள்ள ஊரில், இதை நீங்கள் முழுமையாகச் சரி செய்துகொள்வது நல்லது" என்று கூறினார்.
தனக்கு உதவிசெய்ய வந்தவர் மீது தான் கொண்டிருந்த முற்சார்பு எண்ணங்களை நினைத்து வெட்கப்பட்டார், ஆஞ்செலா. பின்னர், தன் பர்ஸிலிருந்து, பணம் எடுத்து, அவரிடம் நீட்டினார். இராபர்ட், அதை வாங்க மறுத்ததோடு, "நீங்கள் அடுத்தமுறை தேவையில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு உதவி செய்யுங்கள். அது போதும். இந்த அன்புச் சங்கிலியை உடைக்காதீர்கள்" என்று சொன்னபடி, தன் லாரியை நோக்கிச் சென்றார்.
ஆஞ்செலா, அடுத்த ஊருக்குள் சென்றதும், ஒரு கார் மெக்கானிக் கடையைக் கண்டார். அவரிடம் தன் பிரச்சனையை சொன்னார். காரை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் என்று மெக்கானிக் சொன்னதும், அருகிலிருந்த ஓர் உணவகத்திற்கு, 'காபி' அருந்த சென்றார், ஆஞ்செலா. அந்த உணவகத்தில் நான்சி என்ற ஒரு பெண் மேசைகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். நிறை கர்ப்பிணியான அவர், ஆஞ்செலாவுக்குத் தேவையானவற்றை சிரித்தமுகத்துடன் பரிமாறினார். அவரது உடல்நிலையைப் பற்றி பேச்சு எழுந்தபோது, நான்சி, தனக்கு அடுத்த வாரம் பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு இன்னும் சிறிது பணம் தேவை என்பதால், தான் கூடுதல் நேரம் உழைப்பதாகவும் கூறினார்.
இறுதியில், 'பில்' வந்தபோது, அந்த 'பில்' தொகையுடன் கூடுதலாக ஒரு 500 டாலர்களை ஆஞ்செலா அந்தத் தட்டில் வைத்தார். அந்த பில்லுக்குப் பின்புறம், "நான்சி, இது உன்னுடைய பிரசவத்திற்கு உதவும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒருவர் உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, நான் இந்த உதவியைச் செய்கிறேன். இந்த அன்புச் சங்கிலியை உடைக்கவேண்டாம்" என்று எழுதியிருந்தார், ஆஞ்செலா.
வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற நான்சி, தன் கணவரிடம் நடந்ததைக் கூறினார். தனக்கு உதவி செய்த அந்த வயதான பெண்மணியைப் பற்றி நான்சி பேசப் பேச, லாரி ஓட்டுனரான கணவன் இராபர்ட், மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று ஔவையார் கூறிய எண்ணங்களை, மற்றொரு கோணத்தில் சிந்திக்க, அன்புச் சங்கிலி என்ற எண்ணம் உதவுகிறது. இவ்வுலகம், வெறுப்பில் வெடித்துச் சிதறாமல் கட்டிப்போட்டிருப்பது, அன்புச் சங்கிலி. சங்கிலியில், எந்த வளையம் முக்கியமானது என்ற கேள்வி எழுவதில்லை. ஒவ்வொரு வளையமும், தன் பெயரும் புகழும் மட்டும் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல், ஒன்றிணைந்து செயல்படுவதுதான், சங்கிலியின் இலக்கணம்.

நயீன் நகரக் கைம்பெண், எஞ்சியிருந்த தன் வாழ்நாளெல்லாம் ஆற்றியப் பணிகளை, இப்புதுமையின் இறுதி வரிகள் நமக்குக் கூறுவதாக நினைக்கிறேன். இதோ, அவ்வரிகள்:
லூக்கா 7: 15-17
இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

நிகழ்ந்த புதுமையைக் கண்டு, கூட்டம் அடைந்த அச்சமும், வியப்பும், ஒரு சில நாட்கள் நீடித்திருக்கலாம். ஆனால், அன்றுமுதல், அந்தக் கைம்பெண்ணின் வாழ்வு முழுவதும் அந்த வியப்பில் நிறைந்திருக்கவேண்டும். யூதேயா முழுவதும் இயேசுவின் புகழ் பரவ, அந்தக் கைம்பெண் ஒரு முக்கிய கருவியாக செயல்பட்டிருக்கவேண்டும். அதுமட்டுமல்ல, தன்னால் இவ்வுலகிற்கு முதல்முறை உயிரோடு வந்த தன் மகன், இரண்டாம் முறை, இறைவனால் உயிர் பெற்று, தனக்கு ஒரு கொடையாக வந்து சேர்ந்ததால், அந்த மகனையும் நன்றியுள்ள உள்ளத்துடன் வாழத் தூண்டியிருப்பார், அந்தக் கைம்பெண். இறைமகன் இயேசு, தங்களை, ஓர் அன்பு சங்கிலியின் வளையங்களாக உருவாக்கியுள்ளார் என்பதை உணர்ந்த, அந்தக் கைம்பெண்ணும், அவரது மகனும், இந்த அன்புச் சங்கிலியில் இன்னும் பலரை இணைத்திருப்பர் என்பதை நம்பலாம்.

கேட்காமலேயே நம்மை வந்து சேரும் நன்மைகளைப் பற்றி பேசும்போது, ஒரு நெருடலான எண்ணமும் மனதில் தோன்றுகிறது. அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க, நாள் முழுவதும், வெயிலில் நின்று, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, மாதங்கள் பலவாக, சில சமயங்களில், ஆண்டுகள் பலவாகக் காத்திருந்தும், ஒரு பயனும் இல்லாமல், தினம் தினம் அரசின் கதவுகளைத் தட்டி, தட்டி கையும், மனமும் ஓய்ந்துபோகும் ஏழைகளை, குறிப்பாக, ஏழைக் கைம்பண்களை நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்களில் பலருக்கு, அவர்கள் இறந்தபின் உதவிகள் வந்துசேர்ந்ததாக செய்திகளைக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஏழைகளில் ஒருவர், இந்த நயீன் கைம்பெண்.


மகனை இழந்த கைம்பெண், அவரது அடக்கத்திற்குப் பிறகு தனது வாழ்வையும் முடித்துக்கொள்ளலாம் என்ற விரக்தியில் சென்றதை உணர்ந்த இயேசு, மகனுக்கு உயிர் தந்ததோடு, அந்தக் கைம்பெண்ணுக்கும் மறுவாழ்வு தந்தார். கைம்பெண்களின் மறு வாழ்வு பற்றி மதங்களும், பிற சமூக சேவை நிறுவனங்களும் பேசுகின்றன. ஆனால், நடைமுறையில் இன்றும் கைம்பெண்கள் சந்திக்கும் பல போராட்டங்கள் தீரவில்லை. கணவனை இழந்த இவர்கள், சமுதாயத்தில் தங்கள் மதிப்பையும் இழப்பது நியாயமற்ற செயல். நயீன் கைம்பெண்ணுக்கு மறுவாழ்வு தந்த இயேசு, நாம் வாழும் சமுதாயத்திலும் கைம்பெண்களைப் பேணி காக்கும், மதித்து வாழும் மனதை நமக்கு தர வேண்டுவோம். மரணத்திலிருந்த சிலரை உயிர்ப்பித்த புதுமைகள் வழியாகவும், தன் உயிர்ப்பின் வழியாகவும், சாவுக்கு இறுதி வெற்றி இல்லை என்பதை உணர்த்தும் இறைமகன் இயேசு, மரணத்தைத் தாண்டிய உண்மைகள் பல உள்ளன என்ற தெளிவை நம் அனைவருக்கும் கற்றுத்தருமாறு மன்றாடுவோம்.


No comments:

Post a Comment