18 April, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 16

Job wishes to appeal to God directly

புனித வாரத்தைக் கடந்து வந்துள்ளோம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்றழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்கள் இவை என்பதாலும், நம் மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள், இந்த வாரத்தில் நிகழ்ந்ததாலும், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம்.
அந்த இறுதி நாள்கள் நிகழ்ந்தவற்றில், புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே! இயேசுவின் நண்பர்களில் ஒருவர் காட்டிக்கொடுத்தார். மற்றொருவர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள், ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனதால், பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர், என்று தெரிந்தும், தவறாக, தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே குறிப்பிட்ட நிகழ்வுகளில் புனிதம் எங்காவது தெரிந்ததா? இந்த வாரத்தை, புனித வாரம் என்றழைப்பதற்குப் பதிலாக, துன்ப வாரம், அல்லது, இரத்த வாரம் என்று பெயரிட்டிருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.

முதல் புனித வாரம் இரத்தத்தால் தோய்ந்திருந்ததைப்போல், இவ்வாண்டு, மீண்டும், புனித வாரம், இரத்தத்தில் தோய்ந்த வாரமாக இருந்தது. இவ்வாண்டு, புனித வாரத்தின் முதல் நாள், ஏப்ரல் 9, குருத்தோலை ஞாயிறன்று, எகிப்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவில்கள் இரண்டில், குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்துகொண்டிருந்த வேளையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர், தங்கள் மீது இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததால், வழிபாட்டிற்கு வந்திருந்த 47 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர். எகிப்து நாட்டில், புனித வாரத்தின் முதல் நாள், இரத்தத்தால் எழுதப்பட்டது. புனித வாரத்தின் இறுதிநாள், ஏப்ரல் 15, சனிக்கிழமை, சிரியா நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 120க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பால் 126 உயிர்கள் பலியாயின. இவர்களில் 70 பேர், குழந்தைகள்.  
புனித வாரத்தின் வியாழன், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய நாள்கள், சிறப்பான வழிபாடுகள் கிறிஸ்தவ உலகெங்கும் நடத்தப்பட்டன. இந்த நான்கு நாள் வழிபாடுகளில், புனித வெள்ளியன்று, அனைத்து கோவில்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்திருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். கிறிஸ்தவர் அல்லாதவர்களும், புனித வெள்ளியன்று கிறிஸ்தவக் கோவில்களை நாடிச் செல்வது, அனைவரும் அறிந்த உண்மை. பொதுவாகவே, நாமோ, பிறரோ அனுபவிக்கும் இன்பத்தைவிட, துன்பம் நம்மை கூடுதலாகப் பாதிக்கின்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். எனவே, புனித வெள்ளியன்று நாம் சிந்திக்கும், கல்வாரி மலை, சிலுவைப்பாதை, கிறிஸ்துவின் மரணம் என்ற துன்பகரமான உண்மைகள், மதம் என்ற எல்லையைக் கடந்து, மனித குலத்தின் மீது ஆழமானத் தாக்கங்களை உருவாக்கியுள்ளது என்பதில் வியப்பொன்றும் இல்லையே!

மேலும், இவ்வாண்டு, புனித வெள்ளி சிறப்பிக்கப்பட்ட ஏப்ரல் 14ம் தேதியன்று, சித்திரை மாதத்தின் முதல் நாளும் சிறப்பிக்கப்பட்டது. நம்மில் பலர், இந்த நாளை, தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடினோம். புத்தாண்டும், புனித வெள்ளியும் ஒரே நாளில் இணைந்து வந்தது, இன்பமும், துன்பமும் இணைந்ததுதான் மனித வாழ்க்கை என்பதை நமக்கு உணர்த்தியது. இன்பத்தைவிட, துன்பம் நமக்குள் அதிக பாதிப்புக்களை உருவாக்குகிறது என்பதை மறுக்க இயலாது. இந்த பாதிப்புக்கள், நமக்குள் கேள்விகளை உருவாக்குவதையும், அக்கேள்விகளுக்கு நாம் பல வழிகளில் விடைகள் தேடுவதையும், அனுபவப் பூர்வமாக அறிவோம். துன்பம் ஏன்? என்ற கேள்வி, பெரும்பாலான மனிதர்களின் தொடர் தேடலாக இருந்துள்ளது என்பதை, பின்வரும் நிகழ்வு விவரிக்கின்றது.

எதையும் நுண்ணியமாக ஆய்ந்து, துப்புத் துலக்கும் பாணியில், பல ஆண்டுகளாக, செய்திகளை வழங்கி வந்த பத்திரிக்கையாளர், லீ ஸ்ட்ரோபெல் (Lee Strobel) அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக, ஒரு கிறிஸ்தவ எழுத்தாளராகப் புகழ் பெற்றுள்ளார். ஸ்ட்ரோபெல் அவர்கள், 1998ம் ஆண்டு எழுதிய 'The Case for Christ' என்ற நூல் மிக அதிக அளவு (50 இலட்சம் பிரதிகளுக்கும் மேல்) விற்பனையான நூல்களில் ஒன்றாக இருந்தது. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு, அதே தலைப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் சில நாட்களுக்கு முன், அதாவது, ஏப்ரல் 7ம் தேதி வெளியானது. கிறிஸ்து, உண்மையிலேயே இறைவன்தானா என்ற கேள்விக்கு, ஸ்ட்ரோபெல் அவர்கள், இந்நூலில், விடை தேடிச் செல்கிறார். அதே வேளையில், இந்தத் தேடல் வழியே, கடவுள் நம்பிக்கையற்ற அவர், எவ்விதம் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டார் என்பதையும் விளக்கிச் சொல்கிறார்.

ஸ்ட்ரோபெல் அவர்கள், 2000ம் ஆண்டு, தன் அடுத்த நூலை வெளியிட்டார். இந்நூலின் தலைப்பு: 'The Case for Faith'. கிறிஸ்தவ நம்பிக்கை குறித்து அவர் இந்நூலை எழுதுவதற்கு, பல ஆய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆய்வுக்கென பல கருத்துக் கணிப்புக்களையும் மேற்கொண்டார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, அவர், பல்லாயிரம் கிறிஸ்தவர்களிடம், "நீங்கள் கடவுளிடம் எந்த கேள்வியும் கேட்கலாம் என்ற அனுமதி இருந்தால், கடவுளிடம் என்ன கேட்பீர்கள்?" என்ற கேள்வியை அனுப்பியிருந்தார். அவர்கள் அளித்த பதில்களைத் தொகுத்தபோது, அவற்றில், மிக அதிகமானோர் எழுப்பியிருந்த கேள்வி: "இவ்வுலகில் துன்பம் ஏன் உள்ளது?"

இவ்வுலகில் துன்பம் ஏன்? என் வாழ்வில் துன்பம் ஏன்? என்ற கேள்விகளைச் சந்திக்காத, சிந்திக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தக் கேள்விகளை பெரும்பாலும் கடவுளிடம் கேட்கவேண்டும் என்றும் நம்மில் பலர் எண்ணியிருக்கிறோம். துன்பத்தைக் குறித்தும், துன்பத்திற்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஆய்வு செய்வதற்கென உருவாக்கப்பட்ட நூல், யோபு நூல்.
இந்நூலில் கடந்த 15 வாரங்களாகப் பயணித்துள்ள நாம், இந்நூலின் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது, 14 பிரிவுகளை இதுவரை கடந்து வந்துள்ளோம். இந்த 14 பிரிவுகளில், 4 முதல் 14 முடிய உள்ள, 11 பிரிவுகள், யோபுக்கும், அவரது நண்பர்கள், எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகிய மூவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களாக இருந்தன. இப்பகுதியை, முதல் சுற்று பேச்சு வார்த்தைகள் என்று கூறலாம்.

'முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவுற்றன; ஆயினும், முடிவு எதுவும் எட்டப்படவில்லை' என்ற செய்தியை நாம் அவ்வப்போது வாசித்திருக்கிறோம். அரசுகளிடையில், அரசியல் வட்டாரங்களில் பேச்சு வார்த்தை சரிவர முடியாமல் போவதற்குக் காரணம், அந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வோரது மனநிலை. அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்கனவே தங்களுக்குள் முடிவுகளை எடுத்தபின், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வர். தாங்கள் எடுத்த முடிவை மாற்றிக்கொள்வதற்குரிய திறந்த மனம் அங்கு இருக்காது. பேச்சு வார்த்தைகளின்போது, தங்கள் சொந்த இலாபங்களைத் தேடுவதில், தங்கள் முடிவே சரியானது என்பதை நிரூபிப்பதில் அவர்கள் குறியாய் இருப்பர். எனவே, பொதுவான உண்மைகளை, பொதுமக்களின் நலன்களை அடைவதில் சிக்கல்கள் உருவாகும்.

இத்தகைய பேச்சு வார்த்தைகளே, யோபு நூல் 4ம் பிரிவிலிருந்து 14ம் பிரிவு முடிய இடம் பெற்றன. யோபின் நண்பர்கள் மூவரும், யோபு ஏதோ ஒரு வகையில் குற்றவாளி என்று தங்களுக்குள் முடிவெடுத்து, தங்கள் முடிவை யோபின் மீது திணிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். தான் குற்றமற்றவர் என்பதில் யோபும் மிக உறுதியாக இருந்ததால், அவர்கள் மேற்கொண்ட முதல் சுற்று உரையாடல், எவ்விதப் பயனையும் தரவில்லை.
அம்மூவரோடும் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை நன்கு உணர்ந்த யோபு, இறைவனிடமே தான் பேச விழைவதாகக் கூறுகிறார். இறைவன் தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை, அவரிடமே, நேருக்கு நேர், தன் வழக்கை வாதாட விழைவதாக யோபு கூறும் வார்த்தைகள், ஏலி வீசல் (Elie Weisel) என்ற யூத எழுத்தாளர் உருவாக்கிய ஒரு கதாப்பாத்திரத்தை நினைவுக்குக் கொணர்கின்றன. நாத்சி வதை முகாமில் துன்புற்ற வீசல் அவர்கள், தன் வதைமுகாம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு 'The Town Beyond the Wall' என்ற பெயரில், ஒரு நெடுங்கதையை வெளியிட்டார். அக்கதையில் வரும் கதாப்பாத்திரம், தன் வேதனையின் உச்சியில் கூறும் வார்த்தைகள் இதோ: "நான் கடவுளைப் பழித்துரைக்க விரும்புகிறேன். ஆனால், முடியவில்லை. அவருக்கெதிராக எழுந்து, என் கரங்களை மடக்கி, உயர்த்தி அவரைக் குத்துவதுபோல் நிற்கிறேன். பற்களைக் கடித்து, வெறியுடன் கத்த நினைக்கிறேன். ஆனால், என்னையும் மீறி நான் கத்துவது, கூச்சலிடுவது எல்லாம் செபங்களாக எழுகின்றன". தன் கோபத்தின் உச்சத்திலும் தான் கத்துவது செபமாக ஒலிக்கிறது என்று சொல்லும் அந்தக் கதாப்பாத்திரத்தின் நிலையில் உள்ள யோபு, 13ம் பிரிவில் கூறும் வார்த்தைகள் ஆழமானவை.
யோபு 13: 3,13,15-16,18
நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்; கடவுளோடு வழக்காட விழைகின்றேன்... என்னைப் பேசவிடுங்கள்; எனக்கு எது வந்தாலும் வரட்டும்... அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்; இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன். இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்; ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது... இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்; குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.

யோபு குற்றவாளி என்று அவரது நண்பர்கள் மீண்டும், மீண்டும் இடித்துரைத்தாலும், தான் குற்றமற்றவன் என்பதை யோபு முழுமையாக நம்பினார். தன் குற்றமற்ற நிலையை இறைவனால் மட்டுமே நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையில் யோபு, இறைவனோடு தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். யோபும் அவரது நண்பர்களும் மேற்கொண்ட அடுத்த சுற்று உரையாடலில் நம் தேடல் பயணம் தொடரும்.



No comments:

Post a Comment