02 May, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 18

Job is complaining to God

எவஞ்செலிக்கல் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த போதகரும், எழுத்தாளருமான சார்ல்ஸ் ஸ்விண்டால் (Charles Swindoll) அவர்கள், வானொலியில் தொடர் உரைகள் வழங்கியுள்ளார். இவரது உரைகள், 15 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, உலகின் 2000த்திற்கும் அதிகமான வானொலி நிலையங்கள் வழியே, இலட்சக்கணக்கான மக்களை அடைந்துள்ளன. இவர் வழங்கிய ஒரு வானொலி நிகழ்வில், தன் நண்பர் ஒருவரைப் பற்றி இவர் பகிர்ந்துகொண்டது, இன்றைய நம் விவிலியத் தேடலுக்கு முகவுரையாக அமைகிறது.

ஸ்விண்டால் அவர்களின் நண்பர், அமெரிக்காவின் லாஸ் ஆஞ்செலஸ் நகரில் வாழ்பவர். அவரது இளவயது மகன், ஒரு நாள், தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வேளையில், நீரில் மூழ்கி இறந்தான். மகனின் மரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தந்தை, ஒரு நாள் தன் காரை எடுத்துக்கொண்டு லாஸ் ஆஞ்செலஸ் நகரின் சாலைகளில், பல மணி நேரங்கள், சுற்றிச் சுற்றி வந்தார். அவ்வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை, அவர் தன் நண்பர் ஸ்விண்டாலிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்:
"நான் காரை ஒட்டியபடி, கடவுளைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தேன். என் ஆழ்மனதிலிருந்து எழுந்த துயரம், கோபம், குழப்பம் அனைத்தையும் அவரிடம் கொட்டிக்கொண்டிருந்தேன். வேறு எந்த மனிதப்பிறவியிடமும் நான் அதுவரை சொல்லாத பல வார்த்தைகளை, அன்று காரில் அமர்ந்தபடி துப்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ளிருந்து வந்ததையெல்லாம் வாந்தி எடுத்ததுபோல் கத்தினேன். எனக்கே அது அருவருப்பாக இருந்தது" என்று அந்த நண்பர் கூறியதை, ஸ்விண்டால் அவர்கள், தன் வானொலி உரையில் பகிர்ந்துகொண்டார். அந்தத் தந்தையின் மனநிலையை நாம் புரிந்துகொண்டால், யோபின் நிலையையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

யோபுக்கும், அவரது நண்பர்கள், எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூவருக்கும் நிகழ்ந்த முதல் சுற்று உரையாடல், யோபுக்கு எவ்விதத்திலும் உதவியாகவோ, ஆறுதலாகவோ அமையவில்லை. இரண்டாவது சுற்று உரையாடலை துவக்கி வைத்த எலிப்பாசு, யோபை இன்னும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் என்பதை, சென்ற வாரம் சிந்தித்தோம். அவருக்கு யோபு கூறும் பதில், 16, 17 ஆகிய இரு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"அதற்கு, - அதாவது, எலிப்பாசுவின் கூற்றுக்கு - யோபு உரைத்த மறுமொழி:" (யோபு 16:1) என்று 16ம் பிரிவு ஆரம்பமாகிறது. ஆனால், இப்பிரிவின் முதல் 5 இறைச்சொற்றொடர்கள் மட்டுமே, தன் நண்பருக்கு, இன்னும் சொல்லப்போனால், தன் மூன்று நண்பர்களை நோக்கி யோபு பேசுவதாக அமைந்துள்ளது. மீதி, இப்பிரிவைச் சேர்ந்த 18 இறைச்சொற்றொடர்கள் மற்றும், 17ம் பிரிவின் 16 இறைச்சொற்றொடர்கள் அனைத்தும் இறைவனிடம் நேரடியாகவோ, அல்லது, இறைவனைப் பற்றியோ, அழுது புலம்பும் வரிகளாக அமைந்துள்ளன. இந்த 34 இறைச்சொற்றொடர்களை வாசிக்கும்போது, லாஸ் ஆஞ்செலஸ் நகரில் காரை ஒட்டிக்கொண்டு இறைவனிடம் கத்திக்கொண்டிருந்த தந்தை நம் கண் முன்  வருகிறார்.

வேதனையின் உச்சத்தை அடைந்தவர்கள், அல்லது, துயரத்தின் ஆழத்தில் புதைந்தவர்கள் கூறும் வார்த்தைகளில் தெளிவான, கோர்வையான எண்ணங்களும், கருத்துக்களும் வெளிப்படும் என்று எதிர்பார்ப்பது வீண். அது நியாயமும் அல்ல. கதறியழும் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் பொருத்தமான பதிலிறுப்பு. இத்தகைய மனநிலையோடு நாம், 16, 17 ஆகிய இரு பிரிவுகளில் கூறப்பட்டுள்ள யோபின் வேதனை வரிகளை பகிர்ந்துகொள்ள முயல்வோம்.

16ம் பிரிவின் துவக்கத்தில், தன் நண்பர்களைப் பார்த்து பேசும் யோபு, அவர்கள் மூவரையும், 'புண்படுத்தும் தேற்றுவோர்' (யோபு 16:2) என்று குறிப்பிடுகிறார். ஆறுதல் சொல்ல வந்த மூன்று நண்பர்கள், யோபின் உள்ளத்தைக் கீறி புண்படுத்தும் மொழியில் பேசுகின்றனர். புண்படுத்துதல், தேற்றுதல் என்ற இரு சொற்களும், ஒன்றுக்கு ஒன்று எதிரானவை என்பது நமக்குத் தெரியும். இவ்விரு சொற்களையும் யோபு இணைத்துப் பேசியிருப்பது விநோதமாகத் தெரியலாம். ஆனால், சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இத்தகைய அனுபவங்கள் நமக்கும் ஏற்பட்டுள்ளன என்பதை உணர்வோம். பல வேளைகளில், புண்படுத்துதல், தேற்றுதல் என்ற இரண்டையும் கலந்து மற்றவர்களிடமிருந்து பெற்றுள்ளோம், அல்லது, நாம் பிறருக்குத் தந்துள்ளோம். ஒருவரைத் தேற்றுவதாக எண்ணி, அவர்களை மேலும் புண்படுத்தியிருக்கிறோம். 'தொட்டிலை ஆட்டிக்கொண்டே, குழந்தையைக் கிள்ளிவிடும்' கொடுமை இது.

இவ்வகையில், தன்னைப் புண்படுத்தி வந்த நண்பர்களுடன் பேசுவதில் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்த யோபு, இறைவன் மீது தன் முழு கவனத்தையும் திருப்புகிறார். தன்னை, இத்தகைய நண்பர்கள் மத்தியில் தவிக்கவிட்டு, தூரமாய் போய்விட்ட அந்த இறைவனிடம் அவர் இவ்வாறு முறையிடுகிறார்:
யோபு 16: 6-8
நான் பேசினாலும் என் வலி குறையாது; அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது. உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்; என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர். நீர் என்னை இளைக்கச் செய்தீர்; அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று; என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.

இவ்வரிகளைத் தொடர்ந்து, இறைவன், தன்னை, எவ்வாறெல்லாம் துன்புறுத்துகிறார் என்பதை, 16 மற்றும் 17ம் பிரிவுகளில், யோபு பட்டியலிடுகிறார். அந்த பட்டியலிலிருந்து ஒரு சில வரிகள் இதோ:
யோபு 16: 9-12,14,16; 17: 6
அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான். மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்; ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்; எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர். இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்; நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்; பிடரியைப் பிடித்து என்னை நொறுக்கினார்; என்னையே தம் இலக்காக ஆக்கினார்... முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்; போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்... அழுதழுது என் முகம் சிவந்தது; என் கண்களும் இருண்டு போயின... என் இனத்தார்க்கு அவர் என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்; என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.

யோபு விவரிக்கும் இக்கொடுமைகளைக் கேட்கும்போது, ஒவ்வோர் ஆண்டும், நாம் புனித வாரத்தில் கேட்கும் இறை வார்த்தைகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. புனித வெள்ளியன்று, துன்புறும் ஊழியனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கூறும் வரிகளும், திருப்பாடல் 22ல் நாம் கேட்கும் வரிகளும் யோபின் வேதனை வரிகளை எதிரொலிக்கின்றன:
எசாயா 53: 3
அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை.

திருப்பாடல் 22: 6-7அ
நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்.

காயப்பட்டிருந்த யோபின் உள்ளத்திலிருந்து வெடித்தெழும் இந்த வரிகளில், ஓர் இறைச்சொற்றொடர் நம் கவனத்தை அதிகம் ஈர்க்கிறது:
யோபு 16: 18
மண்ணே! என் குருதியை மறைக்காதே; என் கூக்குரலைப் புதைக்காதே.

'மண்ணே! என் குருதியை மறைக்காதே' என்ற இச்சொற்கள், போலந்து நாட்டின், பெல்செக் (Belzec) என்ற வதைமுகாமின் வாசலில் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வதை முகாமில் அநீதமாக, கொடூரமாகச் சிந்தப்பட்ட இரத்தத்தை மனிதர்கள் மறந்தாலும், இந்த மண் மறக்கக்கூடாது என்ற வேண்டுகோள் இது. மாசற்றோரின் இரத்தத்தை இந்த பூமி மறந்து போகாது என்ற எச்சரிக்கையாகவும் இதைக் கருதலாம்.

தன் மீது சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் மறக்காமல் இருப்பதோடு, அந்த இரத்த்த்தின் சார்பாக, இறைவனிடம் முறையிடவும் செய்கிறது, இந்த பூமி. இதை நாம் தொடக்க நூலில் காண்கிறோம். முதல்முறையாக, ஒரு மனிதன், மற்றொரு மனிதனால் கொலை செய்யப்பட்டபோது, மண்ணில் சிந்தப்பட்ட இரத்தம், இறைவனிடம் நேரடியாக முறையிட்டதை, தொடக்க நூல் 4ம் பிரிவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
தொடக்க நூல் 4: 8-11
காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான். அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்..." என்றார்.

உடன்பிறந்தவர் மீது காயின் வளர்த்துக்கொண்ட வெறுப்பினால், ஆபேலின் இரத்தம் இந்த மண்ணில் முதல் முறை விழுந்தது. அத்தகைய வெறுப்பு இன்றும் நீடிப்பதால், மாசற்றவர்களின் இரத்தம், இன்றும், இந்த மண்ணில் விழுந்தவண்ணம் உள்ளது. இந்த இரத்தத் துளிகள் அனைத்தும் இறைவன் முன் முறையிடுகின்றன என்பதை, இன்றைய காயின்கள் உணரவேண்டும். சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும், மனிதகுலம் பதில் சொல்லவேண்டும் என்பதை, நாம் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம்.


No comments:

Post a Comment