05 December, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 48


Ashvasan Foundation – Feeding poor senior ladies

பாசமுள்ள பார்வையில் - வாழ்வின் அழகைக் காட்டும் அளவுகோல்

செல்வம் மிகுந்த ஒரு பெண், மனநல மருத்துவரைத் தேடிச் சென்றார். தன் வாழ்வு மகிழ்வற்றதாக மாறிவிட்டதென மருத்துவரிடம் கூறிய அப்பெண், மகிழ்வைக் கண்டடையும் வழிகளை அறிய விரும்பினார். தன் அலுவலகத்தைக் கூட்டி, சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணை, மனநல மருத்துவர் அழைத்தார். அப்பெண் வந்ததும், மருத்துவர், செல்வம் மிகுந்த பெண்ணிடம், "இவர் பெயர் மரியா. இவர் தன் வாழ்வில் மகிழ்வை எவ்விதம் கண்டடைந்தார் என்பதைச் சொல்வார். தயவுசெய்து கேளுங்கள்" என்று கூறினார்.
மரியா, பேசத் துவங்கினார்: "என்னுடைய கணவர் மலேரியா நோயினால் இறந்தார். மூன்று மாதங்கள் சென்று, என் ஒரே மகன் ஒரு கார் விபத்தில் இறந்தார். எனக்கென யாருமில்லை, எதுவுமில்லை என்று உணர்ந்தேன். உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவ்வப்போது எழுந்தது. ஒருநாள் நான் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, ஒரு குட்டிப்பூனை தெருவில் என்னைப் பின்தொடர்ந்து வந்தது. வெளியே அதிகக் குளிராய் இருந்ததால், அந்தப் பூனையை வீட்டிற்குள் வர அனுமதித்தேன். பாலை ஒரு தட்டில் ஊற்றி, அதற்கு முன் வைத்தேன். அதை முற்றிலும் குடித்து முடித்த பூனைக் குட்டி, என் கால்களில் தன் உடலைத் தேய்த்தது. அதைக் கண்டு, நான் சிரித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன், நான் சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டன என்பதை... அவ்வேளையில், எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. இந்தக் குட்டிப்பூனைக்கு நான் செய்த உதவி, இதுவரை என்னிடமிருந்து காணாமற் போயிருந்த புன்னகையை மீண்டும் கொணர்ந்ததே, இதேபோல், மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால், நான் தொலைத்துவிட்ட மகிழ்வை மீண்டும் கண்டடைய முடியுமே என்று சிந்தித்தேன்.
அடுத்தநாள் காலை, கொஞ்சம் பலகாரம் செய்து, என் வீட்டுக்கு அருகில் பல நாட்களாய் படுத்த படுக்கையாய் இருந்த ஒருவருக்கு அதை எடுத்துச் சென்றேன். கண்களில் கண்ணீர் வழிய, அவர் தந்த புன்னகை, என்னை மீண்டும் மகிழ்வில் நிறைத்தது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்யத் துவங்கினேன். அவர்களிடம் நான் கண்ட மகிழ்ச்சி, என்னையும் பற்றிக்கொண்டது. இன்று, என்னைவிட, மகிழ்வோடு உறங்கச் செல்லும் ஒருவர் இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை" என்று மரியா பேசி முடித்தார்.
மரியாவின் கதையைக் கேட்ட செல்வம் மிகுந்த பெண், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, மரியாவின் கைகளைப் பற்றி, நன்றி சொன்னார். மருத்துவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, புன்னகையோடு அவ்விடம் விட்டுச் சென்றார்.
நீ எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறாய் என்பது வாழ்வின் அழகை நிர்ணயிக்கப் போவதில்லை; உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்வாய் உள்ளனர் என்பதே வாழ்வின் அழகைக் காட்டும் அளவுகோல்.

Wheat Field and Bread

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 48

யோபு நூலில் நாம் மேற்கொண்ட தேடல்களின் ஒரு பகுதியாக, கடந்த சில வாரங்கள், துன்பம் ஏன், மாசற்றவர் துன்புறுவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை தேடி வருகிறோம். துன்பங்கள் சொல்லித்தரக்கூடிய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்கிறோம். இன்று நாம் மேற்கொள்ளும் அந்த முயற்சியில், யூத மத குரு, Yitzchak Breitowitz அவர்கள், கூறியுள்ள சில கருத்துக்கள் நம்மை வழிநடத்துகின்றன.
உலகின் பழம்பெரும் மதங்களிலும், கலாச்சாரங்களிலும், ஆழமான உண்மைகளை விளக்க, சிறுகதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். உவமைகளாக வடிவம் பெற்றுள்ள இக்கதைகளை, யூத பாரம்பரியத்தில், மாஷால் (Mashal) என்று கூறுவர். துன்பங்கள் ஏன் என்ற முக்கியமான கேள்விக்கு விளக்கம் அளிக்கும்வகையில் கூறப்பட்டுள்ள ஒரு மாஷால் இது:

தான் உண்ணும் ரொட்டி எங்கிருந்து வருகிறது என்பதை அறிய விழைந்த சிறுவன் ஒருவனை, அருகிலிருந்த ஒரு வயல்வெளிக்கு  அழைத்துச் சென்றனர், அவனது பெற்றோர். அந்த வயலில் கோதுமைக் கதிர்கள் அழகாக வளர்ந்து, தென்றலில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பொன்னிறத்தில், அசைந்தாடிய அக்கதிர்களை சிறுவன் கண்டு மகிழ்ந்துகொண்டிருந்த வேளையில், தொழிலாளிகள் அவ்வயலில் அரிவாளுடன் நுழைந்தனர். வளர்ந்திருந்த கதிர்களை வெட்டி, சாய்த்தனர். இதைக்கண்ட சிறுவன் வேதனையடைந்தான்.
அவனது பெற்றோர், வயலுக்கருகே இருந்த ஓர் ஆலைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். அறுவடை செய்யப்பட்ட கதிர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கோதுமை மணிகள், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட சிறுவன், மீண்டும் மகிழ்ந்தான். சிறிது நேரத்தில், அக்கோதுமை மணிகள் அருகிலிருந்த மாவரைக்கும் இயந்திரத்தில் போடப்பட்டு, மாவாக வெளியேறியது. இதைக்கண்ட சிறுவன் மீண்டும் வேதனையடைந்தான். அந்த மாவில் நீர் சேர்த்து, ரொட்டி வடிவில் அவை உருவாக்கப்பட்டபோது, சிறுவன் மகிழ்ந்தான். ஆனால், அந்த வடிவங்கள், நெருப்பு சூழ்ந்த அடுப்பில் வைக்கப்பட்டபோது மீண்டும் துன்பமடைந்தான். சிறிது நேரம் சென்று, அடுப்பிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட மாவுத் துண்டுகள், ரொட்டியாக மாறியிருந்தது கண்டு சிறுவன் மகிழ்ந்தான்.

கோதுமைக் கதிர்கள், கோதுமை மணிகளாகவும், அந்த மணிகள், மாவாகவும், பின்னர் ரொட்டியாகவும் மாறிய ஒவ்வொரு உருமாற்றத்திலும் ஒன்று அழிவதன் வழியே, மற்றொன்று உருவானது. தென்றலில் அசைந்தாடிக் கொண்டிருந்த கோதுமைக் கதிர்கள், அதுவே ஆனந்தம் என்றெண்ணி, அதே நிலையில் தங்க ஆசைப்பட்டால், அக்கதிர்கள் பயனற்றுப் போய்விடும். ஒவ்வொன்றின் அழிவு, வேதனை தந்தாலும், அதற்கு அடுத்த உயர்நிலை உருவானபோது, மகிழ்வும் உருவானது. அதேவண்ணம், வாழ்வில் நிகழ்வன, வேதனையைத் தந்தாலும், அவற்றின் வழியே உயர்வான உண்மைகள் வெளியாகின்றன. யூத மத குரு, Yitzchak Breitowitz அவர்கள், இந்த உவமையைப் பயன்படுத்தி, யோபு நூலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

யோபு நூலின் துவக்கத்தில் நாம் சந்திக்கும் யோபு, தான், தனது குடும்பம், தனது செல்வம் என்ற குறுகிய வட்டங்களில் வாழ்ந்தார். காரணம் ஏதுமின்றி, அந்த வட்டங்கள் அழிந்தபோது, யோபு நொறுங்கிப்போனார். தன்னைச் சுற்றி யோபு உருவாக்கிக்கொண்ட குறுகிய வட்டங்களை உடைத்து, அந்த அழிவுகளின் வழியே, அவருக்கு பரந்துவிரிந்த கண்ணோட்டத்தை உருவாக்கினார் இறைவன். தன்னைச்சுற்றி யோபு அமைத்துக்கொண்ட குறுகிய உலகிலிருந்து அவருக்கு விடுதலை தரும் நோக்கத்தில், இறைவன், பரந்துவிரிந்த தன் படைப்பு முழுவதையும் சுற்றி ஒரு பயணமாக அவரை அழைத்துச் சென்றார். இதையே, யோபு நூலின் இறுதிப்பகுதியில் நாம் காண்கிறோம். யோபு நூலின் இறுதிப் பிரிவுகளில், இறைவனுக்கும், யோபுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு, உரையாடல் இவற்றால் உருவான விளைவுகளைப்பற்றி பேசும் குரு Breitowitz அவர்கள், அழகான ஒரு கருத்தை முன்வைக்கிறார்:
"யோபு தன் துன்பத்திற்கு விளக்கம் தேடி கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தார். தான் யோபுடன் இருக்கிறேன் என்பது ஒன்றே, கடவுள் அவருக்குத் தந்த விளக்கம். கடவுள், யோபின் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை; அவர், அந்த கேள்விகளே இல்லாமல் செய்துவிட்டார். யோபு கடவுளிடமிருந்து ஒரு பதிலைத் தேடினார்; ஆனால், இறுதியில், யோபு கடவுளையேக் கண்டடைந்தார்."

வாழ்வில் பல உண்மைகள் மறைவாயிருக்கும்; பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காது. ஆனால், உண்மையைத் தேடும் எவரும், இறுதியில் கடவுளைக் காண்பது உறுதி. அவ்வாறு கண்டுபிடித்தவர்கள், பொருள் நிறைந்த வாழ்வுப்பயணத்தை மேற்கொள்வதை நாம் அறிவோம். இறைவன் உடன் வருகிறார் என்பதை உணர்ந்தவர்களின் வாழ்வுப்பயணம் இனிதாக அமைவதை, குரு Breitowitz அவர்கள், ஓர் அழகிய உருவகத்துடன் விளக்குகிறார்.
ஓட்டுனர் ஒருவர் ஓட்டிச்செல்லும் கார் ஒன்றில் பயணிக்கும் அனுபவத்தை கற்பனை செய்துகொள்வோம். பயண நேரத்தில், ஓட்டுனரை நம்பி, நம் வாழ்வை ஒப்படைக்கிறோம். இந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமானது, வலுவானது என்பதைப் பொருத்து, நம் பயணம், இனிமையாகவோ, கசப்பாகவோ மாறக்கூடும்.
பொதுவாக, காரில் பயணம் செய்யும்போது, குழந்தைகள் எளிதில் உறங்கிவிடுவர். காரணம், அக்குழந்தைகள், ஓட்டுனரைப்பற்றியோ, காரின் தரம் குறித்தோ கவலை ஏதுமின்றி பயணம் செய்கின்றன. ஆனால், அதே காரில், ஓட்டுனர் அருகே அமர்ந்து செல்லும் சிலருக்கு, பயணம் முழுவதும் பதைபதைப்பாக இருக்கும். அதிலும், ஓட்டுனர் அருகே அமர்ந்திருப்பவருக்கு கார் ஓட்டத் தெரிந்திருந்தாலோ, ஓடிக்கொண்டிருக்கும் காரைப் பற்றிய அறிவு அதிகம் இருந்தாலோ, பயணம் இனிதாக அமையாது. 'மெதுவாப் போங்க' 'முன்னே வரும் லாரியைக் கவனித்து ஓட்டுங்க' என்று, ஓட்டுனருக்கு, நிமிடத்திற்கு ஒரு கட்டளை கொடுத்த வண்ணம் இவர்கள் செல்வர். காரைப்பற்றிய விவரங்கள் அதிகம் தெரிந்திருப்பதால், எந்த ஒரு புது சப்தமும், காரில் எதோ கோளாறு ஆகிவிட்டதைப்போன்ற உணர்வைத் தரும்.
வாழ்க்கைப் பயணத்தில், இறைவன் ஓட்டுனராக இருக்கும்போது, அவரை நம்பி அமர்ந்திருந்தால், நிம்மதியாகப் பயணம் செய்யமுடியும். வாழ்வை எவ்விதம் ஓட்டிச்செல்வது என்பது, நமக்குத் தெரியும் என்று நினைக்க ஆரம்பித்தால், முள் இருக்கையின் மீது அமர்ந்து செல்வதுபோல் பயணம் அமைந்துவிடும்.

வாழ்வில் நாம் விரும்பிக் கேட்பதை இறைவன் வழங்காமல் போகலாம்; விரும்பாததை வழங்கலாம். ஆனால், இத்தகைய இக்கட்டானச் சூழல்களில், வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை, நெளிவு, சுளிவுகளைச் சமாளிக்கும் திறனை இறைவன் வழங்குகிறார். வாழ்வில் வெற்றிச் சிகரங்களைத் தொட்டுவிட்டு, பின்னர், வேதனையின் ஆழத்தில் புதையுண்ட ஒரு புகழ்பெற்ற நடிகரைப் பற்றி, குரு Breitowitz அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
'Superman' திரைப்படங்களில் நாயகனாக நடித்து, உலகப் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் ரீவ் (Christopher Reeve) என்ற நடிகர், 43வது வயதில், குதிரை சவாரி செய்தபோது நிகழ்ந்த ஒரு விபத்தால், தண்டுவடத்தில் அடிபட்டு, தன் எஞ்சிய ஒன்பது ஆண்டுகளை சக்கர நாற்காலியில் செலவிட்டார்.
இந்த விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அவர் தற்கொலை செய்துகொள்ள விரும்பினார். ஆனால், தற்கொலை செய்துகொள்ளவும் இயலாதவண்ணம், அவர், கழுத்துக்குக் கீழ், முற்றிலுமாகச் செயலற்று கிடந்தார். அவரது மனைவி, டானா (Dana) அவர்கள், ஒருநாள் அவரிடம், "நீங்கள் சாக விரும்பினால், நான் உதவி செய்கிறேன். ஆனால், அதற்குமுன், நாம் இருவரும் அதைப்பற்றி தெளிவாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்" என்று கூறினார். அவ்வண்ணமே, இருவரும் ஓர் இரவு முழுவதும் அதைப்பற்றிப் பேசினர். இறுதியில், டானா அவர்கள் கிறிஸ்டோபரிடம், "உங்கள் வாழ்வு அர்த்தம் நிறைந்ததாய் உள்ளது. உங்கள் வாழ்வுக்கு குறிக்கோள் உள்ளது. ஆயிரமாயிரம் பேருக்கு நீங்கள் உந்து சக்தியாக இருக்கமுடியும்" என்று அழுத்தந்திருத்தமாய் கூறி, அவரை நம்ப வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 9 ஆண்டுகள், கிறிஸ்டோபர், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம், ஆயிரமாயிரம் உள்ளங்களுக்கு, வாழ்வில், பிடிப்பை உருவாக்கினார். 43வது வயதில் சக்கர நாற்காலியில் வாழ்வைத் துவக்கிய கிறிஸ்டோபர் ரீவ் அவர்கள், 52வது வயதில் காலமானார். தன் வாழ்வின் இறுதி நேரங்களில் அவர் கூறியது இதுதான்:
"நான் படும் வேதனையை இவ்வுலகில் வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது. ஆயினும், பழைய கிறிஸ்டோபரைவிட, வேதனை உருவாக்கியுள்ள தற்போதைய கிறிஸ்டோபரை எனக்கு அதிகம் பிடிக்கும். பழைய கிறிஸ்டோபர், தன் புகழைத் தேடிச் சென்றவன். தற்போதைய கிறிஸ்டோபர், மற்றவர் மீது பரிவும், அக்கறையும் கொண்டவன். எத்தனையோ பேருக்கு நம்பிக்கை தந்தவன், உதவிகள் செய்தவன்" என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ரீவ் அவர்கள், சக்கர நாற்காலியில் தன்னைச் சிறைப்படுத்திய அந்த விபத்தினால் உள்ளம் நொறுங்கி, தன்னையே அழித்துக்கொள்ளும் முடிவெடுப்பதற்குப் பதில், அதே வேதனையின் விளைவாக, அடுத்தவருக்கு உதவிகள் செய்ய முடிவெடுத்தது, துன்பத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
நாத்சி வதை முகாமில் வேதனையின் பல கொடூர வடிவங்களைக் கண்ட விக்டர் பிராங்கல் (Viktor Frankl) என்ற மனநல மருத்துவர், "அர்த்தத்திற்காக மனிதனின் தேடல்" (Man's Search for Meaning) என்ற நூலில் கூறியுள்ள சில கருத்துக்கள் இதோ:
"தியாகம் என்ற அர்த்தத்தைக் கண்டுகொள்ளும்போது, வேதனை, வேதனையாக மட்டுமே இருப்பது நின்றுபோகிறது"
"என்னிடமுள்ள ஒரே ஒரு விடயத்தை யாராலும் பறித்துவிட முடியாது. அதாவது, எனக்கு நிகழ்வனவற்றிற்கு நான் எவ்வாறு பதிலிருக்கிறேன் என்ற என் சுதந்திரத்தை யாராலும் பறித்துச் செல்ல முடியாது."


No comments:

Post a Comment