22 May, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1

Where Do We Go Now?

இமயமாகும் இளமை - "இப்போது நாங்கள் எங்கே செல்வது?"

"இப்போது நாங்கள் எங்கே செல்வது?" (w halla' la wayn / Where Do We Go Now?) என்பது 2011ம் ஆண்டு லெபனான் நாட்டில் உருவான ஒரு திரைப்படம். பல திரைப்பட விழாக்களில் பரிசுகளைப் பெற்ற திரைப்படம் இது. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள உறவுப் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஒரு கிராமத்தில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் எவ்வித பாகுபாடும், கருத்து வேறுபாடும் இன்றி மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். நாளடைவில், உலகின் வேறு பகுதிகளில் நடைபெறும் மதக்கலவரங்கள் பற்றியச் செய்திகள், இந்த கிராமத்து மக்களையும் பாதிக்கின்றன. பாகுபாடுகள் எழுகின்றன. இந்தப் பாகுபாடுகளை விரும்பாத அந்த கிராமத்து அன்னையர், ஊரில் ஒற்றுமை நிலவ, பாடுபடுகின்றனர். இளையோரும் ஆதரவு தருகின்றனர். இந்தச் சூழலில், அந்த கிராமத்து இளைஞன் ஒருவர் பக்கத்து ஊருக்குச் ஏதோ ஒரு வேலையாகச் செல்கிறார். அங்கு நடந்த ஒரு மதக்கலவரத்தில் அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது உடல் கிராமத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.
தங்கள் நண்பனின் உடலைப் புதைப்பதற்கு அந்த கிராமத்து இளையோர் செல்கின்றனர். இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடுகளின்றி, இணைந்துசெல்லும் அந்த இளையோர் கூட்டம், கல்லறையை அடைகிறது. அங்கு கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் தனித் தனி கல்லறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அருகருகே இந்தக் கல்லறைகள் இருந்தாலும், இடையே செல்லும் பாதை இரு கல்லறைகளையும் பிரித்துக் காட்டுகிறது. அந்தப் பாதையில் தங்கள் நண்பனின் உடலைச் சுமந்து செல்லும் இளையோர், திடீரெனத் திரும்பி, இப்போது நாங்கள் எங்கே செல்வது? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தக் கேள்வியைத் திரை அரங்கத்தில் உள்ளவர்களை நோக்கிக் கேட்பதுபோல் இக்காட்சி பதிவாகியுள்ளது. இந்தக் கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.
பிறந்தது முதல் இறக்கும் வரை.... ஏன்? இறந்த பின்னரும் பாகுபாடுகளால் இவ்வுலகைக் கூறுபோட்டு வைத்திருக்கிறீர்களே... இப்போது நாங்கள் எங்கே செல்வது என்று இளையோர் நம்மைக் கேட்கின்றனர்.


Jesus feeding 5000

புதுமைகள் அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1

யோவான் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள புதுமைகள் வரிசையில், நான்காம் புதுமையில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது. இந்த நற்செய்தியின் 6ம் பிரிவில், இயேசு 5000 பேருக்கு அப்பம் பகிர்ந்தளித்த புதுமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு, தன் பணி வாழ்வில் ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. இவற்றோடு, கன்னியிடமிருந்து பிறந்தது, உயிர்த்தெழுந்தது, விண்ணகம் சென்றது போன்ற, இன்னும் சில புதுமைகளை இணைத்து, இயேசு ஆற்றியப் புதுமைகள் 40 என்று ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர். எந்த ஒரு நற்செய்தியாளரும், அனைத்துப் புதுமைகளையும் ஒரே நூலில் தொகுத்துத் தரவில்லை.
ஒரு சில புதுமைகள், ஒரு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன. எடுத்துக்காட்டாக, இயேசு கானா திருமணத்தில் தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியப் புதுமை, யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளது (யோவான் 2:1-11). அதேபோல், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பிக்கும் புதுமை, லூக்கா நற்செய்தியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 7:11-17). ஒரே ஒரு புதுமை மட்டுமே, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. அதுதான், இயேசு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்தப் புதுமை - (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).

நான்கு நற்செய்திகளும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் எழுதப்பட்டன என்பதை நாம் அறிவோம். எனவே, சீடர்கள், தங்கள் நினைவுகளில் பதிந்திருந்த நிகழ்வுகளையும், இயேசுவின் போதனைகளையும் பதிவு செய்ததே, நான்கு நற்செய்திகளாக நம்மை அடைந்துள்ளன. எந்த ஒரு நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளதோ, அந்த நிகழ்வு, சீடர்களின் நினைவுகளில் மிக ஆழமாகப் பதிந்த நிகழ்வாக, இருந்திருக்கவேண்டும் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. இயேசு 5000 பேருக்கு உணவளித்த புதுமை, சீடர்களின் நினைவுகளில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்றால், இப்புதுமையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும் நான்கு நற்செய்திகளிலும் மாற்றம் ஏதுமின்றி, ஒரே அளவு எண்ணிக்கைகளாக உள்ளன. பெண்களும் சிறுவர், சிறுமியரும் நீங்கலாக இப்புதுமையால் பயனடைந்த ஆண்களின் எண்ணிக்கை 5000; இப்புதுமையைத் துவக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டவை, ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்; அனைவரும் வயிறார உண்டபின், மீதமிருந்த துண்டுகள், சேகரிக்கப்பட்டது, பன்னிரண்டு கூடைகளில்... என்று, நான்கு நற்செய்திகளும் ஒரே எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளது, வியப்பைத் தருகிறது.

யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இப்புதுமைக்கு செவிமடுப்போம்.
யோவான் நற்செய்தி 6:3-13

இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார். இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள் என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இந்தப் புதுமையின் அறிமுக வரிகள் முதலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. (யோவான் 6:3-4)
இந்தப் புதுமை நிகழ்ந்த இடத்தைப்பற்றி குறிப்பிடுகையில், மற்ற மூன்று நற்செய்தியாளர்களும் அவ்விடத்தை பாலைநிலம் என்று குறிப்பிட்டுள்ளனர். யோவான் மட்டுமே, "இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்" என்று மிகத் தெளிவாகக் கூறிப்பிட்டுள்ளார். இச்சொற்களை வாசிக்கும்போது, நம் நினைவு, மத்தேயு நற்செய்தி 5ம் பிரிவின் அறிமுக வரிகளுக்குச் செல்கின்றது.
மத்தேயு 5:1
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை...
என்று, மலைப்பொழிவின் அறிமுக வரிகள் அமைந்துள்ளன. மக்களின் ஆன்மீகப் பசியைத் தீர்க்க, மலைமீது அமர்ந்து போதித்த இயேசுவை, மத்தேயு குறிப்பிட்டுள்ளார். இயேசு, மக்களின் உடல் பசியைத் தீர்த்த புதுமையை அறிமுகம் செய்யும் வேளையில், நற்செய்தியாளர் யோவான், ஏறத்தாழ அதேபோன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த அறிமுக வரிகளில், மலைப்பகுதி, பாஸ்கா விழா இரண்டையும் நற்செய்தியாளர் யோவான் இணைத்துப் பேசியிருப்பது, நம்மை பழைய ஏற்பாட்டின் பாஸ்கா விழாவுக்கும், சீனாய் மலைக்கும் அழைத்துச் செல்கின்றது. இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து மோசே வெளியே அழைத்து வந்த நிகழ்வுதான், அம்மக்கள் நடுவே பாஸ்கா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எகிப்தைவிட்டு வெளியேறி, செங்கடலைக் கடந்தபின், மோசே, இஸ்ரயேல் மக்களை, சீனாய் மலையடிவாரத்திற்கு அழைத்துச் செல்கிறார். (விடுதலைப்பயணம் 19) அங்கு, அவர் மலைமீது ஏறிச்சென்று இறைவனைச் சந்திக்கிறார். இந்த நிகழ்வுகளை, நற்செய்தியாளர் யோவான், இவ்வறிமுக வரிகள் வழியே நம் உள்ளங்களில் விதைக்கிறார்.

பாஸ்கா விழா நெருங்கிவந்த வேளையில், மலைமீது ஏறி அமர்ந்த இயேசு, புதிய மோசே என்பதை நற்செய்தியாளர் யோவான் மறைமுகமாகக் கூறுகிறார். பசியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மோசேக்கும், இறைவனுக்கும் எதிராக முணுமுணுத்தபோது, வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தார் இறைவன். (விடுதலைப்பயணம் 16) தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு உணவளிப்பதைப் பற்றி இயேசு முதலில் சிந்திக்கிறார் என்று இப்புதுமையில் கூறப்பட்டுள்ளது. புதிய மோசேயான இயேசு, அம்மக்களுக்கு உணவளிக்க, மீண்டும் வானத்திலிருந்து மன்னாவைக் கொணர்ந்திருக்க முடியும். ஆனால், அவர், வேறு வழிகளில் அம்மக்களுக்கு உணவளிக்க விரும்பினார். அது, புதுமையாக மாறியது.

இந்தப் புதுமையின் அறிமுக வரிகளைத் தொடர்ந்து, இயேசுவுக்கும், பிலிப்புக்கும் இடையே நிகழும் ஓர் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு நற்செய்திகளிலும், யோவான் நற்செய்தியில் மட்டுமே திருத்தூதர் பிலிப்பைக் குறித்த நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஏனைய மூன்று நற்செய்திகளில் அவரது பெயர், பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் என்ற அளவில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

"மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, 'என்னைப் பின்தொடர்ந்து வா' எனக் கூறினார்" (யோவான் 1:43) என்று யோவான், பிலிப்பை அறிமுகம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, பிலிப்பு, நத்தனியேலை, இயேசுவிடம் அழைத்து வருகிறார். (யோவான் 1:45-46). அதைத் தொடர்ந்து, 6ம் பிரிவில், நாம் மீண்டும் பிலிப்பை சந்திக்கிறோம்.

மக்கள் கூட்டத்தைக் கண்டதும், அவர்களுக்கு உணவளிப்பது குறித்து, இயேசு பிலிப்பிடம் பேசுகிறார். இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். (யோவான் 6:5) இதைத் தொடர்ந்து, யோவான் பதிவு செய்துள்ள ஓர் இறைவாக்கியம் புதிரான எண்ணங்களைத் தருகின்றன. தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். (யோவான் 6:6) என்பதை யோவான் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

கானா திருமணத்தில் கலந்துகொள்ள "இயேசுவும் அவருடைய சீடரும் அழைப்புப் பெற்றிருந்தனர்" (யோவான் 2:2) என்று கூறப்பட்டிருப்பதால், பிலிப்பும் அங்கிருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அத்திருமண விருந்தில் இயேசு சாதாரண நீரிலிருந்து தரமான திராட்சை இரசத்தை உருவாக்கிய புதுமையை நேரில் கண்டவர் பிலிப்பு. எனவே, இந்தச் சூழலில், அவரது நம்பிக்கை எவ்வளவு தூரம் வளர்ந்திருந்தது என்பதை 'சோதிப்பதற்காக' இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டார் என்று ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். பிலிப்பின் கவனம் எல்லாம், மக்கள் கூட்டத்தின் மீதே இருந்தது. அவரது கவனம், சிறிது நேரம், தன்னருகில் இருந்த இயேசுவின் பக்கம் திரும்பியிருந்தால், அவரது பதில், "நீர் விரும்பினால், இம்மக்களுக்கு உணவளிக்க முடியும்" என்று சொல்லியிருக்கக்கூடும்.

பிலிப்பு மிகவும் எதார்த்தமாக, நடைமுறைக்கு ஏற்றவாறு பதில் அளிக்கிறார்: "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு தூண்டும் கிடைக்காதே" என்றார். (யோவான் 6:7) பிலிப்பின் மனதில், 'இயலாது' என்ற எண்ணமே ஆழப்பதிந்திருந்ததால், இத்தகைய பதில் அவரிடமிருந்து எழுந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை நாம் அடுத்த தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment