24 July, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 3


Albert Schweitzer - Alsatian Medical Missionary

இமயமாகும் இளமை - நோயற்ற தலைமுறையை உருவாக்க...

இறையியலிலும், இசையிலும் மேதையாக விளங்கிய இளம் பேராசிரியர் Albert Schweitzer அவர்கள், தன் 30வது வயதில், பேராசிரியர் பணியிலிருந்து விலகி, ஆப்ரிக்க மக்கள் நடுவே உழைப்பதற்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார். அம்மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இறையியலிலும், இசையிலும் பல சிகரங்களை அடைந்திருந்த ஆல்பர்ட் அவர்கள், அச்சிகரங்களிலிருந்து இறங்கி, ஆப்ரிக்கக் கண்டத்தில், ஏனையோர் செல்லத் தயங்கிய பகுதியொன்றில், வறியோருக்கென ஒரு மருத்துவமனையை எழுப்பி, தன் பணிகளைத் துவக்கினார்.
தன் மருத்துவப்பணியை, மறைப்பணி போல் செய்துவந்த ஆல்பர்ட் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் எவ்விதம் மருத்துவராக மாறி, நம்மை நாமே பேணிக்காக்க முடியும் என்பதை இவ்வாறு கூறியுள்ளார்: "ஒவ்வொரு நோயாளியும் தனக்குள்ளே ஒரு மருத்துவராக விளங்குகிறார். இந்த உண்மையைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், நோயாளிகள், மருத்துவர்களான எங்களைத் தேடி வருகின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மருத்துவரைச் செயலாற்ற வைக்கும் மருத்துவரே, உண்மையில் திறமையான மருத்துவர்" என்று Albert Schweitzer அவர்கள் கூறியுள்ள கருத்து, மிக ஆழ்ந்த பொருள் கொண்டது.
இக்கூற்றின் முழுப்பொருளை, இளையோர் நன்கு உணர்ந்து, தங்கள் நலனைத் தாங்களே பராமரித்துக்கொள்ளும் பக்குவம் பெற்றால், வருங்காலம், நோயற்ற தலைமுறையாக உருவாகும்.

Why Suffering?

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் பகுதி 3

பார்வையற்ற ஒருவரைக் காணும் சீடர்கள், இயேசுவிடம் எழுப்பிய ஒரு கேள்வி, நம் விவிலியத் தேடலை சென்ற வாரம் வழிநடத்தியது. ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” - யோவான் 9:2 என்ற அக்கேள்வியில் பொதிந்துள்ள ஒரு சில உண்மைகளை சென்ற வாரம் சிந்தித்தோம். பாவம், தண்டனை, துன்பம், கடவுள் ஆகிய உண்மைகளை ஒன்றோடொன்று பிணைத்து விடுவதால், நம் மத நம்பிக்கை தடுமாற்றம் அடைகிறது. நாம் உருவாக்கும் இச்சங்கிலித் தொடரைப் புரிந்துகொள்ள, ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) என்ற யூத மத குரு எழுதிய ஒரு நூல் உதவியாக இருக்கும். அந்நூலின் உதவியுடன் நம் தேடல் பயணத்தை இன்று தொடர்கிறோம்.

குஷ்னர் அவர்கள், 1981ம் ஆண்டு வெளியிட்ட “When Bad Things Happen to Good People”, அதாவது, நல்லவர்களுக்கு பொல்லாதவை நிகழும்போது என்ற நூலை, பல கோடி மக்கள் படித்து, பயனடைந்து வருகின்றனர். இந்நூலின் அறிமுகப் பிரிவும், முதல் பிரிவும் இன்றைய நம் விவிலியத் தேடலுக்கு உதவியாக இருக்கும்.
"நான் ஏன் இந்நூலை எழுதினேன்?" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலின் அறிமுகப் பிரிவில், ஆசிரியர் குஷ்னர் அவர்கள், தான் இந்நூலை எழுத முக்கியக் காரணம், தன் மகன் ஆரோன் செவ் குஷ்னர் (Aaron Zev Kushner) என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தன் மகனைப் பற்றியும், அவரது மரணத்தைப் பற்றியும் தன் கருத்துக்களை இப்பிரிவில் பகிர்ந்துகொள்கிறார், குஷ்னர்.

ஆரோன், தன் 14வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரு நாள்கள் சென்று, இவ்வுலகைவிட்டு விடைபெற்றார். ஆரோன் இவ்வுலகில் வாழ்ந்த 14 ஆண்டுகளும், அரியதொரு நோயினால் அதிகத் துன்புற்றார். பல கோடி குழந்தைகளில் ஒருவருக்கு மட்டும் வரக்கூடிய, 'progeria' அதாவது, ‘விரைவில் முதுமை என்ற அரிய நோயினால், ஆரோன், பாதிக்கப்பட்டிருந்தார். தலைமுடி அனைத்தையும் இழந்து, முகத்தில் சுருக்கங்கள் விழுந்து, தன் 14வது வயதில், 80 வயது நிறைந்த ஒரு முதியவரைப்போல் தோன்றிய ஆரோன், அதிக வேதனையுற்று இறந்தார்.
குணமாக்க இயலாத அரிய நோயினால், தன் மகன் ஆரோன், 14 ஆண்டுகள் அனுபவித்த வேதனையும், மிக இளவயதில் அடைந்த மரணமும், ஹெரால்டு குஷ்னர் அவர்களை கேள்விகளால் நிறைத்தன. யூத மத குருவாக, நேர்மையான வாழ்க்கை வாழ்ந்துவரும் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏன் இவ்வாறு நிகழவேண்டும்? ஒரு பாவமும் அறியாத, மாசற்றக் குழந்தையான ஆரோன், ஏன் இத்துன்பத்திற்கு உள்ளாகவேண்டும்? போன்ற கேள்விகள், குஷ்னர் அவர்களை மிக ஆழமாகப் பாதித்தன.

1977ம் ஆண்டு, ஆரோன், இவ்வுலகிலிருந்து விடைபெற்றபின்னர், தன்னுள் எழுந்த கேள்விகளோடு 4 ஆண்டுகள் போராடிவந்த குஷ்னர் அவர்கள், தன் கேள்விகளையும், அதனால் தனக்குக் கிடைத்த தெளிவுகளையும் தொகுத்து, 1981ம் ஆண்டு, நல்லவர்களுக்கு பொல்லாதவை நிகழும்போது என்ற தலைசிறந்த நூலை வெளியிட்டார்.

இந்நூலின் முதல் பக்கத்தில், தன் மகன் ஆரோனுக்கு இந்நூலை அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ள ஆசிரியர், இந்த அர்ப்பண வரிகளுக்குக் கீழ், சாமுவேல் இரண்டாம் நூலில், தாவீது தன் மகனின் வாழ்வுக்காக இறைவனிடம் போராடிய நிகழ்வைக் கூறும் விவிலியப் பகுதியை மேற்கொளாகக் குறிப்பிடுகிறார்.
தன் படைவீரன் உரியாவின் மனைவி வழியே தனக்குப் பிறந்த மகன் நோயுற்றதால், அவனுக்காக உண்ணாநோன்பு மேற்கொண்டு வேண்டிக்கொண்டார் தாவீது. அவரது வேண்டுதல்கள் பயனளிக்காமல், அக்குழந்தை இறந்தது. அக்குழந்தை இறந்தபின், தாவீது உணவு உட்கொண்டார். இதைக் கண்ட பணியாளர், நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்; ஆனால் குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே! என்று அவரிடம் கேட்டபோது, தாவீது கூறிய பதிலை, குஷ்னர் அவர்கள் இந்நூலின் முதல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
2 சாமுவேல் 12: 22-23
"குழந்தை உயிரோடிருந்தபோது ஒரு வேளை ஆண்டவர் இரங்குவார்; அவனும் பிழைப்பான் என்று நினைத்து நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன். இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்கவேண்டும்? என்னால் அவனைத் திருப்பி கொண்டுவர முடியுமா? நான் தான் அவனிடம் செல்ல முடியுமே ஒழிய, அவன் என்னிடம் திரும்பிவர மாட்டான்" என்று கூறினார்.

அர்ப்பணப் பக்கத்தில், தாவீது அடைந்த வேதனையோடு தன்னை இவ்வாறு இணைத்துள்ள ஆசிரியர் குஷ்னர் அவர்கள், இந்நூலின் முதல் பிரிவில் கூறியுள்ள இரு நிகழ்வுகள், சீடர்கள் இயேசுவிடம் எழுப்பிய கேள்வியில் கூறப்பட்டுள்ள இரு கருத்துக்களை உறுதிப்படுத்துகின்றன.
"Why Do the Righteous Suffer?" அதாவது, "நீதிமான்கள் ஏன் துன்புறுகின்றனர்?" என்று தலைப்பிடப்பட்டுள்ள முதல் பிரிவில், குஷ்னர் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் முதல் நிகழ்வு, "இவரது பெற்றோர் செய்த பாவமா?" என்று சீடர்கள் எழுப்பிய கேள்வி, எவ்விதம் பலவடிவங்களில் நம்மிடையே உலவுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

குஷ்னர் அவர்கள், ஓர் இளம் ரபியாக தன் பணியைத் துவக்கிய வேளையில், அவரது தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய கணவனும், மனைவியும், ஒரு நாள், பேரதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டனர். 19 வயதான அவர்களது ஒரே மகள், பக்கத்து மாநிலத்தில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அன்று காலை, அவ்விளம்பெண் தன் வகுப்பறைக்கு நடந்து சென்ற வேளையில், திடீரென மயங்கி விழுந்தார். அவரது மூளையில், ஓர் இரத்தக்குழாய் வெடித்ததால், அவர் மயங்கி விழுந்தார். ஒரு சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்தது.
அப்பெண்ணின் பெற்றோருக்கு கல்லூரியிலிருந்து செய்தி வந்ததும், அவர்கள் அதிர்ச்சியில் நொறுங்கிப் போயினர். இச்செய்தியைக் கேட்ட குஷ்னர் அவர்கள், உடனடியாக அவர்களது இல்லத்திற்குச் சென்றார். இந்த  பேரிழப்பைச் சந்தித்துள்ள பெற்றோரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தயக்கத்துடன் அவர் அந்த இல்லத்தில் நுழைந்தார். அவரைச் சந்தித்ததும், அப்பெண்ணின் தந்தை, அவரிடம் கூறிய முதல் சொற்கள், தான் சற்றும் எதிர்பாராத சொற்களாக இருந்தன என்று, குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார்.
யூதர்களுக்கு மிக முக்கியமான, புனிதமான நாள், Yom Kippur, அதாவது, பாவப்பரிகார நாள். அந்த நாளில் நிறைவேற்றவேண்டிய ஒரு கடமையை, தானும், தன் மனைவியும் நிறைவேற்றவில்லை என்பதை, அந்த தந்தை கூறினார். "ரபி, நாங்கள், சென்ற ஆண்டு, பாவப்பரிகார நாளன்று, உண்ணா நோன்பைக் கடைபிடிக்கவில்லை" என்று தந்தை கூறியது, தன்னைச் சிந்திக்க வைத்தது என்று, குஷ்னர் அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் மகள் திடீரென இறந்ததற்குக் காரணம், தாங்கள் செய்த தவறு என்பதை, அப்பெண்ணின் தந்தை சொல்லாமல் சொன்னார்.

அதேபோல், ஒருவர், தனிப்பட்ட வாழ்வில் செய்த பாவங்களின் தண்டனைகளாக துன்பங்கள் வந்து சேரும் என்ற எண்ணமும் நம்மிடையே நிலவுகின்றது. இந்த எண்ணத்தைத்தான், இவர் செய்த பாவமா? என்ற கேள்வி வழியே சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். குஷ்னர் அவர்கள் இந்நூலின் முதல் பிரிவில் கூறும் மற்றொரு நிகழ்வு, இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.

11 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு பார்வைத்திறன் குறைந்து வந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர், அச்சிறுவன் அணியவேண்டிய கண்ணாடியைப் பரிந்துரை செய்தார். அச்சிறுவனின் பெற்றோரும், அக்காவும், சிறு வயதிலிருந்து கண்ணாடி அணிந்தவர்கள்.  எனவே, அச்சிறுவன் கண்ணாடி அணியவேண்டும் என்று மருத்துவர் சொன்னபோது, வீட்டில் யாரும் ஆச்சரியம் அடையவில்லை. ஆனால், அச்சிறுவனோ மிகவும் வருத்தம் அடைந்தான். கூடவே, அவன் ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பதுபோல் தெரிந்தது. அவனது தாய் அதைப்பற்றி பல முறை கேட்டும் பதிலொன்றும் சொல்லவில்லை. ஒரு நாள் இரவு, உறங்கப்போகும் நேரத்தில், அச்சிறுவன் தாயிடம் தன் மனதிலிருந்த குழப்பத்தைச் சொன்னான்.
அவன் கண் பரிசோதனைக்குப் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன், தன் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு பத்திரிக்கையில் வெளியாகியிருந்த ஆபாசப் படங்களை, இரகசியமாகப் பார்த்து இரசித்ததாகக் கூறினான். தான் அந்த ஆபாசப் படங்களைப் பார்த்ததால், ஆண்டவன் தன் பார்வைத்திறனைக் குறைத்துவிட்டார் என்று அச்சிறுவன் தன் அன்னையிடம் கூறினான்.

தங்களுக்கோ, பிறருக்கோ துன்பங்கள் ஏற்படும்போது, ஏதோ ஒருவகையில், தாங்களோ, பிறரோ செய்த தவறுகளே, அத்துன்பங்களின் காரணம் என்று முடிவெடுப்பது, மனித குலத்தின் ஆழ்மனதில் செதுக்கப்பட்டுள்ள ஒரு கருத்து. இக்கருத்தை பல்வேறு மதங்கள் பல்வேறு வழிகளில் கூறுகின்றன. விவிலியத்தின் பல இறைவாக்கியங்கள் இக்கருத்தை வலியுறுத்தும்வண்ணம் அமைந்துள்ளன.
தொடக்க நூல் 38: 7
யூதாவின் தலைமகன் ஏர், ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.
எசாயா 3: 10-11
மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்; அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி. தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு! தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும் அவர்கள் மேலேயே விழும்.
நீதிமொழிகள் 12: 21
நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.

தாங்களோ, தங்கள் பெற்றோரோ செய்த பாவங்களின் விளைவாக வரும் தண்டனைகளே ஒருவர் அடையும் துன்பங்கள் என்ற பாணியில் சீடர்கள் எழுப்பும் கேள்விக்கு, இயேசு அளித்த பதில், நம் அடுத்த தேடலை வழிநடத்தும்.


No comments:

Post a Comment