10 April, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 7


Illegal banners and flexes piled up. (Photo | EPS)

பூமியில் புதுமை – அரசுத்தடைகள் மட்டும் புவியைக் காப்பாற்றாது

ஏப்ரல் 11, இவ்வியாழன் முதல், மே மாதம் 19ம் தேதி முடிய, இந்தியாவில், பாராளுமன்றத் தேர்தல், 7 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தல் அட்டவணையை, மார்ச் 13ம் தேதி அறிவித்த தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்றக் கூடிய இரு பரிந்துரைகளை வழங்கியது.
1. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி, தூக்கியெறியப்படும் மக்காதப் பொருள்களைத் தவிர்க்கவேண்டும். 2. ஒலிப்பெருக்கிகள் வழியே உருவாகக்கூடிய ஒலி மாசுக்கேட்டை தவிர்க்கவேண்டும் என்பன, தேர்தல் ஆணையம் தந்த பரிந்துரைகள்.
அவ்விரு பரிந்துரைகளில், தேர்தல் நாளையொட்டி, ஒலி மாசுக்கேடு நின்று போகும். ஆனால், மக்காதப் பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் அடுத்தத் தலைமுறையினரின் வாழ்வை சீர்குலைக்கும் விளைவுகளை உருவாக்கும். பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் ஃபிளெக்ஸ் பதாகைகள் குறித்து, ‘துணிப்பை பிரசாரகர் என்ற புனைப்பெயருடன் எழுதிவரும், கிருஷ்ணன் சுப்ரமணியன் அவர்கள், ‘தி இந்து நாளிதழில், சில நாள்களுக்கு முன் வெளியிட்ட கருத்துக்களில் ஒரு சில இதோ:
எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும்போதும், பயன்படுத்தும்போதும், தூக்கி எறியும் போதும், அவை, என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்தே நமது குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப்போகிறோம் என்பது முடிவாகிறது. தேர்தலுக்கென பி.வி.சி. (Polyvinyl Chloride - PVC), எனும் ஞெகிழியால் உருவாக்கப்பட்ட ஃபிளெக்ஸ் பதாகைகள், நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை, கேலிக்கூத்தாக்கும் ஒரு பொருளாகவே உள்ளது.
பி.வி.சி. எனும் ஞெகிழியை, அறிவியலாளர்கள், நச்சு ஞெகிழி என்றே குறிப்பிடுகின்றனர். காரணம், மற்ற ஞெகிழிகளைவிட, இதை எரிக்கும்போதுதான் டையாக்சின் என்ற நச்சு வாயு மிக அதிகமாக வெளிவருகிறது. டையாக்சின், உணவுச் சங்கிலிக்குள் புகுந்து, புற்றுநோயைத் தூண்டும் தன்மை கொண்டது.
அரசியல்வாதிகள் மட்டும் இந்த பி.வி.சி. நச்சுப்பொருளைப் பரப்புவதற்குக் காரணம் அல்ல, நாம் ஒவ்வொருவரும், இந்த நச்சுப்பொருளை ஒவ்வொருநாளும் சுமந்து திரிகிறோம் என்பதை, கட்டுரை ஆசிரியர் விளக்குகிறார்:
உலக நாடுகள் பல, பி.வி.சி.யால் செய்யப்படும் பொம்மைகளையும், பால் புட்டிகளையும் தடை செய்துள்ளன. நாமோ, குழந்தையின் காதணி விழாவுக்கு ஃபிளெக்ஸ் பதாகை அடித்து, அந்தப் பதாகையை குப்பைக் கிடங்கில் எரித்து, அதில் உருவாகும் நச்சு வாயு வழியே, குழந்தைகளின் வாழ்வில் நஞ்சைக் கலக்கிறோம்.
நம் வாரிசுகள் நலமுடன் வாழ, இந்தப் புவியை, தகுந்த சூழலுடன் விட்டுச்செல்ல வேண்டிய கடமை, நமக்கு உள்ளது. அரசு விதிக்கும் தடைகளால் மட்டுமே, புவியைக் காப்பாற்றிவிட முடியாது. (தி இந்து)

The man healed of paralysis and his friends

ஒத்தமை நற்செய்தி முடங்கியவருக்கு முழு விடுதலை 7

ஒரு கற்பனைக் காட்சியுடன் இன்றையத் தேடலைத் துவக்குவோம். நோயாளி ஒருவர், மருத்துவரைக் காணச் செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். மருத்துவர் அறைக்குள், நோயாளி நுழைந்ததும், அவரிடம், ஒரு வார்த்தையும் பேசாமல், அவருக்குத் தேவையான, சரியான மருந்தை, மருத்துவர் தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். நோயாளியைப் பார்த்த உடனேயே, அவரது தேவையை உணர்ந்து, மருந்து வழங்கும் அந்த மருத்துவரைப் பாராட்டத் தோன்றுகிறது. இதையொத்த ஒரு காட்சி, முடக்குவாதமுற்ற மனிதருக்கு அன்று நிகழ்ந்தது.

பொதுவாக, இயேசு, பிறரைக் குணமாக்கும் நிகழ்வுகளில், நோயுற்றவரிடம், அல்லது, நோயுற்றவர் சார்பில் தன்னை அணுகியவரிடம் சில வார்த்தைகள் பேசிய பின்னரே, குணமளிக்கும் செயலை ஆற்றுவார். எடுத்துக்காட்டாக, பார்வை இழந்த ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் நிகழ்வில்இயேசு திமேயுவின் மகன் பர்த்திமேயுவைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார் (மாற்கு 10:51) என்று வாசிக்கிறோம்.

முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் நிகழ்விலோ, இயேசு நோயாளியின் தேவை என்ன என்பதைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பதைக் காண்கிறோம். பிரிக்கப்பட்ட கூரை, அதன் வழியே இறக்கப்பட்ட நோயாளி ஆகியவற்றை இயேசு பார்த்தார் என்று கூறும் நற்செய்தியாளர் மாற்கு, பின்னர், அங்கு நடந்ததை இவ்வாறு கூறியுள்ளார்:"இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்றார்" (மாற்கு 2:5)

இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகள் பலவற்றில், குணமிழந்த தனி மனிதனுக்கு நேரடியான முறையில் குணமளிக்கும் வேளையில், சுற்றி நிற்கும் பலருக்கு மறைமுகமான முறையில் குணமளிப்பதையும் நாம் நற்செய்திகளில் காண்கிறோம். இயேசு. தொழு நோயாளரைத் தொட்டு குணமாக்கினார் என்பதை இதற்கு முந்தியப் புதுமையில் சிந்தித்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார். இயேசு, தூரத்தில் நின்றவாறு, ஒரு சொல்லால், அந்தத் தொழுநோயாளரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், அவர், தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். (மாற்கு 1: 41-42)

இயேசு தொழுநோயாளரைத் தொட்டது, சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, கூட்டத்தில் இருந்தோரும் குணம்பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, சகமனிதர்களை, மிருகங்களிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு, தொழுநோயாளரைத் தொட்டார். இயேசுவின் தொடுதலால், தொழுநோயாளர் குணமானார். அதே தொடுதலால், இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும், ஓரளவாகிலும் குணமாகி இருக்கவேண்டும்.

முடக்குவாதமுற்றவரை குணமாக்கிய வேளையிலும், இயேசு, அதிர்ச்சிதரும் ஒரு பாணியைப் பின்பற்றுகிறார். கூரை வழியே இறக்கப்பட்ட முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, "குணம் பெறுக." என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறுகிறார். பிரச்சனை ஒன்று எழுகிறது.

பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக் கைவந்த கலையோ என்றுகூட, சில சமயங்களில், நமக்கு எண்ணத் தோன்றுகிறது. ஆனால், ஆழமாக சிந்தித்தால்பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல, மாறாகபிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட முயற்சி இது என்பதை உணர்வோம். முடக்குவாதமுற்று, பல ஆண்டுகளாக, தன் படுக்கையில் சிறைப்பட்டிருந்த அவரது உடலை மட்டும் இயேசு குணமாக்க விரும்பவில்லை. அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, நோயுற்ற தன்னை, பாவி என்று முத்திரை குத்திய சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி, அவருக்கு முழு குணம் அளிக்கவே, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார். இயேசுவின் இக்கூற்றினால் அங்கு எழுந்த சலசலப்பையும், அதை இயேசு கையாண்ட முறையையும் நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:
மாற்கு 2:6-11
அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’, என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார்.

இயேசு, முடக்குவாதமுற்றவருடைய பாவத்தை மட்டுமல்ல, சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும், முக்கியமாக, நோயுற்றவருக்கு, தவறானத் தீர்ப்புகள் அளித்து, அவரையும், தங்களையும், கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மக்கள் ஆகிய அனைவருடைய பாவங்களையும் மன்னிக்கிறார்.
முழுமையான மன்னிப்பு, ஆறாக அங்கு பெருகி ஓடியபோது, அழகியதொரு புதுமை நிகழ்கிறது. அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் (மாற்கு 2:12) என்று இப்புதுமை நிறைவடைகிறது.

பல ஆண்டுகளாய், படுக்கையோடு முடங்கிப்போயிருந்தவர், தட்டுத் தடுமாறி எழுகிறார். தன் கால்களில் அவர் உணர்ந்த வலிமை, உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் பரவி, தன்னை இதுவரைத் தாங்கிவந்த படுக்கையை அவர் தாங்கிக்கொண்டு வெளியே செல்கிறார். அவர் உள்ளே வருவதற்கு இடம் தராமல், வழியை மறைத்து நின்ற அந்த கும்பல், முக்கியமாக, அவர் இயேசுவை நெருங்கமுடியாமல் வழி மறைத்து நின்ற குருக்கள், பரிசேயர் கூட்டம், வியப்புடன், மரியாதையுடன் வழி விட, அவர் கம்பீரமாய் வெளியே செல்கிறார். வீட்டின் கூரை மீது நின்று இந்த அற்புதத்தைக் கண்ட நண்பர்கள், அங்கிருந்தபடியே, இயேசுவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவசரமாய் இறங்கிவந்து, தங்கள் நண்பனுடன் மகிழ்வாகச் செல்கின்றனர். வரும்போது அவரைச் சுமந்துவந்த படுக்கையை, எல்லாரும் சேர்ந்து, குப்பையில் எறிந்துவிட்டு போயிருக்கவேண்டும்.

இயேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடலாம் என்பதை உணர்த்தும் தவக்காலத்தின் இறுதி நாள்களை அடைந்துள்ளோம். இவ்வேளையில், வாழ்வில் நாம் சுமக்கும் சுமைகளையும், பிறர் மீது நாம் சுமத்தும் சுமைகளையும் பற்றி சிந்திக்கலாம்.

ஒரு சிறுமி, தன் தம்பியைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர், சிறுமியிடம் "அவன் பாரமாயில்லையா?" என்று கேட்டபோது, அச்சிறுமி, "அவன் பாரமில்லை, அவன் என் தம்பி" என்று சொன்னதாக, ஒரு குட்டிக் கதை உண்டு. சுகமான சுமைகள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன. தாயின் கருவில் வளரும் குழந்தையை, வழக்கமாக, அந்தத் தாய் சுமையாக நினைப்பதில்லை. ஆனால், மற்ற சுமைகள்? இதோ இன்னொரு கதை.

வயதான தொழிலாளி ஒருவர், சாலையில், சுட்டெரிக்கும் வெயிலில், பெரிய சுமையை, தன் தலைமீது தூக்கிக்கொண்டு நடந்து சென்றார். அவ்வழியே சென்ற ஒரு லாரியின் ஓட்டுனர், தொழிலாளியின் துன்பத்தைக் கண்டு, பரிவுகொண்டு, லாரியை நிறுத்தி, அந்த தொழிலாளியைத் தனது லாரியின் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னார். தொழிலாளி பின்புறமாய் ஏறியதும், ஓட்டுனர், லாரியை ஓட்டிச்சென்றார். சிறிது தூரம் போனதும், தொழிலாளி எப்படி இருக்கிறார் என்று பார்ப்பதற்கு திரும்பியபோதுஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். காரணம்? அந்தத் தொழிலாளி இன்னும் தன் தலையில் அந்த சுமையை வைத்துக்கொண்டு லாரியில் நின்றதைப் பார்த்தார். லாரியை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று,  "ஐயா, அந்தச் சுமையை இறக்கி வைக்க வேண்டியதுதானே" என்று சொன்னதற்கு, அந்தத் தொழிலாளி, "வேண்டாம் ஐயா. நீ எனக்கு இடம் கொடுத்ததே பெரிது. இதையும் ஏன் உன் லாரி சுமக்கணும்? நானே சுமந்துக்கிறேன்" என்று சொன்னாராம்.

சுமைகளைச் சுமப்பதும், சுமைகளைப் பிறர் மீது சுமத்துவதும் நமக்குக் கைவந்த கலைகள். சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். சுமைகளை நீக்குவார். சுகம் தருவார்.


No comments:

Post a Comment