27 August, 2019

விவிலியத்தேடல்: யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 3


Earth Overshoot Day - 2019

பூமியில் புதுமை: ஜூலை 29ம் தேதி - 'அளவை மீறிய நாள்'

இத்தாலியின் La Stampa என்ற செய்தித்தாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பேட்டி ஒன்று, ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகியிருந்தது. இப்பேட்டியில், அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம் குறித்து, திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சுற்றுச்சூழல் குறித்தும், வரவிருக்கும் மாமன்றம் குறித்தும், திருத்தந்தை பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்கள் இதோ...
அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்களின் சிறப்பு மாமன்றம், "இறைவா உமக்கேப் புகழ்" என்ற திருமடலின் குழந்தை என்று, திருத்தந்தை, இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பாக தன்னை வந்தடைந்த ஒரு சில அதிர்ச்சித் தகவல்களை, திருத்தந்தை, இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்:
"அண்மையில் நான் 7 மீனவர்களைச் சந்தித்தேன். அவர்கள், கடந்த சில மாதங்களாக, கடலிலிருந்து, 6 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை திரட்டியதாகக் கூறினர். அது, எனக்கு அதிர்ச்சி அளித்தது. ஐஸ்லாந்தில் ஒரு பெரிய பனிப்பாறை மீட்கமுடியாத வண்ணம் உருகிவிட்டதாகவும், அதற்கு ஓரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால், கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகுகின்றன என்ற செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. இவற்றையெல்லாம் விட, மற்றொரு தகவல் எனக்கு அதிக அதிர்ச்சியளித்தது" என்று திருத்தந்தை கூறியதும், அந்த அதிர்ச்சித் தகவல் என்ன என்று பேட்டியாளர் கேட்டபோது, திருத்தந்தை, 'The Overshoot Day', அதாவது, 'அளவை மீறிய நாள்' என்ற தகவல் குறித்துப் பேசினார்.
நமது பூமிக்கோளம், இயற்கை வழிகளில் சக்திகளை உருவாக்கி வருகின்றது. அச்சக்திகளை நாம் பயன்படுத்த, பயன்படுத்த, அவை மீண்டும் நம் பூமியாலும், இயற்கையாலும் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு, பூமிக்கோளம், தன் சக்தியை உருவாக்கிக்கொண்டே இருப்பதால், தன்னையே புதுப்பித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும், நமது பூமி உருவாக்கும் சக்திக்கு இணையாக, அல்லது, அதைவிடக் குறைவாக, நாம் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தினால், பூமி, தன் சக்தியை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அதனால் பூமி வாழும்.
பூமி உருவாக்கிவரும் சக்தியிலிருந்து, இவ்வாண்டு டிசம்பர் மாதம் முடிய நாம் பயன்படுத்த வேண்டிய சக்தி அனைத்தையும், ஜூலை 29ம் தேதி, அதாவது, 5 மாதங்களுக்கு முன்னதாகவே, நாம் பயன்படுத்தி முடித்துவிட்டோம். இதனால், ஜூலை 30ம் தேதி முதல், நாம், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் சக்தியை, மறுபடியும் உருவாக்க இயலாத நிலையில், நமது பூமியும், இயற்கையும் அழிந்து வருகின்றன. எனவே, ஜூலை 29ம் தேதி, 'அளவை மீறிய நாள்' என்ற எச்சரிக்கையை நமக்கு விடுத்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல், தன்னை அதிகம் பாதித்ததாக, திருத்தந்தை இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். (நன்றி - La Stampa)

The woman with an issue of blood - Howard Lyon

யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 3

மனிதர்கள் கூடிவரும் வேளைகளில், எதிர்பாராத வழிகளில், ஆபத்துக்கள் சூழ்வதை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். திருவிழாக்கள், கட்சிக் கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று, பல தருணங்களில், உயிர் பலிகள் நிகழ்வதை செய்திகளாக வாசிக்கிறோம். குறிப்பாக, அளவுக்கதிகமாக மக்கள் கூடிவரும் திருத்தலங்களில், ஏதோ ஒரு மூலையில் ஆரம்பமாகும் வதந்திகளால் மக்கள் நெரிசல்கள் உருவாகி, மனித உயிர்கள் பலியாவது வேதனை தரும் உண்மை.
2015ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மெக்காவில் கூடிய 20 இலட்சம் மக்கள் நடுவே திடீரென எழுந்த ஒரு குழப்பத்தால், கூட்டத்தில் மிதிபட்டு 700க்கும் அதிகமானோர் இறந்தனர். அதேவண்ணம், இந்தியாவில் 2016ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வாரணாசியில் கூடிய 1 இலட்சத்திற்கு அதிகமானோர் நடுவில், திடீரென ஏற்பட்ட ஒரு நெரிசலில், 25 உயிர்கள் பலியாயின; 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஊர்வலமாக, ஒரு பாலத்தைக் கடந்துகொண்டிருந்த கூட்டத்தில், பாலம் இடிந்து விழப்போகிறது என்று யாரோ கிளப்பிவிட்ட ஒரு வதந்தியால், இவ்விபத்து நிகழ்ந்ததெனச் சொல்லப்படுகிறது.

நெரிசலில் மிதிபட்டு இறப்போரைக் குறித்த விவரங்களைத் திரட்டும்போது, இவை, பெரும்பாலான நேரங்களில், புண்ணியத் தலங்களில், திருவிழாக் காலங்களில் நிகழ்ந்துள்ளன என்பதை, பல ஆதாரங்களுடன், விக்கிப்பீடியா வெளியிட்டுள்ளது. ஆண்டவனைக் காணவந்த இடத்தில், ஒருசில மனிதர்கள் செய்யும் தவறுகளால், பெரும்பாலான மக்கள் மிதிபட்டு இறப்பது, ஊர்வலங்களையும், கூட்டங்களையும்பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
எந்த ஓர் ஊர்வலத்திலும், பல்வேறு எண்ணங்கள் வலம்வரும். ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள், எதற்காகச் செல்கிறோம், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் ஒருவேளை தெளிவாக இருப்பர். ஆனால், ஊர்வலம் செல்லும்போது, ஆர்வத்தால் தூண்டப்பட்டு, வழியில் இணைபவர்களும் உண்டு. இன்னும் சிலர், ஊர்வலத்தில் கலகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இணையக்கூடும்.

கூட்டங்களை, ஊர்வலங்களைப் பற்றி இன்றைய விவிலியத் தேடலில் எண்ணிப்பார்க்க இரு காரணங்கள் உண்டு. செப்டம்பர் 8ம் தேதி நடைபெறவிருக்கும் ஆரோக்கிய அன்னை திருநாளையொட்டி, வேளாங்கண்ணி திருத்தலத்தில், ஆகஸ்ட் 29, இவ்வியாழனன்று, நவநாள் பக்திமுயற்சிகள், கொடியேற்றத்துடன் துவங்குகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இன்னும் பிற நாடுகளிலிருந்தும், வேளாங்கண்ணி திருத்தலத்தில், மக்கள் கூட்டம், இந்நாள்களில் அலைமோதும் என்பதை நாம் அறிவோம். இவ்வேளையில், சில நாள்களுக்கு முன், வேளாங்கண்ணியை நோக்கி, திருப்பயணமாகச் சென்ற பக்தர்கள் சிலர், இந்து அடிப்படைவாதக் குழுவினரால் தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டோம். அன்னையைத் தேடிச்செல்வோர் அனைவரும், ஆபத்து ஏதுமின்றி, இத்திருநாளை சிறப்பிக்கவேண்டும் என்று செபிப்பது, முதல் காரணம்.

நாம், கடந்த இரு வாரங்களாகச் சிந்தித்து வரும் புதுமையிலும், ஓர் ஊர்வலம் இடம்பெறுகிறது என்பது இரண்டாவது காரணம். இறக்கும் நிலையிலிருந்த தன் மகளை, இயேசு குணமாக்கவேண்டும் என்று, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் வேண்டியதையடுத்து, யாயிருடன் இயேசு புறப்பட, அவர்களைப் பின்தொடர்ந்து, ஒரு கூட்டம், ஊர்வலமாகக் கிளம்பியது.

யாயிரின் இல்லம் நோக்கிச் சென்ற அந்த ஊர்வலத்தில், பல்வேறு நோக்கங்கள் கொண்டவர் கலந்துகொண்டனர். சாகக்கிடக்கும் மகளைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம், யாயிர் மனதிலும், இயேசுவின் மனதிலும் மேலோங்கியிருக்க வேண்டும். தொழுகைக்கூடத் தலைவரின் மகள் சாகக்கிடக்கிறார் என்ற செய்தியும், அவரைக் குணமாக்க இயேசு செல்கிறார் என்ற செய்தியும், ஊரெங்கும் பரவியதால், 'என்னதான் நடக்கப்போகிறது' என்று காண ஆர்வம் கொண்டவர்கள், அந்த ஊர்வலத்தில் இணைந்திருக்கக்கூடும். தொழுகைக்கூடத் தலைவரே தங்கள் தலைவர் இயேசுவின் முன் மண்டியிட்டுவிட்டார், இனி தங்கள் புகழ் நாடெங்கும் பரவப்போகிறது என்ற பெருமையுடன், சீடர்கள் அந்த ஊர்வலத்தில் சென்றிருக்கக்கூடும். இயேசுவின் பணிகளில் குறைகாண்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், மீண்டும் குறைகாணும் நோக்கத்துடன், அந்த ஊர்வலத்தில் கலந்திருக்கக்கூடும்.

வேதனை, எதிர்பார்ப்பு, பெருமை, குறைகாணும் ஆர்வம் என்ற பல்வேறு உணர்வுகள் கலந்திருந்த அந்த ஊர்வலத்தில், நம்பிக்கை என்ற உணர்வும் நுழைந்தது. பன்னிரு ஆண்டுகளாய் தன்னை வதைத்துவந்த இரத்தப்போக்கு நோயை, இயேசு குணமாக்குவார்; அவரது ஆடையின் ஓரங்கள் போதும் தன்னைக் குணமாக்குவதற்கு, என்ற அபார நம்பிக்கையுடன், ஒரு பெண், அந்தக் கூட்டத்தில் இயேசுவை நெருங்கினார்.
இரத்தப்போக்கு நோயுள்ள பெண், சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும் என்பது, இஸ்ரயேல் மக்களிடையே கடைபிடிக்கப்பட்ட விதி. ஆனால், இவரோ, கூட்டத்தின் மத்தியில், முண்டியடித்து, முன்னேறிக்கொண்டிருந்தார். "நான் அவர் ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" (மாற்கு 5:28) என்ற ஒரே மந்திரம், அவர் மனமெங்கும் நிறைந்திருந்தது.

அந்தப் பெண்ணுக்குத் தெரியும்... இயேசுவுக்கு முன்னால், சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப்போகும் என்று, அவருக்குத் தெரியும். வேலிகள் கட்டுதல், வேறுபாடுகள் காட்டுதல், விலக்கிவைத்தல் போன்ற இதயமற்ற போலிச்சட்டங்கள், இயேசுவிடம் பொசுங்கிப்போகும் என்று, அவருக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில்தான் அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.
இருந்தாலும் அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க, ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப்பற்றி... முக்கியமாக இயேசுவைச் சுற்றியிருந்த ஆண் வர்க்கத்தைப்பற்றி.
கூட்டத்தில், அந்த குழப்பத்தின் மத்தியில், இயேசுவை அணுகுவதைத் தவிர வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார். இயேசுவின் "ஆடையைத் தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்று போயிற்று" (மாற்கு 5:29) என்று நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.

பொதுவாக, குணமளிக்கும் புதுமைகளில், இயேசு, நோயுற்றவர்களைத் தொடுவதன் வழியே, அவர்கள் நலம் அடைந்ததை, நாம் நற்செய்திகளில் பல இடங்களில் காண்கிறோம். தன் வாழ்வின் இறுதிவரை, இயேசு, தன் தொடுதலால் மக்களுக்கு நன்மைகள் செய்தார் என்பதை நற்செய்தியாளர்கள் குறிப்பிடத் தவறவில்லை.
கெத்சமனித் தோட்டத்தில், அவரைக் கைதுசெய்ய வந்திருந்த தலைமைக்குருவின் பணியாளர்கள் ஒருவரை, ஒரு சீடர் வாளால் தாக்கவே, அப்பணியாளரின் காது துண்டிக்கப்படுகிறது. அப்போது அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியுள்ளார்: அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, "விடுங்கள், போதும்" என்று கூறி, அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். (லூக்கா 22:50-51)

வேறு சிலப் புதுமைகளில், நோயுற்றோர், இயேசுவின் ஆடையைத் தொட்டதால் குணமடைந்தனர் என்பதையும் நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம். எடுத்துக்காட்டாக, அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர் (மாற்கு 6:56, காண்க. மத்தேயு 14:36) என்று மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இப்புதுமையிலும், இயேசுவின் ஆடையின் ஓரங்கள், இரத்தப்போக்கு நோயுள்ள பெண்ணை குணமாக்குவதைக் காண்கிறோம்.

"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும், கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று வந்த பெண்ணை, இயேசு ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, வழியில் நடந்த அந்தப் புதுமையை, பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன.

எந்த ஒரு புதுமையிலும், உடல் அளவில் நோயை குணமாக்குவது மட்டும் இயேசுவின் நோக்கமல்ல, மாறாக, அப்புதுமை வழியே, சமுதாயத்திற்கு நன்மை கொணர்வதையும் இயேசு விரும்பினார் என்பதை அறிவோம். இப்புதுமையிலும், சமுதாயத்தை குணமாக்கும் புதுமையை இயேசு தொடர்கிறார். குணமடைந்த பெண்ணின் உதவியுடன், இயேசு, கூட்டத்தை குணமாக்கும் புதுமையை, நாம், அடுத்தத் தேடலில் ஆய்வு செய்வோம்.


No comments:

Post a Comment