14 July, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பெருமளவு மீன்பிடிப்பு புதுமை 4


Eating Twinkies With God


விதையாகும் கதைகள் : பூங்காவில் சந்தித்தக் கடவுள்

கடவுளை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவலுடன், சிறுவன் இராபர்ட், வீட்டிலிருந்து கிளம்பினான். மதிய உணவையும், இன்னும் சில பலகாரங்களையும், பானங்களையும் பையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில், இருந்த பூங்காவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று, அங்கு சென்றான். பூங்காவில், வயதுமுதிர்ந்த பெண்மணி ஒருவர், ஒரு பெஞ்சில் அமர்ந்து, பறவைகளுக்கு உணவளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தான்.
வெயிலில் நடந்துவந்ததால் தாகம் எடுக்கவே, சிறுவன் இராபர்ட், தன்னிடமிருந்த குளிர்பான பாட்டிலை திறந்தான். அப்பெண்மணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவேளை, பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றெண்ணி, பையிலிருந்த மற்றொரு குளிர்பான பாட்டிலை அவரிடம் நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு, அந்த குளிர்பானத்தைக் குடித்தார்.
சிறுவன் இராபர்ட், அதுவரை அவ்வளவு அழகான புன்னகையைப் பார்த்ததில்லை.  மறுபடியும் அப்பாட்டியின் புன்னகையைப் பார்க்க விரும்பிய இராபர்ட், தான் கொண்டு வந்த பலகாரங்களைப் பிரித்துக்கொடுத்தான். பாட்டி, மீண்டும் அவனைப் பார்த்து புன்னகை செய்தவண்ணம், பலகாரங்களைச் சாப்பிட ஆரம்பித்தார்.
இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், அடிக்கடி, ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர். நேரமானதும், அம்மா ஞாபகம் வந்தது இராபர்ட்டுக்கு. வீட்டுக்குப் பறப்பட்டான். சிறிது தூரம் சென்றவன், திரும்பிச்சென்று, பாட்டியைக் கட்டியணைத்தான். பாட்டி, அவன் நெற்றியில் முத்தமிட்டு, ஒளிமயமானப் புன்னகை பூத்தார்.
வீட்டிற்குள் நுழைந்த இராபர்ட், மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்ததைக்கண்ட அவன் அம்மா என்ன நடந்ததென்று கேட்டார். ’நான் பூங்காவில் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றான் இராபர்ட். கடவுள் ஒரு பெண் என்றும், கடவுளின் புன்னகையைப்போல் தான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றும் இராபர்ட், தன் அம்மாவிடம் சொன்னான்.
அதே நேரம், அந்தப் பாட்டி, அவரது வீட்டில் நுழைந்தபோது, என்னம்மா, இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள். என்ன நடந்தது?” என்று அவரது மகன் கேட்டார். "இன்று பூங்காவில் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றார், பாட்டி. அது மட்டும் இல்லை. நான் நினைத்ததை விட, கடவுளுக்கு ரொம்பச் சின்ன வயசுஎன்றார்.
முன்பின் தெரியாதவர்களிடத்திலும், பரிவுடன், அன்புடன், நடந்துகொள்ளும்போது, ஒருவர் கண்ணில் மற்றொருவர் கடவுளாய் மாறக்கூடும். நன்மைகள் செய்யும் வேளையில், நமக்குள் உறைந்திருக்கும் கடவுள் வெளிப்படுவார்.

Depart from me, for I am a sinful man


லூக்கா நற்செய்தி பெருமளவு மீன்பிடிப்பு புதுமை 4

ஆப்ரிக்கக்  கண்டத்தில் வாழும் மான் வகைகளில் ஒன்று, இம்பாலா. இந்த மான், 10 அடி உயரம் தாவியோடும் வலிமை கொண்டதெனச் சொல்லப்படுகிறது. இவ்வளவு உயரம் தாண்டக்கூடிய மான்களை மிருகக்காட்சிச் சாலைகளில் அடைத்துவைப்பது இயலாத காரியம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இவ்வகை மான்களிடம் உள்ள ஒரு குணம், இவற்றை மிருகக்காட்சிச் சாலைகளில் அடைத்துவைக்க உதவியாக உள்ளது.
இம்பாலா மான்கள், அடுத்து எந்த இடத்தில் தங்கள் கால்கள் பதியும் என்பதைக் காணமுடிந்தால் மட்டுமே, அவை தாவிச்செல்லும். அந்த இலக்கு தெரியாதபோது, அவை, தாவிச்செல்வதில்லை. எனவே, மிருகக்காட்சிச் சாலைகளில், இவ்வகை மான்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள கூண்டைச் சுற்றி, 3 அல்லது, 4 அடி உயரத்திற்கு சுவர் ஒன்று கட்டப்பட்டால் போதும், இம்மான்கள், தாவிச்செல்ல முற்படாமல், அடைபட்டு கிடக்கும்.

நம்மில் பலருக்கு, 'இம்பாலா பிரச்சனை' உள்ளது. அதாவது, நமக்கு முன்னிருப்பவை தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே, அடுத்த அடியை எடுத்துவைக்க முன்வருகிறோம். ஆண்டவனை நம்பி, ஆழத்திற்குச் செல்லத் தயங்குகிறோம். இத்தகையத் தயக்கம் சீமோனிடம் காணப்பட்டதென்பதை, நாம் சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம்.
கெனசரேத்து ஏரியில், சீமோனின் படகில் அமர்ந்து, மக்களுக்குப் போதித்த இயேசு, தன் போதனை முடிந்ததும், சீமோனிடம், ஆழத்திற்குச் சென்று வலைகளைப் போடச்சொன்னபோது, சீமோன் தயங்கினார். "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை" (லூக்கா 5:5) என்ற சொற்களில், தன் தயக்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால், தன் தயக்கத்தைச் சொன்ன அதேமூச்சில், தொடர்ந்து, "ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" (லூக்கா 5:5) என்ற சொற்கள் வழியே, இயேசுவின் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைப் பறைசாற்றினார், சீமோன்.

அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அனுபவம் என்ற பள்ளியில், சீமோன், அதுவரை பயின்று வந்திருந்த பாடங்களைப் புரட்டிப்போட்ட ஒரு புதுமை, கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்தது.
லூக்கா 5:6-7
அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத்தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

பெருந்திரளான மீன்பிடிப்பு நிகழ்ந்த இப்புதுமையில் கூறப்பட்டுள்ள இரு விடயங்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. மீன்களின் எண்ணிக்கை, வலைகளின் சக்தியைத் தாண்டியிருந்ததால், 'வலைகள் கிழியத் தொடங்கின' என்றும், சீமோன், மற்ற படகில் இருந்தோரை, உதவிக்கு வருமாறு அழைத்தார் என்றும் புரிந்துகொள்கிறோம்.

இறைவன் வழங்கும் புதுமைகளின் பயன்களை நாம் மட்டுமே அள்ளிக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில் செயல்பட்டால், நம் வலைகள் கிழியத் துவங்கும். வலைகள் கிழிந்தால், புதுமைகளின் பயன்கள் எதுவும் தங்காது. மாறாக, அப்பயன்களை, அடுத்தவரோடு நாம் இணைந்து திரட்டும்போது, இரு படகுகளும் மூழ்கும் அளவு, நாமும், அடுத்தவரும் பயன்களால் நிறைவோம். இதைத்தான், ஆங்கிலப் பழமொழி இவ்வாறு கூறுகிறது: "துயரத்தைப் பகிர்ந்தால், அது, பாதியாகக் குறையும்; மகிழ்வைப் பகிர்ந்தால், அது, இருமடங்காகப் பெருகும்".

மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோனின் சொல்லும், செயலும் ஆச்சரியத்தைத் தருகின்றன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார் (லூக்கா 5:8) என்ற சொற்களை நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார்.
இதற்கு முந்தைய வாக்கியத்தில், இயேசுவை அழைக்க, 'ஐயா' என்ற சொல்லைப் பயன்படுத்திய சீமோன், இந்த வாக்கியத்தில், 'ஆண்டவரே' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். தனக்கு முன்னிருப்பவர் மனிதப் பிறவி அல்ல, அதையும் கடந்தவர் என்ற உணர்வு, சீமோனை நிறைத்தது. தனக்கு முன்னிருப்பவர் இறைவன் என்ற உண்மையை உணர்ந்த சீமோன், அந்த இறைவனுக்கு முன், தனது உண்மை நிலையையும் உணர்ந்தார்.
சீமோன் மட்டுமல்ல, இறைவனைச் சந்திக்கும் அருளைப் பெற்ற இறைவாக்கினர்களும், ஏனைய சீடர்களும் இதே உணர்வைப் பெற்றனர் என்பதை, விவிலியத்தின் பல இடங்களில் நாம் காண்கிறோம்.

இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் கண்ட இறைவாக்கினர் எசாயாவுக்கு நிகழ்ந்ததை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
எசாயா 6:1,4,5
மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. அப்பொழுது நான்: “தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.

இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் புனித பவுல், இறுதியாக, தனக்கும் அவர் தோன்றினார் என்பதை, இவ்வாறு கூறுகிறார்: எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். (1 கொரி. 5:8)

இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்களான பவுல், சீமோன் ஆகிய மூவருமே தங்களைப்பற்றி கொண்டிருந்த உண்மையானத் தெளிவிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல.
இவ்வார்த்தைகள், உண்மையான தாழ்ச்சியை, பணிவைப்பற்றியத் தெளிவை நமக்குத் தருகின்றன. தாழ்ச்சி அல்லது, பணிவு என்பது, உள்ள நிறைவிலிருந்து, உண்மையானத் தெளிவிலிருந்து வரும்போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும்.

பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோன் மட்டுமல்ல, அவருடன் இருந்த அனைவருமே வியப்பில் நிறைந்திருந்தனர் என்பதை, நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
லூக்கா 5:8-11
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
பெருந்திரளான மீன்பிடிப்பு என்ற புதுமையை ஓர் அறிமுகமாகப் பயன்படுத்திய இயேசு, இந்தப் புதுமையில் பங்கேற்ற அனைவரையும், மனிதர்களைப் பிடிப்பவராக மாற்றினார்.

விவிலியம் முழுவதும் நாம் காணும் பெரும்பாலான 'அழைப்புக்கள்', கோவிலில், இறைவனின் சந்நிதியில் வந்தவை அல்ல. அவை, சாதாரண, தினசரி வாழ்வு நிகழ்வுகளில் வந்தவை என்பதை, விவிலியம் மீண்டும், மீண்டும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
கிறிஸ்தவர்களைக் கொல்வதற்கு, அல்லது, கைதுசெய்வதற்கு வெறிகொண்டு குதிரையில் விரைந்துகொண்டிருந்த பவுலை, அந்தக் குதிரையிலிருந்து கீழே தள்ளி, இயேசு அழைத்தார். மீன்பிடித்துக் கொண்டிருந்த சீமோனை, இயேசு, அந்த மீன்பிடிப் படகில் நின்றபடி அழைத்தார்.
நம்முடைய வாழ்விலும், பல்வேறு சாதாரண சூழல்களில் நம்மை வந்தடையும் இறைவனின் அழைப்பை உணரும் வரத்திற்காக செபிப்போம். அச்சூழல்களில் நிகழும் புதுமைகள் வழியே நாம் பெரும் அருள் கொடைகளை அடுத்தவரோடு இணைந்து பெறுவதற்குத் தேவையான, பரந்து, விரிந்த உள்ளத்தை இறைவன் நமக்கு வழங்குமாறு செபிப்போம். இறைவனின் பிரசன்னத்தை உணரும் நாம், அந்தப் பிரசன்னத்தில் நம் உண்மை நிலையையும் அறிந்துகொள்ளும் தெளிவைப் பெறுவோமாக!

அகந்தையில் சிக்கி, கிறிஸ்தவர்களை அழித்து வந்த சவுல், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருத்தூதர் பவுலாக மாறியபின், உண்மையான உள்ள நிறைவோடும், பெருமையோடும், அதே நேரம் பணிவோடும் சொன்ன வார்த்தைகள் நமது தேடலை இன்று நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12: 9-10
கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

No comments:

Post a Comment