09 March, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 2 – கடவுள் தேர்ந்துகொண்ட அரசர் 2

War between the Kingdom of God and the world

இந்தியாவின் தலைநகர் டில்லியில், தங்கள் வாழ்வுக்காகப் போராடிவரும் விவசாயப் பெருமக்கள், மார்ச் 7, இஞ்ஞாயிறன்று, தங்கள் போராட்டத்தில், 100 நாள்களை நிறைவு செய்துள்ளனர். ஆரம்பத்தில், இலட்சக்கணக்கில் கூடியிருந்த விவசாயப் பெருமக்களை, வெளிச்சமிட்டுக் காட்ட மறுத்த ஊடகங்கள், தற்போது, எண்ணிக்கையிலும், தீவிரத்திலும் குறைந்து காணப்படும் இந்தப் போராட்டத்தை, பரிதாபமாகக் காட்டுவதில், ஆர்வமாக உள்ளன.

அரசியலுக்கே உரிய பிரித்தாளும் சதி, போராடிவரும் விவசாயப் பெருமக்கள் நடுவே புகுத்தப்பட்டதால், எண்ணிக்கையும், தீவிரமும் குறைந்துவிட்டன. எனினும், தங்கள் போராட்டத்தைத் தொடரும் ஒரு சில விவசாயிகள், தேவைப்பட்டால், இந்தப் போராட்டம் 200வது நாளையும் காணக்கூடும் என்று கூறிவருகின்றனர். இவர்களது போராட்டத்தில், உண்மை, நீதி, ஆகியவை ஒருபுறமும், சுயநல அரசியல் மறுபுறமும் மோதிவருகின்றன.

விவசாயப் பெருமக்களின் போராட்டம் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில், இன்று, பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்துவருகின்றன. கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய முழு அடைப்பையும் மீறி, மக்கள் தெருக்களில் இறங்கி போராடிவருகின்றனர். உலகில் நடைபெறும் போராட்டங்களை கணித்துவரும் அமைப்பான, Carnegie’s Global Protest Tracker என்ற அமைப்பு, 2020ம் ஆண்டில், நான்கு நாள்களுக்கு ஒரு போராட்டம், உலகின் வெவ்வேறு நாடுகளில் ஆரம்பமாயின என்றும், இவற்றில் ஒரு சில, குறுகியகாலப் போராட்டங்களாகவும், ஒரு சில, நீண்டகாலப் போராட்டங்களாகவும் அமைந்துள்ளன என்றும், கூறியுள்ளது.

இந்தப் போராட்டங்களில் பல, அரசியல் உலகை ஆக்ரமித்திருக்கும் ஊழலுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள் என்று, இந்த அமைப்பினர் கூறுகின்றனர். தங்கள் ஊழல் அம்பலமாவதைக் கண்டு, கலக்கம் அடைந்த பல அரசுகள், வெகுக் கடுமையான அடக்குமுறைகளை போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டன. 2019ம் ஆண்டின் இறுதியில், சீன அரசு, ஹாங்காங் போராட்டக்காரர்கள்மீது நடத்திய அடக்குமுறைகளும், இவ்வாண்டு, சனவரி 26, இந்தியாவின் குடியரசு நாளன்று, டில்லியில், இந்திய அரசு, விவசாயப் பெருமக்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளும், பிப்ரவரி மாதத் துவக்கத்திலிருந்து, மியான்மார் நாட்டு இராணுவம், அந்நாட்டின் போராட்டக்காரர்கள் மீது நடத்திவரும் அத்துமீறிய அடக்குமுறைகளும் நமக்குத் தெரிந்ததே.

இத்தகைய ஒரு சூழலில் வாழும் நாம், 2ம் திருப்பாடலில் தேடலை மேற்கொண்டுள்ளோம். நேர்மையற்ற இவ்வுலகின் எண்ணங்களுக்கும், நீதியும், நேர்மையுமான இறை உண்மைகளுக்கும் இடையே எழும் மோதல்களை, இத்திருப்பாடல், வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இறைவன் வகுத்த நன்னெறியை எள்ளி நகையாடும் இவ்வுலக அரசியல் போக்குகள், இறுதியில் இறைவனால் நொறுக்கப்படும் என்பதை, இத்திருப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. அத்துடன், அரசியல் உலகம் பின்பற்றும் தீய நெறிகள், நம் வாழ்வில், எவ்வளவுதூரம் ஊடுருவியுள்ளன என்பதை ஆய்வு செய்யவும், இத்திருப்பாடல் நம்மை அழைக்கிறது. இவ்வுலகம், இறை உலகம் என்ற இரு உலகங்களுக்கிடையே நிலவும் மோதலை, 2ம் திருப்பாடலின் முதல் வரிகள், இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றன:
திருப்பாடல் 2:1-2
வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?  ஆண்டவருக்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்.

இறைவனுக்கு எதிராகவோ, இறைவனால் தேர்ந்துகொண்ட அரசருக்கு எதிராகவோ, இவ்வுலக அரசர்கள், நேருக்கு நேர் நின்று மோத இயலாது என்பதால், அவர்கள், 'சூழ்ச்சி', 'சதி' என்ற மறைமுகமான, குறுக்கு வழிகளைத் தேடுகின்றனர் என்பதை, திருப்பாடலின் ஆசிரியர், இப்பாடலின் துவக்கத்திலேயே தெளிவாகக் கூறுகிறார்.

பிரெஸ்பிட்டேரியன் சபையில் இறை ஊழியராகப் பணியாற்றும் Douglas Douma என்பவர், 2ம் திருப்பாடலை மையப்படுத்தி வழங்கியுள்ள தியானச் சிந்தனைகளின் உதவியோடு நம் இன்றையத் தேடலை மேற்கொள்வோம் என்று, சென்றத் தேடலின் இறுதியில் கூறினோம். இன்று தொடர்கிறோம். இறைவனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தும் இவ்வுலகம் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறதா? என்ற கேள்வியுடன், டக்ளஸ் அவர்கள், தன் சிந்தனைகளைத் துவக்கியுள்ளார்.

இவ்வுலகம் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறதா? என்ற கேள்விக்கு, நம்மில் பலர் மிக விரைவாகவும், மிகத் திண்ணமாகவும், "ஆம்" என்று பதில் கூறியிருப்போம். கடந்த சில ஆண்டுகளாகவே, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மதம் என்ற பல தளங்களில், நன்னெறிக் கட்டுப்பாடுகள் எளிதில் மீறப்படுவதை உணர்ந்து வருகிறோம். இவ்வுலகம் கட்டுப்பாடின்றி செல்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம், அண்மைய ஆண்டுகளில், உலகின் பல நாடுகளில், மீண்டும், மீண்டும் இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்துவருகின்றன. இந்தப் பேரிடர்களுக்கு, இன்றைய தலைமுறையின் அளவுகடந்த பேராசையே காரணம் என்பதை உணர்ந்த இளைய சமுதாயம், இந்தப் பூமிக்கோளத்தைக் காப்பதற்கு, Greta Thunberg என்ற இளம்பெண் உருவாக்கிய இயக்கத்தில் இணைந்தனர். "எதிர்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" (Fridays for Future) என்ற பெயரில், மாணவர்களும், மாணவியரும், வகுப்புகளைப் புறக்கணித்து, வீதிகளுக்கு வந்து போராடினர். இன்று, உலகின் அனைத்து கண்டங்களிலும் 7,500க்கும் மேற்பட்ட நகரங்களில் 1 கோடியே 40 இலட்சம் இளையோர், இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாகப் பணியாற்றுகின்றனர்.

சுயநலத்தாலும், பேராசையாலும், இயற்கையை அளவுக்குமீறி சீரழித்ததன் விளைவாக, 2019ம் ஆண்டின் இறுதியில், கோவிட்-19 பெருந்தொற்று வெடித்தது. இந்தப் பெருந்தொற்று உருவாக்கிய பேரச்சத்தை மூலதனமாக்கி, பல நாடுகளின் அரசுகள், கடினமான அடக்குமுறைகளைத் திணித்து, அதே வேளையில், தங்களுக்குச் சாதகமான அரசியல் ஆதாயங்களையும் தேடிக்கொண்டன.

நன்மைக்கும், தீமைக்கும் இடையே தொடர்ந்துவரும் இந்தப் போராட்டத்தில், தீமையே வென்றுவருவதைப்போன்ற ஓர் உணர்வு எழுகிறது. நன்மை, நீதி ஆகியவற்றை, தங்கள் அதிகாரத்தைக் கொண்டு அழித்துவிடுவோம் என்ற இறுமாப்புடன், அரசியல்வாதிகள் கூறும் சொற்களை, 2ம் திருப்பாடல், இவ்வாறு பதிவு செய்துள்ளது:
திருப்பாடல் 2:2-3
ஆண்டவருக்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; 'அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள்.

உண்மைக்கும், நீதிக்கும், எதிராக எழும் அரசியல் தலைவர்கள், தங்களுக்குள் கூடிவந்து சதி செய்யும்போது, அவர்களை வழிநடத்துவது, இன்னும் கூடுதலான சுயநலமும், பேராசையுமே. இவர்களது பரிதாபமான முயற்சிகளைக் கண்டு, "விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார். அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்" (திபா 2:4-5) என்று ஆசிரியர் கூறுகிறார்.

இதைத் தொடர்ந்து, கடவுள் தான் தேர்ந்துகொண்ட அரசரை எவ்விதம் நடத்துவார் என்றும், அந்த அரசருக்கு அவர் வழங்கும் அதிகாரங்களையும் 2ம் திருப்பாடலின் 6 முதல் 9 முடிய உள்ள நான்கு இறைவாக்கியங்களில் ஆசிரியர் விளக்கிக்கூறியுள்ளார்.

தான் தேர்ந்தெடுத்த அரசரை, இறைவன் திருநிலைப்படுத்தும் வேளையில், அவர் கூறும் அன்பு நிறைந்த சொற்கள் இதோ: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்." (திபா 2:7ஆ) இச்சொற்கள், நம்மை, நற்செய்திகளில் பதிவாகியுள்ள இரு நிகழ்வுகளுக்கு அழைத்துச்செல்கின்றன. இயேசு, திருமுழுக்கு பெற்றபோது ஒலித்த, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" (மாற்கு 1:11)  என்ற சொற்களும், அவர், தோற்றமாற்றம் பெற்றபோது ஒலித்த, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத்தேயு 17:5) என்ற சொற்களும், நம் நினைவில் நிழலாடுகின்றன.

இத்திருப்பாடலின் இறுதி மூன்று இறைவாக்கியங்கள், இவ்வுலக மன்னர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கையாக, அறிவுரையாக ஒலிக்கின்றன. இந்த இறைவாக்கியங்களை, இன்றைய உலகத் தலைவர்கள் கேட்டு, தங்கள் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும், தங்கள் வாழ்வு முழுவதையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த வேண்டுதலுடன், இச்சொற்களுக்கு நாம் செவிமடுப்போம்:
திருப்பாடல் 2:10-12
ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்; இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும; அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

அநீதியில் மூழ்கி சுகம் கண்டுவரும் அரசுத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் திருப்பாடலின் ஆசிரியர் வழங்கும் எச்சரிக்கைக்கு செவிமடுக்கவேண்டும் என்று சிந்திக்கும் இவ்வேளையில், நமக்கும் இந்த எச்சரிக்கையும் ஆலோசனையும் தேவை என்பதை உணர்ந்து, அச்சத்தோடு ஆண்டவரை பின்பற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். ஏனேனில், "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு." (நீதிமொழிகள் 9:10)

No comments:

Post a Comment