28 September, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 6

Under the Shadow of His Wings

செப்டம்பர் 29, இப்புதனன்று, மிக்கேல், கபிரியேல், இரபேல் என்ற மூன்று தலைமை வானத்தூதர்களின் திருநாளைச் சிறப்பிக்கிறோம். வானதூதர்கள், உடலும், உருவமும் அற்றவர்கள் என்பதை நாம் அறிந்திருந்தாலும், அவர்களை நாம் ஓவியங்களில் வடிக்கும்போது, இறக்கைகள் கொண்ட மனிதப் பிறவிகளைப்போல் சித்திரிக்கிறோம்.
ஒரே கடவுளைப் பறைசாற்றும் கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம் ஆகிய மூன்று மறைகளின் புனித நூல்களில், வானத்தூதர்களைப் பற்றியும், அவர்களது இறக்கைகள் பற்றியும் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வானத்தூதர்களின் இறக்கைகள், கடவுளின் சக்தியையும், அவர் தரும் பாதுகாப்பையும் உணர்த்தும் அடையாளங்கள் என்பதைக்கூறும் பகுதிகளை, இம்மூன்று மறைகளின் புனித நூல்களில் காணலாம்.

யூத மரபில் வளர்ந்த தாவீது, கடவுளின் பாதுகாப்பை வேண்டி, 17வது திருப்பாடலில் எழுப்பும் வேண்டுதலில், 'கண்ணின் மணி', மற்றும், 'சிறகுகளின் நிழல்' என்ற இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளதில் வியப்பில்லை. இவ்விரு உருவகங்களில், 'கண்ணின் மணி' என்ற உருவகத்தை சென்ற விவிலியத்தேடலில் நாம் சிந்தித்தோம். இன்று, 'சிறகுகளின் நிழல்' என்ற உருவகத்தில் நம் தேடலைத் தொடர்கிறோம்.

'சிறகுகளின் நிழல்', அல்லது, 'இறக்கைகளின் நிழல்' என்ற உருவகம், இன்னும் சில திருப்பாடல்களில் இடம்பெற்றிருப்பதை நாம் காண்கிறோம்.
கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். (திருப்பாடல் 36:7) என்று, 36வது திருப்பாடலிலும்,
கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். (திருப்பாடல் 57:1) என்று, 57வது திருப்பாடலிலும்,
நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். (திருப்பாடல் 63:7) என்று, 63வது திருப்பாடலிலும்,
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். (திருப்பாடல் 91:4) என்று, 91வது திருப்பாடலிலும், காண்கிறோம்.

கடவுளின் கனிவையும், பாதுகாப்பையும் உணர்த்த, இயேசு, நற்செய்தியில், இறக்கை என்ற உருவகத்தைப் பயன்படுத்தியுள்ளார். எருசலேம் நகரைக்குறித்து அவர் வேதனையுடன் எழுப்பும் புலம்பல், மத்தேயு, மற்றும் லூக்கா ஆகிய இரு நற்செய்திகளில் இவ்வாறு பதிவாகியுள்ளது: “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!" (மத்தேயு 23:37; லூக்கா 13:34)

இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும் 'கண்ணின் மணி', மற்றும் 'சிறகுகளின் நிழல்' என்ற இரு உருவகங்களை, தாவீது, 17வது திருப்பாடலில், இணைத்து கூறியிருப்பதுபோல், இணைச்சட்ட நூலில் இவ்விரு உருவங்களும் இணைத்து சொல்லப்பட்டுள்ளன. இணைச்சட்ட நூலின் இறுதியில், மோசே தன் மரணத்திற்கு முன், இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு பாடலையும் ஆசீரையும் வழங்குகிறார்.
பின்னர் இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார் (இணைச்சட்டம் 31:30) என்ற அறிமுகத்துடன் ஆரம்பமாகும் இப்பாடல், 43 இறைவாக்கியங்களாக பதிவாகியுள்ளது. இப்பாடலின் 9 மற்றும், 10 ஆகிய இரு இறைவாக்கியங்களில், இஸ்ரயேல் மக்களை, குறிப்பாக, யாக்கோபை ஆண்டவர் எவ்வாறு காப்பார் என்று கூறும்போது, 'கண்ணின் மணி', மற்றும் 'சிறகுகள்' என்ற இரு உருவகங்களை மோசே ஒன்றன்பின் ஒன்றாகக் கூறியுள்ளார்:
இணைச்சட்டம் 32:9-12
ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே! பாழ்வெளியில் அவர் அவனை கண்டார்; வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்; அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்; கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார். கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்துசெல்வது போலும் ... ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.

இஸ்ரயேல் மக்களையும், யாக்கோபையும் இறைவன் கண்ணின் மணியாக, கழுகின் சிறகுகளைப்போல் அணைத்துக் காத்ததற்குக் காரணம், அம்மக்களைச் சூழ்ந்திருந்த ஏனைய இனத்தவர் மற்றும் ஏனைய தெய்வங்கள் என்பதை மோசே தன் இறுதிப் பாடலில் கூறியுள்ளார். அதேவண்ணம், இறைவன் கண்ணின் மணியாக தன்னைக் காக்கவேண்டும், என்றும், சிறகுகளின் நிழலில் தன்னை மூடிக்கொள்ளவேண்டும் என்றும் தாவீது வலியுறுத்திக் கூறுவதன் காரணம், அவரைச் சூழ்ந்திருக்கும் பொல்லார் மற்றும் எதிரிகள் என்பதை, 17ம் திருப்பாடலின் 9 முதல் 12 முடிய உள்ள 4 இறைவாக்கியங்களில் கூறியுள்ளார்.
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும். (திருப்பாடல் 17:8-9) என்று வேண்டும் தாவீது, தன் எதிரிகள் எத்தகையவர் என்பதையும், அவர்களால் தனக்கு உருவாகியிருக்கும் ஆபத்தையும், அடுத்த 3 இறைவாக்கியங்களில் விவரிக்கிறார்.
அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள். தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள். அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்; இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்; அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர். பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்; மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர். (திருப்பாடல் 17:10-12)

தன்னை, எதிரிகள் சூழ்ந்திருக்கும் வேளையில், இறைவன் தன்னை 'சிறகுகளின் நிழலில்' மூடிக்கொள்ளவேண்டும் என்று தாவீது வேண்டியது, அத்தகையை நெருக்கடியானச் சூழல்களில் வாழ்ந்த பலருக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்தது என்று எண்ணிப்பார்க்கலாம். அவர்களில் ஒருவர், அசிசி நகர் புனித பிரான்சிஸ் துறவுசபையைச் சேர்ந்த அருள்பணி Gereon Goldmann அவர்கள்.
ஜெர்மன் நாட்டில் பிறந்த Goldmann அவர்கள், அருள்பணித்துவப் பயிற்சியை முடித்தபின், அந்நாட்டின் நாத்சி படையில் வலுக்கட்டாயமாக பணியில் இணைக்கப்பட்டார். நாத்சி வதைமுகாம்களில், உடன் இராணுவ வீரர்கள் பலரின் கிறிஸ்தவ நம்பிக்கையைக் காக்கவும், வதைமுகாமில் அடைபட்டோர் நடுவிலும், தன் அருள்பணித்துவ பணிகளைத் தொடர்ந்தார். 'பீறிப்போடத் துடிக்கும் சிங்கம்போல' அவரைச் சூழ்ந்திருந்த நாத்சி வெறியர்கள் நடுவே, அவர் ஆற்றியப் பணிகளைப்பற்றி, 2000மாம் ஆண்டு அவர் ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூலுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பு, "The Shadow of His Wings: The True Story of Fr. Gereon Goldmann, OFM" அதாவது, "அவரது சிறகுகளின் நிழல்: அருள்பணி Gereon Goldmannன் உண்மைக்கதை"
The Shadow of His Wings – The book-cover

"ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்ற வேண்டுதலுடன், தன் வழக்கைத் துவக்கிய தாவீது, தன்னைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களை இறைவனிடம் கூறியபின், தனக்கெதிராக திரண்டிருக்கும் பொல்லாதவருக்கு, ஆண்டவர் வழங்கக்கூடிய தண்டனைகளை, அடுத்த இரு இறைவாக்கியங்களில் பட்டியலிடுகிறார்:
ஆண்டவரே, எழுந்து வாரும்; அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடியும்; பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும். ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து — இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து — உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். (திருப்பாடல் 17:13-14அ)
ஏனையத் திருப்பாடல்களைப்போல், 17வது திருப்பாடலையும், தாவீது, நம்பிக்கை நிறைந்த சொற்களுடன் நிறைவுசெய்துள்ளார். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவுபெறுவேன். (திருப்பாடல் 17:15)

இத்திருப்பாடலின் இறுதி இரு இறைவாக்கியங்கள், எதிரெதிர் துருவங்களாக விளங்குகின்றன என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். "இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும்" மனிதர்களைப்பற்றி 14ம் இறைவாக்கியத்தில் கூறும் தாவீது, அடுத்த இறைவாக்கியத்தில், தன் கதி, இறைவனின் முகத்தைக் கண்டு நிறைவடைவது என்று கூறி முடிக்கிறார்.

தாவீது, தனக்குள்ளேயே ஒரு நீதிமன்றத்தை அமைத்து, தன் நிலையையும், தன் எதிரிகள் நிலையையும் விளக்கிக் கூறி, இறுதியில் "மாண்புமிகு நீதிபதி அவர்களே..." என்று, இறைவனிடம் தன் விண்ணப்பங்களைச் சமர்பித்துள்ளார், இந்தத் திருப்பாடல் வழியாக.

நாமும் வாழ்க்கையில் பலமுறை நம் மனங்களில், நம் குடும்பங்களில், நீதி மன்றங்களை அமைக்கிறோம். வாதிடுகிறோம் தீர்ப்பும் சொல்கிறோம். அந்நேரங்களில், தாவீது, இத்திருப்பாடல் வழியாக சொல்லித்தரும் ஒரு சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

நாம் வாழ்க்கையில் வழக்குகளை உருவாக்கும்போது, அல்லது சந்திக்கும்போது, நம்மைப்பற்றிய தெளிவும், நாம் சந்திக்கும் பிரச்சனைகளைப்பற்றிய தெளிவும் இருக்கவேண்டும். இந்தத் தெளிவு இருந்தால், நம் வழக்குகளின் பிரச்சனைகள் பாதி தீர்த்துவிடும். தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள் சூழும்போது, இறைவன் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால், மீதிப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்... இதைத்தான் 17வது திருப்பாடலின் வழியே தாவீது நமக்குச் சொல்லித்தருகிறார்.

தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள், வழக்குகள் மத்தியில், இறைவன் மீது நம் நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்துவதற்கு உதவியாக, 17வது திருப்பாடலின் ஒருசில வரிகள் நம் மனங்களில் இன்றும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து ஒலிக்கட்டும்.
உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்: விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். (திருப்பாடல் 17:7-8,15)

No comments:

Post a Comment