Showing posts with label Bible - Lent - Words on Calvary 2 - Forgive them. Show all posts
Showing posts with label Bible - Lent - Words on Calvary 2 - Forgive them. Show all posts

04 March, 2020

விவிலியத்தேடல்: சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 2


Father walking with the tiny son

விதையாகும் கதைகள் : தந்தை, மகன், பேரன் என்ற வரிசையில்....

சிறந்த அறிஞரெனக் கருதப்பட்ட சென் குரு ஒருவரை, அவ்வூரில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவர் அணுகி, தானும், தன் குடும்பத்தினரும், தலைமுறை, தலைமுறையாகப் பயன்படுத்தக்கூடிய ஆசி மொழிகளை எழுதித் தரும்படி, வேண்டினார். சென் குரு, ஒரு பெரிய தாளை எடுத்து, அதில், "தந்தை சாகிறார், மகன் சாகிறான், பேரன் சாகிறான்" என்ற சொற்களை எழுதித் தந்தார்.
அதை வாசித்த செல்வந்தர், மிகுந்த கோபம் கொண்டார். "என் குடும்பத்தினருக்கும், சந்ததியினருக்கும், மகிழ்வையும், வளத்தையும் கொணரும் ஆசி மொழிகளைத்தானே உம்மிடம் கேட்டேன். உள்ளத்தை வதைக்கும் சாபம் போன்ற இச்சொற்களை ஏன் எழுதித் தந்தீர்?" என்று குருவிடம் கேட்டார், செல்வந்தர்.
அமைதியானப் புன்சிரிப்புடன், அந்த சென் குரு, விளக்கம் தந்தார். "உங்களுடைய மகன், உங்களுக்கு முன்னர் இறந்தால், அது, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தாங்கமுடியாத துயரம் தரும். அதேபோல், உங்கள் பேரன், உங்கள் மகனுக்கு முன்னதாக இறந்துபோனால், அது உங்கள் தலைமுறையினரை வேதனையில் ஆழ்த்தும். உங்கள் குடும்பத்தினர், தலைமுறை, தலைமுறையாக, நான் எழுதித் தந்துள்ள இந்த வரிசையில் இறந்தால், அதுவே, இயற்கையின் நியதிப்படி அமையும். அதுவே, உங்களுக்கு மகிழ்வையும், நிறைவையும் அளிக்கும்" என்று கூறினார், சென் குரு.
நம் வாழ்வில், எது, மகிழ்வையும், நிறைவையும் வழங்குகிறது?

Father, forgive them…

சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 2

பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தின் சில காட்சிகள், நம் விவிலியத் தேடலை, இன்று, துவக்கிவைக்கின்றன. என்ன படம் என்பது தேவையில்லை. தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் வரும் கதையே, இத்திரைப்படத்திலும் காட்டப்பட்டது. சமுதாயத்தில் நடக்கும் பல தீமைகளை, தனி ஒருவராய்த் தீர்த்துவைக்கும் ஒரு ஹீரோவின் கதை அது. தீமைகளை ஒழிப்பதற்கு, தீமைகள் செய்யும் வில்லன்களைத் தீர்த்துக்கட்டும் ஹீரோ, இத்திரைப்படத்திலும் காட்டப்பட்டார். அண்மைய ஆண்டுகளில், நமது நாயகர்கள், ஏதாவது ஒரு வசனத்தை, அல்லது, ஒரு செய்கையை, திரைப்படம் முழுவதும், அடிக்கடிச் சொல்வார்கள், செய்வார்கள். மக்களின் கைத்தட்டலைப் பெறுவார்கள்.
அதேபோல், இத்திரைப்படத்திலும் நடந்தது. தீமை செய்பவர்களை ஹீரோ சந்திப்பார். அடித்து நொறுக்குவார். அவரது அடிகளைத் தாங்கமுடியாமல், அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். உடனே அவர், "மன்னிப்பு... எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை" என்று சொல்லியபடி, மன்னிப்பு கேட்ட வில்லன்களை, சின்னாபின்னமாக்குவார். திரை அரங்கில் விசிலும், கைத்தட்டலும், காதைப்பிளக்கும்.
நீதியை நிலைநாட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, நம் திரைப்படங்களில், வன்முறைகளை, சர்வ சாதாரணமாக செய்யும் நம் நாயகர்களுக்கு, மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காது. மன்னிப்பு என்ற சொல், அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்று, ஒரு சில ஹீரோக்கள் வசனம் பேசியிருக்கிறார்கள்.

இதற்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சி, அன்று, கல்வாரியில் நடந்தது. விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும், சிலுவையில், மரண போராட்டம் நடத்திவந்த இயேசு, மன்னிப்பு, தனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், செயல் என்று நிரூபித்தார். தன்னை, மூன்று நாட்களாய், பலவகையிலும் சித்ரவதை செய்தது போதாதென்று, இன்னும், சிலுவையைச் சுற்றிநின்று, கேலி செய்து கொண்டிருந்த உரோமைய வீரர்கள், அவர்களுக்குப் பின்னிருந்து, அவர்களைத் தூண்டிய, அரசுத்தலைவர்கள், மதத்தலைவர்கள் அனைவரையும், இயேசு, மனதார மன்னித்தார். அவர்களை, இறைவனும் மன்னித்து, காக்கவேண்டுமென வேண்டிக்கொண்டார். 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்று அவர்களுக்காகப் பரிந்து பேசினார்.
மிருகங்களாய் மாறிய வில்லன்களைப் பழிவாங்க, நமது திரைப்பட நாயகர்கள், வில்லன்களைக் காட்டிலும் சக்திமிகுந்த மிருகங்களாய் மாறுவர். இயேசுவோ, மிருகங்களாய் மாறி தன்னை வதைத்த மனிதர்களை, மீண்டும் மனிதர்களாய் மாற்ற, தன் மரண வேதனையிலும் முயன்றார்.

எந்த ஒரு மனிதரும் மிருகமாகவோ, மனிதராகவோ, புனிதராகவோ, தெய்வமாகவோ மாற, அவரது வளர்ப்பு, ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. சிறுவயதில் கற்றுக் கொள்ளும் பாடங்கள், இறுதிவரை, ஒருவரின் வாழ்வை உருவாக்கும், மாற்றும் என்பது, நமக்குத் தெரிந்த உண்மை.
இயேசுவின் வாழ்க்கையைக் கொஞ்சம் சிந்திப்போம். அவர், சிறு வயது முதல், உரோமைய அராஜகத்தை, பல வழிகளிலும் பார்த்து வந்தவர். அந்த அராஜகத்தை ஒழிக்க, அந்த அராஜகத்தை வெல்ல, அவரும் ஆசைபட்டிருப்பார். ஒன்றை வெல்வதற்கு, அதைக் கொல்ல வேண்டுமென்று கட்டாயம் இல்லையே! வேறு வழிகள் உள்ளனவே! அவற்றில் மிகவும் உன்னதமான வழி, அன்பு வழி! அன்பினால் எதையும் வெல்ல முடியும் என்பதைத்தான், இயேசு, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், சிறப்பாக, தன் சிலுவை மரணத்திலும் நிரூபித்தார்.

சிறு வயது முதல், இந்த அன்பு வழியை, அவருக்குப் போதித்து, அவருக்கு வழிகாட்டி வாழ்ந்துவந்த மரியா, யோசேப்பு இருவரையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லித்தந்தவைகளும், அவர்கள் வாழ்ந்த விதமும், இயேசுவை, உருவாக்கியிருக்க வேண்டும். மன்னிப்பு என்ற உன்னத உணர்வை, குழந்தை இயேசுவுக்கு, சிறுவன் இயேசுவுக்கு, அந்தப் பெற்றோர், ஊட்டி வளர்த்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஓர் அன்புச் சூழலில் அவர் வளர்ந்து வந்ததால், அவரால், ஒரு பரந்த மனதுடன் வாழ முடிந்தது.
பிறந்தது முதல், பல கொடுமைகளுக்கு உள்ளாகி, அதனால் மனம், உடல் அனைத்தும், கசப்பில், வெறுப்பில் தோய்ந்திருக்கும் குடும்பங்களை, சிறப்பாக, அச்சூழலில் வளரும் குழந்தைகளை எண்ணிப் பார்ப்போம், அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

இயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும், மன்னிப்பைப் பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். நோயுற்றோரைக் குணமாக்கியபோது, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன (மத்தேயு 9:2) என்று கூறி குணம் அளித்தார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை தீர்ப்பிடாமல் மன்னித்து அனுப்பினார். (யோவான் 8) காணாமற்போன மகன் போன்ற அற்புதமான உவமைகள் வழியே (லூக்கா 15: 11-32) கடவுளின் நிபந்தனையற்ற அன்பை, அதனால் வரும் மன்னிப்பை, அழகாகச் சொன்னார்.

மன்னிப்பைப்பற்றி இயேசு சொன்னவை, செய்தவை அனைத்தையும் சிந்திக்க, பல விவிலியத்தேடல்கள் தேவைப்படும். இன்று, மன்னிப்பைப்பற்றி இயேசு கூறிய ஒரே ஒரு கருத்தை மட்டும் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? என்ற கேள்விக்கு, இயேசுவின் பதிலைப் புரிந்துகொள்ள முயல்வோம். நம் தேடலுக்கு உதவியாக, இரு நற்செய்தி வாசகங்களைக் கேட்போம்:
லூக்கா நற்செய்தி 17:3-4
அக்காலத்தில் இயேசு கூறியது: உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.
மத்தேயு நற்செய்தி 18:21-22
பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

ஏழு முறை மன்னிக்கலாமா? இது, பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது, இயேசுவின் பதில். தயவுசெய்து, பெருக்கல் கணக்கை ஆரம்பிக்கவேண்டாம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது, கணக்குப் பாடம் அல்ல.
யூதர்களுக்கு, 7,12,40... போன்ற ஒரு சில எண்கள், பொருளுள்ளவையாக இருந்தன. இவற்றில், ஏழு என்பது, ஒரு நிறைவான எண். ஆறு நாட்கள் இந்த உலகைப் படைத்து, ஏழாவது நாள் மன நிறைவோடு இறைவன் ஓய்வெடுத்தார் என்று தொடக்க நூலில் நாம் வாசிக்கிறோம். எனவே, பேதுரு, தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப்பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப்பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி, எப்போதும் மன்னிக்கவேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை, நாம் பின்வரும் சொற்களில் கற்பனை செய்து பார்க்கலாம்: பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும் என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால், உள்ளம் இறந்துவிடும்.இவ்வாறு சொல்வதற்கு பதில், இயேசு, "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு, தன் இறுதி மூச்சுவரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியதுபோல் எண்ணற்ற மனிதர்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். மனித வரலாற்றில், புனிதர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் மன்னிப்பின் அற்புத சாட்சிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் வெளியான ஒரு செய்தி இது.
2005ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இரமதான் பண்டிகை காலத்தில், அகமத் கத்தீப் (Ahmed Khatib) என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன், இஸ்ரேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மைத் துப்பாக்கியை, உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த வீரர்கள், அவசரப்பட்டு, அகமதைச் சுட்டுவிட்டனர்.
தங்கள் தவறை உணர்ந்ததும், அவ்வீரர்கள், அச்சிறுவனை, இஸ்ரேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றனர். அவனது பெற்றோரையும் உடன் அழைத்துச்சென்றனர். அகமதைக் காப்பாற்ற முடியவில்லை. அந்நேரத்தில், அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவர்கள், அகமதின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். அந்த உறுப்பு தானத்தை, இஸ்ரேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே அவர்கள் செய்தனர்.
தங்கள் மகனைக் கொன்றது, இஸ்ரேல் படையினர் என்று தெரிந்தும், அப்பகுதியிலேயே, தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது, மன்னிப்பின் உச்சக்கட்டம்.

இஷ்மாயில், ஆப்லா (Ishmael, Ablah) என்ற அந்த பெற்றோர், எளிய மனிதர்கள். இஷ்மாயில், ஒரு மெக்கானிக். அப்பெற்றோர் எடுத்த முடிவைப்பற்றி, பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, இஷ்மாயில் சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரேல் குழந்தைகள், இனிமேலாகிலும், சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான், இந்த உறுப்புகளை, நாங்கள் தானம் செய்தோம்."
அந்தப் பெற்றோரை, இஸ்ரேல், மற்றும், பாலஸ்தீனிய அரசுகள் பாராட்டின. பல தீவிரவாதக் குழுக்களும் பாராட்டின. அரசுகளும், தீவிரவாதக் குழுக்களும் கொண்டு வரமுடியாத, பாலஸ்தீனிய-இஸ்ரேல் ஒப்புரவை, ஓர் எளிய மெக்கானிக் குடும்பம், ஒரளவாகிலும் கொண்டு வந்தது, மறுக்கமுடியாத உண்மை.

இது போன்ற ஆயிரமாயிரம் நிகழ்வுகள் நடந்தவண்ணம்தான் உள்ளன. இனியும் நடக்கும். அவ்வப்போது நடந்துவரும் இந்த அற்புதங்களை தினம் தினம் நடத்தினால், மன்னிப்பு மழையில் இவ்வுலகம் நனைந்தால், மன்னிப்பது, சுவாசிப்பதைப் போல், நம் ஒவ்வொருவருக்கும், நம் இயல்பாகவே மாறிவிட்டால்... இப்போது நாம் கூறியவை, அழகானக் கனவுகள் என்று மட்டும் எண்ணவேண்டாம். நாம் நினைத்தால், இக்கனவுகளை நனவாக்க முடியும். அதற்குத் தேவையான இறையருளை வேண்டுவோம்.