Showing posts with label Bible - Miracles - Raising Lazarus 10. Show all posts
Showing posts with label Bible - Miracles - Raising Lazarus 10. Show all posts

13 November, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 10


‘Uncle Raja’ with some of the children

இமயமாகும் இளமை - 'இராஜா மாமா'வின் பரிவினால் கல்வி

இலட்சுமி எட்டுவயது சிறுமியாக இருந்தபோது, அவரது அப்பா, தன் மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக, பாளையங்கோட்டையில் உள்ள மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். தாயும், தந்தையும் இன்றி, தவித்த சிறுமி இலட்சுமியை, அவரது பாட்டி, மிகுந்த முயற்சி எடுத்து படிக்கவைத்தார். ஆனால், வீட்டில் நிலவிய வறுமை காரணமாக, இலட்சுமி, தன் 13வது வயதில் படிப்பை நிறுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவ்வேளையில், கே.ஆர்.இராஜா என்ற இளையவர், அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். இன்று, 17 வயதான இளம்பெண் இலட்சுமி, பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார்.
தந்தையோ, தாயோ சிறையில் அடைக்கப்பட்டதால், துன்பங்களைச் சந்தித்துவரும் இலட்சுமி போன்ற பல நூறு சிறுவர், சிறுமியரை, இராஜா அவர்கள் படிக்கவைத்து வருகிறார். சிறைக்கைதிகளின் குழந்தைகள் கல்வி கற்பதற்கென்று, GNE என்றழைக்கப்படும் "சமத்துவத்திற்காக உலகளாவிய வலைப்பணி" (Global Network for Equality - GNE) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார், இராஜா.
சிறுவயதில், இராஜாவுக்கு கடுமையான காய்ச்சல் வந்தபோது, அவருக்குப் போடப்பட்ட ஒரு தவறான ஊசியால், இருகால்களிலும் உணர்வும், செயலும் இழந்த நிலையில் வாழ்பவர் இராஜா. அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வேளையில், பாளை மத்தியச் சிறைக்கு சமூகப்பணியாற்ற சென்றிருந்தார். அச்சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள், தங்கள் குழந்தைகள் படிக்க வசதியின்றி துன்புறுவதைப்பற்றி அவரிடம் கூறினர். அதைக் கேட்ட இராஜா அவர்கள், அக்குழந்தைகளின் கல்விக்காக, GNE என்ற சமுதாய அமைப்பை உருவாக்கினார். கைதிகளின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதும், கைதிகளின் குழந்தைகள் என்று அக்குழந்தைகள் மீது குத்தப்படும் முத்திரைகளால் உருவாகும் அவமானங்களைத் துடைப்பதும், இவ்வமைப்பின் குறிக்கோள்.
பல கல்வி நிறுவனங்களின் துணையோடு, இராஜா அவர்கள், 400க்கும் மேற்பட்ட குழந்தைகளை இதுவரை படிக்கவைத்துள்ளார். தன் பணியை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கும் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், இராஜா.
ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 13ம் தேதி, 'உலகப் பரிவு நாள்' (World Kindness Day) சிறப்பிக்கப்படுகிறது. இந்த நல்ல நாளில், 'இராஜா மாமா' என்று அன்போடு அழைக்கப்படும் இளையவர் இராஜா அவர்களின் பரிவு மிகுந்த பணியை, சிறப்பாக நினைவுகூர்கிறோம்.

Jesus said: “Roll the stone away!”

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 10

இயேசு, இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமையின் உச்சக்கட்ட நிகழ்வை, நற்செய்தியாளர் யோவான், இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

யோவான் நற்செய்தி 11: 38-44
இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. கல்லை அகற்றிவிடுங்கள் என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!என்றார். இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.

உயிரற்ற பிணமும், கடவுள் கைபட்டால், உயிர் பெறும். ஆனால், இறைவனின் சக்தி மட்டும் புதுமைகளை நிகழ்த்திவிட இயலாது. அப்படி ஆற்றப்படும் செயல்கள், வெறும் மந்திர, தந்திர நிகழ்வாக மாறிவிடும். இறைவனின் அருளும், சக்தியும் புதுமைகளாக மாற, மனிதரின் ஒத்துழைப்பு தேவை. பல நேரங்களில், இந்த ஒத்துழைப்பு, மனிதரிடம் உள்ள நம்பிக்கையின் வழியே வெளிப்படுத்தப்படுகிறது. இயேசு ஆற்றிய பல புதுமைகளில், "உன் நம்பிக்கை உன்னை குணமாக்கியது" என்று இயேசு கூறும் சொற்கள் வழியே, நம்பிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமையில்,  "ஆண்டவரே, இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" (யோவான் 11: 22) என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில், இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை, சூழ இருந்தவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, அவர் இலாசரின் கல்லறைக்கருகே நின்று, மூன்று கட்டளைகள் இடுகிறார்.

கல்லை அகற்றி விடுங்கள் என்பது, இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ" என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். அத்தகைய நிகழ்வு, இயேசு புதைக்கப்பட்ட கல்லைறையில் நிகழ்ந்ததென்று, நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.
மாற்கு நற்செய்தி 16: 2-4
வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள். "கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?" என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது, கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.

இலாசரின் கல்லறைக்கு முன் நின்ற இயேசு, ஒரு சொல்லால், அல்லது, ஓர் எண்ணத்தால், அந்தக் கல்லை அகற்றியிருக்க முடியும். அப்படி அவர் செய்திருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள்; இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது நமக்கு. இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. இயேசு தன் வலிமையையும், கடவுள் தன்மையையும் காட்சிப் பொருளாக்குவதற்கு புதுமைகள் செய்யவில்லை. மாறாக, சூழ நின்ற மக்களின் மனதிலும், வாழ்விலும், மாற்றங்களை உருவாக்க, அவர் புதுமைகள் ஆற்றினார்.

இலாசரின் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள், நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அங்கு வந்தவர்கள். அந்த அவநம்பிக்கைக்கு குரல் கொடுக்கும் வண்ணம், மார்த்தா இயேசுவிடம் பேசுகிறார். கல்லை அகற்றி விடுங்கள் என்று இயேசு சொன்னதும், மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" (யோவான் 11: 39) என்று கூறுகிறார்.

சில மணித்துளிகளுக்கு முன், மார்த்தா, இயேசுவைச் சந்தித்தபோது, "ஆண்டவரே, இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றும், "ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" (யோவான் 11: 22,27) என்றும், இரு ஆழமான நம்பிக்கை அறிக்கைகளை வெளியிட்டார். இப்போது, கல்லறையை நெருங்கியதும், அவர் மனம் தடுமாறுகிறது. தன் சகோதரன் புதைக்கப்பட்டு நான்கு நாள்கள் ஆகிவிட்டன என்ற எண்ணம் அவர் உள்ளத்தை நிரப்புகிறது. மார்த்தாவிடம், நம்பிக்கையும், தடுமாற்றமும் மாறி, மாறி நிகழ்வதைக் காணும் வேளையில், நம் மனதில், கடல் மீது நடக்கத் துணிந்த பேதுரு நினைவுக்கு வருகிறார்.

இயேசு கடல்மீது நடந்த நிகழ்வு, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. இவற்றில், நற்செய்தியாளர் மத்தேயு மட்டும், இன்னுமொரு நிகழ்வை இங்கு இணைக்கிறார். அதுதான், பேதுரு கடல் மீது நடந்த நிகழ்வு. (மத்தேயு நற்செய்தி 14: 26-32)

பேதுரு நீரின்மேல் நடந்ததையும், பின்னர் தடுமாறி, தண்ணீரில் மூழ்கியதையும் மையப்படுத்தி, நம் விசுவாச வாழ்வில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி இறையியல் பேராசிரியரான அருள்பணி Ron Rolheiser அவர்கள் அழகான விளக்கமளித்துள்ளார். நம் விசுவாச வாழ்வில், சிகரங்களைத் தோட்ட நேரங்கள் உண்டு; பாதாளத்தில் புதைக்கப்பட்ட நேரங்களும் உண்டு. இந்த மாற்றத்தை, அருள்பணி Rolheiser அவர்கள் கூறும்போது, நம் விசுவாசம், சில நேரங்களில், நம்மை, தண்ணீரின் மேல் நடக்க வைக்கிறது; வேறு சில நேரங்களில், தண்ணீரில் போட்ட கல்லைப்போல, மூழ்கச் செய்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இந்த மாற்றத்திற்கு அவர் கூறும் ஒரு முக்கிய காரணம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

எப்போதெல்லாம் நம் விசுவாசம் இறைவனை மையப்படுத்தியிருந்ததோ, அப்போதெல்லாம் நம்மால் தண்ணீர்மேல் நடக்க முடிந்தது. ஒரு சில வேளைகளில், நாம் ஆற்றும் செயல்கள் நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவதால், நமது கவனம் இறைவனைவிட்டு விலகி, நமது சக்தி, நமது திறமை இவற்றின் மீது திரும்பி, நம்மால் இது முடியுமா என்று கணக்கிட வைக்கின்றன. அவ்வேளையில், நாம் தண்ணீரில் மூழ்கத் துவங்குகிறோம். இதுதான் பேதுருவுக்கு நிகழ்ந்தது.

நானும் நீரில் இறங்கி நடக்கவா?” என்று, பேதுரு, ஒரு குழந்தைபோல பேசுகிறார். இயேசுவும் குழந்தையாக மாறி, வா என்று கூறி, ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடந்துவரச் சொல்லி அழைத்தது, ஒரு சவால். அதுவும், புயல், அலை என, பயமுறுத்தும் சூழலில், இயேசு, பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது, உண்மையிலேயே பெரியதொரு சவால்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றோர் அம்சம் என்னவென்றால், பேதுருவுக்கு அந்தச் சவாலான அழைப்பைத் தருவதற்கு முன்பு, இயேசு, காற்றையும், கடலையும் அமைதிப் படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகுதான், இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக, அந்தப் புயலின் நடுவில், இறைவன் காத்துக்கொண்டிருப்பார்; துணிந்து சென்று, அவரைச் சந்திக்கலாம் என்பதை, இந்நிகழ்வின் வழியே இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகிறார்.

இயேசு பேதுருவிடம், "வா" என்றழைத்ததும், தான் அமர்ந்திருந்த படகு தந்த பாதுகாப்பை உதறிவிட்டு, இயேசுவை நோக்கிச் செல்ல, அவர், நம்பிக்கையுடன், தண்ணீரில் தடம் பதித்தார். ஆனால், ஒரு சில நொடிகளில், தான் ஆற்றும் செயலின் அற்புதம் அவரைத் திக்குமுக்காட வைத்தது. போதாததற்கு, சூழ்ந்திருந்த கடல் அலைகளும், பெருங்காற்றும் அவரது சந்தேகத்தை வளர்த்தன. அவரது நம்பிக்கை விடைபெற்றுப் போக, அவர் தடுமாறினார், தண்ணீரில் மூழ்கத் துவங்கினார்.

அதையொத்த ஒரு நிலை இலாசரின் கல்லறை முன்னே, மார்த்தாவுக்கும் ஏற்படுகிறது. இயேசுவைச் சந்தித்த வேளையில், மார்த்தாவிடமிருந்து, நம்பிக்கை அறிக்கைகள் வெளியாயின. இப்போது, கல்லறையைக் கண்டதும், அவரது நம்பிக்கை விடைபெற்றுச் செல்ல, நான்கு நாள் ஆனதையும், நாற்றம் அடிக்கும் என்பதையும் கூறுகிறார். நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இரு துருவங்களுக்கிடையே மாறி, மாறி பயணம் செய்யும் நமது வாழ்விற்கு, மார்த்தாவும், பேதுருவும், நல்ல எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றனர்.

கடலில் மூழ்கிய பேதுருவை கரம்பிடித்து உயர்த்தியது போல், மார்த்தாவிடமும், சூழ நின்றவர்களிடமும் உருவாகியிருந்த அவநம்பிக்கையை போக்க விழைந்தார் இயேசு. நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் ஆண்டுகள் ஆனாலும், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை, அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். இதை உணர்த்தும்வண்ணம், இயேசு மார்த்தாவிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.


கல்லை அகற்றி விடுங்கள் என்று இயேசு தந்த முதல் கட்டளையில் மற்றுமோர் எண்ணமும் வெளிப்படுகிறது. அந்த எண்ணத்தையும், இலாசரின் கல்லறைக்குமுன் இயேசு தந்த மற்ற இரு கட்டளைகளையும், நாம், அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.