Showing posts with label Bible - Miracles of St John - Recap 2. Show all posts
Showing posts with label Bible - Miracles of St John - Recap 2. Show all posts

11 December, 2018

விவிலியத்தேடல் : யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை – 2


‘Nel Jayaraman’ being felicitated – Centre: Nammazhvar

இமயமாகும் இளமை – நெஞ்சில் வாழும் நெல் ஜெயராமன்

டிசம்பர் 6, கடந்த வியாழனன்று, தமிழகம், ஒரு நல்ல மனிதரை இழந்தது. பொதுவாக, சமுதாயத்தில் புகழ்பெற்றவர் ஒருவர் மரணமடைந்தால், அதை, “ஈடு செய்ய இயலாத ஓர் இழப்பு என்று சொல்வது, ஒரு பாரம்பரியக் கூற்று. பல நேரங்களில், அந்தக் கூற்று, பொருளற்றதாக, போலியாக ஒலிக்கும். ஆனால், கடந்த வியாழனன்று கே.ஆர்.ஜெயராமன் என்பவர், மரணமடைந்தது, உண்மையிலேயே ஈடு செய்ய இயலாத ஓர் இழப்பு.
இன்றைய தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது, மண் சார்ந்த பாரம்பரிய அறிவு. தமிழ்நாட்டு விவசாயிகளின் கவனத்தை இயற்கை வேளாண்மை நோக்கித் திருப்பிய நம்மாழ்வார் என்ற ஆலமரத்தின் விழுதுகளில், ஜெயராமன் அவர்களும் ஒருவர். 174 நெல் ரகங்களை மீட்டெடுக்க, இவர் அயராது உழைத்ததால், நம்மாழ்வார் அவர்கள், இவருக்கு, நெல் ஜெயராமன் எனப் பெயர் சூட்டினார்.
திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் பிறந்த ஜெயராமன் அவர்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். வேதியல் உரங்களைத் தவிர்த்து, இயற்கை வழி விவசாயத்தை வளர்க்கவேண்டும் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த நம்மாழ்வார் அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் இணைந்து, விவசாயிகள், மாணவர்கள், அனைவருக்கும், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி, நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வந்தவர், நெல் ஜெயராமன். காவிரி உரிமை மீட்கும் போராட்டங்களிலும், விதைகளை மரபணு மாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
தமிழகம் முழுவதும், நெல் திருவிழாக்களை நடத்தி, 41,000த்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 174 பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கியுள்ளார் என்பது மிகப்பெரும் சாதனை. இவர், வழங்கிய இறுதி நேர்காணலில் கூறியுள்ள நம்பிக்கை தரும் சிந்தனைகள் இதோ: எனக்கு இளைய தலைமுறை மீது நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் மரபில் இழந்த விஷயங்களையெல்லாம் மீட்டெடுத்தால், அடுத்த பத்து, இருபது வருடங்களுக்குள், காவிரி விவசாயிகள், மீண்டும் தலைநிமிர்ந்துவிடுவார்கள். அதோடு, நம் தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவைச் சாப்பிடுவார்கள். இயற்கை வேளாண்மை இதற்கு நிச்சயம் வழிகாட்டும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேளாண் அறிவியலாளர் நெல் ஜெயராமன் அவர்கள், டிசம்பர் 6, கடந்த வியாழன் அதிகாலையில் மரணம் அடைந்தார். நம் நெஞ்சங்களில் தொடர்ந்து வாழும் நெல் ஜெயராமன் அவர்களுக்கு வத்திக்கான் வானொலி குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலி (தி இந்து)

“Rise, take up thy bed, and walk.” John 5:8

யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை 2

இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. இவற்றில் 27 புதுமைகள், குணமளிக்கும், மற்றும் உயிரளிக்கும் புதுமைகள். யோவான் நற்செய்தியில் 3 குணமளிக்கும் புதுமைகள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று குணமளிக்கும் புதுமைகளையும் ஒன்றாகச் சிந்திக்கும்போது, ஒரு சில ஒப்புமைகளும், வேற்றுமைகளும் தெளிவாகின்றன.
அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கும் புதுமையில், (யோவான் 4:46-54) நோயுற்ற மகனின் சார்பாக, அவனது தந்தை இயேசுவிடம் விண்ணப்பித்தார் என்பதையும், இயேசு, அந்த அலுவலர் மகனை நேரில் சந்திக்காமலேயே தன் சொற்களின் வல்லமையால் அவனைக் குணமாக்கினார் என்பதையும் காண்கிறோம்.
இதற்கு மாறாக, 'பெத்சதா' குளத்தருகே நிகழ்ந்த புதுமையிலும் (யோவான் 5:1-18), பார்வையற்றவரைக் குணமாக்கியப் புதுமையிலும் (யோவான் 9:1-41), விண்ணப்பம் ஏதுமின்றி, இயேசு தானாகவே முன்வந்து, இப்புதுமைகளை நிகழ்த்தினார். மேலும், இவ்விரு புதுமைகளில், நோயுற்ற இருவரையும் இயேசு தேடிச்சென்றார்.

இவ்விரு புதுமைகளில், இன்னும் இரு ஒப்புமைகளையும் நாம் காணலாம். ஒன்று, இவ்விரு புதுமைகளும், ஒய்வு நாளில் நிகழ்ந்தன என்பதால், அதன் எதிரொலியாக, இயேசுவைக் குறித்து கண்டனங்கள் எழுவதையும், அக்கண்டனங்களுக்குப் பதில் கூறும் வகையில், இயேசு, ஓய்வு நாளைக் குறித்தும், இன்னும் சில உண்மைகளைக் குறித்தும் சொல்லித்தரும் இறையியல் பாடங்களையும் காண்கிறோம்.
இரண்டாவதாக, இவ்விரு புதுமைகளில், இரு குளங்கள் குறிக்கப்பட்டுள்ளன. 38 ஆண்டுகள் நோயுற்றிருந்தவர், 'பெத்சதா' குளத்தருகே இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. பார்வையற்றவரை குணமாக்கும்போது, அவரை, "சிலோவாம் குளத்திற்குப் போய்க் கண்களைக் கழுவும்படி" (யோவான் 9:7) இயேசு கூறுவதைக் காண்கிறோம்.

'பெத்சதா' என்ற எபிரேயப் பெயர், 'பெத் ஹெஸ்தா' (Beth hesda) என்ற இரு சொற்களை இணைத்து உருவானப் பெயர். 'பெத் ஹெஸ்தா' என்றால், 'இரக்கத்தின் இல்லம்', அல்லது, 'அருளின் இல்லம்' என்று பொருள். ஐந்து மண்டபங்கள் கொண்ட 'பெத்சதா' குளத்தின் நீர், நோய்களைக் குணமாக்கும் சக்தி பெற்றது என்பது, அன்று நிலவிவந்த ஒரு நம்பிக்கை. குறிப்பாக, "ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கி, தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின், முதலில் இறங்குபவர், எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்" (யோவான் 5:3-4) என்ற நம்பிக்கை இருந்ததால், அக்குளத்தைச் சுற்றி, நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர் என்று, நற்செய்தியாளர் யோவான் இச்சூழலை விவரிக்கின்றார்.

கானா திருமணத்தில், தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியப் புதுமையில், படைக்கப்பட்டப் பொருள்கள் மீதும், காலத்தின் மீதும் இயேசு கொண்டிருந்த சக்தி வெளியானது என்றும், அரச அலுவலர் மகனைக் குணமாக்கியப் புதுமையில், தூரத்தின் மீது இயேசு கொண்டிருந்த சக்தி வெளியானது என்றும் சென்ற வாரத் தேடலில் சிந்தித்தோம். பெத்சதா குளத்தருகே படுத்திருந்தவரை இயேசு குணமாக்கிய புதுமையில், பாரம்பரியங்களில் கூறப்பட்டுள்ள சக்தியைத் தாண்டி, இயேசுவால் குணமளிக்க முடியும் என்பது வெளிச்சமாகிறது.
பெத்சதா குளத்தின் நீருக்கு குணமளிக்கும் சக்தி இருந்ததென்பது பாரம்பரிய நம்பிக்கை. அந்த பாரம்பரியத்தை நம்பியிருந்த மக்களிடம், அந்த நீரிலோ, அதன் அசைவுகளிலோ குணமளிக்கும் சக்தி இல்லை; மாறாக, அக்குளத்தில் இறங்குவதாகக் கூறப்படும் வானதூதர், இறைவனின் வல்லமையைக் கொணர்கிறார் என்ற நம்பிக்கையே, மக்களுக்கு நலமளிக்கிறது என்பதை, இயேசு வலியுறுத்த விரும்பினார். அத்தகைய நம்பிக்கை இருந்தால், குளத்தில் இறங்காமலேயே குணம் பெறலாம். இந்த உண்மையை உணர்த்தவே, குளத்தில் இறங்கமுடியாமல் 38 ஆண்டுகளாக, அங்கு படுத்திருந்தவரை, இயேசு குணமாக்கினார் என்ற கோணத்தில், இப்புதுமையை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இவ்விரு புதுமைகளும், ஓய்வு நாளில் நிகழ்ந்தன என்பதில், நற்செய்தியாளர் யோவான் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒய்வு நாளில் எதுவுமே செய்யக்கூடாது என்ற கடுமையான தடையை பொய்யாக்குமாறு, இயேசு இவ்விரு புதுமைகளையும் ஒய்வு நாளில் நிகழ்த்துகிறார். ஓய்வுநாளின் மீதும் இயேசு கொண்டிருந்த சக்தி இவ்விரு புதுமைகளில் வெளியாகிறது. ஓய்வுநாள் பற்றிய தன் கருத்துக்களை இயேசு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்: "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" (மாற்கு 2: 27-28)

இவ்விரு புதுமைகளிலும், நோயுற்றவர் இருவரும், பல ஆண்டுகள் கவனிப்பாரற்று கிடந்தனர் என்பதையும், நலமடைந்த அன்றே அவர்களைச் சுற்றி பிரச்சனைகள் எழுந்தன என்பதையும் எண்ணும்போது, சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
பெத்சதா குளத்தருகே, 38 ஆண்டுகளாக நோயுற்று கிடந்த மனிதர், தன் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளி உலகில் அடியெடுத்து வைத்தார். தனக்கு நிகழ்ந்த அற்புதத்தை, அதிசயத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், அவரைச் சந்தித்த யூதர்களுக்கு முதலில் கண்ணில் பட்டது, அவர் படுக்கையைச் சுமந்து சென்ற குற்றம். அவர்கள்,"ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்று தங்கள் கண்டனத்தை வெளியிடுகின்றனர். உடனே, அங்கு ஒரு வழக்கு ஆரம்பமாகிறது.
ஓய்வுநாளில் இயேசு இந்தப் புதுமையைச் செய்ததால், யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள் என்று யோவான் தெளிவாகக் கூறியுள்ளார். இன்னும் சில இறைவாக்கியங்களுக்குப் பின், யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு நல்லவை நிகழும்போது, அந்த நன்மையால் உள்ளம் மகிழ்வதற்குப் பதில், என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று காத்திருப்போர், எதிலும் குறை காண்பதிலேயே குறியாய் இருப்பர். தாங்களும் நன்மை செய்வது கிடையாது, செய்பவர்களையும் அமைதியாய் விடுவது கிடையாது.
Jesus healing the blind person

 அதேபோல், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் புதுமையிலும், இதே பிரச்சனை எழுகிறது. இப்புதுமை, யோவான் நற்செய்தி, 9ம் பிரிவின் முதல் ஏழு இறைவாக்கியங்களில் நிறைவடைகிறது. தன் கண்களில் இயேசு பூசிய சேற்றுடன், பார்வையற்றவர், 'சிலோவாம்' குளத்திற்குச் சென்றார். "அவரும் போய் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பிவந்தார்" (யோவான் 9:7). என்ற சொற்களுடன், நற்செய்தியாளர் யோவான், இப்புதுமையின் முதல் பகுதியை நிறைவு செய்துள்ளார்.

பார்வை பெற்றவர், திரும்பிவந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின. இந்தப் பிரச்சனையை ஒரு வழக்கைப்போல் பதிவுசெய்துள்ள யோவான், 34 இறைவாக்கியங்கள் வழியாக, ஓர் இறையியல் பாடத்தை நடத்துகிறார். பிறவியிலிருந்து பார்வைத் திறனின்றி வாழ்ந்தவர், உடலளவில் மட்டுமல்லாமல், உள்ளத்தில் படிப்படியாக பார்வை பெறும் அழகையும், யூதர்களும், பரிசேயர்களும் தங்கள் உள்ளத்தில் படிப்படியாக பார்வை இழக்கும் சோகத்தையும், ஓர் இறையியல் பாடமாக, நற்செய்தியாளர் யோவான் வழங்கியுள்ளார்.

அகமும், புறமும் பார்வைபெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை, ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். இருளுக்கு பழகிப்போன அவர்கள் கண்களுக்கு, பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி, எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல், கோபமாக மாறி, அவர்கள், இயேசுவின் சாட்சியாக மாறியிருந்த பார்வை பெற்றவரை, தங்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளினர்.

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதை பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஓர் உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி, நம்மைக் குருடாக்கிவிடுவதாக அடிக்கடி கூறுகிறோம். "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுவோரை, "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம். ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான கூற்றுகள், நம் பேச்சு வழக்கில் உள்ளன.
உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதால்தான், ‘ஆன்மாவின் சன்னல்கள் நம் கண்கள் என்று சொல்வார்கள். இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். (மத்தேயு 6 : 22)

உடலளவில் பார்வை பெற்றால் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி பெருக்கவேண்டுமென செபிப்போம்.