30 December, 2010

Comforting Style of the Shepherd... ஆயன் நம்மைத் தேற்றிடும் அழகு

The Good Shepherd


Discipline without love is dangerous and love without discipline is equally dangerous. The right combination is what shapes a human person. When we grow up, we probably experience discipline from our parents and teachers. At that time we feel angry and rebel against it. It is because we cannot see the love that prompted that discipline. But as time goes on, we realise the love behind the discipline. Time, as all of us know, is a good teacher.

As we approach the end of another calendar year (Gregorian) we do reflect on time - time that was placed at our disposal throughout this year. All media channels are competing with one another to review 2010. Whether we review our personal life or the world events, painful memories come to mind first in our ‘rewind’. Pain leaves deep and lasting impressions on us. Though we talk of pain many times, we are still left with questions. For the past six months we have been reflecting of Psalm 23 with quite a few reflections on pain. For his book on Psalm 23, Harold Kushner has given the main title as ‘The Lord Is My Shepherd’. He has also added a subtitle to this book: ‘Healing Wisdom of the Twenty Third Psalm’.

Many of us know that the book that turned the spot light on Harold Kushner was the famous bestseller ‘When Bad Things Happen to Good People’. This book was written by Kushner after he was crushed by the pain of losing his son Aaron at the age of 14 through a rare disease - progeria. Many of Kushner’s friends had suggested to him that he write another book with the title: ‘When Good Things Happen to Bad People.’ This is more than a suggestion. This is actually a question. In fact, both the titles are questions that bother us while we are in pain. We question the wisdom of God who ‘allows’ pain in the lives of innocent, good people. As we mentioned in our last reflection, we try to find answers to this question, saying, that through pain God is either punishing us for our misdeeds or testing our faith.

But the question on bad people enjoying life is an angry question. We are unable to search for answers here since our anger clouds our mind – the anger of seeing bad people thrive. On deeper analysis, we can raise few more questions and try to answer them. Are there really ‘bad people’? If so, do they really enjoy goodness? All the good that we see around this group is very external – their wealth, fame, glamour etc. But a deeper analysis would surely tell us that behind that façade live tormented souls. A simple question: How many of these so called bad people enjoy a good night’s rest without the help of tablets or alcohol? When these people retire to bed, they drag along with them their tired body as well as a tried and tortured soul. When the body craves for rest, their conscience seems to be awake, raising quite a few disturbing questions. As they had silenced this conscience through the day, they try to silence it once again through drugs and drinks. Can we really say that ‘good things happen to bad people’?

The Shepherd’s rod and staff take the form of our conscience. This is the best compass that the Lord has given to each of us. As long as this compass is not damaged, we can lead a decent life, steering our lives through utter darkness. The Shepherd’s rod and staff will comfort us.

As I had mentioned in my last reflection, the word ‘comfort’ seems out of place in this line. But, if we look at the root meaning of the word comfort, it springs from the word ‘fortis’ meaning strength. Hence com-fort would mean ‘with strength’ or ‘giving strength’. When I look at the word comfort from this perspective, I am reminded of some medical treatments that give us strength. I am not an expert in medicines. What I am sharing here is very much bits-and-pieces-information on some medical methods.

When a person suffers from headache, one style of treatment would treat the symptom; give a pill that would arrest the headache; make it subside fast. We have tablets that give us instant relief. There is also another method of treatment for headache, where instead of treating the symptom, the root cause of our headache is traced. It could probably be a disorder in the stomach or it could be a defect in the eyes. When the root is found, then treatment is given to take care of the root cause. Here the relief may not be instantaneous; but the treatment would have lasting effect. Sometimes in order to trace the real cause of headache, there could be a treatment that triggers more headache in order to locate the real problem and then treat it.

When I think of the rod and staff of the Shepherd, I am reminded of the second method of treatment. God’s style of dealing with us may leave us in more pain, so that we are ‘com-forted’ strengthened! Thy rod and thy staff, they comfort me!

Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.


"உமது கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்." என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறும்போது, ஆயனாம் இறைவனின் கண்டிப்பும் கரிசனையும் வெளிப்படுகிறது; இதனை நாம் ஆழமாக உணர முயற்சி செய்வோம் என்று சென்ற விவிலியத் தேடலை நிறைவு செய்தோம். கண்டிப்பு உள்ள இடத்தில் கரிசனையும் இருக்கும், அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதை உடனுக்குடன் புரிந்து கொள்வது, உணர்வது கடினம். கண்டிக்கும் பெற்றோர் அல்லது கண்டிக்கும் ஆசிரியர் இவர்களின் கரிசனையை பல ஆண்டுகள் கழித்து உணர்ந்திருக்கிறோம் இல்லையா? காலம் தான் இப்பாடங்களைச் சொல்லித் தரும். காலம் இந்தப் பாடத்தை மட்டுமல்ல; பல பாடங்களைச் சொல்லித் தருகின்றது.

காலம் சொல்லித் தரும் பாடங்களை உணர்வதற்கு ஆண்டின் இறுதி நாட்கள் ஒரு நல்ல நேரம். கிரகோரியன் நாள்காட்டியின்படி, 2010ம் ஆண்டின் இறுதி நாட்கள் இவை. பல்வேறு பத்திரிக்கைகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாம் கடந்து வந்த காலம் அலசப்படுகிறது. வத்திக்கான் வானொலியிலும் இத்திங்கள் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் நாம் கடந்து வந்த 2010ம் ஆண்டை அலசிப் பார்த்தோம். கடந்து செல்லவிருக்கும் 2010ம் ஆண்டு முழுவதும் ஆயனின் வழிநடத்துதல் எவ்விதம் இருந்ததென்பதை உணர முயல்வோம்.

நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலோ, அல்லது உலக நிகழ்வுகளிலோ கடந்து சென்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, முதலில் மனதில் தோன்றுவது நம்மைத் துன்புறுத்திய நிகழ்வுகள். ஆழமான, நீண்ட கால பாதிப்புக்களை மனதில் உருவாக்கும் வலிமை பெற்றவை துன்பங்கள்.
வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களைப்பற்றி எத்தனை முறை பேசினாலும், மீண்டும், மீண்டும் கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு விடைகள் காணவே நாம் திருப்பாடல் 23ன் தேடலைக் கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்கிறோம். துன்ப நேரத்தில் 23ம் திருப்பாடல் நமக்குத் துணையாக, வழிகாட்டியாக இருக்கும், இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 'ஆண்டவர் என் ஆயன்' என்ற தலைப்பில் Harold Kushner என்ற யூதமத குரு தான் எழுதிய புத்தகத்திற்கு ஓர் அழகிய துணைத் தலைப்பும் தந்திருக்கிறார். “Healing Wisdom of the Twenty Third Psalm” அதாவது, "மனக்காயங்களை ஆற்ற திருப்பாடல் 23 தரும் ஞானம்." என்பதே அந்தத் துணைத்தலைப்பு.

Harold Kushnerஐ மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உலகிற்கு அறிமுகம் செய்த ஒரு நூல் “When Bad Things Happen to Good People” அதாவது, "நல்லவர்களுக்குப் பொல்லாதவைகள் நிகழும்போது" என்ற நூல். அரியதொரு நோயால் தன் மகன் ஆரோன் மிகவும் துன்புற்று, சிறுவயதில் இறந்தபோது, அந்தப் பேரிழப்பில் அர்த்தம் காணும் ஒரு முயற்சியாக Kushner எழுதிய புத்தகம் அது. உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த ஒரு புத்தகம் அது.
இப்புத்தகத்தைத் தொடர்ந்து, Kushnerன் நண்பர்கள் சிலர் அவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தனர். "நல்லவர்களுக்குப் பொல்லாதவைகள் நிகழும்போது" என்பதைச் சிந்தித்த Harold Kushner "போல்லாதவர்களுக்கு நல்லவைகள் நிகழும்போது" - When Good Things Happen to Bad People - என்பதையும் ஒரு புத்தகமாக எழுத வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோள். இது உண்மையிலேயே ஒரு கேள்வி. நம் எல்லாருக்கும் எழும் கேள்வி. நல்லவர்களின் துன்பம் நம் மனங்களில் ஆழமான, விடை காண முடியாத கேள்விகளை எழுப்புகின்றன, உண்மைதான். ஆனால், பொல்லாதவர்கள் அனுபவிக்கும் செல்வம், மகிழ்வு இவைகளைக் காணும் போது, இன்னும் ஆழமான, ஆத்திரமான கேள்விகள் உள்ளத்தில் எழுகின்றன.

ஆயனாம் இறைவனின் கோலும், நெடுங்கழியும் கரிசனையையும், கண்டிப்பையும் வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்று கூறுகிறோம். நல்லவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் ஆயனின் கரிசனையுடன் கூடிய கண்டிப்பின் வெளிப்பாடுகள் என்று இத்துன்பங்களுக்கு விடைகள் காண முயல்கிறோம்.
ஆனால், ஆயனின் கோலும், கழியும் பொல்லாதவர்களை எந்த வகையிலும் பாதிப்பதில்லையே என்பதும் நாம் அடிக்கடி எழுப்பும் கேள்விகள். பல நேரங்களில் இக்கேள்விகளுக்கு விரக்தி, வேதனை, கோபம் இவைகளே நமது விடைகளாகின்றன.

பொல்லாதவர்களின் மகிழ்வு என்பதை மேலோட்டமாகப் புரிந்து கொள்வதாலேயே நாம் இந்த விடைகளைத் தருகிறோம். பொல்லாதவர்கள் எளிதில் செல்வம் சேர்க்கின்றனர். சுகமாக வாழ்கின்றனர். அவர்கள் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. அவர்களை அரசோ, சட்டமோ, எதுவுமே கட்டுப்படுத்த முடியாது... என்பவைகளே நம் மனதில் எழும் எண்ணங்கள். இவ்வெண்ணங்கள் மேலோட்டமானவை என்று நான் சொன்னதன் காரணத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
பொல்லாதவர்களின் வாழ்க்கையை நாம் பெரும்பாலும் வெளியிலிருந்தே பார்க்கிறோம். அப்பார்வையில் எல்லாமே மகிழ்ச்சி, நிறைவு என்றே தெரிகிறது. ஆனால், உண்மை நிலை என்ன? மகிழ்வு, நிம்மதி இவைகளின் அளவுகோல் உறைவிடம், உணவு, உடை, வசதி, வாகனம் என்று கணக்கிடும் போது இந்த முடிவுகள் எடுக்கிறோம். உண்மை நிலை என்ன?

உண்மை நிலையைப் புரிந்து கொள்ள ஒரே ஓர் எடுத்துக்காட்டு. இப்படி வாழ்பவர்களில் எத்தனை பேர் இரவு நிம்மதியாக உறங்குகின்றனர்? மருந்து, மாத்திரை, மதுபானம் என்று வலுக்கட்டாயமாக தங்கள் மீது இவர்கள் தூக்கத்தைத் திணித்துக் கொள்கின்றனர் என்பதுதான் உண்மை நிலை.
நாள் முழுவதும் வேலை, கேளிக்கை, உறவுகள் என்று தங்களையே மறந்து வாழும் இவர்கள் இரவில் உறங்கப் போகும்போது, அவர்களுடன் இருப்பது அவர்களது களைத்துப்போன உடல், அந்த உடலுக்குள் சலித்துப்போன மனம், அல்லது மனசாட்சி இவைதானே. உடல் களைத்துப்போனதால் உறங்க விழைகிறது. ஆனால், நாள் முழுவதும் அமைதியாக்கப்பட்ட, அல்லது கட்டிப் போடப்பட்ட மனம் அல்லது மனசாட்சி அந்த நேரத்தில் விழித்தெழுந்து விடுகிறதே. அதை என்ன செய்ய முடியும்? அதை மீண்டும், மௌனமாக்க, மழுங்கடிக்க அல்லது மூச்சடைக்கச் செய்வதற்கு மருந்துகளையும் மதுவையும் இவர்கள் தேடுகின்றனர். இதுதான் மகிழ்வா?

அவர்கள் உறங்கப் போகும்போது, விழித்தெழுந்து கேள்விகள் கேட்கும் மனசாட்சிதான் ஆயனாம் இறைவனின் கோலும் நெடுங்கழியும். சிந்திக்கும் திறமையுள்ள ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் இறைவன் அளித்துள்ள அற்புதமான ஒரு திசைக்காட்டி நம் மனசாட்சி. இந்தத் திசைக்காட்டி எவ்வகை இருளின் நடுவிலும் நம்மை வழிநடத்தும் திறமை பெற்றது. இந்தத் திசைக்காட்டியை பழுதடையச் செய்தால், இழப்பு நமக்குத்தான்.

"உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்" என்ற திருப்பாடல் 23ன் இந்த வரியில் 'தேற்றும்' என்ற சொல் இடம் மாறி வந்துவிட்டதாகத் தெரியலாம். 'உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தண்டிக்கும்' என்று சொல்லியிருந்தால், பொருத்தமாகத் தெரிகிறது. கோலும், கழியும் எப்படி ஒருவரைத் தேற்ற முடியும்? இந்தக் கேள்விக்கு மருத்துவ உலகின் ஓர் உருவகத்தைக் கொண்டு விடை தேட விழைகிறேன். மருத்துவத் துறையில் பெரும் அறிவாளி இல்லை நான். ஆங்காங்கே நான் கேட்ட ஒரு சில குறிப்புக்களை வைத்து, உங்களுடன் சேர்ந்து சிந்திக்க விழைகிறேன்.

உடலில் ஏற்படும் நோயைத் தீர்க்கவே, மருத்துவத்தை நாடுகிறோம். பலவகை மருத்துவ முறைகள் உலகில் உண்டு என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். ஒரு வகை மருத்துவத்தில் நம் உடல் நோயின் அடையாளங்களைத் தீர்ப்பதற்கு மருந்துகள் கொடுக்கப்படும். மற்றொரு வகை மருத்துவத்தில் நம் உடல் நோயின் காரணங்களை அறிந்து அவைகளைத் தீர்ப்பதற்கு மருந்துகள் கொடுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, நமக்குத் தலைவலி என்றால், அந்த வலியைத் தீர்க்க மருந்து கொடுக்கப்படும். ஒரே மாத்திரையில் தீர்ந்துவிடும் தலைவலி, வயிற்று வலி என்று பல விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம். உடலில் வரும் குறையின் அடையாளத்தை உடனடியாகத் தீர்ப்பது இந்த மருத்துவ முறை. ஒவ்வொரு முறையும் இந்தக் குறை வரும்போது, இந்த மாத்திரைகளை நாம் நாட வேண்டியிருக்கும்.

மற்றொரு மருத்துவ முறையில், நம் உடலில் ஏற்பட்டுள்ள குறையின் காரணங்களை அறிந்து அந்தக் காரணங்களைக் களைய முயற்சிகள் எடுக்கப்படும். தலை வலி என்றதும், அந்தத் தலைவலிக்குக் காரணம் நமது வயிற்றில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறு என்று கண்டுபிடித்து, அந்தக் கோளாறு நீங்க மருந்துகள் தரப்படும். குறையின் வேர் எது என்று கண்டுபிடித்து அதைக் களைவது இந்த மருத்துவ முறை. இந்த முறையில் நொடிப்பொழுது நிவாரணங்கள் கிடைக்காது. சில வேளைகளில், இந்த முறையில் நம் உடலில் உள்ள குறையைக் கண்டுபிடிக்க, அந்தக் குறையைத் தூண்டிவிடும் மருந்துகளும் தரப்படலாம். துவக்கத்தில் இருந்ததைவிட கூடுதலாக நோயுற்றது போல் நாம் உணரலாம். நமது குறையின் வேர்களைக் கண்டுபிடிக்க இத்துன்பத்தை நாம் தாங்க வேண்டியிருக்கும். ஆனால், வேர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அவை வேரோடு களையப்படும். நமது நோய்க்கு நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கும்.

இறைவனின் கோலும் கழியும் நம்மைத் தேற்றும் என்று சொல்லும்போது, இரண்டாம் வகை மருத்துவமே மனதில் பதிகிறது. நம்மைத் தன் கோல்கொண்டு, கழிகொண்டு இறைவன் நடத்தும் போது, கூடுதல் வேதனை இருக்கலாம், அவ்வேதனைகள் எல்லாம் நம்மை நெறிப்படுத்தும் வழிகள்.தேற்றும் என்ற இந்தச் சொல்லில் உறுதிப்படுத்தும், நெறிப்படுத்தும், ஆற்றுப்படுத்தும், ஆறுதல் தரும், வழி நடத்தும் என்று பல பொருள்களை நாம் உணரலாம். ஆயனாம் இறைவனின் வழி நடத்துதலில் நாம் இந்த ஆண்டு முழுவதும் நடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்து நன்றி கூறுவோம்; நம்பிக்கையோடு வரும் நாட்களை எதிர்கொள்வோம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

No comments:

Post a Comment