16 December, 2015

விவிலியம்: காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - 1


Holy Year of Mercy Banner



Jubilee of Mercy Logo

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையி்ன் தலைமைப் பொறுப்பிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 8 மணியளவில், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தின் மேல்மாடியில் மக்களைச் சந்திக்க வந்தார். அவர், எளிய வெண்ணிற ஆடை அணிந்து வந்தது, "மாலை வணக்கம்" என்று மக்களிடம் சொன்னது, ஆகியவை, மக்களுக்கு புதிய அனுபவமாக இருந்தன. அச்சந்திப்பின் இறுதியில், ஊருக்கும், உலகிற்கும் (Urbi et Orbi) என்ற சிறப்பான ஆசீரை தான் வழங்குவதற்குமுன், மக்கள் தனக்காகச் செபிக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களுக்கு முன் தலைவணங்கி நின்றது, திருஅவையையும், உலகத்தையும் ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது.
அன்று முதல், இன்று வரை, யாரும் எதிர்பாராத வகையில், பலமுறை, ஆச்சரியம் தரும் செய்திகளை வெளியிடுவதும், மனதைத் தொடும் செயல்களைச் செய்வதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி பதித்துள்ள தனி முத்திரை என்று சொன்னால், அது மிகையல்ல. இந்த 'ஆச்சரிய வரிசை'யில், இவ்வாண்டு, மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க உலகிற்கு, ஏன், சொல்லப்போனால், உலகம் அனைத்திற்கும் ஆனந்த அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றைத் தந்தார். அவர் தந்த ஆனந்த செய்தியைக் கேட்பதற்குமுன், மார்ச் 13ம் தேதியைக் குறித்து இரு எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற 2ம் ஆண்டு நிறைவு என்பது, முதல் எண்ணம். அன்று, மார்ச் 13, வெள்ளியன்று, 'இறைவனுக்கு 24 மணி நேரங்கள்' என்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார்.
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, 'Laetare Sunday', அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஞாயிறுக்கு முந்திய வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில், 'மன்னிப்பின் விழா' கொண்டாடப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014ம் ஆண்டு அறிவித்தார். வெள்ளி மாலை முதல், சனிக்கிழமை மாலை முடிய, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கக் கோவில்கள் பல, 24 மணி நேரமும் திறந்திருக்கவேண்டும் என்றும், ஒப்புரவு அருள் அடையாளம் வழங்குவதற்கு, அருள் பணியாளர்கள் கோவில்களில் காத்திருக்கவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விருப்பம் தெரிவித்தார். அவ்வண்ணம், 2014ம் ஆண்டு, மார்ச் 29, 30 ஆகிய இருநாட்கள், 'இறைவனுக்காக 24 மணி நேரங்கள்' என்ற வழிபாட்டு நிகழ்ச்சி வழியே, 'மன்னிப்பு விழா' அகில உலக கத்தோலிக்கத் திருஅவையில் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.

அந்த மன்னிப்பு விழாவைத் துவக்கிவைக்க, வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் மன்னிப்பு வழிபாடு நிகழ்ந்தது. அந்த வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்த எண்ணங்களில் ஒரு சில இதோ:
"நம்மில் பாவமற்றவர் யார்? ஒருவரும் கிடையாது. திருத்தூதர் யோவான் கூறுவது இதுதான்: "பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்" (1 யோவான் 1: 8-9). இதுதான் இந்த மன்னிப்பு விழாவில் நமக்கு நிகழ்கிறது... நம் தந்தை அன்புகூர்வதில் களைப்படைவதே இல்லை. காணாமற்போன மகன் மீண்டும் இல்லம் வந்து சேரும் அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் கண்கள் களைப்படையவேயில்லை. தன்னுடன் வீட்டிலேயே தங்கிய மகன் தன் மகிழ்வில் பங்குகொள்ள மறுத்தாலும், அவர் மீது தந்தையின் அன்பு குறையவேயில்லை.... இந்த வழிபாடு முடிந்ததும், உங்களில் பலர் கடவுளுடன் நீங்கள் கொண்ட ஒப்புரவை பிறருக்கு எடுத்துச்சொல்லும் நற்செய்திப் பணியாளர்களாக மாறப்போகிறீர்கள்"

அன்றைய மாலை செபவழிபாட்டை, புனித பேதுரு பசிலிக்காவில் முன்னின்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருள் அடையாளத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்தபோது, யாரும் எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். தான் முதலில் ஓர் அருள் பணியாளரிடம் சென்று, முழந்தாள் படியிட்டு, ஒப்புரவு அருள் அடையாளத்தை நிறைவேற்றினார். பின்னரே, அவர் மற்றவருக்கு அந்த அருள் அடையாளத்தை வழங்கச் சென்றார். மக்கள் கூடியிருக்கும் ஒரு கோவிலில், திருத்தந்தை ஒருவர், ஒப்புரவு அருள் அடையாளம் பெற மண்டியிட்ட காட்சி, அதுவரை யாரும் பார்த்திராதக் காட்சி.

அந்த 'மன்னிப்பு விழா'வில், மக்கள், குறிப்பாக, இளையோர் பெருமளவில் கலந்துகொண்டதையடுத்து, அதே முயற்சியை, திருஅவை இவ்வாண்டு கடைபிடித்தது. மார்ச் 13, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற நாளின் 2ம் ஆண்டு நிறைவும், 'மன்னிப்பு விழா'வும் இணைந்து வந்ததை, இறைவனின் செயல் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், மன்னிப்பு, இரக்கம், கருணை, பரிவு ஆகியவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளத்திற்கு மிக நெருங்கிய உணர்வுகள், உண்மைகள் என்பதை, இவ்வுலகம் நன்கு அறியும்.

மார்ச் 13, வெள்ளியன்று, மாலை 5 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை முன்னின்று நடத்திய 'இறைவனுக்கு 24 மணி நேரங்கள்' வழிபாட்டில், லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரு நிகழ்வு நற்செய்தியாக வாசிக்கப்பட்டது. (லூக்கா 7: 36-50)
பரிசேயரான சீமோன் இல்லத்தில் இயேசு உணவருந்திக் கொண்டிருந்தபோது, அந்நகரில் பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக அங்கு நுழைந்தார். "இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார் (லூக்கா 7:38-39) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்நிகழ்வில் சித்திரிக்கப்பட்டுள்ள பெண்ணையும், பரிசேயரையும் ஒப்புமைப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரையில் கூறிய கருத்துக்கள் இதோ:
"அந்தப் பெண், ஆண்டவரை உண்மையிலேயேச் சந்தித்தார். அவரை பொருத்தவரை, இரக்கத்தின் தீர்ப்பைத் தவிர, வேறெந்தத் தீர்ப்பும் ஆண்டவரிடமிருந்து வராது என்று நம்பினார். வீட்டுத் தலைவரான சீமோனோ, அளந்து, யோசித்து, அனைத்தையும் செய்தார். அவர் இயேசுவை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தாரேத் தவிர, உண்மையில் அவரைத் தகுந்த வகையில் வரவேற்கவில்லை. அந்தப் பெண்ணை, தன் உள்ளத்தில் தீர்ப்பிட்டதால், அவர் அப்பெண்ணிடமிருந்து மட்டுமல்ல, இறைவனிடமிருந்தும் தன்னைத் தூரப்படுத்திக் கொண்டார்.
மேலோட்டமானப் பார்வையுடன் நாம் வாழக்கூடாது என்பதை, இயேசுவின் சொற்களும், செயலும் நமக்குச் சொல்லித் தருகின்றன. குறிப்பாக, நமக்கு முன் ஒரு மனிதர் இருக்கும்போது, அவரை, மேலோட்டமானப் பார்வை கொண்டு தீர்ப்பிடக்கூடாது. பாவங்கள் குவிந்துள்ள ஓர் இதயத்தில் பாவங்களுக்கான மனத்துயரம் இருக்கும்போது, அங்கு திருஅவை அதிக இரக்கம் காட்டவேண்டும்.
காணாமற்போன மகன் தன் தந்தையிடம் திரும்பிவரும்போது (லூக்கா 15:17-24), அவரிடம் தான் சொல்லவேண்டும் என்று எண்ணிவந்த வார்த்தைகளை அவர் பேச ஆரம்பித்ததும், அவரைப் பேசவிடாமல் தடுத்து, அரவணைக்கும் தந்தையைப் போலத்தான் இயேசுவும் நம்மிடம் நடந்துகொள்கிறார்" என்று தன் எண்ணங்களைப் பகிர்ந்த திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதி சில நிமிடங்களில், ஆனந்த அதிர்ச்சியளிக்கும் வார்த்தைகளைச் சொன்னார்:
"அன்பு சகோதர, சகோதரிகளே, 'இரக்கத்தின் சாட்சி என்ற மறைப்பணியை, திருஅவை இவ்வுலகில் எவ்விதம் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்று நான் அடிக்கடி சிந்தித்துள்ளேன். எனவே, இறைவனின் இரக்கத்தை மையப்படுத்தி, சிறப்பு யூபிலி ஒன்றை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இது இரக்கத்தின்  ஆண்டாக இருக்கும்.
இறைவனின் இரக்கத்தை மீண்டும் ஒருமுறை தேடிக் கண்டுபிடிக்கவும், பறைசாற்றவும் இந்த யூபிலி உதவி செய்யும் என்று நம்புகிறேன். கடவுள் எல்லாரையும் மன்னிக்கிறார்; எப்போதும் மன்னிக்கிறார் என்பதை மறக்கவேண்டாம். மன்னிப்பு கேட்பதில் நாம் ஒருபோதும் சோர்வடையக் கூடாது"
அற்புதமான இந்த வார்த்தைகளோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை இவ்வாண்டு மார்ச், 13ம் தேதியன்று அறிவித்தார்.

டிசம்பர் 8, கடந்த செவ்வாய், அமல அன்னை மரியாவின் பெருவிழாவன்று, இந்த சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஆற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில் பேராலய முகப்பில் அமைந்துள்ள புனிதக்கதவை திறந்துவைத்தார்.
டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைமாவட்டத்தின் பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் புனிதக்கதவைத் திறந்துவைத்தார். இதே ஞாயிறன்று,

உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களின் பேராலயங்களிலும், திருத்தலங்களிலும் உள்ள புனிதக்கதவுகள் திறந்துவைக்கப்பட்டன.
திறக்கப்பட்டுள்ள புனிதக் கதவுகள் வழியே, இறைவனின் இரக்கம் இவ்வுலகை நிறைக்கும் என்ற நம்பிக்கையுடன், இந்த யூபிலி ஆண்டினில் அடியெடுத்து வைப்போம். உங்கள் வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல்...(லூக்கா.6:36) என்ற விருதுவாக்குடன் துவங்கியுள்ள, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் பொருளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள, நம் விவிலியத் தேடல்கள் வழியே முயல்வோம். நம் தேடல்களின் முதல் படியாக, யூபிலி, புனிதக்கதவு ஆகிய எண்ணங்களில் நம் பயணத்தை அடுத்த வாரம் தொடர்வோம்.
 
 

No comments:

Post a Comment