20 December, 2015

“The one who is on fire cannot sit on a chair” "பற்றியெரிபவர், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது"

Emmanuel – God with us
  
IV Sunday of Advent

Sometimes, out of the blue there comes a word, a picture or a person who spark off a string of thoughts in us. This week, as I was preparing for the Sunday reflection, a sentence (I don’t know whether this is a proverb or not!) gripped me strongly. I wish to begin my reflections with that sentence: “He (She) who is on fire cannot sit on a chair.” I was instantly reminded of the famous bestseller written by Robert Fulghum – “It Was on Fire When I Lay Down on It”. The first sentence talks of a person who is on fire and, hence, cannot rest. Fulghum’s title seems to suggest that even when our surrounding is on fire, we could ‘sleep’ or ‘sleep-walk’ through it!
People who reacted (or pro-acted) to the tragedy of Chennai floods belong to both these groups. When the flood waters swelled, so many young women and men, refusing to stay in-doors, swung into action with no help from the government. Actually the arrival of the government officials complicated the help process in so many places. I thought to myself – who needs the Central or the State Government, when the youth can rise up to an emergency like this? How I wish these young men and women respond with such dedication and determination when elections sweep across India like floods!

In contrast to these young women and men, we also saw leaders flying in helicopters or sitting in front of TV sets or in front of TV cameras. Many of these leaders did not put even one foot in the flood waters. They were not on fire but, on the contrary, were sitting cosily when their surrounding was on fire and watching the ‘fun’! But, their statements were on fire, shamelessly dishing out platitudes like ‘being-with-the-people’! To add insult to injury, the minions of our leaders made deliberate mistakes to boost the image of their leaders at the expense of the suffering people. Talk of rubbing salt in the wound!
It is common knowledge how the flood relief vehicles and packages were forced to exhibit the picture of a leader. The Central Government website published a picture of Prime Minister Narendra Modi surveying the flood situation in Chennai from a helicopter. This picture was ‘photoshopped’ and drew lots of criticisms. The minions in PM’s office withdrew this picture in minutes. I am sure the younger generation which is very versatile in the power of the new media, were alert to the efforts of these sycophants! How I wish these young women and men who can challenge the leaders on social media, can also challenge them in elections!

I shall continue to wish and pray that the youth of India (or, for that matter, youth all over the world) get more and more involved in public life for the betterment of society. For the time being, I wish to turn back to the Gospel of today, talking of a young lady going in search of an elderly lady who was in need of help. Such instances took place in Chennai floods and will continue to take place as long as there are people who are on fire! The fire within these persons can be quenched only when they reach out and fulfil the needs of others. Those who need and those who fulfil those needs are those who can truly celebrate Christmas!

One Christmas, while his nation – El Salvador – was suffering a terrible civil war, Archbishop Oscar Romero spoke these words: “No one can celebrate a genuine Christmas without being truly poor. The self-sufficient, the proud, those who, because they have everything, look down on others, those who have no need even of God - for them there will be no Christmas... Only the poor, the hungry, those who need someone to come on their behalf, will have that someone. That someone is God, Emmanuel, God with us.”
Recently Pope Francis released his message for the 49th World Day of Peace, to be celebrated by the Catholic Church on the 1st of January, 2016. “Overcome Indifference and Win Peace” is the title of his message. In it, he speaks of how self-sufficiency leads us to become indifferent to God, to human beings and to the environment. Here are some relevant lines from this message:
The first kind of indifference in human society is indifference to God, which then leads to indifference to one’s neighbour and to the environment… We have come to think that we are the source and creator of ourselves, our lives and society. We feel self-sufficient, prepared not only to find a substitute for God but to do completely without him. As a consequence, we feel that we owe nothing to anyone but ourselves, and we claim only rights.

Our story from today’s Gospel features two women, Mary and Elizabeth who were in need of God. One can even say that they were desperately in need of God. Elizabeth’s need was more personal than that of Mary’s. Elizabeth wanted God o redeem her from the cruel condemnation her society had heaped upon her for being barren. Mary wanted God to redeem her society suffering under the tyranny of the Roman occupation as well as from other forms of slavery. God fulfils their needs … and how!
The Gospel gives us the famous scene of the Visitation. The barren woman and the virgin met to recount what the Lord had done in their lives. (Luke 1: 39-45) Both Elizabeth and Mary were invited by God to bear witness to one great truth, namely, that nothing is impossible for God. Both knew that there was no logical explanation to what they were asked to do… rather, what they were asked to be. Both said almost a blind ‘yes’, relying on God and God alone. They did not have any other support – not even their families. Even their families would not have understood their position: the barren woman, quite advanced in age, conceiving? Unthinkable, they would have said. A virgin conceiving out of wedlock? Unthinkable, unacceptable, unpardonable. They would have stoned her to death.

Perhaps for us living in the 21st century such news would not create any excitement. With all the advanced biotechnology at our disposal, the barren can easily conceive. With the unbridled life-style prevalent today, the virgin shall conceive… what is so great about this? I can well imagine many of us asking this question with a shrug of the shoulders. What is so great about this? A typical question for our times. Nothing seems great, nothing seems wonderful. Our generation seems to have lost the sense of wonder. If this is the case with us, what will happen to the generationext? The word ‘wonder’ may vanish from their dictionary! What a pity!

Setting aside our brainy questions, let us look at this event with a believing heart. As the Bible constantly illustrates, God's timing usually takes us by surprise. Sometimes, as with Elizabeth, God moves too slowly. Sometimes, as with Mary, he moves too quickly. Like Elizabeth, some of us have been praying for a long time for something to happen. We began to think that it might never happen. On the other hand, like Mary, some of us find that too many things happened too quickly in our lives. God had conceived something in our life that we didn't ask for. We were thrust into situations we never bargained for. Whether nothing seems to be happening in our lives, or whether too many things are happening in our lives, we need to have the humility to let go and allow God to enter our lives. This is the core of Christmas. The challenge of Christmas.

It is fascinating that, according to Luke's gospel, after Mary discovered that she would give birth to the Messiah, the first person she went to, with haste, was not Joseph or her parents but her relative Elizabeth whose life was also clearly out of control. Mary probably thought that only Elizabeth would understand her situation. Elizabeth not only understood Mary but blessed her in some of the most beautiful words a human person can ever hear. In blessing Mary, Elizabeth blessed herself. When Elizabeth heard Mary's greeting, we are told that the child within her leapt for joy. When Elizabeth experienced this, her only question was to ask, "And why has this happened to me that the mother of my Lord comes to me?" Why me?
We are a people who want to make sense of our lives. We wish to find and give explanations. No adequate explanations come forth. We find it hard to explain the tragedies that occur in our lives and around us. It is harder still to explain the blessings that have come to us without reason. "Why me," we ask. The explanations are not there.

Elizabeth asked the “why” question and did not get an answer. Mary asked the “how” question at the annunciation. She too did not get an adequate answer. When they met, they still had lots of unanswered questions locked up within. But, they did not ‘waste’ their time in a question-and-answer session. They did not indulge in any intellectual arguments. They simply allowed themselves to be drenched in God’s shower of blessings. Simply exclamations. No explanations.
Trying to explain life is only another way of trying to control it. One of the central messages of Christmas is that we are not in control of the blessings. There is no logic to a blessing, only gratitude. We pray that during this Christmas, we may be like Mary and Elizabeth accepting the gifts that come our way with childlike gratitude.

Just a closing thought… All of us know the famous myth of ‘The Frog and the Princess’. We know that the ugly frog turns into a handsome prince once it is kissed by the princess. It is said that once the TV show "Sesame Street" had put a twist on this myth, namely, that once the princess kisses the frog, she turns into a frog herself. This is closer to the Christmas story where God kisses the human family and becomes one among us!
The Visitation: Model for the New Evangelization

திருவருகைக் காலம் - 4ம் ஞாயிறு

சற்றும் எதிர்பாராத வேளைகளில், நம் கண்ணில்படும் ஒரு படம், ஒரு நிகழ்வு, அல்லது, ஒரு மனிதர் நமக்குள் பல சிந்தனைகளைக் கிளறிவிடுவதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். இந்த வாரம் என் கண்ணில் பட்ட ஓர் ஆங்கிலக் கூற்று, ஒரு தொடர் சிந்தனையை இன்று துவக்கி வைக்கிறது. "He (She) who is on fire, cannot sit on a chair" என்ற அக்கூற்றை, நேரடியாக, வார்த்தைக்கு, வார்த்தை மொழி பெயர்ப்பு செய்வது கடினம் என்பது எனக்குத் தெரிந்தது. இந்த எண்ணத்தைத் தமிழில் சொன்னால், அது இவ்விதம் ஒலிக்கலாம்: "சுடர்விட்டெரியும் ஒருவரால் சும்மா இருக்க முடியாது" அல்லது, "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது".
'சுடர்விட்டெரிந்த' அல்லது, 'பற்றியெரிந்த' ஓர் இளம்பெண், கருதாங்கியிருந்த மற்றொரு வயதானப் பெண்ணைச் சந்திக்கச் சென்ற நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மைத் தேடி வந்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில், சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது, இதையொத்த நற்செய்திகளை நாள்தோறும் கேட்டோம். பல்லாயிரம் மனிதர்கள், குறிப்பாக, இளம் பெண்களும், ஆண்களும் மற்றவரின் துயர் கண்டு சும்மா இல்லாமல், சுறுசுறுப்பாக, வெள்ளத்திலும், சகதியிலும் இறங்கி பணியாற்றினர். ஒரு கோணத்தில் சிந்தித்தால், இத்தகைய மனிதர்கள் இருக்கும்வரை, மாநில, மத்திய அரசுகள் நமக்குத் தேவையில்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
இதை நம்பிக்கை என்று சொல்வது, ஒரு சிலருக்குக் கேள்விகளை எழுப்பலாம். இப்போது இயங்கிவரும் பாணியில் அரசுகள் இயங்கிவந்தால், அவை நமக்குத் தேவையேயில்லை. அதற்குப் பதில், தேர்தல்கள் வரும்வேளையில், அவற்றையும் வெள்ள அபாயமென எண்ணி, மக்களின் துயர்துடைக்க, தேர்தல் என்ற வெள்ளத்தில் இறங்கும் இளையோரால் எவ்வளவோ நன்மைகள் விளையும். இத்தகையச் சூழல் உருவாவதை, நம்பிக்கை என்று சொல்லாமல் வேறு எவ்விதம் சொல்வது?
தேவையில் இருந்த வயதானப் பெண் எலிசபெத்தை, இளம்பெண் மரியா தேடிச் சென்றார் என்ற நற்செய்தியை வாசித்ததும், சென்னை வெள்ளத்தில், துன்பத்தில் இருந்தோரைத் தேடிச்சென்ற இளம் பெண்களும், ஆண்களும் மனத்திரையில் வலம் வருகின்றனர். அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

சாதாரண, எளிய, மனிதர்கள், மற்ற மனிதர்களின் துன்பத்தைக் கண்டு பதறியதால், பற்றியெரிந்ததால், அவர்களால் தங்கள் வீடுகளில் அமர்ந்திருக்க முடியவில்லை. அதேவேளையில்மத்திய, மாநில அரசின் பெரும்புள்ளிகள், வெள்ளத்தில் பரிதவித்த நகரை, பறக்கும் பல்லக்கில் இருந்தபடியோ, தொலைக்காட்சி பெட்டியிலோ பார்த்தனர் என்பதை அறிவோம். பரிதவித்த மக்களைக் கண்டு, இத்தலைவர்கள் பற்றியெரிந்து, பணிபுரிந்ததாகத் தெரியவில்லை; ஆனால், அவர்கள் விடுத்த அறிக்கைகள், பற்றியெரிந்தன; மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கேற்பதாக பொய்யைப் பறைசாற்றின.

இந்தியப்பிரதமர், ஹெலிகாப்டரில் பறந்தபடியே சென்னை வெள்ளத்தைப் பார்வையிட்ட காட்சி, ஒரு புகைப்படமாக, மத்திய அரசின் இணையதளத்தில் வெளியானது. இந்தப் படம் வெளியானதிலும் ஒரு வேதனையான குழப்பம் நிகழ்ந்ததை நம்மில் பலர் அறிந்திருக்கக் கூடும். இந்தியப்பிரதமர், ஹெலிகாப்டரில் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே, ஒரு வட்டக் கண்ணாடி சன்னல் வழியே வெள்ளம் சூழ்ந்த சென்னை, மங்கலாகக் காட்சியளித்தது. இது முதலில் வெளியான படம். சில நிமிடங்களில் இந்தப் படத்தில் சில 'திருத்தங்கள்' செய்யப்பட்டன. அந்த வட்டக் கண்ணாடி சன்னல் வழியே வெள்ளத்தின் உண்மையானத் தாக்கம் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்ற காரணத்தால், பிரதமர் அலுவகத்தைச் சேர்ந்தவர்கள், 'Photoshop' என்று சொல்லப்படும் கணணி தந்திரத்தைப் பயன்படுத்தி, வெள்ளத்தின் விளைவுகளைத் தெளிவாகக் காட்டும் மற்றொரு புகைப்படத்தை அந்தக் கண்ணாடி சன்னலில் ஒட்டிவைத்தனர். அதாவது, பறக்கும் பல்லக்கில் இருந்தபடியே, பிரதமர், மக்களின் துயரங்களைத் துல்லியமாகப் பார்த்தார் என்ற பிரமையை உருவாக்க, அவருடைய உதவியாளர்கள் மேற்கொண்ட பரிதாப முயற்சி இது. பிரதமரின் இணையதளத்தில் இந்தப் படம் வெளியான சில நிமிடங்களில் இந்தப் பரிதாப முயற்சியைப் பற்றிய கண்டனக் குரல்கள் எழுந்ததால், இந்தப் படம் உடனே நீக்கப்பட்டது.
பற்றியெரிந்த உரோம் நகரைக் கண்டு 'பிடில்' வாசித்த 'நீரோ' மன்னனின் வாரிசுகள், இன்றும் வாழ்கின்றனர் என்பதை, பிரதமரின் உதவியாளர்கள் உணர்த்துகின்றனர். தனிமனிதத் துதிக்காக, மக்கள் படும் கொடுமைகளையும் ஒரு காட்சிப் பொருளாக, பொழுதுபோக்காகப் பயன்படுத்தும் உதவியாளர்களின் வர்க்கத்தனமான எண்ணங்களைத் தோலுரித்துக் காட்டியதும், கண்டனம் செய்ததும், கணணித் தந்திரங்களை நன்கு அறிந்த இளையோரே என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய அறிவுத்திறன் கொண்ட இளையோர், இன்னும் சிறிது துணிவையும், சமுதாய அக்கறையையும் வளர்த்துக்கொண்டால், நம் விடியல் நெருங்கிவிடும். அந்த விடியலுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

பறக்கும் பல்லக்கில் வெள்ளத்தைப் பார்வையிட்ட தலைவர்களும், வீட்டில் அமர்ந்து வெள்ளக் காட்சிகளை பார்த்த தலைவர்களும், ஒவ்வொரு நாளும் எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தனர், இன்னும் சொல்லியபடியே உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர், மழை நீரிலோ, வெள்ளத்திலோ தங்கள் பாதங்களையும் நனைத்திருக்க மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இத்தலைவர்களை, இறைவன் நல்வழியில் நடத்தவேண்டும் என்ற வேண்டுதலுடன், நாம் இன்றைய நற்செய்திக்குத் திரும்புவோம்.

'தவளையும், இளவரசியும்' என்ற பாரம்பரியக் கதை நமக்கு நினைவிருக்கலாம். அக்கதையில், அழகான ஓர் இளவரசி, அழகில்லாத ஒரு தவளையை முத்தமிடுவார். உடனே, அத்தவளையின் சாபம் நீங்க, அது, அழகான ஓர் இளவரசனாக மாறும். சில ஆண்டுகளுக்கு முன், 'Sesame Street' என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில், இக்கதை தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, அத்தவளையை இளவரசி முத்தமிட்டதும், அவர் தவளையாக மாறிவிடுவார். இறைவன், மனிதரில் ஒருவரானதை இக்கண்ணோட்டத்தில் நாம் சிந்திக்கலாம். இறைவன் மனுக்குலத்தை முத்தமிட்டதால், அவரே நம்மில் ஒருவராக மாறியதைக் கொண்டாடும் விழாதான், கிறிஸ்மஸ் பெருவிழா.

நம்மில் ஒருவராக வாழ இறைவன் வருகிறார் என்ற மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள இளம் பெண் மரியாவும், வயதில் முதிர்ந்த எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர், நம்மையும் சந்திக்க வருகின்றனர். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் மரியாவும், எலிசபெத்தும் சொல்லித்தரும் பாடங்கள் பல உள்ளன. இவ்விருவரும் தங்கள் வாழ்வில் இறைவனைத் தேடியவர்கள். தன்னைத் தேடியவர்களைத் தேற்ற, இறைவன் அன்று வந்தார்; இன்று வருகிறார்; இனியும் வருவார் என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் ஓர் அற்புத விழாவே, கிறிஸ்மஸ். இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வதோர் நாட்டில் பேராயராகப் பணிபுரிந்த அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், எல் சால்வதோர் மக்களுக்கு வெளியிட்ட கிறிஸ்மஸ் செய்தியின் ஒரு பகுதி இது:
"உண்மையில் ஏழையாக மாறாதவர்கள், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட முடியாது. தன்னிடம் எல்லாமே உள்ளன, தான் மட்டுமே தனக்குப் போதும் என்ற மமதையில் வாழ்பவர்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை. அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் தேவைப்படுவதில்லை. ஏழைகள், பசியுற்றோர், தேவையில் இருப்போர்... இவர்களாலேயே கிறிஸ்துபிறப்பு விழாவில் பொருள் காணமுடியும். அவர்களைத் தேடியே எம்மானுவேல், அதாவது, 'கடவுள் நம்மோடு' என்ற பெயர் தாங்கிய இறைவன் வருவார்" என்பது, அருளாளர் ரொமேரோ அவர்கள் வழங்கிய கிறிஸ்மஸ் செய்தி.

தான் மட்டுமே தனக்குப் போதும் என்று வாழ்வோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அடிக்கடி எச்சரிக்கை வழங்கிவருகிறார். 2016ம் ஆண்டு புத்தாண்டு நாளன்று கொண்டாடப்படவிருக்கும் 49வது உலக அமைதி நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். 'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' (Overcome Indifference and Win Peace) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அச்செய்தியில், 'அக்கறையின்மையின் பல வடிவங்கள்' என்ற பகுதியில் கூறும் கருத்துக்கள், அருளாளர் ரோமெரோ அவர்களின் கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளன.
அக்கறையின்மையின் முதல் வடிவம், இறைவனைப் பற்றி காட்டும் அக்கறையின்மை. இது, அயலவர் மீதும், சுற்றுச்சூழல் மீதும் அக்கறையற்ற நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நம்மையும், நம் வாழ்வையும், சமுதாயத்தையும் நாமே உருவாக்கிக் கொள்வதாக எண்ணுகிறோம். நமக்கு நாமே போதும் என்ற மனநிலையால், இறைவன் முற்றிலும் தேவையில்லை என்ற உணர்வு கொள்கிறோம் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

மரியாவும், எலிசபெத்தும் தான் மட்டும் தனக்குப் போதும் என்ற மாய வலையிலிருந்து விடுதலை பெற்று, இறைவனையும் அடுத்தவரையும் தேடிச் சென்றவர்கள். அவர்களுக்கு இறைவன் வெகுவாகத் தேவைப்பட்டார். குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த எலிசபெத்து, தன் தனிப்பட்ட வாழ்வில் உண்டான குறையைத் தீர்க்க, இரவும் பகலும் இறைவனைத் தேடினார். இறைவனிடம் வேண்டினார்.
மரியா என்ற இளம்பெண்ணும் இறைவனைத் தேடினார். தன் சொந்தத் தேவைகளைக் காட்டிலும், சமுதாயத்தின் தேவைகளுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். அவர் வாழ்ந்த காலத்தில், யூதேயா முழுவதும் தன் ஆதிக்கத்தையும், அராஜகத்தையும் உறுதிப்படுத்த, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது, அந்நாட்டில் வாழ்ந்த பெண்கள், குறிப்பாக, இளம்பெண்கள். பகலோ, இரவோ, எந்நேரத்திலும் அப்பெண்களுக்கு, படைவீர்களால் ஏற்பட்ட ஆபத்துக்கள் ஏராளம். அந்நியநாட்டு, அல்லது, உள்நாட்டுப் படைவீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வாழும் பெண்களைக் கேளுங்கள்... அங்கு ஏராளமான கண்ணீர் கதைகள் வெளிவரும்.

தன் சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையிலடைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா, இறைவனைத் தேடினார். "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்டமாட்டாயா இறைவா?" என்ற வேண்டுதலை, அவர், கண்ணீரோடு அடிக்கடி எழுப்பிவந்தார். மரியா எழுப்பிவந்த வேண்டுதல்களுக்கு விடை வந்தது. எப்படிப்பட்ட விடை அது! மணமாகாத அவரை தாயாகுமாறு அழைத்தார் இறைவன்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைக்கான தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே நிறுத்தி, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. அதுவும் உரோமையப் படைவீரர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்ற பல இளம்பெண்கள் இவ்வகையில் கொல்லப்பட்டதை மரியா நேரில் கண்டிருக்கவேண்டும். அவர்களில் சிலர், இளம்பெண் மரியாவின் தோழிகளாகவும் இருந்திருக்கக்கூடும். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக, அந்த இளம்பெண்கள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பார்த்த மரியா, பின்னர், தனிமையில் வந்து கதறி அழுதிருக்க வேண்டும்.
மணமாகாமல் தாயாகும் நிலைக்கு தான் அழைக்கப்படுவதை மரியா உணர்ந்தார். இறைவன் தந்த இவ்வழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக்கொள்வதும், வலியச்சென்று, தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும்... எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு! 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. அவரது நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் வானதூதர் இன்னொரு செய்தியைச் சொன்னார். அவரது உறவினராகிய எலிசபெத்து கருதரித்திருக்கிறார் என்பதே அச்செய்தி. குழந்தைப்பேறு இல்லாததால், ஊராரின் பழிச்சொற்களைக் கேட்டு, கேட்டு மனம் வெறுத்து, வீட்டுக்குள் தன்னையே சிறைபடுத்திக்கொண்ட எலிசபெத்தைச் சந்திக்க மரியா சென்றார்.
கன்னியான ஒரு பெண் தாயாகப்போகும் செய்தியை அவரது குடும்பம் ஏற்காது, யூத சமூகம் ஏற்காது. மலடியென்று இகழப்பட்ட ஒரு பெண், அதுவும் குழந்தையைப் பெற்றெடுக்கக் கூடிய வயதைத் தாண்டிய ஒரு பெண், தாயாகப்போகும் செய்தியை, அவரது குடும்பம் நம்பாது, யூத சமூகமும் நம்பாது. ஏற்கமுடியாத, நம்பமுடியாத செய்திகளை உள்ளத்திலும், உடலிலும் தாங்கிய இரு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. - லூக்கா நற்செய்தி 1: 39-45

இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் அழகை, இவ்விரு பெண்களின் வாழ்வும் சித்திரிக்கிறது. எலிசபெத்தின் வாழ்வில், இறைவன், மெதுவாக, மிக, மிகத் தாமதமாகச் செயல்பட்டார். ஆண்டுகள் பலவாய் குழந்தைப்பேற்றுக்காக எலிசபெத்து வேண்டிவந்தார். வயது கூட, கூட, இனி தன் வாழ்வில் குழந்தைப்பேறு இல்லையென்ற தீர்மானத்திற்கு அவர் வந்த வேளையில், இறைவன் அவர் வாழ்வில் குறிக்கிட்டார். நம்ப முடியாத ஒரு புதுமையை நிகழ்த்தினார். நாமும் வாழ்வில் பல ஆண்டுகளாய் வேண்டிக் காத்திருந்த ஒரு காரியம், திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி நிறைவேறுவதில்லையா?
எலிசபெத்தின் வாழ்வில், மிக, மிகத் தாமதமாகச் செயல்பட்ட இறைவன், மரியாவின் வாழ்வில் ஒரு புயலென நுழைந்தார். மீட்புக்காக மரியா காத்திருந்தது உண்மை; ஆனால், அந்த மீட்புக்கு அவரே வழியாக வேண்டும் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. மிகத் தாமதமாகவோ, அல்லது புயல் வேகத்திலோ வாழ்வில் காரியங்கள் நிகழும்போது, கூடவே கேள்விகள் பலவும் எழுகின்றன. ஏன் எனக்கு? ஏன் இப்போது? போன்ற கேள்விகள், மரியாவின் உள்ளத்திலும், எலிசபெத்தின் உள்ளத்திலும் கட்டாயம் எழுந்திருக்கவேண்டும்.

கேள்விகள் எழுவது இயற்கை. ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள், விளக்கங்கள் கிடைக்காது. மரியா வானதூதரைச் சந்தித்தபோதும், மரியா, எலிசபெத்தைச் சந்தித்தபோதும் ஒரு சில கேள்விகள் வெளிப்பட்டன. பல கேள்விகள் அவர்கள் மனதில் அடைபட்டிருந்தன. அவர்கள் சந்தித்தபோது, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கங்களைத் தேடவில்லை.
மரியா, எலிசபெத்து இருவரையும், கேள்விகள் கார் மேகங்களாகச் சூழ்ந்திருந்தாலும், அந்த மேகங்களிலிருந்து பெய்த இறைவனின் கருணை என்ற மழையில் அவர்கள் நனைந்தனர். கடவுளைக் கேள்விக் கணைகளால் துளைப்பதற்குப் பதில், கடவுளின் கருணை மழையில் நனைவது மேலான ஒரு வழி. இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் இரண்டாவது பாடம்...

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. எலிசபெத்து மரியாவைப் புகழ்ந்த மொழிகள், மனிதர் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய, சொல்லவேண்டிய அழகான ஆசி மொழிகள்... "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" லூக்கா நற்செய்தி 1: 42 நாம் ஒவ்வொருவரும் தினமும் மற்றவர்களை இத்தகைய வார்த்தைகளால் வாழ்த்தினால், ஆசீர்வதித்தால், இந்த பூமியில் எவ்வளவு நலம் வளரும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம். வயதில் முதிர்ந்தவர்கள், "மவராசனா இரு" "மவராசியா இரு" என்று வாழ்த்தும்போது எழும் நிறைவு, கேட்பவரையும் நிறைக்கிறது, கொடுப்பவரையும் நிறைக்கிறது. மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது பாடம் இது.

நல்லவை வாழ்வில் நடக்கும்போது, கேள்விகள் கேட்டு, விடைகள், விளக்கங்கள் தேடி, நம் அறிவை நிரப்புவதற்குப் பதில், நன்றியால் நம் மனதை நிரப்ப முயல்வோம். கருமேகங்களாய் சூழ்ந்துவரும் பிரச்சனைகள் மத்தியில் மின்னல் கீற்றுபோலத் தோன்றும் நல்லவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும், அந்த நல்ல செய்திகளை நான்கு பேரோடு பகிர்ந்து, நம்பிக்கையை வளர்க்கவும், சந்திக்கும் மனிதர்களை மனதார வாழ்த்தும் பக்குவம் பெறவும், மரியா, எலிசபெத்து என்ற இரு அற்புதப் பெண்கள் வழியாகப் பாடங்களைப் பயில்வோம்.
"சுடர்விட்டெரியும் ஒருவரால் சும்மா இருக்க முடியாது" "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது" என்ற எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்ந்த இளம்பெண் மரியாவைப் போல வாழ்வதற்கு, நமக்குள் இறையன்பு பற்றியெரிய மன்றாடுவோம்.


No comments:

Post a Comment