Tuesday, February 23, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 10

Pope Francis paying homage to St Padre Pio and St Leopoldo

70 வயது நிறைந்த அருள்பணியாளர் ஒருவர், ஒரு துறவு சபையில் தலைமைப் பொறுப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியபின், திருத்தலம் ஒன்றில் பணியாற்றச் சென்றார். திருத்தலத்திற்கு வரும் மக்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்குவது, அவரது முழுநேரப் பணியாக இருந்தது. ஒப்புரவு அருளடையாளம் வழியே பெறக்கூடிய பாவ மன்னிப்பை ஓர் அர்த்தமுள்ள அனுபவமாக மக்கள் பெறுவதற்கு, அந்த அருள் பணியாளர் உதவி செய்தார். அவரைத் தேடி, அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர், வறியோர், செல்வந்தர் என்று பலர், சாரை, சாரையாகச் சென்றனர்.
ஒருநாள் அம்மறைமாவட்டத்தின் ஆயர், அந்த அருள்பணியாளரைச் சந்திக்கச் சென்றபோது, அருள்பணியாளர், ஆயரிடம், "நான் மிக எளிதாக, மிகத் தாராளமாக மன்னித்து விடுகிறேனோ என்ற நெருடல் எனக்குள் அவ்வப்போது எழுகிறது" என்று சொன்னார். "ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?" என்று ஆயர் கேட்க, "என்னிடம் வரும் அனைவருக்கும், எப்படியாவது மன்னிப்பு வழங்கிவிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் அதிகம் உள்ளது. இது சரியா, தவறா என்று தெரியவில்லை" என்று கூறினார்.
"அப்படி நீங்கள் உணரும்போது என்ன செய்கிறீர்கள்?" என்று ஆயர் மீண்டும் கேட்டார். அதற்கு, அந்த அருள்பணியாளர், "அந்நேரங்களில், நான் கோவிலுக்குச் சென்று, நற்கருணைப் பேழைக்கு முன் அமர்ந்து, ஆண்டவரிடம் பேசுவேன்" என்று அருள் பணியாளர் சொன்னார். "ஆண்டவரிடம் என்ன பேசுவீர்கள்?" என்று ஆயர் மறுபடியும் கேட்டதற்கு, அந்த அருள் பணியாளர், "'ஆண்டவரே, என்னை மன்னியும். இன்று நான் மிக, மிக, தாராளமாக மன்னிப்பு வழங்கிவிட்டேன். ஆனால், நான் இவ்விதம் நடந்து கொள்வதற்கு நீங்கள்தான் காரணம். இவ்வாறு மன்னிப்பதற்கு, உங்களிடமிருந்துதான் நான் பழகிக்கொண்டேன்' என்று ஆண்டவரிடம் பேசுவேன்" என ஆயருக்குப் பதில் சொன்னார். ஆயர், அந்த அருள்பணியாளரை மனதாரப் பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரெஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியபோது, கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவரை, தான் சந்தித்த இந்நிகழ்வை, பிப்ரவரி 9ம் தேதி காலைத் திருப்பலியில் பகிர்ந்துகொண்டார். அன்று காலை, புனித பேதுரு பசிலிக்காவில், கப்பூச்சியன் துறவு சபையின் உலகளாவியப் பிரதிநிதிகளுக்கு தனிப்பட்ட முறையில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, 'மன்னிப்பு வழங்குவது', கப்பூச்சியன் துறவு சபையின் தனித்துவமிக்கப் பாரம்பரியம் என்று கூறினார்.
நாம் தற்போது கடைபிடித்துவரும் தவக்காலத்தில், திருஅவை விடுக்கும் முக்கியமான அழைப்பு, மனமாற்றம், மன்னிப்பு, ஒப்புரவு என்ற மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. இவற்றில், மன்னிப்பைப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 9ம் தேதி பகிர்ந்துகொண்ட கருத்துக்களை இந்த விவிலியத் தேடலில் சிறிது ஆழமாகச் சிந்திக்க முயல்வோம்.
பிப்ரவரி 9ம் தேதி காலைத் திருப்பலி நடைபெற்ற வேளையில், கப்பூச்சியன் துறவுச் சபையில் வாழ்ந்து, இறந்தபின்னரும் அழியாத நிலையில் பாதுகாக்கப்பட்டுவரும் இரு புனிதர்களின் உடல்கள், புனித பேதுரு பசிலிக்காவில் மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்தன. 'பாத்ரே பியோ' என்று மக்களால் போற்றப்படும் பியெத்ரெல்சீனோ நகர் புனித பயஸ், மற்றும் புனித லியோபோல்தோ மாந்திச் என்ற இரு புனிதர்களும், 'ஒப்புரவு அருளடையாளத்தின் திருத்தூதர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் 14 மணி நேரங்களுக்கும் மேலாக ஒப்புரவு அருளடையாளத்தை மக்களுக்கு வழங்கிவந்த இவ்விரு புனிதர்களையும் எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தில் அருள் பணியாளரின் முக்கியப் பணி, மன்னிப்பு வழங்குவதே என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கப்பூச்சியன் துறவிகளிடம் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அருள் பணியாளர்கள் அனைவரிடமும் இம்மறையுரை வழியே தான் பேச விழைவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர்கள் கொண்டிருக்கவேண்டிய மனநிலையைக் குறித்து திருத்தந்தை கூறிய அறிவுரை சிறப்பு மிக்கது.
"மன்னிப்பு வழங்க உருவாக்கப்பட்டுள்ள ஒரு வடிகாலே, ஒப்புரவு அருளடையாளம். சிலவேளைகளில், உங்களால் பாவமன்னிப்பு வழங்கமுடியாத நிலை உருவாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அவ்வேளையிலும், இந்த அருளடையாளத்தைத் தேடி வந்திருப்பவர், வெட்கத்தால் கூனிக்குறுகிப் போகும்படி அவரிடம் பேசாதீர்கள். மன்னிப்பையும், மன அமைதியையும் நாடி வந்திருப்பவரை, தந்தைக்குரிய பாசத்தோடு அரவணைத்து, 'இறைவன் உம்மீது அன்பு கொண்டுள்ளார்' என்ற உண்மையை அவர் உணரும்படிச் செய்யுங்கள்.
பலர் என்னிடம் ஒரு கசப்பான உண்மையைக் கூறியுள்ளனர். அதாவது, ஒப்புரவு அருளடையாளத்தின்போது ஓர் அருள் பணியாளர் கேள்விகள் கேட்டு வதைத்ததால், அவர்கள் அந்த அருளடையாளத்தைப் பெற இனி ஒருபோதும் செல்வதில்லை என்று தீர்மானம் செய்துள்ளதை என்னிடம் கூறியுள்ளனர். தயவுசெய்து இவ்விதம் நடந்து கொள்ளாதீர்கள்" என்று திருத்தந்தை விண்ணப்பித்தார்.
ஒப்புரவு அருளடையாளத்தில் அருள் பணியாளர்கள் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்பு ஒருமுறை பேசியபோது, அந்த அருளடையாள அனுபவத்தை, நீதிமன்ற அனுபவமாக மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தவறு செய்தவரை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கேள்விகளால் அவர்களை வதைப்பது, நீதி மன்றங்களில் நடக்கக்கூடும். ஒப்புரவு அருளடையாள நேரத்தில் இந்தச் சித்ரவதை நடக்கக்கூடாது என்று திருத்தந்தை கூறியிருந்தார்.
பிப்ரவரி 9, காலைத் திருப்பலியில், கப்பூச்சியன் துறவிகளிடம் இதையொத்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டத் திருத்தந்தை, இறுதியாகக் கூறிய வார்த்தைகள் இவையே: "பரந்து விரிந்த இதயம்... மன்னிப்பு... இவையே உங்களுக்குத் தேவை. மன்னிப்பு, இறைவன் தரும் அரவணைப்பு. அது ஒரு விதை. ... இந்த அருளைப் பெற ஒவ்வொருவருக்காகவும் செபியுங்கள். எனக்காகவும் செபியுங்கள்" என்று தன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் தனித்துவமிக்க ஒரு நிகழ்வாக, 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களை' திருநீற்றுப் புதனன்று உலகெங்கும் அனுப்பிவைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 1142 அருள் பணியாளர்களில், 726 அருள்பணியாளர்கள், பிப்ரவரி 9ம் தேதி, வத்திக்கானுக்கு வருகை தந்திருந்தனர். திருநீற்றுப் புதனுக்கு முந்திய செவ்வாயன்று மாலை, இம்மறைப் பணியாளர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, மனம் திறந்து அவர்களோடு பேசியக் கருத்துக்கள், அர்த்தமும், ஆழமும் மிகுந்தவை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், மன்னிப்பு, மடைதிறந்த வெள்ளமென இவ்வுலகெங்கும் பரவவேண்டும் என்ற ஆவலில், இரக்கத்தின் மறைப் பணியாளர்களுக்கு, தனிப்பட்ட அதிகாரங்களை வழங்கி, உலகெங்கும் அனுப்பிவைத்தத் திருத்தந்தை, அவர்களோடு பகிர்ந்துகொண்ட ஒருசில எண்ணங்கள் இதோ:

ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர், இந்த அருளடையாளத்தை அணுகிவரும் மனிதர்களின் இதயங்களை, கடவுளின் இரக்கம் என்ற ஆடையால் உடுத்தி, அவர்கள் உணரும் வெட்கத்தை நீக்கி, மகிழ்வில் அவர்களை நிரப்பவேண்டும். தன்னை அணுகிவரும் எவரையும் வரவேற்க, திருஅவை ஓர் அன்னையெனக் காத்திருக்கிறார் என்ற உண்மையை, மக்கள் உணர்வதற்கு 'இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்' ஒரு வாய்ப்பாக அமையவேண்டும்.
ஒப்புரவு அருள் அடையாளத்தை நாடிவருபவரை வரவேற்பது, அவருக்குச் செவிமடுப்பது, அவரை மன்னிப்பது, அவர் தேடும் அமைதியை அளிப்பது என்று அனைத்திலும் செயலாற்றுவது, கிறிஸ்துவே. அந்த அருளடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர்கள், கிறிஸ்துவின் மன்னிப்பை முதலில் பெறவேண்டிய நிலையில் உள்ளவர்கள்.
இவ்வாறு மனம் திறந்துப் பேசியத் திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளம் தன் வாழ்வில் எவ்விதம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதையும் தன் உரையில் பகிர்ந்துகொண்டார். 1953ம் ஆண்டு, செப்டம்பர் 21ம் தேதி தான் மேற்கொண்ட ஒப்புரவு அருளடையாளத்தின்போது, தன்னை ஓர் அருள்பணியாளர் வரவேற்று, தந்தைக்குரிய பாசத்தை வெளிப்படுத்திய பாங்கு, தன் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது என்றும், அந்த அனுபவமே, இறையழைத்தல் என்ற விதையை தன் உள்ளத்தில் விதைத்தது என்றும் எடுத்துரைத்தார்.
செப்டம்பர் 21ம் தேதி, திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருநாள். அத்திருநாளன்று, 17 வயதான ஹோர்கே மாரியோ பெர்கோலியோவின் வாழ்வில் உருவான மாற்றத்தின் நினைவாக, "Miserando atque eligendo" அதாவது, "இரக்கம்கொண்டு தேர்ந்தெடுத்து" என்ற சொற்களை, பெர்கோலியோ அவர்கள், தான் ஆயராகப் பணியேற்றபோது, தன் விருதுவாக்காகத் .தேர்ந்தெடுத்தார். வரி வசூலிக்கும் மத்தேயுவை, இயேசு, இரக்கம் கொண்டு அழைத்ததை மையப்படுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்விருதுவாக்கை, கர்தினால் பெர்கோலியோ அவர்கள், தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னரும் தன் விருதுவாக்காக, தொடர்ந்து ஏற்றுள்ளார். புனித மத்தேயு திருநாளன்று, ஓர் ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே தன் வாழ்வில் உருவான திருப்புமுனையைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இரக்கத்தின் மறைப் பணியாளர்களுக்கு சில எதார்த்தமான அறிவுரைகளையும் வழங்கினார்:
ஒரு சில வேளைகளில் ஒப்புரவு அருளடையாளம் பெற வருவோர், தங்கள் உள்ளத்தில் இருப்பனவற்றை வார்த்தைகளால் கூற இயலாமல் தடுமாறும்போது, அவர்கள் நிலையைக் கனிவுடன் புரிந்துகொள்ள வேண்டும். மன்னிப்பை நாடி அவர்கள் வந்துள்ளனர் என்பதையும், தங்கள் வாழ்வை மாற்றி அமைக்க விரும்புகின்றனர் என்பதையும் நாம் உணர்ந்து, அவர்களை வழிநடத்தவேண்டும்.
ஒப்புரவு அருளடையாளத்தை அணுகி வருபவர் சுமந்துவரும் வெட்க உணர்வைக் குறித்து, தன் உரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடக்கநூலில் கூறப்பட்டுள்ள இரு நிகழ்வுகளை, எடுத்துக்காட்டாகக் கூறினார். ஆதாம், ஏவாள் இருவரும் இறைவனின் சொற்களை மீறி, விலக்கப்பட்டக் கனியைச் சுவைத்தனர். தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த இருவருமே, இறைவனைக் காண விருப்பமின்றி விலகிச் சென்றனர் (தொடக்க நூல் 3:8-10) என்று குறிப்பிட்ட திருத்தந்தை, பாவத்தில் விழும் மனிதர்களின் முதல் உணர்வுகள், இறைவனை விட்டு விலகிச்செல்வது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை கூறிய இரண்டாவது எடுத்துக்காட்டு, நோவாவைப் பற்றியது. நேர்மையானவர் என்றும் குற்றமற்றவர் என்றும் கூறப்படும் நோவா, மது மயக்கத்தில் நிலையிழந்து போவதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, ஆடையின்றி கிடந்த நோவாவின் மீது துணியைப் போர்த்திய அவரது இரு மகன்கள், அவருக்குரிய மதிப்பை மீண்டும் அளித்தனர் (தொ.நூல் 9:18-23) என்பதையும் .சுட்டிக்காட்டினார்.
ஒப்புரவு அருள் அடையாளம் வழங்கும் அருள் பணியாளர்கள், ஒரு நீதிபதியைப் போல் அமர்ந்திருப்பதற்குப் பதில், நோவாவின் இரு மகன்களைப் போல், தங்களை நாடிவரும் மனிதர்களின் மாண்பை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், அவர்களுக்கு இறைவனின் இரக்கம் என்ற ஆடையை அணிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்று திருத்தந்தை தன் உரையில் கேட்டுக்கொண்டார்.
'இரக்கத்தின் மறைப் பணியாளர்களாக' உலகெங்கும் செல்லும் அருள் பணியாளர்களுடன் தானும் துணைவருவதாகக் கூறியத் திருத்தந்தை, அவர்கள்  மேற்கொள்ளும் பணியில், புனித லியோபோல்தோ, புனித பியோ, இன்னும் பல புனிதமான அருள் பணியாளர்கள் துணைவருகின்றனர் என்ற வார்த்தைகளுடன் தன் உரையை நிறைவு செய்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 9ம் தேதி வழங்கிய இரு உரைகளும் மன்னிப்பின் அழகை வெளிச்சமிட்டுக் காட்டும் உரைகள். திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதிகளாக, அந்த மன்னிப்பை உலகெங்கும் வழங்கச் சென்றுள்ள 'இரக்கத்தின் மறைப் பணியாளர்கள்' தங்கள் பணியைத் திறம்படச் செய்வதற்கு, இறை அருளை இறைஞ்சுவோம். நாம் துவங்கியுள்ள தவக்காலத்தில், ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அனைத்து அருள் பணியாளர்களும், விண்ணகத் தந்தையின் மன்னிப்பை அனைவரும் உணர்வதற்கு உதவி செய்வார்கள் என்று நம்புவோம்.

"இரக்கமும், நம்பிக்கையும் வாழும் ஓர் இடமாக, வரவேற்பையும், மன்னிப்பையும் வழங்கும் ஓர் இல்லமாக, திருஅவை, என்றென்றும் விளங்கவேண்டும்" (Let the Church always be a place of Mercy and Hope, where everyone is welcomed, loved and forgiven) என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையைக் குறித்து காணும் கனவு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் நனவாக வேண்டும்.

Pope Francis talking to some Missionaries of Mercy
Photo : L'Osservatore Romano


No comments:

Post a Comment