03 February, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 8

William Holman Hunt – The Light of the World
திருஅவை வரலாற்றில் இதுவரைக் கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகள், ஒரு முக்கியமான, பொருள் நிறைந்த சடங்குடன் ஆரம்பமாயின. அதுதான், புனிதக் கதவைத் திறக்கும் சடங்கு. 'இரக்கத்தின் முகம்' என்ற பெயரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவுப்பு மடலின் அறிமுகப் பகுதியில், அவர் இச்சடங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்: "அமல அன்னை திருநாளன்று, புனிதக் கதவைத் திறக்கும் மகிழ்வைப் பெறுவேன். அன்று, புனிதக் கதவு, இரக்கத்தின் கதவாக மாறும். அக்கதவின் வழியே செல்லும் அனைவரும், ஆறுதலும், மன்னிப்பும் வழங்கி, நம்பிக்கையை வளர்க்கும் இறையன்பை அனுபவிப்பார்கள்." புனிதக் கதவின் பொருளையும், ‘கதவு என்ற உருவகம் விவிலியத்தில் சொல்லித் தரும் பாடங்களையும் நம் விவிலியத் தேடல் வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.
புனித பெனடிக்ட் துறவுச் சபையைச் சேர்ந்த Albert Hammenstede என்ற அருள் பணியாளர், "புனிதக் கதவுகளின் அடையாளம்" (The Symbolism of Holy Doors) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் துணையோடு, நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம். கதவின் வழி நுழைவது என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வியுடன், அருள்பணி Hammenstede அவர்கள், தன் கட்டுரையைத் துவக்குகிறார்.
எந்த ஒரு கதவும், ஒரு வாய்ப்புக்கு வழி வகுக்கிறது. நாம் நுழையும் கதவுக்கு மறுபக்கம், மகிழ்வளிக்கும் விடயங்கள் நமக்காகக் காத்திருக்கலாம்; அல்லது, அதிர்ச்சியூட்டும் ஆபத்துக்கள் காத்திருக்கலாம். நாம் தற்போது நிற்கும் இடம், நமக்குப் பழக்கமாகிவிட்டதால், அங்கு நமக்கு அதிர்ச்சியூட்டுபவை அதிகம் இராது. பழக்கமானச் சூழலைவிட்டு, புதியச் சூழலுக்குள் அடியெடுத்துவைக்க, கதவின் வழியேச் செல்லும்போது, கதவுக்கு மறுபக்கம் காத்திருப்பவை குறித்து நமக்கு எதுவும் தெரியாது.

கதவுக்குப் பின் ஆபத்தான அதிர்ச்சிகள் ஒளிந்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 'பிரெஞ்ச் புரட்சி'காலத்தில் (French Revolution) நடைபெற்ற ஒரு நிகழ்வை, அருள்பணி Hammenstede அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்ச் புரட்சி நடைபெற்ற நேரத்தில், கத்தோலிக்க அருள் பணியாளர்கள் அனைவரும் ஒரு மாளிகையின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் ஒரு கதவின் வழியே வெளியேச் செல்வதற்குப் பணிக்கப்பட்டனர். அவர்கள், அக்கதவின் வழியே சென்றபோது, கதவுக்கு மறுபக்கம் காத்திருந்த புரட்சியாளர்கள் அருள் பணியாளர்களை, ஒருவர் பின் ஒருவராக, வெட்டிச் சாய்த்தனர். 3 ஆயர்களும், 200க்கும் அதிகமான அருள் பணியாளர்களும் அன்று கொல்லப்பட்டனர்.

உரோமையக் கலாச்சாரத்தில், கதவுகளின் மேல், 'ஜானுஸ்' என்ற தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இரு முகங்கள் கொண்ட 'ஜானுஸ்' தெய்வத்தின் பின்னோக்கிப் பார்க்கும் முகம், பழக்கமான, தெரிந்த, புரிந்த விடயங்களைக் குறிக்கும் முகமாகவும், முன்னோக்கிப் பார்க்கும் முகம், பழக்கமில்லாத, தெரியாத, புரியாத விடயங்களை எதிர்கொள்ளும் முகமாகவும் உருவகிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துவந்த, பழக்கப்பட்ட காலத்தைக் கடந்து, புதியதொரு காலத்திற்குள் நம்மை அழைத்து வந்துள்ள புத்தாண்டின் முதல் மாதம், 'ஜானுஸ்' தெய்வத்தின் பெயரால், 'ஜனவரி' என்று அழைக்கப்படுகிறது. நாம் தற்போது கடந்து வந்துள்ள இந்த சனவரி மாதத்தை, ஒரு வாயிலாக, கதவாக நினைத்துப் பார்க்கலாம். 'சனவரி' என்ற கதவின் வழியே, 2016ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ள நாம், இனி சந்திக்கப் போகும் நாட்கள், மகிழ்வையேக் கொணரும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்.

'கதவு' என்ற உருவகம் விவிலியத்தில் சித்திரிக்கும் இன்னும் சில எண்ணங்களை, அருள்பணி Hammenstede அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். நிலைகளில் பொருத்தப்பட்டு, மெல்லிய காற்றின் விசையாலும் அசையக் கூடியக் கதவுகள், நிலையின்றி அலைபாயும் மனங்களுக்கு அடையாளங்களாய் விளங்குகின்றன என்ற எண்ணம், நீதிமொழிகள் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண்டிருப்பது போல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார். (நீதிமொழிகள் 26:14)
முழுவதும் மூடப்படாமலும், முற்றிலும் திறக்கப்படாமலும் இருக்கும் கதவு, முடிவெடுக்க முடியாத மனநிலையையும், அந்நிலையை உருவாக்கும் சோம்பேறித்தனத்தையும் உணர்த்துவதுபோல், மூடப்பட்ட கதவுகள், ஒரு முடிவை உணர்த்துகின்றன. அந்த முடிவுகளால் வரும் பாதிப்புக்களையும் கூறுகின்றன. இந்த எண்ணத்தை மத்தேயு நற்செய்தியில் காண்கிறோம்.
மத்தேயு நற்செய்தி, 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'மணமகளின் தோழியர்' அல்லது, 'பத்துத் தோழியர்' உவமையில், 'கதவு', முடிவெடுக்கப்பட்டுவிட்டது என்பதைக் காட்டும் ஒரு முக்கிய அடையாளமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. மணமகனின் வரவுக்காகக் காத்திருந்த பத்துத் தோழியரில், ஐந்துபேர், தங்கள் விளக்குகளுக்குத் தேவையான எண்ணெய் வாங்கச் சென்றனர். அவ்வேளையில், மணமகன் வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்விதம் விவரிக்கிறார்:
மத்தேயு 25: 10-12
அவர்களும் எண்ணெய் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, "ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்" என்றார்கள். அவர் மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது "என்றார்.

மூடப்பட்டக் கதவுகள் முடிவுகளுக்கு அடையாளம் என்று சிந்திக்கும்போது, முடிவெடுத்து மூடப்படும் மனக் கதவு நம் நினைவுக்கு வருகிறது. மூடப்பட்ட மனக் கதவை நினைவுபடுத்தும் ஒரு புகழ்பெற்ற ஓவியத்தைப்பற்றி நாம் அறிவோம்.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த William Holman Hunt என்ற ஓவியர், இயேசு, ஒரு கதவின் முன் நின்று தட்டுவதுபோல் ஓர் ஓவியத்தை வடித்துள்ளார். பல ஆண்டுகள் திறக்கப்படாமல், மிகவும் பழுதடைந்து காணப்படும் அந்தக் கதவுக்கு முன் நிற்கும் இயேசு, தலையில் முள்முடி தாங்கி, கையில் விளக்கேந்தி, கதவைத் தட்டிகொண்டிருப்பதைப் போல் வரைந்துள்ளார். 'உலகின் ஒளி' (The Light of the World) என்ற பெயரில் வெளியான அந்த ஓவியத்தின் பின்னணியாக, இருள் நிறைந்த ஒரு சூழல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
1850களில் இந்த ஓவியத்தை வரைந்த Hunt அவர்கள், ஏறத்தாழ 50 ஆண்டுகள் சென்று, தன் ஓவியத்தின் பொருளை விளக்கினார். தான் வரைந்த அந்தக் கதவில் கைப்பிடி எதுவும் கிடையாது என்றும், அந்தக் கதவு உள்ளிருந்து மட்டுமே திறக்கப்படக் கூடிய ஒரு கதவு என்றும் கூறிய Hunt அவர்கள், இந்தக் கதவு, நம் இதயத்தைக் காட்டும் கதவு என்று கூறினார். இறுகிப்போன வைராக்கியத்துடன் மூடப்பட்ட ஒரு மனக்கதவை நினைவுபடுத்தவே, நீண்ட காலமாகத் திறக்காமல், பழுதடைந்துபோன ஒரு கதவை தான் வரைந்ததாக Hunt அவர்கள் விளக்கினார்.

திருவெளிப்பாடு நூலில் நாம் வாசிக்கும் சொற்கள், இந்த ஓவியத்திற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.
திருவெளிப்பாடு 3: 20
இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
மனக்கதவருகே, குரல் கொடுத்தபடி நிற்கும் இயேசுவை, உள்ளே அனுமதிப்பதும், வெளியிலேயே காத்திருக்க வைப்பதும் நாம் எடுக்கும் முடிவு. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், நல்ல முடிவுகளை நாம் எடுக்க, இறைவன் நமக்குத் துணை புரியட்டும்.

இவ்வாறு, கதவு தரும் அடையாளங்களை, விவிலியப் பின்னணியின் உதவியுடன் வரிசைப்படுத்தும் அருள்பணி Hammenstede அவர்கள், கதவு நிலைகளைத் தாண்டிச் செல்வதால், ஒருவர் புனிதமடைவதையும், தீட்டுப்படுவதையும் விளக்குகிறார். வேற்றினத்தார் இல்லங்களின் கதவுகளைத் தாண்டுவதால், தாங்கள் தீட்டுப்படுவோம் என்று இஸ்ரயேல் மக்கள் உணர்ந்திருந்தனர். இந்த எண்ணத்தை விளக்கும் ஒரு நிகழ்ச்சி, இயேசுவின் பாடுகளின்போது இடம்பெற்றது. ஆளுநர் பிலாத்தின் மாளிகையில் இயேசுவுக்கு விசாரணை நிகழ்ந்த வேளையில், "பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை" (யோவான் 18:28) என்று யோவான் நற்செய்தி 18ம் பிரிவில் நாம் வாசிக்கிறோம்.
இதற்கு நேர் மாறாக, வெளி உலகில் நடமாடுவதால், தங்கள் மீது படிந்துவிடும் கறைகளை, தீட்டுக்களை அகற்றியபின் தங்கள் இல்லங்களில் நுழையவேண்டும் என்பதற்காக, யூதர்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கழுவும் சடங்குகளை நிறைவேற்ற தண்ணீர் வைத்திருந்தனர். 'தூய்மைப்படுத்தும் இச்சடங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கல் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, அவற்றை இயேசு திராட்சை இரசமாக மாற்றினார் என்பதை, யோவான் நற்செய்தி 2ம் பிரிவில் (2:6) வாசிக்கிறோம்.
தங்கள் இல்லங்களில் நுழைவதற்கு முன், யூதர்கள் தங்களையே தூய்மைப்படுத்திக்கொண்ட மரபு, கத்தோலிக்கத் திருஅவையின் துவக்கத்தில் பின்பற்றப்பட்டது. துறவற வாழ்வுக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான புனித பெனடிக்ட், தூய்மைப்படுத்தும் சடங்குகளைக் கடைபிடித்தார். துறவு இல்லத்திலேயே தங்கி, எந்நேரமும் செபித்து வந்த துறவிகள், எப்போதாவது, துறவு இல்லத்தை விட்டு வெளியேறி, போதகப் பணிகள் ஆற்றினர்; அல்லது, துறவு இல்லத்திற்குத் தேவையான உதவியைப் பெற ஊருக்குள் சென்று வந்தனர். துறவு இல்லத்தின் வாசலில் அமர்ந்திருந்த புனித பெனடிக்ட் அவர்கள், ஊருக்குள் சென்று திரும்பும் துறவிகள் மீது, தண்ணீர் தெளித்து, தூய்மைப்படுத்தும் சடங்கை ஆற்றிய பின்னரே, அத்துறவிகள் மீண்டும் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

இத்தகைய எண்ணங்களின் பின்னணியில், யூபிலி ஆண்டில் திறக்கப்படும் புனிதக் கதவுகள், தூய்மைப்படுத்தும் ஒரு கருவியாகக் கருதப்பட்டன. கத்தோலிக்கத் திருஅவையின் தலைமை நகரெனக் கருதப்படும் உரோம் நகரில் அமைந்துள்ள நான்கு பசிலிக்காப் பேராலயங்களின் புனிதக் கதவுகள், தூய்மை அளிக்கும் அருள் பெற்றவை என்று கருதப்படுகின்றன.
இதுவரைக் கொண்டாடப்பட்ட அனைத்து யூபிலி ஆண்டுகளிலும், உரோம் நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, 4 பசிலிக்காப் பேராலயங்களின் புனிதக் கதவுகளைப் பக்தியுடன் கடந்து சென்றால், புனிதமும், பரிபூரணப் பலனும் அடையலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் ìபுனிதக் கதவு' என்ற சொற்றொடருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வகுத்துள்ள புதிய இலக்கணத்தையும், அதன் விளைவாக திருஅவை அனுபவித்துவரும் அருள் அனுபவங்களையும் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

No comments:

Post a Comment