29 March, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 15

Hands behind prison bars

Zhang Agostino Jianqing, at the release function of the book ‘The Name of God is Mercy’ – Seated: Cardinal Pietro Parolin and Italian Actor-Director Roberto Benigni

"இறைவன், தன் இரக்கத்தால் என் வாழ்வை எவ்விதம் மாற்றினார் என்பதற்குச் சாட்சியம் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்" என்று, ஒரு சிறைக் கைதி, வத்திக்கானில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறினார். சீனாவில் பிறந்து, இத்தாலியில் குடியேறி, தற்போது, பதுவை நகரில், பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஜாங் அகோஸ்தீனோ ஜியான்கிங் (Zhang Agostino Jianqing) என்ற 30 வயது இளையவர், இவ்வாண்டு சனவரி மாதம் வத்திக்கானுக்கு வருகை தந்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆந்த்ரெயா தோர்னியெல்லி (Andrea Tornielli) என்ற பத்திரிக்கையாளருடன் மேற்கொண்ட உரையாடலின் தொகுப்பு, சனவரி 12ம் தேதி, ஒரு நூலாக வெளியானது. "இறைவனின் பெயர் இரக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவுக்கென, பதுவைச் சிறையிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இளையவர் ஜியான்கிங் அவர்கள், இறைவன் எவ்விதம் தன்னை சிறையில் சந்தித்தார் என்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இளையவர் ஜியான்கிங் அவர்கள், 12 வயது சிறுவனாய் இருந்தபோது, தன் பெற்றோருடன் இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். வளர் இளம் பருவத்தின் வாசலில் நின்ற ஜியான்கிங், நாடு, மொழி, கலாச்சாரம் என்று, பல வழிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வாழவேண்டியதாயிற்று. இந்தக் குழப்பங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 16 வயதில், அவரது வாழ்வு தடம்புரண்டது. அவருக்கு 19 வயதானபோது, ஒரு பெரும் குற்றத்தில் பிடிபட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் இருந்த ஒரே சீன இனத்தவர் என்பதால், இளையவர் ஜியான்கிங் அவர்கள், கொடும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று.
சிறையில் அவருக்கு ஆறுதலாக இருந்த ஒரு சிலர் வழியே, கிறிஸ்து தனக்கு அறிமுகமானார் என்பதை, இளையவர் ஜியான்கிங் அவர்கள், இந்த நூல் வெளியீட்டு விழாவில் கூறினார். 2014ம் ஆண்டு, அவர் திருமுழுக்கு பெற்றபோது, அகஸ்டின் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். தாயான புனித மோனிகாவின் கண்ணீராலும், செபங்களாலும் மனம் மாறிய புனித அகஸ்டினைப் போல, தானும், தன் அன்னையின் கண்ணீராலும், கிறிஸ்துவின் அறிமுகத்தாலும் மனம் மாறியதாகக் கூறினார், இளையவர் ஜியான்கிங். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இறைவனின் இரக்கம், சிறையில் தன்னை பாதுகாத்து வந்துள்ளது என்பதை, இளையவர் ஜியான்கிங் அவர்கள், தன் பகிர்வில் வலியுறுத்திக் கூறினார்.
"இறைவனின் பெயர் இரக்கம்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய இளையவர் ஜியான்கிங் அவர்கள், தன் உரையின் இறுதியில், "அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, உங்கள் பாசத்திற்கும், மென்மையான குணத்திற்கும் மிக்க நன்றி. இரக்கம் நிறைந்த ஓர் இடையரின் உள்ளத்தை வெளிப்படுத்தும் இந்நூலுக்காக உமக்கு நன்றி. உங்களை எங்கள் செபங்களில் எப்போதும் நினைவில் கொள்வோம்" என்று பேசி முடித்தார்.
இறைவனின் இரக்கம், இந்த இளையவரைத் தேடி, அவர் வாழ்ந்த சிறைக்குச் சென்றதால், சிறையிலேயே அவர் பரிபூரணப்பலனைப் பெற்றார் என கூறமுடியும். இத்தகையப் புதுமைகள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நடைபெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பரிபூரணப்பலனைக் குறித்து எழுதிய மடலில், சிறைக்கைதிகளைப் பற்றி தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளார்.

வயது முதிர்ந்தோரும், நோயுற்றோரும், தாங்கள் வாழும் இடத்திலேயே பரிபூரணப் பலனைப் பெறுவதற்குரிய வழிகளை, திருத்தந்தை ஒரு மடலில் குறிப்பிட்டுள்ளார் என்பதை, சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். இதைத் தொடர்ந்து, இதே மடலில், "தங்கள் சுதந்திரம் மறுக்கப்பட்டு, சிறையில் இருப்போர் மீது என் சிந்தனைகள் திரும்புகின்றன" என்ற வார்த்தைகளுடன், சிறைப்பட்டோர் மீது தன் கவனத்தைத் திருப்புகிறார், திருத்தந்தை. 'சிறைப்பட்டோருக்கு விடுதலை' என்பது, யூபிலி ஆண்டின் ஒரு நோக்கம் என விவிலியம் கூறுகிறது. இந்த எண்ணத்தை, திருத்தந்தை தன் மடலில் பின்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்:
"பொது மன்னிப்பு வழங்குவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கும் ஒரு தருணம், யூபிலி ஆண்டுகள். தங்கள் தவறுகளை உணர்ந்து, வாழ்வைச் சீரமைத்து, மீண்டும் சமுதாயத்தில் இணைய விழைவோரை மனதில் வைத்து, யூபிலி மன்னிப்பு உருவாக்கப்பட்டது" என்று, யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறையில் இருந்தவண்ணம், யூபிலி ஆண்டின் பரிபூரணப்பலனை எவ்விதம் அடைய முடியும் என்பதை, பின்வரும் வரிகளில் கூறுகிறார்:
"இறைவனின் இரக்கம், சிறையில் இருக்கும் அனைவரையும் தொடவேண்டும். மன்னிப்பு மிக அதிகமாகத் தேவைப்படும் இவர்கள் அருகே இறைவன் தங்கியிருக்கிறார். சிறையில் இருக்கும் சிற்றாலயங்கள் வழியே இவர்கள் பரிபூரணப் பலனை அடையமுடியும். தங்கள் எண்ணங்களையும், செபங்களையும் தந்தையாம் இறைவன் பக்கம் திருப்பி, இவர்கள், தங்கள் சிறைக்கதவைக் கடந்துச்செல்லும் ஒவ்வொரு வேளையிலும், புனிதக்கதவைக் கடந்துச்செல்வதை அது அடையாளப்படுத்தும். ஏனெனில், இறைவனின் இரக்கம், இவர்கள் உள்ளங்களை மாற்றுவதுபோல், இவர்கள் அடைபட்டிருக்கும் சிறைக் கதவுகளையும் விடுதலை அனுபவமாக மாற்றும் வல்லமை பெற்றது" என்று திருத்தந்தை இம்மடலில் விளக்கம் அளித்துள்ளார்.

சிறைக்கதவையும், புனிதக்கதவையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு எழுதியிருப்பது, அவரது கற்பனையில் உதித்த ஓர் எண்ணம் அல்ல. திருஅவை பாரம்பரியத்தில் இத்தகைய எண்ணம் பல நூற்றாண்டுகளாக பதிவு  செய்யப்பட்டுள்ளது. யூபிலி ஆண்டுகளில், புனிதக்கதவைத் திறப்பதற்கு, அக்கதவின் மீது, (வெள்ளிச் சுத்தியல் கொண்டு), திருத்தந்தையர் மூன்று முறை தட்டுவது, ஒரு பாரம்பரிய வழக்கம். விவிலியத்தில் காணப்படும் மூன்று நிகழ்வுகளின் அடையாளமாக மும்முறைத் தட்டும் பாரம்பரியம் வந்திருப்பதாக, திருஅவை வரலாறு, நமக்குச் சொல்லித்தருகிறது. விவிலியத்தில் நாம் காணும் மூன்று நிகழ்வுகள், இவையே:
பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்கள் தாகத்தால் தவித்தபோது, தலைவர் மோசே, தன் கோலால் பாறையைத் தட்டி, அதிலிருந்து தண்ணீரைப் பெருகச் செய்தது, முதல் நிகழ்வு (எண்ணிக்கை 20:11). புனிதக்கதவின் வழியே, இறைவனின் இரக்கம் தண்ணீராய்ப் பெருகி, மக்களின் தாகம் தணிக்கவேண்டும் என்ற பொருளில், திருத்தந்தை, அதை, முதல் முறை தட்டுகிறார்.
சிலுவையில் இயேசு இறந்ததும், அவரது விலாவை ஈட்டியால் குத்தவே, அங்கிருந்து இரத்தமும், தண்ணீரும் வடிந்தன என்பது, இரண்டாவது நிகழ்வு (யோவான் நற்செய்தி 19: 33-35). இயேசுவின் விலாவிலிருந்து வடிந்த இரத்தம், திருநற்கருணை என்ற அருளடையாளத்தையும், தண்ணீர், திருமுழுக்கு என்ற அருளடையாளத்தையும் குறிப்பதுபோல், புனிதக்கதவின் வழியே நுழைவோர், அருளடையாளங்கள் வழியே நிறையருள் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை அதை இரண்டாவது முறை தட்டுகிறார்.

புனிதக்கதவு, மூன்றாவது முறை தட்டப்படுவதற்கும், சிறைப்பட்டோர் விடுதலை பெறுவதற்கும், நெருங்கியத் தொடர்பு இருப்பதை உணர்த்தும் ஒரு நிகழ்வு, திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளது. இதோ, அப்பகுதி:
திருத்தூதர் பணிகள் 16: 25-34
நள்ளிரவில், பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார்.
பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, "நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்" என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள். பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். இறைவனின் வல்லமையால் உருவான நிலநடுக்கம், சிறைப்பட்டிருந்த பவுலையும், சீலாவையும் விடுவித்தது. அத்துடன், சிறையில் இருந்தோர் அனைவரையும் விடுவித்தது. இந்த நிகழ்வை நினைவுப்படுத்தவே, புனிதக்கதவை, திருத்தந்தை மூன்றாம் முறை தட்டுகிறார்.

இந்நிகழ்வில், ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறும் விளக்கம், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. விலங்குகளால் பிணைக்கப்பட்டு, சிறைக்கம்பிகளுக்குப் பின் வாழ்ந்த பவுலும், சீலாவும் கைதிகளா, அல்லது, சிறைக்கு வெளியே வாழ்ந்த சிறைக் காவலர் உண்மையிலேயே கைதியா என்ற கேள்வியை இவர்கள் எழுப்பியுள்ளனர். இறைவன் தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில், பவுலும் சீலாவும் சிறைக்குள் மகிழ்வுடன் பாடிக்கொண்டிருக்க, சிறைக்கு வெளியே இருந்த காவலர், எந்நேரமும் தன் பதவிக்கும், உயிருக்கும் ஆபத்துவரும் என்ற பயத்தில் வாழ்ந்து வந்ததால், நில நடுக்கம் ஏற்பட்டு, சிறைக்கதவுகள் திறந்திருப்பதைக் கண்டதும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பதைச் சுட்டிக்காட்டி, அந்தச் சிறைக்கூடத்தில், யார் உண்மையிலேயே கைதியாக இருந்தது என்ற கேள்வியை, விவிலிய விரிவுரையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

'இறைவனின் பெயர் இரக்கம்' என்ற நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யார் கைதி என்ற கேள்விக்கு, வேறொரு வகையில் விளக்கம் அளித்துள்ளார். பொலிவியா நாட்டின் பல்மசோலா (Palmasola) எனுமிடத்தில் சிறைக்கைதிகளைச் சந்தித்த நிகழ்வை நினைவுகூர்ந்து, திருத்தந்தை தன் உரையாடலில் இவ்வாறு கூறியுள்ளார்:
"பல்மசோலா சிறைக்கைதிகள், என்னை அன்போடு வரவேற்றபோது, அவர்களிடம் நான் ஓர் உண்மையை, மனப்பூர்வமாகக் கூறினேன். திருத்தந்தைக்கும் இறைவனின் இரக்கம் தேவைப்படுகிறது என்பதே, நான் அவர்களிடம் கூறிய உண்மை. புனித பேதுருவும், பவுலும் சிறைக்கைதிகளாக இருந்தனர் என்பதை அக்கைதிகளுக்கு நினைவுறுத்தினேன். தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு, சிறையில் இருப்போருடன் எனக்கு, தனிப்பட்ட நெருக்கம் உள்ளது. நான் ஒரு பாவி என்ற உள்ளுணர்வே, இந்த நெருக்கத்தை உருவாக்குகிறது.
ஒவ்வொரு முறையும், நான், திருப்பலி ஆற்றவோ, அல்லது, கைதிகளைச் சந்திக்கவோ சிறைக்கூடத்திற்குள் நுழையும் வேளையில், 'ஏன் அவர்களுக்கு இந்நிலை? அது ஏன் நானாக இருந்திருக்கக் கூடாது?' என்ற ஓர் எண்ணம் எனக்குள் எழும். அவர்களுக்கு நிகழ்ந்த தவறு, எனக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும். நானும் அங்கிருக்கத் தகுதியுடையவன்தான். எனக்கு முன் நிற்கும் இவர்களைவிட, நான் எவ்வகையிலும் உயர்ந்தவன் அல்ல."

சூழ்நிலை காரணமாக விலங்கிடப்பட்டு, சிறைக்குள் கைதிகளாக வாழ்வோருக்கும், சிறைக்கு வெளியில் இருந்தாலும், சூழ்நிலைக் கைதிகளாக வாழும் நமக்கும் இறைவனின் இரக்கம், பரிபூரணப் பலனைத் தரும் என்பதை திருத்தந்தையின் மடல் உணர்த்துகிறது. சிறைப்பட்டோரையும், யூபிலி ஆண்டையும் இணைத்து, நம் தேடல் தொடரும்.



No comments:

Post a Comment